லிபியாவில் நடந்துள்ள ஆட்சிக்கவிழ்ப்பானது, ஆப்பிரிக்க கண்டத்தில் ஏகாதிபத்தியவாதிகள் புதிய உத்தியுடன் தமது காலனியாதிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்வதை நிரூபித்துக் காட்டுகிறது. 2001இல் ஆப்கானில் நடந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும் 2011இல் லிபியாவில் நடந்துள்ள ஆக்கிரமிப்புப் போருக்கும் உத்திகளிலும் வடிங்களிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களால் ஆப்கான் சூறையாடப்பட்டது. அதற்கு முன்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் மற்றும் பேரழிவுக்கான ஆயுதங்களை அழிப்பது என்ற பெயரில் ஈராக் சூறையாடப்பட்டது. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி, “மனித உரிமைகளைக் காப்பது” என்ற பெயரில் ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முறையாக லிபியா சூறையாடப்பட்டுள்ளது. அன்று, இராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து உலகெங்கிலும், ஏன் அமெரிக்காவிலேயே கண்டனங்களும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. ஆனால், லிபியா மீதான போர்த் தாக்குதலுக்கு எதிராக அவ்வாறு பரவலாக ஆர்ப்பாட்டங்கள் தொடரவில்லை. எதிர்ப்புகளை நீர்த்துப்போக வைக்கும் உத்தியுடன் அமெரிக்கா இந்த ஆக்கிரமிப்புப் போரை நடத்தியுள்ளது.
இராக், ஆப்கான் போலின்றி, அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய நேடோ கூட்டணி நாடுகள் லிபியாவிலேயே விசவாசக் கூலிப் படையை உருவாக்கிக் கொண்டு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தன. ஆளும் வர்க்க எதிர்த்தரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அதிபர் கடாபிக்கு எதிரான அதிகாரப் போட்டியை மாபெரும் சர்வாதிகார எதிர்ப்பு ஜனநாயகப் போராட்டமாகச் சித்தரித்தன. கடாபியின் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு லிபியாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளயிடவும் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் ‘கடாபியின் சர்வாதிகாரம் மனித உரிமை மீறல்’ என்று ஏகாதிபத்தியங்கள் பெருங்கூச்சல் போட்டன.
லிபியாவில் எண்ணெய்வளம் பொதுச் சொத்தாக நாட்டுடமையாக இருந்தது. கடாபி ஒரு சர்வாதிகாரியாக இருந்தபோதிலும், ஏகாதிபத்தியங்களுடன் கள்ள உறவு கொண்டிருந்தபோதிலும் இதர ஆப்பிரிக்க மேற்காசிய நாடுகளைப் போல எண்ணெய் வளத்தைத் தனியார்மயமாக்கவில்லை. பல்வேறு மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்த சேமநல அரசாக கடாபியின் ஆட்சி நீடிப்பதை ஒழித்து, தனியார்மய கார்ப்பரேட்மய ஆட்சியை நிறுவ ஏகாதிபத்தியங்கள் விழைவதுதான், லிபியாவில் ‘மனித உரிமை மீறலுக்கு எதிரான போராக’ சித்தரிக்கப்பட்டது.
லிபியாவில் அரச படைகளுக்கும் அதை எதிர்த்துப் போராடும் கலகப் படைகளுக்கும் இடையே நடக்கும் போர் என்பது உள்நாட்டுப் போர்தானே தவிர, அது மனித உரிமை மீறல் விவகாரமோ, மனித இனப் படுகொலையோ அல்ல என்று ஆப்பிரிக்க ஒன்றியம் ( ஏ.யூ.) அமெரிக்காவின் வாதத்தையும் போர்த்தாக்குதலையும் எதிர்த்து பலமுறை கண்டனம் தெரிவித்தது. உள்நாட்டுப் போரின் வன்முறையை இனப்படுகொலையாகச் சித்தரித்து அமெரிக்காவும் நேடோ கூட்டணிப் படைகளும் தாக்குதல் நடத்துவதென்பது, நாடுகளின் இறையாண்மைக்கு எதிரானது என்று அது குற்றம் சாட்டியது. ஆப்பிரிக்க ஒன்றியத்தை நடுவராகக் கொண்டு லிபியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறும், சமாதான வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறும் ஐ.நா.விடம் கோரியது. கடாபியும் ஆப்பிரிக்க ஒன்றியம் முன்வைத்த திட்டத்துக்கு இசைந்தார். ஆனால், லிபியாவிலுள்ள அமெரிக்க விசுவாசக் கூலிப்படைகளும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் இதனை ஏற்க மறுத்து தாக்குதலை நடத்தின.
லிபியாவில் உள்நாட்டுப் போர் மூர்க்கமாக நடந்து வந்த நிலையில், அமெரிக்கா மற்றும் நேடோ கூட்டணியின் வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதலை நியாயப்படுத்த, “ நாங்கள் தாக்குதல் நடத்த இன்னும் ஒரு நாள் தாமதத்திருந்தால் பென்காசி நகரமே மயானமாக மாறியிருக்கும்; அந்த வட்டாரமே படுகொலைப் பிரதேசமாக மாறியிருக்கும்; பின்னர் உலகின் பொதுக்கருத்து எங்களுக்கு எதிராகத் திரும்பி, நாங்கள் மனித உரிமையைக் காக்கத் தவறியவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்போம்” என்று கடந்த ஆகஸ்டு மாதத்தில் கூச்சலிட்டார், அமெரிக்க அதிபர் ஒபாமா. இராக்கில் பேரழிவுக்கான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்று முன்பு அமெரிக்க அதிபராக இருந்த புஷ் கூசாமல் புளுகிக் கொண்டு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்ததைப் போல, இப்போது லிபியா மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க புஷ் வழியில் அண்டப்புளுகை ஒபாமா அவிழ்த்துவிட்டார். அவரது முதல்நிலை உதவியாளரோ, ஒரு லட்சம் அப்பாவி மக்கள் கடாபியின் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூசாமல் புளுகினார். முதலாளித்துவ ஊடகங்கள் இதை ஊதிப்பெருக்கி லிபியாவில் இரத்த ஆறு ஓடுவதாகப் பீதியூட்டின. ஆனால், பென்காசி நகரில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டதாக ஒபாமா கூறியதற்கும், ஊடகங்களால் பீதியூட்டப்பட்ட செய்திகளுக்கும் இதுவரை எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
அதேசமயம், நேடோ படைகளும், அவற்றின் விசுவாச லிபியக் கூலிப்படைகளும்தான் அப்பட்டமான மனிதத்தன்மையற்ற படுகொலைகளில் ஈடுபட்டன. நேடோ படைகளின் தாக்குதலால் ஏறத்தாழ 50,000 லிபிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர் வீடுவாசல் இழந்து அகதிகளாகி நிற்கின்றனர். பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளும், குறிப்பாக அமெரிக்க ஆதரவு நைஜீரிய அதிபரும் கூட இப்படுகொலைகளைக் கண்டித்துள்ளனர். தொடரும் வன்முறைத் தாக்குதல்களால் போரில் சிக்கிய அப்பாவி லிபிய மக்களும், அண்டை நாடுகளிலிருந்து லிபியாவில் பிழைப்புக்காக வந்த கருப்பின மக்களும் அகதிகளாகி, லிபியாவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் தப்பிச் சென்றபோது, அவர்களைக் காப்பாற்ற எந்த ஏகாதிபத்தியமும் முன்வரவில்லை.
ஆப்பிரிக்காவிலுள்ள கென்யா நாட்டின் கருப்பினத் தந்தைக்குப் பிறந்த மகனாகத் தன்னை அறிவித்துக் கொண்ட அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபரான ஒபாமா, அக்கருப்பின அகதிகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனித நேயம், மனித உரிமை பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்திய நேடோ படைகளோ, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலோ அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நடுக்கடலில் தத்தளித்த அவர்கள் உணவின்றி தண்ணீரின்றி பட்டினியாலும் நோயாலும் மாண்டுபோனார்கள்.
