privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் !

கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் !

-

கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம்!

புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்.

காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்தபோது, கூட்டணியிலிருந்தும் மைய அரசின் அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அறிவித்த தி.மு.க.வின் வீராவேசம், கடைசியில் குடும்ப நலனைக் காப்பாற்றிக் கொள்வதற்கான கீழ்த்தரமான உத்தியாகிப் போன கோமாளிக் கூத்து உயர்வானதா? அல்லது, இந்தக் கோமாளிக் கூத்துக்கு பக்கமேளம் வாசித்த வீரமணி, திருமா, ஆகியோர் ஆடிய குத்தாட்டம் மேலானதா? துணை நகரங்கள் அமைப்பது, தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் கொள்ளை, சில்லறை வணிகத்தில் ஏகபோக நிறுவனங்களின் நுழைவு, அரசின் டாஸ்மாக் சாராயக் கடை முதலானவற்றுக்கு எதிராகச் சவடால் அடித்து வந்த பச்சோந்தி ராமதாசு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தி.மு.க. அரசுக்கு முழுமையாக ஆதரவு தருவோம் என்று இப்போது ஆடும் பிழைப்புவாதக் கூத்து மேலானதா?

தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்துக் கூட்டணி கட்சிகளுக்குத் தண்ணி காட்டிய ஜெயலலிதா நடத்தி ஆவேசக் கூத்துக்கு முதலிடமா? அல்லது பாசிச ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டிக் கொண்ட விஜயகாந்த் மற்றும் இடது  வலது போலி கம்யூனிஸ்டுகள் வீறாப்பு காட்டி நடத்திய கோமாளிக் கூத்து சிறந்ததா? அவமானப்படுத்திவிட்டதாகக் கூறித் தேர்தலைப் புறக்கணித்து காயடிக்கப்பட்ட பன்றியைப் போல கத்திக் கொண்டிருக்கும் வைகோவின் கூத்து உயர்ந்ததா? என்று புரியாமல் தமிழக மக்கள் தடுமாறுகிறார்கள்.

பிழைப்புவாத பொறுக்கி அரசியல் வியாபாரத்தில் மான அவமான உணர்ச்சிகளுக்கும் இடம் கிடையாது. கடந்த சட்டமன்றத்தில் கருணாநிதியை அடிக்கப் பாய்ந்த அ.தி.மு.க.வின் ரவுடியான சேகர் பாபு, இப்போது கருணாநிதியின் உடன்பிறப்பாக மாறி தி.மு.க.வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கற்பு நெறி பேசி நடிகை குஷ்புவுக்கு எதிராகச் சாமியாடிய ராமதாசும் திருமாவும் இன்று அவர் தி.மு.க. பேச்சாளராகிவிட்டதால் பம்முகின்றனர். பா.ம.க. ஒருபுறமிருக்க, ஆதிக்க சாதிக் கவுண்டர்களின் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 இடங்களை தி.மு.க. கூட்டணி ஒதுக்கியிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணித் தலைவி ஜெயலலிதா, நடிகர் சரத்குமாரைத் தலைவராகக் கொண்ட நாடார் சாதியினரின் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். இலவசக் கவர்ச்சித் திட்டங்களோடு பணபலம், சாதியபலம், குண்டர்பலம் ஆகிய முப்பெரும் ஆயுதங்களே தமிழக ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பவையாக மாறிவிட்டன.

மறுகாலனியாக்க அரசியல்  பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில், ஓட்டுச்சீட்டு ஜனநாயகம் என்பதே இந்த அரசமைப்பிற்கு ஒரு கோமாளித் தொப்பியாக மாறி வருவதைத் தமிழகத் தேர்தல் நிகழ்ச்சிப் போக்குகள் நிரூபித்துக் காட்டுகின்றன. கொள்கைகளின் இடத்தைக் கவர்ச்சி  இலவசத் திட்டங்கள் பிடித்துக் கொண்டதைப் போலவே, கட்சிகளைப் பணமுதலைகள் கைப்பற்றிக் கொண்டு விட்டனர்.

தயாநிதியும் ராசாவும் மைய அமைச்சர்களாக்கப்பட்டதற்கும் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டதற்கும் காரணம் என்ன? வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தி.மு.க. பழம் பெருச்சாளிகள் தமது வாரிசுகளுக்கு சீட் வாங்கியிருப்பதும், காங்கிரசின் கிருஷ்ணசாமியின் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதும் குடும்பத்தோடு நாட்டுக்குச் சேவை செய்வதற்கா? இதில் புரியாத இரகசியம் ஒன்றுமில்லை. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, தி.மு.க.அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்தும் கரூர் பழனிச்சாமியின் சொத்தும் கோடிக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. தாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் என்ன என்பதில் வேட்பாளர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

எந்தவொரு கட்சியின் தலைவர்களும் பிரமுகர்களும் கொள்கை இலட்சியத்துக்காக அந்தக் கட்சியில் அங்கம் வகிப்பதில்லை. அதுபோலவே எந்தவொரு கூட்டணியும் பொதுவான கொள்கை  இலட்சியத்தின் அடிப்படையில் உருவாவதுமில்லை. நாற்காலிகளைப் பகிர்ந்து கொள்வதும் கருப்புப் பணம் கைமாறுவதும்தான் கூட்டணிகள் உருவாவதற்கும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்குமான அடிப்படை என்பதும்; கோடீசுவரர்கள், சுயநிதிக் கல்லூரி அதிபர்கள், கந்துவட்டி மணற்கொள்ளை ரியல் எஸ்டேட் மாபியாக்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதும் இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. கோடீசுவரர்கள் மட்டும்தான் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியும் என்ற இந்த நிலைமை, கட்சி என்ற அமைப்பையே இல்லாமல் செய்து விட்டது. தற்போதைய ஓட்டுச்சீட்டு அரசியலுக்குக் கட்சியும் தொண்டர்களும் எந்த விதத்திலும் தேவைப்படவில்லை என்பதே உண்மை.

இன்றைய கார்ப்பரேட் ஜனநாயகத்தில், யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பது ஓட்டுக்கட்சித் தலைமைகளிடம் இல்லை. ராசாவை அமைச்சராக்க டாடா சிபாரிசு செய்த கதை நாடெங்கும் அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் விசுவாசி மன்மோகன் சிங்கைப் பிரதமராகவும், உலக வங்கி அதிகாரியாக இருந்த மான்டேக் சிங் அலுவாலியாவை நிதியமைச்சராகவும் நியமிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்த கதை வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் உத்தரவுப்படி மணிசங்கர் அய்யரை நீக்கிவிட்டு பெட்ரோலிய அமைச்சராக முரளி தியோரா அமர்த்தப்படுகிறார். அப்படியானால் ஓட்டுச்சீட்டு ஜனநாயகத்தின் உண்மைப் பொருள்தான் என்ன?

மக்களால் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும்கட்சியின் அமைச்சரவை அரசின் கொள்கை முடிவுகளை வகுப்பதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனும் விருப்பமுமே கொள்கையாக்கப்படுவதும் அதிகார வர்க்கம் இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதுமே இப்போதைய நிர்வாக முறையாகிவிட்டது. துறைசார் வல்லுனர்கள் என்ற பெயரில் ஏகாதிபத்திய ஆலோசனை நிறுவனங்கள் பரிந்துரை செய்வதும், நேரடியாகக் கொள்கை வகுத்துத் தருவதும், நீரா ராடியா போன்ற தரகர்களைக் கொண்டு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதும், நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் முதலாளிகள் அங்கம் வகிப்பதுமாக நிர்வாக முறை மாறிவிட்டது. இத்தகைய குழுக்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டதாகவே நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.

அமைச்சர்கள் இத்தகைய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதற்கு மேல் ஒன்றும் செய்வதில்லை. நாடாளுமன்ற  சட்டமன்றங்களில் சில நாட்கள் கூச்சல் போடுவதும், தீர்மானங்களை அவசரமாக நிறைவேற்றுவதும்தான் நடக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரானதாக இருந்தாலும், இத்தகைய கொள்கை முடிவுகளில் தலையிடமுடியாது என்று நீதிமன்றங்கள் ஒதுங்கிக் கொண்டு கார்ப்பரேட் கொள்ளைஊழலுக்குச் சேவை செய்கின்றன. சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் மட்டுமல்ல; உள்ளூராட்சிகளில்கூட உலக வங்கி மற்றும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் எடுபிடிகளாக உள்ள தன்னார்வ நிறுவனங்களே திட்டங்களைத் தயாரித்துக் கொடுத்துத் திணிப்பதாகவும், அவற்றின் ஆலோசனைப்படியே உள்ளாட்சிகள் இயங்குமாறும் நிர்வாக முறை மாற்றப்பட்டிருக்கின்றன.

போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ன என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகவும் அறிய முடியாது. இவை அனைத்தும் இரகசியமாக்கப்பட்டுள்ளன. அணுசக்தி ஒப்பந்தம் போல, இது நாட்டின் வளர்ச்சிக்கானது என்று கூறி மறைக்கப்படுகின்றன. குடிமக்களுக்கோ, சட்டமன்ற நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கோ இவை தெரிய வேண்டியதில்லை என்பதுதான் அரசின் கொள்கையாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்படும் நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ கூட இது பற்றிக் கேள்வி கேட்கவும் எவ்வித உரிமையும் இல்லை. ப.சிதம்பரம், அபிசேக் மனு சிங்வி, அருண் ஜேட்லி உள்ளிட்ட பல ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களாகவும், வழக்குரைஞர்களாகவும் பணியாற்றுவதோடு, இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களிலும், கான்கிரீட் வீடு கட்டும் திட்டம், மருத்துவக் காப்பீடு போன்ற ஒப்பந்த நிறுவனங்களிலும் ஓட்டுக் கட்சி பிரமுகர்கள் பங்குதாரர்களாக இருந்தும் ஆதாயமடைவதால், அவர்கள் இத்தகைய ஒப்பந்தங்கள் பற்றி வாய்திறப்பதுமில்லை.

ஓட்டுரிமை என்பது ஐந்தாண்டுகளுக்கு என்ன வேண்டுமாலும் செய்து கொள்ளுமாறு அளிக்கப்படும் ஒப்பந்தப் பத்திரமாகிவிட்டது. ஒருமுறை எழுதிக் கொடுத்துவிட்டால் பின்னர் அதை மாற்றவும் முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை தட்டிக் கேட்கவோ, அவரது பிரதிநிதித்துவத்தை ரத்து செய்யவோ மக்களுக்கு உரிமையும் கிடையாது. மொத்தத்தில் தேர்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சடங்காகவும், கார்ப்பரேட் நாயகமே ஜனநாயகமாகவும் மாறிவிட்டது. இவ்வளவுக்குப் பின்னரும் ஓட்டுப் போடுவதால் என்ன பயன்?

வாழ்விழந்த விவசாயிகளும் வேலையிழந்த தொழிலாளர்களும் பல கோடிப் பேராக உள்ள நிலையில், தமிழகத்தின் உயிராதாரமான இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி எந்த ஓட்டுக் கட்சியும் வாய் திறப்பதில்லை. விவசாயம் நசிந்து போனதற்கும், கைத்தறி  விசைத்தறி  சிறுதொழில்களின் அழிவுக்கும், பஞ்சம் பிழைக்க மக்கள் ஊரை விட்டு ஓடும் அவலத்திற்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன உறவு? மறுகாலனியாக்கத்துக்கும் விவசாயம்  சிறு தொழில்களின் அழிவுக்கும் என்ன உறவு? இவையனைத்தும் ஓட்டுக்கட்சிகளாலும் செய்தி ஊடகங்களாலும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அரசியலற்ற அற்ப விவகாரங்களும் கிசுகிசுக்களும் வதந்திகளும் ஊகங்களுமே அரசியலாக ஊதிப் பெருக்கிக் காட்டப்படுகின்றன.

உள்ளூர் தொழிலுக்கும் விவசாயத்துக்குமான மின்சாரத்தை தி.மு.க. அரசு வெட்டி, தமிழகத்தை இருளில் தள்ளிய போதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அவசரச் சட்டம் போட்டு நிலமற்ற விவசாயிகள் குறுகியகால சாகுபடி செய்வதையும் ஊருணிகள், குளங்களில் உள்ளூர் மக்கள் மீன் பிடித்துவந்த பாரம்பரிய உரிமையையும் பறித்துவிட்டது. வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டம், வேளாண் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம் முதலானவற்றின் மூலம் பாரம்பரிய வேளாண் அறிவையும் தற்சார்பையும் முற்றிலுமாக அழித்து, தமிழக விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்க ஏற்பாடு செய்துள்ளது. பன்னாட்டு கம்பெனிகளின் ஆலோசனைப்படி, மரபணு மாற்றுப் பயிர்கள் கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

உலகமயமாக்கலுக்கு ஏற்ப சென்னையை நவீன காலனியாக்கி, பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களைக் காத்திட உலக வங்கி தீட்டித்தந்த திட்டப்படி இரண்டாவது மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, சென்னையின் மீனவர்களும் குடிசைவாழ் மக்களும் கறிவேப்பிலை போல வீசியெறியப்பட்டனர். உலக வங்கி திட்டப்படி, புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு நகர்ப்புற சேவைகளைத் தனியார்மயமாக்கும் வேலை செயல்படுத்தப்பட்டது. பெருந்தொழில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எங்கு, எந்த நிலம் எவ்வளவு வேண்டுமோ, அவற்றை அபகரித்துக் கொடுக்கும் வேலையையும், தமிழ்நாட்டில் அனுமதி பெற்ற 70 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் பறிக்கும் வேலையையும் சிப்காட் மற்றும் டிட்கோ ஆகிய அரசு நிறுவனங்களே செய்கின்றன.

தி.மு.க.வின் மைய அமைச்சர்களின் ஊழல் கொள்ளைப் பற்றி அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. கருணாநிதி குடும்பம் தமிழகத்தைக் கொள்ளையடித்த கதையைப் பேசுகிறார். ஆனால், தமிழகத்தை இருளில் தள்ளிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்கும் தி.மு.க. அரசின் அநியாயத்தை எதிர்க்கவில்லை. அரசு தொலைபேசித் துறையை முடமாக்கி டாடா, அம்பானி முதலான தனியார் தொலைபேசி முதலாளிகளைக் கொழுக்க வைத்தவர்தான் ‘ஸ்பெக்ட்ரம் புகழ்’ ராசா என்று அவர் குற்றம் சாட்டுவதில்லை. டிரிப்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மருந்துகளின் விலையை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக்கியவர்தான் அன்புமணி என்று சாடுவதில்லை.

தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எவ்வித தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி கருணாநிதி அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு ஒரு சான்றாகக்கூடக் காட்டுவதில்லை. தி.மு.க. அரசை விஞ்சும் வகையில் அந்நிய முதலீட்டை அதிகரித்து தமிழகத்தை முன்னேற்றப் போவதாக அறிவிக்கிறார், ஜெயா. மறுபுறம், ஜெயலலிதாவின் ஊழல் கொள்ளையைப் பற்றிப் பட்டியல் போடும் தி.மு.க. கூட்டணி, தாமிரவருணி ஆற்றையே கோகோகோலாவிற்குத் தாரைவார்த்த மாபெரும் ஊழலைப் பற்றி வாயே திறப்பதில்லை.

எனில், தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கும் என்ன கொள்கை வேறுபாடு? பாதாள சாக்கடைக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையிலான வேறுபாடுதான் இவர்களுக்கிடையிலான வேறுபாடு.

மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து கார்ப்பரேட் முதலாளிகளின் தேவைக்காகப் போடப்படும் நால்வழி விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள் முதலான அடிக்கட்டுமானத்துறையின் வளர்ச்சியைக் காட்டி, இதையே தமது ஆட்சியின் சாதனையாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் பீற்றிக் கொள்கின்றனர். உலக வங்கி, உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளையும், அதனடிப்படையில் வகுக்கப்படும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் இவ்விரு கூட்டணிகளும் உடன்பட்டு வரவேற்கின்றன. தனியார்மய தாராளமயக் கொள்கைகள் தோல்வியடைந்து பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும், மீண்டும் அதேபாதையில் இக்கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தைத் தொழில் வளமிக்க முதன்மை மாநிலமாக்க முடியும் என்று அவை கூறுகின்றன.

இத்தகைய மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஓரணியில் நிற்கும் இக்கூட்டணிக் கட்சிகள், இந்தக் கொள்கைக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாததுபோல் மக்களை ஏய்க்கின்றன. அற்பமான வேற்றுமைகளை ஊதிப் பெருக்கி, அதையே அரசியலாகக் காட்டி மக்களை மயங்க வைத்திருக்கின்றன. இந்த லாவணிக்குப் பக்கமேளம் வாசித்து, நம்பிக்கையிழந்து வெறுத்துப் போன மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி செயற்கையாக ஒரு விறுவிறுப்பை உருவாக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கக் கிளம்பியுள்ளன முதலாளித்துவ ஊடகங்கள்.

வாக்குரிமையைப் புனிதமான ஜனநாயகக் கடமையாகச் சித்தரிக்கும் ஓட்டுப் பொறுக்கிகள், வாக்குரிமையைப் போலக் கருத்துரிமையையும் போராடும் உரிமையையும் அடிப்படை ஜனநாயக உரிமையாக ஏற்பதில்லை. மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளைப் போராடி வென்றெடுப்பதை ஓட்டுப் பொறுக்கிகள் எவருமே விரும்புவதில்லை. அது அவர்களது முதலுக்கே மோசமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள். மக்களுடைய போராட்டங்களை முடமாக்கவும் ஜனநாயக உணர்வுகளை மழுங்கடிக்கவும்தான் அவர்கள் முயற்சிக்கிறார்கள். வெள்ளைக்காரன் ஆட்சியைப் போல இன்றும்கூட பொதுக்கூட்டம்  பேரணி நடத்த போலீசிடம் போய் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. மக்கள் தண்ணீர் கேட்டுப் போராடினால், போராடும் மக்களைச் சந்திக்க அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ, குடிநீர் வாரிய அதிகாரிகளோ வருவதில்லை. போலீசு வருகிறது. வாக்குரிமை என்பது மற்றெல்லா உரிமைகளையும் அடியறுக்கும் ஆயுதமாகவே மாற்றப்பட்டுவிட்டது.

