முகப்புகட்சிகள்காங்கிரஸ்காங்கிரசின் வேட்டி கிழிப்பும், கோஷ்டி மோதலும் ஒரு 'ஆய்வு' !

காங்கிரசின் வேட்டி கிழிப்பும், கோஷ்டி மோதலும் ஒரு ‘ஆய்வு’ !

-

தேசியக் கட்சி என்ற பந்தாவுடன் வலம் வரும் காங்கிரசு கும்பல்தான்  இந்நாட்டின் எல்லா வகை அரசியல் சீரழிவுக்கும் தோற்றுவாய். காலனிய ஆட்சியின் போதே வெள்ளையனது பிச்சையால் உருட்டித் திரட்டப்பட்ட இந்த கட்சியில் அப்போதும் இப்போதும் மிட்டா மிராசுதார்களும், பண்ணைகளும்தான் தலைவர்களாக உலா வருகிறார்கள். காந்தி, காமராஜ், கக்கன் என்று மக்கள் திரளுக்கு மட்டும் அதுவும் பண்டாரங்கள், பரதேசிகளைப் போன்ற சித்திரத்தை காட்டிவிட்டு உள்ளூர் முதல் மாநிலம், டெல்லி வரை ‘மேல்’சாதி, மேட்டுக்குடி, பரம்பரை பணக்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்.

தூய வெள்ளையும் சொள்ளையுமாய் கதராடை அணிந்து வரும் இந்த எளியவர்களது சொத்துக் கணக்கை கேட்டீர்கள் என்றால் அந்த எளிமை ஆபாசமாக உறுத்தத் துவங்கும். விருந்தினருக்கு சுதேசி பானமான நீர் மோரைத் தரும் வீட்டுக்காரர் ஒரு சீமைச்சாராய அதிபர் என்றால் என்ன சொல்வீர்கள்?

ஆகஸ்டு 15 அதிகார மாற்றத்திற்கு பின்னர் இந்தியா முழுவதும் இந்த ஆண்டைகளின் கட்சிக்கெதிராக மக்கள் உணர்வு கொந்தளிக்க தொடங்கியிருந்தது. ஒவ்வோரு மாநிலத்திற்கேற்ப இந்த எதிர்ப்புணர்வு பிராந்திய அரசியல் இயக்கமாக எழத் துவங்கியிருந்தது. கேரளம், மே.வங்கத்தில் இடது சாரி இயக்கம், தமிழகத்தில் திராவிட இயக்கம், மராட்டியத்தில் சிவசேனா, இந்தி மாநிலங்களில் சமூக நீதிக்கட்சிகள், பா.ஜ.க என்று 50களில் துவங்கி 80கள் வரை இந்த போக்கை காணலாம்.

தமிழகத்தில் கூட தி.மு.க தனது சொந்த அரசியல் கொள்கை காரணமாக வெற்றி பெற்றது என்பதை விட காங்கிரசு மேல் இருந்த மக்களின் எதிர்ப்புணர்வு காரணமாக வெற்றி பெற்றது என்றே மதிப்பிடலாம். நேர்மறை அடிப்படையில்லாத ஒன்று எதிர்மறை காரணமாக வென்ற சூழல் அது. பரம்பரை பணக்காரர்களான காங்கிரசு தலைவர்களை எதிர்த்து எளிய பின்னணியிலிருந்து வந்த தமிழக இளைஞர்கள் தி.மு.க என்ற பெயரில் வெற்றி கொண்டார்கள்.

ஆந்திராவில் கூட என்.டி.ராமாராவ் காங்கிரசு எதிர்ப்புணர்வு காரணமாகவே குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்தார். லல்லு, மொலாயம், மாயாவதி என்று பலரும் இதே காரணத்தினாலேயே அரசியலில் வெற்றி பெற்றார்கள்.

எனினும் இந்த போக்கு காரணமாக காங்கிரசின் பலம் வெகுவாக குறைந்தாலும், சரியான மாற்று உருவாகாத நிலையில் அதுவே இன்னமும் ஆளும் கட்சியாக தொடருகிறது. மேலும் காங்கிரசை எதிர்த்து வந்த கட்சிகள் அனைத்தும் இன்று குட்டி குட்டி காங்கிரசாக மாறிவிட்டன. அரசியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கிடையே வேறுபாடு இல்லை. காங்கிரசு அகில இந்திய கார்ப்பரேட் கம்பெனி என்றால் இந்த கட்சிகள் பிராந்திய அளவிலான கம்பெனிகளாக நிலைபெற்று விட்டன.

இன்று கூட்டணி பலத்தால் ஆளும் காங்கிரசு கும்பல் தனது அதிகார மேன்மை காரணமாகவே கட்சி உறுப்பை பேணி வருகிறது. 90களுக்கு பிறகு இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் தீவிரமாக அமல்படுத்தபட்ட காலங்களில் காங்கிரசின் அரசியல் பலம் குறைந்திருந்தாலும் அதன் ஊழல், நிறுவன பலம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நரசிம்மராவ் மகன் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யாத நிலக்கரி ஊழலாகாட்டும், சுக்ராம் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றியதாக இருக்கட்டும், போபார்ஸ் மூதல் பேர்ஃபாக்ஸ் வரை இராணுவ இறக்குமதி ஊழல், பங்கு சந்தை ஊழல், தொலைத்தொடர்பு ஊழல் என்று நாடறிந்த பிரம்மாண்டமான ஊழல்கள் அத்தனையிலும் காங்கிரசு ஆதாயம் அடைந்திருக்கிறது.

பன்னாட்டு முதலாளிகள், இந்திய முதலாளிகள், அமெரிக்கா முதலான ஏகாதிபத்தியங்கள் அனைவரும் இன்று காங்கிரசையே முதன்மையான கூட்டாளியாக பயன்படுத்துகின்றனர். இரண்டாவது பங்காளி பா.ஜ.க. இன்று அம்பானிகளின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே பெரும் நிறுவனமாக எழுந்திருப்பது காங்கிரசின் ஆட்சி மூலம்தான்.

இந்தப் பின்னணியில் தமிழக காங்கிரசைப் பார்போம்.

___________________________________________

60கள் வரை பலநூறு ஏக்கர் நிலம் சொந்தமான பண்ணையார்கள், ‘மேல்’சாதியினர், மேட்டுக்குடியினர் எல்லாரும் காங்கிரசை அலங்கரித்தனர். காமராசரின் ஆட்சி கூட இவர்களுக்குத்தான் நன்கு பயன்பட்டது. இதன்பின் திராவிட இயக்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், காங்கிரசு தனது சமூக அடிப்படையை முற்றிலுமாக இழந்தது. இன்றும் தொடர்கிறது. மத்தியில் ஆட்சி அதிகாரம், திராவிட இயக்கத்தின் சீரழிவு, திராவிட கட்சிகள் கூட்டணி போன்றவற்றை வைத்தே  காங்கிரசு வாழ்கிறது. இதனால் கருமாதிக்கு போக வேண்டிய கட்சி இன்றும் தமிழகத்தில் சவுண்டு விடுகிறது.

இந்த போக்கினாலேயே காங்கிரசு என்பது தலைவர்கள் மட்டும் இருக்கும் கட்சியாக மாறிவிட்டது. தொண்டர்களை வழங்கும் சமூக அடித்தளத்தை காங்கிரசு இழந்தாலும் தேர்தலுக்கு தேர்தல் தி.மு.கவோ, அ.தி.மு.கவோ இந்த உண்டு கொழுத்த சொகுசுக் கனவான்களது கட்சியை சுமந்தன. 70,80களில் இந்த பண்ணையார்கள் கல்யாண மண்டபங்கள், திரையரங்குகள், மொத்த ஏஜென்சிகள், கேஸ்-பெட்ரோல் முகவர்களாக பரிணமித்தனர். 90களுக்கு பிறகு அபரிதமான அரசு வங்கிக் கடன் மூலம் பெரும் முதலாளிகளாகவும் வளர்ந்து விட்டனர். இன்று தமிழக காங்கிரசில் இருக்கும் அத்தனை தலைவர்களும் சுயநிதிக் கல்லூரிகளை வைத்தும் நடத்துகின்றனர்.  இன்று அரசு வங்கிகளின் வராக்கடன்களது பட்டியிலில் பல காங்கிரசு தலைவர்கள் அடக்கம்.

பார்ப்பன ஊடகங்கள், மேட்டுக்குடியினரை பொறுத்த வரை திராவிட இயக்கம் என்றால் லோ கிளாஸ் மக்களது ரவுடி இயக்கம், காங்கிரசு என்றால் நாகரீகமான கட்சி என்ற ஸ்டீரியோ டைப் கருத்தை அன்றும் இன்றும் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த காங்கிரசு முதலைகளுக்கு எப்போதும் ஒரு மேட்டிமைத்தனமான பார்வை இருக்கும். தாங்கள்தான் ஆளப்பிறந்தவர்கள் என்று கூச்சமில்லாமல் கருதிக் கொள்வார்கள்.

தலைவர்கள் நிரம்பிய கட்சி என்பதாலேயே இங்கு தொண்டர்கள் யாருமில்லை. தலைவர்கள் மட்டும் இருப்பதினால்தான் இங்கு வேட்டி கிழிப்பு கலாச்சாரம் ஒரு தேசிய அடையாளமாக அனைவராலும் ஒத்துக்கொள்ளப்படுகிறது.

இன்று திடீர் பணக்காரர்களாக ஆனவர்கள், குறுக்கு வழியில் தொழிலதிபர்களாக மாறியவர்கள், அதிகாரத்தின் உதவயால் தொழில் செய்பவர்கள் என அனைவரும் தமது தொழில் பாதுகாப்பு காரணமாக காங்கிரசில் சேர்ந்து ஒரு தலைவர் பதவியை போட்டுக் கொள்கின்றனர். இந்த அடையாளம் தொழில் போட்டி, தாவாக்கள், பஞ்சாயத்துக்கள், போலிசு பிரச்சினை என சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளில் எல்லாம் அத்தனை சுலபமாக தலைவர் பதவியை பெற்று விட முடியாது. அதற்கு ஏதோ ஒரு விதத்தில் களப்பணி செய்து ஒரு சமூக அடிப்படையை திரட்ட வேண்டும் என்ற ஒழுங்கு இருக்கிறது. காங்கிரசுக்கு அந்த களப்பணி தேவை இல்லை என்பதால் இங்கு சுலபமாக தலைவர் பதவியை பெற்றுவிடலாம். அதற்கு தேவைப்படும் தொகையை கட்டி விட்டீர்களென்றால் பதவி வீடு தேடி வரும்.

மேலும் உங்களுக்கு தலைவர் பதவி வந்துவிட்ட படியாலேயே நீங்கள் கிரமமான கட்சி வேலைகள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படியே செய்ய விரும்பினாலும் காங்கிரசில் என்ன எழவு களப்பணி காத்திருக்கிறது? அவர்களுக்கு இருக்கும் ஒரே பணி சத்தியமூர்த்தி பவனில் வேட்டியைக் கிழித்துவிட்டு எதிர் கோஷ்டியை பதம்பார்ப்பதுதான். அதுவும் கூட காசு கொடுத்தால் எப்போதும் திரட்டிவிடலாம். இதனால் உள்ளூர் முதலாளிகள், வர்த்தகர்கள், பைனான்ஸ்காரர்கள், என்று பலரும் காங்கிரசில் விருப்பத்தோடு சேர்கின்றனர்.

________________________________________

2.2.2011 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில் “காங்கிரசில் பதவி வாங்க டீ, சுண்டல் போதும் – மதுரை காங்கிரசு காமடி” என்ற உண்மையிலேயே காமடியான கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. அதில் வரும் சில பத்திகளை அப்படியே தருகிறோம்,

“…மதுரை காங்கிரசில் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் வாசன் ஆதரவாளரான கோடீஸ்வரன். கட்சிப் பதவிகளை விற்பதுதான் அவர் செய்யும் கட்சிப்பணி. ஒரு உதாரணத்திற்கு, சமீபத்தில் ரோட்டில் தள்ளு வண்டியில் பிளாஸ்டிக் பாத்திரம் விற்கும் ஒருவரிடம் நான் பிளாஸ்டிக் சாமான்கள் வாங்கினேன். நான் கதர் சட்டை வேஷ்டி கட்டியிருப்பதைப் பார்த்த அவர், “நீங்க காங்கிரஸ்காரரா?” எனக் கேட்டார்.

