privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா!

குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா!

-

குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா! - சந்தனமுல்லை

“எனக்கு திருமணம் நடந்தபோது என்னைச் சுற்றி என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்றே என்னால் அறிய முடியவில்லை” என்கிறார் மனியம்மா. ”அப்போது எனக்கு ஆறு வயதுதான். கல்யாணமென்றால் வீட்டை விட்டுச் இன்னொரு வீட்டுக்கு செல்லவேண்டுமென்று மட்டுமே எனக்கு  தெரியும். நான் போக மாட்டேனென்று  அழுது கொண்டேயிருந்தேன். ஆனாலும் என்னை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்” என்கிறார் தொடர்ந்து.

மனியம்மா, ஆந்திராவின் ஒரு கிராமத்தில் தனது உறவினர் சூழ அமர்ந்திருக்கிறார். அவர் கட்டியிருந்த சிவப்பு புடவையில் பதினொரு வயதிற்கும் கீழானாவராகவே தெரிந்தார். ஒரு தந்தையால் தன்  குழந்தைக்கு இதை மனமுவந்து செய்ய முடியமா? ஆனால், அவரோ “இங்கெல்லாம் அப்படித்தான் பழக்கம் என்கிறார். இதுதான் எங்களின் பாரம்பரியம், பெண்கள் சிறியவயதில் மணமுடித்துவிடவேண்டும். கணவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் சரி, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.

உலகிலேயே, அதிகமான குழந்தை மணமகள்களை கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இடமான இந்தியாவிற்கு, 2020-இல் ‘வல்லரசாக’ப் போகும்  நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு இப்படி திருமணமாகிறது. வயதுக்கு வந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணமாகி விடுவதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அப்படி திருமணமான பெண்கள்  உடனடியாக பிள்ளை பேற்றுக்கும் ஆளாகி தங்களது பெண்மையையும் நிரூபிக்க வேண்டும்.

முழுமையாக வளர்ச்சியடையாத சரியான ஊட்டச்சத்தில்லாத இக்குழந்தைகளின் பிள்ளைப்பேறு பெரும்பாலும் மரணத்தில்தான் வந்து முடிகிறது.  ஒவ்வொரு வருடமும் 1,00,000 தாய்களும் ஒரு மில்லியன் குழந்தைகளும் இந்தியாவில் மரணமடைகின்றனர்.

குழந்தை பேற்றுக்கு ஆளாகும் முன்பே மனியம்மாவின் திருமணம் முறிந்துவிட்டது. மணமான இருவருடங்களிலேயே, மனியம்மாவின் கணவர்(வயது 20) மனியம்மாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார். 20 வயதான அவருக்கு மனியம்மா பாலுறவுக்கு ஏற்ற வகையில் இல்லையென்பதுதான் காரணம். கணவர் உங்களை எப்படி நடத்தினார் என்ற கேள்விக்கு மனியம்மா தயங்குகிறார். “அவரைப் பற்றி எதையும் நான் பேச விரும்பவில்லை” என்கிறார்.

அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியாதவராக தென்பட்டார்.  மற்றுமொரு முறை  மணம் செய்துக்கொள்வாரா என்ற கேள்விக்கு இல்லையென்று தலையசைக்கிறார். அக்‌ஷய திருதியை விழாவின் போது, பெரும்பாலான இந்திய கிராமங்கள்  திருமணத்திற்கான ஏற்பாடுகளிலும், பட்டாசுகளிலும் பெண்களின் பாடல்களிலும் மூழ்கியிருக்கும். அந்த திருமணங்களின் மணகள்கள் மனியம்மாவைப் போன்ற குழந்தைகள்தான்.

வடழகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஹசீனா பள்ளியை விட்டு நிற்கவில்லை;  அவர் பள்ளிக்கே செல்லவில்லை. ஹசீனாவுக்கு 13 வயதில் முதல் முறையாக மாதவிலக்கு ஏற்பட்டது. ஹசீனாவின் தாய் இறந்ததும் அவரை வளர்த்த அத்தை ஹசீனா உடனே திருமணம் செய்துக்கொள்ள  வேண்டுமென்றார். ஹசீனாவுக்கு அவர் என்ன சொல்கிறாரென்று அப்போது விளங்கவில்லை; தனது வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பிப்போடுமென்றும் தெரிந்திருக்கவில்லை. “திருமணம் ஒரு விளையாட்டு என்று நினைத்தேன்” என்கிறார் அவர், கணவரது மூங்கில் குடிசையில் அமர்ந்தபடி.

அவரது கைகள் புடவையின் முந்தானையின் ஓரங்களைத் திருகியபடியிருக்கின்றன. ஹசீனாவின் வயது இப்போது 15. அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறார்.பிரசவங்களினால் ஏற்படும் சிக்கல்களும், உடல்நலத்தை பற்றிய அறியாமையும் மருத்துவ வசதியின்மையும் தகுந்த நேரத்துக்கு கிடைக்காத கவனிப்பும் இந்த மரணங்களை அதிகப்படுத்துகின்றன. அதற்கு ஹசீனாவும் விதிவிலக்கல்ல.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வயது முறையே 11 மற்றும் 13 அஞ்சலி மற்றும் கரிஷ்மா  திருணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது குடும்பத்துப் பெரியவர்கள் அவர்களுக்கு தயிரும் மஞ்சளும் சேர்த்து தலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கைகளிலும் கால்களிலும் மருதாணி இடப்பட்டிருக்கிறது. “ஆமாம், எனக்கு பயமாக இருக்கிறது, இருக்காதா என்ன?” என்கிறார் கரிஷ்மா.  ”நாங்கள் எங்கள் கணவர்களை இன்னும் சந்திக்கவில்லை” என்கிறார்கள், லேசான எரிச்சலுடன்.

எப்படி தனது வீட்டையும், சகோதரியுடன் பள்ளிக்குச் செல்வதையும் நேசித்தார்கள் என்று ரசித்து சொல்கிறார்கள்.தற்போது எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது .”கணவரது வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்வது நடக்காத காரியம். அங்கு சமையலும் வீட்டு வேலைகளையும்தான் செய்ய  வேண்டும். வேறு ஒன்றும் இல்லை. தலையை எப்போதும் துணியால் மூடியிருக்க வேண்டும். எனது மாமியார் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடக்க வேண்டும்”.

குழந்தைத் திருமணங்கள் இந்திய சட்டத்திற்கு புறம்பானவை. குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பிரிட்டிஷ் காலத்திலேயே, 1929, நிறைவேற்றப்பட்டது. அப்போது பார்ப்பனிய ஆதரவாளர்கள், இந்துமத அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்தனர். பின்னர் அம்பேத்கர் அரசியல் சாசனம் எழுதிய காலத்திலும் இந்த எதிர்ப்பு இருந்தது. பார்ப்பனியத்தின் நிலவுடமைப் பண்பாட்டில் ஊறியிருந்த சமூகத்தில் குழந்தைகள் திருமணம் ஆழமாக பதிந்திருந்தது.

திருமணமாவதற்கு பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். 1947-ல் போலிச் சுதந்திரம் பெற்றபின் இந்திய அரசாங்கம் இந்த சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. திருமண சீசன்களில் நான்கு வயதான குழந்தைக்கும் கூட மணம் நடப்பதை காணலாம். இந்தியாவிலேயே ராஜஸ்தானில்தான் அதிக  அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. ஜோத்பூரில்  குழந்தைகள் நலவாரியத்தின் அதிகாரிகள் தொலைபேசியில் அது குறித்த புகார் குரலுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி புகார்கள் பெரிய அளவில் வருவதில்லை.

இப்படி சட்டத்திற்கு புறம்பான திருமணங்களைப் பற்றி செய்தியை தெரிவிப்பதற்காக அங்கு ஒரு ஹாட்லைன் இருக்கிறது. ஆனால், இந்த திருமணத்தை நடத்துபவர்கள் மிகவும் சாதுர்யமாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார்கள் இந்த அதிகாரிகள்.

