கைப்பிள்ளையின் வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு இணையாக பதிவுலகில் அதிகம் பந்தாடப்படும் வார்த்தை பின்நவீனத்துவம். அனுஷ்காவின் இடுப்பழகை வருணிக்கும் மொக்கைகள் கூட வியப்பூட்டும் விதத்தில் அடுத்த வரியில் இந்த தத்துவத்தை பேசுவார்கள். இந்த சேதி அந்த தத்துவத்தை தமிழகத்தில் பரப்ப முயன்ற அந்த பிதாமகனுக்கு தெரியுமா தெரியவில்லை.

அந்த பிதாமகன் முன்னாள் பேராசிரியரும் அறிஞருமான அ.மார்க்ஸ். ஆனால் அவரும் கூட பத்தாண்டுகளாக முட்டி மோதி பார்த்துவிட்டு இந்த தத்துவத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது பெரும் சிக்கல் என உணர்ந்து தற்போது மிகப்பெரும் ஆச்சார ஒழுக்கவாதியாக மாறிவிட்டார். பேசினால் பல் உடையும், சிந்தித்தால் மூளை வெடிக்கும், விளக்கினால் போர் மூளும் என்ற நிலையில் உள்ள அந்த கடினமான தத்துவத்தை இன்று பதிவுலக பாமரரும் பேசும் நிலைக்கு காரணம் யார்? அது சாட்சாத் புரட்சித் தலைவியேதான்.

எனினும் பின்நவீனத்துவம் என்றால் என்ன? பதிவுலகின் சிரேஷ்ட அறிவு ஜீவிகளாகப் போற்றப்படும் ரோசாவசந்த், குருஜி சுந்தர், வளர்மதி, ஜமாலன், அ.மார்க்சின் சீடப்பிள்ளைகள், கல்வெட்டு, கவிராஜன், பத்ரி இவர்களிடம் கேட்டால் விளக்குவார்கள். என்னவென்று? பகுத்தறிவு, வன்முறை, அதிகாரம், கட்டுடைப்பு, விளிம்புநிலை, கொண்டாட்டம், ஆசிரியன் மரித்துவிட்டான் என்று நமக்கு புரியாத வார்த்தைகளில் முற்றுப்புள்ளியே இல்லாத வாக்கியங்களால் நான்ஸ்டாப்பாக பிளந்து கொட்டுவார்கள். அப்போதும் நமக்கு புரியுமா என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் மீது ஒரு பெரிய வியப்பு வரும். கற்றார்ந்த சான்றோர் என்று வணங்கத் தோன்றும்.

கோனார் நோட்ஸ் படித்து பாசாகியிருக்கும் நமக்கு அப்படி ஒரு நோட்ஸ் இருந்தால் புரிந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறதா? சரி. அதையும் பார்த்துவிடுவோம்.

இந்த உலகில் தூணிலும், துரும்பிலும், வீட்டிலும், வெளியிலும், கலையிலும், தத்துவத்திலும், அறிவிலும், ஆதிக்கத்திலும், வரலாற்றிலும், நிகழ்காலத்திலும், அரசிலும், அன்றாடங்காய்ச்சிகளிடத்திலும், கட்சிகளிலும், கம்யூனிசத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் அதிகாரத்தை கேள்வி கேட்பதே பின்நவீனவத்தும். சுருக்கி சொன்னால் ஏட்டிக்கு போட்டி. அதாவது அதிகாரத்தில் இருக்கும் ஏட்டிக்கு அதிகாரத்தை எதிர்க்கும் போட்டி. பின்பு இந்த போட்டியே அதிகாரமான பிறகு புதிய போட்டி பிறக்கும். இப்படி தொடர்ந்து இந்த போட்டி போர் வளரும். போட்டி என்றதும் முனியாண்டி விலாஸ் போட்டி வறுவலை நினைத்துவிடாதீர்கள். அது குடல். இது கடல்.

இன்னும் புரியவில்லையா? நாம் சாப்பிடுவதற்கு வலது கையையும், கக்கா போய்விட்டு கழுவுவதற்கு இடது கையையும் பயன்படுத்துகிறோம். குழந்தைகளையும் அப்படி பழக்கப்படுத்துகிறோம். ஆனால் ஆய் போய்விட்டு எந்த கையை வைத்து கழுவுவது என்று ரூல்ஸ் பேசினால் அது அதிகாரம். அதை எதிர்ப்பது பின்நவீனவத்தும். வாயில் வரும் சளியை துப்பச் சொன்னால் அது அதிகாரம். அதை துப்பலாமா, விழுங்கலாமா என்பதை அந்த நபரே முடிவு செய்வார் என்று சொல்வது பின்நவீனவத்துவம்.

இதற்கு மேலும் புரியவில்லை என்றால் அதை புரட்சித் தலைவி நடத்தும் பொன்னான அரசியல் புரியவைக்கும்.

பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

ஜனநாயகம்

பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுதலே ஜனநாயகம். இது ஜனநாயகத்தில் அதிகாரம். அதிகாரமற்ற அந்த சிறுபான்மையே பெரும்பான்மையை கட்டுப்படுத்தினால் அது பின்நவீனவத்துவம். அதிலும் அந்த சிறுபான்மைக்கு பதில் ஒரு நபரே ஒரு கோடி மக்களை ஆண்டால்? அது சூப்பர் பின்நவீனவத்துவம். அல்லது புரட்சித் தலைவியிசம்.

தி.மு.கவில் கூட ஏதோ பேருக்கு உட்கட்சி ஜனநாயகம், தேர்தல் என்று வைத்து நடத்துகிறார்கள். ஆனால் அ.தி.மு.கவை பாருங்கள். அங்கு ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அம்மாதான் அங்கே ஜனநாயகம். அதுவும் நேரில் அடிக்கடி தரிசிக்க வாய்ப்பே இல்லாத ஜனநாயகம்.

மற்ற கட்சிகளெல்லாம் நேர்காணல் என்று பேருக்காவது சடங்கு நடத்தி வேட்பாளர்களை தெரிவு செய்கின்றன. அ.தி.மு.கவில் நேர்காணலுக்கு முன்னரே ஜோசியர்கள் மூலம் தெரிவு நடத்தப்படுகிறது. அதிலும் தற்போதைய செய்திப்படி அம்மா தெரிவு செய்திருந்த வேட்பாளர் பட்டியலில் பாதி பேர்களை மாற்றிவிட்டு சசிகலா கும்பலது பட்டியல்தான் வெளியிடப்பட்டிருக்கிறதாம். இத்தகைய திருட்டு வேலைகளை பின்நவீனவத்துவம் கொண்டாடும்.

ஜனநாயகம், கட்சி, தொண்டர்கள், தலைவர், முடிவுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதன் மாண்பு மண்ணாங்கட்டிகளை தூக்கி எறிந்து விட்டு புதிய விழுமியங்களை புரட்சித் தலைவி உருவாக்குகிறார் அல்லவா, அதுதான் பின்நவீனவத்துவம்.

_______________________________________________________

ஆணாதிக்கம்

ரஜினி, விஜயகாந்த் படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் உரையாடல்கள் ஏராளம். படையப்பாவில் பெண்களை எள்ளி நகையாடும் ரஜினி இன்று புரட்சித் தலைவியினை எதிர்த்து ஒரு வார்த்தை பேசமுடியாது என்ற நிலைமை யாரால் உருவாக்கப்பட்டது? “நீதான் கூட இருந்து ஊற்றிக் கொடுத்தாயா?” என்று எகத்தாளம் பேசிய விஜயகாந்தை போயஸ் தோட்டத்தில் கூழைக்கும்பிடு போடுமளவு அடக்கி ஒடுக்கியது யார்?

தமிழ் சினிமாவில் பேரன் பேத்தி எடுக்கும் வயது வந்தாலும் நடிகர்கள் மட்டும் கதாநாயகர்களாக நீடிப்பார்கள். நடிகைகளுக்கு அந்த வாய்ப்பில்லை. முப்பதை தாண்டினால் அண்ணி வேடம். நாற்பது என்றால் அம்மா. ஐம்து என்றால் பாட்டி. ஆனால் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், விஜய் என்று வயதாகிவரும் நடிகர்களை எல்லாம் இவர்களை விட வயதான புரட்சித்தலைவி ஆட்டிப்படைப்பது குறித்து பெண்ணுலகமே போற்றிப் பாடவேண்டிய விசயமில்லையா? இதெல்லாம் கோலிவுட்,பாலிவுட், ஹாலிவுட் என்று எந்த திரையுலகிலும் நடக்காத விசயமாயிற்றே?

“போற்றிப்பாடடி பெண்ணே,தேவர் காலடி மண்ணே” என்று தேவர் சாதி பெருமை பேசி, முரட்டு மீசையை நீவிவிடும் சிங்கங்கள் எல்லாம் புரட்சித் தலைவியின் காலில் விழுந்து கிடக்கிறதே, இதையெல்லாம் அம்பேத்கார், பெரியார் கூட சாதிக்க முடியாத விசயமாயிற்றே?

பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

கம்யூனிசம்

இருபதாம் நூற்றாண்டில் மனிதகுல வன்முறைக்கு வித்திட்ட கம்யூனிசத்தை கட்டோடு வெறுப்பது பின்நவீனவத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்று. அத்தகைய கம்யூனிசத்தை தமிழகத்தில் கேலிப்பொருளாக்கியது புரட்சித் தலைவி அன்றி வேறு யார்?

டெல்லியிலிருந்து விமானத்தின் மூலம் வரும் பிரகாஷ் காரத், அடையாறில் விலை உயர்ந்த பொக்கே வாங்கிய தோழர்கள் எல்லாம் அம்மாவுக்காக சுத்தமான உடையணிந்து போயஸ்தோட்டத்தில் பார்த்து ஒப்பந்தம் போடுகிறார்கள். அத்தோடு விசயம் முடிந்துவிடவில்லை. தி.மு.க, காங்கிரசு கூட்டணி முறிவது போலானால் எங்கே அம்மா விரட்டிவிடுவாரோ என்று பதட்டத்தில் இருக்கிறார்கள்.

பத்து சீட்டு, பன்னிரெண்டு சீட்டு வாங்குவதற்குள் படாதபாடு படுகிறார்கள். வாங்கிய பிறகு கேட்ட தொகுதிகள் கிடைக்க தவம் இருக்கிறார்கள். அதையும் தாண்டி அம்மா அந்த சீட்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர்களை நிறுத்திய பிறகு செய்வதறியாது திகைக்கிறார்கள். இதற்காக தொப்புளில் பம்பரம் விட்ட தலைவனிடமெல்லாம் ஆலோசனை கேட்கிறார்கள். அந்த தலைவனை வைத்தாவது மூன்றாவது அணி என்று ஒப்பேத்த முடியுமா என்று கசப்புடன் பேசுகிறார்கள். இப்படி கம்யூனிஸ்ட்டுகளை காமடி பீசாக்கி சாதித்தது யார்?

நாங்கள் கூட கம்யூனிசத்தை பற்றி ஏதாவது எழுதினால் உடனே ரெண்டு பேர் வந்து “நீங்க மே.வங்கத்தில் என்ன கிழித்தீர்கள்?” என்று கேட்பார்கள். நாங்களும் பலமுறை அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள், நாங்கள் பேசுவது உண்மையான கம்யூனிசத்தை என்று விளக்கினாலும் இந்த விளக்கும் கொடுமையிலிருந்து எங்களுக்கு விடுதலையே கிடைத்ததில்லை. ஆனால் இன்று அம்மாவின் தயவால் அந்த வேலை மிச்சமாயிருக்கிறது என்பதை நன்றியுடன் நினைத்து பார்க்கிறோம். எங்களையே புரட்சித்தலைவிக்கு நன்றி செலுத்தும் நிலைக்கு தள்ளியது என்றால் அது வரலாற்றில் எத்தகைய அபூர்வமான நிகழ்வு? அதனால் அம்மாதான் ஒரிஜினல் பின்நவீனத்துவம்.

_______________________________________________________

ஈழம் – வைகோ

தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவான சக்திகளை ஒடுக்கி வதைத்த பெருமை அம்மாவுக்குத்தான். என்றாலும் அவரே இலை மலர்ந்தால் ஈழம் உதிக்கும் என்று பேசி, அவரால் அடக்குமுறைக்கு ஆளானவர்களையே ஈழத்தாய் என்று பேசவைத்த சாதனைக்கு வரலாற்றில் ஈடு இணை உண்டா? தொட்டதற்கெல்லாம் பார்ப்பன சதி என்று பேசும் தி.க வீரமணியே அம்மாதான் சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்து சில வருடங்கள் போயஸ்தோட்டத்து பூசாரியாக இருக்க வைத்தது லேசானதா என்ன?

அம்மாவால் 19 மாதங்கள் சிறை வைக்கப்பட்ட வைகோ பின்பு அவராகவே விரும்பி ஆயுள் முழுவதற்கும் அம்மாவின் பிடியில் இருக்கும் நிலையை யாரால் உருவாக்க முடியும்? கருணாநிதியை எதிர்த்து வீரம் பேசும் இந்த கலிங்கத்துப்பட்டி சிங்கம் கர்ஜிக்க முடியாமல் அம்மாவின் ராஜதந்திரத்தில் முடங்கிப் போனது சாதாரணமானதா என்ன?

ஒருகாலத்தில் கருணாநிதியே கண்டு அஞ்சிய வைகோவின் வளர்ச்சியை நிறுத்தி அவரது கட்சியை கால்பந்து போல் விளையாடி தமிழக அரசியலிலிருந்தே தூக்கி எறிந்ததை ஒரு பெண்ணால் எப்படி சாதிக்க முடிந்திருக்கிறது? விக் போட்ட கார்த்திக் போன்ற மலிவான காமடிகளெல்லாம்,”மிஷ்ஷ்ஷ்டர் வைஐஐஐகோ, என்னோட வந்துடுங்க, நாம கூஊஊட்டணி வச்சுக்கலாம்” என்று அழைக்குமளவு கோபாலசாமியின் நிலை சிரிப்பாய் சிரிப்பதற்கு அடி எடுத்துக் கொடுத்தது யார்?

