அறிவின் தோற்றம், இருப்பு, வளர்ச்சி என்பது பழைய கருத்துக்கும், அதன் போதாமை காரணமாக பிறக்கத் துடிக்கும் புதிய கருத்துக்கும் இடையே இயங்கிக் கொண்டிருக்கும் மூளையின் போராட்டம். ஆனால் அறிவு என்பது அனைத்தையும் அறிந்து கொண்ட பேரமைதி என்று பலர் கருதுகின்றனர். இப்படித்தான் ஞானிகள், நவீன சாமியார்கள், சூப்பர் ஸ்டார்கள் கொண்டாடப் படுகின்றனர்.
அனைத்தையும் அறிய முயற்சி செய்கிறேன் என்பது வேறு, அனைத்தையும் அறிந்து கொண்டேன் என்பது வேறு. பின்னது மதவாதமாகவும், முன்னது அறிவியலாகவும் இருக்கிறது. எதையும் அறிய முடியாது என்பதன் மறுபக்கமே எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன் என்று சொல்வது. இந்த உலகை, மனித சமூகத்தை, மனித சிந்தனையை இயக்கும் விதிகளைப் புரிந்து கொண்டு சமூக நலனுக்காக நடைமுறையை நிபந்தனையாகக் கொண்டு வளரும் அறிவு ஒரு போதும் அமைதியாக இருக்காது. அது கொந்தளிப்புடன் கூடிய பேரரறிவுப் பெருங்கடல்.
என்சைக்ளோப்பீடியா போன்றதொரு தகவல் பதிவுகளை மனனம் செய்வதெல்லாம் அறிவாக முடியுமா? குமுதம், விகடன் முதலான பிரபல இதழ்களில் என்சைக்ளோப்பீடியாவின் தகவல்களே கேள்வி பதில்களாக வருகின்றன. அதை விட்டால் கடிகள், ஏட்டிக்குப் போட்டி முதலானவை இருக்கும். முத்தத்தின் வரலாறு, உலகிலேயே இனிப்பான மாம்பழம், உள்ளாடைகள் வளர்ந்த வரலாறு…..இவையெல்லாம் இந்த கேள்வி பதில் நாயகர்கள் அதிகம் அலசும் நொறுக்குத்தீனி விசயங்கள்.
மதன், சுஜாதா போன்றோர் அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சார வசதிகளையே அறிவியல் என்ற பெயரில் கேள்வி பதில்களாக வெளியிட்டனர். மறுபுறம் சமூக பயன்பாடு குறித்த விமரிசனம் இல்லாமல் தூய அறிவியலை மட்டும் மர்மம் நிறைந்த பாடு பொருளாக அறிமுகம் செய்வது சுஜாதா பாணி. சமகால அரசியலில் நீர்த்துப் போன நியாயங்களையும், கிளுகிளுப்பூட்டும் நடிகைகளின் அங்கங்களை ஒப்பிடுவதும், குமுதம் அரசு கேள்வி பதிலின் இலக்கணம்.
சம கால வாழ்வின் இடர்களை புரிந்து கொள்ளவோ, அதை மாற்றியமைக்கவோ வேண்டுமென்றால் யதார்த்தத்தை கேள்வி கேட்பதிலிருந்தே துவங்க முடியும். புத்தர், ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்றோரெல்லாம் தமது சம கால சமூக அமைப்பை அந்தந்தக்காலம் விதித்திருக்கும் வரம்புகளுக்குட்பட்டு கேள்வி கேட்டவர்கள். மட்டுமல்ல அதற்கான விடையையும் தேடியவர்கள். பின்னர் அவையே கேள்விகளோ, சந்தேகமோ ஏற்படக்கூடாத மத நிறுவனங்களாக நிலை பெற்றன.
வர்க்க சுரண்டலை கேள்வி கேட்க முடியாத அடிமைகள், மறுமையில் காத்திருக்கும் இன்பத்திற்காக, இம்மையின் துன்பத்தை கேள்விகளின்றி ஏற்றுக் கொள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டார்கள். அந்த பாத்திரத்தை செம்மையாக நிறைவேற்றிய மதங்கள், ஆண்டைகளுக்கு தேவைப்பட்டன. வர்க்கங்களை சாதிகளாக்கி, ஏற்றத்தாழ்வில் பீடுநடை போட்ட பார்ப்பன இந்து மதம் இதில் ஒரு மைல்கல். இதனால் பல நூறு ஆண்டுகளாக நம் மக்களுக்கு கேள்வி கேட்பது என்னவென்றே தெரியாத நிலை. எல்லா வகை அடிமைத்தனங்களையும் ஏற்றுக்கொண்டு உலகோடு ஒட்ட ஒழுகல் என்ற நிலையில் உழைக்கும் மக்கள் இங்கே மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்த வரலாறு இன்றும் மாறிவிடவில்லை. நவீன கார்ப்பரேட் சாமியார்களோ புரிந்து கொள்ள வேண்டிய சமூக இயக்கத்தின் ஆன்மாவை மறைத்து விட்டு, நல்லது – கெட்டது, ஒழுக்கம் – சீர்கேடு என்று அகநிலையை, கற்பனையில் மேம்படுத்தும் இருமை முரண்களாக முன்வைக்கின்றனர். ஆனால் சமூக உலைக்களத்தில் புடம் போடப்படாமல் எந்த மனிதனும் தனது வாழ்க்கைப் பிரச்சினையையும், அதன் தாக்கத்தால் நோயுற்றிருக்கும் சிந்தனையையும் மாற்றிவிட முடியாது.