நான் என் கட்சிப் பதவியைச் சொன்னேன். பதிலுக்கு அவர், “நீங்க எவ்வளவு பணம் கொடுத்தீங்க, நான் இருபதாயிரம் கொடுத்து துணைத்தலைவர் பதவி வாங்கியிருக்கிறேன். இது மாதிரி எட்டு வண்டி சிட்டியில ஓடுது. பாதுகாப்புக்கு இருக்கட்டுமேன்னுதான் இந்த கார்டு” எனச் சொல்லி மதுரை நகர் காங்கிரசு துணைத் தலைவர் என அச்சடித்த விசிட்டிங் கார்டை என்னிடம் காண்பித்தார். அரண்டு போனேன்.

அது போல காங்கிரசு கட்சியில் இருந்தவர் கட்சியிலிருந்து விலகி ஹோட்டல் தொழில் செய்து வந்தார். அவர் பத்தாயிரம் கொடுத்து கட்சியின் துணைத் தலைவர் ஆகியிருக்கிறார். அவர் ஒரு காலத்தில் கட்சியில் இருந்தவர் என்பதால் பத்தாயிரம் ரூபாய் சலுகையாம். இதே போல டாக்டர் ஒருவருக்கும் இருபதாயிரம் ரூபாய் கொடுத்து பதவி வாங்கப்பட்டிருக்கிறது.

தினமும் டீ, சுண்டல் வாங்கிக் கொடுத்தவரை சர்க்கிள் கமிட்டி தலைவராக்கி விட்டார்கள். “டீ, சுண்டல் உடம்புக்கு ஆகாது. மட்டன் சுக்கா சாப்பிடுங்க” என்று ஐஸ் வைத்தவருக்கு டீ, சுண்டல் பார்ட்டியிடமிருந்து கமிட்டி தலைவர் பதவி பிடுங்கி அளிக்கப்பட்டது. டீ, சுண்டலுக்கும், மட்டன் சுக்காவுக்கும் இதனால் சண்டை ஏற்பட நிர்வாகி மட்டன் சுக்காவுக்கே ஆதரவளித்தார்.

அண்மையில் கட்சி ஆபீஸில் டீ, சுண்டல் பார்ட்டியைப் பார்த்தேன். “அண்ணே, நான் இப்ப மாவட்டப் பொதுச் செயலாளர் ஆயிட்டேன்” என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. “ஆபிஸ் பக்கமே வரக்கூடாதுன்னு உன்னை அவர் விரட்டினாரே” என்ற போது ” அதெல்லாம் சமரசம் ஆயிட்டோம். தொடர்ந்து பிரியாணி வாங்கிக் கொடுத்தேன். டெலிபோன் பில் கட்டினேன். இதெல்லாம் நம்ம கட்சியில சகஜம்தானே”…

_________________________

சிரித்துக் கொண்டே படித்துவிட்டீர்களா? காங்கிரசில் சேர்வதும், ஆளாவதும் இத்தனை சுலபமா என்று இனி வலிந்து விளக்கத் தேவையில்லை.

காங்கிரசு கட்சி ரொம்ப ஆக்டிவாக இருப்பது தேர்தல் காலத்தில்தான். கூட்டணி கட்சிகளின் தயவில் சொகுசாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ, எம்.பி என்று செட்டிலாவதற்கான வாய்ப்பை அதுதானே வழங்குகிறது? தேர்தல்  காலங்களில் காங்கிரசு குறுநில மன்னர்கள் நடத்தும் மகாபாரதப் போர் தனி ரகம். அதை கதையாக எழுத அந்த வியாசன் வந்தால் கூட நடவாத ஒன்று.

இந்த குறுநில மன்னர்கள் தனித்தனியாக நின்று சண்டையிட்டு கொள்வதற்கு பதில் ஆளுக்கொரு கோஷ்டியாக அணி பிரித்து சிலம்பாடுவார்கள். அதிலும் கொட்டை போட்ட  கோஷ்டிகள் சாமர்த்தியமாக காய் நகர்த்தும். தற்போது 63 தொகுதிகளுக்கும் காங்கிரசு கட்சி ஒருவழியாக வேட்பாளர்களை அறிவித்து விட்டது. தங்கபாலு மனைவிக்கு, கிருஷ்ணசாமி மகனுக்கு, செல்வந்த ரவுடி செல்வபெருந்தகைக்கு, பழம் பெருச்சாளிகள் செல்வக்குமார், ஞான சேகரன், பீட்டர் அல்போன்சுக்கு, மொத்தத்தில் வாசன் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, பி.சிதம்பரம் கோஷ்டி, என்று முடித்து விட்டார்கள்.

இதில் என்னமாய் பீலா விட்டார்கள்? இரண்டு முறை உறுப்பினராக இருந்தவர்களுக்கு சோனியா காந்தி நோ சொல்லிவிட்டார் என்று அள்ளி விட்டார்கள். பட்டியலைப் பார்த்தால் மூன்றுமுறைக்கும் மேல் எம்.எல்.ஏவாக இருந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். தங்கபாலு மைலாப்பூர் தொகுதியை ராவாக லபட்டியிருக்கிறார் என்றாலே இந்த வேட்பாளர் ஒதுக்கீடையும் அதற்கு அன்னை சோனியாவின் அருளையும் புரிந்து  கொள்ளலாம்.

ராகுல் காந்தி எனும் நேரு குடும்பத்தின் இளவரசரது சிபாரிசால் யுவராஜ் போன்ற புதிதாக வந்த செல்வக் கொழுந்துகளுக்கு யோகம் அடித்திருக்கிறது. அதிலும் ராகுல் காந்தியின் முயற்சியில் தமிழகத்தில் 13 இலட்சம் உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார்களாம். அவர்களெல்லாம் பயோடேட்டா, புகைப்படம், சான்றிதழ் கொடுத்து சேர்ந்திருக்கிறார்களாம். இதையெல்லாம் சிலர் மாபெரும் சாதனையாக பீற்றுகின்றனர். கொடுத்தவனெல்லாம் நாளைக்கு ஏதாவது அப்பாயிண்ட்மெண்டோ, இல்லை தொழில் லைசோன்சோ, இல்லை வங்கிக் கடனுக்கோ இந்த உறுப்பினர் பில்டப் பயன்படும் என்று கொடுத்திருக்கிறான். மற்றபடி இந்த 13 இலட்சம் பேரில் பத்துபேர் கூட காங்கிரசுக்கு ஓட்டு அளிப்பது நிச்சயமில்லை.

___________________________________________________

ப்படித்தான் மாபெரும் கொழுப்பு சேர்ந்த ஒரு சதைப்பிண்டமாக காங்கிரசு உப்பி வருகிறது. இத்தகைய ‘ஜனநாயக’ நடைமுறை கொண்ட கட்சிதான் இந்தியாவை வேகமாக ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. காங்கிரசின் அத்தனை அரசியல் நிலைப்பாடுகளையும் துளிக்கூட வேறுபாடில்லாமல் ஏற்கும் கட்சிகள்தான் தி.மு.கவும், அ.தி.மு.கவும். இதில் தி.மு.க மற்றுமொரு காங்கிரசு கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

காங்கிரசு இந்த நாட்டில் உள்ள ஏல்லா சீர்கேடுகளுக்கும் ஊற்று. இந்த ஊற்றை இந்த நாட்டின் நீதித்துறை, நிர்வாகத்துறை, இராணுவத்துறை என்று சகல அமைப்புகளும் காத்து வருகின்றன. காங்கிரசை ஒழித்தால்தான் இந்தியாவின் தலையெழுத்து மாற்றப்படும். ஆனால் காங்கிரசை தேர்தல் முறையின் மூலம் ஒழிக்க முடியாது. ஏனெனில் இந்த தேர்தலையும், இந்த அரசியல் அமைப்பையும் எது காத்து நிற்கிறதோ அதுவே காங்கிரசையும் காத்து நிற்கிறது.

காங்கிரசு என்ற கட்சியின் அடியொற்றித்தான் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பயணிக்கின்றன. இவர்களது ஒட்டுமொத்த அழிவில்தான் காங்கிரசின் அழிவும் அடங்கியிருக்கிறது. ஆகவே தேர்தல் புறக்கணிப்பு என்ற ஆயுதமே இதற்கு முதலில் தேவைப்படும் போராட்டமாகும். இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறை ஒழிக்கப்படும் போது அங்கே தன்னியல்பாக காங்கிரசின் சமாதியும் சர்வ நிச்சயமாக கட்டப்படும். கட்டுவோம்.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

 1. காங்கிரசின் வேட்டி கிழிப்பும், கோஷ்டி மோதலும் ஒரு ஆய்வு !…

  தேசியக் கட்சியாக வலம் வரும் காங்கிரசுதான் இந்நாட்டின் அரசியல் சீரழிவுக்கும் தோற்றுவாய். வெள்ளையனது பிச்சையால் உருட்டித் திரட்டப்பட்ட இந்த கட்சியில் மிட்டா மிராசுதார்களும், பண்ணைகளும்தான் தலைவர்களாக உலா வருகிறார்கள்….

 2. அவன் வேட்டி. அவன் கிழிச்சுக்கிறான். அம்மணமா கூட போவான். உங்களுக்கென்ன வந்துச்சு.

 3. யோவ் காங்கிரஸ்காரரே! கிழிக்கிறது என்னவோ அவன் வேட்டியாக இருந்தாலும் அம்மணமாக்கப்படுவது இந்த நாட்டின் அப்பாவி ஜனங்கள்தானே?

 4. கருவாடு மீன் ஆகாது..! கறந்த பால் மடி புகாது..! காங்கிரசு ஆட்சிக்கு வராது ..!

 5. இந்த தேர்தலானது தமிழகத்தை வரும் ஐந்தாண்டுகாலம் ஆட்சி அதிகாரத்திலிருக்கவும், மக்கள் நலத்திட்டங்களில் கொள்ளையடிக்கவும், கார்ப்ரெட் நிறுவனங்களுக்கு சேவகம் செய்து பொறுக்கி தின்னவும், சாக்கடை முதல் சட்டசபை கட்டிடம் வரை; பள்ளி குழந்தைகளுக்கான முட்டை முதல்
  முதியோர் பென்ஷன் வரை கமிஷன் அடித்து சொத்து சேர்க்கவும், இன்னும் கல்லூரி கட்ட, சேனல் வாங்க, கப்பல் வங்க, சாராய கம்பெனி நடத்த என இப்படி அனைத்துவித கொள்ளைகளுக்கும் இந்த தேர்தல்தான் அட்சாரம். இதில் வெற்றிபெறும் எவரும் தாராளமாக நாட்டின் வளங்களை, அரசின்
  கருவூலத்தை கொள்ளையிடலாம். இத்தகைய அரசியல் சூதாடிகளுக்கான தேர்தல் இது.
  இதில் ஓட்டு பிச்சைக்காக தமிழின பெருமைகளை பேசுபவர்கள், சாதி பெருமைகளை பேசி சுயசாதி மக்களை ஏமாற்றுபவர்கள், மதத்தை மூலதனமாக பயன்படுத்துபவர்கள், சினிமா நடிகர் நடிகைகளின் கவர்ச்சி அரசியலை காட்டி ஏமாற்றுபவர்கள், கம்யூனஸசத்தை பேசி ஏழை மக்களிடம் ஆசைவார்த்தைகளை பேசுபவர்கள், தேர்தல் அறிக்கை என ஒன்றை வெளியிட்டு ஆசை காட்டுபவர்கள் என விதவிதமான பச்சோந்தி அரசியல்வாதிகள்

  உங்களை சுற்றி வலம் வருவார்கள் நம்பிவிடாதீர்கள்.
  கடந்த ஆண்டுகளில் இந்த மோசடி அரசியல்வாதிகளால் தமிழீழம் பெற்றுதர முடியவில்லை. வறுமையை ஒழிக்க கையாலாகவில்லை, சாதி மத துவேஷத்தை அகற்ற முயலவில்லை, பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒடுக்க முடியவில்லை. தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளம், பணிநிரந்தரம்,
  பதுகாப்பு பெற்றுத்தர வக்கில்லை. கலவியின் தரத்தை உயர்த்த முடியவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்த கையாலாகவில்லை. குழந்தைகளுக்கும் பெண்களுக்குமான சமூக பதுகாப்பு வழங்க இயலவில்லை. அரசியல் ரவுடிகள் முதல் அனைத்துவித
  ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க முடியவில்லை. விலைவாசியை குறைக்க திறனில்லை. இப்படிபட்டவர்களுக்குதான் நீங்கள் வாக்களிக்க நினைக்கிறீர்கள் ? சிந்திப்பீர். தேர்தலை புறக்கணியுங்கள். சமூக, அரசியல் அவலங்களை மக்களிடம் பரப்புங்கள். மக்கள் சக்தி இதையெல்லாம் மற்றி காட்டும். மக்கள்தான் புரட்சிக்கான மூலதனம் – செ.செல்வவேந்தன்.

 6. //சிரித்துக் கொண்டே படித்துவிட்டீர்களா? காங்கிரசில் சேர்வதும், ஆளாவதும் இத்தனை சுலபமா……..//
  காங்கிரசு அரசியல் வெத்துவேட்டுகளின் கொட்டங்கள் இங்கும் கூடக் காணக்கிடக்கும் :

  http://villavan.wordpress.com/2011/03/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/#respond

 7. Selfish, corrupted, hopeless congressmen having slave blood…

  மேலே குறிபிட்டு இருக்கும் வார்த்தைகள் 12 ஆண்டுகளுக்கு முன் சோனியாவின் தலைமையில் காங்கிரஸ் தேர்தலுக்கு புறப்பட்ட போது… நான் எழுதியவை… காங்கிரஸில் இருக்கும் பொறுக்கி அடிமைகளுக்கு மானமே வர போவது இல்லை…

  காங்கிரஸ் எப்போதும் முதலாளிகளுக்கு சேவை செய்வதிலும்… சங்கராச்சாரிகள் போன்ற பொறுக்கிகளை துதிப்பதற்கும் மட்டும் பயன்பட்டுள்ளது… அது மக்களுக்கானது இல்லை…

  காங்கிரஸ் சில ஆண்டுகள் சர்வாதிகாரியாக இருந்த ராஜிவ் எனும் நீரோ மன்னன் அசாம் கனபரிசத் ஆட்சியை கலைக்க… பொடாக்களை உருவாக்கினார்… அதே பொடோ இயக்கம் அசாம் மக்களின் உரிமை பற்றி கேட்ட போது தீவிரவாதியாக்கினார்கள்…

  இந்திரா எனும் பாசிச பேய்… அகாலிதளம் ஆட்சியை கலைக்க பிரந்திரன்வாலேக்களை உருவாக்கி விட்டு… பின்னர் தீவிரவாதி என்றார்கள்…

  பாபர் மசூதிக்குள் ஆர்.எஸ்.எஸ். ஓநாய்களை 1985இல் உள்ளே விட்டவன் ராஜிவ்…

  1992இல் சந்தையை பெருமுதலாளிகளின் கையில் கொடுத்த பின்னர் மக்களின் பணத்தில் பங்கு சந்தை ஊழல் புரிந்ததில் இருந்து இப்போது பேசபடும் அலைகற்றை ஊழல் வரை ஊழலை மொத்தமாக தனக்கே உரிதாக்கி கொண்ட காங்கிரஸை மக்கள் இன்னும் சகித்து கொள்வது ஏனோ?

  அடுத்து அமெரிக்கா, ஐரோப்பா பல கண்டங்களில் பொறுக்கி விட்டு வந்து இங்கு அரசியல் செய்யும் பொட்டை பயல் ராகுல் கூட சர்வாதிகாரியாகி மக்களை படுத்துவான்…

  மக்கள் என்ன செய்ய போகிறார்கள்?

 8. //காங்கிரசை ஒழித்தால்தான் இந்தியாவின் தலையெழுத்து மாற்றப்படும். ஆனால் காங்கிரசை தேர்தல் முறையின் மூலம் ஒழிக்க முடியாது. ஏனெனில் இந்த தேர்தலையும், இந்த அரசியல் அமைப்பையும் எது காத்து நிற்கிறதோ அதுவே காங்கிரசையும் காத்து நிற்கிறது.//இது ஏன் சீமானுக்கும் மற்றத் தமிழ் அன்பர்களுக்கும் புரியவில்லை?கட்டுரை முடிவு நூறு சதவீதம் சரி.

  • /காங்கிரசை தேர்தல் முறையின் மூலம் ஒழிக்க முடியாது/இந்த தேர்தலையும், இந்த அரசியல் அமைப்பையும் எது காத்து நிற்கிறதோ அதுவே காங்கிரசையும் காத்து நிற்கிறது/
   Until then Seeman’s way is correct

 9. காங்கிரசுக்கு அந்த களப்பணி தேவை இல்லை என்பதால் இங்கு சுலபமாக தலைவர் பதவியை பெற்றுவிடலாம். அதற்கு தேவைப்படும் தொகையை கட்டி விட்டீர்களென்றால் பதவி வீடு தேடி வரும்.//

  ஆம். அதேபோல கொள்ளையடிக்கும் பணத்திற்கான பாதுகாப்பையும் காங்கிரசு வழங்குகிறது.
  சமீபத்தில் விசியிலிருந்து கட்ட பஞ்சாயத்து ரவுடித்தனம் செய்து சம்பாதித்த காசை வெள்ளையாக்க காங்கிரசில் சேர்ந்த செல்வபெருந்தகையும், அதிமுகவில் இருந்து கோடி கோடியாக ஜெயாவை ஏமாற்றி கொள்ளையடித்த காசை வெள்ளையாக்க, வெள்ளை வேட்டி கட்சியான காங்கிரசில் சேர்ந்த கராத்தே தியாகராஜனும் உதாரணம்.

  கொள்ளைப்பணத்தை காக்கும் பேங்க் லாக்கராகவும் காங்கிரசு செயல்படுகிறது.

 10. நந்தன் சீமானை லிபெர்டரியன் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் லிபெர்டரியன் தான் ஒரு முதலாளித்துவவாதி என்பதை ஒப்புக்கொள்கிறார். சீமானிடம் அந்த நேர்மையை கண்டிப்பாக காண முடியாது.

  • முதலாளித்துவவாதி என்று நீங்கள் தான் முத்திரை குத்துகிறீர்கள். லிபெர்ட்டேரியனிசம் தான் எம் கோட்ப்பாடு. தொழிலாளர்களின், ஏழைகளின் நிலை உயர கம்யூனிசம் தான் ஒரே வழி என்று நம்புகிறீர்கள். இல்லை, அது எதிர் மறையாகதான் வேலை செய்யும். ஃபாசிசத்திற்க்கும் அழிவிற்க்கும் இட்டு செல்லும் என்பது எம் கோணம். மாற்றாக, வறுமையை ஒழிக்க சந்தை பொருளாதார கொள்கைகளும், அடிப்படை ஜனனாயகமும் தான் ஒரே வழி என்று நாங்கள் கருதுகிறோம். நோக்கங்களில் வேறுபாடு இல்லை. அதை அடையும் வழிமுறையில் தான் வேறுபாடு நமக்குள்.

   எது சரியான வழிமுறை என்பதை வரலாறை கொண்டு அறிந்து கொள்ளலாம். உதாரணமாக கடந்த 50 ஆண்டுகளில் வட மற்றும் தென் கொரியா நாடுகள் அடைந்த மாற்ற்த்தை ஒப்பிட்டு அறியலாம். வட கொரியா சோசியலிச பாதை, தென் கொரியா முதலாளித்துவ பாதை. இன்று வட கொரியா பட்டினியில் சாகிறார்கள். தென் கொரியா வளர்ந்த நாடாக முன்னேறி கொழிக்கிறது.

 11. முதலாளித்துவத்திற்கும் சந்தை பொருளாதாரத்திற்கும் என்ன வேறுபாடு என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் அதை பற்றி வேறு ஒரு விவாதத்தில் பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன், தேவை இல்லாமல் விவாதத்திற்கு உரிய விஷயத்தை விட்டுவிட்டு நான்தான் வேறு ஒரு விசயத்திற்கு இழுத்து சென்று விட்டேன். இந்த இடத்தில் காங்கிரஸ் ஐ பற்றி ஏதாவது உருப்படியாக விவாதிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க