இனப்படுகொலையும் மனித உரிமை மீறலும் ஒரு நாட்டில் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி, சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படும் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் இனி நேரடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் என்பதும், லிபியாவைப் போன்ற கதி இனி உலகின் பிற ஏழை நாடுகளிலும் நிகழும் என்பதும் இப்போது எழுதப்படாத விதியாகிவிட்டது.
அமெரிக்க விசுவாசக் கூலிப்படைகள் லிபியாவின் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றியதும், ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவின் எல்.ஆர்.ஏ. என்ற அரசு எதிர்ப்பு அடிப்படைவாத பிற்போக்கு கலகக் கும்பலை வீழ்த்த, “மனிதாபிமான நடவடிக்கை” என்ற பெயரில் அமெரிக்க இராணுவப் படைகள் உகாண்டாவில் நிறுத்தப்பட்டன. இதுமட்டுமின்றி, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டு, அந்நாடுகளின் “பாதுகாப்புக்கும் நிலைத்த தன்மைக்கும் இப்படைகள் உதவும்” என்று அறிவித்துள்ளார், ஒபாமா. லிபியா மறுகாலனியாக்கப்பட்டதைத் தொடர்ந்து மாலி, சாட், நைஜர், பெனின், போஸ்ட்வானா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, காபோன், ஜாம்பியா, செனகல், மொசாம்பிக், கானா, மாலாவி முதலான ஆப்பிரிக்க நாடுகளின் இராணுவப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வேலையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. “எரிபொருள் விநியோகமுறையைப் பாதுகாப்பது” என்ற பெயரில் நைஜர் டெல்டா பகுதியிலும், கினியா வளைகுடாவிலும் அமெரிக்காவும் நேடோ கூட்டணிப் படைகளும் இராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ளன. வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் பெருமளவு மூலதனமிட்டு செல்வாக்கு செலுத்தும் சீனாவை வெளியேற்றிவிட்டு, மூல வளங்களைக் கைப்பற்றி மேலாதிக்கம் செலுத்துவது என்ற திட்டத்துடன் வட ஆப்பிரிக்கப் பகுதியில் அமெரிக்கா நிரந்தரமாகப் படைகளை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளது.
ஆசிய கண்டத்தில் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு விசுவாசமாக இருப்பதால், இப்பிராந்தியத்தில் பிரச்சினை இல்லை. மேற்காசியாதான் அமெரிக்காவுக்கு தொடர்ந்து சிக்கலாக இருந்து வந்தது. இதில் இராக்கும் ஆப்கானும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேற்காசியாவில் அடுத்ததாக சிரியாவில் லிபியாவைப் போன்றதொரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது. அதைத் தொடர்ந்து இரான் மீது குறிவைத்துள்ளது.
ஆப்கானில் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர் 2,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 1780 பேர் அமெரிக்கர்கள் என்றும் சி.என்.என். தொலைக்காட்சி கூறுகிறது. ஆனால், லிபியாவில் அத்தகைய இழப்புகள் எதுவுமில்லை. லிபியாவில் தனது தரைப்படைத் துருப்புகளை நிறுத்தாமல் ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கா வெற்றியைச் சாதித்துள்ளது. தமது விசுவாசக் கூலிப்படைகள் மூலமாகவும், அவற்றுக்கு ஆதரவாக வான்வழி கடல்வழியே போர்த்தாக்குதலை நடத்தியும் லிபியாவை ஆக்கிரமித்துள்ளது, அமெரிக்கா. இது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கும் ஏற்புடைய புதிய உத்தியாக அமைந்துள்ளதால், இந்தப் பாணியில் ஆக்கிரமிப்புப் போரையும் மேலாதிக்கத்தையும் நிறுவ அவை துடிக்கின்றன. அமெரிக்காவின் துணை அதிபரான ஜோ பிடன், “இப்போரில் அமெரிக்கா 200 கோடி டாலர்களைச் செலவிட்டது. ஆனால், ஒரு அமெரிக்கன்கூடக் கொல்லப்படவில்லை. கடந்த காலங்களைப் போலின்றி நாங்கள் முன்னேறிச் செல்வதைக் குறிக்கும் முக்கிய விசயம் இது” என்கிறார். ஒரு அமெரிக்கன்கூட சாகவில்லைதான்; ஆனால், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் தாக்குதலாலும் கூலிப் படைகளாலும் 50,000க்கும் மேற்பட்ட லிபிய மக்கள் கொல்லப்பட்டுள்ளார்களே, அவர்கள் மனிதர்கள் இல்லையா? ஏழை நாடுகளின் மனித உயிர்கள் மயிருக்குச் சமம் என்பதுதான் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் இப்போரின் மூலம் உலகுக்கு உணர்த்தியுள்ள செய்தி.