”அவர்கள் எப்போதும் எங்களைவிட ஒரு அடி முன்பாக இருக்கிறார்கள்.   திருமணத் தேதியை முதலில் அறிவித்து விடுகிறார்கள். பிறகு தேதியையோ அல்லது இடத்தையோ மாற்றிவிடுகிறார்கள். ராஜஸ்தான் ஒரு பெரிய மாநிலம். போலிசாலும் எல்லா இடங்களை கண்காணிக்க இயலாது. தேவையான வாகனங்கள் இருந்தால் திருமணஙக்ளை அவ்விடத்திலேயே நிறுத்திவிடலாம். ஆனால்,  அதற்கு கொஞ்சம்  காலம் பிடிக்கும்” என்கிறார்கள் அவர்கள். அதுவரை அவர்கள் தொலைபேசியைத்தான் நம்பியிருக்கவேண்டும். ராஜஸ்தானில் இன்னும் பல இடங்களில் நிலப்பிரபுக்கள்தான் ஆதிக்கம் செலுத்துவதாக பல அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய பிராந்தியங்களில்தான் பா.ஜ.க செல்வாக்கோடு இருக்கிறது என்பதிலிருந்து அந்த கட்சியின் பிற்போக்கு அடிப்படையை புரிந்து கொள்ள முடியும்.

சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது. ஆந்திராவில் இந்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 4 நான்கு வருடங்களுக்குப் பிறகும் கிராம அளவில் கூட அதிகாரிகளை நியமிக்கவில்லை. போலீசும் வழக்கம்போல கண்ணை மூடியபடி இருக்கிறது.

ஆந்திராவின் வாரங்கலில் உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் குழந்தைத் திருமண வதையைப் பொறுக்க முடியாமல் நடக்கவிருந்த 60 குழந்தைத் திருமண விவரங்களை சேகரித்து போலிசிடம் கொடுத்தார். தடுத்து நிறுத்த உடனடியாக ஏற்பாடு செய்யும்படியும் கோரினார். ஒவ்வொரு கிராமம் கிராமமாக நடந்து சென்று இந்த விபரங்களைச் சேகரித்தார் அவர்.  இன்ஸ்பெகடர் மோகிலி துர்கையாவோ இதுவரை தான் ஒரு குழந்தைத் திருமணத்தைக் கூட தடுத்து நிறுத்தவில்லை என்கிறார்.

யூனிசெஃப்பின் தென்னிந்தியத்தலைவர் இதுபற்றி கூறுகையில்,”போலீசும் இந்த பாரம்பரிய பின்னணியிலிருந்தே வந்தவர்கள். அவர்கள் தங்களது சொந்த குடும்பங்களுக்கெதிராக பேச விரும்புவதில்லை. பல நூற்றாண்டு காலமாக தொடரும் இந்த பழக்கத்தை தவறென்று சொல்ல அவர்கள் விரும்புவதில்லை. இதுபற்றி அவர்களுக்கே பயிற்சியும்  அறிவும் தேவைப்படுகிறது” என்கிறார். இதுமட்டுமல்ல எல்லா மக்கள் பிரச்சினைகளிலும் அதிகாரத்திமிரோடும், ஆதிக்கத்தில் இருப்பவர்களையும் ஆதரிக்கின்ற போலீசை எப்படித் திருத்த முடியும்?

இந்த பயிற்சியும் அறிவும் வரும் வரையும்  தங்களது வாழ்க்கையை  குழந்தைத் திருமண மேடையில் தியாகம் செய்யும் பல்லாயிரக்கணக்கான சிறுமிகளின் நிலைமை என்ன? குழந்தைத் திருமணம் நமது நாட்டில் பால்ய விவாகம் என்ற பெயரில் தொடர்ந்து  வந்துள்ளது. இதற்கு சாதிய படிநிலையும் ஒரு காரணம். பிறப்பால்  வரும் சாதியும், சொத்துடைமையும்  திருமணத்தை பல்வேறு சாதிகளுக்குள் நடைபெறுவதை அனுமதிப்பதில்லை.

