privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபதிவர்களோடு விவாதம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு !

பதிவர்களோடு விவாதம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு !

-

“சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளையும் அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால் இத்தனை காலமாக இடைத்தரகர்களாலும் கமிஷன் மண்டி ஏஜென்டுகளாலும் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகள் பிழைக்க வேண்டுமானால் அது அவர்களை வால்மார்ட்டின் கையில் ஒப்படைத்தால் மட்டுமே நடக்கும்” – படித்த நடுத்தரவர்க்கத்தின் பொதுப்புத்தியில் இவ்வாறான கருத்துக்களை முதலாளித்துவ ஊடகங்களும் பிற அல்லக்கைகளும் வலிந்து திணிக்கும் கருத்து இது.

வால்மார்ட் எத்தனை நாடுகளில் விவசாயிகளைக் ‘காப்பாற்றி’ இருக்கிறது என்பதைப் பார்க்கும் முன், இங்கே விவசாயத்தின் அழிவுக்கு யார் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய விவசாயத்தின் அழிவுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது பசுமைப் புரட்சிக்கும் முன் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீண்ட வரலாறு கொண்டது. ‘பசுமைப் புரட்சியின்’ விளைவாய் மண்ணில் கொட்டப்பட்ட லட்சக்கணக்கான டன் ரசாயன உரங்களால் மண்ணே மலடாகிப் போன நிலையில் ஓரளவுக்காவது மகசூல் பார்க்க வேண்டுமானால் விலை கூடிய வீரிய ரசாயன உரங்களை வாங்கியாக வேண்டிய கட்டாயத்துக்குள் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளர்.

மேலும், பசுமைப் புரட்சிக்குப் பின் பாரம்பரிய மரபுசார் விதை / நாற்று ரகங்கள் அழிந்து போய் தற்போது விதைக்கும் கூட பன்னாட்டுக் கம்பெனிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் விவசாயிகள் மேல் விழுந்துள்ளது. கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு கட்டங்களில் விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் ரத்து செய்யப்பட்டு அவை உர முதலாளிகளுக்கும் மட்டும் அளிக்கப்படுகிறது. பாசனப் பராமரிப்பு உள்ளிட்ட விவசாய உள்கட்டமைப்புக்கான ஒதுக்கீடுகளை வெட்டுவது என்பதை ஒரு கொள்கையாகவே செயல்படுத்துகிறார்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் சீறிப்பாய்வதாக பீற்றிக் கொள்ளும் முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள், விவசாயம் 0.5 சதவீதமாக தேய்ந்து வருவதைப் பற்றி மூச்சு விடுவதில்லை. 1980 காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36.4 சதவீதமாக இருந்த விவசாயம், 2008-ம் ஆண்டுக்குப் பின் 17 சதவீதமாக வீழ்ந்துள்ளது.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் இந்தியா கையெழுத்திட்ட காட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் இந்திய அரசு விவசாயத்திற்காக ஒதுக்கப்படும் மானியத்தை வெட்ட வேண்டும் என்பது உலக வங்கியின் ஆணை. உள்நாட்டு விவசாயத்தை அழித்து நாட்டின் உணவுத் தற்சார்பை ஒழித்துக் கட்டுவதன் மூலம், இந்த சந்தையை பன்னாட்டுக் கம்பெனிகளின் கையில் சிக்க வைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இது படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. காங்கிரசு போய் பாரதிய ஜனதா வந்தாலும் சரி, மூன்றாம் அணி ஆட்சியமைத்தாலும் சரி, நாட்டை அந்நியர்களுக்கு அடிமையாக்கும் இந்த மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் மட்டும் இவர்களுக்குள் எந்த கொள்கை வேறுபாடும் இருந்ததில்லை. கடந்த 15 ஆண்டுகளில் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொண்டுவிட்டது. 80களின் இறுதியில் உணவு தானியக் கொள்முதலில் 45% அரசு செய்தது – இன்றோ அது 75% தனியார்களின் கையில் இருக்கிறது.

2002-ம் ஆண்டு நாட்டில் கடும் வறட்சியும் பஞ்சமும் நிலவிய காலகட்டத்தில் அரசு தனது கையிருப்பில் இருந்த 2.2 கோடி டன் தரமான கோதுமையை ஐரோப்பிய பன்றிகளுக்கு ( ஆம் பன்றிகளுக்குத் தான்) ஏற்றுமதி செய்தது. அதே நேரம் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து தரமற்ற கோதுமையை இறக்குமதி செய்தது பஞ்சாப் அரசு. அப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ‘தேசபகதர்’ வாஜ்பாயின் தலைமையிலான பாரதிய ஜனதா.

ஒருபுறம் விவசாயத்தை அரசின் பொறுப்பில் இருந்து கைகழுவி அதை அப்படியே அந்நிய தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகள் கையிலும் ஒப்படைப்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். இதனடிப்படையில் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் வேறு வழியின்றி கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் சிக்குகிறார்கள். அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகளும், மான்சான்டோவின் பி.டி. காட்டன் விதையைப் போட்ட மராத்திய விவசாயிகளும் கடனாளியாகித் தற்கொலை செய்து கொண்ட செய்திகளை நாம் பத்திரிகைகளில் வாசித்திருப்போம்.

இவர்களின் நோக்கம் விவசாயத்தை வாழ வைப்பதல்ல – அதை ஒட்டச் சுரண்டிக் கொழுப்பது தான். இதில் ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சி, மான்சாண்டோ, வால்மார்ட் என்று இவர்களுக்கும் தேச பேதமெல்லாம் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக்ஸ்பாம் என்கிற அமைப்பு பல்வேறு நாடுகளில் செய்துள்ள ஆய்வுகளின் அடிப்படையில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட் போன்ற திமிங்கலங்களின் வருகை விவசாயிகளை கடுமையாக பாதித்திருப்பதை வெளிக் கொணர்ந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க  ஆப்பிள்களின் ஏற்றுமதிக்கான கொள்முதல் விலை 33 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளத்து. அமெரிக்காவிலேயே விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் விலை 25 சதவீதமாக குறைந்துள்ள அதே நேரம் நுகர்வோருக்கான விலை 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகளவில் விவசாய விளைபொருட்களின் மொத்த சந்தையில் 40 சதவீத அளவுக்கு நான்கு அல்லது ஐந்து பன்னாட்டுக் கம்பெனிகள் தாம் கட்டுப்படுத்துகின்றன.

ஆரம்பத்தில் நல்ல விலை கொடுத்து பொருட்கள் கொள்முதல் செய்யும் இவர்கள், தங்களது உள்ளூர் போட்டியாளர்களை ஒழித்துக் கட்டியபின் விலையை அடாவடியாகக் குறைப்பது, பணத்தை இழுத்தடித்துக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விவசாயிகளைக் கசக்கிப் பிழிகிறார்கள். உதாரணமாக, ஆக்ஸ்பாம் நடத்திய ஆய்வில் ஒப்பந்த விவசாயத்தில் விளைவித்த ஆப்பிள்கள், 65மில்லி மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்திய கார்பரேட் கம்பெனி ஒன்று அந்த அளவுக்குக் கீழ் இருக்கும் ஆப்பிள்கள் தரம் குறைந்தது என்று சொல்லி அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

ஆக, இடைத்தரகர்களை ஒழிப்பதல்ல இவர்கள் நோக்கம். ஊருக்குப் பத்து கமிசன் மண்டி ஏஜென்டுகள் என்கிற நிலையை ஒழித்து நாட்டுக்கே நாலு பிரம்மாண்டமான கமிஷன் மண்டிகளை உருவாக்குவது தான் இவர்கள் நோக்கம். இந்த பெரிய சந்தை இன்றைய நிலையில் உள்ளூர் அளவில் பல்வேறு சிறிய போட்டியாளர்களுடன் இயங்கி வருகிறது. இதை ரிலையன்ஸிடமும் வால்மார்ட்டிடமும் ஒப்படைத்து விட்டால் விவசாயிகளுக்கு வேறு போக்கிடமே இல்லாமல் போய் விடும். இடைத்தரகர்களை ஒழிப்பதே நோக்கம் என்று நீட்டி முழங்கும் இவர்களின் உண்மையான திட்டம்  அதற்கு நேர் எதிரானது – இருக்கும் சாதா ஏஜெண்டுகளை ஒழித்து விட்டு சூப்பர் ஏஜெண்டுகளை வளர்ப்பது தான் அது.

விலைவாசி குறையும் என்கிற ஏமாற்று – விலைவாசி உயர  யார் காரணம்?

“இடைத்தரகர்களை ஒழித்து விட்டால் விலைவாசி குறைந்து விடும். இவர்களால் தான் விலைவாசியே உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் சில்லறை வர்த்தகமே முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை முறைப்படுத்துவதன் மூலம் விலைவாசியை ஒரு கட்டுக்குள் வைக்கமுடியும்” – இது மவுனமோகன் சிங், சிதம்பரம் கும்பலில் இருந்து தமிழில் வலைபதியும் ‘டிராபிக் ராமசாமிகள்’ வரை ஒரே குரலில் பாடும் பாட்டு.

இப்போதாவது தனது பொருளை சந்தைக்கு எடுத்து வரும் விவசாயிக்கு பத்து கமிஷன் மண்டிகளில் நல்ல விலை கிடைக்கும் மண்டியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதை முறைப்படுத்த வேண்டுமென்றால் அரசே தலையிட்டு குறைந்தபட்ச விலையை உத்திரவாதப்படுத்திக் கொடுக்கலாமே தவிர அந்தப் பொறுப்பிலிருந்து கைகழுவி விட்டு இருக்கும் கமிஷன் மண்டிகளை ஒழித்துக்கட்டி ரிலையன்ஸையும் வால்மார்ட்டையும் அந்த இடத்தில் அமர வைப்பதல்ல தீர்வு.

இது ஒருபக்கமிருக்க, விலைவாசி உயர்வுக்கு கமிஷன் மண்டிகள் மட்டும் தான் காரணம் என்று சொல்வதே பச்சை அயோக்கியத்தனம். விவசாயத்தை ஒரு முனையில் புறக்கணிக்கும் அதே சமயத்தில், உணவு தானியத்தை ஆன்லைன் டிரேடிங் வர்த்தகத்தில் திறந்து விட்டிருக்கிறார்கள். கட்டுப்படுத்தவியலாலாத பங்குச்சந்தை சூதாட்டத்தில் மக்களின் அடிப்படை உணவு ஆதாரம் சிக்குண்டு கிடக்கிறது.

உதாரணமாக, இன்னும் விளைந்திராத ஒரு குவிண்டால் நெல்லுக்கு விலை பத்தாயிரம் என்று விலை நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொள்ளும் பன்னாட்டுக் கம்பெனி, விளையாத அந்த நெல்லுக்கான ஒப்பந்தப் பத்திரத்தை பங்குச் சந்தையில் ஏலம் விடுகிறார். பல கைகள் மாறிச் சுழலும் இந்தப் பத்திரங்கள் ஓவ்வொரு சுழற்சியிலும் அபரிமிதமாக விலை கூடிக் கொண்டே போகிறது. இறுதியில் அதன் சந்தை விலை பத்து லட்சம் என்று வந்து நிற்கும் போது விளைந்த நெல்லை முன்பு போடப்பட்ட ஒப்பந்த விலையான பத்தாயிரத்துக்கே பறித்துச் செல்கிறது பன்னாட்டுக் கம்பெனி. விளைவித்தவனுக்கே விளைபொருள் மேல் உரிமையில்லை.

இந்தியாவின் உணவுப் பொருட்கள் தானியங்கள் உள்ளிட்டு பல்வேறு பண்டங்களின் மேல் நடக்கும் இந்தச் சூதாட்டச் சந்தையின் மதிப்பு 45 லட்சம் கோடிகளுக்கும் அதிகம். இந்தச் சூதாட்டத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் அரசே கொள்முதல் செய்து வைக்க உணவுக் கிடங்குகள் கட்ட நிதியில்லை என்று புலம்பும் அதே அரசு தான், இந்த பன்னாட்டுப் பதுக்கல்காரர்கள் கட்டும் தானியக் கிடங்குகளுக்கு 50 சதவீத மானியம் வழங்குகிறது.

விலைவாசி உயர்வு என்பதை ‘இடைத்தரகர்கள்’ என்கிற ஒற்றைப் பரிமாணத்தில் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடாது. ஆனால், பத்ரி போன்ற ‘மெத்தப் படித்தவர்களே’ கூட அவ்வாறு தான் சிந்திக்கிறார்கள். அவர்களின் மண்டையோட்டுக்குள் நிறம்பி வழியும் ஏகாதிபத்திய அடிமைப் புத்தி அதற்கு மேல் அவர்களின் பார்வை செல்லாமல் தடுக்கிறது. ஒருபக்கம் பல்வேறு வழிகளில் விவசாயத்தை திட்டமிட்டு அழித்து விட்டு அதன் வினியோக வலைப்பின்னலை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கொடுத்து விடுவதன் மூலம் விலை குறையும் என்று சொல்வதும், விவசாய விளைபொருட்களின் மேல் நடக்கும் சூதாட்டத்தை விவாதத்திற்குட்படுத்தாமல் மறைப்பதும் மாபெரும் மோசடி. ஆனால், இது தான் தமிழில் வலைபதியும் பார்த்தசாரதிகளின் யோக்கியதை.

எட்டப்பன் காலத்தில் மட்டும் கூகிளும் பிளாகரும் இருந்திருந்தால் தனது ஏகாதிபத்திய அடிமைச் சிந்தனையை பத்ரி, நாராயணன், வவ்வால் போன்றோரை விட  சிறப்பாக நியாயப்படுத்தியிருப்பான். அப்படித்தான் இவர்கள் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.

வால்மார்ட்டால் விலைவாசி உயர்வு – பிற நாடுகளின் அனுபவம்

வால்மார்ட்டின் பிரம்மாண்ட மூலதன பலமும் உலகளாவிய வலைப்பின்னலும் தொழில் துவங்கிய சில காலத்துக்கு விலையைக் குறைக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இங்கே வரும் நட்டத்தை வேறெங்கோ கிடைக்கும் லாபத்தைக் கொண்டு ஈடுகட்டிக் கொள்ள முடிகிறது. இந்த ஆரம்பகட்ட விலைக்குறைப்பின் மூலம் உள்ளூர் அளவிலான போட்டியாளர்களை ஒழித்துக் கட்டியபின், அவன் வைத்ததே விலை. உற்பத்தியாளர்களிடம் அடாவடியாக விலையைக் குறைத்து வாங்கும் வால்மார்ட், நுகர்வோருக்கு அதிகவிலையில் விற்பது அவன் ஏற்கனவே கால்நாட்டியிருக்கும் சந்தைகளின் அனுபவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடம்.

தாய்லாந்தில் பன்னாட்டு சூப்பர் ஸ்டோர்களின் வருகைக்குப் பின் நுகர்வுப் பொருட்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அர்ஜென்டினாவில் காய்கறிகளின் விலை 14 சதவீதம் அதிகம். மெக்ஸிகோவில் சாதாரண கடைகளை விட சூப்ப்ர் ஸ்டோர்களில் விற்கப்படும் பொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வியட்நாமில் 2002 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 10 சதவீத அளவுக்கு பொருட்களின் விலை உயர்ந்திருப்பது தெரியவந்தது.

நாம் எதை நுகர்வது என்பதை யார் தீர்மானிப்பது?

வால்மார்ட் தனது விற்பனைப் பொருட்களை கொள்முதல் செய்யும் விதம் பற்றி “மலிவு விலையில் மரணம்” கட்டுரையில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களை வரவழைத்து தலைகீழ் ஏலம் நடத்தும் வால்மார்ட், அதில் குறைந்த விலைக்கு தனது உற்பத்திப் பொருட்களை விற்க முன்வரும் நிறுவனத்திடமிருந்தே கொள்முதல் செய்கிறது. உதாரணமாக, துணி துவைக்கும் சோப்புக் கட்டிகளில் இன்று இருக்கும் பல்வேறு பிராண்டுகளான அரசன், பொன்வண்டு, மகாராஜா போன்றவைகள் சந்தையில் காலம் தள்ள முடியாது. பன்னாட்டு கம்பெனிகளின் தயாரிப்புகளான ரின், சர்ப் போன்றவைகளே வால்மார்ட் எதிர்பார்க்கும் அளவுக்கு உற்பத்தி செய்து குவித்து தாக்குப் பிடிக்க முடியும்.

