privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!

-

லைக்கற்றை ஊழல் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழல் மட்டுல்ல; இது தனியார்மயதாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் கார்ப்பரேட் பகற்கொள்ளை. தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் இத்தகைய பகற்கொள்ளைகள் சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மையமான பிரச்சினை; இலஞ்சஊழல் மோசடிகளைக் காட்டிலும் முதன்மையானதும், அவற்றில் பலவற்றுக்கு அடிப்படையானதும் இதுதான் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

எனினும், 2ஜி அலைக்கற்றைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிகபட்ச வருவாய் இழப்பு என்று கணக்குத் தணிக்கையாளர் குழு அளித்த மதிப்பீடான ரூ.1.76 இலட்சம் கோடி என்ற தொகை முழுவதையும் ஊடகங்கள் ‘ஊழல்’ என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கியதன் தொடர்ச்சியாக, இம்மாபெரும் கார்ப்பரேட் பகற்கொள்ளையின் பின்புலமாக அமைந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்னும் மையமான பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஊழல்தான் நாட்டின் மையமான பிரச்சினை என்று சித்தரிப்பதற்கும், இன்னும் ஒரு படி மேலே போய் தனியார்மயதாரளமயக் கொள்கைகள் மூலம் நாடு அடையக்கூடிய முன்னேற்றத்தைத் தடுப்பதே ஊழல்தான் என்று சித்தரிப்பதற்கும் இது பயன்பட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் :  ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !‘அலைக்கற்றை ஊழல்’ விவகாரத்திலிருந்து ‘உத்தமர்’ மன்மோகன் சிங்கும் டாடா, அம்பானி, மித்தல், ரூயா, ராடியா, பவார், சிதம்பரம், மாறன், ஷோரி, பிரமோத் மகாஜன் உள்ளிட்டு இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புள்ள பலரும் விலக்கப்பட்டு, அலைக்கற்றை ஊழலின் இலக்கு திட்டமிட்டே குறுக்கப்பட்டது. தி.மு.க.ராஜாகனிமொழி என்று இந்த இலக்கை குறுக்கியதன் மூலம் கார்ப்பரேட் ஊடகங்கள், சுப்பிரமணிய சாமிசோஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகள் என ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நோக்கத்தில் ஆதாயம் பெற்றனர். இந்த மாபெரும் கொள்ளையின் முழுப்பரிமாணமும் வெளிவருவதை யாரும் விரும்பவில்லை என்பதனாலும், இதில் தி.மு.க.வை மட்டும் தனிமைப்படுத்திக் காவு கொடுப்பதில் இவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதனாலும் இந்த நாடகம் இதுவரை இடையூறின்றித் தொடர்ந்துள்ளது.

இப்போது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில் (Framing of Charges) தன் மீது பல்வேறு கிரிமினல் குற்றப்பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துத் தனது வாதங்களை ராஜா முன்வைத்திருக்கிறார். குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு அவர் முன்வைத்துள்ள இந்த வாதங்கள் எந்த அளவிற்கு அவருக்குப் பயன்படும் என்பது குற்றவியல் வழக்கு விசாரணை சார்ந்த விசயம். ஆனால், இப்பிரச்சினையில் இதுகாறும் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர்வதற்கும் இந்தப் பகற்கொள்ளையின் அரசியல் பின்புலத்தை அம்பலமாக்குவதற்கும் அவரது வாதங்கள் நமக்குப் பயன்படுகின்றன.

“1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்குத் தணிக்கையாளரின் மதிப்பீடு அபத்தமானது, அடிப்படையற்றது. சி.பி.ஐ.யின் கணக்கின்படியே இழப்பு என்பது 30,984.55 கோடி தான்சு என்கிறார் ராசா. உண்மைதான். ஆனால், 1.76 இலட்சம் கோடி ஊழல் என்று கூக்குரலிட்ட சு.சாமி, ஜெயா, பா.ஜ.க. முதல் ஊடகங்கள் வரை யாரும், “இழப்புத் தொகையை சி.பி.ஐ. குறைத்துக் காட்டியுள்ளது ஏன்?சு என்ற கேள்வியை எழுப்பவில்லை.

“இழப்பு இத்தனை கோடி ரூபாய் என்று மதிப்பிடுவதற்கு சி.பி.ஐ. யார்? அது அரசாங்கத்தின் வேலை. இழப்பு எவ்வளவு என்பதை அரசு சொல்லட்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.

அரசு என்ன சொல்கிறது? முதலில் வருபவர்க்கு முதலில் என்பதுதான் அலைக்கற்றை உரிமங்கள் வழங்குவதற்குப் பின்பற்றப்பட்ட கொள்கை என்றும், அந்தக் கொள்கையை மாற்றி டெண்டர் விட வேண்டும் என்று அரசு முடிவு செய்யாதபோது, டெண்டர் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஊகித்து, அதன் அடிப்படையில் இத்தனை கோடி ரூபாய் இழந்து விட்டோம் என்று பேசுவது அபத்தம் என்றும் கபில் சிபல் ஏற்கெனவே கூறியிருக்கிறார். இதை மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலேயே கூறியிருக்கும் போது, என் மீது எதற்காகக் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதே ராசாவின் கேள்வி. ராசா நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வைத்த அன்றைக்கு இரவு என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில்கூட, “இழப்பு இல்லைசு என்ற கருத்தையே கபில் சிபல் வலியுறுத்தினார். அதாவது, சி.பி.ஐ. யின் குற்றச்சாட்டை ராசா மட்டும் மறுக்கவில்லை, இந்த அரசே அதனை மறுக்கிறது என்பதுதான் வேடிக்கை!

“டெண்டர் விடாமல் முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற அடிப்படையில் அலைக்கற்றை உரிமங்களை வழங்கியது குற்றம் என்றால், மாறனும் அருண் ஷோரியும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.

“2001இல் தீர்மானிக்கப்பட்ட விலையில்தான் அலைக்கற்றை வழங்கப்படவேண்டும் என்பதில் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் உறுதியாக இருந்தது. நிதி அமைச்சகம் டெண்டர் விடவேண்டும் என்று கூறியதுசு என்று கூறினார் சிதம்பரம் (பிசினெஸ் லைன், ஜூலை 26, 2011). இரு அமைச்சகங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவும்போது கொள்கை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியவர் பிரதமர். இப்பிரச்சினையை அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பி முடிவு செய்யாததுதான் குற்றம் என்றால், அந்தச் சதிக் குற்றத்துக்குப் பதிலளிக்க வேண்டியவர் பிரதமர். அமைச்சர்கள் குழுவைக் கூட்டும் அதிகாரம் அவருடையதுதான் என்பதே ராசா முன்வைக்கும் வாதத்தின் சாரம்.

அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமருக்குத் தெரியாமலும் பிரதமரை ஏமாற்றியும் ராசா பயங்கரமான ஊழலைச் செய்துவிட்டதைப் போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை சு.சாமி, ஜெயலலிதா, சோ மற்றும் பார்ப்பன ஊடகங்கள் அடங்கிய கூட்டணி துவக்க முதலே உருவாக்கியிருக்கிறது. இது ஒரு இமாலயப் பொய் என்ற போதிலும், மன்மோகன் சிங் என்ற நபருடைய பிம்பம் நொறுங்கினால், அது தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் மீதே விழுந்த கறையாகிவிடும் என்பதனாலும், மன்மோகன் அமெரிக்காவின் பங்களா நாய் என்பதனாலும், ஊடகங்கள், ஓட்டுக்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன் சிங்கின் இந்தப் புனித வேடத்தை சேதமின்றிப் பாதுகாக்கின்றனர்.

ஆனால், விசயங்களுக்குள் ஆழமாகச் செல்லாமல் மேம்புல் மேய்பவர்களை மட்டுமே இவ்வாறு ஏமாற்ற இயலும். இந்த ஊழல் விவகாரத்தில் ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், ராசாவிற்கும் மன்மோகனுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனை இந்து நாளேட்டில் ஒரு முழுப்பக்க அளவிற்கு வெளியானது. அரசாங்க இரகசியம் என்று கருதப்படும் இக்கடிதங்களை ராசாதான் கொடுத்து வெளியிடச் செய்திருக்க வேண்டும். மன்மோகன் சிங் இருட்டிலிருந்தார் என்ற கூற்றை அக்கடிதங்கள் பொய்ப்பிக்கின்றன. அதன் பின்னர் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெளியிட்ட அறிக்கை இப்பிரச்சினையில் மன்மோகன் சிங்கிற்கு உள்ள தொடர்பை வெளிக்கொணர்ந்ததுடன், மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற உரைகளிலிருந்தே அவரது தொடர்பை நிரூபித்துக் காட்டியது. ஜோஷியின் அறிக்கைக்கு எதிராக காங்கிரசு கலகம் செய்வதற்கும் இதுவே காரணமாக அமைந்தது.

யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் அலைக்கற்றையை வாங்கின. அதன் பின்னர் தமது நிறுவனப் பங்குகளின் ஒரு பகுதியைப் பன்மடங்கு அதிக விலைக்கு அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றனர். இவ்வாறு அலைக்கற்றை உரிமத்தை வாங்கிய நிறுவனங்கள், தமது பங்குகளை உடனே அதிக விலைக்கு விற்றிருக்கின்றன. இவ்வாறு இவர்கள் ஈட்டிய தொகை மட்டும் 22,000 கோடி ரூபாய் என்கிறது சி.பி.ஐ. இவர்களது பங்குகளின் விலை திடீரென்று அதிகரித்ததற்குக் காரணம், இவர்கள் கைக்கு வந்திருந்த அலைக்கற்றை உரிமங்கள்தான் என்பதால், மேற்கூறிய 22,000 கோடியும் அலைக்கற்றை விற்பனையின் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய தொகை என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு.

“இந்தியாவில் போடப்படும் எல்லா வெளிநாட்டு முதலீடுகளும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்புக் குழுமத்தின் ஒப்புதலைப் பெறுகின்றன எனும்போது, அமைச்சரவை இந்த முதலீடுகளையெல்லாம் அங்கீகரித்திருக்கும்போது, இதில் நான் எந்த சட்டத்தை மீறியிருக்கிறேன்? இவற்றுக்கு பிரதமரின் முன்னிலையில் நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார். பிரதமரை மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்சு என்று கூறியிருக்கிறார் ராசா.ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !

“ஆ, பிரதமரையே இழுக்கிறார்!சு என்று சில ஊடகங்கள் குதிக்கின்றன. உண்மையை சொன்னால், இவ்விசயம் குறித்து மன்மோகன் சிங் ஏற்கெனவே தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவரைப் பொருத்தவரை ஒரு நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளை விற்பதும், தனது பங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுவதும் (dilution of equity) நியாயமான வணிக நடவடிக்கைகள். ஸ்வான், யூனிடெக் விவகாரங்களில் நடந்திருப்பதும் அதுதான் என்பதே அவரது கருத்து. “விற்கப்பட்டவை பங்குகள்தானே தவிர, அலைக்கற்றைகளை அவர்கள் யாருக்கும் விற்கவில்லை. எனவே, அந்தப் பரிவர்த்தனைகள் சட்டபூர்வமானவையேசு (ஜூலை 26, பிசினெஸ் லைன்) என்று ராசாவின் கூற்றை மீண்டும் ஒருமுறை வழிமொழிந்திருக்கிறார் சிதம்பரம். “அலைக்கற்றை உரிமத்தை அரசிடம் விலைக்கு வாங்கும் நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு அந்த உரிமத்தை வேறொருவருக்கு விற்கக்கூடாது என்ற விதியை ரத்து செய்து, வாங்கிய மறுகணமே விற்கலாம் என்று 2003ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா அரசு அனுமதி வழங்கி விட்டதுசு என்று குட்டை உடைத்திருக்கிறார் கபில் சிபல் (ஜூலை 27, தி இந்து). இதன்படி பார்த்தால், அவர்கள் அலைக்கற்றையையே கைமாற்றி அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றிருந்தாலும் அது குற்றமில்லை என்றாகிறது.

மொத்த இழப்பான ரூ.30,984 கோடியில் அலைக்கற்றையை மலிவு விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற குற்றநடவடிக்கையில் ஏற்பட்ட மொத்த இழப்பு மட்டும் ரூ.22,000 கோடி என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தனது 27% பங்குகளை விற்று ரூ.13,973 கோடி ஈட்டியிருக்கிறது. 67% பங்குகளை விற்று ரூ.6120 கோடி ஈட்டிய யூனிடெக் நிறுவனத்தின் முதலாளி சஞ்சய் சந்திரா சிறையில் இருக்கிறார். ஆனால், ரூ.13,973 கோடியைச் சுருட்டிய டாடா மீது கை வைக்க சி.பி.ஐ. க்குத் துணிவிருக்கிறதா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராசா.

ராசா நீதிமன்றத்தில் கிளறாத இரகசியங்களும் எழுப்பாத கேள்விகளும் இவ்வழக்கில் நூற்றுக்கணக்கில் புதைந்து கிடக்கின்றன. இந்தக் கொள்ளையில் பங்கு பெற்றிருக்கும் பெரும் தரகு முதலாளிகள் யாரையும் சி.பி.ஐ. இதுவரை நெருங்கவே இல்லை. ஒரு உரிமத்தை வைத்துக் கொண்டு, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. ஆகிய இரு தொழில்நுட்பங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் காரணமாக 8448.95 கோடி ரூபாய் இழப்பு எற்பட்டுள்ளதாக சி.பி.ஐ இன் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இதில் ரூ.4930 கோடியை டாடா டெலிசர்வீசஸ் சுருட்டியிருக்கிறது. ஆனால், டாடாவின் மீது குற்றப்பத்திரிகையும் இல்லை, கைதும் இல்லை.

டாடா மட்டுமல்ல, ஐடியா செல்லுலார் (ஆதித்ய பிர்லா குழுமம்), ஏர்டெல் (சுனில் பாரதி மிட்டல்), டேடா காம் சொல்யூஷன்ஸ் (ராஜ் குமார் தூத், ராஜ்யசபா எம்.பி, வீடியோகான் முதலாளி), ஏர்செல், எஸ் டெல், வோடஃபோன் (எஸ்ஸார், ரூயா) ஆகிய அனைவரும் வெவ்வேறு விதங்களில் அலைக்கற்றை கொள்ளையில் பங்கு பெற்றிருக்கின்றனர்.

ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்தை தனக்குப் பினாமியாக அனில் அம்பானி பயன்படுத்தியதைப் போலவே, லூப் டெலிகாம் என்ற நிறுவனத்தை எஸ்ஸார் பினாமியாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களை மறைப்பதற்கு அமைச்சர் முரளி தியோரா உதவியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. அதேபோல, மொரீசியஸில் போடப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரிப்பதை அறிந்த ரூயா குழுமத்தை சேர்ந்த பிரசாந்த் ரூயா, ஐ.பி.கேய்தான் ஆகிய தரகு முதலாளிகள், சி.பி.ஐ. விசாரணை குறித்த விவரங்களைத் தருமாறு மொரீசியஸில் உள்ள இந்திய ஹை கமிசனர் மதுசூதன் கணபதியிடம் பேரம் பேசியிருக்கின்றனர். இது குறித்து எழுத்துபூர்வமான புகாரை அவர் அரசுக்கு கொடுத்த பின்னரும், இவர்கள் மீது சி.பி.ஐ. எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை.

இது மட்டுமல்ல; கலைஞர் தொலைக்காட்சியின் 25% பங்குதாரர், அதன் நிர்வாகத்தில் பங்காற்றியவர் என்ற காரணத்தினால் இந்த சதி வழக்கில் கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது. இந்த அளவுகோல் அனில் அம்பானி விசயத்தில் பின்பற்றப்படவில்லை. ஸ்வான் டெலிகாம் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமங்களைப் பெற்றதற்காக அனில் அம்பானி குரூப்பின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ரூ.1000 கோடி மதிப்புள்ள அனில் அம்பானி நிறுவனத்தின் பங்குகள் ஸ்வான் டெலிகாமுக்கு மாற்றப்பட்டுள்ளன. ரூ.10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள தொகை எதையும் அனில் அம்பானி அல்லது அவரது மனைவியின் ஒப்புதலின்றி கொடுக்கக் கூடாது என்பது வங்கிகளுக்கு அம்பானி நிறுவனம் கொடுத்திருக்கும் வழிகாட்டுதல். ஸ்வான் டெலிகாமின் 50% பங்குகளை உரிமையாக வைத்திருக்கும் அனில் அம்பானியும் அவரது மனைவியும்தான், இந்த மோசடியின் முழுப்பயனையும் அடைந்திருக்கின்றனர். இருப்பினும், அம்பானி நிறுவனத்தின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்களேயன்றி, அனில் அம்பானியை சி.பி.ஐ கைது செய்யவில்லை.

அதேபோல, கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி ரூபாய் கொடுத்த டி.பி.ரியால்டீஸ் நிறுவனத்தின் முதலாளி ஷாகித் பல்வா கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், ராசாத்தி அம்மாளின் பினாமிக்கு 250 கோடி ரூபாய் நிலத்தை 25 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் கொடுத்ததற்கு ஆதாரம் இருந்தும், அமைச்சர் ராசாவைப் பாராட்டி டாடா தன் கைப்பட கலைஞருக்கு எழுதிய கடிதமே ஒரு ஆதாரமாக இருந்தும், பெரம்பலூர் மருத்துவமனைக்கு டாடா அறக்கட்டளையிலிருந்து ரூ.20 கோடி ரூபாய் ஒதுக்குவது தொடர்பான உரையாடல்கள் ஆதாரமாக இருந்தும் டாடா கைது செய்யப்படவில்லை.

“டி.பி ரியால்டீஸ் நிறுவனம் சரத் பவார் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது மும்பையில் ஊரறிந்த இரகசியம்சு என்று கூறினார் நீரா ராடியா. புனேவைச் சேர்ந்த பர்ஹாதே என்பவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு டி.பி.ரியால்டிஸ் நிறுவனத்தில் உள்ள தொடர்புகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று 2005 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !  ராசாவும் தொடர்ந்து கனிமொழியும் கைது செய்யப்பட்டவுடனேயே, அத்வானியை சந்தித்த பவார், தனது அரசியல் நண்பர்களான மம்தா, சவுதாலா, முலாயம், ஜெயலலிதா ஆகியோரின் ஆதரவுடன் மாற்று ஆட்சியை அமைக்கும் வாய்ப்பைப் பற்றியும், அதற்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை வெளியிலிருந்து பெறுவதற்கான வாய்ப்பைப் பற்றியும் ஆலோசித்தார் என்று கடந்த மே மாதத்தில் இந்தியா டுடே செய்தி வெளியிட்டது. எத்தனை தரவுகள் இருந்தாலென்ன, கருணாநிதியைப் போல பவாரை மிரட்டிப் பணியவைக்க இயலாது என்பது காங்கிரசுக்குத் தெரியாததல்ல. டில்லி ஆட்சியாளர்களின் வளர்ப்பு நாய்தான் சி.பி.ஐ. என்பதும் பவாருக்குத் தெரியாததல்ல.

குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ராசா, தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளும் முயற்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் ஆகியோர் மீது தவிர்க்கவியலாமல் குற்றம் சுமத்துகிறார். அவரது வாதங்கள் இந்த கிரிமினல் வழக்கு தொடர்பான வாதங்களாக மட்டும் இல்லாமல், இந்தக் கிரிமினல் அரசமைப்பு முழுவதையும் குறித்த ஒரு சித்திரத்தை நமக்கு வழங்குகின்றன. “டாடாவை ஏன் கைது செய்யவில்லை?சு என்று அவர் எழுப்பியிருக்கும் கேள்வி ஊடகங்களின் தலைப்பு செய்திக்குரிய தகுதியுள்ள கேள்வி என்ற போதிலும், அது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. கட்சிகளையும், அதிகார வர்க்கத்தையும், தனியார்மயக் கொள்கைகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் ராசாவின் வாதங்கள் ஒரு எல்லைக்கு மேல் அம்பலப்படுத்துமாயின், அவை ஊடகங்களால் ஒதுக்கி ஓரங்கட்டப்படும்; அல்லது இருட்டடிப்பு செய்யப்படும்.

தனியார்மயம்தாராளமயம் என்ற பெயரில் சுரங்கங்கள், காடுகள், நிலங்கள், நகர்ப்புற மனைகள், துறைமுகங்கள் ஆகிய எல்லாத் துறைகளிலும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் நடந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் பகற்கொள்ளை. தொலைபேசித் துறையில் நடைபெற்ற ஒரு கொள்ளை மட்டும், சீப்பில் சிக்கிய முடியைப்போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ஊழல், ஊழல் என்று அரசியல் பரபரப்புக்கு மட்டும் அதைப் பற்றிப் பேசிவிட்டு, அதன் பின்புலத்தை சாத்தியமான அளவுக்கு மூடிமறைக்கவே முயற்சிக்கின்றன ஆளும் வர்க்கங்கள். அந்த முயற்சியை முறியடிப்பதே நமது பணியாக இருக்கவேண்டும்.

______________________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

________________________________________________________________________________

படிக்க