Tuesday, September 17, 2024
முகப்புகட்சிகள்தி.மு.கதிமுக : திராவிட முதலாளிகள் கம்பெனி !

திமுக : திராவிட முதலாளிகள் கம்பெனி !

-

திராவிட முதலாளிகள் கம்பெனி
படம் - தெஹல்கா

தி.மு.க, காங்கிரசு கூட்டணி முறியும் என்ற நாடகம் ஊடகங்களில் பரபரப்பாய் பேசப்பட்ட நேரம். ஒரு வேலையாய் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்றிருந்தேன். புதிய சட்டமன்றத்தின் எதிரே இருக்கும் இந்த நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு பக்கமும் பிரியும் சந்துகளில் ஏராளமான மேன்சன்கள் எனப்படும் தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இவற்றில் மாதவாடகைக்கும், தினசரி வாடகைக்கும் அறைகள் கிடைக்கும். திருமணமாகாமல் சென்னை வரும் இளைஞர்கள் இங்கிருந்தே தமது தலைநகரத்து வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.

தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பதாக நம்பப்படும் தேர்தலில் சீட்டு கேட்டு வந்த நிறைய கட்சி பிரமுகர்களும் அங்கே தங்கியிருந்தனர். சென்னை தவிர்த்த எல்லா மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தனர். அ.தி.மு.கவை விட தி.மு.க கறை வேட்டிகளே அதிகம் தென்பட்டன. அதிலும் ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத புத்தம் புதிய வேட்டிகளும் இருந்தன. அந்த குறுகிய சந்துகளில் இவர்களது இனோவா, ஸ்கார்பியோ கார்கள் பெரும் நெரிசலை தோற்றுவித்தன. இவர்களெல்லாம் யார்? என்ன நம்பிக்கையில், தகுதியில் சீட்டு கேட்டு வருகிறார்கள்?

தி.மு.க போட்டியிடும் 121 தொகுதிகளில் வாய்ப்பு கேட்டு 15,000 பேர் விண்ணப்பத்திருக்கின்றனர். இதில் தலைவர்களுக்காக பரிந்துரைக்கும் காக்கா ஐஸ் மனுக்களைத் தவிர்த்து விட்டு பார்த்தாலும் ஒரு தொகுதிக்கு சுமார் 80 முதல் 90 பேர் வரை விண்ணப்பித்திருக்கின்றனர். இதை கருணாநிதியும் பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்.

விண்ணப்பித்திருப்போர் நேர்காணலுக்காக தி.மு.க வரலாற்றை படித்து தயார் செய்து வருவதாக ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஆனால் தி.மு.க நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் எதுவும் வரலாறு குறித்து இல்லை. அது வைட்டமின் ப குறித்துதான் மையம் கொண்டிருந்தது. ” எவ்வளவு ரூபாய் செலவழிப்பீர்கள், தொகுதிக்குள் சாதி செல்வாக்கு என்ன, குடும்பப் பின்னணி” போன்றவைதான் முக்கிய கேள்விகள். இந்த கேள்விகள்தான் மற்ற கட்சிகளிலும் கேட்கப்படுகின்றன என்றாலும் இதில் ட்ரெண்ட் செட்டர் தி.மு.கதான். வந்தவர்களில் பெரும்பான்மையினர் ஐந்து கோடி ரூபாய் செலவழிக்கும் தகுதி கொண்டவர்கள் என்றும், இதில் கூடக்குறைய இருந்தாலும் தி.மு.க என்றால் வேட்பாளர் குறைந்த பட்சம் ஐந்து கோடி செலவழிக்க வேண்டும் என்பதுதான் சந்தை நிலவரம் என்கிறார்கள்.

எனில் ஒரு தொகுதியில் ஐந்து கோடி ரூபாயை செலவழிக்கும் ஐம்பது தி.மு.க காரர்கள் குறைந்த பட்சம் இருக்கிறார்கள் என்றாகிறது. இதில் விதிவிலக்கு இருக்கலாம். ஆனாலும் நாம் பொதுவிதியைப் பற்றியே இங்கு பேசுகிறோம். வெற்றி, தோல்வி இரண்டில் எது வந்தாலும் இப்படி 5 கோடி ரூபாயை செலவழிக்கும் வல்லமையை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? ஒரு வேளை வெற்றி பெற்றாலும் இந்த ஐந்து கோடிக்கு ரிடர்ன் எவ்வளவு கிடைக்கும்?

இந்தியாவில் ஊழல் முறைகேடுகள் என்றால் அதில் ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகள்தான் நம் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் இந்த ஆதாயத்தின் கடைசி நபராகத்தான் அரசியல்வாதி இருக்கின்றார். முதலில் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்தான் என்றுதான் அந்த வரிசை இருக்கின்றது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட முதலாளிகள், அதிகாரிகள், காங்கிரசு, தி.மு.க என்று இருப்பதைப் பார்க்கலாம். இதில் தி.மு.கவின் மேல்மட்டமே முதலாளிகளாக இருப்பதால் அவர்களில் ஒரு சிலர் முதலாவதாகவும் இருக்கலாம். அப்போதும் கூட ரிலையன்ஸ், டாடா போன்ற தரகு முதலாளிகளின் ஆதாயத்தை அவர்கள் அடைந்திருக்கவில்லை.

இதனால் அரசியல்வாதிகள் ஊழல் செய்த பணம் குறைவு என்ற பொருளில்லை. உலகமயம் அமுலுக்கு வந்த பிறகு ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் பெருமளவு சொத்து சேர்த்திருக்கின்றனர். நாட்டின் இயற்கை வளத்தையும், மக்கள் வளத்தையும் ஒருங்கே அபகரிக்கும் முதலாளிகள் அதற்கு உதவி புரியும் அரசியல்வாதிகளுக்கு கணிசமான தொகையை அளிக்கிறார்கள். இதன் அளவு நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதை ஸ்பெக்ட்ரம் ஊழலில் பார்த்திருக்கிறோம்.

இதை கீழ்மட்டத்திலிருந்து பார்க்கலாம். ஒரு வார்டு கவுன்சிலர் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்?

சென்னை மாநகராட்சி, வார்டு ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு கோடி முதல் 5 அல்லது 10 கோடிகள் வரை ஒரு வருடத்தில் செலவழிக்கிறது. இதில் மற்றவருக்கான கமிஷன் போக கவுன்சிலருக்கு பத்து சதவீதம் செல்கிறது. இதன்படி ஒரு கவுன்சிலர் பத்து இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் வரை சம்பாதிக்கிறார். அடுத்து அந்த வார்டில் வீடு கட்டுபவர் அதன் மதிப்பை பொருத்து கவுன்சிலருக்கு சன்மானம் அளிக்க வேண்டும். எதிர்த்துக் கேட்டால் ரோட்டில் கட்டிட பொருட்களை போடக்கூடாது என்பதிலிருந்து, குடிநீர், கழிவுநீர் இணைப்பு வரை பிரச்சினைக்குள்ளாகும். ஒரு வார்டில் ஒரு வருடத்தில் சுமார் நூறு வீடுகள் கட்டப்படுமென்றால் அதில் கவுன்சிலர் குறைந்தது 25 இலட்சம் முதல் 50 இலட்சம் சம்பாதிப்பார்.

பிறகு வார்டில் உள்ள புறம்போக்கு நிலம் இருந்தால் அதை வளைத்து விற்பது உண்டு. இதை யார் செய்தாலும் அதில் குறிப்பிட்ட தொகை கவுன்சிலருக்கு போக வேண்டும். அதே போல வார்டில் நடைபெறும் நில, மனை விற்பனையிலும் கவுன்சிலருக்கு ஒரு கழிவுத் தொகையை புரோக்கரே தனியாக எடுத்து வைப்பார். இதில் வருமானம் கோடியைத் தாண்டும். இறுதியாக வார்டில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்துக்களிலும் கவுன்சிலர் இருப்பதை பலரும் விரும்புவார்கள். போலிசார் கூட தங்களிடம் வரும் பஞ்சாயத்துக்களில் கவுன்சிலர் இருப்பதையே விரும்புவார்கள். இந்த வருமானம் தனி.

வார்டில் நடக்கும் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு வசூல், கோவில் கும்பாபிஷேகத்திற்கான வசூல், மாநகராட்சிக்கான ஊழியர் நியமன வருமானம் எல்லாம் தனி. இதில் கவுன்சிலரின் படங்கள் பிளக்சில் எல்லா முக்கிய இடங்களிலும் வீற்றிருக்கும். ஆக ஐந்து வருடம் கவுன்சிலராக இருக்கும் ஒரு நபர் தனது சொத்துமதிப்பை சில பல கோடிகளில் தேற்றிவிடுகிறார். இவர்கள் எவரும் ஸ்கார்ப்பியோ காருக்கு குறைவாக பவனி வருவது கிடையாது. வார்டில் நான்கைந்து வீடுகள், கடைகள் என்று ஆயுசுக்கும் போதுமான மதிப்பை சுருட்டி விடுகிறார்கள். இது எல்லா கவுன்சிலருக்கும் பொருந்துமென்றாலும் ஆளும் கட்சி என்பதால் தி.மு.க கவுன்சிலர்கள் அதிகம் சம்பாதித்து விடுகிறார்கள்.

சென்னையில் தி.மு.க கவுன்சிலர்களின் ‘சம்பாத்தியம்’ உருவாக்கியிருக்கும் கெட்ட பெயரால் தி.மு.கவின் தலைவர்கள் பலர் வெளித் தொகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லாமல் இல்லை.

_______________________________________________________

ஒரு கவுன்சிலரே இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால் பல வார்டுகளைக் கொண்ட ஒரு சட்ட மன்றத் தொகுதியில் வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு சட்டமன்றத் தொகுதியில் தமிழக அரசு செலவழிக்கும் எல்லா திட்டங்களுக்கான ஒப்பந்ததாரர் தொகையில் ஒரு கழிவுத் தொகை உறுப்பினருக்கு சென்றுவிடும். மேலும் இவர்கள் சுருட்டுவதோடு தங்களது அல்லக்கைகள் சம்பாதிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்கிறார்கள். மக்களிடையேயும் ஒரு வள்ளல் தோற்றத்தை உருவாக்கிகொண்டும், சாதி ரீதியாகவும் செல்வாக்கை உருவாக்கி கொள்கிறார்கள்.

மணல் விற்பனை, ரியல் எஸ்டேட், டாஸ்மார்க்கின் பார், ஓட்டுநர் நடத்துநர் போன்ற நியமன அரசு ஊழியர் பதவிகள், தொழில் லைசென்சுகள், தொழில் மாமூல்கள், கிரானைட் தொழில், என்று ஏராளமான வகைகளில் வருமானம் கொட்டுகிறது. இதுபோக கட்சியின் தலைமைக்கு அவ்வப்போது பெரும் தொகையை வசூலித்தும் கொடுப்பார்கள். எம்.ஏஎல்.ஏக்கள், எம்.பிக்கள், கழகங்களின் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் இந்த ரகத்தில் வருவார்கள். இவர்கள் அந்தந்த மாவட்ட பகுதிகளின் குறுநில மன்னர் என்று கூட சொல்லலாம்.

கலைஞர் குடும்பம், அமைச்சர்கள் முதலான தி.மு.கவின் மேல்மட்டத்தினர் அவர்களே முதலாளிகளாவும் இருக்கிறார்கள். அனைவருக்கும் பெரும் தொழில் நிறுவனங்கள் உண்டு. மாநிலத்தின் அனைத்து ஒப்பந்ததாரர்களின் கழிவுத் தொகையும் இவர்களுக்கு சென்று விடும். பன்னாட்டு நிறவனங்கள் தொடர்பான அரசு முடிவுகள் இவர்கள் மூலமே நடப்பதால் அதில் நாம் நினைத்தும் பார்க்க முடியாத வருமானம் செல்கிறது. சான்றாக ஹூண்டாய் தொழிற்சாலை கழிவுப் பொருட்களின் மாத மதிப்பு 50 இலட்சமாகும். இது ஒரு தி.மு.க மேல்மட்டத்திற்கு செல்கிறது. மற்றும் எல்லா அமைச்சர்களும் பொறியியல் கல்லூரிகள் முதல் காஸ்ட்லியான பள்ளிகளையும் வைத்து நடத்துகிறார்கள்.

ஓட்டல் முதலாளிகள் சங்கம், ஆம்னி பஸ் முதலாளிகள் சங்கம், தனியார் மருத்தவ மனைகள் சங்கம், தனியார் பள்ளிகள் சங்கம், தனியார் கல்லூரிகள் சங்கம், சிமெண்ட் மற்றும் கட்டுமான முதலாளிகள் சங்கம் என்று எல்லா தொழில்களுக்குமான முதலாளிகள் சங்கத்தினர் அந்தந்த அமைச்சருக்கு குறிப்பிட்ட காலத்திற்கான மாமூலை பெரும்தொகையில் தருகிறார்கள். சில இடங்களில் இது சொத்து பரிவர்த்தனையாகவும் நடக்கிறது. தமிழகத்தின் பெரும் மதிப்பிலான முன்னணி ரியல் எஸ்டேட் வர்த்தகங்களையும் இவர்களே கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் தமது சொத்துக்களை நம்பிக்கையான பினாமி மற்றும் குடும்பத்தினர் மூலம் வைத்து உப்ப வைக்கிறார்கள். ஹவாலா, அண்டை நாடுகளில் சொத்துக்கள் வாங்குதல், சுவிஸ் வங்கி என்று இவர்களது முறைகேட்டு பணம் எளிதில் கண்டுபிடிக்க இயலாதபடி மறைந்திருக்கிறது. மேலும் தி.மு.கவில் கட்சிப்பதவிகள் அனைத்திலும் கொட்டை போட்ட பெருச்சாளிகளின் வாரிசுகளே இப்போது வருகிறார்கள். அ.தி.மு.கவில் கூட அம்மாவின் தயவால் சில சாதாரணமனிதர்கள் பொறுப்புக்கு வருவது என்பதெல்லாம் தி.மு.கவில் கனவில் கூட நடவாத காரியம்.

91, 2001-ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற ஜெயா கும்பல் அடித்த கொள்ளையை விட அளவிலும், வகைகளிலும் தி.மு.க கும்பல் இந்த 5 ஆண்டுகளில் அடித்த கொள்ளை அதிகம். மேலும் தொடர்ந்து மத்தியில் கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்றிருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

_______________________________________________

தி.மு.கவின் வட்ட செயலாளர் முதல் அறிவாலயத்தை கட்டி ஆளும் கலைஞர் குடும்பம் வரை இவர்களது உணர்வையும், உணர்ச்சியையும் தீர்மானிப்பது இந்த வர்த்தக உணர்வுதான், கொள்கை சார்ந்த அரசியல் உணர்வல்ல. தி.மு.கவில் ஒருவர் வட்ட செயலாளராகவோ இல்லை மாவட்ட பிரமுகராவோ, சட்ட மன்ற உறுப்பினராகவோ ஆக வேண்டுமென்றால் அதற்கு அவரது அரசியல் உணர்வு ஒரு போதும் தீர்மானிக்கும் காரணமாக இருப்பதில்லை. அவரால் தி.மு.க எனும் கார்ப்பரேட் கம்பெனிக்கு எப்படி சம்பாதித்து கொடுக்க முடியும், அந்த சம்பாத்தியத்திலிருந்து கட்சியை எப்படி நடத்த முடியும் என்பதிலிருந்தே அவரது செல்வாக்கு தீர்மானிக்கப்படுகிறது.

மாநாடுகள், கட்சி கூட்டங்கள், அமைச்சருக்கான அணிதிரட்டல்கள் அத்தனையும் ஒரு வணிக நிறுவனம் போலவே நடக்கிறது. சுவரொட்டி ஒட்டுவது, கொடி நடுவது, கூட்ட வேலைகள் அனைத்தும் இப்போது தொண்டர்கள் செய்வதில்லை. மேலும் இதற்கு தேவையில்லாத வகையில் இப்போது கட்சியின் பிரச்சாரத்தை ஒன்றுக்கு இரண்டாக தொலைக்காட்சிகளே செய்கின்றன. பூத் ஏஜெண்ட், வட்டபொறுப்பாளர், தொகுதி பொறுப்பாளர் அத்தனைக்கும் ஒரு ரேட் உண்டு. கூடுதலாக இதில் திருமங்கலம் முறை என்று ஒரு பெரிய முறையையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

நேர்காணலில் ” எவ்வளவு செலவழிப்பீர்கள்?” என்ற கேள்வி முதன்மையாக இருப்பதன் பின்னணி இதுதான். அதனால்தான் தி.மு.க எனும் கட்சியில் இருப்பது ஒரு வர்த்தக உணர்ச்சிதான் என்கிறோம். இதற்கு பொருத்தமான சான்றாக தி.மு.க – காங்கிரசு மோதல் நாடகத்தை பார்க்கலாம்.

தி.மு.கவில் அரசியல் உணர்ச்சியோடு இருக்கின்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். எனினும் அதனோடு பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், ஊழல் எல்லாம் கலந்துதான் இருக்கிறது. இவர்கள் நேரடியாக தி.மு.க எனும் வர்த்தக வளையத்தில் ஒரு ஆளாக வரமுடியாத கீழ் நிலையில் இருப்பவர்கள். அந்தந்த குறுநில மன்னர்களின் எலும்புத்துண்டில் காலத்தை ஓட்டுபவர்கள். இவர்கள்தான் காங்கிரசுடனான கூட்டணி முறிவு என்ற சேதி வந்ததும் துள்ளிக் குதித்தார்கள்.

இது ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் தன்மான உணர்வினைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதான். மேலும் காங்கிரசை பிடிக்காத மற்ற நடுநிலைமையாளர்கள் கூட தி.மு.கவின் முடிவை வெகுவாக வரவேற்றார்கள். ஆனால் தி.மு.கவில் பொறுப்பில் இருக்கும் எவரும் இத்தகைய தன்மான உணர்ச்சியில் இதை பார்த்திருக்க் மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்களை பொறுத்த வரை இது இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கிடையே எழுந்த சிக்கல். ஒன்றின் வாழ்வு மற்றதனைச் சார்ந்து  இருப்பதால் அவர்கள இதை தீர்க்கவே நினைத்தார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாரளுமன்றத்தில் அடக்கி வாசிக்கும் காங்கிரசு சி.பி.ஐ விசாரணையில் தலையிட முடியாது என்றதும், போபார்ஸ் வழக்கை ஊற்றிய மூடியது போல இதையும் மூட வேண்டும் என்று தி.மு.க  கோரியதும் உண்மையாக இருக்கலாம். மற்றபடி இந்த விசாரணை வேறு எதையும் அதாவது பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் இருக்காது என்பது இருவருக்கும் தெரியும். அப்படி ஒரு பாதிப்பு வரும் பட்சத்தில் அது ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆதாயம் அடைந்த முதலாளிகளின் பிரச்சினை என்பதால் அதை யாருமே விரும்பமாட்டார்கள்.

காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒரு வோட்டு கூட கிடையாது, தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பது தி.மு.கவிற்கு தெரியும். ஆனால் மத்தியில் ஆட்சியில் பங்கேற்றிருப்பதால் அடைந்த ஆதாயத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரசு கேட்கும் தொகுதிகள் அதிகமில்லை என்பதும் தி.மு.க அறியும். இதை வைத்தே காங்கிரசு தி.மு.கவை வழிக்கு கொண்டு வந்தது என்பது இப்போது அனைவரும் அறிந்த ஒன்று.

இப்படி இரு கட்சிகளுக்கும் சாதக பாதக விசயங்கள் இருப்பதும் அவை இரண்டு கம்பெனிகளின் வர்த்தக முரண்பாடுகளினால் எழுந்தது என்பதும்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம். இதில் காங்கிரசு மேல் கை எடுத்தற்கு அது தி.மு.கவை விட பெரிய கம்பெனி என்பதை தாண்டி வேறு இரகசியங்கள் ஏதுமில்லை. ஆரம்பத்தில் இந்த முரண்பாடு தி.மு.கவின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் என்பதாக சித்தரித்த கருணாநிதி பின்னர் காங்கிரசு கேட்ட அதே 63 தொகுதிகளை ஒப்புக் கொண்டார் என்பதிலிருந்தே இது தன்மானப்பிரச்சினை இல்லை, பொறுக்கித் தின்பதில் உள்ள அடிமைத்தனம் என்பதை  புரிந்து கொள்ளலாம்.

வியாபாரத்தில் தனிப்பட்ட மான அவமான உணர்ச்சி இல்லை என்பது தி.மு.கவிற்கும் நன்கு பொருந்தும். சென்ற சட்டமன்றத்தில் கருணாநிதியை அர்ச்சித்த சேகர்பாபு இப்போது தி.மு.க வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது அதற்கு சமீபத்திய சான்று.

தி.மு.க எப்படி ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக செயல்படுகிறதோ அதே போன்றுதான் அ.தி.மு.கவும் செயல்படுகிறது. ஆட்சியில் இல்லை என்பதால் இந்த கம்பெனியின் வரவு செலவு நட்டத்தில் இருப்பது என்பதைத் தாண்டி வேறு வேறுபாடு எதுவும் இல்லை.

அன்றாட வாழ்க்கைக்கு பயன்படாத தி.மு.க அரசின் நலத்திட்டங்களைத் தாண்டி விலைவாசி உயர்வு, கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம் போன்றவை காரணமாக மக்கள் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். எனினும் ஒரு தொகுதியில் 5000 முதல் 10000 வாக்குகளை தலா ரூ. 5000 கொடுத்து வாங்கிவிடலாம் என்று தி.மு.க அசாத்திய நம்பிக்கையுடன் இருக்கிறது. மேலும் பூத் ஏஜெண்டு முதல் வட்டார பொறுப்பாளர் வரை அனைவரும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை விலைகொடுத்து வாங்கும் நிலையிலும் தி.மு.க இருக்கிறது.

இதனால்தான் ஜெயலலிதாவும் கூட தி.மு.கவின் கொள்கை அரசியலுக்காக பயப்படவில்லை. அவர் பயப்படுவது தி.மு.கவின் கார்ப்பரேட் வர்த்தக பலத்திற்குத்தான். அதையும் மீறி மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் அவர் இருக்கிறார்.

___________________________________________________

டாவடி அழகிரியும், கோட்டு சூட்டு தயாநிதி மாறனும்தான் தி.மு.கவின் இன்றைய முகங்கள். தமிழனது சுயமரியாதையைக் காப்பாற்றுவோம் என்று முழங்கி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த தி.மு.கவின் இன்றைய வடிவமைப்பை உலகமயத்தின் தயவில், முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள். தி.மு.கவின் பாதையில்தான் மற்ற கட்சிகளும் பயணிக்கின்றன. வர்த்தகத்தில் யார் பெரியவர் என்பதுதான் அவர்களுக்கிடையே உள்ள போட்டி.

அரசியல் என்பதை இப்படி இலாபம் பார்க்கும் தொழிலாக மாற்றியதைத்தான் இன்றைய சமூக அமைப்பு சாதித்திருக்கிறது. இந்த அமைப்பிற்குள் இருந்து கொண்டு தி.மு.க, அ.தி.மு.க என்று மாற்றி மாற்றி வாக்களிப்பது மூலம் நாம் எந்த பயனையும் அடையப்போவதில்லை என்பதோடு பெரும் துன்பங்களையும், துயரங்களையும்தான் சந்திக்கிறோம். எனவே நமது மாற்று பார்வை என்பது இந்த அமைப்பிற்கு வெளியே இருந்துதான் வரமுடியும். அதற்கு முதற் கண்ணாக இந்த தேர்தலை நாம் புறக்கணிக்க வேண்டும். வாக்களிப்பது ஒரு ஜனநாயகக் கடமை என்று காதில் பூ சுற்றுவார்கள். இல்லை இந்த போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதன் மூலமே நாம் உண்மையான ஜனநாயகத்தின் முதல் படியை எடுத்து வைக்க முடியும்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

  1. திமுக : திராவிட முதலாளிகள் கம்பெனி !…

    அடாவடி அழகிரியும், கோட்டு சூட்டு தயாநிதி மாறனும்தான் தி.மு.கவின் இன்றைய முகங்கள். தமிழினது சுயமரியாதையைக் காப்பாற்றுவோம் என்று முழங்கி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த தி.மு.கவின் இன்றைய வடிவமைப்பை உலகமயத்தின் தயவில், முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள…

  2. பாரபட்சமின்றி உண்மை நிலையை தெளிவாக விளக்கும் அருமையான கட்டுரை!! வாழ்த்துகள்!

  3. கவலைப்படாதிங்க. இந்த திராவிட சர்வாதிகாரிகளுக்கு எதிராக ஒரு மக்கள் புரட்சி டமார்ன்னு வெடிக்க போகுது.

  4. //அரசியல் என்பதை இப்படி இலாபம் பார்க்கும் தொழிலாக மாற்றியதைத்தான் இன்றைய சமூக அமைப்பு சாதித்திருக்கிறது//

    நச் என்று ஒரு கட்டுரை.. தெஹல்கா படமும் பொருத்தம்.

  5. போட்டியிடும், வேட்பாளர்களைப் பிடிக்கவில்லையெனில், 49 ஓ பதிக்கும் பொத்தானை, வாக்குப் பதிவு, இயந்திரத்தில் சேர்க்க வேண்டுமென்ற, அறிவார்ந்தோரின் கோரிக்கையை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள வேண்டும்!

    வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்! அப்போது ஓட்டளிக்க லஞ்சமும், இலவசமும், குறைந்து போகும்!

    • இங்கு 49ஒ வை பற்றி கேட்கும் அனைவருக்கும்.

      வெள்ளைக்காரன் மக்களையும், வளங்களையும் சுரண்ட, அதை யாரும் தட்டி கேட்க முடியாமல் வைக்க ஏற்படுத்திய சட்ட திட்டங்களை அப்படியே காப்பியடித்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், யாரை உட்கார வைத்தாலும் அவர்கள் பின்னால் நீர்த்து போக தான் செய்வார்கள். 49ஓ ஒரு வித‌ வடிகால் தான். தப்பு செய்த அரசியல்வாதிக்கு ஓட்டு கிடையாது. ஆனால் அவர்களை அப்படி தப்பு செய்ய தூண்டும் அமைப்பை மாற்றவில்லை என்றால் என்ன பயன்?
      தப்பு செய்பவன் புத்திசாலியாவன் அல்லது அதிகாரத்தை கைப்பற்றி கடுமையான சட்டம் போடுவான்.
      கொஞ்ச நஞ்சம் 49ஓ போட கூட அப்பொழுது ஆள் வராது. அதனால் தவறான மக்களை சுரண்டும் இந்த அமைப்பை தான் மாற்ற வேண்டும்.

      கருணாநிதி தன் புதல்வருக்கு வைத்த பெயரை இன்னொரு முறை நினைவில் கொள்ளுங்கள் ‘ஸ்டாலின்’. மக்கள் நலம் என கொஞ்ச நஞ்ச உணர்வுடன் இருந்த அந்த கால திமுகவினரின் பரினாமத்தை பாருங்கள். அவர்கள் இப்படி நிறுவனமயமாக மிக முக்கிய காரணங்களில் ஒன்று பெரியார் முழுக்க எதிர்த்த தேர்தல், ஆட்சி போன்ற இந்த மோசமான அமைப்பு தான்.

      ஆட்சியை கைப்பாற்றி திரவிட கழகத்தின் கருத்துக்கள் எல்லாம் சட்டமாக்கி சமுதாய புரட்சி செய்வோம் என்று திமுக சொன்னது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என அரசாணை இருக்கிறது. யாதார்த்தத்தில் ஆக முடியாது.
      மக்கள் பங்கேற்காத அல்லது 5 வருடத்திற்கு ஒரு முறை, ஒரே நாள் மட்டும் பங்கேற்க்கும் ஒரு அமைப்பில் இவ்வளவு பெரிய ஓட்டைகளும். ஊழல்களும் சாதரண‌மானது. 49 ஓ உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஓட்டு போலவே உங்கள் கோபத்திற்கு ஒரு வடிகால்.தேவை 49ஓ அல்ல மக்கள் பங்கேற்பது.

      • //வெள்ளைக்காரன் மக்களையும், வளங்களையும் சுரண்ட, அதை யாரும் தட்டி கேட்க முடியாமல் வைக்க ஏற்படுத்திய சட்ட திட்டங்களை அப்படியே காப்பியடித்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், யாரை உட்கார வைத்தாலும் அவர்கள் பின்னால் நீர்த்து போக தான் செய்வார்கள்.///

        இல்லை. இது தவறான வாதம். நாம் கடைபிடிக்கும் சட்ட அமைப்பின் அடிப்படை வெள்ளைகாரர்களின் Westminster model தான். many rules were unwritten and was meant for ‘gentlemen’ ; unfortunately we are no gentlemen. ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலே, அங்கு உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இங்கு தீர்ப்பு வரும் வரை பதவி. இதற்க்கு அந்த அமைப்பை குற்றம் சொல்வது வீண்.

        பிரட்டனில் அதை தான் இன்றும் கடைபிடிக்கிறார்கள். இந்தியா போல் சீரழியவில்லை. ஏன் ?

        • பிரித்தானியர்கள் ”உயர்ந்த மனிதர்களா”.சிரிப்பு மூட்டுகிறீர்கள் லிபெர்டரியன்.
          ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக நெஞ்சறிய பொய்யுரைத்து அந்நாட்டை கொடுங்கோல் அமெரிக்காவுடன் சேர்ந்து ஆக்ரமித்த ”பிளைர்” உயர்ந்த மனிதனா.
          இப்போது ஆடுகளுக்கு இடையே நடக்கும் சண்டையில் நாட்டாமை செய்யப் புகுந்த நரியாக லிபியாவில் குண்டு வீசும் ”கனவான்கள்” எண்ணெய் திருட வந்த களவாணிகளா உயர் குல பண்பாட்டு செம்மல்களா.
          உலகெங்கும் நாடு பிடிக்க அவர்கள் செய்த/செய்யும் அயோக்கியத்தனங்களை மறைக்க போட்டு கொண்ட/கொள்ளும் மக்கள்நாயக முகமூடியை பார்த்து ஏமாற கூடாது.

        • //உலகெங்கும் நாடு பிடிக்க அவர்கள் செய்த/செய்யும் அயோக்கியத்தனங்களை மறைக்க போட்டு கொண்ட/கொள்ளும் மக்கள்நாயக முகமூடியை பார்த்து ஏமாற கூடாது.///

          இல்லை. அவர்களின் நாடுகளுக்குள் ஜனனாயகம் இருப்பதால் தான் பெரும் விவாதங்கள் நடந்து, அரசியலில் குற்றம் புரிபவர்கள் அதற்க்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. 100 சதம் இல்லாவிட்டாலும் இந்த political accountablity இந்தியாவை விட மிக அதிகமாக இருக்கிறது.

          சரி, அப்ப சவுதி அரேபியா போல் ஜனனாயக ’முகமூடி’ இல்லாத நாடு பரவாயில்லையா ? அல்லது பர்மா, வட கொரியா பரவாயில்லையா ? அங்கு சென்று இப்படி ஒரு வினவு தளத்தை நடத்த யாராவது தயாரா ? (நாங்க வேணும்னா பயணச்செலவுக்கு ஸ்பான்ஸ்ர் செய்கிறோம் !! :))))) )

        • ver kasakkumam, pazham mattum inikkumam. thambi konjam kanna muzhichu paarunga, parlimendulaye naatta aalrathu america thanu manmohan vaakkumoolam thandhu kittu irukkaratha!

        • \\அவர்களின் நாடுகளுக்குள் ஜனனாயகம் இருப்பதால் தான் பெரும் விவாதங்கள் நடந்து, அரசியலில் ………………சரி, அப்ப சவுதி அரேபியா போல் ஜனனாயக ’முகமூடி’ இல்லாத நாடு பரவாயில்லையா ? அல்லது பர்மா, வட கொரியா பரவாயில்லையா ? //

          அவர்களுடைய சனநாயகத்தின் யோக்கியதையையும் பார்த்துவிடலாம்.அண்மையில் பிரித்தானிய அரசு பல்கலைகழக கல்வி கட்டணங்களை கடுமையாக உயர்த்தியது உங்களுக்கு நினைவிருக்கும்.9,000.பவுண்டுகள் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.

          தற்போது கேமரூனுடன் ஆட்சியை பங்கு போட்டுள்ள துணைப்பிரதமர் லிபரல் சனநாயக கட்சியின் நிக் கிளேக் எதிர் கட்சியாக இருந்த போது கல்வி கட்டணங்களை முழுமையாக ரத்து செய்வோம் என்று உறுதி அளித்து வாக்கு பொறுக்கி பதவிக்கு வந்தார்.பதவியை பிடித்தபின் கொடுத்த வாக்கை மீறி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார்.இது கயமையா,பெருமாந்தர் குண நலனா,நீங்களே முடிவு செய்து எங்களுக்கு சொல்லுங்கள்.

          கொடுத்த வாக்கை மீறுவது நயவஞ்சக செயல் இல்லையா.இந்த நயவஞ்சகத்தை சனநாயகம் என்று சொல்வீர்களா.

          உண்மையில் முதலாளித்துவ நாடாளுமன்ற சனநாயகத்தில் ஆளும் வர்க்கமாக இருக்கும் சிறுபகுதியினர் தங்கள் விருப்பத்தை,தங்கள் நலனுக்கானவற்றை சனநாயகத்தின் பெயரால் பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கிறார்கள்.உண்மையில் இது சிறுபான்மையினர் பெரும்பான்மையான மக்கள் மீது நிறுவும் சர்வாதிகாரமே.இந்த வகையில் பொதுவுடமைவாதிகள் இவர்களை விட சிறந்தவர்கள் என்று சொல்லலாம்.அவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ போவதாக நேர்மையாக சொல்கிறார்கள்.அது பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு சனநாயகத்தை வழங்குவதாகவும்,சிறுபான்மையான எதிர் புரட்சி கும்பல் மீது சர்வாதிகாரத்தை நிறுவுவதாகவும் இருக்கும் என தெளிவாக சொல்கிறார்கள்.

          உங்களை போன்ற பொதுவுடைமை எதிர்ப்பாளர்களுக்கு கசப்பாக இருந்தாலும் உண்மை இதுதான்.

        • திப்பு,

          2008 09 பொருளாதார பெரு மந்தத்திற்க்கு பின்பு இப்படி பல வாக்குறுதிகளை மீற வேண்டிய யதார்த்தம் அங்கும், இதர நாடுகளிலும். இந்த பொருளாதார மந்தமே, அரசுகள் கட்டுபாடில்லாமல் செய்த செலவீனங்கள், பற்றாக்குறை பட்ஜெட்டுகளால் தான். இதற்க்கு காரணம் இடதுசாரி சோசியலிச கோட்ப்படுகளின் எச்சங்கள் மற்றும் பொறுப்பற்ற தன்மைகள் தான் :

          http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

          பிரட்டன் எதிர்காலத்தில் திவாலாகும் அபாயம் நிறைய இருக்கிறது. PIGS எனப்படும் Portugal, Italy, Greece, Spain நாடுகள் திவால் நிலைக்கு அருக்கில் உள்ளன. (ஜெர்மனி மட்டும் அய்ரோப்பாவில் மிக வலிமையாக, இந்நாடுகளை காப்பாற்றும் அளவு உள்ளது. ஏன் என்று படித்து பாருங்கள்). இப்போது பிரட்டனும் இந்த லிஸ்டில் சேர்ந்து : PIGGS என்று ஆகிவிட்டது.

          http://www.thetrumpet.com/print.php?q=7007.5532.0.0
          Will Crisis Oust Britain From EU?

          http://www.cato.org/pub_display.php?pub_id=9788
          How Did We Get into This Financial Mess?

          British Economic Suicide
          http://www.cato-at-liberty.org/british-economic-suicide/

        • \\2008 09 பொருளாதார பெரு மந்தத்திற்க்கு பின்பு இப்படி பல வாக்குறுதிகளை மீற வேண்டிய யதார்த்தம்//

          நன்றி,அதியமான்.
          பிரிட்டனின் சனநாயகத்தை அழகாக தோலுரித்து காட்டிவிட்டீர்கள்.பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கும்போதெல்லாம் அதன் சுமையை ஆளும் வர்க்கம் மக்கள் மீது சுமத்துவதை இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்.

          பிரித்தானிய ”கோமான்களிடம்” உலகின் முன்னணி ராணுவங்களில் ஒன்றை கட்டியமைத்து பராமரித்துவர காசிருக்கிறது.அணு ஆயுதங்களையும் போர் வானூர்திகளையும் வானூர்தி தாங்கி நாசகார கப்பல்களையும் கனரக ஆயுதங்களையும் மேலும் மேலும் குவித்துக் கொள்ள காசிருக்கிறது.ராணுவத்தை எப்போதும் ஆயத்த நிலையில் வைத்திருந்து எந்த நேரத்திலும் உலகின் எந்த மூலையாயினும் படை நடத்தி ஆக்கிரமிப்பு போர் புரிய காசிருக்கிறது.நெருக்கடியில் சிக்கும் தனியார்துறை பெரு நிறுவனங்களை கை தூக்கிவிட காசிருக்கிறது.ஆனால் சொந்த நாட்டு குடிமக்களை குறைந்த கட்டணத்தில் படிக்க வைக்க காசில்லை.அதுவும் கட்டணமின்றி படிக்க வைப்பதாக பொய்யான வாக்குறுதி தந்து பின்னர் ஏமாற்றவும் செய்வார்கள்.இதுதான் சனநாயகமா.

          இந்த அழகில் உலகிற்கே சனநாயகத்தை கற்று கொடுத்தவர்கள் தாங்கள் .சனநாயகத்தின் தொட்டில் தங்கள் நாடு என்று பித்தலாட்டம் வேறு.

        • திப்பு,

          ’இடதுசாரி’ பொருளாதார கொள்கைகள் (அதாவது continious deficit spending) மற்றும் ராணுவ செலவுகள் இவற்றின் விளைவாக பல அய்ரோப்பிய நாடுகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பதை மேலே நான் அளித்த சுட்டிகளை முழுசா படிச்சா புரியும்.

          உங்களுக்கு ஒரே ஒரு டிப் தருகிறேன். அரும்பாடுபட்டு சேர்க்கும் உங்க சேமிப்புகளை, இந்தியாவில் நிலமாக அல்லது தங்கமாக முதலீடு செய்துக்கங்க. (வேறு எதுவும் வேண்டாம்). பிரட்டன் மற்றும் அமெரிக்கா, பல பத்தாண்டுகளில் திவலாக நிறைய வாய்ப்பு இருக்கிறது. கேட்டோ வலைமனை சுட்டிகளை நிறைய அளித்திருந்தேன். நிதானமாக பார்க்கவும்.

      • திப்பு,

        டோனி ப்ளய்ர் பொய் சொல்லி, பெரும் தவறு செய்தவர் தான். ஆனால் மொத்த பிரட்டனும் அவரை போல் என்று சொல்ல முடியாது. அவர்களின் அமைப்பு நமது அமைப்பை விட நன்றாக, ஒழுங்கா வேலை செய்கிறதை தான் சொன்னேன். இருப்பினும் போர் தொடுக்கும் அதிகாரம் ஒரு சிறு குழுவினரிடம் (காபினட்) மட்டும் இருப்பது சரியில்லைதான். இன்னும் பரவலாக்கி, பாரளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இது போல் ஒரு offensive warஅய் துவக்க கூடாத நிலை இருக்க வேண்டும். ஆனால் national security, classified info which cannot be publicly shared due to its very sensitive matter என்று பூச்சாண்டி காட்ட ஒரு வழி இன்றைய மிக சிக்கலான சூழலில் இருப்பதால், புஸ் மற்றும் பிளயர் ஈராக் போரை எளிதாக ஆரம்பிக்க முடிந்தது.

        மற்றபடி, எம்.பிக்கள் இங்கு போல் அங்கு சர்வசாதாரணமாக லஞ்சம் வாங்கி பிறகு தப்பிக்க முடியாது. அங்கு லஞ்சமே இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் இங்கு போல் பெரும் சீரழிவு இல்லை.

        காலனியாதிக்க பிரட்டன் வேறு. இன்றைய பிரட்டன் வேறு. அப்படி பார்த்தால், சரித்தர ரீதியாக, தமிழர்கள் கூட, சோழர் காலத்தில் பெரும் போர்கள் புரிந்து, பல நாடுகளை கைபற்றி நசுக்கியவர்கள். அன்று நடந்த தவறுகளுக்கு இன்றைய மக்களை பொறுப்பாக்க முடியாது / கூடாது.

        • லிபெர்டரியன்.
          \\டோனி ப்ளய்ர் பொய் சொல்லி, பெரும் தவறு செய்தவர் தான். ஆனால் மொத்த பிரட்டனும் அவரை போல் என்று சொல்ல முடியாது.//

          நீங்கள் உயர்ந்த மனிதர்கள் என்று குறிப்பிட்டது பிரிட்டன் நாடாளுமன்ற மரபுகளை கடைபிடித்து ஒழுகும் ஆளும் வர்க்க கனவான்களைத்தானே.அப்படி இல்லை என்று ஆதாரத்துடன் சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியாமல் மொத்த பிரிட்டனை ஏன் இழுக்கிறீர்கள்.பொதுவாகவே சமூகம் என்ற முறையில் உலகின் அனைத்து நாடுகளிலும் மக்கள் நல்லவர்களே.

          \\காலனியாதிக்க பிரட்டன் வேறு. இன்றைய பிரட்டன் வேறு.//

          பெரிய வேறுபாடு ஏதுமில்லை.குடியேற்ற ஆதிக்கம் வேறு பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.மூன்றாம் உலக நாடுகளை வட்டியின் மூலம் ஒட்ட சுரண்டும் உலக வங்கியாக,IMF ஆக, தாராளமயமாக்கலாக, அந்நாடுகளின் கனிம வளங்களை கொள்ளையிடும் மூலதனமாக,மைய ஆசிய,மேற்காசிய எண்ணெய் வளங்களை கொள்ளையிட ஆப்கன்,ஈராக்.லிபியா போராக அது தொடரத்தான் செய்கிறது.என்ன முன்பு போல் தனிக்காட்டு அரசனாக இல்லாமல் புதிய பங்காளிகளுடன் கொள்ளைப் பொருளை பங்கு போட வேண்டியிருக்கிறது.

        • //மூன்றாம் உலக நாடுகளை வட்டியின் மூலம் ஒட்ட சுரண்டும் உலக வங்கியாக,IMF ஆக, தாராளமயமாக்கலாக, அந்நாடுகளின் கனிம வளங்களை கொள்ளையிடும் ///

          இல்லை. மிக தவறு. கடன் வாங்கும் அளவிற்க்கு நம் பொருளாதார கொள்கைகளை முட்டாளதனமாக நாம் வகுத்த்தால் தான் இந்த நிலை அன்று. இன்று இல்லை. 1991 சிக்கலை பற்றி இங்கு பல காலமாக விளக்கிவருகிறேன். தேடி படித்து பார்க்கவும். 1992இல் சோவியத் யூனியன் திவாலாகி சிதறியதை போல் நாமும் அழிந்திருக்க பெரும் வாய்ப்பு இருந்தது. அய்.எம்.எஃப் இடம் இன்று கடன் வாங்குவதில்லை. மாறாக அவர்களிடன் நம் உபரி டாலர்களில் அளித்து, தங்கம் வாங்கும் அளவிற்க்கு பலம் பெற்றுள்ளோம். விரிவாக எழுதியிருக்கிறேன்.மீண்டும் மீண்டும் அதை படித்து உள் வாங்காமலேயே பேசுகிறீகள் :

          ///1991இல் அந்நிய செலவாணி இரண்டு வார இறக்குமதிக்கும் மட்டும் போதுமானதாக அபாயகரமான நிலையில் இருந்தது. இன்று பல நூறு பில்லியன் டாலர்கள் கையிருப்பு. அன்று ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்துக்கு விழும் அபாயம் மிக அதிகமாக இருந்தது. அதாவது ஒரு டாலருக்கு நிகராக சுமார் 2000 ரூபாய் அல்லது இன்னும் மோசமாக வீழ்ந்திருக்க வாய்ப்பு மிக மிக அதிகம். ரஸ்ஸிய் ரூபிள் 1992க்கு பிறகு கடுமையாக வீழ்ந்ததை போல் ஒரு situation. இதிலிருந்து மீண்டு வர 1991 பட்ஜெட்டில் மன்மோகன் சிங் செய்தது : immediate floating of rupee in the current account (and not in capital account), allowing foreign investments into many sectors and stock markets, that is free flow thru FDI and FII, reduction of import duties and controls, reduction of many other tariffs and excise duties, trade liberalisation and most crucial decision of abolishing industrial licensing in one go. Dramatic actions which saved us from doom and destruction.///

        • //நீங்கள் உயர்ந்த மனிதர்கள் என்று குறிப்பிட்டது பிரிட்டன் நாடாளுமன்ற மரபுகளை கடைபிடித்து ஒழுகும் ஆளும் வர்க்க கனவான்களைத்தானே.அப்படி இல்லை என்று ஆதாரத்துடன் சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியாமல் மொத்த பிரிட்டனை ஏன் இழுக்கிறீர்கள்.பொதுவாகவே ///

          யாரும் அறியாத விசியமல்ல இது. 100 % perfect ஆன அமைப்பு இதுவரை எங்கும் இருந்ததில்லை. இது போன்ற பெரும் தவறுகள் அவ்வப்போது நடக்கும் தான். மறுபடியும் நிகழாமல், checks and balances, corrective mechanism ஒரு உண்மையான ஜனன்னாயக அமைப்பில் தான் சாத்தியம். சாதாம் ஹூசைன் பல போர்களை முன்பு துவங்கியவன். இடி அமீன், இன்றைய வட கொரிய அதிபர், மாவோ, பாக்கிஸ்தான் சர்வாதிகாரிகள், 1979இல் ஆஃப்கானிஸ்தான் மீது படை எடுத்த சோவியத் ரஸ்ஸிய அதிபர் பிரஸ்னேவ் என்று அடுக்கலாம். ஆனால் இவற்றில் ஒரு முக்கிய அம்சம் : போர் தொடுத்தது தவறு என்று தெரிந்து, பின்னாட்களில் இதை துவக்கியவர்கள் ‘தண்டிக்க’ படவோ அல்லது பதவி விலகவோ தேவை அல்லது சூழல் உருவாகவே இல்லை. they got away with their criminal actons and died peacefully. அதுதான் ஜனனாயகம் இல்லாத தன்மைக்கும், லிபரல் ஜனனாயகத்திற்க்கும் வித்தியாசம். எது பரவாயில்லை ?

  6. “இந்த ஐந்து கோடிக்கு ரிடர்ன் எவ்வளவு கிடைக்கும்?’

    “இவர்களது உணர்வையும், உணர்ச்சியையும் தீர்மானிப்பது இந்த வர்த்தக உணர்வுதான், கொள்கை சார்ந்த அரசியல் உணர்வல்ல”.

    இது அரசியல்வாதிகள், அல்லக்கைகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பொருந்தும் என்பதை சில பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டது. வார்டு தேர்தல் முதல் எம்.பி தேர்தல் வரை எந்த வேட்பாளர் எவ்வளவு கொடுப்பான் என்று எதிர்பார்க்கும் நிலைக்கு மக்களை மாற்றியிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். இதுதான் வேட்பாளர்களின் மிகப் பெரிய பலம்.

    ஏற்கனவே பதவியில் இருந்தவன் என்றால் “கொள்ளையடித்த பணத்தில்தானே கொடுக்கிறான்” எனவும் புதிய வேட்பாளர் எனில் “சும்மாவா முதல் போடுகிறான்” எனவும் மக்களை கணக்குப் போடவைத்துவிட்டார்கள். யார் யார் எவ்வளவு கொடுப்பார்கள் என எதிர்பார்த்துதான் பலரும் காத்திருக்கிறார்கள். இதுவே இன்றைய மக்களின் மனநிலை. சுருக்கமாகச் சொன்னால் இத்தகைய தேர்தல்கள் மக்களை ஊழல்படுத்தியதுதான் மிச்சம். இது மக்களின் குறையல்ல. நமது ஜனநாயகத்தின் பலவீனம்.

    காசு கொடுத்தால் வாங்கமாட்டேன் என்று சொல்வதற்கு இன்று யாரும் இல்லை என்ற நிலைதான் நிலவுகிறது. நடுநிலையாளர்களாக நடந்து கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். கட்சிக்காரன் என்ற முத்திரை விழுந்துவிட்டால் மற்ற கட்சிக்காரனிடமிருந்து வரும் தொகையை இழக்க வேண்டி வருமே. பிழைப்புவாதம் இன்றைய நெறிமுறையாக வளர்க்கப்பட்டுள்ளது. இதை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. காசு கொடுப்பதை தடுக்க முற்பட்டால் வரவேண்டிய காசை தடுத்திட்டானே பாவி என எதிராகத்தான திரும்புவார்கள்.

    மாற்று அரசியலுக்கான போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய பிழைப்புவாதத்திலிருந்து மக்களை மீட்க முடியும். பிழைப்புவாத சிந்தனையிலிருந்து மக்களை மீட்டெடுத்துவிட்டால் அரசியல் பிழைப்புவாதிகள் ஆழிப் பேரலையில் அடித்து செல்லப்படுவது நிச்சயம்.

  7. அருமையான கட்டுரை. கல்லா கட்டும் நோக்கத்தோடு வேட்பாளர்கள் வருகிறார்கள் என்றால்… கொள்ளையடிக்கப்படும் மக்களும் தேர்தல் பரபரப்பிற்குள் சிக்கி கொள்கிறார்கள்.

  8. வாக்களிப்பது ஒரு ஜனநாயகக் கடமை என்று காதில் பூ சுற்றுவார்கள். இல்லை இந்த போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதன் மூலமே நாம் உண்மையான ஜனநாயகத்தின் முதல் படியை எடுத்து வைக்க முடியும்.சரியான முடிவு.

    ________________________________________________________

    • இல்லை. நாம் அனைவரும் சுயட்சை வேட்ப்பளர்கள்களுக்கு மட்டும் வாக்களித்தால் என்ன ஆகும் ? அதாவது எந்த ஒரு அரசியல் கட்சி வேட்பாளர் கூட தேர்ந்திடுக்க படாமல், எல்லா எம்.எல்.ஏக்களும் சுயேட்சைகளாக இருந்தால் எப்படி இருக்கும் ? நடக்கிற காரியமல்ல என்றாலும், இப்படியும் ஒரு வழி இருக்கு. அல்லது 49ஓ : இது வாக்கு இயந்திரத்தில் இன்னும் அனுமதிக்கப்ட்டாத சதி. உச்ச நீதி மன்ற வழக்கில் இன்னும் அரசு பதில் சொல்லாமல் பல வருடங்களாக டபாய்க்கிறார்கள்.

  9. யாரும் யாருக்கும் ஆப்பு அடிப்பதில்லை. நாமாகவே அந்த ஆப்பை தேடிசென்று உட்கார்ந்தால் அதற்கு யாரும் பொறுப்பாகமுடியாது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் தேர்தல் புறக்கணிப்பு மட்டுமே நாம் அரசியல் வியாபாரிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்க முடியும். Just ignore the election

  10. மிகவும் அருமையான கட்டுரை. நம்மை ஆழ்வதற்கு ஒரு ஜனநாயக கட்சி வேன்டும். எப்படி தேர்ந்து எடுக்க வேண்டும். யாரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் ஓரே குழப்பம்.

  11. தலைவர்களே முதலாளிகளாக இருப்பதால் வரும் வினை .முன்னர் காண்டிராக்ட் கமிஷன் வாங்கினார்கள் .இப்போது இவர்களே இவர்கள் பினாமி கம்பெனிக்கு காண்டிராக்ட் எடுக்கிறார்கள் .இவர்களின் பணபலத்தால் நேர்மையாக இருக்க முற்படும் வேறு கட்சிக்காரர்களுக்கும் நெருக்கடி .எதிர்த்து பேசுபவர்கள் தட்டி கேட்பவர்கள் என்ற வரிசையில் பலமுள்ள சிலரை கொன்றும் தீர்க்கிறார்கள் …தா .கிருட்டிணன் ,ஆலடி அருணா ,என .இந்த நிலை மாறுவதாக தெரியவில்லை .

    அருமையான கட்டுரை .அனைவரும் படித்தறிய வேண்டியது

  12. “காசு கொடுத்தால் வாங்கமாட்டேன் என்று சொல்வதற்கு இன்று யாரும் இல்லை என்ற நிலைதான் நிலவுகிறது.”
    “பிழைப்புவாதம் இன்றைய நெறிமுறையாக வளர்க்கப்பட்டுள்ளது.”
    “பிழைப்புவாத சிந்தனையிலிருந்து மக்களை மீட்டெடுத்துவிட்டால் …. …………”

    அத்தைக்கு மீசை முளைத்தால் ……?

    ஜனநாயகம் என்பது எண்கள் சம்பந்தப்பட்டது. கூட்டணி கணக்குகள் தான் வெற்றியை தேடி தரும்,
    ஜனநாயகம் ஒரு தோல்வி அடைந்த அமைப்பு.
    இன்று பிழைப்பு வாத மக்கள் அதிக அளவில் வாக்கு சாவடி சென்று ஒட்டு அளிக்கிறார்கள். எனவே அவர்களின் தரத்திற்கு ஏற்ப அரசாங்கம் அமைகிறது. இது ஜனநாயகக அமைப்பின் வெளிப்பாடு தான்.

    மத அமைப்புகள் மக்களிடையே நேர்மையை போதித்து வந்தன. ஜனநாயக வாதிகளும் கம்முநிகளும் மதங்கள் மக்களை அடிமைபடுத்தும் நிறுவனம் என்று உருவகபடுத்தி எல்லா மதங்களையும் அழித்து அதிகாரத்தை கைப்பற்றி பெரும்பான்மை மக்களை பிழைப்பு வாதிகளாக மாற்றி விட்டார்கள்.

    தற்போது நேர்மை உறங்கும் நேரமாகும்.

  13. “மத அமைப்புகள் மக்களிடையே நேர்மையை போதித்து வந்தன. ஜனநாயக வாதிகளும் கம்முநிகளும் மதங்கள் மக்களை அடிமைபடுத்தும் நிறுவனம் என்று உருவகபடுத்தி எல்லா மதங்களையும் அழித்து அதிகாரத்தை கைப்பற்றி பெரும்பான்மை மக்களை பிழைப்பு வாதிகளாக மாற்றி விட்டார்கள்”.

    “பிழைப்புவாத சிந்தனையிலிருந்து மக்களை மீட்டெடுத்துவிட்டால் …. …………”
    அத்தைக்கு மீசை முளைத்தால் ……?

    மதங்களை அழித்து மக்களை பிழைப்புவாதிகளாக அரசியல்வாதிகளால் மாற்ற முடியும்.
    ஆனால் பிழைப்புவாத சிந்தனையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதை மட்டும் ”அத்தைக்கு மீசை முளைத்தால் ……?”

    இந்த எள்ளல் உங்களுக்கு சுயமுரண்பாடாகத் தோன்றவில்லையா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க