Sunday, July 21, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?

கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?

-

கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?ழலை ஒழித்துக் கட்டிவிட்டு தான் மறுவேலை என்று இந்தியாவின் நீதித் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருப்பது போல ஆங்கில செய்தி ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் சீசனில் சிறப்பாகக் கல்லா கட்டி முடித்த பின், இப்போது செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் நடந்து கொண்டிருப்பது நியாயத் தீர்ப்பு சீசன்.

துரித வாழ்க்கை, துரித உணவு, அதிவேக பைக், அதிவேகக் காதல், அதிவேக விளையாட்டு என்று அனைத்திலும் அதிவேகத்தை விரும்பும் அவர்களின் நேயர்கள் தொய்ந்து போய் விடக்கூடாது என்பதற்காக நீதியையும் துரிதப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் விசாரணைக்கு அழைத்து வரும் போது கல்மாடியின் மேல் எரியப்பட்ட பிய்ந்த செருப்பின் மனசாட்சியைப் பற்றிய வியாக்கியானங்களால் செய்திச் சேனல்கள் நிரம்பி வழிகின்றன.

இது ஊழல் செய்திகளின் படையெடுப்பால் நொந்து போய் அவலச் சுவையில் ஆழ்ந்திருந்த ஆங்கில செய்திச் சேனல்களின் நேயர்களுக்கு இப்போது ஒரு ரிலாக்சேசன் கிடைத்திருக்கிறது.  வாய்க்கால் வரப்புத் தகராறுகளுக்குக் கூட தலைமுறை தலைமுறையாய் நீதி மன்றங்களின் படியேறி சலித்துப் போன சாமானிய மக்களுக்குக் கூட ஒருவேளை உண்மையிலேயே இந்த முறை உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் தீர வேண்டியிருக்குமோவென்ற சந்தேகம்  தோன்றியிருக்கலாம்.

அதன் உண்மைத் தன்மையை நாம் உரசிப் பார்க்கும் முன் மக்களுக்கு மேற்கண்டவாறு நம்பிக்கையூட்டு விதமாக கடந்த சில நாட்களாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணைகளிலும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணைகளிலும் நடந்துள்ள சில ‘திருப்பங்களை’ நாம் அறிந்து கொள்வது அவசியம்.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விவகாரத்தில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளை விசாரித்து வரும் சி.பி.ஐ, தற்போது அதன் மீது தனது இரண்டாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே தி.மு.கவின் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஸ்வான் டெலிகாமின் (தற்போது எடில்சாட்) சாகித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் டெலிகாமின் உயரதிகாரியான ஹரி நாயர் மற்றும் சுரேந்திரா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கருணாநிதியின் செல்வப் புதல்வி கனிமொழியின் பெயரும் கலைஞர் தொலைக்காட்சியின் உயரதிகாரியான சரத் குமார் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேல் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு விற்றதற்காக லஞ்சமாகப் பெற்றார்கள் என்பதே. லஞ்சப் பணமான 200 கோடி ரூபாயை மொரிஷியஸில் உள்ள உப்புமா கம்பெனிகள் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாற்றியுள்ளனர். சி.பி.ஐ விசாரணை துவங்கியதும் அவசரகோலத்தில் அதைத் திருப்பிக் கொடுக்கவும் முயற்சித்துள்ளனர்.

தேசிய அளவிலான ஊடகங்கள் இந்நடவடிக்கைகள் ஊழலை ஒழித்து விடும் என்பது போலச் சொல்வதைக் கடந்து, சி.பி.ஐ விசாரணைகளால் கிடுக்கிப் பிடி போடப்பட்ட தி.மு.க, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை மனதில் கொண்டு வேறு வழியின்றி காங்கிரசு கூட்டணியில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாகச் சொல்கிறார்கள். கனிமொழியின் பெயரும் சரத் குமாரின் பெயரும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருப்பது விசாரணைகளின் களத்தை கருணாநிதியின் வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்து விட்டதாக அதிரும் பின்னணி இசையின் ஊடாக அறிவிக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, காமன்வெல்த் போட்டிகளையும் அதில் நடந்த ஊழல்களையும் நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதுபற்றிய செய்திகள் வெளியான போது இந்தியாவின் மானம் மரியாதையெல்லாம் சர்வதேச அரங்கில் சிறப்பாகக் கொடி கட்டிப் பறந்தது. தற்போது சுழன்றடித்து வரும் ஊழல் புயல்களுக்கான ஒரு முன்னறிவிப்பாக அமைந்தது காமன்வெல்த் ஊழல்.

முறைகேடுகளைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகி நாற்றமடிக்கத் துவங்கிய பின்னும் அப்போது காமன்வெல்த் போட்டிகளின் பொறுப்பாளராகவும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த சுரேஷ் கல்மாடியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆ.ராசாவுக்குக் கொடுக்கப்பட்டதைப் போல் அவருக்கும் போதிய அவகாசம் அளிக்கப்பட்டது.

காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழலைப் பற்றிய பரபரப்பான செய்திகளின் வெளிச்சத்தில் அது தொடர்பான டெண்டர் விவரங்கள், பட்ஜெட் ஒதுக்கீடு, கான்ட்ராக்ட் விவரங்கள் அடங்கிய முக்கியமான கோப்புகள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் கமிட்டி அலுவலகத்திலிருந்து திடீரென்று ‘காணாமல்’ போன செய்திகள் அமுக்கப்பட்டது. இப்போது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பசியாலும் பட்டினியாலும் பரிதவித்துக் கிடக்கும் நிலையில், சுமார் முப்பதாயிரம் கோடிகளை அள்ளியிறைத்து, நான்கு லட்சம் குடிசைவாசிகளை தில்லியிலிருந்து விரட்டியடித்து, தில்லி நகரத்துக்கு புதுப் பணக்கார வேஷம் கட்டிவிடும் முயற்சியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் பத்து லட்சம் கூலித் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து, பல நாடுகளில் இருந்து வரும் வெள்ளைத் தோல் துரைமார்களை மகிழ்விக்கும் முகமாய் நாற்பதாயிரம் பெண்களை வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து விபச்சாரத்தில் தள்ளி நடத்தப்பட்ட அந்த விளையாட்டுப் போட்டி, பல பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்கென்றே நடத்தப்பட்டதாகும்.

அதில் நடந்த ஊழல் முறைகேடுகள் வெளியே கசிந்த போது அது மேட்டுக்குடி இந்தியர்களின் கவுரவப் பிரச்சினையாகிப் போனது. அதே போல் ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரம்மாண்டமான பரிமாணம் மக்களை திகைப்புக்குள்ளாக்கியது. ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அதிர்ச்சியூட்டியது. தற்போது ரிலையன்ஸ் மற்றும் எடில்சாட்டின் உயரதிகாரிகளுக்கு பிணை மறுக்கப்படும் செய்திகள் நேயர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியிருக்கின்றன. சுரேஷ் கல்மாடியின் மீது வீசப்பட்ட செருப்பைத் தாங்களே வீசியதாக உணர்வுப் பூர்வமாய் நம்பவைக்கும் விதமாய் ஊடகங்கள் அதை ஒரு திகில் சம்பவத்தைப் போல் காட்சிப்படுத்துகின்றன.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் நடந்த ஊழல்கள் ஊழலுக்கான புதிய இலக்கணத்தைப் படைத்துள்ளன. தனியார் கம்பெனிகள் கொள்ளை அடிப்படிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள். ஏதாவது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கமிஷன் அடிப்பது, கள்ளக் கணக்குக் காட்டுவது என்பதைக் கடந்து ஊழல் செய்வதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது தான் காமன்வெல்த் போட்டிகள். நெல்லுக்குப் பாய்ந்ததில் கொஞ்சம் புல்லுக்கும் என்றில்லாமல் – நெல்லே போடாத புல் வயலில் மக்களின் வரிப்பணத்தை அள்ளி வீசினார்கள்.

இப்படி தனியார் முதலாளிகளும், காண்டிராக்டர்களும் மஞ்சக் குளிப்பதற்காகவே பென்சன் தொகையிலிருந்து 171 கோடிகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து 744 கோடிகள், மற்றும் தில்லி கார்பொரேஷன் ஊழியர்களின் சம்பளப் பணத்திலிருந்து 80 சதவீதம் என்று மக்கள் பணத்திலிருந்தும் பிற நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகத் திருப்பி விடப்பட்டது. இப்படி மக்கள் பணத்தை எடுத்து மேன்மக்களின் ஓய்வு நேரக் கொண்டாட்டங்களுக்கு செலவழித்துத் தீர்த்ததில் ஊழல் இருப்பதாக முதலாளித்துவ ஊடகங்களோ இப்போது குபீர் ஊழல் எதிர்ப்புப் போராளியாக அவதாரம் எடுத்திருக்கும் அண்ணா ஹசாரேவோ நினைப்பதில்லை.

அதே போல் மக்களுக்குச் சொந்தமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கும் தாரை வார்த்ததைப் பற்றியும் இவர்கள் மூச்சு விடுவதில்லை. உண்மையில் நடந்த கொள்ளையை அப்படியே மூடி மறைத்து விட்டு அதில் நடந்த சில சில்லறையான நடைமுறைத் தவறுகளைத் தான் ஊழல் என்றும் அது பற்றி நடந்து வரும் விசாரணைகளையும் தான் ஊழல் ஒழிப்பிற்கான முகாந்திரம்  என்றும் சொல்கிறார்கள்.

இந்த விசாரணைகளையும் அதன் மீது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையையும் கைதுகளையும் கவனிக்கும் எவருக்கும் ஒரு விஷயம் துலக்கமாகப் புரியும். அதாவது, ஸ்வான் டெலிகாம் என்பதே ரிலையன்சின் டம்மி கம்பெனி என்பது தெட்டத் தெளிவாக நிரூபணமாகியும் அனில் அம்பானியின் மேல் கைவைக்கத் துணியவில்லை. அதே போல், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது என்று ஒப்புக் கொள்பவர்களும் கூட, அப்படி அநியாய விலையில் விற்கப்பட்டதைப் பறிமுதல் செய்ய வேண்டும்  என்று சொல்வதில்லை. விசாரணைகளை விறுவிறுப்பாக நடத்துவது போல் பம்மாத்து செய்யும் அரசும் கூட அவ்வாறு சொல்வதில்லை.

கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?மாறாக, ராசாவிற்குப் பின் கபில் சிபல் அத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு ரத்தன் டாடா, சுனில் மிட்டல், அனில் அம்பானி ஆகிய தனியார் தரகு முதலாளிகளை வருந்தி அழைத்து அவர்களது தொழிலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் தமது அரசு உண்டாக்கி விடாது என்கிற உத்திரவாதத்தை அளிக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்றும் அறிவிக்கிறார். இவரோடு கூடி கும்மியடித்து தான் ஊழலுக்கு எதிரான சட்டத்தை உருவாக்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளட்டும்.

அதே போல்,  மக்களின் வரிப்பணத்தை வெட்டி கவுரவத்துக்கும் வீண் ஆடம்பரத்துக்கும் வாரியிறைத்ததை ஊழல் என்று முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வதில்லை – அதன் நேயர்களான படித்த நடுத்தர வர்க்கமும் அவ்வாறு நினைக்கவில்லை. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் போது இப்படி மேனைமக்கள் கூடிக் கூத்தடிக்கவும் இந்தியாவின் இல்லாத கவுரவத்தை பறைசாற்றிக் கொள்ளவும் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளியிறைத்தது ஊழல் இல்லை – அப்படித் தேனை அள்ளி வழங்கிய கல்மாடி புறங்கையை நக்கியது மட்டும் ஊழல் என்கிறார்கள்.

ஆ.ராசாவோ, கல்மாடியோ, கனிமொழியோ தண்டிக்கப்படக் கூடாது என்பதல்ல எமது வாதம். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால், இவர்கள் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் தான். இவர்களின் செயல்பாடுகள் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தன என்கிற வரம்பிற்கு உட்பட்டது தான். உண்மையில் நடந்த குற்றம் என்பது முற்றிலும் வேறு. அதைச் செய்தவர்கள் இன்னமும் வெளியில் தான் உலாவுகிறார்கள்.

காமன்வெல்த் போட்டியைப் போன்ற ஒரு வீண் ஆடம்பரம் இன்னுமொரு முறை மக்களின் வரிப்பணத்திலிருந்து நடக்காமல் தடுப்பதை இந்த விசாரணைகள் செய்துவிடப் போவதில்லை. அடுத்து இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டத்தோடு அரசு காய் நகர்த்திக் கொண்டு வருகிறது. இன்னும் அதற்கான ஏற்பாடுகள், உள்கட்டமைப்புகள் என்னும் பெயரில் மக்களின் வரிப்பணம் வாரியிறைக்கப் படுவதை இந்த விசாரணைகளும் கைதுகளும் அண்ணா ஹசாரேக்களின் போராட்டங்களும், மெழுகுவர்த்திகளும் தடுத்துவிடப் போவதில்லை. அது இந்தியாவின் கவுரவம் என்கிறார்கள்.

அதே போல், மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்து கொள்ளை போவதையும் தடுக்கப் போவதில்லை. அவையெல்லாம் பொருளாதார நடவடிக்கைகள் எனும் பெயரில் சட்டப்பூர்வமாக்கியிருக்கிறார்கள். இதோ வேதாந்தாவின் தொழிற்சாலைக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அவர்கள் அள்ளிச் செல்லும் இயற்கை வளங்கள் என்பது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை விட பல மடங்கு அதிகமானது. அதற்காக அவர்கள் அரசுக்குத் தரப் போகும் தொகையானது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்குக் கொடுக்கப்பட்ட தொகையை விட குறைவானது.

இது இயக்குநர் ஷங்கர் போன்றவர்களின் ஒருவகையான  தயிர்வடைத்தனமான சிந்தனை. அதாவது தெருவில் எச்சில் துப்புவது குற்றம் – உலக நாடுகளின் கழிவுகளெல்லாம் இந்தியக் கடலில் துப்புவது? பிக்பாக்கெட் அடிப்பது மாபெரும் தவறு – மக்கள் பணத்திலிருந்து வரிச்சலுகையெனும் பெயரில் ஐந்து லட்சம் கோடிகளை முதலாளிகளின் பாக்கெட்டில் வைப்பது?  ஆனால் இவர்கள் பிந்தயதை நியாயப்படுத்துகிறார்கள் என்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிகையில் இழுத்து விடப்பட்டிருப்பதால்  கருணாநிதி மனவுளைச்சளுக்கு ஆளாகி விட்டார் என்றும் ஈழத்துக்கு அவர் இழைத்த துரோகங்களுக்கு அது ஆண்டவனாகப் பார்த்து அளித்த ஒரு தண்டனையென்றும் இணையத்தில் வாள் சுழற்றும் தமிழினவாதிகள் கருதுகிறார்கள். இது காரியக்கிறுக்கைப் போன்றதொரு காரியவாத அப்பாவித்தனம்.

இதோ இன்றைய செய்திகளில் பாராளுமன்றப்  பொதுக் கணக்குகளுக்கான கமிட்டியின் விசாரணை வரைவு அறிக்கையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை பிரதமர் மௌனமாக இருந்து அங்கீகரித்தார் என்றும் சிதம்பரத்துக்கு அதில் இருந்த தொடர்பையும் அம்பலப்படுத்தியதை காங்கிரசு தி.மு.க இரண்டுமே ஒன்றாக சேர்ந்து கொண்டு இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல எதிர்க்கிறார்கள். கலைஞர் டி.வியில் இருபது சதவீத பங்குகளைக் கொண்ட கனிமொழி குற்றப் பத்திரிகையில் சதிக்கு உடந்தையாக இருந்தார் எனும் அம்சத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார் – அதே நேரம் அதில் அறுபது சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் தயாளு அம்மாள் சேர்க்கப்படவில்லை.

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டெலிகாமின் உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பெனிக்குச் சொந்தக்காரரான அனில் அம்பானியை விசாரணைகளில் இருந்து விடுவித்திருக்கிறார்கள்.

கல்மாடியை காங்கிரசு கட்சியிலிருந்து விலக்கிவிட்டது என்றும் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவர் நீக்கப்படவில்லையென்றும் விசாரணைகளுக்காக சிறையில் இருப்பதால் ஒரு இடைக்கால ஏற்பாடாகவே தாம் பொறுப்பேற்றிருப்பதாகவும் மல்ஹோத்ரா தெரிவிக்கிறார்.

இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அதிலிருந்து எப்படி வெளியே வருவது எப்படி முடித்துக் கொள்வது என்பதிலும் தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை. கல்மாடி, கனிமொழி போன்ற சில விட்டுக் கொடுப்புகளை செய்து விட்டு ஒரேயடியாக ஊத்திமூடி விட முடியுமா என்றே பார்க்கிறார்கள்.

வாசகர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசு என்பதே முதலாளிகளின் நலனைக் காப்பதற்கும் அதன் கொள்ளைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்குமே இருக்கிறது. காங்கிரசு பாரதிய ஜனதா என்று இதில் கட்சி வேறு பாடெல்லாம் கிடையாது என்பதே உண்மை. மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களுக்குக் கீழே இருக்கும் ஒரு சில நபர்களை பலியாடுகளாக்கி மற்றவர்களைத் தப்புவிக்கும் முகமாகவே இந்த விசாரணைகளின் திசைவழி இருக்கிறது என்பதை எதார்த்த நிலமைகள் தெளிவாகக் காட்டுகிறது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தேசத்தின் கவுரவம் – அம்பானி உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பெறுவது தேசத்தின் கவுரவம் என்று நினைக்கும் நடுத்தர வர்க்க பார்வையின் மூலம் நாம் ஊழலின் ஊற்றுமூலத்தை புரிந்து கொள்ள முடியாது. ஊழலின் மிக அடிப்படையாகவும் ஊற்றுமூலமாகவும் இருக்கும் தனியார்மய தாராளமய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து வீழ்த்தாமல் ஊழலை  ஒழித்துக் கட்டிவிடலாம் என்று நம்புவதே அடிப்படையற்றது என்பது தான் யதார்த்தமான நிலவரமாக உள்ளது.

கனிமொழி குற்றப்பத்திரிகையில் வந்ததை வைத்து தமிழக கிசுகிசு அரசியல் ஏடுகள் எல்லாம் கருணாநிதி குடும்ப பிரச்சினை, கனிமொழியை கைவிட்டு விட்டார்கள், காங்கிரசு உறவு பாதிப்பு, கருணாநிதி டென்ஷன் என்று மாலை நேர டி.வி சீரியல்களின் கதைகளை எழுதுகிறார்கள். இத்தகைய அரட்டைகளின் மத்தியில் நாம் இந்த ஊழல்களின் அடிப்படையைப் புரிந்து கொள்ள முடியாது. அதுதான் இந்த ஊழல் செய்தவர்களின் பெரும்பலம். நமது பலவீனத்தை எப்போது விடப்போகிறோம்?

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல்

காமன்வெல்த் ஊழல்

விக்கி லீக்ஸ்

 1. காமன்வெல்த் போன்ற போட்டிகளை நடத்துவது கவுரவத்துக்காக மட்டுமல்ல.சுற்றுலா வருவாய்,குறிப்பிட்ட நகர வளர்ச்சி,கலாச்கார பகிர்வு,இளைஞர்களிடம் விளையாட்டுகள் பற்றிய விழிப்புண்ர்வு ஆகிவையை ஏற்படுத்தவும் தான்.

  எல்லா நாடுகளின் தலைவர்களும் உங்களைப்போலவே சிந்தித்து விட்டால் விளையாட்டு என்ற ஒன்றே அழிந்து விடாதா?

  • ஏம்பா குடிக்க கஞ்சியும், கட்ட கேவானமும் இல்லாமா இருகிற நிலமையில காமன்வெல்த் ஒரு கேடா? கலாச்சார பகிர்வு, இளைஞர்களிடம் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு இதல்லாம் திண்டுபுட்டு செரிக்காம இருகிறவணுங்க யோசிக்க வேண்டிய விசயம.

  • இந்தா வந்துட்டாரு பாருங்க நம்ம கவுரவச் சக்கரவர்த்தி . அமெரிக்கா காரன் இப்படித்தான் அரசு போக்குவரத்தை அதிகம் பண்ணுங்கடா அப்பிடீன்னா , அதுக்குப் பதிலா நாலு கார் கம்பெனி தொடங்குவோம் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெறுகும்பான்.

   வினவு நீங்க என்ன தான் சொன்னாலும் இங்க ஒன்னும் ஏறாது.

 2. “வாசகர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசு என்பதே முதலாளிகளின் நலனைக் காப்பதற்கும் அதன் கொள்ளைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்குமே இருக்கிறது. காங்கிரசு பாரதிய ஜனதா என்று இதில் கட்சி வேறு பாடெல்லாம் கிடையாது என்பதே உண்மை. மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களுக்குக் கீழே இருக்கும் ஒரு சில நபர்களை பலியாடுகளாக்கி மற்றவர்களைத் தப்புவிக்கும் முகமாகவே இந்த விசாரணைகளின் திசைவழி இருக்கிறது என்பதை எதார்த்த நிலமைகள் தெளிவாகக் காட்டுகிறது”

  கசப்பிலும் கசப்பான உண்மை. இதே நிலை அநேகமாக அனைத்து உலக நாடுகளில்
  காலம் காலமாக நீடித்தாலும், பிற நாடுகள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை
  உதாசீனபடுத்துவதில்லை, ஆனால் இங்கோ ஆள்வோர் சிந்தையில்
  இல்லாத ஒரே விஷயம் மக்கள் என்பவர், இது இடைவெளி அன்று, முற்றிலும்
  தனித்தனி உலகங்களாகவே படுகிறது.

 3. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே, ஆடம்பர விஷயங்களுக்கு செலவு செய்திட வேண்டும்!

  வருவாய் தரக் கூடிய லைசென்ஸ்களை விற்கும்போதும், முக்கிய பெரும் செலவுகளை செய்யும் போதும், தனியொரு அமைச்சகம் முடிவெடுப்பதைத் தவிர்த்து, கேபினெட் அமைச்சர்கள் கூடி விவாதித்து முடிவு செய்ய வேண்டும்! முக்கிய எதிர்க்கட்சிகளுடனும் தனியாகவோ அல்லது நாடாளுமன்றத்தில் விவாதித்தோ, முடிவு எட்டப்பட வேண்டும்!

 4. போங்க பாஸ் நீங்க எப்பவும் இப்டிதான்
  வேல பிஸில கெடக்கிற கேப்புல…ஏதோ நாலு நியூஸ பாத்தோமோ…ஊழல் ஒழிஞ்சிடும்-னு கனவு கண்டுகிட்டு இருந்தா நீங்க எல்லாதையும் துருவி..துருவி நோண்டிக்கிட்டே இருக்கீறீங்க…நாங்க நிம்மதிய கனவு கூட காண முடியலையே

 5. இளைஞைர்களிடம் விளையாட்டைபற்றிய விழிப்புனர்வு ஏற்படுத்ததான் இந்த போட்டிகளென்றால் ஏற்கனவே சரியான கவனிப்பில்லாத விளையாட்டுவீரர்களை தேவையான அளவு ஊக்கப்படுத்தினாலே விழிப்புனர்வு தானாய் ஏற்படும். அதைவிடுத்து ஆயிரக்கனக்காண கோடிகளை அள்ளி இரைப்பது அதும் மக்கள்பணத்தை எனன நியாயம்.

 6. விளையாட்டு என்பது பெரும்பாலோர் எதோ வகையில் பங்கு பற்றவும் பயன் பெறவும் வாய்ப்புடையதாக இருக்க வேண்டும்.
  .
  1960கள் தொட்டு விளையாட்டுத் துறை படிப்படியாகப் பெருவணிகமாகி விட்டது. சூதாட்டத்திலும் அது பெரும் பங்கு வகிக்கிறது.
  இப்போது விளையாட்டு என்பது ஏகப் பெரும்பாலோருக்குப் பொழுதுபோக்கு நிகழ்வாகவும் சிறுபாலோருக்கு வருமானமாகவும் அதிலும் சிறு பகுதியினருக்குக் கொள்ளை லாபமீட்டும் வசதியாகவும் மாறி விட்டது.
  .
  விளையட்டு என்பது இப்போது சுயநலம் மிகுந்த போட்டியையே ஊக்குவிக்கிறது.
  இத்தகைய விளையாட்டுக்களின் பயனாக விளையாட்டு வீரர்கள் அபாயமான மருந்துகளை உட்கொண்டு தம் உடல் நலத்தைக் கெடுக்கிறார்கள்.
  பார்ப்போர் உடற் பயிற்சி போதாமல் ஊளைச் சதை போட்டுத் தம் உடம்பைக் கெடுக்கிறார்கள்.

 7. பேட்டியில் கருணாநிதி நான் 3 நாட்களாக “சின்ன” வீட்டுக்கு போகவே இல்லை என்னைப்பார்த்தால் பரிதாபமாக இல்லையா என்கிறார். உடன்பிறப்பு தமிழனும் தலைவனின் கதி நினைத்து உருகுகிறான் – இந்த கொடுமையை எங்கு சென்று சொல்வது

 8. ஏழைகளிடம் ஒட்டு உரிமை என்று ஒன்று இல்லாது இருந்தால் இந்த அரசியல்வாதிகள் என்றோ அவர்களை கொன்று புதைத்து இருப்பார்கள்.

 9. பாவம் மக்கள் ஊடக பரபரப்புகளைப் பார்த்து தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடம் முன்பாக அலைக்கற்றை ஊழலை விசாரிக்க பிஏசி எனும் பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பார்லிமென்ட் கூட்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போதெல்லாம் அதான் ஏற்கனவே ஒரு கமிட்டி விசாரிக்க தொடங்கிவிட்டதே என்றனர் பல அரசியல் வாதிகள். இன்றோ ஒரு வருடம் கழித்து பிஏசி-க்குள் வேட்டி கிழிப்பு தொடங்கியிருக்கிறது. திருவாளர் பரிசுத்தம் மன்மோகன்சிங் மற்றும் அவரது அலுவலகம் குற்றவாளிகள், 1.90 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற வரைவு அறிக்கை வந்தவுடன் (நான் முரளி மனோகர் ஜோஷிக்கு ஆதரவாக இதை எழுதவில்லை) குழுவிலுள்ள அனைவரும் அறிக்கை ஒருதலைப்பட்சமானது என்கின்றனர். ஒரு வேளை இந்த விவகாரம் தொடங்க காரணமாயிருந்த சிஏஜி என்ற மத்திய தணிக்கை குழுவும், இதை ஒரு வருடமாக பேசி வருகின்ற மக்களும்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் என பிஏசி வரைவு அறிக்கை இருந்தால் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் போலும். இந்த கூத்துக்களை வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு, கார்ப்பரேட் கொள்ளைக்கெதிராக மக்கள் அணிதிரளுவதே சாலச்சிறந்ததாக இருக்கும்.

 10. நல்லா சொன்னீங்க பாஸ்.. நிறைய இண்டு இடுக்குகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது..!!

 11. “இவரோடு கூடி கும்மியடித்து தான் ஊழலுக்கு எதிரான சட்டத்தை உருவாக்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளட்டும்.”

  அண்ணா கழரய் சிபல் பற்றி சொன்னடை வேண்டுமென்ரு சொல்லாமல் விட்டுவிட்டீர்களா?உங்களிடட்டில் இவ்வளவுநேர்மை இருக்கும்போட்கு வேறு யாரை சொல்வது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க