மேலும், இளைய தலைமுறையினர் இவ்விதிகளை உணர்ச்சிவசத்தில் மீறுவதைத் தடுக்கவும் இந்த குழந்தைத் திருமணங்கள் பயன்படுகின்றன. மேலும், தற்போது இப்பழக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களிடமே பெருமளவில் காணப்படுகிறது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைப் பொறுத்த வரை கிராமங்களில் உள்ள ஆதிக்க சாதி – வர்க்கத்தினரிடமும் இந்த பழக்கம் காணப்படுகிறது. இவர்களெல்லாம் ஏழைகள் அல்ல.

ஒரு சில சமூகங்கள் முன்னேறிக் காணப்பட்டாலும் பல சமூகங்களுக்குள் பெரும் வித்தியாசம் இருக்கிறது. படிப்பு, சாதிநிலை, மதம், வருமானம் மற்றும் வட்டாரங்கள் முதலியவை சமூகப் பொருளாதார வேற்றுமைகளில் பிரதிபலிப்பதோடு குழந்தைபேறு உடல்நலத்தில் பிரதிபலிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஹசினா வாழும் அஸ்ஸாம், சில பத்தாண்டுகளாகவே வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. நிர்வாக அலட்சியமும், ஊழலும், ராணுவ அடக்குமுறையும் தொடர்ந்து இருக்கிறது. இது பிரசவகால மரணங்களை பெருமளவு உயர்த்தியுள்ளது. அரசாங்க புள்ளிவிவரப்படி, 100,000 பிரசவங்களில் 480 மரணங்கள் ஏற்படுகின்றன.

ஹைதராபாத்தின் மகாத்மா காந்தி மருத்துவமனையில் 15வயதுப்பெண் அவசர கால சிகிச்சைக்கு விரைந்து எடுத்துச் செல்லப்படுகிறாள்.. வலியால் துடித்தபடி இருக்கும் இந்தப்பெண்ணே, ஒரு குழந்தையே குழந்தையை சுமந்தால் ஏற்படும் நிலைக்கு, ஒரு சிறந்த உதாரணம் என்கிறார் டாக்டர் ஷைலஜா. ”அவளுக்கு ரத்தக்கொதிப்பு உயர்திருக்கிறது. அவளது இடுப்பு மிகவும் சிறியதாக  இருப்பதால் குழந்தை  வெளியே  வர முடியாமல் மாட்டிக்கொள்ளும். இந்த நேரங்களில் சிசேரியனைத் தவிர வேறு வழியில்லை,” என்கிறார் அவர்.

அப்பெண் 200 கிமீ பிரயாணம் செய்து  சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாள்.ஆனால், பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே  பிரசவிக்கிறார்கள்.  இம்மாதிரியான சிக்கல்களால் தாயும் குழந்தையும் ஒருசேர இறக்கிறார்கள். சிறுவயதிலேயே இக்குழந்தைகள் திருமணத்தின் பெயரால்  தொடர் கற்பழிப்புக்கும் பாலியல் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள்.  எதிர்ப்பதற்கோ தடுப்பதற்கோ வழியில்லாமல் இந்த வன்முறைக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள்.

”Broken Voice” என்ற புத்தகத்தில் ஒரு பெண் 13  வயதில் திருமணம் என்றால் எப்படி இருக்கும் என்பதை “என் கணவனை பார்த்து எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அவர் என்னைவிட மிகவும் பெரியவராக இருந்தார்.. அவர் என்னைத் தொடக்கூடும் என்பதால்,  வீட்டுக்கு அவர் வருவதையே நான் விரும்பவில்லை.” என்கிறார்.

18 வயதுக்குள்ளான பெண்களிடம்தான் அதிகளவு எச்ஐவி நோய்த்தொற்று இருப்பதாக ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. பாதுகாப்பில்லாத பாலுறவு, ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் உறவு போன்றவற்றை ஆண்களுக்கிடையே முறைப்படுத்துவது இன்றுவரை சவாலாக இருக்கிறது. குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சமூகங்களில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது.

