privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

-

ன்றாக பின்னிப் பிணைந்திருந்ததாலேயே அந்த நான்கு விலங்குகளையும் சிங்கத்தால் அடித்துக் கொன்று சாப்பிட முடியவில்லை. எனவே தந்திரமாக, சூழ்ச்சி செய்து அந்த நான்கு விலங்குகளையும் பிரித்தது. இப்போது சிங்கத்தால் தனித்தனியாக அந்த நான்கு விலங்குகளையும் வேட்டையாடி புசிக்க முடிந்தது. இந்தக் கதையை விரல் சூப்பும் வயதிலேயே பள்ளியில் படித்திருப்போம்.

ஆனால், தந்திரமாக ஏமாற்றப்பட்டு, சூழ்ச்சி செய்து பிரிக்கப்பட்டு, தனித்தனியாக இருப்பதாலேயே தொடர்ந்து நாம் சிங்கத்தால் நர வேட்டையாடப்பட்டு இறந்து வருகிறோம். எனவே ஒன்றாக இணைவோம். சிங்கத்தை பின்னங்கால் பிடறியில் அடித்து ஓட ஓட விரட்டுவோம்… என்று முடிவு செய்து நான்கு விலங்குகளும் ஒன்றாக கைகோர்த்தன. சிங்கத்தை காட்டை விட்டே விரட்டின… என்றொரு கதையை எந்தக் காலத்திலும் நாம் படித்ததில்லை. அப்படியொரு கதை இந்தியாவில் சமீபத்தில் எழுதப்படவும் இல்லை.

இந்தக் குறையை போக்குவதற்காகவே வரலாற்று புகழ்மிக்க ஒரு கதையை அரியானா மாநிலம், குர்கான் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அதுவும் அச்சில் அல்ல. இந்திய சரித்திர கல்வெட்டில் பொறிக்கும் விதமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். மன உறுதியுடன் போராடி வரும் இத்தொழிலாளர்களின் போராட்டம், வர்க்க ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும், நாளைய விடியலுக்கு அறைகூவல் விடுப்பதாகவும் உள்ளது.

இந்திய நாட்டின் தலைநகரிலிருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் மானேசர் தொழிற்பேட்டையை அடைந்துவிடலாம். ஒருவகையில் உலகமே இங்குதான் உற்பத்தியாகிறது என்று சொல்லலாம். கார்கள், பைக்குகள், செமிகண்டக்டர்கள், வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், தொலைப்பேசி – கைப்பேசிகள்… அவ்வளவு ஏன், பாம் டேட்டா அனலிஸ் மையமும், பிரைன் ரிசர்ச் ஆய்வுக்கூடமும், இராணுவப் பள்ளியும் கூட இங்கு அமைந்திருக்கிறது.

1980களில் குர்கானில் தொடங்கப்பட்ட மாருதி உத்யோக் நிறுவனத்தால் அதிகரித்து வந்த நுகர்வு கலாச்சாரத்துக்கு தீனி போடும் வகையில் கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே இந்த மானேசர் தொழிற்பேட்டையில் தனது இரண்டாவது கார் பிரிவு தொழிற்சாலையை மாருதி சுசுகி நிறுவனம் தொடங்கியது. விதவிதமான ஃப்ளேவர்களில் தயாராகும் ஐஸ்க்ரீம் போல ஸ்விப்ட், ஏ-ஸ்டார், டிஸெயர், எஸ்எக்ஸ்4 மாடல் கார்களை உற்பத்தி செய்து நடுத்தரவர்க்கத்துக்கும், மேட்டுக்குடி கனவான்களுக்கும் இங்கிருந்து வழங்க ஆரம்பித்தது.

இதற்காக சுற்று வட்டார பகுதியிலிருந்து, ஐடிஐ முடித்த இளைஞர்களை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியது. ஷிப்டுக்கு 600 தொழிலாளர்கள் வீதம் மொத்தம் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். இவர்களில் நிரந்தர தொழிலாளர்களை விட, பயிற்சியாளர்களும், அதை விட ஒப்பந்த தொழிலாளர்களும்தான் எண்ணிக்கையில் அதிகம் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.