இலவசங்களுக்கும் பணத்துக்கும் விலை போகும் அளவுக்கு, ஓட்டுக்கட்சிகள் தங்களது பிழைப்புவாதத்தை மக்களிடமும் பரப்பி அவர்களையும் சாக்கடையில் தள்ளிவருகின்றன. மறுகாலனியாக்கத்தால் சூறையாடப்படும் தங்கள் வாழ்க்கை பற்றியோ, தாங்கள் இழந்துவரும் அடிப்படை உரிமைகள் பற்றியோ எவ்வித விழிப்புணர்வும் இல்லாத மக்களுக்கு ஓட்டுக்கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மட்டுமே புரியக்கூடியதாக இருக்கிறது. பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப் போகும் பண்ணையடிமைகளைப் போல, மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்க வைத்திருக்கிறார்கள், இந்த ஓட்டுப் பொறுக்கிகள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும் இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக் கொள்வதற்குச் சமமானது.

இத்தனைக்கும் பிறகும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைக் காட்டி, அதிகார வர்க்கம் கடுமையாக நடந்து கொண்டால், ஓட்டுக்கட்சிகளின் அராஜகங்களையும் தேர்தல் சீரழிவுகளைத் தடுத்துவிட முடியும் என்றும், மையப் புலனாய்வுத் துறையும் நீதித் துறையும் அரசியல் தலையீடின்றிச் செயல்பட்டால் ஊழல் கொள்ளைகளைத் தடுத்துவிட முடியும் என்றும் படித்த வர்க்கத்தினர் சிலர் நம்புகின்றனர். ஆனால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்களைக் கேட்டு ஊழலையும் கொள்ளையையும் அம்பலப்படுத்த முயற்சிப்பவர்கள் கூட அச்சுறுத்தப்படுவதும், ஏன் கொல்லப்படுவதும் நடக்கும்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் ஊழல் பெருச்சாளிகளாக அம்பலப்பட்டுள்ளபோது, இன்றைய அரசியலமைப்பு முறையே கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கானதாக இருக்கும் போது, சாக்கடையை அகற்றாமல் கொசுக்களை ஒழித்துவிட முடியாது.

இன்னும் சிலர் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று 49ஓ போடச் சொல்கின்றனர். ஓட்டுக் கட்சிகள் மீதான மக்களின் அதிருப்திக்கு இதுவொரு வடிகாலாக இருக்கிறதே தவிர, 49ஓ போடும் வாக்காளர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருந்தாலும்கூட, இது தற்போதைய தனியார்மய  தாராளமயக் கொள்ளைக்கான அரசியலமைப்பு முறையை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடல்ல.

இந்நிலையில், மின்னணு எந்திரத்தின் பொத்தானை அழுத்திவிட்டு மக்கள் தமது சிந்தனையையும் செயலையும் சிறைப்படுத்திக் கொண்டு இனியும் அதிகாரிகளின் ஓட்டுப் பொறுக்கிகளின் தயவிற்காகக் காத்துக் கிடக்கத்தான் வேண்டுமா? இதற்கு மாறாக, மக்களே தமது சொந்த அரசமைப்பை, ஒரு புதிய உண்மையான மக்கள் ஜனநாயக அரசமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும்; இது சாத்தியமானதுதான் என்பதை ஏற்கெனவே பல நாடுகளின் அனுபவங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

ஒவ்வொரு கிராம  வட்டார அளவிலும் மக்கள் குழுக்கள் நிறுவப்பட்டு, அக்கிராம  வட்டார நிர்வாகிகளைத் தேர்வு செய்வதும், அவர்களே நீதிநிர்வாகம், காவல் பணிகளை மேற்கொள்வதும், அதேபோல நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள்  தொழிலகங்கள் அடிப்படையில் மக்கள் மன்றங்களையும் நிர்வாக அமைப்புகளையும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமானதுதான். இவற்றைத்தான் மக்கள் சர்வாதிகார மன்றங்கள், உண்மையான ஜனநாயக அமைப்புகள் என்று கருத முடியும். இவற்றின் மூலம் உள்ளூர் அளவிலும் இவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநில, மைய மன்றங்களும் நிர்வாக அமைப்புகளும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமானதுதான்.

தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டு வேறு என்னதான் செய்வது? ஒரு ஆட்சியும் அரசமைப்பும் இல்லாமல் நிர்வாகம் எப்படித்தான் நடக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். வெறுமனே விரக்தியில் தேர்தலைப் புறக்கணிப்பது அல்ல; தற்போதைய ஆட்சி, அரசியலமைப்பு, நிர்வாக முறை அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மக்கள் சர்வாதிகார அரசமைப்புகளை நிறுவ முடியும்.

இது ஒரு மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலமாகத்தான் சாத்தியமாகும். இத்தகைய மக்கள் சர்வாதிகார அரசமைப்பை நாளையே நிறுவிவிட முடியாது என்பது உண்மைதான். இருப்பினும், அதற்கான கருத்துருவாக்கம் முதற்பணி என்ற முறையில்தான் தேர்தலைப் புறக்கணிக்கும் இயக்கத்தின் ஊடாக மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில்தான் “போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!”, “ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!” என்ற அறிவியல்பூர்வமான அரசியல் முழக்கமும் இயக்கமும் இன்றைய அவசியமாகியுள்ளது. கார்ப்பரேட் கொள்ளையர்களால் இழிந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு, ஓட்டுப் பொறுக்கிகளின் இலவசத் திட்டங்களுக்குக் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள், அரசியல் அறிவைப் பெறுவதற்கும், மக்கள் ஜனநாயக அரசமைப்பு முறை பற்றிய புரிதலைப் பெறுவதற்கும் புரட்சியாளர்கள் இன்னும் கடுமையாகச் செயல்பட வேண்டியிருக்கிறது.

________________________________________________________

– பாலன், புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2011
________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

  1. கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் !…

    புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்….

  2. நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்ட அனைத்து பெரியோர்களும், சான்றோர்களும், சிந்தனையாளர்களும், சமூக ஆர்வலர்களும். PUCL போன்ற அமைப்புகளும் தேர்தலை புறக்கணிக்க சொல்லவில்லை. எனக்கு தெரிந்து நீங்க மட்டும் தான் இப்படி சொல்கிறீர்கள். மற்றவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை தான் வலியுறுத்திகிறார்கள். முக்கியமாக படித்த நடுத்தர வர்கம், வாக்களிக்காமல் வெறும் வாய் பேச்சு மட்டும் செய்வதை பற்றி பேசுகிறார்கள். அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று தான் வலியிருத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் தவற, நீங்க சொல்வது மட்டும் தான் சரி என்று நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது.
    சிக்கல்களை தீர்க்க தேர்தல்களை புறக்கணப்பது வழியல்ல என்பதே விவேகம்.

    • சரி தேர்தலில் பங்கு பெற்றே தீருவேன் என்று சொல்கிறீர்களா அப்படி என்றால் அரசியல்வாதிகளின் மீதான உங்கள் வெறுப்பை ”49ஓ” (யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை)என்ற முறையை பயன்படுத்தி வெளிப்படுத்துங்களேன்…..

  3. //மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து கார்ப்பரேட் முதலாளிகளின் தேவைக்காகப் போடப்படும் நால்வழி விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள் முதலான அடிக்கட்டுமானத்துறையின் வளர்ச்சியைக் காட்டி, இதையே தமது ஆட்சியின் சாதனையாக ///

    பிதற்றல் இது. இவை கார்பரேட் முதலாளிகளின் ‘லாபத்திற்க்கு’ மட்டும் தான் வழி வகை செய்கிறது என்பதை போன்ற உளரல் வேறு எதுவும் இல்லை. சாலைகள் மற்றும் இதர அடிப்படை கட்டுமானங்கள் ஒரு நாட்டின் ர்த்த நாளங்கள் போன்றவை. அவை போதுமான அளவில், நல்ல தரத்தில் இருந்தால், பொருளாதாரம் வளர, வேலை வாய்ப்புகள் பெருக, பணடங்கள் மற்றும் தானியங்கள் தொலைதூரங்களுக்கு கொண்டு செல்ல, ஏற்றுமதி / இறக்குமதி பெருக மிக மிக உதவி செய்யும். லாபம் மட்டும் தான் உங்க கண்களுக்கு தெரிகரது. எனினும் லாபம் என்பது கெட்ட வார்த்தை அல்ல. லாபமே இல்லாமல் தொடர் நஸ்டம் உருவானால், எல்லோருக்கும் தான் கேடு.

    சாலை வசதிகள் பெருகியதால், இதுவரை எந்த தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளே சாத்தியம் இல்லாத உள்நாட்டு பிரதேசங்கள் இன்று வளம் பெற வாய்ப்பு அதிகம்.
    பார்க்கவும் :

    “Infrastructure and Poverty reduction : what is the connection ?”
    http://www.adb.org/Documents/EDRC/Policy_Briefs/PB013.pdf

    • மேலும் இவை மக்களின் வரிப்பணத்தில் இப்ப கட்டப்படுவது இல்லை. Public Private Partnership – PPP model என்னும் தனியார் – அரசு கூட்டு முயற்சிகளில், சாலைகளுக்கான நிலங்களை மட்டும் அரசு குத்தகைக்கு அளிக்கும் ; தனியார்கள் BOOT scheme : Build, Own, Operate and Transfer என்று அவர்களே முதலீடு திரட்டி, நிர்மாணம் செய்து, செயல்படுத்தி, சுங்க வசூல் மூலம் முதலீட்டை, லாபத்துடன் recover செய்து, இறுதியாக ஒப்பந்த காலம் முடிந்தவுடன் அரசிடம் ஒப்படைப்பார்கள். இதனால் போதிய நிதி மற்றும் தொழில்னுட்ப்பம் இல்லாத நகராட்சிகள், அரசுகள் நல்ல பயனடைகிறார்கள்.

      25 வருடங்களுக்கு முன் கனவில் கூட நினைத்துபார்க்க முடியாத சாலை வசதிகள் இன்று இப்படி தான் உருவாகின. ஊழல் இதில் உள்ளதுதான். ஆனால் இந்த மாடல் தான் இப்ப வேலை செய்கிறது. பார்க்கவும் :

      http://www.pppinindia.com/overview.php

      • சாராயம் காய்ச்சி வித்து (அதாம்பா டாஸ்மாக்) அதில் வர காசை வைத்து பல இலவசங்களைத் தரலாம் என்பதிலிருந்து மாறி அரசே மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அதென்ன பப்ளிக் – பிரைவேட் பார்ட்னர்சிப் அப்புறம் காரிலிருந்து பேருந்து வரை மதுரையிலிருந்து சென்னை வருவதற்குள் எட்டு இடத்தில் கப்பம் கட்ட வேண்டும். அரசுப் பேருந்துகள் மாதத்திற்கு 2 முதல் 3 கோடி இத்தகைய டோல் கேட் கட்டணம் மட்டும் கட்டுகிறது. இது போன்ற சிலவுகள் குறைந்தால் சிறப்பாக இருக்கும்.

        • அதன் economics பற்றி கொஞ்சம் படித்து பாருங்களேன். இத்தனை லச்சம் கோடிகள் முதலீட்டு செய்ய அரசிடம் துட்டு இல்லை. இருந்தாலும், அது திருடப்படுகிறது. உங்க வயசுக்கு இது போன்ற சாலை வசதிகள் உருவாகும் என்று 25 வருடங்களுக்கு முன்னால் நினைத்து பார்த்திருப்பீர்களா ? சரி, இந்த டோல் அளிப்பது ஓவர் செலவு என்று கருதினால், இந்த சாலைகளே உருவாகியிருக்க முடியாது. Let us get back to the good old days of old roads.

  4. According to this article, Vaico voice like to castrated pig. Then what is the status of ma.ka.i.ka. In Tamil nadu? Who will hear the voice of ma.ka.e.ka, That is create voice like castrated dog.

  5. // ஓட்டுக் கட்சிகள் மீதான மக்களின் அதிருப்திக்கு இதுவொரு வடிகாலாக இருக்கிறதே தவிர// சரிதான்…

    49 o போடுவதும் வேஸ்ட் டே தேர்தலில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்கு 49 o போடும் வசதி கிடையாதாம். ஏனெனில் 49 o போடுவது தேர்தலில் நம் ஓட்டை வேறு யாரும் போடவில்லை என்பதை உறுதிபடுத்த மட்டும்தானாம். அவர்களின் தபால் ஒட்டு மூலம் அது உறுதிபடுத்தப்படுவதால் அவர்களுக்கு அது தேவையில்லையாம்.

    49 O வே எதிர்காலத்தில் அதிகமாகினால் தேர்தலே செல்லாது என்று அறிவித்து விடுவார்கள் என்றெல்லாம் நாம் கற்பனைகள் செய்து கொண்டால் அது நம் கற்பனை மட்டுமே! அதற்கான எந்த திட்டமும் தேர்தல் ஆணையத்திடம இல்லை.

    பொத்தானை அழுத்தி 49 o போடும் வசதியும் மின்னணு இயந்திரதில் இல்லாததால் நாம் வெளிப்படையாக 49 o வை போட்டுவிட்டு பின் எந்த வசதி சரியில்லை என்றும் வெற்றி பெற்ற MLA விடம் போய் நிக்க முடியாது. நீ எனக்கா ஒட்டு போட்ட? என்று கேட்பான்.

    ஒரு சந்தேகம் : ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் ஒரு தலை பட்சமாக செயல்படுகிறது என முதலில் குற்றம் சாட்டுபவர்கள் ஆளும் கட்சியினராகவே இருக்கிறார்களே ஏன்?

  6. லிபர்ட்டேரியன், நீங்கள் நடத்துவது ப்ளாஸ்டிக் கம்பேனியா இல்லை “மரத்தடி கிளி சோசியம் பிரைவேட் லிமிட்டெடா”?

    சும்மா சந்தேகத்துக்குக் கேட்டேன்.

    • நொடிக்கொருதரம் புன்னூட்டம் போடுறாரே மன்னாரு,இன்னுமா தெரிஞ்சிக்க முடியல. அவரு கம்ப்யூட்டர் ஜோசியக்காரரு.

  7. அப்பனே,

    மேற்படி பின்னூட்டம் ஒரு போலி லிபர்டேரியன் இட்டது. நான் அவன் இல்லை. மேலும் எமது பின்னூட்ட பெயர்களை கிளிக் செய்ய கூடிய முறையில் சுட்டிகளுடன் தான் இடுவேன். இங்கே லிபர்ட்டேரியன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேற. போலி, ஸ்பெல்லிங் கூட ஒழுங்கா எழுத முடியலையா ? :))

    ஜோதிடம் பற்றி : இங்கு ஒரே திருதிராஸ்டர்களின் கூட்டம். அனேகமாக எல்லோருக்கும் குரு சண்டாள யோகம் இருக்கும். அதாவது கடவுளை மறுப்பவர்கள் என்று ஜாதகத்தை பார்தாலே தெரியும். இருக்கட்டும், ஒரு ரவுண்ட் ஏழரை அல்லது அஸ்டமத்து சனி வந்தா, நம்பாதவனும் நம்புவான். :)))

    அமெரிக்காவின் ஜாதகம் : ஒவ்வொறு நாடும் சுதந்திரம் அடைந்த தருணத்த அதன் பிறந்த நேரமாக கொண்டு ஜாதகம் கணித்து பலன் சொல்லும் முறை ஒன்று உண்டு. அதன்படி US was born on 4th of july. Cancer sun sign : deeply paranoid and highly insecure. hence the large stockpile of nuclear and other weapons, (even though they are not needed after the end of cold war), blockading poor Cuba (they cannot tolerate an ‘enemy’ within their back yard), bombing anyone they deem suspicious ; ஒரு மாதிரி லூஸுங்க இதுங்க.
    and their motto : offence is the best form of defence

    • ஸாரிண்ணே, நீங்க ஒரு பேர்ல வந்தா பரவாயில்ல. அதான் அதியமான் ஐ.டில ஆரம்பிச்சி லிபர்ட்டேரியன், அமெரிக்க கைக்கூலி, கேப்பிடலிசம், ஹுயூமன்ரைட்ஸ்னு தொடர்ந்து நாளுக்கு ஒரு அவதாரம் எடுக்கரீங்களே…

      வினவு, எதுனா விட்டுப் போயிருந்தா கவனிச்சு சேர்த்துக்கங்க.

      அவதார எண்ணிக்கை இப்ப தசாவதாரத்தையும் தாண்டி ஓடிகிட்டு இருக்கில்லே அதான் இஸ்லிப் ஆயிடிச்சி.

  8. தேர்தல் அரசியல் என்னும் போலி ஜனநாயகத்தை அதிக நாட்கள் இந்தியா சுமக்க முடியாது தோழரே.

  9. //“போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!”, “ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!” என்ற அறிவியல்பூர்வமான அரசியல் முழக்கமும் இயக்கமும் இன்றைய அவசியமாகியுள்ளது. கார்ப்பரேட் கொள்ளையர்களால் இழிந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு, ஓட்டுப் பொறுக்கிகளின் இலவசத் திட்டங்களுக்குக் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள், அரசியல் அறிவைப் பெறுவதற்கும், மக்கள் ஜனநாயக அரசமைப்பு முறை பற்றிய புரிதலைப் பெறுவதற்கும் புரட்சியாளர்கள் இன்னும் கடுமையாகச் செயல்பட வேண்டியிருக்கிறது.//போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்.கடுமையாக செயல்படுவோம்.

  10. ‘ஹார்பிக்’ போட்டுக் கழுவினாலும் இனி கறைபோகாது. அந்த அளவுக்கு ‘ஓட்டுச்’ சீட்டு அரசியல்வாதிகள் ஏற்கனவே கறைபடிந்து கருத்துப் போய்விட்டார்கள். ஆஹா! என்னமாய் மின்னுகிறது என நம்பி பின்னே சென்ற மக்கள் மீதும் இப்போது கறைபடிந்து வருகிறது. இப்போதைக்கு கழுவினால் சோப்பே போதும். கழுவ முடியாத அளவுக்கு கறை அப்பிக் கொண்டால்….எனவே உடனே புறப்படு…கறையை நீக்கி புது வெண்மையைப் பார்க்க…

  11. 49 O என்பது ஓட்டு போடாதவர்கள் யார் என அடையாளம் காணப் பயன்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார். இது ஓட்டு போடுவதை மறுப்பதாகவோ அல்லது குறிப்பிட்ட வேட்பாளர் சரியில்லை என்றோ கூறுவதற்காக பயன்படாது. 49 O படி தனி படிவம் சமர்பிக்க வேண்டும் என நினைக்கிறேன்

  12. வாக்களிப்பது நம் அனைவரின் கடமை
    ஆனால் நமக்கு தேவையான சரியான தலைவர்தான் இத்தேர்தல் களத்தில் இல்லை. புதியதொரு அரசியல் தலைவர் எனக்கு மட்டுமல்ல நம் தமிழ் நாட்டுக்கே தேவை….

    அன்புடன்…. மணிசந்திரன்

Leave a Reply to Human Rights பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க