எல்லாவற்றுக்கும் மேலாக, லிபியாவின் அதிபர் கடாபியின் தலைக்கு விலை வைத்து, கடாபியைக் கொல்லுவோம் என்று பகிரங்கமாக அறிவித்தார், அமெரிக்க அரசுச் செயலரான ஹிலாரி கிளிண்டன். இப்படி ஒரு நாட்டின் அதிபரையே கொல்லுவோம் என்று அறிவிப்பது மனித உரிமைக்கு எதிரான அப்பட்டமான கிரிமினல் குற்றம். இருப்பினும், இக்காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து நாகரிக உலகின் எந்த நாடும் வாய்திறக்கவில்லை. லிபியாவின் அதிபராக இருந்த கடாபி, அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் திரிபோலியிலிருந்து சிர்டே நகருக்குத் தப்பிச் சென்றபோது, அவரது வாகனம் நேடோ படைகளால் குண்டுவீசித் தாக்கப்பட்டதும், அமெரிக்க விசுவாசக் கூலிப்படையினர் அவரைச் சிறைபிடித்துச் சித்திரவதை செய்து கோரமாக கொன்றொழித்துள்ளனர். போர்க்கைதிகளைக் கொல்லக்கூடாது என்ற ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரான அப்பட்டமான மனித உரிமை மீறல் இது.
கடாபியின் இனக்குழுவைச் சேர்ந்த தலைவர்கள், அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய ஐ.நா.மன்றத்திடமும் அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகத்திடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும், அவை எதுவும் ஏற்கப்படவில்லை. கடாபியின் உடலை அரை நிர்வாணமாக்கி இழிவுபடுத்தியதோடு, இறைச்சிக் கூடத்தில் கிடத்தி கெட்டழுக வைத்து அவமானப்படுத்தி, அதைப் புகைப்படம் எடுத்து, அக்காட்டுமிராண்டித்தனத்தைப் பெருமிதமாகக் கொண்டாடின, நேடோவின் கூலிப்படைகள். அன்று காலனியாதிக்கவாதிகள் விடுதலைப் போராளிகளைப் பொது இடத்தில் தூக்கில் போட்டு பிணத்தை வல்லூறுகள் தின்ன விட்டதைப் போல, கடாபியை இழிவுபடுத்திக் கொன்றொழித்துள்ளதன் மூலம் உலகில் யாராவது இத்தகைய ஆக்கிரமிப்பை எதிர்த்தால், இந்தக் கதிதான் ஏற்படும் என்று இன்றைய ஏகாதிபத்தியவாதிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
முதலாளித்துவ ஜனநாயகத்தின் உன்னதத்திற்கு உதாரணமாகக் காட்டப்படும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நாகரிகமும், மனிதநேயமும், ஜனநாயகமும் உயிரினும் மேலானதாக மதிக்கப்படுவதாக ஒரு மூடநம்பிக்கை பரப்பப்படுகிறது. இது வெறும் பிரமை என்பதை லிபியாவில் நடந்துள்ள ஆட்சிக் கவிழ்ப்பு ஆக்கிரமிப்புப் போரும் கடாபியின் படுகொலையும், அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சூறையாட ஏகாதிபத்தியவாதிகள் வகுத்துள்ள புதிய வடிவிலான காலனியாதிக்க ஆக்கிரமிப்புத் திட்டங்களும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன. ஏகாதிபத்தியங்கள் ஏறத்தாழ 50,60 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றிய நவ காலனிய போர்த்தந்திர உத்தியை இப்போது கடாசி எறிந்துவிட்டு, புதிய வடிவிலான அப்பட்டமான காலனியாதிக்கத்தை மறுகாலனியாதிக்கத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
காட்டுமிராண்டித்தனம், சூறையாடல், இனவெறி, ஆக்கிரமிப்பு, போர்வெறி முதலான மத்தியகாலத்தின் இழிந்த பண்புகளை இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கவாதிகள் போற்றிப் புகழ்கின்றனர். நாடு பிடிக்கும் போர்களை நடத்திய நெப்போலியனும் அலெக்சாண்டரும் இப்போது அவர்களின் குலதெய்வங்களாகியுள்ளனர்.
லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான நேடோ கூட்டணிப் படைகள் ஆக்கிரமிப்புப் போரை தொடுத்ததும், பிரான்சின் போலி சோசலிசக் கட்சியின் மூத்த தலைவரான டொமினிக் ஸ்டாரஸ்கான், “ வடக்கே ஆர்டிக் துருவத்தின் பனிப்பகுதியிலிருந்து தெற்கே சகாரா பாலைவனத்தின் மணற்பகுதிவரையிலான பிராந்தியம் இனி ஐரோப்பா கண்டமாகத் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பாவையும் ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் மத்தியத் தரைக்கடலை இனி ஐரோப்பாவின் உள்நாட்டுக் கடலாக மாற்ற வேண்டும். நாடு பிடிக்கும் போரில் ரோமானியர்களும் நெப்போலியனும் சாதித்ததைப் போல, ஆப்பிரிக்கக் கண்டத்தை மீண்டும் அபகரிக்க வேண்டும்” என்று தனது காலனியாதிக்க வெறியை வெளிப்படையாகக் கக்கினார். “ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அல்ஜீரியாவைத் தனது காலனியாக வைத்திருந்த பிரான்ஸ், அல்ஜீரியா அன்னியக் காலனி அல்ல என்றும், அது பிரான்சின் புறக்கடைப் பிராந்தியம் என்றும் அன்று அறிவித்தது. அதைப்போன்ற நிலை இனி ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாகும்” என்று அவர் பூரிப்புடன் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர், பேரழிவு ஆயுதங்களை ஒழித்தல், போக்கிரி அரசுகளைத் தண்டித்தல், ஜனநாயகம் மனித உரிமையை நிலைநாட்டுதல், போரில் சிக்கிய சிவிலியன்களைப் பாதுகாத்தல் என்ற முகாந்திரங்களையும் நியாயவாதங்களையும் முன்நிறுத்தி ஏழை நாடுகள் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கவும், படையெடுக்கவும், அவற்றைத் தனது மறுகாலனியாக்கவும், அதற்காக முந்திக் கொண்டு தாக்கவும் தனக்குச் சிறப்பு உரிமை உண்டு என்று சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்காதான் உலகின் முதல் எதிரி என்பதை லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது. இதுவரை காணாத காட்டுமிராண்டித்தனமும் கொடூரமும் நவீனமும் கொண்ட புதிய உத்தியுடன் போர் தொடுத்து, ஏழை நாடுகளை மறுகாலனியாக்கிவரும் அமெரிக்க மேல்நிலை வல்லரசையும் அதன் தலைமையிலான ஏகாதிபத்தியங்களையும் உலகெங்குமுள்ள உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராடி வீழ்த்த வேண்டிய உடனடிக் கடமையை லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர் மீண்டும் வலியுறுத்துகிறது.
____________________________________________________
– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011
_________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி!
- லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
- அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் லிபிய மக்கள் போர் வெல்லட்டும்!
- ஏகாதிபத்தியங்களின் நெருக்கடியை தீர்க்க அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு போர்கள்!
- துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!
- துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்
- அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!
- சர்வாதிகார எதிர்ப்பில் அமெரிக்காவின் இரட்டை வேடம் !
- ஏன் அவர் ஆஃப்கானுக்குத் திரும்பிச் செல்லமாட்டார் !
- ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!
- இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!
- அமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா!!
- செருப்பின் செய்தி !! – அல் ஜய்தி!
ஏழை நாடுகளின் மனித உயிர்கள் மயிருக்குச் சமம் என்பதுதான் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் இப்போரின் மூலம் உலகுக்கு உணர்த்தியுள்ள செய்தி.//