இந்த ஆயிரத்து 200 தொழிலாளர்கள்தான் கடந்த நான்கு மாதங்களாக தங்கள் உரிமைக்காக போராடி வருகிறார்கள் என்பதல்ல விஷயம். இவர்களுக்காக மானேசர் தொழிற்பேட்டையிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறார்கள், களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட வேண்டிய விஷயம். ஓரு தொழிற்சாலையில் மட்டுமோ அல்லது அந்தத் தொழிற்சாலையின் கிளைத் தொழிலாளர்களைச் சேர்த்துக் கொண்டோ மட்டும் போராடினால் போதாது. அந்த வட்டாரம் முழுதுமாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தை ஓரணியில் திரட்டி உறுதியுடன் போராட வேண்டும். அப்பொழுதுதான் இன்றைய உலகமய சூழலில் முதலாளித்துவ அடக்குமுறைகளை முறியடிக்க முடியும் என்பதை இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்தியிருக்கிறார்களே… அதுதான் சிறப்பு.

இதை தொடக்கத்திலிருந்து பார்த்தால்தான் இந்தப் போராட்டத்தின் வலிமையை, அது தரும் உத்வேகத்தை உணரவும், புரிந்து கொள்ளவும், பாடம் கற்கவும் முடியும்.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்

45 விநாடிகளில் உங்களால் என்ன செய்ய முடியும் என்று மெத்தப் படித்த மேதாவிகளிடம் கேட்டுப் பாருங்கள். விடை சொல்லவே 45 விநாடிகளுக்கு மேல் யோசிப்பார்கள். ஆனால், மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் மாருதி சுசுகி தொழிற்சாலையின் அசெம்பிளிங் லைனில் பணிபுரியும் தொழிலாளர்கள், சராசரியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு 45 விநாடிகளும் ஒரு காரை உருவாக்க தங்கள் குருதியை எரிக்கிறார்கள். இதை ஏதோ அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மிகைப்படுத்தி சொல்வதாக நினைக்க வேண்டாம். மாருதி சுசுகியின் இணையதளத்திலேயே 12.5 மணி நேரத்தில் மெட்டல் ஷீட்டிலிருந்து ஒரு காரை தயாரிப்பதாகவும், அசெம்பிளிங் லைனில் 23 விநாடிகளுக்கு ஒரு கார் நகருவதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதாவது சராசரியாக ஒரு ஷிப்டுக்கு 600 கார்களை உற்பத்தி செய்வதற்காக 600 தொழிலாளர்கள் மாருதி சுசுகி இரண்டாவது பிரிவு தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள்.

இந்த இடத்தில் மாருதி சுசுகி நிறுவனம் குறிப்பிடாமல் விட்ட ஒரு விஷயத்தை – கணக்கை – பார்ப்போம். அப்பொழுதுதான் எரிந்து சாம்பலாகும் அந்நிறுவன தொழிலாளர்களின் நிலையை உணர முடியும்.

8 மணிநேரம் கொண்ட ஒரு ஷிப்டில், 600 தொழிலாளர்கள், 600 கார்களை தயாரிக்கிறார்கள். இது அந்நிறுவனமே குறிப்பிடும் கணக்கு. 600ஐ 45 விநாடிகளால் பெருக்கினால் 27 ஆயிரம் விநாடிகள் வரும். அதாவது 450 நிமிடங்கள். அதாவது ஏழரை மணித் துளிகள். அதாவது 8 மணிநேரம் கொண்ட ஒரு ஷிப்டில் ஏழரை மணி நேரங்கள் கார்களை தயாரிக்க மட்டுமே ஒவ்வொரு தொழிலாளியும் செலவு செய்கிறார். மீதமுள்ள 30 நிமிடங்களில், 20 நிமிடங்கள் உணவுக்காகவும், 7 நிமிடங்கள் தேநீர் குடிக்கவும் ஒதுக்குகிறார். எனவே மீதமுள்ள 3 நிமிடங்களில்தான், அதாவது 180 விநாடிகளில்தான், ஒரு தொழிலாளி, அன்றைய தினம், தான் பணிபுரிந்த 27 ஆயிரம் விநாடிகளுக்காக ஓய்வெடுத்துக் கொள்ள, ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.

இதையே கொஞ்சம் விரித்து பார்ப்போம். ஓய்வுக்காக கிடைத்த இந்த 180 விநாடிகளை, உழைப்புக்காக ஒரு தொழிலாளி செலவிடும் 27 ஆயிரம் விநாடிகளின் மீது பரப்பினால், மாருதி சுசுகி நிறுவனத்தில் ஒரு ஷிப்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு விநாடியில் 150 மைக்ரோ விநாடிகள் மட்டுமே அவர்களுக்கு என்று கிடைக்கும். இதற்குள்தான் அவர்கள் நிற்கவும், மூச்சு விடவும், கை கால்களை அசைக்கவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எஞ்சிய விநாடிகள், நிமிடங்கள், நேரங்கள் அனைத்தும் மாருதி சுசுகி நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தம். நிறுவனத்துக்கு சொந்தமான ‘அந்த நேரத்தில்’ தலையைக் கூட திருப்பக் கூடாது. தப்பித் தவறி திருப்பினால், வெட்டி விடும் உரிமை நிறுவனத்துக்கு உண்டு.

ஆம், உணவுக்காக ஒதுக்கப்பட்ட 20 நிமிடங்களில், ஒவ்வொரு தொழிலாளியும் 400 மீட்டர் தொலைவிலுள்ள உணவகத்துக்கு நடக்க வேண்டும். அங்கு வரிசையில் நிற்க வேண்டும். வாங்கிய உணவை அவசரமாக சாப்பிட வேண்டும். தனது இடத்துக்கு திரும்பி விட வேண்டும். ஒரு நிமிடம் தாமதமானாலும் சம்பளத்தில் வெட்டு நிச்சயம். வேலை நேரத்தில் கழிப்பறை செல்ல அனுமதியில்லை. எனவே சிறுநீர் – மலம் கழிக்கவும் இந்த உணவு இடைவேளையைதான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருநாள் விடுப்பு எடுத்தால், ஊக்கத்தொகையில் ரூபாய் 1,500ம், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால் ஊக்கத்தொகை முழுவதும் பறிக்கப்படும். அடுத்த ஷிப்டுக்கு உரிய தொழிலாளி வரவில்லை என்றால், 16 மணி நேரங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். இதெல்லாம் நிர்வாகத்துக்கு உரிய ‘உரிமைகள்’.

இதைதான் ‘க்ளாஸ் பவர்’ என்று பெருமையாக விளம்பரங்களில் குறிப்பிடுகிறதா மாருதி சுசுகி? தனது வாடிக்கையாளர்களிடம், ‘நீங்களே எரிபொருள்’ என மல்டி கலரில் அச்சடித்து மார் தட்டுகிறதே மாருதி சுசுகி நிறுவனம்… அதன் உண்மையான அர்த்தம், எரிந்து சாம்பலாவது எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குருதிதான் என்பதை குறிப்பால் உணர்த்துகிறதா?

தங்கள் நிறுவன பங்குகளை மேட்டுக்குடியினர் வாங்குவதற்காக தொழிற்சாலையின் வெளித் தோற்றத்தை ஹை டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து காட்டும் நிறுவனம், ஏன் உட்புற தோற்றத்தை படம் பிடித்துக் காட்ட மறுக்கிறது? ஒவ்வொரு பிரிவிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி ஒரு தொழிலாளி எப்படி வேலை செய்கிறார் என்பதை கண்காணிக்கும் நிறுவனம், கழிப்பறைகளில் கூட ‘அநாவசியமாக’ அவர் நேரத்தை செலவிடுகிறாரா என்பதை அறிய கேமராவை பொருத்தியிருப்பது வக்கிரம் மட்டுமல்ல, பாசிசத்தின் உச்சம்.

இந்நடவடிக்கையை ஆதரிக்க வேறு செய்கிறார், நிர்வாகம் வீசும் எலும்புத் துண்டை பொறுக்கித் தின்னும் ஒர் அதிகாரி. ”கழிவறைகளில் ‘நேரம்’ செலவிட எந்தத் தொழிலாளிக்கும் உரிமையில்லை. இதனால் உற்பத்திதான் பாதிக்கும்? எனவே அதிக முறை கழிவறை செல்பவர்கள் – ‘அதிக நேரத்தை’ அங்கு செலவிடுபவர்கள் ஆகியோரின் சம்பளம் பிடிக்கப்படும். இதில் தவறொன்றுமில்லை…” என கொக்கரிக்கிறார்.

இப்படி பல அடக்குமுறைகளை எதிர்கொண்டு கற்பனைக்கும் எட்டாத அளவில், மைக்ரோ விநாடி கூட வீணாக்காமல் உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் பணியை துல்லியமாக அறிய விரும்பினால், உடனடியாக சார்லி சாப்ளினின் ‘மாடர்ன் டைம்ஸ்’ சினிமாவை பாருங்கள்.

இப்படி தங்களையே எரித்து சாம்பலாவதற்குத்தான் நிரந்தர தொழிலாளர்களுக்கு 10 முதல் 12 ஆயிரம் ரூபாயும், பயிற்சியாளர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4 முதல் 5 ஆயிரமும் சம்பளமாக தரப்படுகிறது. ‘வேகமும் கட்டுப்பாடும்’ மாருதி சுசுகி காரின் அடையாளம் மட்டுமல்ல, மாருதி சுசுகி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது கட்டாயமாக சுமத்தப்பட்ட அடிமை ஒப்பந்தமும் கூட.

இந்த இடத்தில் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். ஷிப்டுக்கு 600 கார்கள் என்பது சராசரி அளவுதான். இதுவே உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என நிர்வாகம் முடிவு செய்தால், இந்த 45 விநாடிகள் என்னும் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும். அதாவது 27 ஆயிரம் விநாடிகளில் ஓய்வுக்காகவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் ‘பெரிய மனதுடன்’ ஒதுக்கப்பட்ட 180 விநாடிகளும் நிர்வாகத்தால் களவாடப்படும்.

இப்படி தொழிலாளர்களை சக்கையாக உறிந்துதான் இந்திய சந்தையின் கார் விற்பனையில் மாருதி சுசுகி முதல் இடத்தில் இருக்கிறது. வருடந்தோறும் இந்நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபம், இரு மடங்கு, மும்மடங்கு என அதிகரித்து வருகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வோ, சலுகைகளோ வழங்கப்படவேயில்லை. பதிலாக உற்பத்தியின் எண்ணிக்கை மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. இந்த ‘டார்கெட்’டை அடையும்படி தொழிலாளர்கள் டார்ச்சர் செய்யப்படுகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் அத்தொழிலாளர்கள் தங்களுடன் சம்பளத்தை மட்டும் எடுத்துச் செல்வதில்லை. மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் சேர்த்தே சுமந்து செல்கிறார்கள்.

இவர்களது பிரச்னைகளை பேசித் தீர்க்க மானேசரில் வலுவான சங்கம் இல்லை. 1980களில் குர்கானில் தொடங்கப்பட்ட மாருதி உத்யோக் நிறுவனத்தில் ஏற்கனவே ‘மாருதி உத்யோக் தொழிலாளர் சங்கம்’ இருக்கிறது. மாருதி நிர்வாகமே உருவாக்கிய இந்த எடுபிடி சங்கமே மானேசரில் உள்ள இரண்டாவது கார் பிரிவு தொழிற்சாலைக்கும் பொருந்தும் என நிர்வாகம் திட்டவட்டமாக சொல்லிவிட்டது.

அப்படியானால், குர்கானில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என்ன சம்பளமோ அதையே எங்களுக்கும் தர வேண்டியதுதானே… அவர்கள் உற்பத்தி செய்யும் கார்களை விட அதிகளவில் உற்பத்தி செய்யும்படி எங்களை ஏன் கசக்கிப் பிழிகிறீர்கள் என்று மானேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிலாளர்கள் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதிலளிக்கவில்லை.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும் !

எனவே மானேசர் தொழிலாளர்கள் எந்தக் கட்சியையும் சாராத ஒரு தொழிற்சங்கத்தைக் கட்ட முயன்றனர். கடந்த ஜூன் மாதம், ‘மாருதி சுசுகி பணியாளர் சங்கம்’ (மாருதி சுசுகி எம்ப்ளாயீஸ் யூனியன்) என்னும் பெயரில் சங்கத்தை தொடங்கி, அதனை பதிவு செய்வதற்காக 11 தொழிலாளர்கள் சண்டிகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

ஆனால், முதலாளிகளின் எடுபிடிகளாக மாறிவிட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழிற்சங்கம் தொடங்குவதற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலை உடனடியாக மாருதி நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அதைப் பார்த்து ஆவேசம் அடைந்த நிர்வாகம், ஜூன் 3 அன்று தொழிற்சாலைக்கு வந்த தொழிலாளர்களை விசாரித்து, ‘சங்கம் தொடங்கி அதை பதிவு செய்யச் சென்ற மாபெரும் குற்றத்துக்காக’ 11 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.

1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தின்படி, 7 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்தாலே சங்கம் கட்டும் உரிமையும், அவர்களின் குறைகளைப் பேசித் தீர்வு காணும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ஏட்டளவிலேயே இருப்பதற்கு மானேசர் மாருதி சுசுகி நிறுவனம் நடந்துக் கொண்டது ஓர் உதாரணம்.

நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து ஜூன் 4 அன்று மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முறைப்படி முன்னறிவிப்பு கொடுக்காத வேலை நிறுத்தம் என்னும் காரணத்தை காட்டி இந்த வேலை நிறுத்தத்தை சட்ட விரோதம் என அரசும், மாருதி சுசுகி நிறுவனமும் அறிவித்தன. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், இன்னும் பல ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வே தரமாட்டோம் என மிரட்டின.

இதற்கெல்லாம் அசராமல் மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்கள் உறுதியுடன் போராடினார்கள். தங்கள் சங்கத்துக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்கள். நிர்வாகம் தனது எடுபிடி சங்கத்தின் வலிமையை காட்டுவதற்காக 11 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்சங்க தேர்தலை நடத்தியது. அதை ஒட்டுமொத்த தொழிலாளர்களும் புறக்கணித்தார்கள்.

மாருதி நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் இப்போது முதல்முறையாக போராடவில்லை. ஏற்கனவே 2000-ம் ஆண்டில் நடந்த நீண்ட போராட்டம், நிர்வாகத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கிறது. பல நிரந்தர தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 2005-ல் ஹோண்டா தொழிலாளர்கள் போராடிய போது, அரசும் நிர்வாகமும் குண்டர் படையின் உதவியுடன் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. 2009-ல் ரிகோ ஆட்டோ நிறுவனத்தின் தொழிலாளர்கள், தொழிற்சங்க உரிமைக்காக தொடர்ந்து ஒரு மாதம் போராடி அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த முந்தைய வரலாற்றிலிருந்து படிப்பினைகளை கற்றுக் கொண்டு மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராடியதுதான் சிறப்புக்குரிய அம்சம். இப்போராட்டத்தை ஆதரித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் தொழிலாளர் சங்கம் உட்பட பல சங்கங்கள் திரண்டன. மானேசர் மட்டுமின்றி ரேவாரி மாவட்டத்திலுள்ள தாரு ஹோரா தொழிற்பேட்டை முதல் குர்கான் வரையிலான அனைத்து தொழிலாளர்களின் சங்கங்களையும் தங்களுக்கு ஆதரவாக மாருதி சுசுகி தொழிலாளர்கள் திரட்டினார்கள்.

இதனால் அரியானா மாநிலமே பற்றி எரிந்தது. ஆனால், எந்தவொரு தேசிய காட்சி ஊடகத்திலும் இப்போராட்டம் குறித்த விரிவான தகவல்கள், செய்திகள் வரவில்லை. இத்தனைக்கும் தில்லியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணத்தில் மானேசரை அடைந்து விடலாம். என்றாலும் ஊடகங்கள் இந்த எழுச்சிமிகு போராட்டத்தை புறக்கணித்தன. காரணம், செய்தி வெளியிட்டால் மாருதி சுசுகி விளம்பரம் கொடுக்காது. விளம்பர வருவாய் இல்லாவிட்டால் ஊடகத்தை நடத்த முடியாது. எனவே மாருதி சுசுகி நிறுவனத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அங்கு ‘முப்போகமும் விளைவதாக’ செய்திகளை வெளியிட்டன.

ஆனால், ஊடகங்களை போல் மாநில முதல்வரால் இந்த எழுச்சிமிகு போராட்டத்தை புறக்கணித்து மவுனமாக இருக்க முடியாதே? எனவே அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, இரு தரப்பையும் அழைத்து பேசினார். மானேசர் மாருதி சுசுகி நிர்வாக இயக்குநர் சின்ஜோ நகானிசி உள்ளிட்ட உயரதிகாரிகளும், தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதனையடுத்து 13 நாட்கள் நடைபெற்ற போராட்டம், ஜூன் 16 அன்று முடிவுக்கு வந்தது.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! “இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. பணிநீக்கம் செய்யப்பட்ட 11 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த மாருதி சுசுகி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. எனவே வேலைநிறுத்தத்தை கைவிட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். சனிக்கிழமை முதல் (ஜூன் 18 முதல்) அவர்கள் பணிக்குத் திரும்புவார்கள்” என்று மாநிலத் தொழிலாளர் நலத்துறைச் செயலர் சர்பன் சிங் அறிவித்தார்.

ஆனால், புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவது என்ற முக்கிய கோரிக்கை தொடர்பாக உடன்பாட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. “புதிய தொழிற்சங்கம் அமைப்பதில் ஆலை நிர்வாகத்துக்கு எவ்வித பங்கும் இல்லாததால், உடன்பாட்டில் 2-வது தொழிற்சங்கம் அமைப்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அரியானா மாநில தொழிலாளர் நலத் துறையிடம் எங்களது தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்காக கடந்த ஜூன் 3-ம் தேதி விண்ணப்பம் அளித்தோம். இதற்கு அனுமதி கிடைத்தவுடன் எங்களது சங்கம் செயல்படத் தொடங்கும்” என்று புதிதாகத் தொடங்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சிவகுமார் நம்பிக்கையுடன் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

“தொடர் வேலைநிறுத்தம் காரணமாக, இந்த மாதம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கு தொடர்ந்து வேலை செய்வோம்…” என தொழிலாளர்கள் வாக்குறுதி அளித்தனர். அதன்படியே 13 நாட்கள் இழப்பை ஈடுகட்ட உழைத்தனர்.

ஆனால், மாருதி சுசுகி நிர்வாகம், தான் அளித்த வாக்குறுதிகளை மீறியது. ஜூலை மாதம் முழுக்க சங்கத்தை பதிவு செய்வதற்காக சண்டிகர் சென்ற 11 தொழிலாளர்களையும் குறி வைத்து தாக்கியது. ‘ஜூலை மாதம் முழுக்க தொழிலாளர்கள் மந்தமாக வேலை செய்தனர்…’ என குற்றம் சாட்டியது. புதிய சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க மறுத்தது. இதனால் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்னை முற்றத் தொடங்கியது.

இந்நிலையில்தான் ஆகஸ்ட் மாதம் பிறந்தது. ‘ஃப்ரெஷ் பீஸ்’ புனிதரும், மாபெரும் குணசித்திர நடிகருமான அண்ணா ஹசாரே, தில்லி ராம் லீலா மைதானத்தில், அரசின் ஏற்பாட்டில், அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

இதை வேடிக்கை பார்ப்பதற்காக சில தொழிலாளர்கள் சென்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த நிர்வாகம், அந்தத் தொழிலாளர்களை அழைத்து மிரட்டியதுடன் ‘முன்பே அடையாளம்’ காணப்பட்ட 11 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. அத்துடன் 38 தொழிலாளர்களை ஆகஸ்ட் 29 அன்று சஸ்பெண்ட் செய்தது.

இதனையடுத்து தொழிலாளர்கள் அணி திரண்டு மீண்டும் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போராட்டத்தை ஒடுக்க நிர்வாகமும் முயன்று வருகிறது. அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக ‘Good Conduct form’ல் கட்டாயமாக கையெழுத்திட வேண்டுமென்று இப்போது நிர்வாகம் கட்டளையிடுகிறது. ஆனால், ‘இப்படியொரு படிவமே தேவையில்லாதபோது நாங்கள் எதற்காக கையெழுத்திட வேண்டும்? எங்கள் சுயமரியாதையை அடகு வைக்க முடியாது’ என்று தொழிலாளர்கள் கம்பீரமாக மறுத்து விட்டனர்.

இந்நிலையில் செப்டம்பர் 8 அன்று ‘தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை…’ என்று மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா திமிருடன் பேசியிருக்கிறார். இதற்கு ஜப்பானில் உள்ள சுசுகி நிர்வாக தலைவர் ஒசாமு சுசுகி ஆதரவு தெரிவித்துள்ளதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்ற மாருதி நிறுவனத்தின் 30வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒசாமு சுசுகி, “தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது. அது ஜப்பானாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல அமெரிக்கா சிலாகிக்கும் ‘நிர்வாகப் புகழ்’ இந்துமத பயங்கரவாதி மோடியின் குஜராத்தில், மாருதியின் ஒரு பிரிவை தொடங்கவும் ஒசாமு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அடக்குமுறைக்கும், தொழிலாளர்களை கசக்கிப் பிழியவும் குஜராத் முதல்வரான இந்த இந்துமத பயங்கரவாதி பொருத்தமானவன்தான். அதற்கு குஜராத் மாநிலம் ஹலோல் என்ற இடத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாத மண்டலமே சாட்சி. இங்குள்ள ஜெனரல் மோட்டார்ஸ் என்னும் பன்னாட்டு நிறுவனத்தில், செவ்ரோலெட் உள்ளிட்ட பல நவீன கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளை வைத்து தயார் செய்யப்படுகிறது.  இந்த தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கணக்கில் அடங்காதவை.

எனவே மாருதி சுசுகியின் மற்றொரு கிளை தொழிற்சாலையை இந்த மாநிலத்தில் நிறுவ ஒசாமு சுசுகி பேச்சு வார்த்தை நடத்துவதில் வியப்பொன்றும் இல்லை.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! ஒசாமு சுசுகியின் அடாவடித்தனமான பேச்சும் நடவடிக்கையும் ஒரு விஷயத்தை அழுத்துமாக உணர்த்துகிறது. அது, ஏகாதிபத்தியங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேசம், நாடு, கொலைக்காரன், கொள்ளைக்காரன், மத பயங்கரவாதி என்பதெல்லாம் முக்கியமில்லை. நிதிமூலதனமும், நிதிமூலதன பெருக்கமும்தான் முக்கியம்.

ஆனால், ஏகாதிபத்தியத்தின் ஏவலாகவும், அடிவருடியாகவும் தரகு முதலாளிகள் வேண்டுமானால் இருக்கலாம். வர்க்க ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து கிளர்ந்து எழும் உழைக்கும் மக்கள் என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு தலைமை வகித்து நிற்பார்கள். எந்த அடக்குமுறைக்கும் அடி பணிய மாட்டார்கள்.

இந்த உண்மையைத்தான் மானேசர் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள், தங்கள் வட்டாரத்திலுள்ள அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து போராடுவதன் மூலம் இந்திய உழைக்கும் மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

சமரசத்துக்கு அடிபணியாமல் போராடும் அத்தொழிலாளர்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகள்.

______________________________________________

அறிவுச் செல்வன்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்