தூக்கம் போதாமல் கொதிக்கும் விழிச்சூட்டில்
வியர்க்கும் முகம் துடைத்து,
அவசரமாய்… குளித்த தலைதுவட்ட நேரமின்றி
மின்சார ரயிலின் வாசல்படியோரம்
தலைசாய்த்து முடியுலர்த்திப் போகும்
உழைக்கும் பெண்ணே உனக்குத் தெரியுமா?
இன்று லெனின் பிறந்தநாள்!
உன் தலையில் பட்டு வியர்க்கும் சூரியன்
உன் விரல்கள் பட்டு இறுகும் செங்கல்
உன் மூச்சு பட்டு வளையும் கம்பிகள்
உன் உடலில் பட்டு ஆவியாகும் காற்று
உச்சி வெயிலை உழைப்பாய் மாற்றும்
கட்டிடத் தொழிலாளியே உனக்குத் தெரியுமா?
உழைப்பவர்க்கே அனைத்து அதிகாரம் என்பதை
நடைமுறைப்படுத்திய தோழர் லெனின் பிறந்தநாள் இன்று!
கிணற்றுத் தவளைக்கும்
நிலவோடு உறவுண்டு!
மழைக்காலத் தவளைக்கும்
வெளிக்காட்டக் குரலுண்டு!
கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி
சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி
கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா…
உனக்குத் தெரியுமா?
பிடித்தமான அடிமைத்தனத்தில்
மக்களை வாழவிடாத புரட்சியாளர் லெனினின் பிறநதநாள் இன்று!
அழைத்து மகிழும் வெறும் பெயரல்ல,
உழைக்கும் வர்க்கம் தெரிந்து பின்பற்ற வேண்டிய கருத்து லெனின்.
உலகம் நன்றாய் இருக்க வேண்டும்
என்று ஒவ்வொருவரும் உபதேசித்துக் கொண்டிருந்தபோது,
இந்த உலகை உருவாக்கிய உழைப்பவர் நன்றாயிருக்க வேண்டும் என்று
நடைமுறைப்படுத்தினார் லெனின்.
மண்ணையே பெயர்க்கும் மழை
வேலி முட்களை முறிக்கும் சூறைக்காற்று
கண்களைக் குழப்பும் மின்னல்…
கண்களே திறந்தாலும் எங்கெனும் இருட்டு…
அழுத்தும் பாறை… ஆளுக்கொரு புலம்பல்
இத்தனைக்கும் மத்தியில் நம்பிக்கையுடன் தலைதூக்கும் ஒரு பசுந்தளிர்…
அதுதான் லெனின்…. அதுதான் லெனின்!
சுரண்டப்பட்ட தொழிலாளர் இதயமெங்கும்
ரத்தமாய் கலந்தார்…
எத்தனை முறை கைது செய்தாலும்
உழைக்கும் வர்க்க புரட்சி அலையில்
சித்தமாய் எழுந்தார்…
சிறைப்படுத்த முடியாத சிந்தனையாய்
லெனின் மக்களிடம் கலந்தார்…
வெற்றிடங்களை லெனின் விட்டு வைப்பதில்லை…
பாட்டாளி வர்க்கமாவது.. புரட்சியாவது… என
எள்ளி நகையாடிய எதிரிகளின் மூளையில்
‘பயங்கரமாய்’ நுழைந்தார்…
என்ன செய்ய முடியும் உங்களால்?
கேட்டது முதலாளித்துவ வர்க்கம்..
என்ன செய்ய வேண்டும்?
விடையறுத்தார் லெனின்…
ரசிய பாட்டாளி வர்க்கமோ புரிந்து கொண்டது… புரட்சி வென்றது.
புரிந்து கொண்டோமா நாம்?
சைபீரியக் கடுங்குளிருக்கு நாடு கடத்திய போதும்
லெனின், தோழர்களின் புரட்சிக் கனல் குறையவில்லை,
சாதாரண ஏ.சி. அறை, பணிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டவுடனேயே
சடாரென வர்க்கச் சூடு இறங்கி விடுகிறது சிலருக்கு.
மக்கள் மீது நம்பிக்கை வைத்து புரட்சியிலேயே இறங்கினார் லெனின்.
தன் மீது நம்பிக்கை வைத்து
ஒரு தெருமுனைக்கூட்டத்தில் இறங்கவே நமக்குத் திகில்…
ஆசை மட்டும் போதாது…
ஆள்வைத்து புரட்சி செய்யவும் முடியாது…
அவரவரே அனுபவித்து போராடுதலே புரட்சியின் விதி.
புரட்சிக்கு லீவு போட்டுவிட்டு
பொழுதுக்கும் கூலி அடிமைத்தனத்துக்கு வேலை செய்வதா?
இல்லை.. கூலி அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்ட
கொஞ்சம்.. புரட்சிகர அமைப்பில் இறங்கிப் பார்ப்பதா?
ஊசலாடும் மனங்கள் ஒரு முடிவுக்கு வர
லெனின் பிறந்தநாளை கொண்டாடுங்கள்…
_____________________________________________________
– துரை. சண்முகம்
_____________________________________________________
இன்று, ஒளி வருமெனக் காத்திருந்தோம்.
இருண்ட கண்டத்தின்
கடைக் கோடியில்
கேட்பாரற்றுக் கிடந்த
சோகை படிந்த சிற்றூர்.
இங்கு
இதற்கு
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும் என்றார்கள்!
பனிச் சாரல் சடசடக்க
கண்ணாடிச் சன்னல் தடதடக்க
கருப்படர்ந்த இரவின் ஊடாக
வெளியில் பார்வையை
உலவ விட்டுக் காத்திருந்தோம்;
இருளில் வழி சொல்லும்
ஒளிக்காக.
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும்
என்றார்கள்.
அந்த ஒளியோடு
ஒரு சேதியும் வருமென்றார்கள்!
எங்கள்
பசிக்கான உணவு
குறைக்கப்பட்டிருந்தது.
எங்கள்
உழைப்பின் கூலி
சுறண்டப்பட்டிருந்தது.
ஜமுக்காளத்துக் கிழிசலில்
ஊதைக் காற்றுப் புகுந்து
உயிர்க் குலையும் சில்லிட்டது.
ஏமாற்றம் தந்த
பாலற்ற முலைக்காம்பால்
நிறுத்தாமல் விசும்பின
பச்சிளங் குழந்தைகள்.
வயது முகவரி எழுதிய
வரிகளின் சுருக்கத்தோடு
ஏதாவது உண்ணக்கேட்டு
ஏக்கத்தோடே கை நீட்டி
எங்களையே பார்த்திருந்தது
எங்கள் மூதாதைக் கூட்டம்.
யாவரும்தான் காத்திருந்தோம்.
தினவெடுத்த தோளோடும்
விலிசுமந்த இதயத்தோடும்
இளைஞர்களும் பெண்களும்
கால் கடுக்கக் காத்திருந்தோம்!
எங்கள் யாவரையும்
ஒன்று சேர்ந்திருக்கச் சொல்லி
சேதி வருமென்றார்கள்.
வருகின்ற ஒளியின் ஊடாய்
வானுயரக் கரமுயர்த்தி
விண்ணதிரக் கோஷமிட்டு
ஆர்ப்பரிக்கும் கூட்டத்துள்
குவிந்துவிடச் சொன்னார்கள்.
காத்திருந்தோம்.
செக்கர் சூரியன்;
உடலின் உழைப்பு;
கரங்களில் கருவி;
இவைகளின் வேதி மாற்றத்தால்
சுரக்கும் வியர்வை.
வியர்வை விழுந்தால்
விளையும் கதிர்.
வளையும் இரும்பு.
உழைப்பு எமது.
எனில்;
அதன் வினையும் எமதன்றோ?
