Sunday, July 21, 2024
முகப்புவாழ்க்கைபெண்வரதட்சிணையால் நின்றுபோன திருமணம்! அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட்!!

வரதட்சிணையால் நின்றுபோன திருமணம்! அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட்!!

-

பத்திரிகையில் வந்த செய்தி!

திருமண தினத்தன்று மணமகன் வரதட்சிணையை இருமடங்காக உயர்த்தியதால் மணமகள் திருமணத்தை நிறுத்தினார் என்று செய்தியைப் பார்த்தேன்.

மணமகள்(சுனிதா) எம்பிஏ படித்திருக்கிறார். மணமகன்(சதீஷ் ஜனார்தனன்) ஐடி துறையில் வேலை செய்கிறார். நிச்சியிக்கப்பட்ட திருமணத்தில் மணமகளுக்கு 100 சவரன்களும்., மணமகனுக்கு 25 சவரன்களும் போடுவதாக ஏற்பாடு. கூட இன்னொரு 100 சவரன்கள் கொடுத்தால்தான் கல்யாணத்தன்று மண்டபத்துக்கே வருவேன் என்று மணமகன் வீட்டார் சொன்னதை அடுத்து இந்த திருமணம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செய்திகள் ஒரு சிறு செய்திக்குறிப்பைப் போல் மட்டுமே பெட்டிக்குள் அடங்கிவிடுகிறது.  சமூகமும் இந்த நாற்றமெடுத்த குப்பைகளை தனக்குள் மூடிமறைத்து,  ”இந்த காலத்துலே யாருங்க வரதட்சிணை எல்லாம் வாங்குறாங்க, பெத்தவங்கதான் பொண்ணுங்களுக்கு கொடுக்கறாங்க,அதெல்லாம் ஊர்ல கிராமத்துலதாங்க” என்று சொல்லிக்கொண்டு  எப்போதும்போல இயங்கத் தொடங்கி விடுகிறது.  . இந்த செய்தியை  பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

100 பவுன் நகைக்காக நின்று போன சுனிதாவின் திருமணம்!  பின்னணித் தகவல்கள்!!

அன்று மாலையே சுனிதாவை(பெயர் மாற்றப்பட்டுள்ளது)  அவரது வீட்டில் சந்தித்தேன்.  விவரங்கள் சொல்லிக் கேட்டதுமே, அவரே வெளியில் வந்தார். மிகவும் எளிமையாக இருந்தார்.  சென்ற வருடம்தான் எம்பிஏ முடித்திருக்கிறார்.  அவராகவே பேச ஆரம்பித்தார். தமிழ் மேட்ரிமோனி வாயிலாக இருகுடும்பங்களும் பரிச்சயம். ஜாதகத்தை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.  இருவருக்குமிடையே  பொதுவான உறவினர்கள் இருக்கவே, இருவரும்  தூரத்துச் சொந்தமென்று தெரிய வந்திருக்கிறது.  மணமகனுக்கு தந்தை இல்லை. தாயும், மணமகனது மாமாவும்தான்  சம்பிரதாயமாக கை நனைத்து, திருமணத்தை பேசி நிச்சயித்திருக்கிறார்கள். அப்போது மணமகனின்  தாய் சந்திரிகா தனது மகளுக்கு திருமணத்தின்போது 50 சவரன்கள் நகை போட்டதாகவும் சுனிதாவுக்கும் அதே அளவு நகை போட்டால் கவுரவமாக இருக்குமென்றும் சூசகமாக பெண் வீட்டாரிடம் சொல்லியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, கோயம்பேடு அருகில் உள்ள பெரிய ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நிச்சயத்துக்கு பின்னர்,

50 சவரன்களை 100 சவரன்களாக போடுமாறும் அது அல்லாது மணமகனுக்கு 25 சவரன்கள் போடவேண்டுமென்றும் மணமகன் வீட்டார் தொலைபேசி மூலமாக  வலியுறுத்தியிருக்கின்றனர். திருமணத்தை நிச்சயித்து விட்டதால் பெண் வீட்டாரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதோடு, ஐந்து கிலோ வெள்ளிச் சாமன்களும் வேண்டுமென்றும் கூறியிருக்கின்றனர்.

சதீஷ்  டிசிஎஸ் நிறுவனத்தில் ஐ.டித்துறையில் வேலை செய்வதாகவும் மாதம் 45 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும், கையில் 42 ஆயிரம் வருவதாகவும் கூறியிருக்கின்றனர்.  தற்போது மும்பையில் வேலை செய்வதாகவும் திருமணத்துக்கு பின்னர் மும்பையில்தான் குடித்தனம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். மணமகனின் தாய் சந்திரிகா. கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர். கோயம்பேடு மார்க்கெட்டில் அவரைத் தெரியாதவர்கள் யாருமில்லை. தெரிந்தவர்களாக, தூரத்து உறவினர்களாக இருப்பதாலும், உறவினர் ஒருவர் மணமகன் வீட்டாரைப் பற்றி நல்லவிதமாகக் கூறியதாலும்  பெண் வீட்டார் மணமகனைப் பற்றி பெரிதாக எதுவும் கவலை கொள்ளவில்லை. நிச்சயத்துக்குப் பின்னர்தான்  வேலையைப் பற்றி மிகவும் வற்புறுத்திக் கேட்ட பின்னரே சதீஷ் டிசிஎஸ் பி.பி.ஓவில் வேலை செய்வதாக சொல்லியுள்ளனர்.

மணமகனின் மாமா ராகவன் என்பவர்தான் மணமகள் வீட்டாருடன் அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். ஒரு சில சம்பிரதாயங்களில் இரு குடும்பத்தினருக்கும்  கருத்து வேறுபாடுகள் வந்தபோது இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளாவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடுவோம் என்றும் சொல்லியிருக்கின்றார். பொதுவாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் இதுபோல அபசகுனமாக பேசமாட்டார்கள் என்றும் மணமகனது மாமா, திருமணத்தை நிறுத்துவதிலேயே குறியாக இருந்ததாகவும் நினைவு கூர்கிறார் சுனிதா. திருமணம் இந்த மாதம் 17-ஆம் தேதி காலை ராமாவரத்தில் நடைபெறுவதாக இருந்தது.முதல்நாள் மாலை ரிசப்சன்.

திருமணத்துக்கு  இரண்டு நாட்கள் இருக்கும்போது மணமகனது மாமா நேராக வீட்டிற்கு வந்து, ஒப்புக்கொண்டதற்கும் மேலாக 100 சவரன் நகை போட்டால்தான் திருமணம் நடக்குமென்று கூறியிருக்கிறார். பெண் வீட்டார், எப்படி அதற்குள் 100 சவரன் போடமுடியுமென்றும் இரண்டு நாட்களுக்குள் கொடுக்க முடியாதென்றும் கூறியிருக்கின்றனர். கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காதென்று கறாராக கூறிவிட்டுச் சென்றிருக்கிறார், ராகவன். சுனிதாவின் பெற்றோர் சதீசின் தாயை தொடர்பு கொண்டபோது ராகவன் போனிலும் மிரட்டியிருக்கிறார். கூட 100 சவரன்கள் இல்லாவிட்டால் மணமகன் மண்டபத்துக்கு வரமாட்டாரென்றும் சொல்லியிருக்கிறார்கள். பத்திரிக்கை அச்சடித்து ஊரெல்லாம் கொடுத்த பின்னால் இது போல சொல்வது சரியல்ல என்று பெண் வீட்டாரும் கேட்டிருக்கிறார்கள்.

அதோடு, ஞாயிற்றுக்கிழமை சுனிதா பியூட்டி பார்லர் சென்று கைகளில் மருதாணியிட்டு ஒப்பனை செய்து கொண்டு மண்டபத்தில் காத்திருந்தார். மணமகன் வீட்டாரோ அவர்களது உறவினர்களோ ஒருவரும் வரவில்லை. இரவு எட்டரை மணிவரை பார்த்த பின்னர், பெண் வீட்டார் மணமகன் வீட்டாரை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார்கள். ரீச் ஆகவில்லை.

உடனே சில உறவினர்கள் பெரம்பூரில் உள்ள மணமகன், அவரது அக்கா, மாமா வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள். வீடு பூட்டப்பட்டிருக்கிறது. யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. சனிக்கிழமை மாலையே அவர்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டதாக அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் பக்கத்து சில உறவினர்களிடம் கேட்டபோது, சுனிதாவின் பெற்றோர் சதீசின் வீட்டை சுனிதாவின் பெயரில் எழுதித்தர கேட்டதாகவும் அப்போதுதான் திருமணம் நடக்குமென்று சொன்னதாகவும், அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் சதீசின் தாய் தெரிவித்ததாக சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான், சதீஷ் வீட்டினர் திட்டமிட்டு இந்த திருமணத்தை நிறுத்தியிருப்பது சுனிதாவின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரியவந்துள்ளது. ”எங்கள் வீட்டிற்கு நான் ஒரே பெண். இருக்கும் சொத்தெல்லாம் எனக்குத்தானென்று முன்பே பேச்சு. இதில், எதற்காக சதீசின் வீட்டை எழுதிக் கேட்கப் போகிறார்கள்? இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா? ”என்கிறார் சுனிதா.

அதன்பின் சுதாரித்துக் கொண்ட சுனிதா வீட்டினர் ஆதம்பாக்கத்தில் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.  வரதட்சிணைக் கொடுமையால் திருமணம் நின்று போனதாக  போலீசில் கேஸ் கொடுத்திருக்கிறார்கள்.

சதீசுக்கு சொந்த ஊர் ஆற்காடு. அங்கும், மும்பையிலும் போலிசார் தற்போது தேடி வருகிறார்கள். சதீசின் மாமா ராகவன் எக்மோரில் ஒரு ஜூஸ் கடை வைத்திருக்கிறார். அவர்தான் காலையில் கடையைத் திறந்து கொடுத்துவிட்டு மாலையில் பூட்டிவிட்டு பணத்தை வாங்கிச் செல்வாராம். கடையைப் பார்த்துக் கொள்பவர் 70 வயது முதியவர் ஒருவர்.அங்கும் கடந்த மூன்று நாட்களாக சுனிதாவின் உறவினர்கள் சென்று பார்த்து வருகிறார்கள். அவர் வருவதேயில்லையாம். அதோடு, அந்த முதியவருக்கும் எந்த தகவலும் தெரியவில்லையாம்.

அந்த மாமாவுக்கு மூன்று மகள்களென்றும் அவரது மகள்களில் ஒருவரை திருமணம் செய்து கொடுக்க அவருக்கு விருப்பமிருந்ததாக தெரிகிறது. அவரால் இவ்வளவு வரதட்சிணை கொடுக்க முடியாததால், சதீசின் தாய் சந்திரிக்காவுக்கு அதில் விருப்பமில்லை. அதனாலேயே சுனிதாவை நிச்சயம் செய்திருக்கிறார்கள். ஆனாலும், ராகவன் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த விரும்பியிருக்கலாமென்றும் அதற்காக இந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாமென்றும் சுனிதாவின் உறவினர்கள் கருதுகிறார்கள்.

சதீஷ் எப்படியாவது தண்டிக்கப்படவேண்டுமென்று கோபத்தோடு இருக்கிறார்கள் சுனிதாவின் வீட்டினர். நான் வீட்டிற்குச் சென்றபோது சுனிதாவோடு ஒரு சில நண்பர்கள் இருந்தனர். அவர்களும் மிகுந்த கோபத்தோடு இருந்தனர்.  சுனிதாவின் பெற்றோர் மணமகன் வீட்டாரைப் பற்றி நன்றாக விசாரித்திருக்க வேண்டுமென்றும் இப்படியா அசால்டாக இருப்பதென்பதும்தான் அவர்களுடைய கோபம். அதோடு, சதீஷ் போன்ற பொறுக்கிகளை சும்மா விடக்கூடாதென்றும்  வரதட்சிணை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவ வேண்டுமென்றும் உறுதியாகக் கூறினர்.

“அவனைப்பாருங்க, எவ்ளோ டீசண்டா இருக்கான், அவனைப் பாத்தா இந்த மாதிரின்னு சொல்ல முடியுமா” என்றார்கள், சதீசின் படத்தைக் காட்டியபடி.  ஆமாம், பார்க்க டீசண்டாக இருந்தாலும் சதீஷ் செய்தது பச்சை அயோக்கியத்தனம்தான். பணத்தாசைக்கும் நுகர்வு கலாசாரத்துக்கும் டீசண்டெல்லாம் இல்லையே!

முதலிலேயே 100 சவரன் என்று கேட்கும்போதே அதாவது வரதட்சிணை கொடுத்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை வரும்போதே நீங்கள் எதுவும் ஆட்சேபிக்க வில்லையா என்று சுனிதாவிடம் கேட்டதற்கு  ”வரதட்சிணையை வேண்டாமென்று இளையோராகிய நாங்கள் சொன்னாலும் பெற்றோர் கேட்க மாட்டார்கள். உறவினர்களுக்காகவாவது தங்க நகைகள், சீர்கள்  போட்டாக வேண்டியது கட்டாயம். அதுவும் எங்கள் சாதியில் (முதலியார்) குறைந்தது ஜம்பத்துக்கும் அதிகமாக போடுவார்கள். சாப்பாட்டிற்காக அதிகம் செலவு செய்வார்கள்.” என்றார்.

வரதட்சிணையை பல்வேறு வழிகளில் நியாயப்படுத்தும் சமூகம்!

வரதட்சிணையால் நின்றுபோன திருமணம்! அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட்!!
100 பவுன் நகைக்காக திருமணத்தை நிறுத்திய சதீஷ் - கோட்டு சூட்டு டீசெண்ட் உடையில்!

அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. சாதிப் பெருமைக்காகவும், தங்கள் பணபலத்தை பறை சாற்றவும் பணம் படைத்தவர்கள் திருமணத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.  முதலியார்,நாடார், தேவர், கம்மா நாயுடு போன்ற சாதிகளில் 100 சவரன் என்பது மிகவும் சாதாரணமாம், அதோடு, பெண்களுக்கும் நகை மற்றும் சீர் செனத்தியோடு புகுந்த வீட்டுக்குச் சென்றால்தான் மதிப்பு என்ற எண்ணமும் இருக்கிறது. இயல்பாகவே, பொருள் இருந்தால்தான் தனக்கு மதிப்பு என்ற சமூக அடையாளம் குடும்பங்களிலும் பிரதிபலிக்கிறது.

என்னதான்  புகுந்த வீட்டில் சமையல் முதற் கொண்டு பாத்ரூம் வரை சகல வேலைகளையும் தானே செய்வதாக இருந்தாலும் தனது மதிப்பு என்பது தன்னுடன் கொண்டு வந்திருக்கும் அல்லது தான் அணிந்திருக்கும் தங்க நகைகளில் இருப்பதாக எண்ணிக் கொள்வது வேதனையானது. வீட்டுவேலைகள் செய்வதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவீட்டுக்கு மருமகளாகி விட்டால் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாக வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கிறது. ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு வந்தாலும் மணப்பெண் அடுத்த நாளே அந்த வீட்டின் சமையற்காரியாகவும், வேலைக்காரியாகவும் சமயங்களில் கால் மிதியடியாகவும் மாறிவிடவேண்டும். மணமகனிடம் அது போன்ற கடமைகளை நமது சமூகம் எதிர்பார்ப்பதில்லை. அவன் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதையே இழிவாக கருதுகிறது.

தங்கள் பெண்ணுக்கு நிலபுலன்களை, நகைகளை அளிப்பது  அவர்களுக்கு தாங்கள் அளிக்கும் பாதுகாப்பாகக் கருதுகிறார்கள் பெற்றோர்கள். பெண்கள் இரண்டாந்தரமாக நடத்தப்படும் நமது சமூகத்தில் இதனை புரிந்து கொள்ள முடிகிறது. கணவன் இறந்துவிட்டால் அல்லது அவசரத்துக்கு உதவும் என்ற எண்ணத்தில் வரதட்சிணை பெண்ணுக்கு ஒரு முதலீடாக பயன்படலாம். எனினும், திருமணம் என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியானதானதொன்றாக இல்லாமல் பெரும் சுமையாக மாறிப் போய்விடுவதுதான் நடைமுறையில் காணப்படும் சோகம். திருமணம் என்பது இரு குடும்பங்களுக்கிடையிலான ஒரு பிசினஸ் ஒப்பந்தம் என்பதாகத்தான் இருக்கிறது.

முன்பெல்லாம் பெண் படித்திருந்தால், ”பொண்ணு படிச்சிருக்கு” என்று  சொல்லி வரதட்சிணை குறைவாக போடுவதைப் பார்த்திருக்கலாம். அதாவது படிப்பே ஒரு இன்வெஸ்ட்மெண்ட் மாதிரிதான்,  பெண் வேலைக்குப் போகிறாள்,அந்த சம்பளம் உனக்குத்தானே வரப்போகிறது  அப்படி வேலைக்குப் போகவில்லையென்றால், கல்யாணத்துக்குப் பிறகு உன் மனைவியை நீ வேலைக்கு அனுப்பிக்கொள் என்பது அதன் உள்ளர்த்தம். மனைவி வேலைக்கு போவதில் தப்பில்லை. ஆனால், சம்பளத்தை வாங்கி கணவன் கையில் கொடுப்பதற்காக வேலைக்கு போவது என்பது மறைமுக வரதட்சிணைதானே!

பெண் பிறந்து விட்டாலே  செலவுதான் என்ற எண்ணமே நமது சமூகத்தில் மேலோங்கி இருக்கிறது. பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறி விட்டார்கள் என்றாலும் இன்றும் அது பெருமளவு மாறிவிடவில்லை. மாறாக, அதிகரித்திருக்கிறது. ”எந்த குழந்தைன்னாலும் பரவாயில்ல” என்று கூறும் நகரத்துப் பெற்றோர்களோ இரண்டாவது குழந்தையும் பெண்ணாகி விட்டால் முகத்தை தொங்கப் போட்டுக் கொள்வதையோ அல்லது மனதுக்குள் மறுகுவதையோ காணமுடிவது இதனால்தான். கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டாம்.

கொஞ்சம் உற்றுப் பார்த்தால், நகர்ப்புறமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒரு பெண் தனது குடும்பத்தினருக்கு, தந்தைக்கு, அண்ணனுக்கு, பின்னர் புகுந்த வீட்டினருக்கு சொந்தமான பொருளாகத்தான் எப்போதும் இருக்கிறாள். அவளைப் பற்றிய அனைத்தையும் மேலே குறிப்பிட்டவர்களே தீர்மானிக்கின்றனர். என்ன உடுத்துவது, என்ன படிப்பது என்பது முதல் யாரைத் திருமணம் செய்து கொள்வது என்பது வரை தந்தையோ, அண்ணனோ, உற்றார் உறவினர்களோ, சோசியரோ, கணவனோதான் தீர்மானிக்கிறார்கள்.

நவீன சமூகத்தில் நவீனமாக விரவி நிற்கும் வரதட்சணையும், பெண்ணடிமைத்தனமும் !

முதலாளித்துவம், இதிலெல்லாம் நவீனத்தைப் புகுத்துவதில்லை. மாறாக, பிற்போக்குத்தனங்களைத்தான் கலாசாரமென்றும் பாரம்பரியமென்றும் மக்கள் மனதில் நுட்பமாக பதியவைத்து தனது லாபவெறிக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறது.

பெண் குழந்தைக்காக என்று ஒவ்வொரு நாளும் மார்க்கெட்டில் வெளிவரும் சேமிப்புத் திட்டங்களையும், அதற்கான விளம்பரங்களையும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, பெண் குழந்தை பிறந்து விட்டால் அதன் திருமணத்துக்க்காக சேமிக்கத்தான் எத்தனை திட்டங்கள்!!

அதோடு, ஒவ்வொரு வருடமும் திட்டமிட்டு நகையையும் சேர்த்து வைப்பது நடுத்தர வர்க்கத்தினரின் வழக்கம். அழகுக்காக  அணிந்து கொள்வது என்பதோடு ஒரு பாதுகாப்பு என்ற வகையிலும் இந்திய குடும்பங்களில் நகைக்கு இடமுண்டு. என்னதான் இந்தியா புதியதாக மாறிவிட்டது என்று சொன்னாலும் வரதட்சிணை விஷயத்தில் மாறத் தயாரில்லை. முதலாளிகள் மாற்றவும் தயாரில்லை.

பழங்காலத்தில் பானைக்குள் தங்கம் சேர்த்து வைத்தனர். தற்போது  பெற்றோர்கள் தங்கள் பெண்  குழந்தைகளுக்கு  ஐசிஐசிஐ போன்ற வங்கிகளிடமிருந்து  தங்கக் கட்டிகளை நேரடியாக வாங்கி சேமிக்கிறார்கள். அல்லது, நகைக் கடைகளில் ஒரு வருடத்திற்கு இவ்வளவு என்று மாதா மாதம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேமிக்கிறார்கள். நகைக்கடைகளுக்கு இது வட்டியில்லா கடன். அதாவது, பெண் என்றால் திருமணம், அந்த திருமணத்துக்கு தேவை வரதட்சிணை. இதுதான் அடிப்படை மனோபாவம். இந்த மனோபாவத்தை சந்தையும் உபயோகப்படுத்திக் கொண்டு மக்களை உறிஞ்சியெடுக்கிறது.

இந்த செய்தியை, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில், வாசித்ததும் உடனிருந்த நண்பரிடம் அதிர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன். அவரோ ரொம்ப கூலாக  “ஐம்பதாயிரம் சம்பளத்துக்கு 100 சவரன் எதுக்கு?  அது கொஞ்சம் அதிகமில்லையா?” என்றார். வரதட்சிணை என்பது அருவருப்பை ஏற்படுத்துவதற்கு பதில் ஏற்றுக் கொண்டு வாழவேண்டிய ஒன்றாக மாறிவிட்டதையே இது குறிக்கிறது. தகுதியுடைய மாப்பிள்ளைகளுக்கு இவ்வளவு ரேட் என்பது சொல்லப்படாத விதி. அந்த ரேட்டானது மணமகனது சமூக பொருளாதார அந்தஸ்து, வருங்காலத்தில் அவர் எட்டக்கூடிய உயரங்கள்,  மணமகனது பெற்றோரின் கவுரவம், மணமகளின் வேலை மற்றும் சம்பளம்,மணமக்களது நிறம், மணமக்களது சொத்து, நிலம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். பெண்ணின் கல்வித்தகுதி என்னவாக இருந்தாலும், ஆணுக்குப் பெண் சமம் என்று பேசினாலும் அதெல்லாம் வேலைக்கு ஆவதில்லை. வரதட்சிணைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

என்னதான் வரதட்சிணை தவறு என்று பேசினாலும் ”எதுக்கு வம்பு, என்னைக்காவது உதவும்” என்று மக்களும்  வாங்கி  வைத்து விடுகிறார்கள். முற்போக்காக பேசினாலும், வாழ்க்கை என்று வரும்போது முற்போக்கெல்லாம் உதவாது, ஊரோடு ஒத்துவாழ வேண்டுமென்று பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள்.

அதோடு பெற்றோர்களும், தங்களைப் போல அல்லது தங்களை விட உயர்ந்த அந்தஸ்துள்ள குடும்பத்தில் தங்கள் பெண்ணை மண முடித்துக்கொடுத்தால் மகிழ்ச்சியாக இருப்பாள் என்றும் நினைக்கின்றனர். டாக்டர் மற்றும் உயர் அதிகாரிகள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளுக்கு வேறு ரேட். மணமகன் வீட்டாரும் தங்கள் உயர் அந்தஸ்தைக் காட்டுவதற்காக பெண் வீட்டாரிடம் பேரம் பேசுகின்றனர். பொருளாதார மந்தத்தைப் பொறுத்து ஐடி மாப்பிள்ளைகளின் மவுசு கூடுகிறது அல்லது குறைகிறது என்பதும் ஒரு வாதமாக இருக்கிறது.

இதில் கிடைத்த வரை லாபம் என்று  மணமகன் வீட்டாரும் நினைக்கிறார்கள். அதனாலேயே நாக்கூசாமல் வரதட்சிணை கேட்கிறார்கள். கேட்டதைக் கொடுக்கா விட்டால் திருமணத்தை நிறுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள். ஏனெனில். திருமணம் நிச்சயித்த பின்னர் நின்று விட்டால் அது பெண்ணுக்குத்தான் இழுக்கு என்பதாக ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. திருமணம் நின்று விட்ட பெண்ணைக் குறித்து பல கட்டுக்கதைகள் பரப்பப்படும். அதனால், முள்ளு மேல சேலை பட்டால் என்ற லாஜிக்படி பெண்ணின் பெற்றோர் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்க நேரிடுகிறது.

வரதட்சிணை என்பது வர்க்கத்தைப் பொறுத்து பெருமளவு மாறுபடுகிறது. நடுத்தர வர்க்கத்துக்கு கார் என்றால் அடித்தட்டு மக்களுக்கு பைக். 50 சவரன்கள் என்பது 5 சவரன்களாக இருக்கிறது. பொதுவாக இன்று சவரன் விற்கும் விலையில் 100 சவரன் என்பது  உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்தட்டு மக்களுக்கே சாத்தியம். வரதட்சிணை அதோடு நின்று விடுவதில்லை. தங்க நகையில் ஆரம்பித்து  வெள்ளிப் பாத்திரங்கள், கார்,வீடு, இன்ன மண்டபத்தில்தான் திருமணம், இன்ன மெனு என்பது வரை சகலத்திலும் வியாபித்திருக்கிறது. ஐ.டித்துறை மணமகனென்றால்  கிராக்கி அதிகந்தான். பொதுவாக நடுத்தர வர்க்கத்துக்கு 20 சவரன் நகை சாதாரணம். அதோடு கடன் வாங்கி 35 முதல் 40 வரை சமாளிக்கிறார்கள். அதோடு, வீட்டுக்குத் தேவையான சமையல் பாத்திரங்கள், எல்சிடி டீவி, வாசிங் மெஷின், பிரிட்ஜ், டைனிங் டேபிள், சோபா செட் என்று பட்டியல் மிகவும் நீளம்.

எப்படியாவது கேட்டதைக் கொடுத்து திருமணத்தை நடத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.  இந்த வரதட்சிணையானது திருமணத்தோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஆடி, தீபாவளி, பொங்கல், தலைப்பிரசவம், அதற்கடுத்த பிரசவங்கள், வீடு கட்டினால், புது வீடு புகுந்தால் என்று நகையாக, பணமாக, பட்டுப் புடவைகளாக,வேட்டிகளாக தொட்டு தொடரும் இந்த பாரம்பரியம். கேட்டதைக் கொடுக்கும் காமதேனு பசுவாக பெண் வீட்டாரை நினைத்துக் கொள்கிறார்கள்.

அந்த பேராசை பெரும்பாலான சமயங்களில் பெண்ணின் மரணத்தில் வந்து முடிகிறது. அந்த மரணங்களும் சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல்  தற்கொலை என்ற ஒற்றைச் சொல்லில் இழுத்து மூடப்பட்டுவிடும்.

வரதட்சிணை வாங்குவதும் குற்றம் பெறுவதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும் ஏன் ஒழிக்க முடியவில்லை?

வரதட்சிணை புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்த விதமாகத்தான் இருக்கிறது. படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவில், 1993 இல்  வரதட்சிணைப்புகார்கள் 380ஆக இருந்தது  2002இல் 2774 ஆக அதிகரித்தது. 2008இல் 4000 வரதட்சிணைப் புகார்களாக உயர்ந்திருக்கிறது.

திருமணம் என்பது ஒருவரது குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தக் கிடைக்கும் வாய்ப்பாக  முதலாளித்துவ சமூகத்தில் மாறிவிட்டது. வரதட்சிணையைப் பேசி முடிப்பதற்காகக் கூட சில தனியார் நிறுவனங்கள் இயங்குகின்றன.

இப்போதெல்லாம் நடுத்தரவர்க்கத்தினர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஐடி மோகமோ, ஃபேஷனோ,  கவுரவமோ அல்லது சுற்றியிருப்பவர்களின் அழுத்தமோ, பிள்ளைகள் இன்ஜினியருக்குத்தான் படித்தாக வேண்டும். தனியார் கல்லூரிகள் என்றால், பி.ஈ படித்து முடித்து  வெளியே வர குறைந்தது பத்து லட்சம் செலவாகியிருக்கும். அப்படி பி ஈ படித்து வெளியே வந்தால், பி ஈ படித்தவர்களைத்தான் மணம் செய்யவேண்டும்.டாக்டருக்குப் படித்தவர்கள் டாக்டர்களைத்தான் மணம் செய்யவேண்டும். செலவழித்ததை விரைவில் பெற ஆண்களுக்கு இருக்கும் ஒரு காரிய சாத்தியமான வழி வரதட்சிணை.   கல்வி முதற்கொண்டு பாஸ்போர்ட், லைசென்ஸ் வரை அனைத்தையும் லஞ்சம் கொடுத்து அல்லது கடன் வாங்கி செலவழித்து பெறுபவனுக்கு வரதட்சிணை என்பது தவறு என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. அதனாலேயே, பெண்ணோடு வரும் பொருளை தனது அந்தஸ்தோடு தொடர்புடையதாக, அதற்கு தான் முழுத் தகுதியுடையவனாக எண்ணிக்கொள்கிறான்.

பெண்ணை எடுத்துக்கொண்டால், ஆரம்பத்திலிருந்தே அவள் ஒரு பெரும் சுமை, எங்கோ தள்ளிவிட வேண்டிய ஒரு பொருள், கல்யாணம் செய்து இன்னொரு வீட்டுக்குச் சென்று வாழவேண்டியவள், நமது கவுரவத்தை கட்டிக் காப்பாற்ற வேண்டிய வஸ்து என்ற நோக்கத்தோடுதான் வளர்க்கப் படுகிறாள். இதனால் என்னதான் படித்தாலும் பிற்போக்குத்தனங்களை கலாச்சாரமென்று நம்பி பின்பற்றுகின்றனர். இந்த பின்னணியில் பார்க்கும்போது  வரதட்சிணை கொடுப்பது தவறு என்றெல்லாம் பெண்களுக்கு, சரி ஆண்களுக்கும் சரி, தோன்றுவதில்லை. வரதட்சிணை கேட்கலாம், ஆனால் அளவுக்கதிகமாகக் கேட்டு டார்ச்சர் கொடுக்கக் கூடாது என்பதுதான் அதிகபட்சமான புரிதலாக இருக்கிறது. எந்தப் பிரச்சினை என்றாலும் பேசித் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும், திருமணத்துக்கு வராமல் ஒளிந்து கொள்வது என்ன நியாயம் – இதுதான் சுனிதாவின் கேள்வியாகவும் இருக்கிறது.

திருமணம் என்பது வாழ்க்கையா இல்லை வியாபாரமா?

திருமணம் என்பது எனக்காக இல்லாமல் நான் போட்டு வரும் நகைக்காக அல்லது நான் கொண்டு வரும் பொருளுக்காக ஏன் நடக்க வேண்டும் என்று கேள்வி வராதது ஏன்?

நாங்கள் சொன்னாலும் பெற்றோர் கேட்கமாட்டார்களென்ற ஒரே சப்பைக்கட்டை எத்தனை காலம்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

இதையெல்லாம் விடுத்து ஆண்கள் தைரியமாக வரதட்சிணையை வாங்க மறுக்கவேண்டும். திருமண வாழ்க்கை என்பது பிசினஸ் அல்ல, ஆணும் பெண்ணும் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது என்று உணர வேண்டும். சுயமரியாதையுடன் பெண் வீட்டாரிடமிருந்து திருமணத்துக்காகவோ அல்லது திருமண வாழ்க்கைக்காகவோ பரிசுகளை, பணத்தை,நகைகளை,சொத்தை பிடுங்குவதை நிறுத்த வேண்டும். அப்படி ஒரு பெண் கொண்டு வருவது ரத்தக்கறை படிந்த சீர் என்பதை  நினைவில் நிறுத்த வேண்டும்.

பெண்களும் அப்படி வரதட்சிணை கொடுத்து மணம் புரிந்து கொள்வதை எதிர்த்து நிற்க வேண்டும். அப்படி ஒருவன் தன்னை மணம் புரிந்து கொள்ள  பணம் கேட்கிறான் எனில் அவனை தூக்கியெறிய தயங்கக் கூடாது. அதோடு, புகுந்த வீட்டுக்கு பரிசுப் பொருட்களோடு சென்றால்தான் மதிப்பு என்ற  மாயையிலிருந்தும் வெளிவர வேண்டும்.

வரதட்சிணை ஏதோ ஒரு காலகட்டத்தில்  இந்திய சமூகத்தில் வழக்கமாக இருந்திருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் இன்றும் அதையே பிடித்துத் தொங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. வரதட்சிணை வாங்குபவர்கள் அத்தனை பேரும் வரதட்சிணையால் உயிரை,வாழ்க்கையை இழந்தவர்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்களே!

ஆண் உயர்ந்தவன், தட்சிணையை ஏற்றுக்கொண்டு பெண்ணை வாழ வைக்க வேண்டியன் என்று ஆணாதிக்கத்தை உயர்த்தி பிடிக்கும் அதே வேளை பெண்ணடிமைத்தனத்துக்கும் துணை போகிறது இந்த சமூக அமைப்பு. இதனாலேயே பெண்கள் பிறந்தாலே வேண்டாத சுமையாக பார்க்க வேண்டிய அவலநிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகிறார்கள். இதனை நாம் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் எதிர்த்து போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கு சுனிதா ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்தாலும் இந்த சமூக அவலத்தின் முழுப் பரிமாணத்தை இன்னும் உணர வேண்டியவராக இருக்கிறார். அப்போதுதான் அவருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி அல்லது சந்தையில் விலைபேசி விற்கும் பொருளாக அவர் இருப்பது குறித்த பிரக்ஞையை உணர முடியும்.

_________________________________________________________

– வினவு செய்தியாளர்
___________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. தட்சணை.

  மேலும் மேலும் பணம் வேண்டும் என்பவர்கள் கோவிலில் கொண்டு போய் கொட்டுகிறார்கள்.

  தங்களுக்கான கௌரவம் என்பதை யோசிக்கத் தொடங்கும் மக்கள் வரதட்சனை என்ற புதைகுழியில் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.

  நீங்கள் சொல்வது உண்மை தான். இது போன்ற செய்திகள் பெட்டிக்குள் அடக்கிவிடும் ஊடக தர்மத்திற்கு இந்த கட்டுரை படிப்பவர்களுக்கு பல புரிதல்களை உருவாக்கும்.

  பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தில் போய் கேட்டுப் பாருங்க. எளிமையான முறையில் இயல்பான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் மாப்பிளை தேடுவார்களா? என்று. நிச்சயம் செய்யமாட்டார்கள்.

  மறுபடியும் மீண்டும் இது போன்ற வேறொரு டீசண்ட் பார்ட்டிகளிட்ம் மாட்டிக் கொள்ளத்தான் விரும்புவார்கள்.

 2. 70% of people give respect to persons who are rich by wealth in my experience. same thing goes here also if female owns more money or earns more she is given respect by all around including husband(70%). so all females, please give more dowry and make ur daughters to earn more to lead respectful life after marriage or u should be more lucky to find out the remaining 30%

  • டாக்டரு..ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீகளே..
   நீங்க சொன்ன அதே லாஜிக்தான் “கவர்ச்சியான ஆடைகள் உடுத்தி உடலில் பாதி வெளியே தெரியும்படி வெளியில் வரும் பெண்களைத்தான் 90 சதவீத ஆண்கள் ரசிக்கிறாங்க…ஆகவே பெண்ணைப் பெத்தவங்களே..உங்க பெண்களை இந்தமாதிரி பழக்குங்க”…இது எப்படி?

   ஊர்ல எல்லாம் பணத்துக்கு மதிப்பு கொடுக்கான்..அதான் நானும் பணத்தைக் கொண்டு வரச்ச் சொல்றேன்…கிறது கேவலமான பிழைப்புவாதம் இல்லையா? இதை மனித நாகரிகம் என்பது மண்புழு நாகரிகம் என்பதா? எதிர்ப்பு, சொரணை என்பதெல்லாம் தேவை இல்லையா? இந்தக் கேவலப் பண்பாட்டை எதிர்க்காமல் நீக்குப்போக்கா நடந்துக்கோ ன்னு சொல்ல வெக்கம்மில்லையா?

   • i feel shame of our people behaving still like this. with that frustation only i have posted. to tell frakly- pachiya chonna- this is equal to male prostitution. but reality is somthing different. people are talking for long time but how many are still following it. Is that not shame?.panam ippa ella idathilum remba vilayaduthu. this people ar doning 5 digit scam. some other people doing in C and T level. Same like this happened long back to a female, but what happened was big news only flasehed and after that no one was ready to marry her.Her father talked to a interveiw dejected,after that one good person came to give her live(!).In many families different daughter inlaws are treated differently according to their famlity richness- my friend reality is something different- which is not always we can accept.

 3. பெண் கொண்டு வருவது ரத்தக்கறை படிந்த சீர் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.//

  இது தான் உண்மையும் கூட..

  அப்ப தட்சணை கொடுத்த பணத்துக்கு தினமும் இவள் உண்வு சமைத்து பறிமாறும்போதும், தாம்பத்யம் கொள்ளவும் பணம் கேட்கலாமா?..

  அப்ப்டி கேட்டா திருந்துவாய்ங்களோ?..

  அதே நேரம் ஒட்டு மொத்தமா ஆண்களையும் குறை சொல்ல முடியாது..

  வலிய பெருமைக்காக கொடுக்கும் பெற்றோர் உண்டு..

  வரதட்சணை கேஸ்கள் சில பொய்யான கேஸ்களும் உண்டு..

  இதே சதீஷின் அம்மா தன் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமைன்னா ஒரு பொய் கேஸ் போட்டிருப்பார்..?..

  இன்னொரு விஷயம் திருமணம் என்ற ஆடம்பரம்.. எல்லார் நேரத்தையும் செலவழித்து ..

  இதெல்லாம் தேவையான்னு யோசிக்கணும்..

  வாழ்நாள் முழுதும் சம்பாதித்ததை செலவழித்து கடனாளியாவோர் உண்டு..

  திருமணங்கள் கோவிலோ , சர்சோ, ரெஜிஸ்டர் அலுவலகமோ எளிமையா நடத்தப்படணும்..

 4. ப்ரச்சனை என்னவென்றால் இன்னமும் கூட நம்ம மக்கள் தனக்கு கட்டுபடியாகாத அளவு கேட்கும்போது மட்டுமே வரதட்சிணை, லஞ்சம் போன்ற விஷயங்களில் புகார் அளிக்க முன்வருகின்றனர். அப்படி இல்லாமலே கேட்டதுமே இந்த சம்பந்தம் வேண்டாம் என்று முடிவு செய்வதோடு, முறைப்படி புகார் செய்யவும் ஆரம்பித்தால் இந்த போக்கு நிச்சயம் மறையும். முதலில் கேட்ட 50 பவுனோடு விட்டிருந்தால் இந்நேரம் இந்த சுனிதா இப்போது திருமதி. சதீஷாக நின்றுகொண்டிருப்பார் – இது பற்றிய எந்த குற்றவுணர்வும் இல்லாமல். இது போன்ற விஷயங்களில் பெண், பெண் வீட்டாரை குற்றம் சொல்லுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தாலும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் இந்த அசிங்கத்தை துடைக்க நாம் அதிகமும் பெண்களிடமே பேச வேண்டியிருக்கிறது.

  உங்க நண்பர் சொல்வது போல் 50000 சம்பளத்துக்கு மார்க்கெட் நிலவரம் என்னவோ அந்தளவு வரதட்சிணை கேட்டால் கொடுக்க முடியாது என்று பெரும்பாலான பெண் வீட்டார் சொல்வதில்லை – நாம் கொள்கை பார்த்தால் அந்த வரனை வேறு யாரேனும் தட்டிக் கொண்டு போய்விடுவார்கள் என்று இதற்கு விளக்கம். இந்த பயத்தை முதலில் போக்க வேண்டும். முன்பு போல் கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பதில்லை என்பதால் இந்த ப்ரச்சனை குறைந்து விட்டதாக அர்த்தம் இல்லை. கட்டுரையாளர் சொல்வது போல் சம்பாதிக்கும் திறனுடைய பெண்களுக்கான வரதட்சனை குறைந்து விட்டதால் பெண் வீட்டாரால் சமாளிக்க முடிகிறது. அதனால் முன்னளவு இந்தப் பிரச்சனை பேசப்படுவதும் கூட குறைந்து விட்டது. இது குறித்த தெளிவான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

 5. என்ன கொடுமையா இது?
  கை கால் நல்லா இருக்கும் இந்த பேமானிக்கு வரதட்சனை கேட்குதா?இவனையெல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி,முடமாக்கி சிறையில் தள்ளனும்,பொறம்போக்கு நாதாரி,நல்ல பெண் வீட்டார் சரியாக கேடுகெட்ட நாதாரிகளையே தேடி மணமகனாக்கிக்கொள்வதும்,நல்ல ஆண் வீட்டார் சரியாக கேடுகெட்ட குடி கெட்ட முடிச்சவிக்கி,சோரம் போனவர்களையும் தேடி மணமகளாக்கிக்கொள்வதும் என்ன ஒரு விந்தை வினவு?,இந்த நாய் அணிந்திருக்கும் சூட்டு கூட நிச்சயதார்த்தத்துக்கு பெண்வீட்டில் ###து தின்றதாகவே இருக்கும்,டாபர்.அந்த பெண்ணுக்கு நல்ல ஒழுங்கான மணமகன் கிடைப்பார்,ஐடி துறை என்றாலே எத்தனையோ பிரிவுகள் உள்ளது,பி பி ஓ,கே பி ஓ,சாஃப்ட்வேர்,கொலைகாரன் ஜான் டேவிட் போன்றவர்கள் கூட பிபி ஓவில் டீம் லீடராக இருந்திருக்கின்ற அவலமும் உண்டு,தண்டலுக்கு விடும் அம்மா இந்த ஒன்றே போதாதா?இந்த நாராசமான குடும்பத்தை புறக்கணிக்க?
  இந்த நாட்டிலே நல்லவனுக்கு தான் பெண்கிடைப்பது குதிரைக்கொம்பு

 6. இதர்க்கு ஒரெ திர்வு .,.,இச்லமிய சட்டதை இதில் மட்டும் கொன்டு வரலாம்.,.தப்பில்லை.,அரபுநாட்டில் பென் கலுக்கு.,மகர் கொடுத்து திருமனம் நடக்கது இங்கு .,.,

   • thamil muslim sattam endru sonnal othu kolvarkala .,.,adanaalthaan arabu nattu sattam endru sonnen.,.,islamiya sattam inkum ondruthaan.,.,alaskavilum ondruthaan ,yaarum matha mudiyadhu.,.,Mr pasist anbare

  • mahar enbathu pennai vialai pesuvathu… aval kanniyaaga irunthal athiga mahar, vithavaiyaga irunthal kuraintha mahar, adimaiyaga irunthal aval viduthalaiye avalukku mahar… ithellam oru pozhappu! poi pillaigala padikka vai

   • Mr pilavu .,my son and daugther .,software enggr.u know .,.,nee poi pillaikalai padikka vaikkavum,.,., aduthu mudalil poi mahar endraal enna endru .,nalla aalim idathil kettu therinthu kollavum .,.,ok maaaaaaaaaaaaaaa

 7. வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் ஒரு சமுக அழிவுக்கனா ஆரம்பம் என ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் எண்ணிப்பார்த்தால் இந்த மாதிரியான இளம் பெண்களின் திருமணம் தடைபடாது…இந்தமாதிரியான கயவர்களின் கைகளிலிருந்து பெண்கள் விடுதலை அடைவார்கள்…..

  பெண்ணே!
  அரிசியாய் இராதே!
  அரைத்து நசுக்கிவிடுவார்கள்…

  உளுந்தாய் இரு!
  அப்பொழுதுதான்..
  அரைத்தாலும் பொங்கி எழலாம்…

  இப்படிக்கு…
  அம்மு…

  • அப்பவும் சமையல் உதாரணம்தானா!ஏன் ஆசிட் கூட தான் பொங்குது?ஆசிட்டா இருந்தா என்ன தப்பாம்?

 8. Please en-quire the other side and publish. Whatever these (bride) people are saying seems like cinema story. Nowadays everybody knows about dowry act and they will think before doing something like that. I think there was some misunderstandings btw these two parties and the actual fact is not there.

 9. I am yet to read ur reportage fully. Nevertheless, on such matters, I usually take pro-boy stand for which u may kindly wait. The conventional wisdom is to take pro-girl stand only.

  Right now, it is my opinion that according to journalistic conduct, the real names and photos shd not be published in the report. Newspapers follow that strictly.

  What abt u ?

  • //Right now, it is my opinion that according to journalistic conduct, the real names and photos shd not be published in the report. Newspapers follow that strictly.//

   ஜோ அமலன்,
   உங்கள் வார்த்தையா அவைகள்? ஆச்சர்யமூட்டுகின்றன.
   ஏன், அந்த மூஞ்சியை வினவாளர்கள் பார்க்க நேரிடின் என்னவாகும்?

   சட்டப்படி ‘பப்ளிஷ்’ செய்யக்கூடாதா?
   தர்மப்படி ‘பப்ளிஷ்’ செய்யக்கூடாதா?

   ஜோ ‘தர்மப்படி’ என்று கூறுகிற ஆளில்லை என்பது உலகுக்கே தெரியும்!

 10. பக்கம் பக்கமாக எழுதினாலும் யாருக்கும் உரைக்கப் போவதில்லை. ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன்.

  வரதட்சணை வாங்குவது விபச்சாரத்திற்கு அழைப்பது; வரதட்சணை கொடுப்பது விபச்சாரத்திற்கு கூட்டிக் கொடுப்பது; எல்லோரும் விபச்சாரம் செய்யலாம்; ஆனால் எய்ட்ஸ் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள?

  இதற்கு மேலே சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  • சரிதான்.காசு வாங்கிக்கொண்டு கட்டிலுக்கு வருபவள் விபச்சாரி.அவளாவது ஓரிரு நாட்கள் ஒரு ஆணின் வாழ்க்கையில் குறுக்கிடுபவள். ஆனால் காலமெல்லாம் தனக்கு வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணிடம் ”வரதட்சணை”என்ற பெயரில் காசு வாங்கிக்கொண்டு மாப்பிள்ளை என்ற பெயரில் வரும் அயோக்கியனுக்கு என்ன பெயர் வைக்கலாம்.

 11. மதங்களை கடந்து எல்லா அயோக்கியர்களும் இந்த ஒன்றில் மட்டும் ஒற்றறுமையாக இருக்கிறார்களே எப்படி?

  அதிலும் வரதட்சணை வாங்குவதில் மிகவும் குறியாக இருப்பது மாமியாரும், நாத்தனாரும்தான். பெண்குலத்துக்கு பெண்களே எதிரி!

 12. அது எப்படியா பொண்ணு வீட்ல இந்த மாதிரி பசங்களா தேடி பார்த்து புடிக்கறாங்க? 🙂

  கடிசியில அந்த பையனுக்கு கல்யாணம் ஆகா போறது இல்ல. வாழ்க வளமுடன் 🙂

 13. அன்பர்களே!ஒருவர் அமெரிக்காவில், ஐடியில் கை நிறைய சம்பாதிக்கிறார் என்பதற்காக அவரை உயர்வாக எடை போட்டு விடாதீர்கள். அத்தகையோரில் பெரும்பாலானோர் பிற்போக்குத்தனமாக இருப்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன். வரதட்சணை வாங்குபவர்கள் கையாலாகதவர்கள். பிறர் பணத்தில் வாழ நினைப்பவனிடம் நல்ல பண்பையோ நல்லொழுக்கத்தையோ எதிர்பார்க்க முடியாது. இக்கால பெற்றோர்களும் அமெரிக்க, ஐடி மாப்பிள்ளை என்றால் ஆளாய் பறக்கிறார்கள். பல சமயங்களில் இவர்களே அதிக வரதட்சணை கொடுக்கவும் முன்வருகிறார்கள். வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் கேவலமான விசயம். அதை தவிர்த்துவிடுங்கள்.

 14. // நிச்சியிக்கப்பட்ட திருமணத்தில் மணமகளுக்கு 100 சவரன்களும்., மணமகனுக்கு 25 சவரன்களும் போடுவதாக ஏற்பாடு.//

  மிகவும் எளிமையாக இருந்தார். சென்ற வருடம்தான் எம்பிஏ முடித்திருக்கிறார்

  //50 சவரன்களை 100 சவரன்களாக போடுமாறும் அது அல்லாது மணமகனுக்கு 25 சவரன்கள் போடவேண்டுமென்றும் மணமகன் வீட்டார் தொலைபேசி மூலமாக வலியுறுத்தியிருக்கின்றனர். திருமணத்தை நிச்சயித்து விட்டதால் பெண் வீட்டாரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.//

  பெண் வீட்டாரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

  “இந்த செய்தியை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது””.!!!!!!!!

  வரதட்சிணை கொடுப்பது என ” எம் பீ எ படித்த எளிமையான ” பெண் எடுத்த முடிவு வினவுக்கு ஒரு தவறாக தெரியவில்லை !!!

  அந்த பெண்ணுக்கு அதிக வரதட்சிணை மட்டுமே தவறு.!!

  பெண்ணின் பெயரால் நடத்தப்படும் ஒரு வியாபாரம் தான் வரதட்சிணை எதிப்பு !!

 15. அப்படி தான் பணம் வேணும்னா ரோடு…….ல பிச்சை எடுக்க வேண்டியதுதானே ……………இதெல்லாம் ஒரு பொழப்பு

 16. panakaaranga samachaaram namakku edhukku pa? andha pulla edhukku mudhalil 50 savaran kodukka othukkuchu? appo theriyadha andha bemaniya pathi? 50 100 aanavudan pongi elunthuchaam. super appu. ponna pathavanunga aadra aatam irukke! kalyanam panna thaguthi enna theriyuma? 35000 mel sambalam, jaathi, paarka hero mathiri irukkanum, kevalama tamil pesanum, thanga nagai pottukanum, naalu naadhari friends kooda irukkanum. adhaavadhu, deal seri illai, adhanal cancel panni vittaargal, avlodhaan.

 17. பனக்காரன்க சமாச்சாரம் நமக்கு எத்க்கு பா? அந்த பொன்னு எத்கு முதலில் 50 சவரன் கொடுக்க ஒத்துகுச்கு? அப்பொ தெரியாதா அந்த பேமானிய பத்தி? 50 100 ஆனவுடன் பொங்கி எழுந்த்ததாம். ஒரு TCஸ் போனா, இன்னொரு CTஸ் , வேர என்ன பன்னுவாஙக? என்னயா கேசு இது? யொவ் ரீடரு, படத்தை போட்டதுல என்ன குட் ஜாப் இருக்கு?

 18. @அம்மு. பொன்னுங்க முதல்ல திருந்தனும். அரிசியாவது பருப்பவது.

  //50 சவரன்களை 100 சவரன்களாக போடுமாறும் அது அல்லாது மணமகனுக்கு 25 சவரன்கள் போடவேண்டுமென்றும் மணமகன் வீட்டார் தொலைபேசி மூலமாக வலியுறுத்தியிருக்கின்றனர். திருமணத்தை நிச்சயித்து விட்டதால் பெண் வீட்டாரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.//

  இவனுங்கலை முதலில் செருப்பால அடிக்கனும். பெத்தவனுங்கலுக்கு புத்தி இல்லயா ?

 19. ஏழைகளிடம் கொடுக்க ஒன்றுமில்லை , எனவே இது பணம் படைத்தவர்களின் பிரச்சனை . வரதட்சனை என்ற சொல்லே தவறானது, ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சொத்தை கொடுக்காமல் மறுத்த தந்தை சகோதரர்களின் கதையாகவே தோன்றுகிறது. பெண் சொத்துரிமையை சரியான முறையில் திருமணத்திற்கு முன்பே அமல் படுத்தினால் இதற்கு தீர்வு கிடைக்கலாம். தந்தை , சகோதரன், கணவனாக வர இருந்த மூன்று ஆண் மிருகங்கள் தான் அந்த பெண்ணின் வாழ்க்கைக்கு பதில் சொல்ல வேண்டும்.

 20. Dr. priya,
  நீங்கள் மறைமுகமாக வரதட்சணையை ஏற்று கொள்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. “பணக்காரர்கள் மட்டுமே பெண் பிள்ளை பெற்று கொள்வது நல்லது” என்று நீங்கள் வலியுறுத்துவது போன்று தோன்றுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க