திருமணமான குழந்தைகளோ பெண்களோ கணவன் மூலமாக  எச்ஐவிக்கு ஆளானால், அவர்களது குடும்பமும் சமூகமும் கணவனது உடல்நிலைக்கு காரணமாக மனைவியையே குற்றவாளிகளாக்குகின்றனர். அதுவும், கருவுற்றிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் வீட்டைவிட்டு வீதிக்குத் துரத்திவிடப்படும் குழந்தைகள் இன்னும் அதிகமான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஹைதராபாத்தின் அந்த மருத்துவமனையில் பிரசவ அறைகளிலொன்றில் நிற்கிறார் டாக்டர் ஷைலஜா. “விரைவில் மகப்பேறுக்கு ஆளானால் ஏற்படும் கதியை பாருங்கள்” என்று சொல்லி, அப்பெண்ணின் நாக்கை உள்அன்னத்தில் மடக்கச் சொல்கிறார். தாய் அனீமிக்காக இருப்பதோடு, குழந்தையும் மிகுந்த எடைகுறைவாக இருப்பதாகச் சொல்கிறார். அதிர்ஷ்டமிருந்தால் இவன் பிழைப்பான் என்று ஆங்கிலத்தில் சொன்னதை அந்தத்தாய் புரிந்து கொள்ளவில்லை.

அங்கிருந்து, பெண்கள் நலப்பிரிவுக்கு சென்றால்,  ஹிஸ்டெரக்டமிக்கு ஆளான அநேக பெண்களை பார்க்க முடிந்தது. 23 வயதுக்கும் குறைவான பெண்கள் அவர்கள். அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது இனி குழந்தைப்பேற்றுக்கு ஆளாகாத நிலையில் இருப்பார்கள். வீட்டு வேலைகளிலும் அவர்களால் ஈடுபடமுடியாது. பெரும்பாலானோரை அவர்களது கணவர்கள் வீட்டைவிட்டு அனுப்பி விடுவார்கள்.

அஸ்ஸாமைச் சேர்ந்த ஹசீனாவின் நிலைமை இன்னும் மோசம். அவரைப் போன்று மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த கிராமங்களில் சிலவற்றிற்கு இன்னும் மின்சார வசதி கூட இல்லை. சாலைகளும்,  பள்ளிகளுமோ அல்லது  பொதுவசதிகளோ எதுவும் இல்லை.பெரும்பாலும் ஆற்றில் மீன் பிடித்தோ விவசாயம் செய்தோதான் வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

30 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தில் விவசாயத்துக்கு போதிய நிலையில்லா விட்டாலும் எங்கும் செல்ல வசதிவாய்ப்பின்றி இங்கேயே வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஹசீனா அருகிலிருக்கும் ஒரு வடகிழக்கு ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவமனைக்குச் செல்கிறார்.அரசாங்க உதவி பெறும் அந்த மருத்துவமனையிலிருந்துதான் பிரம்மபுத்திரா நதியைக் கடந்து மருத்துவ உதவிகள் ஹசீனாவின் கிராமத்துக்கு வரவேண்டும்.

அந்த மருத்துவமனையின் நர்ஸ் ஹசீனாவின் உடல்நிலையைக் குறித்தும் நலங்களைக் குறித்தும் கேள்விகள் கேட்கிறார். ஹசீனாவுக்கு மருத்துவ வசதிகளுடன் வரும் படகுகளைக் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், ஹசீனாவின் வீடு இன்னும் ஒரு ஓடையைக் கடந்து இருக்கிறது.அங்கு எந்த மருத்துவ வசதிகளோ வாய்ப்போ இல்லை.மேலும், ஹசீனாவுக்குத் தெரிந்த ஆர்வலரும் அதனைப் பற்றி சொல்லவில்லை.