உணவுப் பொருட்கள் என்று பார்த்தால், ஏற்கனவே இந்தியாவில் ஐ.டி.சி நிறுவனம் தானியக் கொள்முதல் செய்கிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் “ஆசீர்வாத் ஆட்டா’ நாடு முழுவம் ஒரே சுவையுள்ளதாக இருக்க வேண்டுமென்பதால் அதற்கேற்ற விதையை விநியோகித்து ஒரே விதமான கோதுமையைப் பயிரிடும்படி பல மாநிலங்களின் விவசாயிகளை அந்நிறுவனம் மாற்றிவிட்டது. பலவிதமான ருசிகளைக் கொண்ட கோதுமை ரகங்கள் இப்படி திட்டமிட்டே அழிக்கப்பட்டு விட்டன. தான் உற்பத்தி செய்யும் உருளைக் கிழங்கு வறுவலுக்கு பொருத்தமான ஒரே வகை உருளைக் கிழங்கை உற்பத்தி செய்யும் படி பஞ்சாபின் சில மாவட்டங்களையே மாற்றியிருக்கிறது பெப்சி நிறுவனம்.

வால்மார்ட்டுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது. அதை ஆதரிப்பவர்களோ “ஆஹா சீனாவுக்கும் அமெரிக்காவுக்கு நம்ம ஊர் கிழங்குகள் போகப் போகிறது – விவசாயம் வாழப் போகிறது” என்று குதூகலிக்கிறார்கள். இவர்களுக்கு விவசாயம் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதற்கு வேறு சான்றுகள் ஏதும் தேவையில்லை. பாரம்பரியமாக விளைவிக்கப்படும் சுதேசி ரகங்கள் என்பது அந்தந்த மண்ணின் தன்மைக்கு உகந்தது. அமெரிக்காவில் உருளை வறுவல் சந்தைக்கான உருளைக் கிழங்கு என்பது அந்த சந்தைக்கேற்ற ரகமாகத் தான் இருக்கும். அந்நிய ரகங்களை நமது மண்ணில் விளைவிக்க வேண்டுமென்றால், நிறைய ரசாயனங்களைக் கொட்டியாக வேண்டும். ஏற்கனவே உரங்களால் செத்துப்போன நிலங்களின் நிலை இன்னும் மோசமாகும்.

மட்டுமல்லாமல், இப்படி அந்நிய ரகங்களுக்கான சாகுபடிக்கு விதையில் இருந்து பூச்சி மருந்து, தொழில்நுட்பம் என்று சகல வகையிலும் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். தற்போது, ஒரு பகுதியளவுக்காவது தற்சார்புடன் இருக்கும் விவசாயம் முற்றாக பன்னாட்டுக் கம்பெனிகளை நம்பி இருந்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளுவதாகவே இது அமையும். ஐ.டி.சி ஏற்கனவே கணிசமான அளவுக்கு சந்தையைக் கைபற்றியிருக்கும் நிலையில், முழுமையாக அந்தச் சந்தை அவன் கைகளில் விழுந்தால், நமக்கு நாம் விரும்பிய ரக கோதுமையை உண்ணும் வாய்ப்பு கிடைக்குமா?

வால்மார்ட் வந்தால் சிறு உற்பத்தியாளர்கள் பிழைப்பார்கள் என்கிற புளுகு

வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு மளிகைக்கடைகள் தமது சங்கிலித் தொடர் சூப்பர்மார்ட்டுக்கான கொள்முதலில் 30 சதவீதத்தை உலகெங்கும் உள்ள சிறு உற்பத்தியாளர்களிடம் வாங்கிக் கொள்வார்கள் என்றும், அப்படி நெல்லுக்கு இறைத்தது புல்லுக்கும் கொஞ்சம் புசியுமாதலால் நமது அம்மி அப்பள கம்பேனியிலிருந்து பூ மார்க் பீடி கம்பேனி வரை பிழைத்துக் கொள்வார்கள் என்றும் இதன் மூலமும் நல்ல வேலைவாய்ப்பு உருவாகும் என அதன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

சிறு உற்பத்தியாளர்கள் ஒருபுறம் இருக்கட்டும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ப்ராக்டர் & காம்பிள் நிறுவனமே வால்மார்ட்டின் ஏகபோகத்தை கட்டுப்படுத்த அரசு தலையிட வேண்டுமென்றும், அதன் கொள்முதல் கொள்கையின் விளைவால் தங்களால் தொழில் நடத்த முடியவில்லையென்றும் தெரிவித்துள்ளது. வால்மார்ட்டுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் முதல் பத்து நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் மஞ்சள் நோட்டிஸ் கொடுத்து ஓட்டாண்டிகளாகியுள்ளன.

2004-ம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க பொம்மைச் சந்தையில் தனக்கு அடுத்த படியாக இருந்த டாய்ஸ் ‘ஆர்’ யூ நிறுவனத்தோடு விலைக்குறைப்புப் போட்டியில் இறங்கிய வால்மார்ட், அந்த நிறுவனம் விற்ற அதே பொம்மைகளை 10 டாலர் குறைவான விலையில் விற்றது. இதன் மூலம் டாய்ஸ் ஆர் யு நிறுவனத்தின் 146 கடைகள் ஜனவரி 2004-ம் ஆண்டு இழுத்து மூடப்பட்டன. இதில் 3,800 தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அதன் பின் அமெரிக்க பொம்மைச் சந்தையில் 30 சதவீதத்துக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வால்மார்ட், ஏற்கனவே விலைக்குறைப்பில் விட்டதையெல்லாம் பிடித்துக் கொண்டது.

இதே போல் டெக்ஸ்டைல் சந்தையை கபளீகரம் செய்த வால்மார்ட், கரோலினா மில்ஸ், லவ்வபிள் கார்மென்ட்ஸ் போன்ற நிறுவனங்களை ஓட்டாண்டிகளாக்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமின்றி தான் கால்பதித்த நாடுகளிலெல்லாம் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஒழித்துக் கட்டியிருக்கிறது வால்மார்ட். பிற நாடுகளின் அனுபவங்களில் இருந்து நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது இந்தியச் சந்தைக்குள் நுழையும் விஷக் கிருமி. ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்றவை மெல்லக் கொல்லும் ஆர்செனிக் என்றால் வால்மார்ட் உடனே வேலையைக் காட்டும் சயனைட்.

இன்றைய நிலையில் சர்வதேச அளவில் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது உலக முதலாளித்துவ வர்க்கம். சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ள தனது பிரம்மாண்டமான மூலதனத்தை சுழற்சிக்கு விடும் சந்தைகளை வெறிகொண்ட முறையில் தேடியலைந்து கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள். இந்தப் பின்னணியில் தான் மூன்றாம் உலக நாடுகளை இரண்டாம் தலைமுறை பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக வங்கி நிர்பந்தித்து வருகிறது. சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் விமானப் போக்குவரத்து, வங்கித்துறை, இன்சுரென்ஸ், தபால் துறை என்று லாபம் கொழிக்கும் துறைகளில் பொதுத்துறையை ஒழித்து விட்டு அந்நிய மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலுவாக முன்தள்ளுகிறார்கள்.

சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் பல்வேறு வகைகளில் உள்நுழையும் இந்த மூலதனத்தின் தாக்குதலையும் அதையே செயல்திட்டமாகக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவதே நாட்டின் இறையாண்மையைக் காக்க நாட்டுப் பற்று மிக்கவர்கள் உடனே செய்ய வேண்டிய கடமை.

________________________________________________

– தமிழரசன்

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

———————

———————

———————

———————