Wednesday, September 11, 2024
முகப்புகலைஇசைசாமக்கோழி கூவும் நேரத்திலே.... பாடல்!

சாமக்கோழி கூவும் நேரத்திலே…. பாடல்!

-

அறுவடை செய்யும் விவசாயத் தொழிலாளிக்கு விளைச்சலில் உரிமை இல்லை, அது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையானது. கட்டிடம் கட்டும் தொழிலாளிக்கு கட்டிடத்தின் மீது உரிமை இல்லை, அது முதல் போட்ட முதலாளிக்கு உரிமையானது. தொழிற்சாலையில் உழைக்கும் தொழிலாளிக்கு உற்பத்திப் பொருளின் மீது உரிமை இல்லை, அது வேலை வாங்கிய முதலாளிக்குச் சொந்தமானது.

இதுதான் மனித வரலாற்றின் மிகப்பெரிய மனித உரிமை மீறல். ‘தனிச் சொத்தும் லாபமும் இல்லா விட்டால் வேலை செய்ய ஊக்கம் இருக்காது’ என்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். உண்மையில் உற்பத்தி எல்லாமே, விளைபொருளாலிருந்து சொத்து, லாபம் சேர்க்க முடியாத தொழிலாளர்களின் உழைப்பில்தான் உருவாகிறது.

ஒரு விவசாயத் தொழிலாளரின் எண்ணங்களாக இந்த நிதர்சனத்தின் சோகங்களை இந்தப் பாடலில் கேட்கலாம். இதைக் கேட்கும் போது ‘நாம் போடும் வெள்ளைச் சட்டை, எத்தனையோ உழைக்கும் மக்களின் வியர்வையின் பலன்’ என்ற குற்ற உணர்வு எழாதவர்கள் இருக்க முடியாது.

எரின் புரோக்கோவிச் என்ற திரைப்படத்தில் கணவனைப் பிரிந்த தாயாக நடிக்கும் ஜூலியா ராபர்ட்ஸ், செய்த வேலைக்குத் தனக்குச் சேர வேண்டிய பணம் மறுக்கப்படும் சூழலில் ‘நான் என் குழந்தைகளுடன் செலவிட வேண்டிய நேரத்தில் உழைத்து செய்த வேலை, அதன் பலனை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று பொங்கி எழுவார். இந்தப் பாடலில் வரும்

‘கத்துற பிள்ளைய தொட்டில்ல போட்டுட்டு கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்’

என்ற வரி ஒரு தாயின் அத்தகைய சோகத்தை வெளிப்படுத்துகிறது. அந்த உழைப்பின் பலன் அவருக்கும் இல்லை, தாயின் அருகாமையை இழந்த குழந்தைக்கும் இல்லை. ஏனென்றால் நிலம் அவர்களது சொத்து இல்லை. விவசாயத் தொழிலின் கடும் உழைப்பு, உடல் வருத்தம் இவற்றைச் சொல்லும் வரிகள் கேட்பவரையும் அந்த வலியை உணர வைக்கின்றன.

 “ஏ ஊரையே வளச்சிப் போட்டுக்கிட்டு நம்ம உழப்பச் சொரண்டி சேர்த்துக் கிட்டு
உல்லாச போகமா வாழுற கூட்டத்த இல்லாம ஒழிக்க வாருங்கம்மா”

தனது உழைப்பின் பலனை சுரண்டி உல்லாசமாக வாழும் கூட்டத்தின் மீதான அவரது கோபம் நியாயமானது, புரிந்து கொள்ளக் கூடியது, ஆதரிக்கப்பட வேண்டியது.

விவசாயத் தொழிலாளரை வைத்துப் பாடப்படும் இந்தப் பாடல் உழைப்பை விற்று கூலி வாங்கி வாழ்க்கை நடத்தும் அனைத்துத் தொழிலாளருக்கும் பொருந்தும். கட்டிடத் தொழிலாளர்கள், தொழிற்சாலை உழைப்பாளிகள், ஓட்டுனர்கள் என்று உடலுழைப்பு செலுத்துபவர்களுக்கு தமது உழைப்பின் கருவிகளும் சொந்தமில்லை, பலனும் சொந்தமில்லை.