ஹசீனாவை பரிசோதித்த நர்ஸ் அஸ்ஸாமின் மற்ற எல்லா கருவுற்றிருக்கும் பெண்களைப் போலவே ஹசீனாவும் அனிமிக்காக இருப்பதாக தெரிவிக்கிறார். ஹசீனாவின் ஹீமோகுளோபின் 6.4 என்றும் சொல்கிறார். இந்தியப்பெண்களுக்கு  ஒரு டெசிலிட்டருக்கு 11 கிராம் இருக்கவேண்டும். கருவுற்றிருக்கும் பெண்கள் அனிமிக்காக இருக்கும்போது குறித்த நேரத்துக்கு முன்பாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதோடு நோய்தொற்றுக்கான வாய்ப்புகளும் அதிகம். அதுவும் மருத்துவ வசதிகளெதுவும் இல்லாத அவசரத்துக்கு மருத்துவ வசதிகள் கிட்டாத இப்பெண்கள் மரணத்தின் வாயிலிலிருக்கிறார்கள்.

பேறுகாலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதைவிட வீட்டில் இருப்பதையே ஹசீனா விரும்புகிறார். அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றால் அரசாங்கத்திலிருது 1400 ரூபாய்கள் வருமென்றாலும் ஹசீனாவின் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வது 1500 ரூபாய்களாகும் என்றும்  அதோடு மருத்துவமனைக்கும் ஆரம்பத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்குமென்றும்  கூறுகிறார். அதோடு, பேறுகாலத்தில் ஆண் மருத்துவர்கள் தன்னை உடலில் துணியில்லாமல் பார்ப்பதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

பெற்றோர் சொல்வதைப் போல மருத்துவ வசதியில்லாமல் வீட்டில் பிரசவித்தால் இறப்பை சந்திக்க நேரிடும் என்கிறார், நர்ஸ் ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல.  “செத்தா செத்துட்டு போறேன்” என்கிறாள்  ஹசீனா தனது தலையிலிருக்கும் துணியை இழுத்துவிட்டபடி.  ஹசீனாவைப் போன்ற எண்ணற்ற குழந்தை மணமகள்களுக்கு வாழ்க்கை என்பது அவ்வளவுதான்.

இந்தியாவின் கிராமங்களில் அதுவும் பின்தங்கிய மாநிலங்களில் ஏழ்மை காரணமாக சிறு வயதுத் திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு காரணமாகவும் நடக்கின்றன. இத்தகைய பின்தங்கிய மாநிலங்கள், கிராமங்களை அரசும், முதலாளிகளும் எப்போதும் புறக்கணித்தே வருகின்றனர். அவர்களுக்கு இலாபம், வருமானம் இருக்கும் பகுதிகளில்தான் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.

சாதி, மதம் பிற்போக்குகளுடன் கூடவே மறுகாலனியாக்கம் ஏற்படுத்தியிருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புறக்கணிப்பு காரணமாக இந்த குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே இறக்கின்றனர். அல்லது ஆயுள்கைதிகளைப் போல வாழ்கிறார்கள். சிறுவயது பெண் குழந்தை திருமணம் என்பது அந்தந்த குடும்பங்களில் ஊதியமின்றி வேலை செய்யும் பணியாளின் இடத்திற்கு ஒப்பானதுதான்.

ஆண்டுக்கு ஒரு இலட்சம் தாய்மார்களும், பத்து இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும் நாட்டில்தான் விரைவில் வல்லராசகப் போகிறதென்ற கூச்சலை ஊடகங்கள் வாயிலாகவும், அப்துல்கலாம் டைப் நடுத்தர வர்க்கதின் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்து பெருமைப்படும் இவர்கள் மரண கண்டத்தோடு வாழ்வதற்கு சபிக்கப்பட்ட இந்த குழந்தைகளை கொசுக்களைப் போல ஒதுக்குகிறார்கள்.

எனவே குழந்தைகள் திருமணத்தை எதிர்த்து சட்டங்கள் மட்டும்  போதுமானவையல்ல. நடைமுறையில் நாம் பார்ப்பனியத்தையும், மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து போராடுவதினூடாகத்தான் நமது குழந்தைகளை மீட்க முடியும்.

______________________________________________

*விவரங்கள், செய்திகள், அனுபவங்கள் சில இணையதளங்கள் மற்றும் கட்டுரைகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

_________________________________________

– சந்தனமுல்லை
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: