privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்ஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ !!

ஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ !!

-

அண்ணா ஹசாரே பிரஷாந்த் பூஷன்
அண்ணா ஹசாரே - பிரஷாந்த் பூஷன்

‘நல்லவனெப் போல இருப்பானாம் பரம அயோக்கியன்’ – கிராமப்புறங்களில் ‘நல்லவர்களைப் போல’ வேடமிடுபவர்களைக் குறித்த சொலவடை இது. நாமும் முன்பே சொன்னோம். நாம் சொன்னதை லேசுபாசாய் சந்தேகித்தவர்கள் யாரேனும் இருந்தால் உங்கள் சந்தேகத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இதோ, கடந்த வாரம் ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதை அடுத்து அண்ணாவின் பக்த கோடிகள் போட்டுக் கொண்டு திரிந்த ‘நல்லவன்’ முகமூடி கிழிந்து தொங்குகிறது.

கடந்த பண்ணிரண்டாம் தேதி தனது அலுவலகத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த ப்ரஷாந்த் பூஷனை, இந்தர் வர்மா என்கிற இந்து பயங்கரவாதி கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திலேயே மடக்கிப் பிடிக்கப் பட்ட இந்தர் வர்மா, தற்போது விசாரணைக் காவலில் இருக்கிறார். மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இவரது கூட்டாளிகளான தாஜிந்தர் பால் சிங் மற்றும் விஷ்னு குப்தா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏன் இந்தத் தாக்குதல்? சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ப்ரஷாந்த் பூஷன், அங்கே சமாதான முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லையென்றால் காஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதனடிப்படையில் சுமூகமாக தீர்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றும், இதே விஷயத்தை முன்னாள் பிரதமர் நேருவும் கூட சொல்லியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பகுத்தறிவோடும் நியாய உணர்வோடு சிந்திக்கும் எவருமே இதில் இருக்கும் ஜனநாயகப்பூர்வமான உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய இராணுவத்தின் கோரத்தாண்டவங்கள் இன்று வரை தொடர்ந்து வருவதும் நாம் அறிந்தது தான்.

ப்ரஷாந்த் பூஷனின் மேற்கண்ட பேட்டியைத் தொடர்ந்து கடும் ஆத்திரமுற்ற இந்து பயங்கரவாதிகள், தங்களது ட்விட்டர் பக்கத்தில் ப்ரஷாந்த் பூஷனைத் தாங்கள் ‘தண்டிக்கப்’ போவதைக் குறித்து வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். தாக்குதலுக்குப் பிறகு ட்விட்டர் தளத்தில் எழுதிய தாஜிந்தர், “அவன் என் தேசத்தைப் பிளக்க முயற்சித்தான்; நான் அவன் மண்டையைப் பிளக்க முயற்சித்தேன்” என்று எழுதியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இம்மூவருமே சங்பரிவார் பயங்கரவாத கும்பலோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இதில், தாஜிந்தர் பால் சிங் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவில் செயல்பட்டவர். எல்.கே அத்வானி உள்ளிட்ட அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களோடு தொடர்பில் இருந்துள்ளார். இவரும் இவரது இன்னொரு கூட்டாளி விஷ்னு குப்தாவும் சேர்ந்து இந்த வருடத்தின் துவக்கத்தில் ‘பகத்சிங் க்ராந்தி சேனா’ என்கிற ஒரு அமைப்பைத் துவக்கியிருக்கிறார்கள். பின்னர் இவர்களோடு ‘பிங்க் ஜட்டி’ புகழ் ஸ்ரீராம் சேணாவைச் சேர்ந்த இந்தர் வர்மாவும் இணைந்து கொள்கிறார்.

மேற்கண்ட சம்பவம் எதிர்பாராத ஒன்று இல்லை. சும்மா இருந்த தென்காசியில் சும்மா ஒரு எழுச்சியை உண்டாக்க சும்மா ஒரு குண்டு வைத்துப் பார்ப்போமே என்று சும்மா திட்டமிட்டு முயற்சித்துப் பார்த்த ‘நல்லவர்கள்’ அல்லவா இந்த ‘இந்து பயங்கரவாதிகள்’ . ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் இருக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இணையதளங்களிலும் அதற்கு வெளிப்படும் எதிர்விணைகளில் அண்ணா பக்தர்களின் மேக்கப் இல்லாத ஒரிஜினல் முகம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது தான் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது.

அண்ணா தீவிரமாக சர்க்கஸ் நடத்திக் கொண்டிருந்த காலங்களில் ‘எங்கள் நோக்கமே ஊழல் ஒழிப்பு ஒன்று தான். எங்களுக்கு அரசியல் சார்பே கிடையாதாக்கும்’ என்றெல்லாம் நீட்டி முழக்கியவர்கள் இவர்கள். இந்த அரசியலற்றவாதம் போற்றுதலுக்குரியதாக கருதப்பட்டது. அண்ணா ஹசாரேவின் கோரிக்கைகளில் இருந்த மொண்ணைத்தனம் கூட இந்த அரசியலற்றவாதத்தின் பின்னே தான் பதுங்கிக் கிடந்தது. நம்ம உள்ளூர் காக்கி டவுசர் ஜெயமோகனே ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரேவை சீசன் பார்த்து ஆதரித்த போதும் கூட பார்வையாளர்களுக்கு சந்தேகிக்கத் தோன்றவில்லை. ஆனாலும் நாம், சென்னையில் கூடிய அண்ணா பக்தர்கள் பலரின் பட்டாபட்டி காக்கி நிறத்தில் பல்லிளித்ததை நமது நேரடி ரிப்போர்ட்டில் அப்போதே பதிவு செய்திருந்தோம்.

ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா தளத்தில் வெளியாகியிருந்த செய்திக் கட்டுரையின் மறுமொழிகளில் அண்ணா பக்தர்கள் அவரைத் தாளித்துக் கொட்டினர். ஆயிரக்கணக்காக நீளும் அந்த மறுமொழிகளில் அண்ணா கும்பல் போற்றும் அரசியலற்றவாதத்தின் கோர முகம் குறுக்கும் நெடுக்குமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளை கண்மூடித்தனமாய் ஆதரித்திருந்த அண்ணா ரசிகர்கள், ப்ரஷாந்த் பூஷனை சும்மா தாக்கியதோடு நிறுத்தியிருக்கக் கூடாது என்றும், அவரது எலும்புகளை ஒடித்திருக்க வேண்டுமென்றும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும், ப்ரஷாந்த் பூஷன் மட்டுமில்லாமல் அருந்ததி ராய் போன்ற ஜனநாயக உணர்வுள்ள பிறரையும் குறிப்பிட்டு ‘வெட்டு, குத்து, கொல்லு’ பாணியில் வெறியைக் கக்கியிருக்கின்றனர்.

அரசியலற்றவாதமென்பதே தீவிர வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் முகமூடி தானென்பதற்கு இந்த சம்பவம் மிக அண்மைய உதாரணம். வேறு விதமாகச் சொல்வதானல், அரசியலற்றவாதமும் வலதுசாரி இந்து பயங்கரவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம். உதாரணமாக, நமது மைலாப்பூர் ‘பார்த்தசாரதிகள்’ கூட அரசியலற்றவர்கள் தான். இவர்கள் எந்த கட்சியின் அரசியலோடும் தம்மை இணைத்துக் கொள்வதை பார்க்க முடியாது தான். தேவைப்பட்டால் பாரதிய ஜனதாவைக் கூட சில சந்தர்பங்களில் விமர்சிக்கவும் செய்வார்கள். ஆனால், எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் இவர்களின் சிந்தனையும் துக்ளக்கின் சிந்தனையும் ஆச்சர்யப்படுமளவிற்கு மிக எதார்த்தமாகவும் இயல்பாகவும் ஒத்துப் போவதை கவனித்திருப்பீர்கள். சிறுபாண்மையினர், தலித்துகள், இடஒதுக்கீடு, இந்தியா, இந்தி போன்ற குறிப்பான விஷயங்களில் இவர்கள் அப்படியே ஆர்.எஸ்.எஸ் பேசுவது போலவே பேசுவார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் இரட்டைக் குவளை பிரச்சினை பற்றி நான்’காண்டு’களுக்கு முந்தைய தமிழ் வலைப்பதிவர்களில் ‘நூல்’ கம்பேனியார் உதிர்த்திருந்த முத்துக்களைத் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

இது ஒருபுறமிருக்க, ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா கும்பலின் பிற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களும் பால் தாக்ரேவின் குரலாகவே ஒலித்திருக்கிறது. காஷ்மீரைக் காக்க உயிரையே தரத் தயார் என்று சவடால் அடித்த அண்ணா ஹசாரே, ப்ரஷாந்த் பூஷனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். மேலும் அவர் தமது குழுவில் தொடர்வதைப் பற்றி குழுவின் மையக் கூட்டத்தின் வைத்து முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளார். இதே போன்ற கருத்தையே கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், சந்தோஷ் ஹெக்டே மேதா பட்கர் போன்ற பிறரும் தெரிவித்துள்ளனர்.

மிகச் சிக்கலான காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரையில் தீர்வு எதுவாக இருக்க வேண்டுமென்றாலும் அது அம்மக்களின் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகக் கோரிக்கையாகவும் விருப்பமாகவும் இருக்க முடியும். ஆனால், வல்லாத்தளையாக அந்த மக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அகண்ட பாரதக் கனவில் மிதக்கும் இந்து பயங்கரவாதிகள் காலம் காலமாக சொல்லி வருவது தான். இதைத் தான் இப்போது அண்ணா கும்பலும் அவரது ரசிகர் பட்டாளமும் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆக, அரசியலற்றவாதமும் – மத பயங்கரவாதமும் அடிப்படையில் வேறு வேறானதல்ல என்பதை இச்சம்பவம் இன்னுமொரு முறை பொட்டிலடித்தாற் போல் உணர்த்தியிருக்கிறது. ஊழலை ஒழித்து இந்தியாவையே புரட்டிப் போட்டு விடுவோமென்று சவடாலடிக்கும் அண்ணா கும்பலின் ஊழல் பற்றிய புரிதலே அடிமட்டத்தில் இருப்பது ஒருபுறமென்றால், இவர்கள் பார்ப்பன இந்து பயங்கரவாதம், மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் போன்ற கேந்திரமான பிற விஷயங்களில் என்னவிதமான கருத்துக்களை வைத்திருக்கிறார்களென்பது வெகு சில சந்தர்பங்களில் தான் வெளிப்பட்டிருக்கிறது. முன்பு மோடியை அண்ணா ஹசாரே புகழ்ந்ததும் இப்போது ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதும் அவைகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இனிமேலும் அண்ணா ஹசாரே என்கிற இந்த இந்துத்துவ கோமாளியை நம்பி பின்னே செல்லத் தான் வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்