புரிதலுக்காக நடுத்தர வர்க்கம், அதிக சம்பளம் என்று ‘பொறாமைக்குள்ளாகும்’ ஐடி ஊழியர்களை எடுத்துக் கொள்ளலாம். பல ஆண்டுகளாக உழைத்து ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கலாம் அல்லது கண் போல பராமரித்து ஒரு வாடிக்கையாளர் உறவை வளர்த்திருக்கலாம். குறிப்பிட்ட கட்டத்தில் வேலையை விட்டுப் போக நேர்ந்தால், அத்தனையையும் இறக்கி வைத்து விட்டு வெறுமையுடன் அடுத்த நிறுவனத்துக்கு நகர வேண்டியதுதான். அங்கும் தனது உழைப்பைச் செலுத்தி அதன் பலனிலிருந்து விலகியே வாழ வேண்டியிருக்கும்.

கூலிக்கு உழைப்பை பரிவர்த்தனை செய்யும் சமூகத்தின் மிகப்பெரிய சோகம் இது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்கள், வாழ்வின் வெறுமை யாராலும் கணக்கிடப்படவில்லை. இதற்கு தீர்வுதான் என்ன? வயலில் விவசாயக் கூலித் தொழிலாளி சொல்கிறார் கேட்போம்.

=================

சாமக்கோழி கூவும் நேரத்திலே

தை மாதத்துப் பின்னிரவின் கரிய இருளில் உதறி எடுக்கும் பனியையும் குளிரையும் உதறி எறிந்து கூடைக்குள் முடங்கிக் கிடக்கும் கோழியையும் எழுப்பி கொக்கரக்கோ பாடச் சொல்லி விட்டு அறுவடைக்குச் செல்வான் எங்கள் கூலி விவசாயி. அறுவடை செய்யப் போகும் விளைச்சலில் தனக்குப் பங்கில்லை என்பது தெரிந்தும் மகிழ்ச்சியோடு உழைக்கிறான். அந்த மகிழ்ச்சி உழைத்து வாழும் ஒழுக்கத்தால், பெருமிதத்தால் வந்த மகிழ்ச்சி.

சாமக்கோழி கூவும் நேரத்தில….ம.க.இ.க பாடல் – ஆடியோ!ஏ தானே னன்னே னானே னானே
ஏ தானே னானே னானே
தானே னானே
தானே னானே

ஏ… சாமக்கோழி கூவும் நேரத்திலே – நாங்க
சம்பா அறுவட செய்யப் போனோம்
விளக்கு வக்கிர நேரம் வர – ரத்த
வேர்வையும் காயாம பாடுபட்டோம்

கோரஸ் : விளக்கு வைக்கிற நேரம் வர – ரத்த
வேர்வையும் காயாம பாடுபட்டோம்

ஏ… கையுக்குள்ள தூரை சேர்த்து வைத்து – கோணக்
கருக்கருவாள வீசி வீசி
பண்ண வயலில நெல்லறுத்தும் – நம்ம
மண்ணுக் குடிசையும் மாறவில்ல

கோரஸ் : மண்ணுக் குடிசையும் மாறவில்ல

ஏ… அள்ளிப் போட்டு நெல்லக் கட்டுகட்டி – நாங்க
ஆளும் பேருமாக தூக்கிக்கிட்டு
ஊசி வரப்புல போகையிலே – ஏங்கி
மூச்சு விட எம்மா… முடியல..,

கோரஸ் : மூச்சு விட எம்மா முடியல

ஏ… கொட்டும் மழையில கொடலங்கீத்துப் போட்டு
குறுவைப் பயிருக்கு களையறுத்தோம்
கத்துற புள்ளைய தொட்டில போட்டுட்டு
கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்

கோரஸ் : கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்

ஏ.. ஊத்தும் பனியில தூங்காம – பண்ண
வூட்டு வயலுக்கு நீர் பாய்ச்சி…
மாட்டப் போல தெனம் பாடுபட்டோம் –  நம்ம
வாட்டும் வறுமையும் தீரவில்ல

கோரஸ் : வாட்டும் வறுமையும் தீரவில்ல

ஏ.. ஊரையே வளச்சிப் போட்டுக்கிட்டு – நம்ம
ஒழப்பச் சொரண்டி சேத்துக் கிட்டு
உல்லாச போகமா வாழுற கூட்டத்த
இல்லாம ஒழிக்க வாருங்கம்மா

கோரஸ் : இல்லாம ஒழிக்க வாருங்கம்மா

ஏ.. ஆள மாத்தி ஆளு ஓட்டுப் போட்டு – அய்யோ
என்ன கண்டோமம்மா நீயே சொல்லு
ஆளுற கூட்டத்த பாடைக்கு அனுப்ப
ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!

கோரஸ் : ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!
ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!

  1. ** உண்மையில் உற்பத்தி எல்லாமே, விளைபொருளாலிருந்து சொத்து, லாபம் சேர்க்க முடியாத தொழிலாளர்களின் உழைப்பில்தான் உருவாகிறது. ***

    உழைப்பு மட்டுமே அல்ல. முதலீடு, அதற்கான வட்டி, திட்டமிடல், ரிஸ்க் எடுத்தல், சந்தைப்படுத்தல், விளம்பரம் என உடல் உழைப்பு, மூளை உழைப்பு, மூலதனம், ரிஸ்க் எனப் பல அம்சங்களிலிருந்து கிடைப்பதுதான் உற்பத்தியும் வாபமும்.

    • //உழைப்பு மட்டுமே அல்ல. முதலீடு, அதற்கான வட்டி, திட்டமிடல், ரிஸ்க் எடுத்தல், சந்தைப்படுத்தல், விளம்பரம் என உடல் உழைப்பு, மூளை உழைப்பு, மூலதனம், ரிஸ்க் எனப் பல அம்சங்களிலிருந்து கிடைப்பதுதான் உற்பத்தியும் வாபமும்.//

      எங்கேயோ கேட்ட குரல்…

  2. EXCELLENT LINES…
    //புரிதலுக்காக நடுத்தர வர்க்கம், அதிக சம்பளம் என்று ‘பொறாமைக்குள்ளாகும்’ ஐடி ஊழியர்களை எடுத்துக் கொள்ளலாம். பல ஆண்டுகளாக உழைத்து ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கலாம் அல்லது கண் போல பராமரித்து ஒரு வாடிக்கையாளர் உறவை வளர்த்திருக்கலாம். குறிப்பிட்ட கட்டத்தில் வேலையை விட்டுப் போக நேர்ந்தால், அத்தனையையும் இறக்கி வைத்து விட்டு வெறுமையுடன் அடுத்த நிறுவனத்துக்கு நகர வேண்டியதுதான். அங்கும் தனது உழைப்பைச் செலுத்தி அதன் பலனிலிருந்து விலகியே வாழ வேண்டியிருக்கும்.//

    • நீங்கள் சொல்வது தற்போதைய ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த துறைகளுக்கு பொருந்தாது… ரெசெசன்னுக்கு பிறகு அவைகள் சுதாரித்து கொண்டார்கள்.. பெரும்பாலான ஐ.டி துறை நண்பர்கள் பிரீலன்செர்களாக உலா வருகின்றனர்… ஒரு நிறுவனத்தில் சேர்ந்த மறு நாளே அடுத்த நிறுவனத்துக்கு தாவுவதை பற்றி யோசிக்கும் இவர்கள் தாங்கள் தயாரிக்கும் மென்பொருள் தமக்கு ஒரு காதும் உதவாது என தெரிந்தே வைத்திருக்கின்றனர்.. வாடிக்கையாளர் உறவை பேணி வளர்த்து வாடிக்கையாளரை வளைக்கும் வித்தையில் வெற்றி பெரும் நபர்கள், வாடிக்கையாளரின் நிறுவனத்துக்கே டைவ் அடித்து இருமடங்கு மும்மடங்கு ஊதியம் பெறுகின்றனர்…

      முக்கியமாக இந்திய ஐ.டி நிறுவனங்கள் வெறும் தரகர்களே… வெளிநாட்டு அல்லது உள்நாட்டு வாடிக்கையாளர்களே உண்மையான மென்பொருளை பயன்படுத்தும் முதலாளிகள். ஒரு முதலாளிக்கே பல தரகர்கள் இருக்கின்றனர்… புத்திசாலிகள் தரகர்களை மாற்றுகின்றனர், வாடிக்கையாளர்களை அல்ல… தான் உறவை பேணி வளர்த்த வாடிக்கையாளனின் மற்ற தரகர்களை அணுகி அதிக ஊதியத்துடன் அந்த தரகு நிறுவனத்தில் இணைகின்றனர்…

      அடுத்ததாக வேலைக்கான நேர்முக தேர்வுகளில் ஒரு நபரின் திறமை அவர் எத்தனை வாடிக்கையாளர்களுக்கு பணி செய்திருக்கிறார் என்பதை பொறுத்து எடை போடப்படுகிறது… ஊதியம் நிரனயிக்கப்படுகிறது…

  3. அருமையான பாடல் வரிகளும், செவிக்கினிமையான குரலும், இசையும், திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டுது! சிந்திக்க வைக்குது!!

  4. அருமையான பாடல் வரிகள். விவசாயி என்னதான் பாடுபட்டாலும் அவன் வாழ்க்கைத் தரம் மேம்படுவதே கிடையாது. மாடு, ஏர், நடவு செய்ய மனிதன், களையெடுக்க மனிதன், அறுவடை செய்ய மனிதன் இப்போது மனிதனுக்கு பதில் இயந்திரம் வந்துள்ளன. அதுவும் பண்ணையாரிடம் மட்டும்தான். கூலிக்கு வேலை செய்யும் விவசாயி வாழ்க்கை என்பது மற்றவரின் வாழ்நிலையைப் பார்த்து ஏக்கப்படுவதாகவே உள்ளது. பொங்கல் பண்டிகை எனபது உழவனோடும், உழவு செய்யும் பொருளேடும் சம்மந்தப்பட்டதாக இருக்கும். இப்பொழுது இயந்திரத்தோடும், கூலித் தொழிலாளி வறுமையோடும்தான் சம்மந்தப்பட்டதாக இருக்கு.

  5. சுரைக்காய் கொடியேறி
    கூரையெல்லம் சுற்றிவர
    வெள்ளைச்சுரைப் பூவெல்லாம்
    வெண்பனியில் மினுக்கமிட
    குடிசை மண்ணடுப்பில்
    கைநீட்டிக் குளிர்காய்ந்து
    காத்திருந்தேன் ஆண்டைக்கு.
    வெள்ளி முளைத்த பின்னே
    விடிந்து தொலைக்குமுன்னே
    மண்வெட்டி தோளேற்றி
    மடைமாறப் போகவேணும்.
    ஆண்டையின் கனைப்புக்கு
    அமைதியாய்க் காத்திருந்தேன்.
    வெடிப்பு மண் சுவரில்
    வெட்டியாய்ச் சாய்ந்திருந்து
    வெறித்தே எனைப் பார்க்கும்
    எனது பறை.

    மார்கழிப் பனிக்குளிரால்
    மார்பிலே சளிபிடித்து
    அன்றாடம் இழுத்திருக்கும்
    அழகுநாய்க்கன் செத்துவிட்டால்
    அடிவாங்கத் துடிக்கும்
    எனது பறை.

    குந்தவும் நேரம் வேண்டாம்
    குடிக்கவும் கஞ்சி வேண்டாம்.
    நாளெல்லாம் சாராயம்
    நாலுகட்டுச் சுருட்டுபோதும்.
    ‘நேத்திருந்தான்
    இன்னைக்குச் செத்தான்
    நேத்திருந்தான்
    இன்னைக்குச் செத்தான்’
    தாளமேதும் தவறாமல்
    தனித்தொலிக்கும்
    எனது பறை.

    சேரியெல்லாம் சேர்ந்திருந்து
    சேர்த்துவைத்த மொத்தச் சொத்து.
    ஏழிலே நாலு பறை
    மீதம் மூன்றும் தப்பட்டை.
    அத்தனையும் சேர்ந்துவிட்டால்
    அதகளம் தான் பறக்கும்.
    ‘நேத்திருந்தான்
    இன்னைக்குச் செத்தான்
    நேத்திருந்தான்
    இன்னைக்குச் செத்தான்.’
    தாளமேதும் தவறாமல்
    தனித்தொலிக்கும்
    எனது பறை.

    பன்றியொன்று பதறியோட
    பாதை பார்த்து நடந்துவந்த
    ஆண்டை கனைத்துச் சொன்னான்:
    “அழகுநாய்க்கன் செத்துவிட்டான்
    மண்வெட்டி எடுத்து நீயும்
    மடை மாறப் போகவேண்டாம்
    பத்துபேரைக் கூட்டிக்கொண்டு
    பறையடிக்க வந்துவிடு.
    நாளெல்லாம் சாராயம்
    நாலுகட்டுச் சுருட்டு
    ஆளுக்குப் படியரிசி
    அளந்துதான் நான் தருவேன்.
    சுடுகாடு போகும்வரை
    சுணங்காமல் அடிக்கவேணும்.”

