privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்பாரதி : ஒரு அபலையின் கதை! - சந்தனமுல்லை

பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை

-

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு  – 8

வேலை முடிந்து வந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் பாரதி.  எக்ஸ்போர்ட் கம்பெனியில் ஓயாமல் 8 மணிநேரம் வேலை செய்த களைப்பு. கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். பதினொரு மணி இருக்கும். பக்கத்து வீட்டில் பாரதிக்காக வந்த தொலைபேசி பாரதியின் அன்றைய நிம்மதியான உறக்கத்தை மட்டுமல்ல…வாழ்நாளில் நிம்மதியான உறக்கமே இல்லாமலும் செய்துவிட்டது.

வந்த தொலைபேசிச் செய்தி இதுதான்: “அவரது கணவர் பயணம் செய்த பஸ் உளுந்தூர்பேட்டைக்கருகே விபத்துக்குள்ளாகியிருக்கிறது. உடனே கிளம்பிவரவும்.” வீட்டில் மாமியார் மட்டும். எப்படி அந்த நேரத்தில் கிளம்புவது, எப்படிச் செல்வது என்று ஒன்றும் புரியாமல் கணவரது அண்ணனின் குடும்பத்தினருக்குச் சொல்லியிருக்கிறார். திருச்சியில் இருக்கும் அவரது தங்கைகளுக்கும் தொலைபேசியிருக்கிறார்.

சென்னையிலிருந்து அனைவரும் அதிகாலை ஐந்துமணிக்குக் கிளம்பியிருக்கிறார்கள். அங்கு மருத்துவமனையில்  அவரது கணவரின் உயிரற்ற உடலைத்தான் பாரதியால் பார்க்க முடிந்திருக்கிறது.

ஆமாம், பாரதி ஏன் அவரது தாய் வீட்டினருக்கு போன் செய்யவில்லை?

பாரதி, பிறந்ததும் மருத்துவமனையில் பெற்றோராலேயே கைவிடப்பட்ட குழந்தை. அனாதையாக இருந்த குழந்தையை மருத்துவரொருவர் நுங்கம்பாக்கத்திலிருக்கும் காமராஜ் இல்லத்தை ஒட்டி இருக்கும் சத்யமூர்த்தி பவனில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.

இன்று முப்பத்திமூன்று வயதாகும் பாரதி ,வளர்ந்தது முழுக்க அங்கேயேதான். அங்கு அவரைப் போல பல குழந்தைகளுண்டு, இன்றும் 3000 ஆண்களும் பெண்களுமாகச் சிறார்கள் அங்கு வளர்ந்து வருகிறார்கள். பலரும் பாரதியைப்போல, யாருக்கும் வேண்டப்படாதக் குழந்தையாக அங்கு வந்து சேர்ந்தவர்கள் அல்லது அப்பாவாலோ அம்மாவாலோ அங்கு கொண்டு வந்து விடப்பட்டவர்கள்.  அங்கிருக்கும் பாலமந்திரிலேயே எட்டாவது வரை படித்திருக்கிறார், பாரதி.  விடுமுறைக்குச் சில பிள்ளைகளை அம்மாவோ அப்பாவோ வந்து அழைத்துச் செல்வதுண்டு. இல்லாவிட்டால், விடுதியே கதி. விடுமுறைக்காலங்களில், அந்தப் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உதவும் என்று கைத்தொழில்கள் கற்றுத்தரப்படும். அதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட, எட்டாவதுக்குப் பிறகு படிப்பு வரவில்லை என்று எம்ப்ராய்டரி மற்றும் தையல்வேலையை கற்றிருக்கிறார்.

அதை முடித்தபின் அங்கிருந்தபடியே ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்குச் சென்றிருக்கிறார். விடுதியில் பதினைந்து வயதாகிவிட்டாலே, பதினெட்டு வயது முடியும்போது அந்தப் பெண்ணை எப்படியாவது யார் தலையிலாவது கட்டுவதற்கு வேலைகள் நடக்கும். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று அனைவரிடமும் சொல்லி வைத்துவிடுவார்கள். “யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்று செய்திகள் பறக்கும். முடிந்தவரை, பதினெட்டு வயதாகும்போதே மணம் செய்துக் கொடுத்துவிட ஏற்பாடுகள் நடக்கும். அதற்கு மேலானால், செய்தித்தாளில் விளம்பரங்கள் கொடுப்பார்கள்.

அதைப்பார்த்து யாராவது கேட்டு வந்தால் மணமுடித்துக் கொடுத்து விடுவார்கள். விடுதிப்பெண்கள் வேலைக்குச் சென்றால் சம்பளப் பணத்தை மேலாளரிடம் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் கணக்கில் வைத்திருந்து அந்தப்பெண்களின் திருமணத்தின்போது ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ கொடுப்பார்கள். நகை எதுவும் போடமாட்டார்கள்.

பாரதிக்கும் அப்படி செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு மணமகனின் அண்ணன் வந்து விசாரித்திருக்கிறார். பின்னர் மணமகனின் தாயாரும் வந்த பார்க்க, பாரதிக்கு ஹைதர் அலியுடன்  விடுதியிலேயே மிகவும் எளிய முறையில் மணமாகியிருக்கிறது. திருமணமாகும்போது, பாரதிக்கு வயது இருபத்தியிரண்டு. மணமகனுக்கு முப்பத்தியிரண்டு வயது. இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். ஹைதர் அலியின் தாய் இந்து, தந்தை முஸ்லிம்.

வேலை என்று பெரிதாக எதுவும் அவருக்கு இல்லை. கூலி வேலைதான் செய்து வந்தார். வெல்டிங் வேலை – சிலநாட்கள் இருக்கும். பலநாட்கள் இருக்காது. மற்றபடி நிரந்தரமான வேலை எதுவும் கிடையாது. தரமணியில் வாடகை வீட்டில் தாயுடன் குடித்தனம். ஹைதர் அலியின் தந்தை டில்லியில் டைலராக வேலை செய்திருக்கிறார். பாரதியின் எக்ஸ்போர்ட் கம்பெனி வேலையால்தான் குடித்தனம் நடந்திருக்கிறது. பலநாட்கள் ஓவர்டைம்  செய்துதான்  குடும்பத்தை ஓட்டியிருக்கிறார் பாரதி.

அதாவது, காலை எட்டு மணிக்கு முதல் ஷிஃப்ட்.  மாலை ஆறரை மணிக்கு அடுத்த ஷிப்ட் ஆரம்பிக்கும். அப்படி இரவு பகலாக உழைத்து, அந்த பணத்தில் சீட்டுக்கட்டி வீட்டிற்குத் தேவைப்படும் பொருட்களாக வாங்கியிருக்கிறார். அதாவது, சாமான் செட்டுகளிலிருந்து, வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் நகைகள் வரை.

அப்படி அவர் வாங்கிய சாமான்கள்  விடுதியின் வராண்டாவில் மூட்டைக் கட்டப்பட்டு இன்று கேட்பாரற்றுக் கிடக்கின்றது. அவர் சீட்டுக் கட்டி வாங்கிய  டீவி இன்று விடுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி வாங்கும் சம்பளம் குடும்பத்திற்கே சரியாக இருந்திருக்கிறது. இறப்பதற்கு நான்கு வருடங்கள் முன்பாகத்தான் ஹைதர் அலிக்கு ஒரு வேலை கிடைத்திருக்கிறது. சாலையில் அம்புக்குறிகளுடன் ஊர்பெயர்கள் தாங்கிய இரும்பு பலகைகளை  நடும் வேலை. அதில்தான்,சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் நிரந்தரமாக ஒரு வருமானம் வந்திருக்கிறது.

வயதான மாமியார் மற்றும் வேலையில்லாத கணவனை சுமந்ததோடு பர்வீன் என்ற பெண்குழந்தைக்கும் தாயாகியிருக்கிறார். அந்தக்குழந்தை ஐந்து வயதாகும்போது மாமியார் இறந்துவிட, பார்த்துக்கொள்ள யாருமில்லாததால் மகளை திருச்சியிலிருக்கும்  தனது நாத்தனாரிடம் படிப்புக்காக விட்டிருக்கிறார் பாரதி. அவரது நாத்தனாருக்கு குழந்தையில்லாததால் இன்று வரை மகள் அங்கேயே வளர்கிறார். அவர்களே படிக்கவும் வைக்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை கோடை விடுமுறையில் சென்று பார்த்து வருவார். மகளுக்குத் தேவையானவற்றை வாங்கித்தருவார். அவ்வப்போது நாத்தனாருக்கும் பணம் கொடுத்துவிடுவார்.

_________________________________________________________

ப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் வந்து விழுந்த பேரிடிதான் சென்ற வருடம் நிகழ்ந்த கணவரின் மரணம். அவரது மரணத்துக்குப்பின் தனித்து விடப்பட்ட பாரதி வீட்டை காலி செய்ய வேண்டியதாயிற்று. செல்வதற்கு யாருமில்லாத நிலையில் ஒரு வீட்டில் வேலை செய்வதற்குச்  சேர்ந்திருக்கிறார். அனைத்து வீட்டு வேலைகளையும் செய்வதற்கு சம்பளம் நானூறு ரூபாய். நூறு ரூபாய் அதிகம் கேட்டதற்கு வீட்டுக்காரம்மா மறுத்து சண்டை போட அங்கிருந்தும் கிளம்ப வேண்டியதாயிற்று.

திக்கு தெரியாமல், ஏதோ செய்தித்தாளில் பெண்களின் விடுதியென்று வந்திருந்த விளம்பரத்தைப் பார்த்து விசாரிக்க அதன்மூலம் தற்போது இருக்கும் வீட்டுக்காரம்மாவிடம் வந்து சேர்ந்திருக்கிறார். அந்த விடுதி அவருடையதுதான். அது ஒரு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டல். அதை நடத்துபவர் வீட்டில் தற்போது வேலை செய்கிறார் பாரதி. முதலில் மூவாயிரம் ரூபாய் என்று சொன்னாலும் தற்போது ஆயிரத்தி ஐநூறு ரூபாய்தான் தருவதாகக் கூறுகிறார் இந்த வீட்டுக்காரம்மா. கேட்டால், தங்குவதற்கும், சாப்பாட்டுக்கும் ஆகும் செலவைப் பார்த்தால் இந்த ஆயிரத்தைநூறு ரூபாயே அதிகம் என்றும் வாதிட்டு வாயடைத்து விடுகிறார்.

பாரதியின் முன்னாலிருக்கும் கேள்விகளில் முதன்மையானது, தங்குவதற்கு இடம் என்பதுதான். ஒரு வீடெடுத்து தங்குவதுதானே என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், பாரதிக்குதான் அதன் கஷ்டங்கள் தெரியும். போகும்போதும், வரும்போதும் ஆண்களின்-பெண்களின் கேலிப்பேச்சுகள், அதுவும், “என்னாடா இது ஒரு பொம்பளை தனியா இருக்குது,என்னாடா விஷயம்” என்பதும், “நீ வச்சிருக்கியாடா” என்று காதுபட வம்பிழுப்பதும், இரவுகளில் கதவை தட்டி தொல்லை கொடுப்பதுமாக தனியாக வாழவே விடமாட்டார்கள்.

நிம்மதியாகவும் வாழ இயலாது. மாதம் இருமுறையோ அல்லது இயன்ற போதோ விடுதிக்கு சென்று அப்போது வந்திருக்கும் குழந்தைகளை பார்ப்பதுதான் பாரதிக்கு தாய்வீடு செல்லும் வைபவம்.அங்கு  படிக்கும்  குழந்தைகள்தான் பாரதியின் சோகத்தை ஆற்றும் நண்பர்கள். எப்போது சென்றாலும் அங்கிளையும் பாப்பாவையும் தவறாமல் கேட்பார்கள் அவர்கள். அங்கிள் இறந்துட்டார் என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள். இப்போதிருக்கும் வீட்டுக்காரம்மா பாரதி தனது இல்லத்திற்கு செல்வதற்கும் மறுக்கிறார்.

முகத்தை காட்டுகிறார்.“இது என்ன, பொம்பளையா வீட்டுல இல்லாம வெளியேல்லாம் போய்க்கிட்டு” என்று சடைத்துக்கொள்வார். அவர் ஒரு பியூட்டி பார்லர் வைத்து நடத்துகிறார். அங்கு இருக்கும் டவல்கள்,  துண்டுத் துணிகளை கொண்டு வந்து பாரதியை துவைக்கச் சொல்வார். அன்றாடம் அது ஒரு வண்டி சேர்ந்துவிடும். அவர் கொடுக்கும் பணம் துணி துவைக்கவே காணாது. அதோடு வீட்டு வேலைகள் முழுதும் செய்ய வேண்டும் டீவி பார்க்கக் கூடாது. விடவும் விடமாட்டார். அவர் வீட்டிலிருக்கும்போது பாரதி, வேலையில்லாமல் ஓய்வாக இருப்பதைப் பார்த்தால் “அதை பண்ணு, இதப் பண்ணு” என்று வேலையை ஏவிவிட்டுக் கொண்டே இருப்பார்.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு அடிமையைப் போலத்தான் நடத்துகிறார். பாரதிக்கு அந்த வீட்டுக்காரம்மாவை நினைத்தால்  ஆத்திரம் பொங்குகிறது. தனது உழைப்பை சுரண்டுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தனது கையாலாகாத நிலையை அவர் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதை உணர முடிகிறது. அதே ஆத்திரம் அவரது பெற்றோர் மீது பாயும்போது உணர்ச்சி மயமாகிவிடுகிறார். “என்னைக்காவது எங்கப்பாவைப் பாத்தா நல்லா நாலு வார்த்தை கேப்பேன்” என்று தனது தந்தையை நினைத்து பொருமுகிறார்.

“அம்மா, அப்பா இருந்தா பாப்பாங்க” என்று அன்பிற்கும் உறவுக்கும் ஏங்குகிறார்.  அவரது பெற்றோர் யாரென்று இன்று வரை தெரியாது. யாரும் இதுவரை பார்க்கவும் இல்லை. விடுதி காப்பாளருக்கும் தெரியாது. ஒரு மருத்துவர் அவரை அங்கு வந்து விட்டுச் சென்றது மட்டும்தான் தெரியும். அந்த மருத்துவரையும் தெரியாது. இப்படி குழந்தைகளை விட்டுச் செல்வது இன்று நேற்றல்ல…முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே நமது சமூகத்தில் புரையோடியிருக்கிறது. ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு குழந்தைகள் கூட வருமாம்,. ஆனால், ஒரு நாளைக்கு ஒரு குழந்தை நிச்சயம் என்கிறார் பாரதி. பெண் குழந்தைகளை அனாதையாக விட்டுச் செல்வது கூட பாரதியால் புரிந்துக்கொள்ளமுடிகிறது. ஆனால், ஆண் குழந்தைகளையும் விட்டுச் செல்வது ஆச்சரியமாக இருக்கிறது.

பாரதிக்கு இந்தச் சமூகம் பற்றி, தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் என்பதெல்லாம் அவரது தலையைத் தாண்டிய கேள்விகள். தனது வாழ்க்கையில் எது வந்தாலும்,போனாலும் நிகழ்ந்தாலும் எந்தக் கேள்வியோ கோபமோ மறுப்போ இன்றி ”இதுதான்” என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதீத பணிவும் அடக்கமும் எதையும் எளிதில் நம்பிவிடும் இயல்பும் கொண்டவராயிருக்கிறார். ஆதரவற்றவர்கள் வேறுவழியின்றி இப்படித்தான் உருவாக்கப்படுகிறார்கள். இது இந்த சமூக அமைப்பு ஆதரவற்றவர்களை மலிவாக சுரண்டும் போக்கினால் உருவாகிறது. பாரதிக்கென்று எந்த எதிர்பார்ப்புமில்லை. கிட்டதட்ட ,ஒரு அடிமை மனநிலைக்கு தள்ளப்பட்டவராக இருக்கிறார்.

அவரது கணவர் வேலை செய்த இடத்தில் கூடவே வேலை செய்த ஒருவர் கணவரது மறைவிற்குப் பிறகு அன்பாகப் பழகியிருக்கிறார்.  திருமணம் செய்துக்கொள்வதாகவும்  கூறியிருக்கிறார். அவரது குடும்பத்தினரை அழைத்து வந்து தன்னை சந்திக்குமாறு கூறிய பாரதியிடம் அந்த நபர் பின்பு தொடர்பு கொள்ளவே இல்லை. சிலநாட்கள் கழித்து தொடர்பு கொண்ட அந்த நபர் தனக்கு ஒரு அத்தைப் பெண் இருப்பதாகவும் அவரைத் திருமணம் செய்துக்கொள்ள குடும்பத்தினர் அவசரமாக நிர்பந்தப்படுத்தியதாகவும் வேறு வழியில்லாமல் ஒரு கோயிலுக்குச் சென்று திருமணத்தை முடித்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதையும் பாரதி நம்பியிருக்கிறார்.

தன்னை மறந்துவிடுமாறு அந்த நபர் சொல்லியிருக்கிறார். இருவாரங்கள் கழித்து திரும்பவும் அந்த நபர் தொடர்பு கொண்டிருக்கிறார். திருமணம் முடிந்ததென்று சொன்னபின் ஏன் அந்த நபர் தொடர்பு கொள்ள வேண்டும்? பாரதியிடம் பழகும்போது இல்லாத அத்தைப் பெண், பாரதி அவரது குடும்பத்தினரை சந்திக்க விரும்பியதும் திடீரென்று வந்தது எப்படி? அதுவும் உடனடியாக திருமணமும் ஆகியிருக்கிறது. இதிலேயே அந்த நபரின் நோக்கம் தெளிவாக புரிகிறதுதானே!

யாருமற்று இல்லாமல் தனித்திருக்கும் ஒரு பெண்ணை யார் வேண்டுமானாலும் எந்தவகையிலும் சுரண்டலாம். வீட்டுக்காரம்மாக்கள் உழைப்பைச் சுரண்டினால் ஊர் மேயும் ஆண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டுவார்கள். இதுதான் பாரதியின் வாழ்க்கைக் காட்டும் யதார்த்தம்.

_________________________________________________________

பாரதி யாருமில்லாமலே தனித்து நிராதரவாக விடப்பட்டும் இன்று நன்றாகத்தானே இருக்கிறார் என்று வாசிக்கும் உங்களுக்கு தோன்றக்கூடும். சொந்தக்காரர்கள் இருந்தால்தானே கஷ்டம், இல்லாவிட்டால் நிம்மதிதானே  என்றும் நமது மனம் எடைபோடும். சற்று யோசித்துப் பார்த்தால், அவருக்குக் கிடைத்தது ஒரு விடுதி வாழ்க்கை. எதையும் சொல்லித் தருவதற்கோ அன்பு காட்டுவதற்கோ உற்றார் உறவினர்கள் என்று எவரும் இல்லை. யாராவது கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலைதான் அவருக்கு எப்போதும் இருந்திருக்கிறது.

அவருக்கு மட்டுமில்லை, எல்லா அனாதைக் குழந்தைகளுக்கும் அந்த நிலையில் வளர்க்கப்படுகிறார்கள். விடுதியில் எப்போதும் வெஜிடேரியன் சாப்பாடுதான். யாராவது பணம் கொடுத்தால் மட்டும் சாப்பாடு கொஞ்சம் விசேஷமாக இருக்கும். இல்லாவிட்டால் எப்போதும் போல ஆறாக ஓடும் சாம்பார்தான். துணிமணிகள் விடுதியில் வருடத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ எடுத்துத்தருவார்கள். பெரும்பாலும், பெரும்பணக்காரர்கள் உடைகளை தானம் செய்வதுண்டு. அப்படிப்பட்ட உடைகள்தான் உடுத்துவதற்குக் கிடைக்கும். கமலும் ரஜினியும் வருடத்திற்கு இருமுறை இந்த இல்லத்திற்கு  தானமளிப்பார்கள்.

அப்படி ’பெரிய’ மனிதர்கள் வரும்போது மேடையில் வீற்றிருக்கும் அவர்களுக்காக இந்தக்குழந்தைகள் தங்களை குறையற்றோராகக் காட்டிக்கொள்ள, இருப்பதிலேயே நல்ல ஆடைகளை உடுத்தி புன்னகையுடன் காட்சியளிப்பார்கள். படியளப்பவர்கள் வந்ததும் அவர்களுக்காக ஆடிப்பாடி, அவர்களது குழந்தைகளுக்காக வேண்டிக்கொள்வார்கள்.  உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை இப்படித்தான் எல்லாம் .பணிவோடு பெற்றுக்கொண்டு நன்றியைக் காட்ட வேண்டியவர்களாகத்தான் இந்த சமூகம் கைவிடப்பட்ட குழந்தைகளை வைத்திருக்கிறதே தவிர, அவர்களுக்கு சுயமரியாதை இருப்பதை சற்றும் ஏற்றுக்கொள்வதில்லை.

“இதுவாவது கிடைச்சுதே” என்று சந்தோசப்படுவதற்குத்தான் பயிற்றுவிக்கிறதே தவிர “ஏன் கிடைக்கவில்லை” என்றும்  வாழ்வுரிமைகளைக் குறித்தும் என்றைக்கும் யோசிக்க வைப்பதில்லை. பெரும்பணக்காரர்களின்,நடிக நடிகையரின் ‘தாராள’ உள்ளத்தை பறைச்சாற்றிக்கொள்ள வேண்டுமானால் இந்த இல்லங்கள் உதவலாமேயோழிய இந்த இல்லம் நம் சமூகத்தின் அழுகிய  பாகத்தின் ஒருபகுதியே! மேட்டுக்குடியினருக்கு தங்கள் மனிதாபிமான தாகத்தை தணித்துக்கொள்ள மட்டுமே இந்த இல்லங்கள் ஒரு ஊற்றுக்கண்.

இல்லத்தில் இருக்கும் பள்ளியிலேயே படிப்பு. லயோலா கல்லூரி மாணவர்களும் ராணி மேரிக்கல்லூரி மாணவர்களும் மாலைவேளைகளில்  வந்து சொல்லிக்கொடுத்தால் அதுதான் ட்யூஷன். படிப்பை முடித்ததும், “பிழைக்க ஏதோ ஒரு தொழில்” என்ற நோக்கில்தான் –  ஆண்களாக இருந்தால் கார்ப்பெண்டர் போன்ற கைத்தொழில்கள். பெண்களாக இருந்தால் முக்கால்வாசி நர்ஸ் பட்டயப்படிப்பு. இந்த படிப்புகளால் என்ன பெரிய வருமானம் வந்துவிடப் போகிறது? அல்லது, வாழ்க்கையில் ’புஷ்’ வந்துவிடப் போகிறது?

கையெழுத்து போடும் அளவிற்கு இருக்கும் படிப்பை வைத்து என்ன பெரிதாக சாதித்துவிட முடியும்? விடுதியிலிருந்து, படித்து உயர்ந்தவர்கள் என்று ஏதோ ஒரு சிலர்தான். எவ்வளவு வேண்டுமானால் படிக்கலாம் என்று சொல்லிக் கொண்டாலும் பனிரெண்டாவதையே பெரும்பாலானோர் தாண்ட முடிவதில்லை. பாரதியுடன் வளர்ந்தவர்களில் ஓரிரு தோழிகள் நல்லபடியாக வாழ்கிறார்கள். பெரும்பாலோனோர் இதே துயரமும், விரக்தியுமான வாழ்க்கையையே வாழ்ந்து தீர்க்கிறார்கள்.

இந்த நம்பிக்கையற்ற வாழ்க்கையில்  அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒருவேளை அவர்களே கூட கைவிடக்கூடும். அதன் பின்னான காரணங்களை தள்ளிவிட்டுவிட்டு “என்ன இருந்தாலும் பெத்தக் குழந்தையை இப்படி விட்டுட்டு போவாங்களா”என்ற தாய்ப்பாச செண்டிமெண்ட்  கேள்விக்கணைகள்தான் நம்முன்னால் விசுவரூபம் எடுக்கக்கூடும். ஏன், “பெத்த குழந்தைய இப்படி விட்டு போயிருக்கா” என்று பாரதியின் தாயைக்கூடவாசிக்கும்போது நீங்கள் மனதுக்குள் வைதிருக்கலாம்.  இதற்குக் குற்றமானவர்கள் என்று பெற்றோரை  மட்டும் சாடுவதும் சரிதானா? எந்தத் தாயும் தனது குழந்தைகளை மனதார பிரிவதில்லை. அது அவலமான சூழலில் வேதனையுடன் எடுக்கப்படும் ஒரு முடிவு. நம்மைப் போல பாதுகாப்பான வாழ்க்கை வாழ்பவர்கள் அதை புரிந்து கொள்ள முடியுமா, தெரியவில்லை.

பாரதிக்குத் தற்போது தனது மகள் தன்னுடன் இல்லை என்ற கவலை எதுவும் இல்லை. தனது மகள் தன்னுடன் இல்லாவிட்டாலும் நன்றாக படித்தால் போதும்,அதற்காக பிரிவை ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். வருடத்திற்கு ஒரு முறைதான் பார்க்கச் செல்ல முடியும் என்றாலும் காத்திருக்கிறார். இப்போது, அவர் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு  மகளுடன் தனியாக வசித்தால் வரும் செலவை முதலில் கணக்கு செய்கிறார்.

