Thursday, August 11, 2022
முகப்பு கலை இசை சொல்லாத சோகம் - யாரும் வெல்லாத வீரம் ! பாடல் !!

சொல்லாத சோகம் – யாரும் வெல்லாத வீரம் ! பாடல் !!

-

தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.

=========

பாபர், தன் மகன் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற உயிலில் சொல்கிறார். ‘அருமை மகனே, வகை வகையான மதங்களை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நீ உனது மனதை குறுகிய மத உணர்வுகள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தக் கூடாது. பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.’ இது பாபர் தன் கைப்பட எழுதிய உயில். அர்ஜூனனுக்கு கண்ணன் செய்த கீதோபதேசம் போல புராணக் கட்டுக்கதை அல்ல. எனினும் அந்த பாபர்தான் கோயிலை இடித்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவர்கள் பழைய வரலாற்றை மட்டுமா திரித்தார்கள்! வெள்ளையனுக்கு எதிராக வீரப் போர் புரிந்து இறந்த முஸ்லீம் போராளிகளின் தியாகத்தையும் மறைக்கிறார்கள், திரிக்கிறார்கள். போர்த்துக்கீசியரை கடற்போரில் வென்ற கேரளத்தின் குஞ்ஞாலி மரைக்காயரையும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய மன்னன் பகதூர்ஷாவையும் எத்தனை பேருக்குத் தெரியும்? வெள்ளையர்கள் நடுநடுங்க வீரப் போர் புரிந்த பைசலாபாத் மௌல்வி அகமதுஷாவை வெள்ளையரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு சதி செய்து கொன்றவன் அன்றைய அயோத்தியின் இந்து மன்னன் ஜகன்னாத ராஜா, என்று யாருக்குத் தெரியும்?

முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்ட வேலூர் கோட்டைக் கலகத்திற்கு தலைமை தாங்கிய முஸ்லீம் தளபதிகள் சவுக்காலும் புளியம் விளாறுகளாலும் அடித்தே கொல்லப்பட்டது யாருக்குத் தெரியும்? பகத்சிங்கைப் போலவே தூக்கு மேடை ஏறிய அவன் தோழன் அஷ்வகுல்லாகானை யாருக்குத் தெரியும்?

தெரியக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதனால்தான் புராணப் புளுகுகளை உண்மை போல சித்தரிக்கும் தொலைக்காட்சியில் திப்புசுல்தானின் வரலாற்றை கற்பனைக் கதை என்று குறிப்பிடுகிறார்கள். இருட்டடிப்பு மட்டுமா, அந்தத் தியாகிகளை துரோகிகள் என்றும் தூற்றுகிறார்கள்.

அவர்களுடைய வாரிசுகளும் இந்த மண்ணின் மைந்தர்களுமான முஸ்லீம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்கிறார்கள். எத்தனை பெரிய துரோகம், உங்கள் இதயம் வலிக்கவில்லையா, கண்கள் பனிக்கவில்லையா இந்த அநீதியைக் கண்டு?சொல்லாத சோகம் – யாரும்  வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – இது கண்ணீரின் கீதம்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும் வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…
அயோத்தி என்பது தியாகம் – அதன் சின்னம் அசரத் பேகம்
கோரஸ் : அதன் சின்னம் அசரத் பேகம்

அசரத் மஹல் அயோத்தியின் ராணி. முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப் போர் நடத்தி தோல்வியுற்றாள் ஹசரத் மஹல். அவளுக்கு அடைக்கலம் அளிக்கக் கூட எந்த இந்து மன்னனும் முன்வரவில்லை. தன் 10 வயது மகனோடு இமயத்தின் அடிவாரக் காடுகளில் அநாதையாக திரிந்து இறந்தாள் அந்தத் தாய்.

அயோத்தி என்பது தியாகம் – அதன் சின்னம் அசரத் பேகம்
கோரஸ் : அதன் சின்னம் அசரத் பேகம்

ஆளரவம் இல்லா காட்டில்…அநா..தையாக மரணம்
கோரஸ் : அநா..தையாக மரணம்

அந்தப் பெண் ஈன்ற மண்ணே… இன்று அய்யோ அவமானம்…
கோரஸ் : அந்தப் பெண் ஈன்ற மண்ணே… இன்று அய்யோ அவமானம்…

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

திப்பு சுல்தானின் வீரம் – கட்டபொம்மனையும் மீறும்
கோரஸ் : கட்டபொம்மனையும் மீறும்

திப்பு சுல்தான், இந்திய மன்னர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வெள்ளையனை விரட்ட வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால், திப்பு தோற்கடிக்கப்பட்டான். அவனை முதுகில் குத்தியவர்களில் முதன்மையானவர்கள் மராத்திய பேஷ்வா மன்னர்கள். வேறு யாருமல்ல, அவர்கள்தான் ஆர்எஸ்எஸ்சின் மூதாதையர்களான சித்பவன பார்ப்பனர்கள்.