வியர்வையின் வினை
மறுக்கப்பட்டுவிட்டதால்
இந்த இருளில்தான்
நாங்கள்
இருந்து கொண்டேயிருந்தோம்.
பழக்கப் பட்டுப்போன
இருளுக்கு மாற்றுத் தேடித்தான்
இங்கே காத்திருந்தோம்.
இங்கு
இதற்கு
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும் என்றார்கள்.
அதோ
வந்துவிட்டது.
வந்தேவிட்டது.
இல்யீச் விளக்கு!
அதன் ஒளிக்கதிரில்
அனைவரும் துள்ளினோம்.
வந்தேவிட்டது
இல்யீச் விளக்கு!
அப்போது எங்களுள்
கூடவே குந்திக்கோண்டிருந்த
பேதமை, மடமை,
ஐயம், மதம்,
கூச்சம், அச்சம்,
அத்தனையும் துணுக்குற்று
இருளில் சிதறியோடியதை
நாங்கள் காணுற்றோம்.
ஒளி சொன்ன சேதியில்,
வந்துதித்த ஒளியினூடாய்,
வானுயரக் கரமுயர்த்தி,
விண்ணதிரக் கோஷமிட்டு,
ஆர்ப்பரிக்கும் கூட்டத்துள்
குவிந்து செயல்பட்டோம்;
குவியல் குவியலாய்.
எங்கள் பின்னால்
எங்களுக்காக,
ஒரு தாயும்கூட நடந்து வந்தாள்.
அப்பக்கூடை தலை சுமக்க!
வினையின் வினையறுக்க
வீர நடையிட்டோம்.
கரத்தில் கரங் கோர்த்து,
நெஞ்சில் உறமிருத்தி,
மண்ணில் குருதி பாய்ச்சி,
நிலம் அதிர நடையிட்டோம்.
அடித்து விரட்டப்பட்டதால்
அரண்மனைக் குகையிலிருந்து
புறமுதுகிட்டோடின
நரித்தோல் உடல்கள்.
பின்,
நாங்கள் வென்றோம்.
வென்ற பின்,
எம் வியர்வை எமதானது;
விளைக் கதிரும் எமதானது;
வளையும் இரும்பு எமதானது;
உழைப்பு எமதானது;
எனில் –
அதன் வினையும் எமதேயானது!
வினை தூண்டியது
இல்யீச் விளக்கு!
நன்றி
விளாதிமிர் இல்யீச் உல்யானோவ்!
உனது பிறப்புக்கும்;
உனது போதனைகளுக்கும்;
உனது வழிகாட்டுதலுக்கும்;
உனது இல்யீச் விளக்குக்கும்!
உனது விரல் நீட்டிய திசையில்
கணக்கிலடங்கா இல்யீச் விளக்குகள்
உதித்துக்கொண்டேயிருக்கும்;
ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்.
எமை நம்பு
எமதருமை இல்யீச்…!
_____________________________________________________
– புதிய பாமரன்
_____________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
- 21-ம் நூற்றாண்டிலா இப்படி? – தோழர் மருதையன்
- மகிழ்ச்சியின் தருணங்கள் !! – தோழர் மருதையன்
- இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா? – தோழர் மருதையன்
“ஆள்வைத்து புரட்சி செய்யவும் முடியாது…
அவரவரே அனுபவித்து போராடுதலே புரட்சியின் விதி.”
தலைவரின் கூட்டத்துக்கு
ஐநூறோ ஆயிரமோ கொடுத்து
ஆள்பிடிக்கும் காலமிது.
அது கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.
மாரடிக்கும் கூட்டத்தால் மாறாது இவ்வுலகு-
மாறாக
மடிவதற்கும் தயாராய் களத்தில் நிற்கும் போர்ப்படையால்
மாறுமே இவ்வுலகு நிச்சயம் ஒரு நாள்!
தோழர் புதிய பாமரன்,
பின்னூட்டத்தில் இடப்பட்ட உங்கள் கவிதை பதிவில் இருப்பது பொருத்தமாக இருக்குமென்பதால் அங்கே மாற்றப்பட்டிருக்கிறது. நன்றி
இல்யீச் விளக்கை
எங்கும் பொருத்தலாம்;
நன்றி
நவிலாமலே!
அருமை தோழா
நன்றி
ஐயா, குடுகுடுன்னு வந்து இங்க நன்றி சொல்றீங்களே… என்ன சமாச்சாரம்?
நிலவோடு உறவுண்டு சூரியனின் தனலோடு
தோழர் லெனினோடு மனமுவந்து மக்கள் களம்கண்டு
புரட்சிக்கொடி வென்று கனவுநனவாகி புதுஆட்சி உதயமானதே
இந்தியாவின் இளைஞர்கூட்டம் மனதோடு உறவாடி
மக்கள் நலம்பெறவே மறுகாலனியாதிக்கம் பொடிபடவே
எழுகவே, எழுகவே
தோழர்லெனின் போலவே
நேற்று மாலையில் மக்கள் கலை இலக்கிய கழகமும், அதன் தோழமை அமைப்புகளும், லெனின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் பல பகுதிகளிலும் அறைக்கூட்டங்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இனிப்புகளும் வழங்கினார்கள்.
அந்நிகழ்வில் சில தோழர்கள் லெனின் பற்றிய நினைவுகளையும், சோவியத் ரசியா தொடர்பான செய்திகளையும் பகிர்ந்து கொண்டார்கள். இரண்டு பெண் தோழர்கள் பகிர்ந்து கொண்டதை, உங்களோடு பகிர்கிறேன்.
மேலும் படிக்க…
http://socratesjr2007.blogspot.com/2011/04/blog-post_23.html
A revolution is impossible without a revolutionary situation; furthermore, not every revolutionary situation leads to revolution.
Vladimir Lenin
புரட்சிகர சூழல் இல்லாமல் புரட்சி என்பது சாத்தியமல்ல. அதே சமயம் எல்லா புரட்சிகர சூழல்களும் புரட்சியை நோக்கி நகர்வதுமில்லை…
விளாதிமிர் லெனின்….
Sometimes – history needs a push.
Vladimir Lenin
சில நேரங்களில் வரலாற்றை நாம் முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது..
லெனின்…
The goal of socialism is communism.
Vladimir Lenin
சோசலிசத்தின் நோக்கம் கம்யூனிசத்தை உருவாக்குவதே
லெனின்…
The press should be not only a collective propagandist and a collective agitator, but also a collective organizer of the masses.
Vladimir Lenin
ஊடகம் என்பது பிரச்சார சாதனமாகவும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கான கருவியாக மட்டுமின்றி…மக்களை அணி திரளச் செய்யும் ஒரு கருவியாகவும் இருக்க வேண்டும்.
லெனின்…
A standing army and police are the chief instruments of state power.
Lenin, State and Revolution (1917)
இராணுவமும், காவல்துறையும் தான் அரசு தன் அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக உதவும் மிக முக்கிய கருவிகளாகும்
…
அரசும், புரட்சியும் என்ற புத்தகத்திலிருந்து….லெனின்…
Democracy for an insignificant minority, democracy for the rich — that is the democracy of capitalist society.
Lenin, State and Revolution (1917)
முதலாளித்துவ சனநாயகம் என்பது மிகவும் சிறிய குழுவான பணக்காரர்களுக்கான சனநாயகமே அன்றி வேறல்ல…
…
அரசும், புரட்சியும் என்ற நூலிலிருந்து….லெனின்
It is at moments of need that one learns who one’s friends are. Defeated armies learn their lesson.
Lenin, Left-Wing Communism: An Infantile Disorder (1920)
சில முக்கியமான தருணங்களில் தான் ஒருவன் யார் தன்னுடைய நண்பன் என்பதை உணருகின்றான்…தோற…்றுப்போன இராணுவங்கள் குறிப்பாக இந்த பாடத்தை நன்கு கற்றுக்கொள்கின்றன…
இடது சாரி கம்யூனிசம் ஒரு இளம் பருவக் கோளாறு என்ற நூலிருந்து…லெனின்
So long as the state exists there is no freedom. When there is freedom, there will be no state.
Lenin, The State and Revolution (1917)
அரசு என்ற ஒன்று இருக்கும் வரை நமக்கு சுதந்திரம் கிடைக்கப்போவதில்லை. நமக்கு சுதந்திரம் கிடைக்கும் அத்தருணத்த…ில் அரசு என்ற ஒன்று இருக்கப்போவதில்லை…
அரசும், புரட்சியும் என்ற நூலிலிருந்து…லெனின்.
[…] I must say that the tasks of the youth in general, and of the Young Communist Leagues and all other organisations in particular, might be summed up in a single word: learn.
Lenin, The Tasks of the Youth Leagues (1920)
இளைஞர்களுக்கும், இளைய கம்யூனிச குழுமங்களுக்குமான முக்கியமான வேலைகளை எல்லாம் தொகுத்தால் நமக்கு கிடைப்பது: கற்றுக்கொள்ளுங்கள்… லெனின்…
நேற்று லெனினின் சில குறிப்புகளை மொழிமாற்றம் செய்து அகநூலில் வெளியிட்டிருந்தேன்…அவற்றை மீண்டும் இங்கே மீள்பதிவு செய்கின்றேன்.
தோழர் நற்றமிழன், இடது சாரி கம்யூனிசம் என்ற குறிப்பிலிருந்து என்று நீங்கள் எழுதியதை இடது சாரி கம்யூனிசம் ஒரு இளம் பருவக் கோளாறு என்ற நூலிருந்து…லெனின் என்று மாற்றியிருக்கிறோம். அதன் ஆங்கில மூலத்தை நீங்கள் Lenin, Left-Wing Communism: An Infantile Disorder (1920) குறிப்பிட்டிருந்தீர்கள். அதன் தமிழாக்கம் மேற்கண்டவாறு இருக்க வேண்டும். நன்றி
சாதாரண ஏ.சி. அறை, பணிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டவுடனேயே
சடாரென வர்க்கச் சூடு இறங்கி விடுகிறது சிலருக்கு.-ஆமாம் உண்மைதான்
இவன் எதற்கு இங்கு வந்தான் என்று.
இரண்டு கவிதைகளும் அருமையாக எழுதப்பட்டிருக்கின்றன. புரட்சிகர வாழ்த்துக்கள்.
உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் விற்க ஏற்பாடு
Both verses are very substandard,compare with the memories of Comrade Lenin.Try to give memorable writings in poetry.We need hard work to find out Lenin than write comrades.
தோழர் லெனினின் பிறந்த நாளில் பாட்டாளிவர்க்கக் கனவுகளை நனவாக்க உறுதியேற்போம்
நல்ல கவிதை தோழருக்கு வாழ்த்துக்கள்.
உழைப்பின் உயர்வை உணர்திடும் கவிதை
உத்தமர் லெனினை உணர்திடும் கவிதை
தழைக்கத் தமிழில் தந்தீர் கவிதை
தரமொடு பொருளொடு வந்ததிக் கவிதை
புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
லெனின் என்பவர் ஒரு சர்வாதிகாரி, ரஷ்யாவை நாசமாக்கியவர், பாசிஸ்ட் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஒரு கூட்டம் நல்லா இருக்குங்க உங்க நியாயம்
[…] பதிவு: வினவு Like this:LikeBe the first to like this […]
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தலைவர் லெனின்.மஞ்ச மாக்கான் நீங்கள் எந்த வர்க்கம்? சுரண்டப்படும் வர்க்கம் தானே.அப்படியானால் நீங்கள் சொல்வது சரிதான். நன்றி!