Friday, June 14, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?

-

கிங் பிஷர் ஏர்லைன்ஸ்: மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?
சாராய சாம்ராட் விஜய் மல்லையாவுக்கு அனேகமாக இந்நேரம் போதை தெளிந்திருக்க வேண்டும். அவரது விமான கம்பெனி காற்றில் கரைந்த கற்பூரமாய் ஆவியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டு போயிருக்கும் மல்லையா யாரிடம் போய் அழுவார்? கழுதை கெட்டால் குட்டிச் சுவர் தானே.. அதனால் தான் மன்மோகனிடம் கேட்கிறார் – ‘மச்சி ஒரு கோட்டரு சொல்லேன்’. பொதுத்துறை நிறுவனங்களின் கையாலாகாத்தனத்தால் அல்லலுறும் மக்களின் நலனுக்காகவே தனியார்மயத்தை இந்தியாவுக்கு இழுத்து வந்து அறிமுகம் செய்வித்த மன்மோகன் சிங்கோ வெட்கமில்லாமல் மல்லையாவிடம் சொல்கிறார் – ‘உங்கள் கோரிக்கையை அரசு பரிவுடன் பரிசீலிக்கும்’ என்று.

கடந்தவாரம் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் தனது விமான சேவையில் 50% அளவுக்கு ரத்து செய்தது மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம். அந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 100 பைலட்டுகள் பலமாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கப்பட்டதால் திடீரென்று வேலையை இராஜினாமா செய்து விட்டார்கள் என்றும், எரிபொருள் நிறுவனங்கள் தொடங்கி விமான நிலைய வாடகை வரை திரும்பிய பக்கமெல்லாம் கடன் வைத்திருப்பதாகவும் இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ‘கைல காசு வாய்ல தோசை’ (cash-and-carry) என்கிற முடிவுக்கு வந்து விட்டதாலும் தான் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தால் விமானங்களை இயக்க முடியாமல் போனது என்று  செய்திகள் வெளியாகின.

2003-ம் ஆண்டு மல்லையாவால் நிறுவப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2005-ம் ஆண்டு வாக்கில் தனது விமான சேவையைத் துவக்குகிறது. அன்றிலிருந்து இன்றைய தேதி வரையில் அந்நிறுவனம் தொடர்ச்சியாக நட்டக்கணக்கு தான் காட்டி வருகிறது. கிங்பிஷர் நிறுவனத்தின் மொத்தக் கடன் சுமார்  7000 கோடி ரூபாய்கள். இந்தக் கடன்கள் அனைத்துக்கும் அரசுத்துறை வங்கிகளும் சில தனியார் வங்கிகளும் உத்திரவாதப் பத்திரங்கள் அளித்திருக்கின்றது.

தற்போது ஒட்டுமொத்தமாக மட்டையாகிக் கிடக்கும் தனது மீன்கொத்திப் பறவையை மீண்டும் பறக்கவிட அரசின் உதவியை நாடியுள்ளார் மல்லையா. அவர் அரசாங்கத்தை அணுகியிருப்பதைக் கண்ட அவரது போட்டித் தரகு முதலாளிகள், ஆளுக்கொரு ஈயச்சட்டியைத்  தூக்கிக் கொண்டு வரிசை கட்ட ஆரம்பிக்கவே, ராகுல் பஜாஜ் உள்ளிட்ட தரகுமுதலாளிகள் அரண்டு போய் ‘கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு பெயில் அவுட் கொடுக்கக் கூடாது’ என்று அலறுகிறார்கள். மல்லையாவோ, ‘நாங்கள் பெயில் அவுட் செய்யும்படி கேட்டதுமில்லை கேட்கப்போவதுமில்லை’ என்று சவடால் அடித்திருக்கிறார். இது ஒரு அண்டப் புளுகு.

மக்களை ஏமாற்றுவதிலும் அதற்கு அரசை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பேனியைத் துவக்கும் மல்லையா, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் தருவதை விட அதிகமான வட்டியைத் தருவதாக வாக்களிக்கிறார். இதை நம்பிய அப்பாவி மக்கள் தங்களது பணத்தை இவரது நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். இப்படி மக்களிடமிருந்து வசூலித்த முதலீட்டை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்ட மல்லையா, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாற்றியிருக்கிறார்.

இது தொடர்பான வழக்கு இன்றும் நடந்து வருகிறது. பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு இந்த வழக்குகளை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்தும் விட்டார். அன்றைக்கு மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் நிதியை யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு கள்ளத்தனமாக மாற்றிக் கொள்ளவும், அதற்கு நட்டக் கணக்கெழுதி நிறுவனத்தின் பெயரை மாற்றி மஞ்சக்கடுதாசி கொடுக்கவும் அரசு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் மல்லையாவுக்கு உதவியது ஆளும்வர்க்கம் தான். மெக்டவல் க்ரெஸ்ட் நட்டமடைந்து விட்டதாகவும் அதற்கு அரசு கைகொடுத்து (பெயில் அவுட்) உதவ வேண்டுமென்றும் மல்லையா வைத்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இன்றுவரை மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் போன திசை இன்னதென்று தெரிந்தும் அரசு மௌனமாகவே இருந்து வருகிறது.

அடுத்து, தற்போதைய பிரச்சினையைப் பொருத்தமட்டில், கிங்பிஷர் என்றில்லாமல் தனியார் விமான நிறுவனங்கள் அனைத்துக்கும் 2004-ம் ஆண்டிலிருந்தே பல்வேறு வகையான சலுகைகளை அரசு அள்ளிக் கொடுத்துள்ளது. உள்நாட்டில் வருமானம் கொழிக்கும் வழித்தடங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்த மன்மோகன் அரசு திட்டமிட்டே பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை படுகுழிக்குள் தள்ளியது. அதுவும் போக, ஏர் இந்தியாவின் சக்திக்கும் மீறி 111 விமானங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்கும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டதன் மூலமும், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இணைப்பின் மூலமும் இந்நிறுவனங்களை 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும் 46,000 கோடி ரூபாய் கடனிலும் சிக்கவைத்துள்ளனர்.

சந்தையில் தமக்குப் போட்டியாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் காலை ஒடிக்கச் செய்து விட்டு தான் தனியார் விமான நிறுவனங்கள் போட்டிக் களத்துக்கே வந்தன. இத்தனை சலுகைகளையும் மீறித்தான் கிங்பிஷர், ஜெட்ஏர்வேய்ஸ் உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் நட்டக்கணக்குக் காட்டுகின்றன. தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் காலை ஒடித்தால் மட்டும் போதாது, தலையில் பெரும் பாரத்தையும் தூக்கி வையுங்களேன் என்று மல்லையா கேட்கிறார். அதாவது, ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தமது டிக்கெட் விலைகளை உயர்த்த வேண்டுமாம். ஆக, ஏற்கனவே குழிக்குள் தள்ளி விட்டது மட்டும் போதாது, கூடவே மண்ணைப் போட்டு நிரவி விடுங்கள் என்பதே மல்லையாவின் கோரிக்கை.

இது ஒருபுறமிருக்க, கடந்த  மார்ச் மாதம் கிங்பிஷர் நிறுவனத்திற்கு கடனளித்த 13 வங்கிகள் அதன் 23.21% பங்குகளை வாங்கியுள்ளன. தனது 7000 கோடி கடனில் 750 கோடிகளை பங்குகளாக மாற்றி வங்கிகளின் தலையில் கட்டியுள்ளார் மல்லையா. அந்த சமயத்தில் கிங்பிஷர் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 64.48 ரூபாய்களாக இருந்தது. தற்போது அதன் பங்கு மதிப்பு 19.65 ரூபாய்களாக வீழ்ந்திருக்கும் நிலையில் ஏற்கனவே தனது நட்டத்தை மக்கள் மேல் சுமத்தி விட்டார் மல்லையா. பெயில் அவுட் என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை. துவங்கிய நாள் முதலாக நட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக சொல்லும் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நூற்றுக்கணக்கான கோடி மக்கள் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்தின் 83% தனியார் விமானக் கம்பெனிகளின் ஆதிக்கத்தில் தான் உள்ளன. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவோ வெறும் 17% சந்தைக்குள் முடக்கப்பட்டுள்ளது. ஆக, எரிபொருள் கடன், வருமான வரியும் கட்டவில்லை, விமானநிலைய வாடகையில் கடன், விமானத்தில் தண்ணீர் சப்ளையில் இருந்து சாப்பாடு சப்ளை வரை செய்யும் அனைவரிடமும் கடன் என்று திரும்பிய பக்கமெல்லாம் கடனையும் வைத்துக் கொண்டு – அரசின் உதவியோடு பெரும் சதவீதத்திலான சந்தையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட இந்தத் தனியார் விமான நிறுவனங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை என்பது தான் இவர்களின் யோக்கியதை.

இந்திய மக்கள் தொகையில் விமானச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அரை சதவீதத்திற்கும் குறைவு. இந்த சிறிய மக்கள் பிரிவினருக்கான சின்னஞ்சிறு சந்தையை விழுங்க தனியார் விமான நிறுவனங்களுக்கிடையே நடந்த நாய்ச்சண்டைகள் இன்றைக்கு அவர்கள் ஒரு முட்டுச் சந்துக்குள் சிக்கிக் கொண்டு விழிக்கும் நிலைக்கு ஆளாக ஒரு காரணம். அமித உற்பத்தியும் அதற்கான சந்தையைக் கைப்பற்ற நடக்கும் குத்துப்பிடி சண்டைகளுமே முதலாளித்துவ சந்தை விதி. இந்த விதிகளையும் அதிலிருக்கும் சவால்களையும் முதலாளிகள் அறிந்தேயிருக்கிறார்கள். அதையும் மீறி இந்த சொற்ப சந்தையையும் கபளீகரம் செய்து தானே தனியாய்த் தின்ன வேண்டும் என்கிற பேராசை தான் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போதும் புதிய விமானங்கள் வாங்க ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஒப்பந்தம் போட வைக்கிறது.

இன்னொரு பக்கம், மல்லையாவின் ஊதாரித்தனம் ஊரறிந்த இரகசியம். கடந்த மாதத்தில் மட்டுமே சரக்குப் பார்ட்டிகளில் கலந்து கொள்ள மூன்று முறை அமெரிக்காவுக்குத் தனி விமானத்தில் பறந்துள்ளார். ஒவ்வொரு முறையும் 70 லட்சங்களுக்குக் குறையாமல் செலவு செய்தும் உள்ளார். 89 மில்லியன் டாலர் (சுமார் 450 கோடி ரூயாய்) மதிப்பிலான சொகுசுக் கப்பலில் உலகத்தைச் சுற்றி வருவதும், அழகான மாடல்களை அம்மணமாய் நிற்க வைத்து காலண்டர்கள் வெளியிடுவதுமாக உல்லாசப் பிரியராக உலகத்தை வலம் வந்த மல்லையா துடிப்பான இந்தியாவின் குறியீடாகக் கருதப்பட்டவர். மேல் நடுத்தரவர்க்க யுப்பிகளின் கனவுக் கண்ணனாகவும், பணக்கார இந்தியர்களின் கொண்டாட்டப் பெருமிதமாகவும் கருதப்பட்ட மல்லையா, தனது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிய கடனையே திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கிறார் என்பது போல முதலாளித்துவப் பத்திரிகைகள் சோக கீதம் வாசிக்கின்றன.

உண்மையில் மல்லையாவின் சீமாச்சாராய தொழிலே சில ஆயிரம் கோடி சொத்து மதிப்புடையது. அரசாங்கங்களே குடியை கோவிலாக வளர்த்து வரும் நிலையில் மல்லையா இதில் சுருட்டும் லாபம் பல மடங்காகும். இது போக ஐ.பி.எல் பெங்களூரூ அணியினை ஏலமெடுத்து அதையும் இலாபகரமான தொழிலாக நடத்துவதையும் நீங்கள் அறிவீர்கள். மல்லையாவின் அம்மண அழகிகள் காலண்டர்களே பல கோடி செலவில் எடுக்கப்பட்டு பெரும் விளம்பரங்களுடன் விநியோகிக்கப்படுகின்றன. இத்தகைய கஸ்மாலத்துக்கு இந்திய மக்கள் பணத்தை கொடுத்து நட்டத்தை சரி செய்ய நினைப்பது அயோக்கியத்தனமில்லையா?

முதலாளித்துவம் அம்மணக்கட்டையாய் நின்று கொண்டிருக்கும் நிலையில் முதலாளித்துவப் பத்திரிகைகளோ ‘அதோ பாருங்கள் நம் மாமன்னர் ஜொலிக்கும் தங்க உடையணிந்து நகர்வலம் வருகிறார்’ என்று கதையளக்கின்றன. அரசு உதவினால் மல்லையா தப்பிவிடுவார் என்று நம்பிக்கையூட்டுகின்றன. மல்லையாவின் ஊதாரித்தனமும் அவரது விமான நிறுவனத்தின் கையாலாகாத்தனமும் பல்லிளித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிவில் போக்குவரத்துத் துறைக்கு முன்னறிவிக்காமல் விமானங்கள் ரத்து செய்ததற்கும், பயணிகளைத் தவிக்க விட்டதற்கும், தனது நட்டத்தை வங்கிகளின் தலையில் சுமத்தியதற்கும் மல்லையாவைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று இப்பத்திரிகைகள் கோரவில்லை.

இந்தச் சிக்கலில் இருந்து மல்லையாவை அரசு எவ்வாறு கைதூக்கி விடலாம் என்கிற ஆலோசனைகளைத் சொல்லிக் கொண்டுள்ளன. தனியார் விமானக் கம்பெனிகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பது, வரியைக் குறைப்பது, விமானங்களுக்கான எரிபொருள் விலையைக் குறைப்பது, விமான நிலைய வாடகையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுத்து இத்துறையைக் காப்பாற்ற வேண்டுமென்று முதலாளித்துவ ஊடகங்கள் எழுதுகின்றன.

சுமார் 5 கோடி குடும்பங்களை வாழ வைக்கும் சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் நிறுவனங்களை நுழைய விட்டதன் மூலம் அழிவுக்குள்ளாகியிருக்கும் அக்குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயத்தையோ சிறு தொழில்களையோ காப்பாற்ற வேண்டுமென்றோ இந்தப் பத்திரிகைகள் இதுவரை கோரியதுமில்லை;  இவை குறித்துக் கவலைப்பட்டதுமில்லை. இப்போது ஒரு ஊதாரியின் நட்டத்தை மக்களின் தலையில் எவ்வாறு கட்டலாம் என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. மன்மோகன் சிங்கோ ‘அரசு பரிவோடு பரிசீலிக்கும்’ என்கிறார். இது யாருக்கான அரசு என்பதில் இதற்கு மேலும் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 1. மிக அருமையான பதிவு.னான்நினைத்ததையெல்லாம் எழுதி விட்டேர்கள்.நன்றி.

 2. அரசாங்கப் பணத்தை எக்காரணம் கொண்டும் இது போன்ற ஊதாரி நிறுவனங்களுக்கும், ஜேப்படி கொள்ளையருக்கும் வாரி இறைக்கக் கூடாது! போட்டிநிறுவனங்கள் கோஏர் மற்றும் ஸ்பைஸேர் ஆகியவை லாபத்தில் இயங்குவதாகவும், மல்லையாவின் நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் செய்திகள்!

 3. இதெல்லாம் இந்த நாட்டின் தலையெழுத்து. இன்னமும் இந்த காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடும் நம்ம மாக்கள் இருக்கும் வரை இந்த பாரதம் உருப்புட போவதில்லை.

 4. அதியமானுக்காக வெயிட் பன்னாமல் அவரது பின்னூட்டங்களை இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

  1) இதற்குக் காரணம், இந்தியாவின் சோசலிசமே. மட்டையா.. ஸாரி மல்லையா ஒரு சோசலிசஸ்டு என்று அனுபவம் வாய்ந்த நிரூபர் ஒருவர் கூறினார்.

  2) இந்தியாவில் இருப்பது க்ரோனி கேப்பிடலிசம் (அப்போ உண்மை கேப்பிடலிசம்.. அது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கு)

  3) மல்லையா ஒரு முதலாளியே கிடையாது. அவனை வைத்தெல்லாம் இதப் பேசாதீங்க. உங்களுக்கு எல்லாத்தையுமே மறுத்துப் பேசும் வியாதி உள்ளது.

  4) ///அவரது விமான கம்பெனி காற்றில் கரைந்த கற்பூரமாய் ஆவியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டு போயிருக்கும் மல்லையா யாரிடம் போய் அழுவார்?// கம்யூனிஸ்டுகளுக்கு விஞ்ஞான அறிவு இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள். ஞான் படித்தவரை விமானம் காற்றில் கரைவதில்லை. அதுவும் ஓனர் ஓட்டாண்டி ஆனதற்கு விமானம் கரைவதாக எழுதுவது கொஞ்சம் ஓவர். இது பற்றி பின்வரும் சுட்டிகளில் ஞான் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளேன் (முடிந்தால்) படித்து பாருங்கள்.

  5) //அந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 100 பைலட்டுகள் பலமாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கப்பட்டதால் திடீரென்று வேலையை இராஜினாமா செய்து விட்டார்கள் என்றும், // இதற்காகத்தான் சங்கம் கூடாது என்பது. சம்பளம் இல்லையெனறால் வேலையை நிறுத்திக் கொள்வார்கள் எனில் மல்லையாவிற்கும் அதுதான் நில்மை. அவரது தொழிலிம் நஸ்டமடைந்தால் குடித்து விட்டு உல்லாசமாக சுற்றுவதத தவிர அவரால் வேறென்ன செய்ய முடியும்? அதிகபட்சம் ஊர் பணத்தை அவரது உல்லாச உலையில் போடச் சொல்லி அரசை கேட்க முடியும் அததச் செய்தால் குற்றம் என்று கூறி காமெடி செய்கிறீர்களே? இது நியாயமா?

 5. மல்லையா மல்லை குடிப்பவன் போல, இவனெல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு TV சேனல்கள் பன்ற வேலை இருக்கே…சரியான காமெடி. மங்குனி மன்னுமோகன் பெயில் அவுட் பன்னாலும் பன்னுவான்.. திருட்டுப் பய.

 6. இவனால தொழில் செய்ய முடியலனா கடையை மூடிட்டு போகவேண்டியது தனே..

 7. மல்லையா கிட்ட காசு வாங்கிட்டுதான் எல்லா கட்சியும் தேர்தலில் நிற்கின்றன அவன் ஏர்லைன்ஸ் ஆரம்பிச்சா எல்லா அரசு வங்கிகளும் போட்டி போட்டு நம்ம பணத்தை எடுத்து கொடுக்கும், நஷ்டம் ஆய்ட்டா நம்ம வரிப்பணத்திலேர்ந்தே பெயிலவுட்.ஓரளவு புரிகிறது வினவு ……..ஏன் நக்சலைட்டுன்னு உங்களை எல்லாம் தேடி தேடி சுட்டு கொல்கிறாகள் என்பது. இவனுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் மற்றும் வரிச்சலுகைகளின் தொகையை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா?இவன் ஒரு குடும்பம் சாப்பிட்ட காசு எதனை குடும்பங்களின் வறுமையை போக்கியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள முடியுமா?

  • மல்ல்யாவுக்கு குடுத்த கணக்கு பத்தி தெரியாது, ஆனா அரசு வங்கிகள் கார்பரேட்டுகளுக்கு குடுத்த வராக் கடன் என்று காந்தி கணக்கில் எழுதித் தள்ளிய அமொன்ட்டு சுமார் 59,000 கோடி. எத்தன குடும்பம் வாழ்ந்திருக்கும்னு நீங்களே கூட்டி கழிச்சுப்பாருங்க.

   • நாம ஒரு பைக் வாங்கி ஒரு ரெண்டு மாசம் ட்யூ கட்டலன்னா, பைக்கை தூக்கிட்டு போயிடுவானுங்க காவாலிப் பசங்க. ஆனா கார்ப்பொரெட்காரனுக்கு மட்டும் காபந்து!!!

 8. நல்ல விபரங்கள், நச்சுனு நாதாரி அரசின் செவிட்டில் அறைகிற பதிவு.வெவசாயத்த வாழவைக்கனுமா?வேணாம், சோறு இல்லைனா மல்லையாவும்,மன்னுமோகனும்,முதலாளிகளும் பணத்தை கத்தை கத்தையா தின்பாங்க.

 9. ஒரு சிறு திருத்தம் மல்லையா தன் நிறுவனத்தின் பெயரை M/s Krest Finlease Limited எனமாற்றினார் not as you mentioned M/s Mcdowal Finlease Limited. He tactfully left the company by way of inducting new directors. Finally the company was takenover by the erstwhile takeover tycoon. But it went to liquidation. The company was wound up by High Court of Madras by its order dated June 22, 2001.

  தாங்கள் கூறியது போல இன்னும் வழக்குகள் EoW பொருளாதார குற்றப்பிரிவில் நிலுவையில் இருந்தாலும், பெரும்பான்மையான வைப்பு தொகையாளர்களுக்கு அசலில் 30 முதல் 50 சதவீதம் பணம் கொடுத்து வழக்குகள் முடிக்கப்பட்டுவிட்டன

 10. கிங்க்பிஷேர் விமான நிறுவனத்தை மொத்தமாக அருசுடமை ஆக்கவேண்டும்.

 11. என்னுடைய தளத்தில் kingfisher நிறுவனம் எந்த தேதியில் எந்த வங்கி மற்றும் நிறுவனத்திடம் எவ்வளவு கடன் வாங்கியுள்ளார்கள் என்ற விவரத்தை நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து எடுத்து பதிவிட்டுள்ளேன். http://velvetri.blogspot.com/2011/11/blog-post_5295.html

 12. அக்கவண்டன் அகமது,

  இத்தனை காலம் ஆகியும் எனது கருத்துகளை அரை சதம் கூட உள் வாங்கவில்லை என்பதே தெரிகிறது. உளருவதுக்கும் ஒரு அளவு இல்லையா ? :))

  ஏற்கெனவே இங்கு சொன்ன விசியம் தான் :

  ராகுல் பஜாஜ், மல்லையா பற்றி மிக சரியாக சொன்னதை சமீபத்தில் தான் இங்கு எடுத்தியம்பினேன். அரசு ’உதவி’ செய்யக்கூடாது.

  வினவு : மல்லையாவுக்கு அரசு உதவி கிடையாது என்பது தான் தெளிவாகிவிட்டது. அவரும் அப்படி கோரப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார். இப்ப ஏன் இப்படி ஒரு கட்டுரை ? செய்திகளை படிப்பதில்லையா ?

  • அதியமான் சார்,
   இந்த விஷயத்துல உங்க டோட்டல் ரியாக்ஷன் இவ்ளோதானா?!! (விவேக் பாணியில் படிக்கவும்)

   //கடந்த மார்ச் மாதம் கிங்பிஷர் நிறுவனத்திற்கு கடனளித்த 13 வங்கிகள் அதன் 23.21% பங்குகளை வாங்கியுள்ளன. தனது 7000 கோடி கடனில் 750 கோடிகளை பங்குகளாக மாற்றி வங்கிகளின் தலையில் கட்டியுள்ளார் மல்லையா.//

   ஆரம்பிச்ச காலத்திலேருந்து தொடர்ந்து ஆறு வருஷமா நஷ்டத்துல இயங்குற ஒரு கம்பெனியிலயா இவ்ளோ முதலீடு பண்ணுவாங்க??! பங்குச் சந்தையில முதலீடு பண்ணனும்னு நெனச்சா நமக்குக் கிடைக்கிற முதல் அட்வைசே, அந்தக் கம்பெனியின் கடந்தகால வளர்ச்சியையும், லாப நஷ்டத்தையும் பார்க்கணுங்கிறதுதான். அது தெரியாமலா வங்கிகள் இப்படி பங்குகளை வாங்கிக் குவிப்பாங்க?

   ஆக, 13 வங்கிகளின் அதிகாரிகளுக்கும், தொடர்புள்ள அரசுத் துறை மந்திரிமார்களுக்கும் போக வேண்டியது போயாச்சு. அதுதானே? பெயிலவுட் ஒன்னும் நீ செய்ய வேணாம்.. உன்கிட்ட இருந்த பணத்தை “எப்படி வாங்கணுமோ அப்படி” வாங்கிக்கறேங்கறதுதானே இது?

   • //ஆக, 13 வங்கிகளின் அதிகாரிகளுக்கும், தொடர்புள்ள அரசுத் துறை மந்திரிமார்களுக்கும் போக வேண்டியது போயாச்சு. அதுதானே? பெயிலவுட் ஒன்னும் நீ செய்ய வேணாம்.. உன்கிட்ட இருந்த பணத்தை “எப்படி வாங்கணுமோ அப்படி” வாங்கிக்கறேங்கறதுதானே இது?///

    United Breweries (அதுதான் மல்லையாவின் முக்கிய நிறுவனம்) இன் 90 சத பங்குகளை அடமானமாக அளித்துதான் வங்கி கடன் பெற்றதாக ஒரு தகவல். முக்கியமாக தனியார் வங்கியான ICICIஇடம் அடமானத்தில் உள்ளன. ஆனால் அரசு வங்கிகளில் இந்த UB பங்குகள் அடமானம் உள்ளதா என்று சரியாக தெரியவில்லை. அரசு வங்கி என்றாலே, அதிகார்களை ‘சரிகட்டி’ இஸ்டத்துக்கு கடன் வாங்கி, பிறகு ஏமாற்றுவது இந்தியாவில் பல பத்தாண்டுகளாக நடக்கிறது. (மொதல்ல வங்கிகளை 1969இல் அரசு ‘தேசியமயமாக்கியதே’ பெரும் தவறு. இதுதான் வங்கி துறை ஊழல்களுக்கு ஊற்றுகண்). ஆனால் தனியார் வங்கிகளில் அத்தனை எளிதாக ஊழல் செய்ய முடியாது. அப்படியே நடந்தாலும், அதற்கான ’விலையை’ அதன் பங்குதார்கள் மட்டும் தான் ஏற்க்க வேண்டியிருக்கும். அரசு அல்ல. க்லோபல் ட்ரஸ்ட் வங்கி என்ற தனியார் வங்கி, ஊழல் செய்து திவாலான போது, all its shareholders were wiped out. but in the case of nationalised Indian Bank (நம்ம டி.வி.கோபாலகிருஸ்ணன் மற்றும் மூப்பானர் மற்றும் பல அரசியல் தலைகளில் லீலைகளால்) திவாலான போது, அரசு சில ஆயிரம் கோடிகளை கொட்டி மீட்க வேண்டியிருந்தது. எனேனில் அதன் உரிமையாளர் அரசு தான்.

    எனவே திவாலாகும் தனியார்களை, திவாலக அனுமதிப்பதே சுதந்திர சந்தை பாணி. (இன்னும் முழுசா இது அமலாகவில்லை). அதன் மூலம் உண்மையில் ‘திறமையான’ மற்றும் நல்ல நிறுவனங்கள் மட்டும் தழைக்கும், மோசமாக நிர்வாகிக்கப்படும் நிறுவனங்கள் அழியும்.

    • //(இன்னும் முழுசா இது அமலாகவில்லை)//

     அது என்றுமே முழுசா அமலாகாது. கவலை வேண்டாம்.

    • //அரசு வங்கி என்றாலே, அதிகார்களை ‘சரிகட்டி’ இஸ்டத்துக்கு கடன் வாங்கி, பிறகு ஏமாற்றுவது இந்தியாவில் பல பத்தாண்டுகளாக நடக்கிறது. (மொதல்ல வங்கிகளை 1969இல் அரசு ‘தேசியமயமாக்கியதே’ பெரும் தவறு. இதுதான் வங்கி துறை ஊழல்களுக்கு ஊற்றுகண்). //

     ஆனாப் பாருங்க அரசு வங்கி திவாலகலை. 2007ல் ரிசசெசன்லயும், இப்பொ நடக்கிற டபுள் டிப்பு ரிசசெஷ்னலயும் திவாலாகி உலகத்தையே கொல வெறியோட அலைய விட்டுருக்கிறது தனியார் வங்கிகள்தான். இப்பொ அதியமான் திரும்பயும் முதல்ல இருந்து வருவாரு பாருங்க.

     • உமக்கு பதில் சொலவது வேஸ்ட் அகமது. இந்தியாவில் தான் அரசு வங்கிகள். அமெரிக்காவில் அப்படி எல்லாம் எந்த அவதாரமும் கிடையவே கிடையாது. திவால் என்பது சந்தை பொருளாதாரத்தின் ஒரு அங்கம் தான். என்ன, உருப்படியா, ஒழுங்கா திவாலாக விடனும். அதற்க்கான ‘விலையை’ யார் பொறுப்பேற்பது என்பதில் தான் விவாதம். நான் எழுதியதை படிப்பதே இல்லை போல.

      • //திவால் என்பது சந்தை பொருளாதாரத்தின் ஒரு அங்கம் தான். என்ன, உருப்படியா, ஒழுங்கா திவாலாக விடனும். அதற்க்கான ‘விலையை’ யார் பொறுப்பேற்பது என்பதில் தான் விவாதம். நான் எழுதியதை படிப்பதே இல்லை போல.

       // எத்தன் வருசமா விவாதம் செய்வீங்க? திவாலான வங்கிகளுக்கு மக்கள் வ்ரிப்பணத்த அள்ளி இறைக்கும் நாடுகள் சோசலிச நாடுகளா? அவவ முதலாளித்துவ நாடுகள் இல்லையெனில், என்ன வகைப்பட்ட நாடுகள் அவை? அவை முதலாளித்துவ நாடுகள் இல்லையெனில் அங்குள்ள முதலாளிகள் முதலாளீகள் இல்லையா? அவை முதலாளித்துவ நாடுகள் இல்லையெனில் மூன்னூறு வருசமாகியும் எல்லா நாட்டுலையும் தனியார் முதலாளி திவாலனதுக்கு மக்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பதுதான் நடக்கிறதே ஏன்? மேற்படி நாடுகள் முதலாளித்துவ நாடுகள் இல்லையென்று எஸ்கேப்பு ஆகும் நீங்கள் முதலாளித்துவத்தின் சாதனைகளாக அதே மேற்படி நாடுகளள முன்வைப்பது மிக வக்கிரமானதும், மோசடியானதும் இல்லையா? இது பற்றி உங்கள் கிட்னிக்கு ஏதேனும் புரிபடுகிறதா?

  • குடுத்தா இந்த இந்த குடிகாரன் வேணாம்ன்னா சொல்லப்போறான் ? முதலாளிகளோட நிர்வாக லட்சணம் எப்படி இருக்குங்கிறதுக்கு தான் இந்த ஊதாரியை பற்றி எழுதப்பட்டிருக்கிறது அதியமான்.

   • குடுக்கவே கூடாது என்பது தான் உண்மையான சந்தை பொருளாதார பாணி. சரி இதெல்லாம் இருக்கட்டும், மதுவிலக்கை ஆதரிக்கிறீர்களா என்ன ? காந்திய பாணியில்.

    உங்க சோவியத் ரஸ்ஸியாவில் வோட்க்கா தான் தேசிய பானம். கம்யூனிஸ்ட் கட்சியிலும் பெரும் குடிகார்கள் மிகுந்திருந்த நாடு. வெள்ளம் போல் வோட்கா அங்கு ஒடியது. இன்றும் தான். மல்லையா தனியார் மதுபான தொழிலதிபர். அவர் நிறுவனங்களை தடை செய்ய வேண்டுமா அல்லது அரசே அதை எடுத்து நடத்த வேண்டுமா ? வினவு என்ன சொல்கிறது. சும்மா ’சாராய சாம்ராஜியம்’ என்று பேசினால் எப்படி ? மேலும் இந்தியாவில் மது மீது மிக மிக அதிக வரிகள் விதிக்கப்படுகின்றன. இரண்டு காரணங்கள் : அரசுக்கு வருமானம். இரண்டாவது மலிவாக கிடைத்தால் பலரும் குடித்து கெட்டழிவார்கள் என்ற விசியம்.

    நான் அவ்வப்போது மிதமாக குடிப்பவன் தான். self control மிக அதிகம் உண்டு. என்னை பற்றி பிரச்சனை இல்லை. ஆனால் குடியினால் சீரழிந்து, நாசமான குடும்பங்களை, ஏழைகளை நிறைய பாத்திருக்கிறேன். இந்த விசியத்தில் மதுவிலக்கு வேண்டுமா என்பது குழப்பமாகவே உள்ளது.

    வினவு : நீங்க அதிகாரத்தை செம்புரட்சி மூலம் கைபற்றினால், என்ன செய்ய போகிறீக ? முழு மதுவிலக்கா அல்லது சோவியத் ரஸ்ஸியா போல் அரசே மது தயாரித்து, ’ஜனதா ரம்’ பாணியில் குடிம்மக்களுக்கு ’சேவை’ செய்வீகளா ?

    • //வெள்ளம் போல் வோட்கா அங்கு ஒடியது// அந்த வெள்ளாத்தில் 400 கோடி மக்கள் இறந்ததாக ஒரு பிரபல நிருபர் என்னிடம் மட்டும் கூறினார். இதை விட்டுவிட்டீர்களேஎ அதியமான். வட்டாக்குடிக்கு ரூட்டு எதுன்னு கேட்டா கொட்டப்பாக்கு விலை இவ்வளவுன்னு பதில் சொல்லி அதன் மீது தானே கேள்வி, தானே பதில் என இணைய டி. ராஜேந்தராக நீங்கள் விவாதம் செய்வது நல்ல பொழுது போக்கு. இதற்காகவே உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதியமான்.

     • அகமது,

      நீங்க ஒரு சரியான ஜோக்கர் தான். இருந்தாலும், ஒரு அருமையான விசியத்தை சொல்ல வேண்டியிருக்கு :

      50களில் குருசேவ் ரஸ்ஸிய அதிபாரனார். (அவர் திரிபுவாதி என்று நீங்கே ஒரே போடாக போடுவீக என்பது வேறு விசியம்). அவர் பெரும் குடிகாரர். ஒரு சமயம், ஒரு பார்ட்டியில், தனது சக அமைச்சர் (ஜார்ஜியாவை சேர்ந்தவர்) ஒருவருடன் குடிகையில், போதை ஏறி, தன அமைச்சர் பெருமான், ஜார்ஜிய நாட்டு ’தேசிய நடனத்தை’ ஆட வேண்டும் என்று வற்புறுத்தினார். அமைச்சர் பெருமானும் அப்படி ஆட வேண்டிய கட்டாயம். வாழ்க வோட்கா.

      ரஸ்ஸியா கண்டுப்பிடித்ததில், இரு விசியங்கள் தான் ’உருப்படியானவை’ என்பார்கள் : ஒன்று சாமாவர் என்னும் கரிஅடுப்பு (நம்ம டீக்கடைகளில் இன்றும் உபயோகத்தில் உள்ளன) ; இரண்டாவது ஓட்கா.

      • //ரஸ்ஸியா கண்டுப்பிடித்ததில், இரு விசியங்கள் தான் ’உருப்படியானவை’ என்பார்கள் : ஒன்று சாமாவர் என்னும் கரிஅடுப்பு (நம்ம டீக்கடைகளில் இன்றும் உபயோகத்தில் உள்ளன) ; இரண்டாவது ஓட்கா.

       // யாரு அந்த பிரபல நிருபரா? சினிமா, கலை இலக்கியம், இசை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என பல துறைகளில் இன்றும் ரஸ்யாவின்(அதன் சரிவுக்குப் பிறகும்) கண்டுபிடிப்புகளின், ஆக்கங்களின் பங்களிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வயாரின் நெல்லிக்கனிக்குப் பிறகு எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை என்பது போல பேசுகீறீர்களே? உங்கள் அறியாமையை என்னவென்று சொல்ல?

       • கணக்குபிள்ளை அகமது,

        உமக்கு நகைசுவை உணர்ச்சியே சுத்தமா இல்லை. கிண்டலுக்கு எழுதியதை கூட ‘புரிந்து’ கொள்ளாதவர், ஜோக்கார் மாதிரில் பில்டப் வேறு கொடுகிறீர். :)))

        உம்மிடம் தொடர்ந்து பேசுவது வேஸ்ட் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். எம்மை கிண்டல் செய்ய முயல்றீக ஆனா பதிலுக்கு பழைய ஜோக் ஒன்றை எடுத்துவிட்டால் ட்யூப் லைட் கணக்கா இருக்கிரெ !! உமக்கு ’பதிலடி’ கொடுக்க ‘காஷியர் கண்ணாயிரம்’ என்ற பெயரில் வர்லாம் என்று ஒரு யோசனை !!!

    • இங்கு பிரச்சினை குடியை பற்றியதல்ல எனவே சோவியத் இந்தியாவில் குடி என்கிற ’மாபெரும் பிரச்சினைக்கு’ என்ன செய்யலாம் என்பதை செம்புரட்சி நடந்த பிறகு உட்கார்ந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

     இந்த பதிவு முதலாளிகளின் நிர்வாக லட்சணம் பற்றியது என்பதை நினைவூட்டுகிறேன்.

   • //முதலாளிகளோட நிர்வாக லட்சணம் எப்படி இருக்குங்கிறதுக்கு தான் இந்த ஊதாரியை பற்றி எழுதப்பட்டிருக்கிறது ///

    அப்படியா ? அப்ப வெற்றிகரமாக, அருமையாக நிர்வாகம் செய்யும், பல ஆயிரம் இதர முதலாளிகளின் ‘நிர்வாக லட்சணம்’ பற்றியும் எழுத சொல்லுங்களேன். இதோ, இங்க நாம் உரையாட உதவும் இணையதளத்தின் முதலாளி, கணனி, மென்பொருள் தயாரிப்பு நிறுவன முதலாளிகள், மற்றும் பல ஆயிரம் இதர மொதலாளிகளின் ‘நிர்வாக லட்சணத்தினால்’ தான் உலகம் இன்னும் இயங்கிட்டு இருக்கு. இல்லீனா 1992இல் சோவியத் ரஸ்ஸியா உருகுலைந்தை போல் அனைத்து நாடுகளும் சீரழிந்திருக்கும்.

    • இந்த உலகம் முதலாளிகளால் இயங்கவில்லை. தனது உழைப்பால் தன்னையும், தனது குடும்பத்தையும் மட்டுமின்றி இந்த சமூகத்தையும் அத்துடன் உழைக்காத, எதற்கும் உதவாத சதைப்பிண்டங்களான முதலாளிகளையும் சேர்த்தே பராமரித்துக்கொண்டிருப்பவர்கள் கோடானு கோடி தொழிலாளிகள் தான். தொழிலாளி வர்க்கம் உழைப்பதால் தான் மல்லைய்யா போன்ற ஊதாரிகள் இப்படி குடித்துவிட்டு கும்மாளம் போட முடிகிறது.

 13. // தற்போதைய பிரச்சினையைப் பொருத்தமட்டில், கிங்பிஷர் என்றில்லாமல் தனியார் விமான நிறுவனங்கள் அனைத்துக்கும் 2004-ம் ஆண்டிலிருந்தே பல்வேறு வகையான சலுகைகளை அரசு அள்ளிக் கொடுத்துள்ளது.///

  என்ன பெரிய சலுகைகள். உலகிலேயே அதிக வரி சுமை இந்திய விமான சேவை மீது தான்.

  /// உள்நாட்டில் வருமானம் கொழிக்கும் வழித்தடங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்த மன்மோகன் அரசு திட்டமிட்டே பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை படுகுழிக்குள் தள்ளியது. அதுவும் போக, ஏர் இந்தியாவின் சக்திக்கும் மீறி 111 விமானங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்கும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டதன் மூலமும், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இணைப்பின் மூலமும் இந்நிறுவனங்களை 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும் 46,000 கோடி ரூபாய் கடனிலும் சிக்கவைத்துள்ளனர்.///

  இல்லை. உண்மை அல்ல. ‘திட்டமிட்டெல்லாம்’ இந்தியன் ஏர்லைன்ஸை அரசு ஒழிக்கவில்லை. corruption, mismangement, over staffing, inefficiency are all due to govt ownership. the bureacrats and ministers mint billions in commisions, etc in new purchase of aircrafts.

  இதெல்லாம் இருக்கட்டும், 20 ஆண்டுகள் முன்பு வரை விமான பயணம் என்பது எட்டாக்கனியாகவே பெரும்பாலனவர்களுக்கு இருந்தது. தொலைபேசி சேவையும் அப்படி தான். அன்று விமான கட்டணம் மிக மிக மிக அதிகம். only the fierce competition between private carriers reduced the fares..

  • //இதெல்லாம் இருக்கட்டும், 20 ஆண்டுகள் முன்பு வரை விமான பயணம் என்பது எட்டாக்கனியாகவே பெரும்பாலனவர்களுக்கு இருந்தது. // இப்பயும் தி சேம் பெரும்பாலோருக்கு விமானப் பயணம் எட்டாக்கனிதான். கூடவே சேர்ந்து அடிப்படை மருத்துவம், ஆரோக்யமான உணவு, கல்வி, உத்திரவாதமான வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு(சோசியல் செக்யூரிட்டி என்று சொல்வார்கள் இது பற்றி மேலதிகமாக குழப்பிக் கொள்ள அதியமானுடைய கட்டுரை எதையாவது படிக்கலாம்) இவையும் இன்னும் இன்னும் எட்டாக்கனியாகிக் கொண்டுதான் உள்ளன. கட்டுரைக்கு இதற்கும் என்ன சம்பந்தம் என்று இதை இங்கு சொல்கிறீர்கள்?

   இதே காலகட்டத்தில் வீட்டு வாடகை, அடிப்படை செலவுகள் பழைய விமான டிக்கெட்டைப் போல பயங்கர விலைக்கு உயர்ந்துள்ளது. ரொட்டி இல்லையா கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்ற பிரஞ்சு ராணி போல விமான டிக்கட் விலை குறைஞ்சிருச்சி என்று சொல்வது உள்ளது.

  • ஆமாம் சார். இன்றும் பல கோடி மக்களுக்கு மூன்று வேளை சோறு என்பதே எட்டாக்கனியாகவே இருக்கிறது. (ஆதாரம் : சிங் பிரதர்சின் 32 ரூ. கணக்கு) ஆனபோதிலும், நாட்டின் வளர்ச்சியை “நன்கு” தீர்மானிக்கும் முதலாளித்துவ கோமான்களுக்கு வரிச்சுமை குறைத்து, “சலுகைகள்” நிறைய கொடுத்து, ஃபார்முலா ரேஸ் போன்று வசதி செய்து கொடுக்க வேண்டியது நம் கடமைதான்!

   • ரிஷி,

    ஆம், இந்தியாவில் வறுமை அளவு அதிகம் தான். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட விகிதம் இன்று குறைந்துள்ளது. மேலும் 1950 முதல் 80கள் வரை வறுமை அளவு அப்படியே இருந்தது. காரணம் நமது infamous Hindu rate of GDP growth. அதற்க்கு காரணம் அன்று கடைபிடிக்கப்பட்ட மூடிய பொருளாதார கொள்கைகள்.

    இந்தியா ஒரு வல்லரசு என்றெல்லாம் நான் கனவு காணவில்லை. வறுமையை ஒழிக்காமல இதெல்லாம் வெட்டிபேச்சு. மேலும், இதர நாடுகள் மீது ‘ஏகாதிபத்திய’ பாணி ஆதிக்கம் செலுத்துவதே ‘வல்லரசுகளுக்கான’ டெஃபெனிசன். அது லிபரல் ஜனனாயக பாணிக்கு விரோதமானது.

    இந்த பதிவில் உங்க ஒருத்தர் கூட தான் நிதானமாக விவாதிக்க முடிகிறது. எனவே பழைய பொருளாதார கொள்கைகளின் விளைவுகள் பற்றி சில சுட்டிகளை பார்க்கவும் :

    http://swaminomics.org/?p=1807
    India’s great escape from the socialist zoo

    http://swaminomics.org/?p=2009
    20 years to an economic miracle

    மேலும் இன்று ஏழைகளின் நிலை மற்றும் வறுமை அளவு பற்றி EPWவில் வந்த ஒரு முக்கிய ஆய்வு கட்டுரை இது. EPW ஒரு இடதுசாரி தன்மை கொண்ட பொருளாதார, ஆய்வு ஏடு. சந்தை பொருளாதாரத்தை எதிர்ப்பவர்கள் என்றும் நினைவில் கொள்க :

    Shining for the poor too ?

    https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B-zhDOdupGDUMzFjMDAyOWUtOTI4OS00YmJkLWI2N2UtNTllNTM0ODE2Yjc4&hl=en

    • நன்றி சார். அனைத்தையும் படிக்க நேரம் தேவைப்படுகிறது. உங்கள் அளவிற்கு பட்டறிவு, பரந்துபட்ட அனுபவம் எனக்கு இல்லையெனினும், அனைத்து வகை விஷயங்களையும் ஆழ்ந்து உள்வாங்க என்னளவில் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

  • //என்ன பெரிய சலுகைகள். உலகிலேயே அதிக வரி சுமை இந்திய விமான சேவை மீது தான்.

   // என்ன கொடும பாத்தீகளா? இதயெல்லாம் மீறித்தான் ஏழ சனங்களுக்கு கைக்காசு போட்டு விமானச் சேவ நடத்துறான் முதலாளி, அதுல ஒருத்தன் நஸ்டமானதுக்கு இப்படி கிடந்து வைய்யுறீகளேப்பா இது அடுக்குமா?

 14. பொது துறை நிறுவனங்களை / சேவைகளை அரசு ‘திட்டமிட்டே’ ஒழிக்க, ‘தனியார்மயத்தை’ சுலபமாக செயல்படுத்த சதிதிட்டம் (உலக வங்கி, தனியார் ‘கொள்ளையர்கள்’, etc, etc மூலம்) தீட்டி செயல்படுத்துபடுகிறது என்ற ‘அரிய கண்டுபிடிப்பை’ வினவு மற்றும் ’தோழமை சக்திகள்’ சில ஆண்டுக்ளாகவே சொல்லி வருகின்றனர். எப்படீங்க நீங்க மட்டும் இப்படி கரெக்டா தப்புகணக்கு போடரீக ? :))

  பொது துறை நிறுவனங்களை ஒழிக்க சதி எதுவும் தேவையில்லை. அதை நடத்தும் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களே போதும். லஞ்சம், மேலும் லஞ்சம் ; எல்லா விசியங்களிலும் (purchase, sales, expansion, recruitment of staff, transfers, promotions, appointments of MDs, etc, etc) சகட்டும் மேனிக்க நடப்பதே உண்மையான காரணி. இது பொதுதுறை நிறுவனங்கள் ஆரம்பித்த காலங்களில் இருந்தே துளிர்விட்டது. ஏனென்றால் அதன் தன்மையே அப்படி தான். முக்கியமாக இந்தியாவில்.
  இதில் ‘சதி’ எங்கிருந்து வந்தது ? இப்படி எல்லாம் theorise செய்ததால் தான் மார்க்சியர்கள் இன்று யாதார்த்தம் புரியாமல் marginalised all over the world.

  இங்கு எதிர்கொள்ளும் ‘வசவுகளை’ கூட சகித்துக்கொள்ள முடிகிறாது. ஆனால் இது போன்ற ‘conspiracy theories’ களை தான் சகிக்கவே முடியவில்லை. :))))

  • பல பொதுத்துறை நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளிலேயே உங்களைப் போன்ற நபர்கள் தான் இருக்கிறார்கள், எனில் அங்கே என்ன நடக்கும் ? அதை அடியறுத்து ஒழித்துக்கட்டுவதற்கான அனைத்து வேலைகளும் நடக்கும். அதற்கு பெயர் தான் சதி ! மேலும் இந்த அரசும் ஆளும் வர்க்கமும் கூட அதியமானை போலவே தான் இருக்கிறது என்கிற போது பொதுத்துறையை ஒழித்துக்கட்ட சதி ஆலோசனைகள் நடைபெறாமல் வேறு என்ன நடக்கும் ?

   • தோழமை,

    உண்மையில் கூட்டு சதி செய்பவர்கள் இந்த தனியார்மய, தாரளமயத்தை எதிர்ப்பவர்கள் தான் : அரசு அதிகாரிகள், பொதுதுறை நிர்வாகிகள், ஊழியர் சங்கள், அமைச்சர்கள் : இவர்களின் ’வருமானம்’, job status மற்றும் ஊழல்களை தனியார்மயமாக்கினால் அப்படியே தொடர முடியாது ; மேலும் சில vested interests உள்ளன. பொறுப்பற்ற சுயநலவாதிகளான இவர்களை பற்றி வினவு ‘பிழைப்புவாத தொழிற்சங்களங்கள்’ என்றும் சொல்லியிருக்கு.

    ஆனால் இவர்கள் உங்களை போன்ற அப்பாவி கம்யூனிஸ்டுகளை கேடையம் போல் உபயோகித்துக் கொள்கிறார்கள். பொதுதுறை நிறுவனங்களை அவர்கள் ‘சுரண்ட’ உங்கள் பாதுகாப்பு வளையம் மிக உதவியாக இருக்கிறது. உங்களுக்கு இது புரியாதுதான்.

  • //பொது துறை நிறுவனங்களை / சேவைகளை அரசு ‘திட்டமிட்டே’ ஒழிக்க, ‘தனியார்மயத்தை’ சுலபமாக செயல்படுத்த சதிதிட்டம் (உலக வங்கி, தனியார் ‘கொள்ளையர்கள்’, etc, etc மூலம்) தீட்டி செயல்படுத்துபடுகிறது என்ற ‘அரிய கண்டுபிடிப்பை’ வினவு மற்றும் ’தோழமை சக்திகள்’ சில ஆண்டுக்ளாகவே சொல்லி வருகின்றனர். எப்படீங்க நீங்க மட்டும் இப்படி கரெக்டா தப்புகணக்கு போடரீக ? )

   // இது அரிய கண்டுபிடிப்பு கிடையாது, முதல் கட்ட கட்டுமான மறுசீரமைப்புத் திட்டங்கள், இரண்டாம் கட்ட சீரமைப்புத் திட்டங்கள், வங்கிச் செயல்பாடுகள், நிதிச் செயல்பாடுகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், இதோ இங்கேயே சில பின்னூட்டங்களீல் சுட்டிக் காட்டியுள்ளனரே (மல்லயாவின் நஸ்டமான கம்பனிக்கு அத்தனை கடன், அவன் நிதிக்கம்பனி வைச்சி ஆட்டயப் போட்ட பணத்துக்கு அவன இதுவரை ஒன்னும் செய்யல) இவையெல்லாம் வெளிப்படையான உதாரணங்கள்.

   நீங்களோ இவையெல்லாம் சோசலிசத்தின் விளைவுகள் என்று ‘கண்டுபிடித்து’ச் சொல்லி காமெடி செய்து கொண்டிருக்கிறீரக்ள்.

 15. தோழமை,

  எம்மை பற்றி உமக்கு என்ன தெரியும் ? முக்கியமாக எமது அடிப்படை நேர்மை பற்றி. கொள்கை ரீதியாக மாற்று கருத்து கொண்டிருப்பதால், பொதுதுறையில் இருந்திருந்தால்,நான் நேர்மை இல்லாமல், சதி செய்து, அநியாயமான முறையில் செயல்படுவேன் என்ற மிக தவறான யூகத்தின் அடிப்படையில் பேசறீக. மேலும் யாதார்தம் புரியவில்லை உமக்கு.

  உதாரணமான அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை ஒழுங்கா செல்லி தர வேண்டாம் என்று யாரும் ‘சதி’ செய்து சீரழிக்கவில்லை. பள்ளிக்கு ஒழுங்க செல்லாம மட்டம் போடுவது, ஓபி அடிப்பது, வாங்கும் சமளத்துக்கு நேர்மையா வேலை செய்ய வேண்டாம் என்று யாரும் சதி செய்து உருவாக்கவில்லை. இதெல்லாம் புரிந்து கொள்ள கொஞ்சம் கிட்னி வேண்டும். உங்க paronia மற்றும் theories சகிக்கவில்லை.

  • //உதாரணமான அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை ஒழுங்கா செல்லி தர வேண்டாம் என்று யாரும் ‘சதி’ செய்து சீரழிக்கவில்லை.// இதே அரசு ஆரம்பப் பள்ளிகளும், அரசு உயர் கல்வி நிறுவங்களும் மிகச் சிறப்பாக கல்வி சொல்லித் தந்த காலம் ஒன்று உண்டு. 1990களுக்குப் பிறகு கல்வி கடைச்சரக்காக ஆன பிறகே மேற்படி நிலை உருவானது. பாரானோயியா யாரு? நல்லது நடந்தால் அதை முதலாளித்துவத்திற்கு சமர்பித்து பூரிப்படைவதும், கெட்டது நடந்தால் அது முதலாளித்துவமே இல்லை என்றூ சொல்லியோ அல்லது சோசலிசத்தின் மீது பலி போட்டோ பொறுப்பின்றீ தப்பித்து ஓடுவதுமான நீங்கள் பேரானோயியா பற்றி பேசுவது கண்டு பேரானோயியா பயப்படுகிறதாம் – ஒரு நிருபர் கூறினார். மூன்னூறு வருசமாகியும் உண்மை முதலாளித்துவம் எங்கயுமே உருவாகலையே ஏன் அதியமான் சார் இந்த நிலம?

  • உங்களுடைய நேர்மை பற்றி நான் அறிவேன். தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கும் முதலாளிகளின் நலன்களுக்கும் என்றைக்குமே நீங்கள் நேர்மையற்றவராக இருந்தது இல்லை என்பது உண்மை தான். எனவே தான் நீங்கள் பொதுத்துறைகளில் இருந்திருந்தால் அல்லது உங்களைப்போல தற்போது பொதுத்துறைகளில் இருப்பவர்கள் தங்களுடைய ’நேர்மையான கொள்கைகளை’ வெளிப்படையாக அமல்படுத்த முடியாத சூழலில் இருந்து கொண்டு சதி செய்கிறார்கள் என்று சொல்கிறோம்.

 16. //இப்படி எல்லாம் theorise செய்ததால் தான் மார்க்சியர்கள் இன்று யாதார்த்தம் புரியாமல் marginalised all over the world.

  // உலக முதலாளித்துவமே ஓடிப் போ, பேராசை கொண்ட கார்ப்போரேட் கொள்ளையர்களே ஒழிந்து போய்விடுங்கள் என்று அமெரிக்க வால்ஸ்டிரீட்டில் ஆரம்பித்து லண்டன், சிரியா, இந்தியா வரை அனைத்து இடங்களிலும் மக்களின் ஏகோபித்த வெறுப்புக்கு ஆளாகியுள்ள முதலாளீத்துவத்தின் தவப் புதல்வர் சொல்கிறார் கேளுங்கள், மார்க்ஸிஸ்டுகள் மார்ஜினலைஸ்டு ஆகிவிட்டனராம். பேரானோயியா யாருக்குள்ளது?

 17. விமானக் கட்டணம் வாங்கிக் கொண்ட விமானச் சேவை தரமால ஏமாற்றியதற்கு மல்லையாவை உள்ளே போட வேண்டுமே? அதியமான் அது பற்றியெல்லாம் யோசிக்க மாட்டாரே. ஏன்னா வேலையில்லாம போய் வறுமையில் செத்து போவாரோ என்று அஜித்துக்கு கவலைப்படுபவராயிற்றே அதியமான்? மல்லையா சிறைக் கொட்டடியில் (அங்கயும் அவனுக்கு எல்லா வசதியும் கிடைக்கத்தான் போகுது) வாடுவதை அவரால் எண்ணிப் பார்க்க இயலுமா? கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்கள்தானே? வறுமையும், சிறையும், சிறுமையும் பெரும்பான்மை எளிய உழைக்கும் மக்களுக்குத்தானே?

 18. அதியமான் அவர்களே ஒரு துறையை தனியார்மயப்படுத்த வேண்டும் என்றால், அரசு ஊழல் அதிகார வர்க்கத்தின் மூலமாக அதிகாரிகள், ஊழியர்கள் மூலமாக வெறுப்பை விதைத்து, மக்களே தனியார்மயம் சரி என்று வெறுக்கும் அளவுக்கு சதி செய்யும். இதனை பல விவாதங்களில் உமக்கு சொல்லி ஆகி விட்டது. ஆனால் நீங்கள் புரியாதது மாதிரி நடிக்கின்றீர்கள். திரும்ப அழைக்ககூடிய அதிகாரம் அமையும் போது இதனை களையலாம். ஒரு கம்பியூனிஸ்ட் அரசாலே இது முடியும்.
  ஆதவன்

 19. பொதுத்துறை நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் உமாசங்கர் போல் நேர்மையான அதிகாரிகள் அல்ல பார்ப்பன பெருச்சாளிகளே.இவர்கள் பிள்ளைகள் அரசு கோடிக்கணக்கில் நம் வரிப்பணத்தை செலவழிக்கும் இட ஒதுக்கீடே இல்லாத ஐஐடி யில் படித்துவிட்டு அமெரிக்காவில் பெரும் சம்பள வேலையில் இருப்பார்கள்.இவர்கள் தனியாருக்கு ஆலோசனை சொல்லி வளர்த்து விட்டு ரிட்டையர் ஆன பின்பு அந்த தனியாரிடமே ஆலோசகராக பெரிய சம்பளம் வாங்கி கொண்டிருப்பார்கள்.இங்க வந்து வேறு பெயர்களில் பொதுத்துறையையே திட்டி பின்னூட்டம் இடுவார்கள்.

 20. அவா ஆட்சியில் பொதுத்துறைகள் எல்லாவற்றையும் விற்பதற்கு அதாவது அரசு பங்குகளை தனியாருக்கு விற்பதற்கென்றே(DISINVESTMENT) ஒரு PORTFOLIO வையே உருவாக்கி….விற்றது மட்டும் அல்லாமல் அவாளே ஆள் வைத்து வாங்கியும் கொண்டபிறகு சொம்பு தூக்கிகளை அவா பத்திரிக்கைகளிலும் அவற்றை ஆதரித்து எழுத வைத்தனர்

 21. இந்த நாதாரி மல்லையா கிங்பிஷரில் வேலை செய்வதவர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரியை சில வருடங்களாகக் கட்டாமல் ஆட்டயப் போட்டுள்ளான். இதயும் வருமான வரித்துறை கண்டுக்காம இருந்துள்ளது.

  http://tamil.oneindia.in/news/2011/11/28/business-kingfisher-didn-t-even-pay-income-tax-cut-aid0090.html

  இதற்கும், அகில உலகம் முழுவதும் முதலாளிகள் (அதியமான் அத்திச்சூடி அகராதியில் சோசலிசஸ்டுகள் என்றும் சொல்லலாம்) செய்யும் மோசடிகளுக்கும், அவர்கள் கஸ்டப்படாமல் மோசடி செய்ய மக்கள் பணத்தை அரசாங்கங்கள் அள்ளி இறைப்பதற்கும் காரணம்… சோசலிசம்தான் என்று முக்கிய நிருபர் ஒருவர் அதியமானிடம் சொல்லச் சொன்னார்.

 22. […] ஐநூறு கோடி இல்லை.. முதலில் வாங்கிய கடன் மட்டும் ஏழாயிரம் கோடி, அடுத்ததாக கம்பனியை காப்பற்ற பாரத்த்தின் பெரிய வங்கியின் பங்களிப்பு 1500 கோடி. http://businesstoday.intoday.in/story/kingfisher-airlines-get-rs-1500-crore-sbi-lifeline/1/22611.html https://www.vinavu.com/2011/11/17/kingfisher/ […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க