ஒபாமா, சோனியா காந்தி, மன்மோகன் சிங், அத்வானி, வாஜ்பேயி, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற நவீன ஆண்டைகள் குழுமியிருக்கும் போது ஊடக அறிவாளிகள் பவ்யமாக, பணிவுடன், பிரச்சினைகளற்ற முறையில் கேள்விகள் – கேள்விகளா அவை?- கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். உண்மையான கேள்விகளை தணிக்கை செய்து கேட்பதற்குத்தான் நிருபர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். மீறி உண்மையையோ, சொல்லையோ, செருப்பையோ வீசினால் தண்டனை நிச்சயம்.
ஆம். கேள்விகளே இல்லாத, சந்தேகங்களே தோன்றாத, அறிவின் தேடலோ, சமூக அக்கறையின் வெளிப்பாடோ அற்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த உலகின் அநீதிகளை எதிர்த்துப் போராடுவோர் முதலில் மக்களை கேள்விகள் கேட்க வைப்பதற்கு வற்புறுத்த வேண்டும்.
வினவில் கேள்வி பதில் பகுதியை ஆரம்பித்திருக்கிறோம். கேளுங்கள்.
அரசியல், சமூகம், பண்பாடு, நடப்பு நிகழ்வுகள், தத்துவம், சித்தாந்தம், மதம், சாதி, காதல், என்று எது தொடர்பாகவும் அவை இருக்கலாம். எங்களால் முடிந்த அளவு, எவை முக்கியமென்று கருதுகின்ற அளவு பதில் அளிக்கிறோம். அதே நேரம் எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள் எங்களிடமில்லை. ஆனால் ஒரு கேள்வியை வெறும் கேள்வி என்ற நிலையிலிருந்து மாற்றிவிட்டு, அந்த கேள்வியின் வரலாற்றுக்காலத்தை புரிந்து கொள்ளும்போது நமக்கு தெரியமால் இருக்கும் விடையை கண்டுபிடிக்கும் வழியை அறிந்து கொள்வோம். அதாவது கேள்விக்கான முதல் அடியே கேள்வியை முற்று முழுதாக புரிந்து கொள்வதுதான்.
கேள்விகளை அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கத்தில் மட்டும் அளியுங்கள், பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டாம். கேள்விகள் மிக மிகப் பொதுவாக இல்லாமல் மிக மிகக் குறிப்பானதாக இருந்தால் கேள்விகளைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.
ஒரு விசயம் குறித்து புரியவில்லை என்றால் அதை புரிந்து கொள்வதற்கு சொந்த முறையில் களைப்பூட்டும் வரை முயன்று பார்த்து விட்டு அதன் பிறகும் தெரியவில்லை எனும் போது கேள்விகள் கேட்டால், அப்போது கேள்விகளே ஒரு புதிய வாசலைத் திறந்து விடும் சூட்சுமத்தைக் கொண்டிருக்கும். ஒரு கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கச் செலவழிக்கப்படும் நேரம் அந்த கேள்வியைத் தயாரிப்பதிலும் இருத்தல் நலம்.
வாரந்தோறும் வெள்ளியன்று கேள்வி பதில் இடம்பெறும். சில நேரம் தனிச் சிறப்பான கேள்வி பதில் கட்டுரைகள் தேவையைப் பொறுத்து எப்போது வேண்டுமானலும் வெளியிடப்படும்.
கேளுங்கள், காத்திருக்கிறோம்!
__________________________________
வினவுடன் இணையுங்கள்
வரவேற்கிறோம்..
நல்ல முயற்சி. பலரை சிந்திக்கத் தூண்டும். உண்மையை அறிய, அறிவைப் பெருக்க விழைவோர் ஜார்ஜ் தாம்சனின் “மனித சாரம்” நூலைப் படிக்கவும். கேள்வி பதில் விவாதத்திற்கு பெரிதும் உதவும்.
டோண்டூ கேள்வி – பதிலின் பாதிப்பா?
டோண்டு வின் கேள்வி-பதில் என்பது ஒரு சுயஇன்பம் ..வினவின் கேள்வி-பதில் எப்படி?
மகிழ்ச்சியின் தருணங்கள் ஏராளமாக மலரட்டும்..!!!
“கேள்வி-பதில்” பகுதிக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்.
எதிர்பார்த்து காத்திருந்தேன். வரவேற்பு.
சமூக அக்கறையின் வெளிப்பாடு உள்ள கேள்விகளை தூண்ட வினவு எடுத்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
we are waiting for that…
நல்ல ஆரம்பம் வரவேற்கிறேன், முதலில் நம் நாட்டைப் பொருத்த வரையில் பொதுவுடைமை கொள்கை வளரத்துவங்கியிருக்கிறதா?வளர்ந்து கொண்டிருக்கிறதா?அல்லது வளருமா? ஏனெனில் பொதுவுடைமைப் பற்றிய சிந்தனை பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்பதும் உண்மைதானே?
கேட்கிறேன் காத்திருங்கள் .வாழ்த்துக்கள்
வாழ்த்துகள், வரவேற்கபட வேண்டிய முயற்சி
ரொம்ப நன்ரி .,.,சீக்கிரமாக .,.,.,
start immediately .,.,.,waiting .waiting .,.
வினவு கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கினீர்கள்.மகிழ்ச்சியடைந்தேன்.ஆனால் கேள்வி கேட்டாள் பதில் கூறவே இல்லையே. நான் கேள்வி கேட்டு மூன்று நாட்கள் ஆனது பதிலை நீங்கள் இன்னும் பதிக்கவில்லையே ஏன்?
அன்புள்ள மீரா,
கேள்வி பதில் பகுதிக்கு இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். இதுவரை ஐந்து பேர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறோம். மீதிப்பேர்களின் கேள்விகளுக்கு எவ்வளவு விரைவில் பதிலளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அளிப்போம். ஒவ்வொரு கேள்வியையும் ஒரு வரி பதிலில் முடித்து விட இயலாது என்பதோடு, குறிப்பிற்காக பல நூல்களை படிக்க வேண்டியிருக்கிறது. எனவே பதிலளிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. பொறுத்தருளுங்கள், உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் பதிலளிக்கப்படும்.
பதிலுக்கு நன்றி வினவு.
சுபாஷ் சந்திர போஸ் என்பவர் யார். அவரது சமூகப்பின்னணிகள் என்ன. அவர் ஏன் பாசிஸ்டுகளுடன் கூட்டு வைத்தார். அவரை தேவர் திருமகன்கள் கொண்டாடக் காரணம் என்ன?
வினவு. இது எனது கேள்வி. கேள்வி பதிலில் அனுப்பினால் சர்வர் ஏற்றுக்கொள்ள வில்லை. அதனால் இங்கு என் கேள்வியை பதிவு செய்துள்ளேன். தவறுக்கு மன்னிக்கவும். ஆனால் இந்த கேள்வி மிக அவசியமாகப் படுகிறது. ஏனெனில் வலது இடது நடுப்புற கம்யுனிச்டுகள் அவரைக் கொண்டாடுகிறார்கள். அவர் ஜப்பான், ஜெர்மானி, இத்தாலியுடன் கூட்டு வைத்ததை நன்றாக அறிந்திருந்தும்.மேலும் தெய்வத் திருமகன் இவருடன் எப்படி கூட்டு சேர்ந்தார். அது ஏன் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சரியான பதில் உங்களிடமிருந்துதான் கிடைக்கும் என்ற எண்ணத்துடன். தோழமையுடன் நான்.
அட, நீங்க கடவுள் இல்லையா? உங்கள கடவுள்னு சொன்னது யாரு???
நான் எண்ணமுதல்வாதத்தான் அல்லன் என்று பொருள்
ஓ…..இப்படியும் சொல்லாமா? “நான்பொருள்முதல்வாதி”
அதுதான் அதற்கு அர்த்தம் தோழரே
வாழ்த்துகள்.தோழர்
நன்றி தோழர். உங்களது ப்லொக்போஸ்ட் பார்த்தேன்.நிறைய இடங்களில்நாம் ஒத்துப் போகிறோம். வலை உலகிற்குநான் மிக புதியவன்.நிறைய விவாதிப்போம். ஒன்றிணைவோம். மீண்டும் நன்றிகள்
வினவு காதலை பட்ரி எழுதியுல்லதை படித்துல்லென் இருந்தாலும் தர்போதைய காதல் எதைநொக்கி செல்கிரது இது அரொகியமான சமுகத்தை அமைக்குமா?
நான் வினவுக்கு புதியவன். வால்த்துக்கல்.
தமிழில் தமிழி இந்து.காம் என்ற தளத்தில் “பெரியாரின் மறுபக்கம்” என்ற தொடர் வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதற்கு பெரியாரின் தொண்டர்களின் பதிலை இந்த வலையில் எதிர் பார்க்கிறேன். பல தளஙகளிலும் தேடிய பிறகும் சரியான விடை கிடைக்க வில்லை.
சுட்டி தொடர்பு இருந்தால் என் முகவரிக்கு அனுப்பவும். இல்லாவிட்டால் இங்கே பதியவும்.
இரண்டு ஆண்டுகளாயும் இன்னும் விடை கிடைத்த பாடில்லை.
இல்லாவிட்டால் வே.மதிமாறனின் “பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்” போல
ம்.வெங்கடேசனின் “பெரியார் பக்தர்களின் கள்ள மவுனம்” வெளிவரும்.