திப்பு சுல்தானின் வீரம் – கட்டபொம்மனையும் மீறும்
கோரஸ் : கட்டபொம்மனையும் மீறும்

இந்து மன்னர்களின் துரோகம் – எட்டப்பன் வகையில் சேரும்…
கோரஸ் : எட்டப்பன் வகையில் சேரும்…

தன் படையோடு தானும் சாவை எதிர்கொண்ட தீரம்…
கோரஸ் : தன் படையோடு தானும் சாவை எதிர்கொண்ட தீரம்..

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்..

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

மாப்பிளா போராட்டம் – மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
கோரஸ் : மண்ணை உழவன் கையில் சேர்க்கும்

உழுபவனுக்கு நிலம். மாப்பிளா முஸ்லீம் விவசாயிகளின் முழக்கம். அது தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லீம் விவசாயிகளும் இணைந்து நடத்திய போராட்டம். சொந்த மண்ணின் மக்களை ஒடுக்க வெள்ளையனின் காலை நக்கினார்கள் நம்பூதிரிகள். கிராமம் கிராமமாக கொலை செய்யப்பட்ட போதும் 50 ஆண்டு காலம் அந்த போராட்டம் ஓயவில்லை.

மாப்பிளா போராட்டம் – மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
கோரஸ் : மண்ணை உழவன் கையில் சேர்க்கும்

நம்பூதிரி வெள்ளையர் ஆட்டம் – அவன் சாதித் திமிரை ஓட்டும்
கோரஸ்: அவன் சாதித்திமிரை ஓட்டும்

அரை நூற்றாண்டு காலம் அடி பணியாத கோபம்
கோரஸ் : அரை நூற்றாண்டு காலம் அடி பணியாத கோபம்

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும் வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

முதல் சுதந்திரப் போராட்டம் – தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
கோரஸ் : தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்

வேலூர் கோட்டை. அங்கே சிறை வைக்கப்பட்டிருந்த திப்புவின் முஸ்லீம் தளபதிகளும் ஆங்கிலப் படையின் தமிழ் சிப்பாய்களும் கோட்டையைக் கைப்பற்றினார்கள். கிளர்ச்சியை நசுக்கினான் வெள்ளையன். பீரங்கி வாயில் வைத்து அவர்களை பிளந்து அகழியில் வீசினான். விடுதலைப் போரின் உறவாய் அந்த மண்ணில் உறைந்து விட்ட இரத்தத்தில் மதம் எங்கே?

முதல் சுதந்திரப் போராட்டம் – தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
கோரஸ் : தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்

வெள்ளை கசையால் சிதைந்த தேகம் – வேலூர் கோட்டை அகழியை மூடும்
கோரஸ் : வேலூர் கோட்டை அகழியை மூடும்

அந்த முஸ்லீம் மக்கள் தியாகம்…விடுதலைப் புயலின் கருவாய் மாறும்…
கோரஸ் : அந்த முஸ்லீம் மக்கள் தியாகம்…விடுதலைப் புயலின் கருவாய் மாறும்…

என்றும்… உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

எட்டப்பன்மாரின் துரோகம் – இந்து என்பதனாலா மாறும்
கோரஸ் : இந்து என்பதனாலா மாறும்

பேஷ்வா அரச பரம்பரையும் இன்னும் பல எட்டப்பன்களும் நினைத்திருப்பார்களா, இந்து என்ற ஒரே காரணத்தால் நாம் போற்றப்படுவோம் என்று. அல்லது களத்தில் உயிர்நீத்தானே திப்பு சுல்தான், அவன் நினைத்திருப்பானா, முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் நாம் தூற்றப்படுவோம் என்று. இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய் விடும்.

எட்டப்பன்மாரின் துரோகம் – இந்து என்பதனாலா மாறும்
கோரஸ் : இந்து என்பதனாலா மாறும்

திப்பு சுல்தானின் தியாகம்… – ஏன் முஸ்லீம் என்ற பேதம்
கோரஸ் : ஏன் முஸ்லீம் என்ற பேதம்

இது பாடாத வீரம் யாரும் தேடாத ராகம் –
கோரஸ் : இது பாடாத வீரம்  யாரும் தேடாத ராகம்

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்… வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்… வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

__________________________________________

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் காவி இருள் ஒலிக்குறுந்தகடில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

 

 1. //இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய் விடும்.//அருமையான வரிகள்

 2. “என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்…” இந்த வரிகளைப் பாடும் குரலும், அந்த இசைக்கேற்ற குரல் நுணுக்கமும், இசையும் மனதைப் பிழிந்தெடுக்கிறது! இந்த “உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்… ” வார்த்தைகள் வரும் இடத்தில் அந்தப் பாடகரின் மேதைமை தெரிகிறது!!

  இசையின் பின்னால் எடுத்தியம்பும் தோழர் மருதையனின் குரலில் வார்தைகளோ மின்னுகின்றன!

 3. படிப்பதற்கே உணர்ச்சி ததும்புகிறது
  விரைவில் ஒலிக்குறுந்தகடு வாங்கி இசைப்பாடலையும் கேட்க ஆவலாக உள்ளேன்.
  நன்றி

 4. சாத்தான் வினவு வேதம் ஓதுதா? முஸ்லீம் பரிவு ஸ்பெஷலா? பலே பலே.

 5. // திப்பு சுல்தான், இந்திய மன்னர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வெள்ளையனை விரட்ட வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால், திப்பு தோற்கடிக்கப்பட்டான். அவனை முதுகில் குத்தியவர்களில் முதன்மையானவர்கள் மராத்திய பேஷ்வா மன்னர்கள். வேறு யாருமல்ல, அவர்கள்தான் ஆர்எஸ்எஸ்சின் மூதாதையர்களான சித்பவன பார்ப்பனர்கள்.
  //

  மைசூர் புலி திப்புவைப் பாராட்டுவதெல்லாம் சரிதான், பார்ப்பனர்களை முதுகில் குத்தியவர்கள் என்பது சரியா!? 1775-1782 வரை மராட்டியர்கள் ஆங்கிலேயரோடு மோதிக் கொண்டிருந்த நேரத்தில் ஹைதர் அலி மராட்டியப் பகுதிகளை (கூட்டி,கஜேந்திரகாட்) கைப்பற்றினார். முதல் ஆங்கில-மராட்டியப் போர் முடிந்தபின் சுதாரித்த மராட்டியர்கள் இழந்த பகுதிகளை அப்போது மைசூர் மன்னராக இருந்த திப்புவுடன் 1786-ல் மோதி கைப்பற்றினர். அப்போது மராட்டியர்களுடன் சேர்ந்து திப்புவை எதிர்த்தவர் ஹைதராபாத் நிஜாம். உடன்படிக்கை செய்து கொண்டார் திப்பு. அதன்பின் திப்புவை 1798-ல் களத்தில் கொல்ல ஆங்கிலேயருடன் துணை நின்றவர்களில் ஹைதரபாத் நிஜாமும், ஆர்க்காட்டு நவாபும் முன்னிலை வகித்தவர்கள். ஆட்சியாளர்களுக்கு மதத்தைவிட நாற்காலி முக்கியம் என்பது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்.

 6. vinavu anaithu samuga pratchanaigal patri elthukirirgal.. samugathil oldugapda samugathal kudumpathal eatrukollamudiatha thirunagaigall patri eathanum kadurai vanthulatha?

 7. நான் இந்த பாடலை கேட்டு உள்ளேன் ஆனால் அப்பொ அர்தகம் புரியவிலை இப்பொ உணர்கிரேன். தோழர் மருதையன் உரை உணர்சியை எழுப்புகிறது.

 8. இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் முடிகள் குத்திட்டு நிற்கும், தேசபக்திப் போரின் தியாகிகளை நினைத்து மன பெருமிதத்தில் விம்மும் அதே நேரத்தில் அவர்களை இருட்டடிப்பு செய்து இழிவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளின் துரோகம் வெஞ்சினத்தை கிளப்பும். இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய் விடும்…..

 9. தேசத் துரோக இந்துத்துவா கும்பல் கையில் மீடியா இருக்கும் வரை வீர சவர்க்கார் தான் முதல் சுதந்திரப்போர் வீரன், நாதுராம் கோட்சே தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித்தந்தவன் என்று வரலாற்றை திரித்து எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி அதை உண்மை என்று உலகம் ஏற்றுக்கொள்ளச்செய்வதில் அந்த பொய்யர்களுக்கு நிகர் அவர்களே..

 10. சுதந்திரப்போராட்டத்தில் இஸ்லாமிய பக்கீர்களின் பங்கு குறித்து சுட்டி…
  http://generationneeds.blogspot.in/2012/01/blog-post.html

  இராஜராஜ சோழனது வாழ்வில் முக்கியபங்கு வகித்த இஸ்லாமிய
  பெரியவர் நத்தர்வலியார் மற்றும் கரிகாலச் சோழனை படுகொலை செய்தவர்கள் யார் என்று சொல்லும் வித்தியாசமான அதிர்ச்சியூட்டும் பதிவு…
  http://generationneeds.blogspot.in/2012/02/blog-post_09.html

  • ராஜ ராஜ ராவுத்தர்.. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்குங்காணும், விடாதீர், பார்ப்பானா, பாயான்னு பாத்துடலாம்..!!!

   • பார்ப்பன பாசிசத்தைப்பற்றியும்,அவர்களின் மனுதர்ம முறைப்படி ஆட்சி செய்யாததால் ஆதித்த கரிகாலன் பார்ப்பன அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டு(கல்வெட்டு ஆதாரத்தையும் கட்டுரையாளர் சொல்கிறார்) அவருடைய தந்தை சுந்தர சோழன் சிறைப்படுத்தப்பட்டு கைப்பாவையான உத்தமசோழன் அரசனாக்கப்பட்டதையும் கட்டுரையாளர் வெளிப்படுத்துகிறார்.

    http://generationneeds.blogspot.in/2012/02/blog-post_08.html

    இதைப்பற்றி வரலாற்று ஆய்வாளர் சோழர்கள் நூல் எழுதிய கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி யோ,பொன்னியின் செல்வன் எழுதிய கல்கியோ ஏன் வெளிப்படுத்தவில்லை ? வேண்டும் என்றே மறைத்து விட்டார்களா என்பதும் அவருடைய கேள்வி.

    கீழே உள்ளவை கட்டுரையாளருடைய குற்றச்சாட்டுகள்!

    ராஜராஜனின் இளமைகாலம் பற்றி தெரியாமல் போனது ஏன்? அதைப் பற்றி யாருமே சரியாக சொல்லுவதில்லை? ஆய்வு செய்வதில்லை? அவனது சரித்திரம் கூறும் நூல்கள் என்னவானது? அவனது ஆட்சி காலத்தில் ஆக்கப்பட்ட பிற சமய நூல்கள் பலவும் இன்றுவரை கிட்டாத நிலைக்கு என்ன காரணம்?

    தமிழர்களின் வரலாற்றை பல வரலாற்று ஆய்வாளர்களின் மேலோட்டமான ஆய்வும், பட்டும் படாமலும், அவர்கள் விட்டும், தொட்டும் செல்லும் இடங்களும், தமிழர் வரலாற்றில் நடந்த… கசப்பான உண்மைகளை, நமக்கு சொல்லாமல் மறைக்கும்..இடங்களாகும்! அவர்கள் வெளிச்சமிட விரும்பாத இடங்களில் தான் நமது உண்மையான வரலாறு உள்ளது!

    நம்மில் பலரும் இதனை அறியமுடியாமல் உள்ளதற்கு காரணம், வரலாறு தொடர்புடைய பலவற்றையும் “அவாள்களே” கோயில், கல்வெட்டு துறை, தொல்லியல் துறை,அருங்காட்சி அகங்கள்,ஆவண காப்பகங்கள் என்று எங்கும் வியாபித்து பரவி இருந்ததால் தான்!
    அவர்களது, கடந்த காலத்தை, மோசடிகளை நாம் அறிந்து கொள்ளக் கூடாது என்பதால் தான்!

    இது குறித்த விளக்கங்கள் அவருடய தளத்தில் தொடர் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது!உங்களுடைய மாற்றுக்கருத்தை அவரிடம் தெரிவியுங்கள்.

    • // பார்ப்பன பாசிசத்தைப்பற்றியும்,அவர்களின் மனுதர்ம முறைப்படி ஆட்சி செய்யாததால் ஆதித்த கரிகாலன் பார்ப்பன அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டு(கல்வெட்டு ஆதாரத்தையும் கட்டுரையாளர் சொல்கிறார்) அவருடைய தந்தை சுந்தர சோழன் சிறைப்படுத்தப்பட்டு கைப்பாவையான உத்தமசோழன் அரசனாக்கப்பட்டதையும் கட்டுரையாளர் வெளிப்படுத்துகிறார். //

     கட்டுரையாளர் 10 ஆண்டுகாலம் ’ஆராய்சி’ செய்தும் தெரிந்து கொள்ளாத விடயங்கள் :

     இளவரசர் ஆதித்த கரிகாலர் கொலை செய்யப்பட்டபோது சோழனாட்டை ஆண்டது அவர் தந்தையார் சுந்தர சோழர்.

     மகனின் கொலைக்குப் பின் ஆட்சியை தம்பி மகனான உத்தம சோழரிடம் ஆட்சியை அளித்துவிட்டு தஞ்சையை விட்டு காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலர் கட்டிய மாளிகையில் தங்கி முழு ஓய்வு எடுத்தார் இறுதிக் காலம் வரை. சுந்தரசோழர் சிறைப் படுத்தப் பட்டார், உத்தமசோழர் கைப்பாவை என்பதெல்லாம் வரலாற்று நாவல் எழுதும் எழுத்தாளர்களுக்கு வரவேண்டிய கற்பனை. வரலாற்று ஆசிரியர்களால் அப்படி ஆதாரமில்லாமல் உளறமுடியாது, கூடாது. கே.கே.பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரியார் இன்னும் பல வரலாற்று ஆசிரியர்கள் யாரும் அப்படிச் செய்யவில்லை. அவர்களது ஊகங்கள் ஆதாரங்களின் அடிப்படையிலும், தெளிவாக ‘அதனால் அப்படி இருக்கலாம்’ என்றுதான் இருக்கமுடியுமே தவிர தான் நம்புவதையெல்லாம் வரலாறாக்கமுடியாது.

     // இதைப்பற்றி வரலாற்று ஆய்வாளர் சோழர்கள் நூல் எழுதிய கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி யோ,பொன்னியின் செல்வன் எழுதிய கல்கியோ ஏன் வெளிப்படுத்தவில்லை ? வேண்டும் என்றே மறைத்து விட்டார்களா என்பதும் அவருடைய கேள்வி. //

     நீலகண்ட சாஸ்திரியார் உடையார்குடிக் கல்வெட்டுகளைக் குறிப்பிட்டு பார்ப்பனர்கள்தான் ஆதித்த கரிகாலரின் கொலையாளிகள் என்று கூறியிருக்கிறார். எதற்காகக் கொன்றார்கள் என்பது தெளிவாக தெரியாத காரணத்தால் பிற்காலத்தில் வரும் ஆராய்சியாளர்களின் ஆய்வுக்கு விட்டுவிட்டார். (நீங்கள் விரும்பினால் அதை நாம் இங்கே விரிவாக விவாதிக்கலாம்). கல்கி வரலாற்றாசிரியர் அல்ல எழுத்தாளர். கட்டுரையாளர் போலவே அவரும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு நாவல்தான் எழுதினார்.

     // கீழே உள்ளவை கட்டுரையாளருடைய குற்றச்சாட்டுகள்!

     ராஜராஜனின் இளமைகாலம் பற்றி தெரியாமல் போனது ஏன்? அதைப் பற்றி யாருமே சரியாக சொல்லுவதில்லை? ஆய்வு செய்வதில்லை? //

     ராச ராசர் மட்டுமல்ல எல்லா மன்னர்களின் இளமைக் காலத்தைப் பற்றி குறிப்புகள், ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே வரலாறு ஆக எழுதமுடியும். ராச ராசர் தமக்கையாரின் அரவணைப்பில் வளர்ந்ததாகவும், பதின் பருவத்தில் ஈழ யுத்தங்களில் பங்கெடுத்த குறிப்புகளில் இருந்து அனுமானிக்கலாம்.

     // அவனது சரித்திரம் கூறும் நூல்கள் என்னவானது? அவனது ஆட்சி காலத்தில் ஆக்கப்பட்ட பிற சமய நூல்கள் பலவும் இன்றுவரை கிட்டாத நிலைக்கு என்ன காரணம்? //

     இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத போது அது எங்கே, இது எங்கே என்று ஏதோ வைத்துவிட்டு தேடுவதைப் போல் கேள்வி கேட்பது எழுத்தாளர்கள் வழக்கம். ஆய்வாளர்களுக்கு அழகல்ல.

     // தமிழர்களின் வரலாற்றை பல வரலாற்று ஆய்வாளர்களின் மேலோட்டமான ஆய்வும், பட்டும் படாமலும், அவர்கள் விட்டும், தொட்டும் செல்லும் இடங்களும், தமிழர் வரலாற்றில் நடந்த… கசப்பான உண்மைகளை, நமக்கு சொல்லாமல் மறைக்கும்..இடங்களாகும்! அவர்கள் வெளிச்சமிட விரும்பாத இடங்களில் தான் நமது உண்மையான வரலாறு உள்ளது! //

     சரிதான். அதைக் கண்டுபிடிக்க முயலவேண்டும். காலியிடங்களை கற்பனையால் நிரப்பி ‘நடந்தது என்ன?’ என்று கதை, வசனம் எழுதக் கூடாது.

     // நம்மில் பலரும் இதனை அறியமுடியாமல் உள்ளதற்கு காரணம், வரலாறு தொடர்புடைய பலவற்றையும் “அவாள்களே” கோயில், கல்வெட்டு துறை, தொல்லியல் துறை,அருங்காட்சி அகங்கள்,ஆவண காப்பகங்கள் என்று எங்கும் வியாபித்து பரவி இருந்ததால் தான்!
     அவர்களது, கடந்த காலத்தை, மோசடிகளை நாம் அறிந்து கொள்ளக் கூடாது என்பதால் தான்! //

     இதை 50 வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தால் நம்பலாம். ஆட்சியதிகாரம் அவாள்களிடமிருந்து இவாள்களிடம் வந்து காலம் பல கடந்த பின்னும் சொல்லிக் கொண்டிருந்தால், யாரை ஏமாற்ற ??

     // இது குறித்த விளக்கங்கள் அவருடய தளத்தில் தொடர் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது!உங்களுடைய மாற்றுக்கருத்தை அவரிடம் தெரிவியுங்கள். //

     ஸ்பீக்கரை மட்டும் இங்கே கட்டிவிட்டு மைக்கில் பேச வேண்டுமானால் அங்கே போ என்கிறீர்கள் !! அது போன்ற திகில், மர்ம, கிசு கிசு தளங்களுக்குப் போய் பதிவிடுவது என் கொள்கையல்ல.

     • திருத்தம் :

      மகனின் கொலைக்குப் பின் சுந்தர சோழர், தன் பெரியதந்தையின் மகனான உத்தம சோழரிடம் ஆட்சியை அளித்துவிட்டு தஞ்சையை விட்டு காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலர் கட்டிய மாளிகையில் தங்கி முழு ஓய்வு எடுத்தார் இறுதிக் காலம் வரை.

     • ஸ்பீக்கரை நான் கட்டியதாகவே வைத்துக்கொள்வோம் முதலில் மைக்கெடுத்து ராஜ ராஜ ராவுத்தரா என்று பேசியது நீங்க தானே? இங்கு பேசியதை/கேட்டதை அங்கு கேளுங்கள்? அப்போது தெரியும் அது நீங்க சொல்வது போல் திகில், மர்ம, கிசு கிசு தளமா இல்லையா என்று!

      • சுட்டியும், விளம்பரமும் இங்கேயென்பதால், பதிலும் இங்கேதான் இருக்கமுடியும்..

       திருச்சி ஹலீமாவை தஞ்சை இளவரசி குந்தவை நாச்சியார்தான் கூறும் அபத்தம் சரித்திர ஆதாரங்களால் பொடிப் பொடியாக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா?? இல்லை, கிளுகிளுப்புக்காக சுட்டியைப் போட்டீரா??!!

       • பார்பனப்பாசிசத்தை மறுத்த மக்களின் ஆட்சியான உழைக்கும் மக்களுடைய மற்றும் தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று சொல்லப்படும் களப்பிறர் ஆட்சிகாலத்தை (வேள்விக்குடி,தளவாய்புர செப்பேடுகள்)கற்காலமென்று சொல்லும்வரலாற்றுஆய்வாளர்கள்நீலகண்டசாஸ்திரி,ராகவய்யங்கார்,கிருஷ்ணசாமி அய்யங்கார்,ராமசாமி அய்யங்கார்,சதாசிவ பண்டாரகத்தார் இவர்களுடைய நேர்மையில் நம்பிக்கை இல்லை.

