Saturday, May 25, 2024
முகப்புஉலகம்ஆசியாகிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!

கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!

-

தென் கொரியத் துறைமுகத்தின் 85ஆம் எண் கிரேன், இனி தோல்வியின் சின்னமல்ல. ஹன்ஜின் நிறுவன தொழிலாளர்கள், அந்த கிரேனை இனி பார்க்கும்போதெல்லாம் மீட்டெடுத்த தங்கள் உரிமைகளை பெருமையுடன் நினைவுகூறுவார்கள். அதோடு கிம் ஜின் சுக்கையும்.

கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!கிம் ஜின் சுக் – தென்கொரியாவின் முதல் பெண் வெல்டராக அவரை எத்தனை பேர் அறிவார்கள் என்று தெரியாது. ஆனால், கிம்மை இன்று அறியாதவர்கள் தென்கொரியாவிலேயே கிடையாது. ஹன்ஜின் நிறுவனத்தை எதிர்த்து ,115 அடி உயரமுள்ள கிரேனில் உச்சியில் ஏறி,  கீழே இறங்க மறுத்து தனது போராட்டத்தை ஆரம்பித்தார், கிம்.

ஹன்ஜின் நிறுவனம் லாபத்தில் நடந்தாலும், கடந்த இரு வருடங்களில் அதன் தொழிலாளர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம். நடத்திய போராட்டங்களும் ஏராளம். சேர்மனுக்கும் அவரது குடும்ப நபர்களுக்கும் வருடம் தவறாமல் ஊதிய உயர்வை கொடுத்த நிறுவனம், தொழிலாளர்களுக்கு சம்பள வெட்டுகளையும், தற்கொலைகளை மட்டுமே பரிசாகக்கொடுத்தது. கடந்த இரண்டு வருடங்களில், மொத்தமாக‌, 1300 பேரை வேலையிலிருந்து தூக்கி எறிந்திருக்கிறது இந்த நிறுவனம்.  நிறுவனத்தின் இந்த அராஜகத்தை எதிர்த்துதான், 85ஆம் எண் கிரேனின் ரூமில் ,கடந்த ஜனவரி 6ஆம் தேதி தன்னை அடைத்துக்கொண்டார், கிம்.

கிம், அந்த கிரேன் அறைக்குள் செல்லும் போது எந்த திட்டங்களுடனோ அல்லது முன்னேற்பாடுகளுடனோ செல்லவில்லை. தன் 51 வயதில், இழப்பதற்கு ஒன்றுமில்லாத நிலையில், மனதிடத்தை மட்டும் துணையாகக் கொண்டு இந்த போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் அந்த கிரேனின் அறைக்குள் செல்லும்போது அவரிடமிருந்ததெல்லாம் ஒரே ஒரு செல்போன் மட்டுமே. அதுவும், ஒன்றிரண்டு நாட்களில் சார்ஜ் இல்லாமல் செயலிழந்தது.

நிர்வாகத்தின் கெடுபிடிகளையும், தென்கொரியாவின் காலநிலைகளையும் தாக்குபிடித்து அவர் உயிருடன் கீழே இறங்கி வருவார் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் அவரிடம் இல்லை. 35 மீட்டர் உயரத்தில் கிம் அந்தரத்தில் தொங்கியபோது தென்கொரியாவை மூன்று பருவகாலங்கள் கடந்திருந்தது. மொத்தமாக 309 நாட்கள். சூறாவளிக் காற்றோ சுட்டெரிக்கும் வெயிலோ, கனமழையோ எதுவும் கிம்மின் உறுதியைக் குலைக்கவில்லை. இத்தனைக்கும், அவரிடம் கதகதப்பான கம்பளி போர்வைகளோ, படுக்கையோ இருக்கவில்லை. இருந்ததெல்லாம் ஒரே ஒரு பக்கெட் – இயற்கை உபாதைகளுக்காக மட்டும் அதை பயன்படுத்தியிருக்கிறார். வெறும் உருளைக்கிழங்குகளும் ,வேக வைத்த பீன்சுமே அவரது உணவு.

கிம்மின் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறத் துவங்கியது. தொழிலாளர்களுக்கிடையில் செய்தி பரவியதும் அவருக்கு ஆதரவாக திரளத்  தொடங்கினார்கள். ஆரம்பத்தில் பெரிதாகக் கண்டுக்கொள்ளாத நிர்வாகம் விழித்துக்கொண்டு போராட்டத்தை தடுக்க முனைந்தது. அதன் முதன்முயற்சியாக, கிரேனில் மின்சாரத்தை நிறுத்தியது. கீழே திரண்டிருக்கும் ஆதரவாளர்கள் கிம்முக்கு உணவு, குடிநீர் அனுப்ப முட்டுக்கட்டைகள் போட்டது. அந்தோ பரிதாபம், தன்னந்தனியாக கிரேனுக்குள் சென்ற கிம் இப்போது தனிநபரில்லை என்று ஹன்ஜின் நிர்வாகம் புரிந்துக்கொள்ளவில்லை போலும்.

கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!கிரேனின் கீழே ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தொழிலாளர்கள், நிர்வாகத்தின், அத்தனை சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு முறியடித்தனர். அடுத்த முயற்சியாக, நிர்வாகம் அடக்குமுறைகளை ஏவியது.  உண்மையில், அடக்குமுறைகளால்தான் போராட்டம்  வலுப்பெற்றது. இந்த போராட்டம் கிம்முடையது மட்டுமில்லை, தம்முடையதும்தான் என்று உணர்ந்த தொழிலாளர்கள் 85ஆம் எண் கிரேனுக்குக் கீழாக குவிந்தனர்.

இப்படியே, 309 நாட்கள் கழிந்தது. ஒவ்வொரு நாளும், வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம்தான். ஆனால், கீழே திரண்டிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை  நோக்கும்போது தனது போராட்டம் ஒன்றுமேயில்லை என்று உணர்ந்திருக்கிறார், கிம். கிம்முக்கும், உலகுக்கும் இருந்த ஒரே தொடர்பு சாதனம்,அவரது ஆதரவாளர்கள் வழங்கியிருந்த ஸ்மார்ட் போன் மட்டும்தான்.

அதன்மூலம், ட்விட்டரில் கொரிய ட்வீட்டுகளை இட்டிருக்கிறார்.  அவருக்கு, இருபதாயிரத்துக்கும் அதிகமான பின் தொடர்பவர்கள் இருக்கிறார்கள். அவரது ட்வீட்டுகளை உடனுக்குடன் மொழிபெயர்த்தும் இருக்கிறார்கள். இதன்மூலம் போராட்டம் இன்னும் பலரை சென்றடைந்தது. செய்தியை கேள்விப்பட்ட மக்களும், தங்கள் ஆதரவை தெரிவிக்க எங்கிருந்தெல்லாமோ கிளம்பி வந்தனர். இதைத் தொடர்ந்து, 700 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதம் 7000 பேர்  தென்கொரியாவின் பூசான் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.  நிர்வாகமோ, அவர்களை கிம்மிடம் நெருங்கவிடாமல், கலவரமென்று சொல்லி, போலீசின் உதவியோடு மக்கள்திரளை கலைத்தது. அரசாங்கம் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே நின்றது. இரக்கமில்லாமல், அப்பாவி மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீரையும் மட்டுமல்லாது, வன்முறையையும் பிரயோகித்தது. இது ஆதரவாளர்களுக்கு இன்னும் கோபமூட்டியது.

மக்களின் கோபத்துக்கு ஆளாக விரும்பாத அரசாங்கமும் நிர்வாகமும், இறுதியாக, கிம்‍மின்  கோரிக்கைகளுக்கு அடிபணிந்தன. நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. வேலையிழந்த 94 பேரை ஒருவருடத்துக்குள் வேலைக்கு திரும்பச் சேர்த்துக்கொள்வதாகவும், அவர்களது இழப்பீட்டுத் தொகையை கொடுப்பதாகவும், தொழிலாளர் நலன்களுக்கெதிராக போடப்பட்ட சட்டதிட்டங்களை மீளப்பெறுவதாகவும் வாக்களித்தது. இதன்பிறகே, கிம் தனது போராட்டத்தை கைவிடுவதாகவும், 85ஆம் எண் கிரேனிலிருந்து கீழே இறங்கி வருவதாகவும் அறிவித்தார்.

கிம், 85ஆம் எண் கிரேனை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இருக்கிறது. ஆம், அது பத்து வருட கணக்கு. லாப நட்ட கணக்கைக் காட்டி தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது ஹன்ஜினுக்கு புதிதல்ல. பத்து வருடங்களுக்கு முன், இதே ஹன்ஜின் நிறுவனம் நட்டத்தை காட்டி 650 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. இதனை தட்டிக்கேட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மீது வழக்குகளை பதிவு செய்தது. அதோடு, அவர்களது குடும்பங்களையும், வீடுகளையும் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அடக்குமுறைக்குள்ளாகி துன்புறுத்தியது.

கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!ஹன்ஜினின், அராஜகத்தை பொறுக்க முடியாமல் தொழிற்சங்க தலைவர் கிம் ஜூயிக்  85ஆம் எண் கிரேனின் உச்சிக்குச் சென்று தன்னை அடைத்துக்கொண்டார்.  129 நாட்கள் தொடர்ந்த அவரது போராட்டம் இறுதியில் தற்கொலையில் முடிந்தது. அன்று கிம் ஜூயிக் உயிரிழந்த  அதே தளத்தை, இன்று தொழிலாளர் உரிமைகளுக்கான நம்பிக்கையின் குறியீடாக மாற்றியிருக்கிறார், கிம் ஜின் சுக்.

பொதுவாக, நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் வேலையிழப்பு என்றால் ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு’ என்று நமது சீட்டை இறுக பிடித்துக் கொள்வதுதான் வழக்கம். வேலையிழந்த தொழிலாளியைப் பற்றியோ, தொழிலாளர் உரிமையைப் பற்றியோ  அல்லது நமக்கும் நாளை அந்த நிலைதான் என்றுகூட‌ நினைத்து பார்க்காமல்தான் பிழைப்பை ஓட்டி வருகிறோம். முதலாளிகளுக்கு லாபம் குறையும்போது அல்லது அமெரிக்காவில் பொருளாதார‌ம் நெருக்கடிக்கு உள்ளாகும்போதெல்லாம் பலியாக்கப்படுபவர்கள் தொழிலாளர்கள்தான்.

இதற்கு மேல் அவர்களால் லாபமில்லை எனும் நிலை வரும்போது நிர்தாட்சணயமின்றி  தெருவில் நீக்கி வீசப்படுபவர்கள் தொழிலாளர்களே.  இப்படி,  உடன் வேலை செய்யும் தொழிலாளரை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள் என்ற செய்தி வந்தால் பொதுவாக, அடுத்தவரிடம் எந்த ரியாக்சனும் இருக்காது. ஒரு உச்சு கொட்டிவிட்டு கடந்து சென்றுவிடுகிறோம்.

முதலாளிக்கு லாபம் குறைந்தால் நம்மை வேலையிலிருந்து தூக்குவதை சரிதான் என்று ஏற்றுக்கொள்ளும் நாம், முதலாளிக்கு லாபம் வந்தபோது அந்த லாபத்தில் பங்கு கொடுத்தாரா என்பதை யோசிப்பதில்லை. அந்த லாபமும் தொழிலாளியின் உழைப்பினால் வந்தது என்றும் புரிந்து கொள்வதில்லை. மாறாக, அவரது லாபத்துக்காக தொழிலாளர்களின் குடும்பத்தைப் பற்றி யோசிக்காமல் வேலையிலிருந்து தூக்குவதை சரிதான் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஏதோ முதலாளிகள்தான் நமக்கு வேலை கொடுக்கிறார்கள், அவர்களால்தான் உலக மக்கள் பிழைத்திருக்கிறார்கள் என்று முதலாளிகளை தெய்வங்களாக எண்ணிக்கொள்கிறோம்.

தொழிலாளர்களால்தான் முதலாளிகள் பிழைத்திருக்கிறார்கள் என்பதை உணர மறுக்கிறோம். நமது உரிமைகளை பெறக்கூட போராட துணிவதில்லை. ‘ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்று கீதோபச்சாரத்தையோ அல்லது விதியை நம்பிக்கொண்டு அடிமைகளாகவோ காலம் கழிக்கிறோம். தொழிலாளரின் உரிமைகள் பாதிக்கப்படும்போதெல்லாம்  ‘யாமிருக்க பயமேன்’ என்று சொல்லும் எந்த கடவுளும் தொழிலாளரின் நலன்காக்க வருவதில்லை.

கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!தொழிலாளர்கள்தான் தம் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் போராடவும் வேண்டியிருக்கிறது. உழைக்கும் மக்களிடமிருந்துதான்  சுரண்டலுக்கெதிரான போராட்டமும், தலைமையும், போர்க்குணமும் வெளிப்படுகிறது. இதை நிரூபித்திருக்கிறது ‍ கிம் ஜின் சுக்-கின் போராட்டம்.

வெற்றிக்களிப்புடன் கீழே இறங்கி வந்த கிம்-மை கைது செய்ய கைகளில் விலங்குடன் காத்திருந்தது போலீசு. நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் நடந்துக்கொண்டதற்காகவும், அத்து மீறி நடந்துக் கொண்டதற்காகவும் என்கிறது, போலீசு தரப்பு காரணங்கள். காரணங்களை விடுங்கள்…

ஆனால், தென்கொரிய உழைக்கும் மக்களுக்கு மட்டுமில்லை, உலகத்த்தின் அனைத்து உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கமும் அறிந்துக் கொள்ள ஒரு செய்தி இருக்கிறது.

ஏனெனில், இன்று உலகெங்கும் தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். சங்கமாக ஒன்று கூடி உரிமைகளுக்காக குரல் எழுப்பினாலன்றி இதற்கு ஒரு முடிவு கிடைக்காது. கிம்மின் முயற்சி அதற்கான முகாந்திரம் மட்டுமே! முதலாளித்துவதற்கெதிரான இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஒன்று கூடாமல் எதையும் சாதிக்க முடியாது. கிம்மின் வார்த்தைகளில் சொல்வதானால், “இறுதி வரை போராடுவோம்”. ஏனெனில், மகிழ்ச்சி என்பது போராட்டமே!

கிம்முக்கும் தென் கொரிய மக்களுக்கும் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவிப்போம்!

_____________________________________________________

– வேல்விழி

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

  1. ஆம்!புரட்சிகர வாழ்த்துகளை தெரிவிப்போம் உலகம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு!

  2. இருத்தலின் ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதும் போராட்டமாய் திகழும் தென் கொரிய தோழர் கிம் ஜின் சுக்கிற்கு எனது வாழ்த்துக்கள்.

  3. கிம்முக்கும் தென் கொரிய மக்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
    நன்றி வேல்விழி.

  4. தலைவர் தற்கொலை செய்து கொள்ள பின் வந்த பெண் தொழிலாளி இன்னும் நீண்டநாள் போராடி வென்றது இன்று உலக பெண்களின் உயர்நிலையயும் காட்டுகிறது.உண்மையில் திடமிக்க போராளிதான். வாழ்க தொழிலாளர் ஒற்றுமை

  5. நான் ஒருவன் அல்ல. என்பின்னே கோடிக்கால் பூதம் உண்டு என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் பிசகின்றி சாதித்து வென்றுகாட்டிய எம் தோழனே, உம்மை வாழ்த்தும் தகுதி எனக்கு இருக்கிறதா? என்று என்னை நானே உரசிக்கொள்கிறேன்.

  6. போராட்டம் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பது முற்றிலும் உன்மை. அடுத்தவனை ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கு அதை புரிய வைக்க முடியாது. கிம்மின் வெற்றி முதலாளியை வழிக்கு கொன்டு வந்தததில் அல்ல, உழைக்கும் மக்களின் உள்ளத்தில் ஒரு விதையை விதைத்ததில் தான் உள்ளது என நினைக்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க