privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவாடகைதாரர் விவரம் சேகரிக்கும் போலீசுக்கு முதல் கட்ட ஆப்பு - HRPC வழக்கில் தீர்ப்பு !!

வாடகைதாரர் விவரம் சேகரிக்கும் போலீசுக்கு முதல் கட்ட ஆப்பு – HRPC வழக்கில் தீர்ப்பு !!

-

வாடகைதாரர்களின் தகவல்களை காவல் துறையினருக்கு  தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

சென்னை மாநகரத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளையும் அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய “என்கவுன்ட்டர்“ நாடகத்தில் வெளிமாநிலத்தவர்களை கொலைசெய்ததையும் முகாந்திரமாக வைத்து சென்னைக் காவல் துறை ஆணையாளர்  கடந்த 03.03.2012 அன்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் சென்னை மாநகரத்தில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருப்பதாகவும் அவர்களால் சமூக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தடுக்கும் தேவையைக் கருதி அனைத்து வீட்டு உரிமையாளர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் காவல் துறை கொடுக்கும் விண்ணப்பத்தில் வாடகை தாரர்கள் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அளிக்காத பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ்  (இப்பிரிவின் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்க முடியும்) குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டிருந்தார்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் மக்களின் தகவல்களை தரவாக்கும் பணியினை மேற்கொண்டு அதன் மூலமாக பற்றிப் பரவும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நீண்டகால அரசின் தேவையை நிவர்த்தி செய்யவே இவ்வுத்தரவு உண்மையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை ஆணையாளரின் மேற்கூறிய உத்திரவினை பல்வேறு இடங்களில் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து காவல் துறையினர் விவரங்களைச் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த தென் சென்னை உதவி ஆணையாளர், தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட சுமார் 22,000 வீட்டு உரிமையாளர்கள் வாடகைதரார்களின் தகவல்களை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். காவல் துறை தயாரித்துள்ள விண்ணப்பத்தில் வாடகைதாரரின் புகைப்படம், அவரது நிரந்தர முகவரி, அவர் ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த முகவரி, செல் பேசி எண், வேலை செய்யும் இடம் மற்றும் அதன் முகவரி மற்றும் தன்னுடன் தங்கியிருப்பவர்களின் விவரம் மற்றும் அவர்களுடனான உறவு ஆகியவற்றை நிரப்பி அனைவருடைய புகைப்பட அடையாள அட்டையின் நகல்களை இணைத்து வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் கையொப்பம் இடவேண்டும்.

காவல் துறை மேற்கூறிய உத்திரவினை சில மனித  உரிமை ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும் எதிர்த்து குரல் எழுப்பியிருந்தாலும், இதற்கெதிரான வலுவான எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்படாத காரணத்தால் காவல் துறையினர் இதனை தீவிரமான அமல்படுத்த முனைந்தனர்.  மேலும் இதே போன்று கல்வி நிறுவனங்கள் மூலமாக மாணவர்களின் தகவல்களைத் தரவு செய்யவும், வெளிமாநில தொழிலாளர்களின் தகவல்களைத் தரவு செய்யவும் காவல் துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கூறிய காவல் துறை ஆணையாளரின் உத்திரவினை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக் கிளை, எமது செயலாளர் வழக்குரைஞர் மில்ட்டன் பெயரில் பொது நல வழக்கு ஒன்றினைச்  சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. நேற்று அவ்வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி ஆயத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. அதே போன்று அண்ணா நகரைச் சேர்ந்த மருத்துவர் சிறிதர் என்பரும் பொது நல வழக்கு தொடுத்திருந்தார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் புருஷோத்தமன் அவர்கள் காவல் துறை ஆணையாளரின் உத்திரவானது பொது மக்களின் தகவல்களை சட்ட அங்கீகாரம் இல்லாமல் காவல் துறை பெற்று பராமரிக்க இயலாது என்கிற நிலையில், பொது அமைதிக்காக உடனடி ஆபத்துக்களைத் தடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை, காவல் துறை ஆணையாளர் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார் எனவும், இவ்வாரான நடவடிக்கை வாடகைதாரர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பறிப்பதாகவும் அவர்களின் தனிமைச் சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்குவதாகவும், உடைமையாளர் மற்றும் உடைமையற்றோரைப் பாகுபடுத்தும் நிலையை உருவாக்குவதாகவும், வாடகைதாரர்களையும், வெளிமாநிலத்தவரையம் கிரிமினல்களாக சித்தரிப்பதாகவும், வீட்டு உரிமையாளர்களை வாடகைதார்களைப் பற்றிய இன்ஃபார்மர்களாக மாற்றும் கயமைத்தனமான நடவடிக்கை இது என்றும் வாதிட்டார்.

மேலும் மே 1-ம் தேதிக்குள் வாடகைதாரர்களின் தகவல்களைத் தராமல் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது ஏற்க இயலாத ஒன்று எனவும் வலியுறுத்தினார். மருத்துவர் சிறிதருக்கு ஆஜரான வழக்குரைஞர் சத்தியசந்திரன் அவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையில் இவ்வுத்திரவு மூலம் பகைமைபாராட்டும் உணர்வை தூண்டும் அரசே தூண்டியுள்ளது என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் மும்பை, பெங்களுர் போன்ற மாநகரங்களில் இதே போன்று அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் சென்னை மாநகரத்தில் அமல்படுத்தியுள்ளதாகவும்  கூறினார்.

இறுதியில் தலைமை நீதிபதி ஆயம் தகவல்களைத் தராமல் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு மட்டும் இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. வழக்கானது அரசின் பதில் மனுவிற்காக இரு வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அரசு வழக்குரைஞர் கூறியது போலவே புது தில்லி, மும்பை மற்றும் பெங்களுர் போன்ற பெருநகரங்களில் அம்மாநகர காவல் துறையினர் தீவிரவாத அச்சுறுத்தலைக் காரணம் காட்டி இதே மாதிரியான உத்திரவைகளை பிறப்பித்து மக்களின் தகவல்களைத் திரட்ட முனைந்து வருகின்றனர். அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்;; இங்கோ கொள்ளையர் அச்சுறுத்தல்;; இவ்வாறான அச்சுறுத்தல் பீதிகளை மிகைப்படுத்தி, அரசு பயங்கரவாதமானது அனைத்து மக்கள் தகவல்களையும் தரவுபடுத்தும் பணியினை எளிமையாகச் செய்துவிடலாம் என்று முனைந்து வருகின்றது. இதற்காக அரசியலமைப்பு சட்ட உரிமைகள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றையெல்லாம் பறித்து, ஒட்டுமொத்த சமூகத்தையும் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர எத்தனிக்கிறது.

பொதுவாகவே, பொது நல வழக்கு என்பது ஒரு வகையில் அரசின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை சமூகத்தில் விவாதத்திற்கு கொண்டு வரும் ஓர் நடவடிக்கையாகவே இருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஜனநாயகமற்ற அரசின் பாசிச செயல்பாடுகளை மக்கள் போராட்டங்களின் மூலம்தான் முறியடிக்க இயலும். அதற்கு இவ்வுத்திரவு மக்களிடம் விவாதத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று கருதுகிறோம்.

மக்கள் போராட்டத்திற்காக எமது பிரச்சாரத்தையும் துவக்கவுள்ளோம்.

எங்களோடு அணி சேருங்கள்!

மக்கள் உரிமைகளைப் பறிக்கும் அரசின் கொடுங்கோன்மையை தடுத்திடுவோம்!

__________________________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

சென்னைக் கிளை.
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்