        யாரயும்,எதையும் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமோ,தேவையோ எனக்கில்லை!ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் ஆட்சியில் முஸ்லிம்கள்,சமயப்புரட்சி நடந்தது என்பது ஆச்சர்யமாக இருந்ததால் பொது தளமான இங்கு சுட்டியை கொடுத்தேன்.நீர் பார்ப்பானா,பாயானு கேட்டதற்கே அந்த சுட்டியில் என்ன இருக்கிரதென்று பின்னூட்ட எண் 13.1.1 ல்விளக்கினேன்.

        கோபியரிடம் கோபாலகிருஷ்னண் செய்த லீலைகள் குறித்த சுட்டியை கொடுக்கவில்லை முடியாட்சியோ,குடிஆட்சியோ எதிலும் புகுந்து பாசிசஆட்சிசெய்யும் பார்ப்பனீயம் குறித்து சொல்லும் தளத்திற்கான சுட்டியை கொடுத்ததில் என்ன கிளுகிளுப்பு?

        உமக்கு கிசு கிசு தளமாக பட்டால் அங்கு போய் படிக்க தேவையில்லை,மீறி படித்துவிட்டு இங்கு கேள்வி கேட்டு பயன் இல்லை.

        • \\களப்பிறர் ஆட்சிகாலத்தை (வேள்விக்குடி,தளவாய்புர செப்பேடுகள்)கற்காலமென்று சொல்லும்\\
         மன்னிக்கவும் கற்காலமென்று சொல்லும் என்பதற்கு பதில் இருண்டகாலம் என்று சொல்லும் என்று இருக்க வேண்டும்.

        • // பார்பனப்பாசிசத்தை மறுத்த மக்களின் ஆட்சியான உழைக்கும் மக்களுடைய மற்றும் தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று சொல்லப்படும் களப்பிறர் ஆட்சிகாலத்தை (வேள்விக்குடி,தளவாய்புர செப்பேடுகள்)கற்காலமென்று சொல்லும்வரலாற்றுஆய்வாளர்கள்நீலகண்டசாஸ்திரி,ராகவய்யங்கார்,கிருஷ்ணசாமி அய்யங்கார்,ராமசாமி அய்யங்கார்,சதாசிவ பண்டாரகத்தார் இவர்களுடைய நேர்மையில் நம்பிக்கை இல்லை. //

         ‘பார்ப்பன பாசிசத்தை’ மறுத்த ஆட்சி என்றாலே உழைக்கும் மக்களின் ஆட்சியா?! மொகலாயர் ஆட்சியும், பாமினி சுல்தான்கள் ஆட்சியும், பிரிட்டிஷ் ஆட்சியும் உழைக்கும் மக்களின் ஆட்சிதான் போலிருக்கிறது..!

         களப்பிரர் ஆட்சியை ஒட்டுமொத்தமாக சமண ஆட்சி என்றோ, பவுத்த ஆட்சி என்றோ கூறமுடியாது. பல களப்பாள மன்னர்கள் சைவர்களாகவும், வைணவர்களாகவும் இருந்ததுண்டு. களப்பாள மன்னர்களுக்கு வரும் பொதுப் பெயரான ‘அச்சுத’ என்னும் பெயரின் மூலம் வைணவத்தைச் சார்ந்தது. களப்பாள மன்னரான கூற்றுவ நாயனார் என்ற சிவபக்தர், சோழ நாட்டை வென்று, சோழ மணிமுடியை சூட்டுமாறு தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்க, அவர்கள் சோழகுல முதல்வர்களுக்கன்றி வேறு யாருக்கும் சோழ மணிமுடியை சூட்டமாட்டோம் என்று கூறி கூற்றுவ மன்னருக்கு அஞ்சி கேரளத்திற்கு ஓடியதாக ஆதாரங்கள் உண்டு. சோழ, பாண்டிய மன்னர்களின் விசுவாசிகளாய் இருந்த சோழ, பாண்டிய நாட்டுப் பார்ப்பனர்கள் களப்பாளர்களின் சினத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளானர்களே தவிர களப்பாளர்களின் பார்பனிய எதிர்ப்பால் அல்ல. ஆசாரக் கோவை என்ற சமண ’பார்ப்பனிய’ நூலின் காலமும் களப்பிரர் காலமே. களப்பிர ஆட்சிக் காலம் கலிகாலம் என செப்பேடுகளில் குறிப்பிட்டதன் அடிப்படையில்தான் நீங்கள் மேலே குறிப்பிட்ட வரலாற்றாசிரியர்கள் இருண்டகாலம் என அழைத்தார்கள். நேர்மையான ‘வரலாற்று ஆசிரியர்கள்’ யார் என்பது உங்கள் விருப்பு, வெறுப்புகளால் தீர்மானிக்கப்படலாமா?!

        • // ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் ஆட்சியில் முஸ்லிம்கள்,சமயப்புரட்சி நடந்தது என்பது ஆச்சர்யமாக இருந்ததால் பொது தளமான இங்கு சுட்டியை கொடுத்தேன். //

         ஹசரத் நத்தர் அவுலியா ஒரு சூஃபி ஞானி. சுஃபி மார்க்கத்தை, இஸ்லாமியப் புனிதம் பார்க்கும் வஹாபி/ சலாஃபி பிரிவினர் சமயப்புரட்சியாகப் பார்த்து ஒடுக்கலாம். இந்துக்களுக்கும், எளிய வகுப்பு முஸ்லீம்களுக்கும், சூஃபி மார்க்கம் சமயங்களிடையான சமரச மார்க்கமாகவே தோன்றி ஆதரிக்கப்பட்டது.

        • // கோபியரிடம் கோபாலகிருஷ்னண் செய்த லீலைகள் குறித்த சுட்டியை கொடுக்கவில்லை முடியாட்சியோ,குடிஆட்சியோ எதிலும் புகுந்து பாசிசஆட்சிசெய்யும் பார்ப்பனீயம் குறித்து சொல்லும் தளத்திற்கான சுட்டியை கொடுத்ததில் என்ன கிளுகிளுப்பு? //

         மாமன்னர் ராச ராசரின் ஆட்சி பார்ப்பனீய ஆட்சி என்கிறாரா? அப்படியென்றால், குந்தவை நாச்சியாரையும், ராச ராசரையும் வளர்த்தது நத்தர் வாலியார் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டு வளர்ப்பு சரியில்லை என்று குறிப்பிடுகிறாரா? குழப்புவதைக் கூட தெளிவாகக் குழுப்பக் கூடாதா? அவருடைய குழப்பமே வரலாற்றில் தெளிவில்லாததால் வந்தது என்பதை உணராமல் நீங்களும் கிளுகிளுப்புக்காக இல்லையென்றாலும், பரபரப்புக்காக அப்பாவிகளான சில இஸ்லாமியச் சகோதரர்களை திசை திருப்பி வஞ்சிக்கலாமா?!!

          • நீர் முடிந்துவிடும் சிண்டை நான் அவிழ்க்கிறேனய்யா..!!

 11. எத்தனை ஆச்சரியமான விசயங்கள். உயிரோடு உறவாடும் பாடல் வரிகள், கோவன் குழுவினரின் கம்பீர குரல். எதிரான்வர்கள் சந்தர்ப்பவாதிகளை விட இதை எல்லாம் தெரிந்து கொள்ளாத நியாய சிந்தனை உள்ளவர்களுக்குத்தான் சரியான சவுக்கடி. அய்யோ அவமானம். மானுடத்தை உயர்த்துவது பொது உடமையே.

 12. மரியாதைக்குரிய அய்யா …
  சுமார் பத்து வருடங்களுக்கு முன் காவி இருளை சென்னைக்கே சென்று வாங்கி வந்தேன் …
  இன்றும் அந்த அனைத்து பாடலின் வரிகளும் நெஞ்சில் பதிந்து உள்ளது ..
  இன்று முக நூலில் இன்னொரு நண்பர் பகிந்திருந்தார் ..தங்களுடைய இந்த பணிக்கு எனது சமூகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா …
  தங்களின் அடுத்த ஒலிப்பேழையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் அய்யா

 13. பாப்புலர் பிரண்டிற்கு எனது கண்டனங்கள். இந்தப் பாடலை பாப்புலர் பிரண்டானது தனது இயக்க விளம்பரத்திற்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. யூடியூபில் இந்தப் பாடலை பாப்புலர் பிரண்ட் விளம்பரத்துடன் காணலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க