privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

-

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள கடந்தாண்டு இறுதிவாக்கில் பத்திரிகைகளில் கசிந்த போது உலகிலேயே முதலாம் பெரிய ஜனநாயகம் என்று போற்றிப் புகழப்படும் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதை சிரிப்பாய்ச் சிரித்தது. உள்நாட்டுத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் அபிலாஷைகளுக்கு உட்பட்டுத்தான் இன்னாருக்கு இன்ன மந்திரிப் பதவி என்பது தீர்மானிக்கப்படுகிறது என்கிற உண்மை தெட்டத் தெளிவாக சாட்சி ஆதாரங்களோடு மக்கள் முன் நிரூபணமானது.

அப்போது ஜனநாயகக் கோவணத்தில் விழுந்த பெத்தாம் பெரிய ஓட்டைக்கு சர்வகட்சிகளும் சேர்ந்து ஒருவழியாக ஒட்டுப் போட்டு ஒப்பேற்றினார்கள். அதற்குள் ஏற்கனவே பலமுறை அம்பலமாகி நைந்து போன ஜனநாயகக்  கோவணத்துக்கு இப்போது விக்கிலீக்ஸ் வடிவத்தில் அடுத்த ஆபத்து வந்துள்ளது. இந்தியத் தரகு முதலாளிகளே கேந்திரமான அமைச்சகத் துறைகளில் புகுந்து புறப்படும் போது அமெரிக்கா என்ன சும்மாவா?

இந்தியா சர்வதேச அரங்கில் பல்வேறு தருணங்களில் எடுத்த முடிவுகள் அமெரிக்க நலன்களுக்கு ஒத்திசைவானதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள இங்கே அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள், குறிப்பான சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள அப்பட்டமான அமெரிக்க அடிவருடிகளை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது பற்றியும்  அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பேசிக் கொண்ட விவரங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

மத்தியில் அமைச்சர்கள் தொடங்கி பிரதமர் வரையில் அமெரிக்க அடிமைகள் என்பது நமக்கொன்றும் ஒன்றும் புதிய செய்தியில்லையென்றாலும் தற்போது அமெரிக்கர்கள் தங்கள் சொந்த வாயாலேயே “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” என்று அங்கீகரித்து உறுதி செய்திருப்பது தான் சிறப்பு. குறிப்பாக 2006-ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவை மாற்றங்களில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராய் இருந்த மணி சங்கர் அய்யர் நீக்கப்பட்டு முரளி தியோரா நியமிக்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிகாரிகள் மிகவும் புளகாங்கிதம் அடைந்துள்ளனர். இந்த விபரங்கள் அடங்கிய இரகசிய ஆவணங்களை இந்துப் பத்திரிக்கை விக்கிலீக்சிடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இது குறித்தும் தொடர்ந்து சாமியாடி வரும் எதிர்க்கட்சிகள், பிரதமர் இவ்விவகாரம் குறித்த விளக்கம் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிவருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இவ்விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் ஜஸ்வந்த் சிங் பேசியுள்ளார். இந்திய வெளிவிவகாரக் கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிக்கும் படி விடக்கூடாது என்றெல்லாம் பெரிய நன்னூல் போல வியாக்கியானமும் செய்துள்ளார். இதே ஜஸ்வந்த் சிங் தான் பாராளுமன்ற எம்.பிக்களில் அமெரிக்காவிற்கு அரசாங்க மட்டத்தில் தரகு வேலை பார்க்கும் அமைப்பு ஒன்றை 2002-ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது துவக்கி வைத்தவர்.

தரகு முதலாளிகளின் சங்கமான ஃபிக்கியின் (Federation of Indian Chambers of Commerce and Industry) பேராதரவுடன் 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்தோ-அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் குழுமம் என்கிற அமெரிக்க அடிவருடிக் கும்பலைத் துவக்கி வைத்ததே ஜஸ்வந்த் சிங் தான். அதில் உறுப்பினராய் இருந்து தனது விசுவாசத்தை நிரூபித்துக் காட்டியதற்குக் கூலியாகத்தான் 2006-ஆம் ஆண்டு முரளி தியோராவுக்கு பெட்ரோலிய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தான் பாரதிய ஜனதாவின் அமெரிக்க ‘எதிர்ப்பு’ வீரவசனங்களின் லட்சணம்.

எதிர்கட்சிகளெல்லாம் அடிப்பது போல் அடிப்பதற்கு அழுவது போல் அழுது, தனது வழக்கமான வரலாற்றில் பெரும் சிறப்புப் பெற்ற ‘விளக்கத்தை’ கூடிய விரைவில் மவுனமோகன் சிங் வழங்கத் தான் போகிறார். ஆதி காலத்தில் ஹைட் சட்டத்திற்கும் சமீப காலத்தில் எஸ்-பேன்ட் விவகாரத்திலும் மிஸ்டர் மவுனத்தால் வழங்கப்பட்ட அந்த சிறப்பான விளக்கம் – “எனுக்கு ஒன்னியும் தெரியாது” என்பது தான். இவ்விவகாரத்திலும் கூடிய விரைவில் அதே போன்றதொரு ‘விளக்கத்தை’  அளிக்கத் தான் போகிறார். அதைத் தொடர்ந்து விஷயத்தை அறுபதடி ஆழக் குழிக்குள் போட்டு மூடி விட்டு பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பை எல்லோருமாகச் சேர்ந்து காத்துக் கொள்வார்கள்.

ஆனால், வினவு வாசர்கள் இவ்விவகாரத்தை ஏதோ ‘அமெரிக்காவுக்கு ஆதரவான ஒருத்தரை மன்மோகன் அமைச்சராக்கினார்’ என்கிற அளவில் மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. மணிசங்கரய்யரை நீக்கி விட்டு முரளி தியோராவை அமைச்சராக்கியதன் பின்னணியில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.

ணிசங்கரய்யர் பெட்ரோலியத் துறை அமைச்சராக நீடிப்பதை ஏன் அமெரிக்கா விரும்பவில்லை?

இதற்கு விடை காணும் முன் அமெரிக்காவின் எண்ணைப் பசியைப் பற்றி சுருக்கமாகவாவது புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் தீராத பெட்ரோல் பசியின் காரணமாகத் தான் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தி முக்கியமான எண்ணை வளம் கொண்ட நாடுகளைத் தனக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. தனக்குக் கட்டுப்பட்டு ஒத்து வராத காரணத்தால் தான் பேரழிவு ஆயுதங்களை இரகசியமாக தயாரித்துக் கொண்டுள்ளது என்று சர்வதேச அளவில் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு பீதியூட்டி ஈராக் மேல் போர் தொடுத்து அதைத் தனது நேரடி இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இவ்வகையில் அமெரிக்காவுக்கு இப்பிராந்தியத்தில் கட்டுப்படாத இன்னொரு நாடு ஈரான். உலகின் மூன்றாவது பெரிய நிலத்தடி எண்ணை ரிசர்வையும் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு ரிசர்வையும் கொண்டுள்ள ஈரான் அமெரிக்காவுக்குக் கட்டுப்படாததோடு, இரண்டாயிரங்களின் மத்தியில் இருந்து தனது எண்ணை வர்த்தகத்தை சர்வதேச நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அமெரிக்க டாலரில் நடத்துவதில்லை என்று தீர்மானித்துள்ளது. மேலும்,  அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாளும் பிராந்திய ரவுடி நாடான இஸ்ரேலை நேரடியாக விமரிசித்து – விரோதித்துக் கொண்டுள்ளது ஈரான்.

அமெரிக்காவின் தீராத பெட்ரோல் பசியை ஈடுகட்ட வேண்டுமானால், சல்லிசாக மத்திய கிழக்கு எண்ணை வளத்தை கேட்பாரின்றி உறிஞ்ச வேண்டியது அவசியம். மேலும், சரிந்து வரும் தனது டாலரை நிலை நிறுத்த படாத பாடு பட்டு வரும் வேளையில் அதற்கு ஒரு மாற்று தோன்றி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது அமெரிக்கா. எனவே ஈராக்கை ஒழித்துக் கட்டியது போலவே ஈரானுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டிய நிர்பந்தத்தில் அமெரிக்கா உள்ளது.  ஈரானின் மேல் போர் தொடுக்க ஒரு சந்தர்ப்பத்தையும் காரணத்தையும் எதிர்பார்த்து இரத்த வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ஈராக் மேல் போர் தொடங்குவதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே எப்படி அமெரிக்கா அதன் மேல் பல்வேறு பொருளாதாரத் தடைகளைப் போட்டு பலவீனப்படுத்தியதோ அதே போல் ஈரான் மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.  மட்டுமல்லாமல், ஈராக் போருக்கு முன் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளைப் போலவே இப்போது ஈரானும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச அளவில் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.  ஈரானுடன் பொருளாதார உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச நாடுகளை நிர்பந்தித்தும் வருகிறது. ஈரானில் முதலீடு செய்யும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் அமெரிக்காவில் தமது தொழில் அலகுகளை நடத்த வேண்டுமானால் பெரும் நட்டஈடு வழங்க வேண்டும்.

இது இவ்வாறிருக்க, தொண்ணூறுகளின் மத்தியில் ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு குழாய் மூலம்  இயற்கை எரிவாயுவை சப்ளை செய்யும் திட்ட முன்வரைவு ஒன்று முன்வைக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஈரானின் தெற்கு பார்ஸ் எண்ணை வயலில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி வரையில் குழாய் பதிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் இத்திட்டத்தில் இந்தியாவையும் ஈரான் இணைத்துக் கொண்டது. பிப்ரவரி 1999-ஆம் ஆண்டு ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே இது தொடர்பாக ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதில் தொடங்கி, இத்திட்டம் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (IPI) எரிவாயுக் குழாய்த் திட்டம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் இந்தியாவின் தலையில் அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா சுமத்துகிறது. இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் மேற்கில் காலாவதியான அணு உலைகளை கொழுத்த காசுக்கு இந்தியாவின் தலையில் ஏகாதிபத்திய நாடுகள் கட்டி விட வகைசெய்தாலும், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அமெரிக்காவின் பல்வேறு இராணுவ / இராசதந்திர நலன்களும் பொதிந்து கிடக்கிறது. இந்தியவை நிரந்தரமாக அமெரிக்காவின் அடிமை நாடாக வைத்திருப்பது, தெற்காசியப் பிராந்தியத்தில் தனக்குக் கட்டுப்பட்ட ஒரு அடியாளாக இந்தியாவை வைத்திருப்பது என்பனவற்றை உள்ளடக்கிய பல்வேறு விரிவான அம்சங்கள் கொண்டது.

அணுசக்தி ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இந்தியாவை  ஐ-பி-ஐ எரிவாயுக் குழாய்த் திட்டத்திலிருந்து வெளியேறுமாறும், ஈரான் தனது மின் உற்பத்திக்காக அணு உலைகள் அமைப்பதையும் யுரேனியத்தை செரிவூட்டுவதை  எதிர்த்தும் சர்வதேச அணுசக்தி முகமையில் (IAEA) இந்தியா வாக்களிக்க வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்திக்கிறது. அமெரிக்க நிர்பந்தத்திற்குப் பணிந்த இந்தியா, நவம்பர் 2009-இல் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது.

அதற்கும் முன்பாகவே 2006-ஆம் ஆண்டு முரளி தியோரா பெட்ரோலியத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபின், உப்புசப்பில்லாத காரணங்களை முன்வைத்து ஐ-பி-ஐ எரிவாயுக் குழாய்த் திட்டத்திலிருந்தும் இந்தியா விலகுகிறது. இத்திட்டம் தொடர்பாக பாகிஸ்தான், ஈரான், இந்தியா இடையே நடக்கவிருந்த பல்வேறு முத்தரப்பு ஆலோசனைக் கூட்டங்களை சரியான காரணம் ஏதும் சொல்லாமல் இந்தியா புறக்கணித்துள்ளது.