வீடு வாடகைக்கு எடுத்தால், மாதம் குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் ஆகும். பின்னர் இதர செலவுகள். போக்குவரத்துச் செலவுகள். படிப்புச் செலவு. இரவுபகலாக உழைத்தாலும், அவருக்கு அதிகப்பட்சமாக ஐயாயிரம் சம்பளம் வந்தாலும் சமாளிக்க முடியுமா? வயது வந்த மகளுடன் பாதுகாப்பாக வாழ முடியுமா? இதையெல்லாம் அன்றாடம் நினைத்துப் பார்த்து குமைந்து, அவரது நாத்தனார் இப்போது மகளை அவளை புர்க்கா போடச் வற்புறுத்தி  வளர்த்தாலும் மகளை நன்குப் பார்த்துக்கொள்வதாகவும், “படிச்சால்தான் வாழ்க்கை என்று ஸ்ட்ராங்காகச்” சொல்லியிருப்பதாகவும் தன்னைத் தேற்றிக்கொள்கிறார். எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கட்டும், நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் அந்த அபலைத்தாய்.

பாரதிக்கு தாய்ப்பாசம் இல்லையென்று யாராவது சொல்லிவிடமுடியுமா? பொருளிருந்தால்தானே பாசமும் அன்பும் அக்கறையும் இன்னபிறவும்!

_________________________________________________________

டுத்தர வர்க்கமோ அல்லது மேல்தட்டு வர்க்கமோ தனது மனிதாபிமானத்தை காண்பிக்க இந்த இல்லம் ஒரு வடிகாலாக பயன்படுகிறதே தவிர  இந்த இல்லங்கள் சமூகத்தின் அவமானச் சின்னங்களே! தனது குடிமக்களில் சிலரை இப்படி ஒதுக்கித் தள்ளும் சமூக அமைப்புதான் இதற்கு முழுமுதல் குற்றவாளி. நாமோ அநாதைகளின் பெற்றோரை மட்டுமே குற்றவாளியாக பார்க்க பழக்கப்பட்டுள்ளோம்.

வயது வந்த பெண்களை சுமையாகக் கருதி, மணமகளுக்கும் மணமகனுக்குமான வயது வித்தியாசங்களைக் கூட கணக்கிலெடுக்காமல் தள்ளிவிடத்தானே துடிக்கின்றனவே, இதற்குப் பெயர் என்ன?

பாரதிக்கு இதைப்பற்றிய எந்த எண்ணங்களோ யோசனைகளோ  இல்லாமலிருக்கலாம். வாழ்வில் எந்தச் சுவையையும் மகிழ்ச்சியையும் காணாத  அவரது ஒரே கனவும் லட்சியமும் மகளை படிக்க வைத்து பெரிய வேலையில் அமர்த்திப் பார்ப்பதுதான். பிறரது சுரண்டலுக்காக தனது வாழ்க்கையை உருக்கிக்கொண்டிருக்கும் அந்த அபலைத்தாயிடம் இருப்பதெல்லாம் கனவும் ஆசைகளும் ஓரிரு பவுன் நகைகளும் எதிர்காலத்தின் மீதான கொஞ்சூண்டு நம்பிக்கையுமே!

அந்த நம்பிக்கையையும் சமயங்களில் ஆட்டங்காண வைக்கிறது. இந்த வீட்டுக்காரம்மாவின் சுரண்டலிலிருந்து தப்பித்து தனது உழைப்புக்குச் சரியான ஊதியம் கொடுக்கும் வேலையை, பாதுகாப்பான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பதுதான் இரவுகளில் அவர்முன் வந்து நிற்கும் கேள்விக்குறி!

பாரதியை பார்த்து நீண்ட நேரம் பேசிவிட்டு திரும்புகிறேன். இரவு முழுவதும் அவரது உலகில் என்னை வைத்து பார்த்து யோசிக்கிறேன். கற்பனை என்றாலும் அந்த ஆதவரற்ற நிலை என்னை அச்சுறுத்துகிறது. கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையின் குற்ற உணவர்விலிருந்து என்னால் அத்தனை சுலபமாக விடுபடவில்லை. ஆனாலும் இந்த சோக உணர்விலிருந்து அனாதைகளை உருவாக்கும் இந்த சமூக அமைப்புக்கெதிரான கோப உணர்விற்கு என்னை மாற்றிக் கொள்கிறேன். பாரதிக்கு நாம் செய்யக்கூடிய உதவியில் இதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010