Wednesday, October 4, 2023
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

-

ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!
தோழர் செந்தில்

மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சில்வர் பாத்திர வியாபாரியும், 27 வயது மட்டுமே நிரம்பிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இளம் தோழர் செந்தில் கடந்த அக்_26 அன்று ரவுடியாக வளர்ந்து வர விரும்பும் இளம் கிரிமினல் கும்பலால் (வயது 17,18,19,) கொல்லப்பட்டார் .

அக்டோபர்_26, அன்று கார்த்திக், நாகேந்திரன் என்ற இளம் கிரிமினல்கள் இருவரும் மது அருந்திவிட்டு தோழர் செந்தில் வசித்து வரும் குறுகலான தெருவில் இரு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக போவது, சாகசம் செய்வது என பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தார்கள். உடனே தோழரும், வேறு சிலரும் கண்டித்தும், எச்சரித்தும் அனுப்பி உள்ளனர். தோழரின் எச்சரிக்கையை தங்களுக்கு விடப்பட்ட சவாலாக கருதிய அந்த‌ கும்பல். அன்று இரவே தங்கள் கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு தோழரை கொல்ல வந்துள்ளனர். அன்று இரவு 10.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த தோழரை கிரிமினல் கும்பல் வயிற்றில் கத்தியால் குத்தி சாய்த்து ஒடிவிட்டனர்

குத்துப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த தோழரை மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் முன் உயிர் அடங்கி விட்டது. பின்பு உடலைப் பிரேதப் பரிச்சோதனை முடித்து அக்டோபர் 27ம் தேதி அன்று மதியம் பெறப்பட்டு, யா.ஒத்தக்கடையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்களும், சில்வர் பட்டறைத் தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு சுடுகாடு வரை ஊர்வலமாக விண்ணதிர முழக்கமிட்டனர்.

தோழரைக் கொன்ற குற்றவாளிகளில் இருவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.  மற்றவர்களை சாட்சியங்கள் இல்லை என பூசி மெழுகி வருகிறது. மறுநாள் பிற குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராடினார்கள். இந்த படுகொலையினால் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யா.ஒத்தக்கடையில் அமைந்துள்ள யானை மலையை சிற்ப நகரம் உருவாக்கப் போகிறோம் என்று கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு திட்டம் போடப்பட்டது.  இத்திட்டத்தை எதிர்த்து “யானை மலை பல்லாயிரம் கோடி மதிப்புடைய கிரானைட் கற்களால் ஆனது”,   “அதை கொள்ளையடிப்பதற்கான சதி தான் சிற்ப நகரம்” என்றும் , ” இத்திட்டம் எவ்வாறு மக்கள் விரோதமானது” என்றும் அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு மக்களிடையே இயக்கம் எடுத்தது. அந்த இயக்கத்தில் பு.ஜ.தொ.முவின் சரியான அரசியல் நிலைப்பாடும், செயல்பாடு கண்டு ஈர்க்கப்பட்டு அமைப்போடு அறிமுகமாகி நெருக்கமானார் தோழர் செந்தில்.

அமைப்பில் இணைந்த பின் அவர் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு அமைப்பு, அரசியல் வேலையும், அது புதிய ஜனநாயகம் பத்திரிகையை மக்களிடம் அறிமுகபடுத்துவதிலாகட்டும், நிதி வசூலாகட்டும், சுவரொட்டிகள் ஒட்டுவதிலாகட்டும், அனைத்திலும் அவர் இல்லாமல் நடந்ததில்லை என்கிற அளவிற்கு தோழர் உற்சாகத்தோடும், முனைப்போடும், முன்னணியாகவும் செயல்ப்பட்டார்.

சம‌ச்சீர் கல்வியை அமுல்படுத்தக் கோரி நடந்த போராட்டங்களில் தனி ஆளாக நின்று மக்களிடையே பிரசுரம் வினியோகிப்பது, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களிடம் இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கியும் பேசி அப்போராட்டங்களுக்கு ஆதரவை திரட்டினார். அரசு பள்ளி மாணவர்களை திரட்டி போராட முயற்சி எடுத்தார்.

ஒரு முறை வியாபார விசயமாக வெளியூர் சென்று திரும்பும் போது, சாலையில் விபத்தில் சிக்கி அடிப்பட்டு கிடந்தவரை பார்த்தவுடன், தான் வந்த பேருந்தை நிறுத்தி இறங்கி கொண்டு ஆம்புலன்ஸை வரச் செய்து விபத்துக்குள்ளானவரை மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பி பின் தான் வீடு வந்து சேர்ந்தார். முகம் தெரியாத நபர்களை கூட நேசிக்கும் பண்பாளர்.

ஒரு விசயம் தவறு என்று கருதினால் அதற்கு எதிராக விடாப்பிடியாக போராடக் கூடியவர், அதில் நண்பர்கள் என்றாலும் சமரசம் செய்துக் கொள்ளாத நேர்மையாளர். ஒரு முறை தனியார் பள்ளியின் வேனை தோழரின் நண்பர் ஒருவர் மது அருந்திவிட்டு மாணவர்களை வீட்டிற்கு விட டிரிப் அடிக்க போனார், அதை கண்டித்து, “மது அடித்து விட்டு டிரிப் அடிக்க கூடாது பல குழந்தைகள் உன்னை நம்பி வருகிறது” என்று வேனை எடுக்கவிடவில்லை. பள்ளி நிர்வாகத்திடமும் போராடி வேனை எடுக்கவிடவில்லை, பின்பு வேறு ஒரு ஒட்டுநரை வைத்து வேன் எடுக்கப்பட்டது.தோழரின் நடவடிக்கையை பார்த்த பொதுமக்களில் பலரும் பாராட்டினர்.

அதே போல மற்றொரு நண்பர் ஒரு பெண்னை காதலித்து ஏமாற்றி விட்டார். இதை பொறுத்துக்கொள்ள முடியமால் அந்த நபருக்கு எதிராக காவல்துறை வரை சென்று போராடினார்.

தோழர் அமைப்பில் இணைந்த பிறகு சாதி சங்கத்தினர் ஒரு நிகழ்ச்சியில் தனது புகைப்படத்தை பேனரில் போட்டதற்கு எதிராக சாதி சங்கத்தினரை அம்பலப்படுத்தி, சண்டையிட்டு தனது புகைப்படத்தை பேப்பர் வைத்து அவர்களை வைத்தே ஒட்டி மறைக்க‌ வைத்தார்.

யார் எப்போது உதவி கேட்டாலும் செய்வது, அவசர தேவைக்கு இரத்ததானம் செய்வது, இரத்த கொடையாளர்களை ஏற்பாடு செய்து தருவது என மனிதாபிமான இதயத்தொடும்  இருந்தார்.

தனது வியாபாரத்தில் எப்போதும் நேர்மையையும், மக்களின் மீது அக்கறையும் கொண்டிருந்தார். டிமாண்ட் அதிகம் உள்ள சரக்குகளுக்கு கூட எப்பொதும் வைக்கும் லாபத்திலேயே விற்பனை செய்வார், கூடுதலாக லாபம் வைக்க மாட்டார், கேட்டால் இதனால் பாதிக்கப்படப் போவது மக்கள் தானே என்று ஈரம் சொட்ட பேசுவார்.

டீ கடைகளில் பிளாஸ்டிக் கப்பிற்கு பதில் பேப்பர் கப்பை பயன்படுத்த தொடர்ந்து வலியுறித்தி சுற்று சூழலை நேசித்தார்.

காவ‌ல்துறையினரையும், அதிகாரவ‌ர்க்க‌ங்களையும் எதிர்க்கொள்வதில்  துணிச்ச‌லும், போர்க் குணமும் கொண்ட‌வ‌ர். ஒரு முறை உய‌ர்நீதிம‌ன்ற சுவ‌ரில் அமைப்பு சுவ‌ரொட்டியை ஒட்ட சென்றபோது இங்கே சுவ‌ரொட்டி ஒட்ட‌ கூடாது என காவ‌ல்துறையின‌ர் எச்ச‌ரித்த‌ன‌ர். நீதிப‌திக‌ளை பாராட்டி சுவ‌ரொட்டி ஏன் இங்கே ஒட்ட‌ப்ப‌ட்டுள்ளது என காவ‌ல‌ரை கேள்வி கேட்டு திணறடித்தார். பின் நாங்க‌ள் மக்களுக்கு க‌ருத்துக்க‌ளை பிர‌ச்சார‌ம் செய்ய‌தான் சுவ‌ரொட்டி ஒட்டுகிறோம் ஆகையால் இங்கே தான் ஒட்டுவோம் என்று போராடி சுவ‌ரொட்டியை அங்கேயே ஒட்டி விட்டுவ‌ந்தார்.

தோழர் அமைப்பிற்க்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தனது பழைய   வர்க்க பண்புகளை துச்சமாக தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்க பண்புகளுக்கு வெகுவிரைவில் தன்னை போர்க்குணமாகவும், எளிமையாகவும் மாற்றிக் கொண்டார். தோழர் எந்த இடத்திற்கு போனாலும் அங்கே யாராவது அவருக்கு அறிமுகமானவர் இருப்பார்கள், அந்த அளவிற்கு மிகவும் சரளமாக பழகக் கூடியவர். எந்த ஒரு சூழலிலும் ஒரு விசயத்தை முடியாது என்று கைவிடமாட்டார்.

சோர்வுற்றிருக்கும் தோழர்களையும் உற்சாகப்படுத்தி அமைப்பு வேலைகளுக்கு அழைத்து செல்வார். வியாபார‌ விச‌ய‌மாக‌ செல்கிற‌ ஊர்க‌ளில் கூட‌ புர‌ட்சிக‌ர‌ அர‌சிய‌லை பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடிய‌வ‌ர். விரைவில் மிக‌ச்சிற‌ந்த‌, த‌குதிவாய்ந்த‌ தோழ‌ராக‌ வளர்வார் என்று அமைப்பின் முழு நம்பிக்கையை பெற்றிருந்தார்.

த‌ன‌து குடும்ப‌த்தையும் கூட‌ அர‌சிய‌ல்ப‌டுத்தினார், காத‌ல் ம‌னைவி க‌லைவாணியையும் அமைப்பு , அர‌சிய‌லை ஏற்க‌ச் செய்து வேலைக‌ளில் ஈடுப‌ட‌ச்  செய்தார். அமைப்பு போராட்ட‌ங்க‌ளுக்கு, கூட்ட‌ங்க‌ளுக்கு குடும்ப‌த்தோடு ப‌ங்கேற்று ம‌ற்ற தோழ‌ர்க‌ளுக்கு எல்லாம் முன் உதார‌ணமாக‌ திக‌ழ்ந்தார். தோழ‌ருக்கு 3 வயதேயான ஒரு குழந்தையும், பிறந்த‌ ஏழு நாள்க‌ளே ஆன ஒரு குழ‌ந்தையும், என‌ இர‌ண்டு ஆண் குழ‌ந்தைக‌ள் உள்ளன‌.

தோழ‌ர் கொல்ல‌ப்படுவதற்கு சற்று முன் கூட‌ அத்வானியின் ர‌த‌ யாத்திரையை அம்பலப‌டுத்தி அச்ச‌டிக்க‌ப்ப‌ட்ட‌ சுவ‌ரொட்டிகளை மறுநாள் அதிகாலை ஒட்டுவ‌த‌ற்கு தேவையான‌ ப‌சையை க‌ரைத்தும், சுரொட்டிக‌ளை த‌யாராக‌ வைத்து விட்டும் சென்றார். இறுதியில் அவ‌ர் க‌ரைத்த‌ ப‌சையிலேயே அவ‌ரின் அஞ்ச‌லி சுவ‌ரொட்டி ஒட்ட‌ப்ப‌டும் துய‌ர‌ம் தோழ‌ர்க‌ளின் நெஞ்சை பிழிந்த‌து.

” துரோகிக‌ளின் ம‌ர‌ண‌ம் இற‌கை விட‌ இலேசானது, ம‌க்க‌ளின் ந‌லன்க‌ளுக்காக வாழ்ந்த‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ணம் மலையை விட‌ க‌ன‌மான‌து”
என்றார் மாவோ. அதேபோல‌ ந‌ம்மை எல்லாம் யானை ம‌லையை விட‌ க‌ன‌மான‌ துய‌ர‌த்தில் ஆழ்த்தி விட்ட‌து தோழ‌ரின் ம‌ர‌ணம்.

தோழ‌ரின்  உயிரைப் ப‌றித்த‌து நான்கு இள‌ம் கிரிமின‌ல்க‌ள் என்றாலும், அவ‌ர்க‌ள் ஒரு க‌ருவி ம‌ட்டுமே. க‌ருவி த‌யாரான‌ இட‌ம் இந்த‌ செல்ல‌ரித்த‌ சமூக‌ம் தான். வாழ்க்கையைப் ப‌ற்றி எந்த‌ ம‌திப்பிடுக‌ளும் இல்லாம‌ல், எப்ப‌டி வேண்டுமானாலும் வாழ‌லாம் என்ற க‌ண்ணேட்ட‌மும், ர‌வுடியிச‌த்தை கொண்டாடுகிற சினிமாக்க‌ள், ம‌னித‌ பண்புக‌ளை இழ‌க்க‌ச் செய்யும் சாராய வியாபார‌மும் தான் க‌ருவி த‌யாராகும் க‌ளம்.

இந்த‌ கொலைக்க‌ளங்க‌ளை ஒழிக்காத‌ வ‌ரை நாம் இன்னும் இத்த‌கைய‌ இழ‌ப்புக‌ளை ச‌ந்திக்க‌ வேண்டியிருக்கும் என்ற எச்ச‌ரிக்கையோடும், இந்த‌ அழுகி நாறும் ச‌மூக‌த்தை வெட்டி வீசும் வ‌ரை தோழ‌ர் செந்திலின் புர‌ட்சிக‌ர‌ உணர்வையும், போர்க்குணத்தையும், இல‌ட்சிய‌க்க‌ன‌வுக‌ளையும், நற்ப‌ண்புக‌ளையும் நெஞ்சில் ஏந்தி போராட‌ உறுதியேற்போம்.

____________________________________________________________

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மதுரை

____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. சினிமாவையும், ரவுடியிச அரசியலையும் பார்த்து சில டீன் ஏஜ் பசங்க தாதாவாகிற லட்சியத்தில் இருப்பதே ஒரு சமூக அவமானம். ஒரு செந்தில் மரணத்தால் 100 செந்தில்கள் உருவாவர்.

 2. நானும் இந்த துயர சம்பவத்தை அறிவேன். மிகவும் வருத்தமளித்த செய்தி!

 3. With tears…

  //தோழ‌ரின் உயிரைப் ப‌றித்த‌து நான்கு இள‌ம் கிரிமின‌ல்க‌ள் என்றாலும், அவ‌ர்க‌ள் ஒரு க‌ருவி ம‌ட்டுமே. க‌ருவி த‌யாரான‌ இட‌ம் இந்த‌ செல்ல‌ரித்த‌ சமூக‌ம் தான். வாழ்க்கையைப் ப‌ற்றி எந்த‌ ம‌திப்பிடுக‌ளும் இல்லாம‌ல், எப்ப‌டி வேண்டுமானாலும் வாழ‌லாம் என்ற க‌ண்ணேட்ட‌மும், ர‌வுடியிச‌த்தை கொண்டாடுகிற சினிமாக்க‌ள், ம‌னித‌ பண்புக‌ளை இழ‌க்க‌ச் செய்யும் சாராய வியாபார‌மும் தான் க‌ருவி த‌யாராகும் க‌ளம்.

  இந்த‌ கொலைக்க‌ளங்க‌ளை ஒழிக்காத‌ வ‌ரை நாம் இன்னும் இத்த‌கைய‌ இழ‌ப்புக‌ளை ச‌ந்திக்க‌ வேண்டியிருக்கும் என்ற எச்ச‌ரிக்கையோடும், இந்த‌ அழுகி நாறும் ச‌மூக‌த்தை வெட்டி வீசும் வ‌ரை தோழ‌ர் செந்திலின் புர‌ட்சிக‌ர‌ உணர்வையும், போர்க்குணத்தையும், இல‌ட்சிய‌க்க‌ன‌வுக‌ளையும், நற்ப‌ண்புக‌ளையும் நெஞ்சில் ஏந்தி போராட‌ உறுதியேற்போம்.
  //

 4. சில ஆண்டுகளுக்கு முன்பு, கரூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் இதே போல, ஒரு பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பொழுது, அந்த வழியாக சென்ற தோழர் போய் காப்பாற்ற முயன்றதில், தன் உயிரை இழந்தது நினைவுக்கு வருகிறது.

  தோழர் செந்திலுக்கு என்னுடைய வீரவணக்கங்கள். அவரை இழந்து வாடும், குடும்பத்திற்கு எனது அஞ்சலியை தெரிவித்துகொள்கிறேன்.

 5. மிகவும் வருத்தமளித்த செய்தி. எமது அஞ்சலிகள்.

  மதுரை பக்கம் தான் ‘வீரம்’ என்று கருதி இப்படி எல்லாம் செய்வது அதிகம் போல. நிலப்பிரவுத்தவ மதிப்பீடுகள் இன்னும் அதிகம் உள்ள பகுதி. சாதியமும் கூட.

  மது எத்தனை விபரீததை உருவாக்குகிறது.

  • மதுரை மட்டுமே அல்ல சினிமாவின் தாக்கத்தால் தூண்டப்பட்ட இதுபோன்ற சிறுவர்கள்!! எல்லா இடத்திலும் உண்டு. காவல்துறையும் இவர்களை தங்கள் தேவைகளுக்காக ஊக்குவிக்கவே செய்கின்றது. உதாரணமாக கோவையில் தோழர் ஸ்ரீனிவாசனின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க தோழர்கள் கூடி இருந்த பொழுது அங்கே ஒரு 30 வயது மதிக்கதக்கவருடன் ஒரு சிறுவன் 17 அல்லது 18 வயது இருக்கும் சண்டைக்கு சென்று அடிவாங்கிக்கொண்டான். அப்போது இதை பார்த்துக்கொண்டு இருந்த தோழர்களிடம் அங்கே வியாபாரம் செய்துகொண்டிருந்த பெண்களில் சிலர் இப்படி கூறினார் ”ஐயோ அந்த தம்பி தெரியாம இவன புடிச்சு அடிக்கிது அடிவாங்குறவன் இந்த பகுதியின் ரவுடிப்பசங்க?? கூட்டத்தை சேர்ந்தவன் இப்பவே அத்தனைபேரும் இங்கே வந்துருவானுகளே” என்று . சொல்லிவைத்தார்ப்போல ஒரு ஐந்து நிமிட இடைவெளியில் சுமார் ஒரு முப்பது பேர் அங்கே வந்து அந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை போட்டு துவைத்தெடுக்க துவங்கிவிட்டனர். தோழர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் சொல்லிக்கொண்டு இருப்பதை பார்த்த போன் பூத் பெண் ஒருவர் ”போலீசெல்லாம் ஒன்னும் செய்யாது சார் எல்லாம் கூட்டுகலவானிகள் இவனுகள தட்டிக்கேட்க்க சரியான ஆளுகளே இல்லை சார்” எண்டார். பெண் கூறியது உண்மை என்று சில வினாடிகளிலேயே தெரியவந்தது. காவல் துறை வாகனத்தில் வந்த துணை ஆய்வாளர் ரவுடிப்பசங்களில் சிலரை அழைத்து தனது வாகனத்திலேயே வைத்து சிரித்து சிரித்து எதையோ பேசிக்கொண்டு இருந்தார். அடிதடி நடந்ததால் கூடாய கூட்டத்தை மட்டும் மற்ற காவலர்கள் மிரட்டி விரட்டிக்கொண்டு இருந்தனர். கூடவே தோழர்களையும் விரட்டினார். விரட்டும் காவலரிடம் வயதான தோழர் ஒருவர் மரண செய்தியை சொல்லியபொழுதும் காவலர் தனது அதிகார தோரணையில் அப்போ மரணம் நடந்த வீட்டு வாசல்ல போய் நில்லு இங்கே நிக்க கூடாது என்று கத்தினார். பிறகு அவர்க்கு புரியும் பாசையில் பேசியதும்தான் காவலர் அமைதியானார். எனவே இதுபோன்று சினிமா பார்த்து ”வீரம்”??? காட்டுவது மதுரைக்கு மட்டுமல்ல மற்ற நகரங்களிலும் உண்டு

 6. “அவ‌ர் க‌ரைத்த‌ ப‌சையிலேயே அவ‌ரின் அஞ்ச‌லி சுவ‌ரொட்டி ஒட்ட‌ப்ப‌டும் துய‌ர‌ம் தோழ‌ர்க‌ளின் நெஞ்சை பிழிந்த‌து.”

  மிகச்சிறந்த ஒரு பண்பாளார், போராளியை இழந்து விட்டோம். தோழரை நேரில் பார்த்ததில்லை என்றாலும் கண்ணீர் மல்கியவாறுதான் இந்த வரிகளை எழுதுகிறேன். இளம் குற்றவாளிகள் என்றாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே!

  தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்.

 7. தோழர் செந்திலின் பண்புகளை நிகழ்வுகளினூடாக விவரித்திருப்பது, தோழரை அவரின் இழப்பிற்கு பிறகு அறிந்து கொள்ள ஏதுவாகிறது. அந்தப் பண்புகளை நாமும் வரித்துக் கொள்வதே தோழருக்கு செய்யும் வணக்கம்.

  வீரவணக்கம் தோழர் செந்தில்

 8. தோழரின் பிரிவினால் வாடும் அவர் குடும்பத்தினா் மற்றும் இயக்கத் தோழா்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  சிலமாதங்களுக்கு முன்பு தோழர் துரை.சண்முகம் அவர்கள் கலந்து கொண்ட யா.ஒத்தக்கடை கூட்டத்தின் போது தோழர் செந்திலை பார்த்திருக்கிறேன்.

  கண்டிக்கப்படவேண்டிய செயல்

 9. தோழர் செந்திலுக்கு என்னுடைய வீரவணக்கங்கள். அவரை இழந்து வாடும், குடும்பத்திற்கு எனது அஞ்சலியை தெரிவித்துகொள்கிறேன்.

 10. உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈந்து அதை இந்த சொரணை கெட்ட சமூகத்திற்கு விமர்சனமாகவும் வைத்துவிட்டு சென்றிருக்கும் தோழருக்கு எனது வீரவணக்கம் !

 11. இப்படி நல்லவர்களை கொல்வது தான் தமிழர்களின் வீரம், அந்த மண்ணின் அழகு..மதுரை 2100ம் ஆண்டு ஆனால் கூட, இப்படிதான் இருக்கும். கொலை செய்யுமளவு தைரியம் கொடுத்த தே…மவனுங்களை மொதல்ல சாவடிக்கனும்.

 12. ஒரு மக்கள் போராளியை சமூகம் இழந்திருக்கிறது… இழப்பு ஈடு செய்ய முடியாயது… வீர வணக்கம்…

  அவரது குடும்பத்தினர் மற்றும் புஜதொமு அமைப்பினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்…

 13. மகஇக வெறும் வீரவணக்கத்தோடு முடித்து கொள்ள போகிறதா? அநியாயமாக கொல்லப்பட்ட தோழருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

 14. ” துரோகிக‌ளின் ம‌ர‌ண‌ம் இற‌கை விட‌ இலேசானது, ம‌க்க‌ளின் ந‌லன்க‌ளுக்காக வாழ்ந்த‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ணம் மலையை விட‌ க‌ன‌மான‌து”

  தோழரின் இழப்பென்பது மீட்டெடுக்கவியலா இழப்புத்தான். போராட்டங்களினூடேயே அவரின் வாழ்வுப் பயணம் அமைந்திருந்தது. யாவரும் இப்படித்தான் வாழவேண்டுமென்பதின் எடுத்துக்காட்டு! தோழர் செந்திலுக்கு வீர வணக்கம்!!

 15. பள்ளிபாளையம் …பேரளம்,,,இப்போ ஒத்தகடை …அவர்களது குடும்பங்களை நினைக்க மிக வருத்தமாக இருக்கிறது

 16. சகோதரர் செந்தில் அவர்களுக்கு வீரவணக்கங்கள் ! குழந்தைகளை நினைத்தால் வேதனை முட்டுகின்றது.

  ஆதவன்.

 17. தோழர் செந்திலுக்கு என்னுடைய வீர வணக்கம்..

  தோழர்.செந்திலின் இழப்பால் ஏற்படும் வருத்தம் கொலையாளிகளின் மீதான வெறுப்பாக மாறுவது இயல்புதான்.. ஆனால் அந்த வெறுப்புக்குரிய சரியான நபர்கள் அவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நாறிப் புழுத்துப் போன, கேடு கெட்ட, பிற்போக்குத்தனத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த சமூகத்தின் மீதும், அதை அப்படியே பாதுகாக்க நினைக்கும் வெட்கங்கெட்ட அரசியல் வாதிகளின் மீதும்தான் அந்த வெறுப்பு பாய வேண்டும்.

  அவர் விட்ட பணியை தொடர்ந்து செய்து முடிக்க அனைவரும் புரட்சிப் பாதையில் அணி திரள்வோம்..

 18. //இறுதியில் அவ‌ர் க‌ரைத்த‌ ப‌சையிலேயே அவ‌ரின் அஞ்ச‌லி சுவ‌ரொட்டி ஒட்ட‌ப்ப‌டும் துய‌ர‌ம் தோழ‌ர்க‌ளின் நெஞ்சை பிழிந்த‌து.// தனக்கான கண்ணீரஞ்சலி போஸ்ட்டர் ஓட்டும் உழைப்பிலும் கூட பங்கெடுத்துளார் அதுதான் உழைப்பின் மகத்துவம்.
  நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்பதுண்டு தோழர் என்பதற்கும் நண்பர் என்பதற்கும் என்ன வித்யாசம் என்று அப்போதெல்லாம் அதற்க்கான பதில் சொல்லத்தெரியவே இல்லை. இப்பொது புரிகிறது இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்பது வெறும் உச்சரிப்பு மட்டுமே அல்ல அது உள்ளத்தின் உணர்வென்று. ஆம் நம்மோடு கூடவே இருந்து வந்த நண்பன் ஒருவரை இழந்தால் மட்டுமே வரும் அளவுக்கு இதயம் வலிக்கிறதே முகம் அறியாமல் பெயர் தெரியாமல் ஏன் இப்படி ஒருவன் வாழ்ந்துவந்தான் என்பதுகூட தெரியாத நிலையில் செந்தில் எனும் ”தோழர்” ரவுடிகளால் கொல்லப்பட்டார் எனும் செய்தி கேட்டு ஆத்திரமும் அழுகையும் ஒருங்கே அடக்கமுடியாமல் வருகிறதே இதுதான் தோழனுக்கும் நபனுக்கும் உள்ள வேறுபாடு.
  ”இவன் கொலை கொன்றவர்கள் செய்துகொண்ட தற்கொலையே”

 19. தோழரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றுதான். ஆனால், அவன் லட்சியம் நிறைவேறப்போவது உறுதி.

 20. “நீதி,அமைதி,மனிதாபிமானம் ஆகியவை இவ்வுலகோர் அனைவருக்கும் கிடைக்கவும்,தேவையற்ற பாதிப்புகள்,சுரண்டல்கள்,அகெளரவம் மற்றும் கொடூரம் அழியவும் பாடுபடுபவர்கள் எனது உற்ற நண்பர்கள்”-ஜான்கோல்ட்

 21. May his soul rest in peace….. Just getting angered by these cinematic influences.. It’s hightime people like Vijay, Dhanush, Ajith should be stopped from acting

 22. நாளை 06.11.2011 மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை,நரசிங்கம் சாலையில் தோழர் செந்திலுக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம் ம.க.இ.க. பு.மா.இ.மு. பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெற உள்ளது.ம.க.இ.க. மையக் கலைக்குழு பங்கேற்கிறது.03.11.2011 இரவு 9 மணிக்கு காவல்துறை கூட்டத்திற்க்கு அனுமதி மறுத்தநிலையில் 04.11.2011 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அனுமதி பெறப்பட்டுள்ளது. அனைவரும் பங்கேற்கக் கோருகிறோம்.

 23. மிகவும் வருத்தமளித்த செய்தி. தோழருக்கு என்னுடைய அஞ்சலிகள்.

 24. ஒரு மக்கள் போராளியை சமூகம் இழந்திருக்கிறது… இழப்பு ஈடு செய்ய முடியாயது… வீர வணக்கம்…

 25. பு.ஜ.தொ.மு வின் இளம் தோழர்.செந்திலுக்கு வீர வணக்கங்கள்!
  -நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்.

 26. சகோதரர் செந்தில் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்
  இரு குழந்தைகளை நினைத்தால் மனது வலிக்கிறது
  ஊருக்குப் போகும் செந்திலின் குடும்ப்த்தாரை நேரில் சந்தித்து
  என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆசையாக இருக்கிறது
  இன்ஷா அல்லாஹ் விரைவில் சந்திக்கிறேன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க