ஈரானிலிருந்து எரிவாயுவை இந்தியா பெறும் திட்டத்திற்கு மாற்றாக துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கான், பாகிஸ்தான் வழியே இந்தியாவுக்கு எரிவாயுவைக் குழாய் மூலம் கொண்டு வரும் இன்னொரு திட்டத்தையும் இந்தியாவின் தலையில் சுமத்துகிறது அமெரிக்கா. இதற்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்தாகியுள்ளது. ஆப்கானின் வடகிழக்குப் பகுதி அமெரிக்க எதிர்ப்பு தாலிபானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்றைய நிலையையும் பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்திலும் (NWFP) பலுச்சிஸ்தானத்திலும் நிலவும் குழப்பங்களையும் கணக்கில் கொண்டால், இத்திட்டம் நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை.

ஒருவேளை நேட்டோ படைகளை நேரடியாக இறக்கி குழாயை அமைத்து விட்டாலும், எரிவாயுக் குழாயின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்று இந்தியா தனது படைகளை ஆப்கானில் இறக்க வேண்டும் – அல்லது, எரிவாயுக் குழாயின் பாதுகாப்புக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதாவது ஆப்கான் புதைகுழியில் அமெரிக்கா சிக்குண்டுள்ள இன்றைய நிலையில், ஒன்று இந்தியா எரிவாயுக் குழாய் பாதுகாப்பு எனும் போர்வையில் நேரடியாக ஆப்கானில் இராணுவத் தலையீடு செய்ய வேண்டும் அல்லது மறைமுகமாக நேட்டோ படைகளின் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அமெரிக்கா ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது.

துர்க்மெனிஸ்தானிலிருந்து எரிவாயுவைப் பெறுவது ஒப்பீட்டு ரீதியில் அதிக செலவு பிடிக்கும் திட்டம் என்பதோடு பாதுகாப்புப் பிரச்சினைகளும் உள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் எரிவாயுத் தேவையையும் நாளுக்கு நாள் எகிறி வரும் பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் கணக்கில் கொண்டால், இந்தியா ஈரானின் எரிவாயுவைப் பெறுவதே சிக்கனமானது – சிக்கலில்லாதது. ஆனால், நாட்டின் நலனைத் தூக்கி குப்பையில் போட்டு விட்டு நேரடியாக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது மவுனமோகன் தலைமையிலான இந்தியா அரசாங்கம்.

மணிசங்கரய்யர் மேலான அமெரிக்காவின் எரிச்சலுக்கு முக்கியமான காரணம் அவர் வெளிப்படையாக ஈரான் எரிவாயுக் குழாய்த் திட்டத்தை ஆதரித்ததோடு அதை முன்னெடுக்கவும் முயற்சித்தது தான். தற்போது விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி இருக்கும இரகசிய ஆவணங்களில் அமெரிக்க தூதரக அதிகாரி தனது குறிப்பில், இந்தியாவின் வெளிவிவகாரத் துறையில் தமக்கு இருக்கும் ஐந்தாம்படையில் ஒருவர், (அவர் கொஞ்சம் கவுரவமாக contacts என்கிறார்) மணிசங்கரய்யர் ஈரானுடனான எரிவாயுக் குழாய்த் திட்டத்தை முன்னெடுப்பது அத்துறையில் கடும் கசப்பை உண்டாக்கி விட்டுள்ளதாக தம்மிடம் தெரிவித்ததாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய வருகைக்கு முன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏதும் ஆச்சரியகரமான மாற்றங்கள்  இருந்திடக் கூடாது என்பதற்காக வெளிவிவகாரத் துறையை நேரடியாக மன்மோகன் சிங்கே தனக்குக் கீழ் கொண்டு வந்து விட்டார் என்றும், குறிப்பிட்ட அந்த அமைச்சரவை மாற்றத்தில் கபில் சிபல், சைஃபுத்தின் சோஸ், ஆனந்த் சர்மா, அஸ்வினி குமார் போன்ற அமெரிக்க நலன் விரும்பிகள் இடம்பெற்றிருப்பதையும் அந்த அதிகாரி தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். அவர் அமைச்சரவை மாற்றத்திலேயே முக்கியமானதாகக் குறிப்பிடுவது மணிசங்கரய்யரின் நீக்கத்தைத் தான்.

ஆக, இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் ஈரானுக்கு எதிராகவும் சர்வதேச அரங்கில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – அதில் இந்தியாவின் நலனே பதிக்கப்பட்டாலும் கூட – என்று அமெரிக்கா காலால் இட்ட உத்தரவை நமது மவுனமோகன் தலையால் நிறைவேற்றியுள்ளார். முரளி தியோராவின் நியமனத்தை வெறுமனே அமெரிக்க சார்பு என்பதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது – இந்த அமெரிக்க சார்பால் இந்தியா இழந்தது என்னவென்பதையும், மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சேர்த்து தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

லகின் பெரிய ஜனநாயகம்; மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் என்றெல்லாம் அலங்காரமாக பின்னி முடியப்பட்டுள்ள இந்தப் போலி ஜனநாயகக் கொண்டையின் உள்ளே புழுத்து நெளிவது அமெரிக்க நலன் என்னும் ஈரும் பேனும் தான். இது தம்மை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பச்சை துரோகம் எனும் கூச்ச உணர்வு கூட இல்லாமல் ஒரு தொழில் முறை தரகனைப் போல சூடு சொரணையில்லாமல் ஒருவனால் செயல்பட முடிகிறது என்றால், அவன் எப்பேர்பட்ட ஒரு அயோக்கியனாக இருக்க முடியும்? ஆனால், முதலாளித்துவப் பத்திரிகைகளோ இவரைத் தான் படித்தவரென்றும் அப்பாவியென்றும் ஓயாமல் நம் காதுகளுக்குள் ஓதிக்கொண்டுள்ளன.

இந்திய ஆளும் கும்பலின் அமெரிக்க அடிமைத்தனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்பே பத்திரிகைகளில் பேசப்பட்டிருந்தாலும் இப்போது மிக எடுப்பாக அமெரிக்கர்களின் வார்த்தைகளிலிருந்தே அம்பலமாகியுள்ளது.

நாடு எத்தகைய அபாயகரமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? ஆளும் காங்கிரசு கும்பலும் அதை தலைமை ஏற்றுநடத்தும் சோனியா – மன்மோகன்சிங் கும்பலும் எவ்வித கூச்ச நாச்சமின்றி அமெரிக்காவின் அடிமையாக இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்தக் கும்பலை அடித்து விரட்டாமல் இந்தியாவிற்கு இறையாண்மையோ, சுதந்திரமோ இல்லை.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

ஆதாரங்கள்:

http://en.wikipedia.org/wiki/CentGas
http://en.wikipedia.org/wiki/Turkmenistan
http://en.wikipedia.org/wiki/Trans-Afghanistan_Pipeline
http://en.wikipedia.org/wiki/Iran%E2%80%93Pakistan%E2%80%93India_gas_pipeline
http://www.payvand.com/news/08/jun/IPI-map-US-gov.gif
http://www.payvand.com/news/08/jun/1158.html

http://ipsnews.net/news.asp?idnews=32152 – IPI in trouble
http://www.indiatvnews.com/news/India/Wikileaks_Aiyar_Was_Shifted_For_Being_Anti_US_-7119.html
http://www.indianexpress.com/news/wikileaks-row-oppn-corners-govt/763056/0
http://www.ndtv.com/article/india/wikileaks-cable-pro-us-cabinet-reshuffle-91832
http://www.telegraphindia.com/1110316/jsp/nation/story_13722263.jsp

http://www.iags.org/n0507071.htm
http://www.atimes.com/atimes/South_Asia/MB19Df01.html

http://www.onlinenews.com.pk/details.php?id=176177
http://www.indianexpress.com/news/iran-tells-india-cant-lower-gas-price/758134/1

http://www.ensec.org/index.php?option=com_content&view=article&id=282:politicking-over-central-asias-pipelines&catid=114:content0211&Itemid=374

http://english.farsnews.com/newstext.php?nn=8912220431
http://www.dailytimes.com.pk/default.asp?page=2011%5C03%5C12%5Cstory_12-3-2011_pg5_7 – 

http://www.energybulletin.net/node/12463