privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!

சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!

-

சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் அதற்கு எதிரான அத்தனை சதிவேலைகளையும், நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மும்முரமாகச் செய்து வரும் பாசிச ஜெயா அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை, தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே, மாணவர்கள், பெற்றோரை அணிதிரட்டி போர்க்குணமிக்க மறியலை இன்று(1.8.2011)  நடத்தியது.

காலை 10.30 மணிக்கு தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே சிக்னலில் மறியல் நடத்துவதென முடிவு செய்து, அப்பகுதியைச் சுற்றிலும் நேற்றே வீச்சான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதால் நூற்றுக்கணக்கான பெற்றோர் திரண்டு வந்தனர். சரியாக 10.30 மணிக்கு பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த தோழர்களும், மாணவர்களும் பேருந்திலிருந்து இறங்கி, முழக்கமிட்டபடியே  சாலையை மறித்து நின்றனர். இதே சமயத்தில் சந்தோஷ் நகர் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பெற்றோர், போலீசின் தடையை உடைத்து கொண்டு, சாலைக்கு வந்து, மாணவர்களுடன் கரம் கோர்த்தனர்.

பு.மா.இ.மு சென்னைக்கிளை செயற்குழுத் தோழர்கள் கார்த்திக்கேயன், நெடுஞ்செழியன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சரவணன் ஆகியோர் தலைமையில் தொடங்கிய இம்மறியலால் நாற்புறமும் போக்குவரத்து ஸ்தம்பித்ததைக் கண்ட போலீஸ் உடனடியாக செய்வதறியாது திகைத்தது. 10 நிமிடத்திற்குள் போக்குவரத்து மேலும் தேங்குவதுடன் போராட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்ததால், உடனடியாக முன்னணியாளர்களைக் குறிவைத்துக், களத்தில் இறங்கியது போலீஸ். சிவப்பு சட்டை அணிந்தவர்களை எல்லாம் தரதரவென இழுத்து வந்து வேனில் ஏற்ற முயல, தோழர்கள் வர மறுத்தபோது லத்தியால் அடித்தும், வேனில் படியில் நின்று முழக்கமிட்டவர்களை தாக்கியும் கட்டுப்படுத்த முயன்று தோற்றனர். தோழர்கள் ஏற்றப்பட்ட வேனை, மற்றவர்கள் முற்றுகையிட்டு மறித்ததும், அங்கிருந்த பள்ளி மாணவர்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளியும், சங்கிலிபோல் நிற்பவர்களை உடைக்கவும் முயன்றது போலீசு.

ஆனால் பள்ளி மாணவர்களோ, “முதல்ல எங்களுக்கு புத்தகம் கொடு” , “எங்கள எதுக்கு இழுக்கற, ரோட்டுக்கு வரவச்ச கவர்மெண்ட போய் கேளு” என வாக்குவாதம் செய்து வாயடைத்தனர். ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டு, ஒவ்வொரு தோழரையும் மிருகத்தனமாக இழுத்துச் சென்றும், சிலரை 5,6 பேர் சேர்ந்து இழுத்துச் சென்றும் வேனில் ஏற்றினர். நாலாபுறமும் வாகன நெரிசல், பொதுமக்கள் மத்தியில் மேலும் போலீசும், வேனும் கொண்டுவரப்பட்டு பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் மூன்றாகப் பிரித்து வைத்ததோடு, தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரிமாண்டு செய்யவும் முயன்று வருகிறது, பாசிச ஜெயா அரசு. மீண்டும் ஒரு முறை புழல் சிறையைப் பிரச்சார மேடையாக்க தயாராகிவிட்டனர் பு.மா.இ.மு தோழர்கள்.

உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக அரசு தீயாய் வேலை செய்து தடைபெற துடிக்கிறது. ஆனால் தமிழக அரசின் திமிரை உடைக்கத் தயாராகி வருகின்றனர், பு.மா.இ.மு தலைமையிலான மாணவர்கள்.  அறியப்பட்ட பெரிய ஒட்டுக்கட்சிகளெல்லாம் வாய்மூடி மௌனமாக இருக்கும் நிலையில் தோழர்கள் அன்றாடம் போராட்டத்தை வீச்சாக வளர்த்து வருகின்றனர். புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரளும் இந்த மாணவப்படை பாசிச ஜெயாவின் திமிருக்கு ஆப்பு வைப்பது உறுதி.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்