    ‘நேத்திருந்தான்
    இன்னைக்குச் செத்தான்
    நேத்திருந்தான்
    இன்னைக்குச் செத்தான்.’
    காய்ச்சிப் பறையடிக்க
    கைகள் தினவெடுக்க,
    வெடிப்பு மண் சுவரில்
    வெட்டியாய்ச் சாய்ந்திருந்து
    வெறித்தே எனைப் பார்க்கும்
    எனது பறை.

    உள்ளிருந்து கோபத்தோடு
    வெளியில் வந்தான் எனது மகன்,
    ஆண்டையும் அதிர்ந்துபோக
    அள்ளித் தெளித்த வார்த்தை :
    “சேரியெல்லாம் சேர்ந்திருந்து
    சேர்த்துவைத்த மொத்தச் சொத்து.
    ஏழிலே நாலு பறை
    மீதம் மூன்றும் தப்பட்டை.
    சீச்சீ இனி எங்கள் பறை
    சாவுக்கேதும் அடிக்காது.

    ஒட்டிப்போன வயிறுக்காக
    ஒண்ட ஒரு குடிசைக்காக
    ஊருக்குள் நுழைந்து போக
    உட்கார்ந்து சமமாய்ப் பேச
    தோல்செருப்பை கால் அணிந்து
    தெருவிலெல்லாம் நடந்துபோக
    தனிக்குவளை தீயிலிட்டு
    தேனீரைக் கூடிப் பருக
    எங்கள் பறை இனி ஒலிக்கும்
    எட்டுத் திக்கும் எதிரொலிக்கும்.
    எட்டுத் திக்கும் எதிரொலிக்கும்.
    எங்கள் பறை இனி ஒலிக்கும்.”

    அதிரும் பேச்சு கேட்டு
    ஆண்டையும் ஓடிப்போனான்.
    காய்ச்சிப் பறையடிக்க
    கைகள் தினவெடுக்க,
    வெடிப்பு மண் சுவரில்
    வெட்டியாய்ச் சாய்ந்திருந்து
    வெறித்தே எனைப் பார்க்கும்
    எனது பறை
    புதிய பறை!!

    • அழகுநாய்க்கன் இருக்கும்போது சாதிவெறி நரித்தனந்தான்
      இறந்தபின் ஆகிவிட்டான் நீதிநெறி சரித்திரம்தான்…

      ஆண்டே பழகி விட்ட ஆண்டேக்கள் மாண்டே போனாலும்
      நீண்டே முழக்கமிட்டு சொல்கிறார்கள் அவர் மக்கள்
      “அழகுநாய்க்கன் சாவுக்கு பின் அவிங்க வருவதில்லை தப்படிக்க”

      நரித்தனநாயினும் சரித்திரம் தான் அழகுநாய்க்கன்…

  6. மிக அருமையான வரிகள் கொண்ட பாடல்……..நக்சல்பாரி எழுச்சி கால கட்டத்தில் மிகவும் புகழபெற்ற பாடல் இது…ஒரு காலத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்வரிகள் இவை…….பாடும்பொழுது ஏற்படுகிற பரவசம் இருக்கிறதே அதை அனுபவித்தால் மட்டுமே அதன் தனிச்சிறப்பு புரியும்….பள்ளிக்கூடத்தில் இப்பாடலைப் பாடி திட்டு வாங்கிய அனுபவங்களும் உண்டு………..சிறு வயதில் அடிக்கடி இப்பாடலைப் பாடிக்கொண்டிருப்போம்…..வரிகள் சில மறந்துபோனதால் இப்பொழுதெல்லாம் பாடுவதில்லை….இப்பாடல் வரிகளை மறுபடியும் நியாபகப் படுத்தியமைக்கு நன்றிகள்…

  7. பாடல் நன்றாக உள்ளது. அனால் உங்கள் முடிவுதான் பயங்கரமா இருக்கு. முதலாளியே கூடாது என்கிறீர்களா? தொழில் முறைக்கு உங்கள் தீர்வு தான் என்ன?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க