இந்திய அரசும், ராஜபக்ஷேவும் தமிழ்நாட்டிலுள்ள ஈழ ஆதரவு சக்திகளை முடக்குவதற்கு ததிங்கிணத்தோம் போடும் நிலையில் 9 மாதம் ஊட்டியில் இருந்து கொண்டு அறிக்கை மூலமே அரசியல் செய்யும் தலைவி அதை செய்து முடித்திருக்கிறார் என்றால் இதையெல்லாம் ஆய்வு செய்து கண்டுபிடிப்பதற்கு அந்த ஆக்ஸ்போர்டு அறிவாளிகளால் கூட முடியாது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஈழத்தின் வில்லி என்று தூற்றப்பட்ட தன்னையே ஈழத்தாயாக காட்ட வைத்தார் இல்லையா, இதுதான் பின்நவீனவத்துவ சாதனை.

_________________________________________________________

கேப்டன் விஜயகாந்த், வாட்ச்மேன் ஆன சாதனை!

தி.மு.க, அ.தி.மு.க எனும் இரண்டு கட்சிகளையே சமாளிக்கத் திணறும் தமிழகத்தில் மூன்றாவது க வாக வந்த தே.மு.தி.க போட்ட அலப்பறைகள்தான் என்ன? “ஆண்டவனோடும், மக்களோடும்தான் கூட்டணி” என்று முழங்கிய கேப்டனை குட்டி போட்டபூனை போல போயஸ் தோட்டத்தை சுற்றிவரச் செய்த பெருமை யாருடையது?

தமிழக மக்கள் வெள்ளேந்தியானவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவர்கள். அப்படித்தான் விஜயகாந்தின் வீர வசனங்களை நம்பித் தொலைத்தார்கள். புரட்சித் தலைவி மட்டும் இல்லை என்றால் இந்த நடிகரை உண்மையாக தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு பலகாலம் பிடித்திருக்கும். ஆனால் அதற்கு தேவையே இல்லாமல் 41 சீட்டை கொடுத்து கட்டிப்போட்டு விட்டார் இல்லையா, இனி ஜன்மத்துக்கும் விஜயகாந்தின் வெத்துவேட்டு உதார்கள் எடுபடாது.

பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

மரபுகள், மாண்புகளை உடைத்தெறிந்த சாதனை!

தேர்தல், கூட்டணி கட்சிகள், தோழமை, அனைத்தின் மீது இருந்த பிரமைகளை உடைத்தெறிந்து எல்லாவற்றையும் கேலிப்பொருளாக்கிய சாதனை அத்தனை சுலபமல்ல. எல்லா கூட்டணி தலைவர்களும் தொகுதி எண்ணிக்கை உடன்பாடு கண்டுவிட்டு தொகுதிகளை தெரிவு செய்வதற்கு பேசிக்கொண்டிருக்கும் போது இதுதாண்டா தொகுதி என்று அடித்தாரே அத்தோடு அவர்களது சுயமரியாதை முடிந்தது. கூட்டணி தருமம் என்று உருவாக்கப்பட்டிருக்கும் மதிப்பீடுகளை உடைத்துவிட்டு தான் நினைப்பதே தருமம் என்று அறவியலுக்கு புதிய பொழிப்புரை எழுதியிருப்பதுதாதன் அசல் பின்நவீனவத்துவம்.

தலைமை என்பது மக்களால், அணிகளால் தேர்ந்து எடுக்கப்படுவது என்ற வழக்கத்தை மாற்றியது அம்மாதான். சினிமாவில் நடித்து, அந்த நாயகனால் கொண்டுவரப்பட்டு தலைவியாகி, சசிகலா எனும் பெண்ணின் நட்பு மூலம் ஒரு கட்சியை நடத்தி அரசியல் கட்சி என்பதே ஒரு கிச்சன் கேபினட்டின் வேலைதான் என்று காட்டியிருக்கிறாரே, இதற்கு இணையாக உலக வரலாற்றில் எதையும் சொல்ல முடியாது.

__________________________________________________________

ஆகவே இந்த ஜனநாயக அமைப்பு எப்படி செயல்படுகிறது, இது ஏன் போலி ஜனநாயகம் என்ற அரிய விசயத்தையெல்லாம் எளிமையாக கற்றுக்கொடுக்கும் புரட்சித்தலைவிதான் உண்மையாக பின்நவீனத்துவவாதி. ஆகவே அதற்காக நாம் அவரை வாழ்த்த வேண்டும்! மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: