privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்"புதிய தலைமுறை" நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?

“புதிய தலைமுறை” நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?

-

உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து மக்களைக் காயடிக்கவே பயன்படுகிறது!

ழக்கம் போல இந்தக் கட்டுரை மிகுதியாகவோ குறைவாகவோ எதிர்ப்பை சந்திக்கலாம். “எல்லாரையும் குற்றம் சொல்கிறீர்களே, யார்தான் நல்லவர்கள், நீங்க மட்டும் யோக்கியமா, நீங்கள் எதாவது சமூகப்பணி செய்திருக்கிறீர்களா, சினிமாக்காரரை சினிமாக்காரராக பாருங்கள், அவர்களால் முடிந்த உதவி செய்வதை எதிர்க்காமலாவது இருங்கள்….” என்றெல்லாம் வாழையடி வாழையாக ஊட்டப்பட்டிருக்கும் “உன்னால் முடியும் தம்பி” டைப்பில் கேட்பார்கள். ஆனாலும் அப்படி கேட்பவர்கள் கொஞ்சம் அருள் கூர்ந்து இதை படித்து விட்டு அந்தக் கேள்விகள் சரியா என்று சொல்லட்டும்.

தமிழகத்தை மொக்கை தேசமாக்கி வரும் சினிமா, தொலைக்காட்சி, சீரியல்கள் போக நாம் கவலைப்பட வேண்டிய மற்றொரு அயிட்டம் அப்துல் கலாம் டைப் தன்னம்பிக்கை போதை கலாச்சாரம். இதை அன்று அமெரிக்க ரிடர்ன் உதயமூர்த்தி துவங்கி வைத்தார். பின்னர் அப்துல்கலாம் அதை நவீன ஊடக வசதி, ஜனாதிபதி அதிகார வசதி மூலம் தமிழகமெங்கும் விஷமரம் போல வளர்த்தெடுத்தார்.

பள்ளி நிர்வாகிகளது கட்டளைக்காக திரட்டப்பட்ட அந்த அப்பாவிக் குழந்தைகளிடம் “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020-இல் இந்தியா வல்லரசாகப் போகிறது” என தேசிய கீத மொக்கையாக்கினார். இன்றைக்கு இருவரும் மார்க்கெட்டில் இல்லையென்றாலும் இந்த சரக்குதான் பத்திரிகை, ஊடகங்கள், புத்தகக் கண்காட்சி எல்லாவற்றிலும் விலை போகிற சரக்கு. அதுதான் இது “நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை சாதிப்பீர்கள்!”.

உழைத்தால் வெற்றியெனும் இந்த தாராக மந்திரம் மேற்கத்திய நாடுகளின் நடுத்தர வர்க்கத்தை, அரசியல் ரீதியாக மொன்னையாக்குவதற்காகவும், பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு போராடாமல் இருப்பதற்கும், வாழ்க்கை தோல்விகளுக்கு தன்னையே காரணமெனக் கற்பித்துக் கொள்ளவும், நுகர்வு கலாச்சாரத்தின் மறுபக்கமாக, சுயநலத்தை ஒரு ஒழுக்கம் போல பின்பற்றுவதற்காகவும் திட்டமிட்டு திணிக்கப்பட்ட ஒரு மோசடிச் சரக்காகும். அப்படி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த சரக்கு போதனைகள் கடந்த பத்திருபது ஆண்டுகளாக தமிழ் வாரப் பத்திரிகைகளில் போதையூட்டும் பல தொடர்களாக வந்திருக்கின்றன.

இந்தியாவிலும் மறுகாலனியாக்கத்தின் விளைவாக ஏழைகள் அதிகரிப்பது போல நடுத்தர வர்க்கமும் அதிகரித்து வருகிறது. அவர்கள் வளர்ச்சிக்கேற்ப இந்த சரக்கும் சந்தையில் மிகுந்த கிராக்கியைக் கொண்டிருக்கிறது. இந்த ‘உழைத்து’ முன்னேறிய முதலாளிகளின் வாழ்க்கையை ஜிகினா வார்த்தையில் செட்டப்போடு தயாரித்துதான் கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் படையெடுக்கின்றன.

இக்காலச் சூழலில்தான் எஸ்.ஆர்.எம் எனும் பிரம்மாண்டமான கார்ப்பரேட் உயர்கல்வி தொழிலை நடத்தி வரும் பச்சமுத்து, “புதிய தலைமுறை” பத்திரிகையை ஆரம்பித்தார். தனது தொழிலை இடையூறின்றி ஒரு சேஃப்டியோடு நடத்துவதற்காக இந்த தேர்தலில் ஒரு கட்சி ஆரம்பித்து எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வைத்தார். அதற்காக மண்வெட்டி விவசாயி தோற்றத்தில், கமாண்டோ படத்தில் ஆர்னால்டு துப்பாக்கியுடன் வருவது போல போஸ் கொடுத்து வெளியிடப்பட்ட சுவரொட்டியை நீங்களும் பார்த்து நகைத்திருப்பீர்கள். தொழில், ஊடகம், கட்சி என்று எல்லா துறைகளிலும் கால் பதித்து தமது சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பது இப்போதைய முதலாளிகளின் பாணியாகும். பச்சமுத்துவும் அப்படித்தான்.

புதிய தலைமுறை பத்திரிகையின் முழுமுதல் கொள்கையே இந்த ‘உன்னால் முடியும் தம்பி’ மேட்டர்தான். ஆரம்பத்தில் அட்டை டூ அட்டை இந்த அப்துல் கலாம் டைப் மொக்கையையே போட்டு வதைத்தார்கள். அதனாலேயே ஓரிரண்டு இதழ் வாங்கிவிட்டு நிறுத்தி விட்டேன். அச்சமயம் ஒரு நண்பர் கூட ” இந்த இதழில் வேலை செய்யும் அனைவரும் கொஞ்ச நாளுல மொக்கைச் சக்கரவர்த்தியாகி விடுவாங்க” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

தற்போது இந்த தன்னம்பிக்கை சரக்கோடு, அரசியல், பரபரப்பு நிகழ்வுகள் என்று கொஞ்சம் காக்டெயில் போல கலந்து “புதிய தலைமுறை”யில் தருகிறார்கள். ஆனாலும் சுய முன்னேறத்தின் மூலம் சாதிக்கப் போகும் அந்த இந்திய வல்லரசுக் கனவுதான் இவர்கள் சட்டியில் இருக்கும் ஒரே பதார்த்தம்.

புதிய தலைமுறை இதழின் செய்தியாளர்கள் யுவகிருஷ்ணா (லக்கிலுக்), அதிஷா இருவரும் நடிகர் சூர்யாவை பேட்டி கண்டு அவர் பேசியதையே பெரும் வாழ்க்கை சாதனையாக வரித்தும், விரித்தும் எழுதியிருக்கிறார்கள். சினிமா நடிகரைப் பற்றியதென்பதால்  இந்த கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதாவது சூர்யா மாபெரும் சாதனையாளராகவும், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் பரவசப்படுகிறார்கள். இதை எழுதியவர்களுக்கும் நிறைய பாராட்டுக்கள்! இப்படி ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கொடுத்தமைக்காக நாமும் பாராட்டினை தெரிவித்துக் கொள்வோம்.

சூர்யாவின் சினிமா வெற்றிக்கு காரணம் என்ன? திறமையா? பின்னணியா?

“புதிய தலைமுறை” சூர்யா நமக்கு முன்மாதிரியா? முடிந்தால் அந்தக் கட்டுரையை படித்து விடுங்கள். அதில் சரவணன் எனும் சராசரி நடுத்தர வர்க்க இளைஞன் இன்று வெற்றியடைந்த திரை நட்சத்திரமாக உயர்ந்திருப்பதை சிலாகித்து சொல்கிறார்கள். கல்லூரி முடித்த சரவணன் வேலைக்கு மிகவும் மெனக்கெடவில்லை. அவரது உறவினர்கள் கார்மெண்ட் தொழிலில் இருந்தபடியால் ஒரு வேலையை தேடிக்கொள்கிறார். இதில் தனிப்பட்ட சாதனை எங்கே உள்ளது? அதே போல பட்டப்படிப்பு முடித்ததே சாதனையென்றால் தமிழகத்தில் வருடா வருடம் சில இலட்சம் சாதனையாளர்களை நாம் வாழ்த்த வேண்டும்.

மேலும் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளமும், அதற்குரிய சமூக அங்கீகாரமும், இறுதியாக சுயசாதி உறவினர்களது ஆதரவும்தான் அய்யாவின் துணித் தொழில் இரகசியம். இதில் அவர் கடுமையாக உழைத்து எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் மேலாளர் பதவியை அடைகிறாராம். எல்லா குடும்ப நிறுவனங்களிலும் குடும்ப உறுப்பினர்களே முக்கிய பதவியை அடைகிறார்கள். சான்றாக இந்து பேப்பரில் ராம், ரவி, முரளி, மாலினி போன்ற ஐய்யங்கார் வாரிசுகளெல்லாம் அந்த பேப்பரின் உரிமையாளர்கள் என்ற தகுதியில்தானே எடிட்டோரியல் பதவிகளை வகித்தார்கள்? திருபாய் அம்பானியின் மகன்களான முகேஷ், அனில் இருவரும் பொதுத் தேர்வு போட்டித் தேர்வு எழுதியா தலைமை நிர்வாகியானார்கள்?

அவ்வளவு ஏன், பச்சமுத்துவின் முதல் மகன் எஸ்.ஆர்.எம் கல்வித் தொழிலையும், இரண்டாவது மகன் புதிய தலைமுறை பத்திரிகையையும் கவனித்துக் கொள்கிறார்கள்.  இது பச்சமுத்து என்ற பண்ணையாரின் மகன்கள் என்பதால் கிடைத்ததா, இல்லை அவர்கள் சொந்தமாக கஷ்டப்பட்டு உழைத்து கிடைத்ததா?

இடையில் வீட்டிற்கு வரும் இயக்குநர்கள் சரவணனை நடிக்க வரும்படி அழைக்கிறார்களாம். அவரோ விருப்பமில்லாமல் தட்டிக் கழிக்கிறாராம். இதை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். தமிழகத்தில் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனிடம் யாராவது ஒரு இயக்குநர் நடிக்க வரும்படி அழைத்தால் என்ன செய்வான்? காலில் விழுந்து அதை ஏற்றுக் கொள்வான். இங்கே சிவக்குமார் பையன் என்ற காரணத்திற்காக வாரிசு அடிப்படையில் மட்டுமே பலர் கூப்பிடுகின்றனர். அவர்களெல்லாம் போண்டா இயக்குநர்கள் என்று கருதிய சரவணன் இறுதியில் அறிவாளி இயக்குநர் மணிரத்தினம் சொந்தப் படம் என்று அழைத்ததும் தட்டமுடியாமல் சம்மதிக்கிறாராம். இப்படியாக “நேருக்கு நேர்” படத்தில் அறிமுகமாகிறார்.

இந்தக் காலத்தில்தான் தமிழக அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் வாரிசுகளே நுழைய முடியும் என்ற நிலை உருவாகிறது. விஜய், சிம்பு, சூர்யா, அருண் விஜயகுமார், தனுஷ், ஜெயம்ரவி, அதர்வா, விஷால், சிபிராஜ், பிரஷாந்த், கார்த்தி என்று ஏராளம்பேர் வாரிசு தகுதியில்தான் கதாநாயகனாக நடிக்கிறார்கள். அதன்படி சரவணன் சூர்யாவாக மாறியதற்கு சொந்த தனிப்பட்ட தகுதி ஏதும் காரணமில்லை. சொல்லப் போனால் சூர்யாவை விட பல தகுதி கொண்ட இளைஞர்களெல்லாம் இந்த சமூகப்பின்னணி இல்லாமல்தான் சினிமாவில் நுழைய முடியவில்லை.

ஆக சினிமாவில் நுழைவதற்கு இப்படிப்பட்ட வாரிசுகள்தான் நுழைய முடியும் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையா? பழைய மன்னராட்சிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதேபோல குமுதம், விகடன், தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளிலும்  கூட வாரிசுகளே தீர்மானிக்கிறார்கள். அரசியலை எடுத்துக் கொண்டால் ராகுல் காந்தி முதல் கனிமொழி வரை ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆக அரசியல், சினிமா, ஊடகம் எல்லாம் பணக்கார குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்றால் அந்த நாட்டில் மக்களெல்லாம் அடிமைகள் என்றே பொருள். சூர்யா சினிமாவில் நுழைந்தது என்பதை இந்த பின்னணியில் புரிந்து கொண்டால் உண்மை விளங்கும்.

அடுத்து ஆரம்பத்தில் நான்கைந்து வருடங்கள் அவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. தோல்வியாம். இதற்குப் பிறகுதான் அவர் டான்ஸ், சண்டை என்ற வித்தைகளையெல்லாம் கற்கிறாராம். ராகுல்காந்தி அரசியலுக்கு வந்து இளைஞர் காங்கிரஸ் தலைவராகி அதன் பிறகு ஆயிரத்தெட்டு வசதிகளோடு அரசியல் ‘கற்பது’ போல நம்ம சூர்யாவும் கற்றுக் கொள்கிறார். முக்கியமாக அவரது படங்கள் தோல்வியடைந்தன என்றாலும் சினிமா உலகில் இருந்து அவர் தூக்கியெறியப்படவில்லை.

பாரதிராஜா, பாக்யராஜ், இளையராஜா போன்ற கிராமத்து இளைஞர்களெல்லாம் கனவுடன் சென்னை வந்து தமிழக சினிமாவை ஆட்டுவித்ததெல்லாம் இன்று கனவில் கூட சாத்தியமில்லை. ஷங்கர், மணிரத்தினம், கவுதம் மேனன் போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவியாளாராக சேரவேண்டுமென்றால் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ இன்னபிற உயர்கல்விகளோடு ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி என்று கூடுதல் மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சில விதிவிலக்குகள் தவிர சாதாரண இளைஞர்கள் எவரும் சினிமாவில் நுழைய முடியாதபடி அங்கே பெரும் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. வசதி, சிபாரிசு, அரசியல் பின்னணி என்று இருந்தால்தான் முடியும்.

இப்படித்தான் உண்மையான திறமைகள் தமிழ் சினிமாவில் நுழைய முடியாமலும், அப்படி நுழைந்தாலும் சில ஆதிக்க கும்பல்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆக சூர்யா தனது மேலான பின்னணி காரணமாக பெரிய போட்டிகள் எதுவுமின்றி ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நீடித்திருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் பாலாவிடம் வாய்ப்பு கேட்டாராம். அவரும் சூர்யாவை வைத்து நந்தாவை எடுத்தாராம். அதன் பிறகு ஏறுமுகமாம்.  இதில் என்ன முன்மாதிரி உள்ளது? இயக்குனர் சொன்னபடி கேட்டு ஒருவர் நடித்திருக்கிறாரே அது அவரது ஆற்றலில்லையா என பலர் கேட்கலாம்.  மார்க்கெட் போன சியான் விக்ரமை முன்னணி நட்சத்திரமாக்கிய இயக்குநர் பாலவிடம் நமது இலக்கிய குருஜி நாயகனாக நடித்தால் கூட கம்பீரமாக மிளிர்வார் எனும்போது நடிப்பு பின்னணியும், அனுபவமும் உடைய சூர்யாவின் வெற்றிக்கு பாலாவை பாராட்டலாமே ஒழிய இதை சூர்யா தனிப்பட்டு உழைத்து முன்னேறியதாகச் சொல்லவதற்கு எதாவது இருக்கிறதா? சினிமா என்பது இயக்குனர் முதல் லைட்பாய் வரை பலரின் கூட்டுமுயற்சி . அதன் வெற்றியை ஒருவருக்கு மட்டுமே உரித்தாக்குவது என்பது மோசடி.  சில நல்ல இயக்குநர்கள, விறுவிறுப்பான கதைகள், வெற்றியடைந்த இசை என்று காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் சூர்யாவின் வெற்றிப் பின்னணி. இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் போது உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூட வெற்றி பெறமுடியும். ஆனால் அவனுக்கு சூர்யாவைப் போன்ற பின்னணி இருக்காது என்பதால் அது சாத்தியமில்லை.

மேலும் சினிமாவைப் பொறுத்த வரை ஒரு நடிகரது முகம் தொடர்ந்து திணிக்கப்படும்போது அந்த முகத்தை மக்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.  சான்றாக நடிகர் விஜயை எடுத்துக் கொள்வோம். சூர்யா போல இல்லாமல் அப்பா சந்திரசேகரால் திட்டமிட்டு வளர்த்து நுழைக்கப்பட்டவர் விஜய். நடிக்க வரும்போதே அவருக்கு நடனம், சண்டை, ஃபார்முலா நடிப்பு எல்லாம் தெரியும். ஆனால் ஆரம்ப காலத்தில் வரும் விஜயின் முகத்தை நீங்கள் கூட சகித்திருக்க மாட்டீர்கள். அப்போதெல்லாம் எஸ்.ஏ சந்திரசேகர் மகனுக்கு ஜோடியாக சங்கவி போன்ற நடிகைகளை கவர்ச்சி காட்டி நடிக்க வைத்தார். காதல் காட்சிகளையெல்லாம் நீலப்படங்கள் போல எடுத்தார். அதனால் அன்று ரசிகர்கள் விஜயைப் பார்க்க சென்றார்கள் என்பது கூட உண்மையில்லை. ஆனால் அசராத தந்தையின் முயற்சியால் விஜய் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க அந்த முகம் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே தற்போது உள்ள தகவல் ஊடக தொழில் நுட்பத்தில் ஒரு வீட்டுப் பூனையைக்கூட ஒருசிலபடங்களில் நடிக்க வைத்து ஸ்டாராக மாற்ற முடியும். தேவர் பிலிம்சின் ஆடு,மாடு, யானைகளெல்லாம் உழைத்து முன்னேறிய கதையாக ஒத்துக் கொண்டால் நாம் சூர்யாவையும் ஒத்துக் கொள்ளலாம்.

கல்வி கற்பது மக்களது உரிமையா? வள்ளல்களது தர்மமா?

சினிமாவிற்கு அடுத்து சூர்யா தனது வள்ளல் பாத்திரத்திற்கு வருகிறார். தந்தை சிவக்குமார் ஆரம்பித்து வைத்த கல்வி உதவியை இப்போது அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பெரியதாக நடத்தி வருகிறாராம். ஏழை மாணவர்களுக்கு உதவி, கல்லூரி படிப்பு, காம்பஸ் இன்டர்வீயு என்று வேலை வாங்கித் தருவது வரை செய்கிறாராம். இது தெரியாமல் தமிழக இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போய் தவமிருக்கிறார்களே ஏன்? கன்னியாகுமரி முதல் சென்னை வரை படிப்புக்கும், வேலைக்கும் அலையும் அத்தனை இளைஞர்களும் சூர்யா வீட்டிற்கு வந்தால் எதிர்காலத்தையே வெறும் ஐந்து நிமிடத்தில் பெற்று விடலாமே?

கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அள்ளிவிடுவது மக்களை பிச்சைக்காரர்களாக்கும் உத்தி என்று நோகாமல் எக்காளம் பேசுபவர்கள் சூர்யாவின் இந்த கல்விப் பிச்சை பற்றி என்ன சொல்வார்கள்? உடனே இது கல்வி என்பதால் டி.வியோடு ஒப்பிட முடியாது, படிப்பைக் கொடுத்தால் அந்த பையன் தனது எதிர்காலத்தை தானே அடைவான், இது அடிப்படையான சமூக மாற்றத்திற்கான உதவி என்று வாதாடுவார்கள்.

ஒரு குழந்தை படிப்பதும், படிக்காமல் போவதும் அதனுடைய தனிப்பட்ட பிரச்சினையா? இல்லை அந்த குடும்பத்தின் பிரச்சினையா? இல்லை இவர்களைப் போன்ற ஒட்டு மொத்த மக்களிடமிருந்து வரிவசூலிக்கும் அரசின் பிரச்சினையா? நாட்டு மக்களுக்கு இலவச, தரமான கல்வி கொடுக்க வேண்டிய அரசு அதை ஒழித்து விட்டு காசு இருப்பவனுக்குத்தான் கல்வி என்று சுயநிதிக் கல்லூரி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. புதிய தலைமுறையில் தன்னம்பிக்கை சரக்கை போதிக்கும் பச்சமுத்துவின் எஸ்.எம்.ஆர் கல்லூரிகளில் இலவசமாகவா கல்வி கொடுக்கிறார்கள்? இல்லை பல இலட்சங்களில் மாணவர்களுக்கு கல்வியை விற்கிறார்கள்.

நடிகர் சூர்யா வெற்றிகரமான நட்சத்திரமாக உருவெடுத்து, அகரம் அறக்கட்டளையை நடத்தும் இந்தக் காலத்தில்தான் ஏழைகளும், கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் குழந்தைகளின் கல்விக்காக நுரை விடும் அளவுக்கு வதைபட்டு ஒடுகிறது. இதில இந்த நல்லவர் கல்வி உதவி செய்கிறாராம். யாரை ஏமாற்றுகிறீர்கள்?

சமீபத்தில் கூட சென்னை எம்.சி.ராஜா அரசு விடுதியில் படிக்கும் தலித் மாணவர்கள் விடுதியின் அவல நிலை காரணமாக சாலை மறியல் செய்தார்கள். இன்னும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இதற்கு முன் பல வருடங்களாக அப்படித்தான் உள்ளது. ஒரு வேளை சூர்யாவிற்கு கல்விதான் அக்கறை என்றிருந்தால் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகமெங்கும் பெற்றோர்கள் போராடினார்களே அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் சென்னை மேட்டுக்குடி பள்ளி ஒன்று ஏழைகளை பள்ளியில் சேர்க்கச் சொல்லும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்கிறது. இந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சூர்யா உண்ணாவிரதமோ குறைந்தபட்சம் மெழுகுவர்த்தி போராட்டமோ செய்வாரா?  எஸ்.ஆர்.எம் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் 25லிருந்து 50 இலட்சமும் இல்லை அதற்கு மேலும் வசூலிக்கிறாரே பச்சமுத்து அவரை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விட்டுப் பார்க்கட்டுமே. அதை நமது புதிய தலைமுறை செய்தியாளர்கள் ஒரு ரிப்போர்ட்டாக எழுதட்டும். நாமும் சூர்யாவின் சமூக கடமையை மெச்சுவோம்.

ஆம். இன்றைக்கு நமது மாணவர்களுக்கு தரமான இலவசமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நாம் அதற்காக அரசை எதிர்த்து போராட வேண்டும். இது ஒன்றும் நமக்கு தரப்படும் பிச்சை அல்ல. நமது உரிமை. பறிக்கப்பட்ட அந்த உரிமைக்காக மக்கள் அணி திரண்டு போராடும்போது மட்டுமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற நிலையை சமூகம் அடைய முடியும். இந்த போராட்ட உணர்வு இருக்கக் கூடாது என்ற அடிமைகளின் நிலையைத்தான் இத்தகைய கல்வி வள்ளல்களின் நடவடிக்கைகள் உருவாக்குகிறது. மேலும் சமூகமாக நாம் சேர்ந்து போராடி பெற வேண்டிய உரிமைக்கான சிந்தனையை, இப்படி பணக்காரர்களின் கருணை உள்ளத்தால் ஒரு சிலருக்கு வழி ஏற்படும் என்ற மாயையை உருவாக்கி அழிக்கிறார்கள்.

நண்பர்களே, நடிகர் சூர்யாவின் சினிமா பிடிக்கும், அவரது நடிப்பு பிடிக்கும் என்று சொன்னால் பிரச்சினை அல்ல. அது வெறும் இரசனை சம்பந்தப்பட்டது. ஆனால் அவரது வெற்றியிலிருந்து நாமும் கற்றுக் கொண்டு உழைத்தால் நல்ல நிலையை அடைய முடியும் என்று சொன்னால் அது ஆபாசமானது, கண்டனத்திற்குரியது. அயன் படத்தின் டிக்கெட் சிலநூறுகள் என்றால் அது பல ஆயிரங்களில் தியேட்டர் முதலாளிக்கும், இலட்சங்களில் வினியோகஸ்தருக்கும், கோடிகளில் தயாரிப்பாளருக்கும் போகிறது. அந்த கோடிகளில் சிலவற்றை எடுத்துக் கொள்ளும் கோடீஸ்வரன்தான் சூர்யா. இவரைப் போன்ற பெரும் பணக்காரர்கள் தத்தமது குடும்பங்களின் தேவைக்கு மீறி பிரம்மாண்டமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தால்தான் பல ஏழைகள் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இதை மறைக்க ஒரு லட்சத்தை தானம் செய்து அதை பல லட்சங்களுக்கு விளம்பரம் செய்கிறார்கள். தன்னை ஒரு வள்ளல் போல முன்னிறுத்துகிறார்கள். ஊடகங்களும் இந்த நட்சத்திர சேவையை செவ்வனே செய்து வருகிறது.

உன்னால் முடியும் தம்பி சித்தாந்தத்தின் சூட்சுமே மக்களை காயடிப்பதுதான். இதில் தொடர்ந்து பயணம் செய்தால் நடுத்தர வர்க்கம் பாசிசத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு இயல்பாக பழகிக் கொள்ளும். ஆளும் வர்க்கமும் அதைத்தான் விரும்புகிறது. மக்களைச் சுரண்டி வாழும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போது “கார்ப்பரேட் சமூக பொறுப்பு” என்று சீன்போடுவது அதிகரித்திருக்கிறது.

நமது இயலாமை என்பது நமது பறிக்கப்பட்ட செல்வத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதுதான் நமது விடுதலைக்கான ஒரே வழி. ஆகவே இந்த கனவான்களையும், தரும வள்ளல்களையும் எப்போதும் விலக்கி வையுங்கள். விடுதலைக்கான சிந்தனையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நமக்கான முன்னுதாரணங்களை நாம் பகத்சிங்கிடம் தேடவேண்டுமே ஒழிய, ஒரு கட்டவுட் நட்சத்திரத்திடமிருந்து அல்ல.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: