Wednesday, December 4, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை - ஒழிப்பதுமில்லை!

என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை!

-

இயக்குநர் பெர்னாண்டோ மெய்ரலஸ் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், ‘சிட்டி ஆஃப் காட்‘(CITY OF GOD). பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரா நகரத்தில் அரசால் உருவாக்கப்பட்ட எந்த அடிப்படை வசதிகளுமற்ற சேரிதான் சிட்டி ஆஃப் காட். அங்கே 1960 முதல் 1980கள் வரை இளங்குற்றவாளிகள் தோன்றுவதையும், பின்பு அவர்கள் நகரத்தை கட்டுப்படுத்தக்கூடிய தாதாக்களாக மாறுவதையும், இறுதியில் ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்டு சாவதையும் படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

தாதாக்களை மையமாகக் கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும் அவை மையமான நாயகன்-வில்லனை மட்டும் சுற்றிக் கொண்டு ஃபார்முலா சினிமா மரபை விட்டு விலகாமல் மசாலாப் படங்களாக நீர்த்துப் போகும். ஆனால் கடவுளின் நகரத்தில் முழுக்க முழுக்க அந்த சேரியின் மாந்தர்கள் விதவிதமான பாத்திரங்களாக வருகிறார்கள். கடவுளின் நகரத்தில் ஏழைச் சிறுவர்கள் எவ்வளவு இயல்பாக வன்முறையின் பக்கம் நகருகிறார்கள் என்பதை உயிரோட்டத்துடன் சித்தரித்திருப்பார் இயக்குநர்.

கடவுளின் நகரத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை பலர் கொல்லப்படுகிறார்கள். மரணம் அங்கே நிரந்தரமாக குடியேறி ஓய்வின்றி வேலை செய்வது போலவும் சொல்லலாம். சமூகத்தில் ஒரு மரணம் தோற்றுவிக்கும் அதிர்ச்சி, துக்கம், துயரம், ஆற்றாமை போன்ற நாகரீக உலகின் உணர்ச்சிகள் அங்கே பெரிய அளவில் இல்லை. அந்த வகையில் கடவுளின் நகரத்தைச் சேர்ந்த சேரிச் சிறுவர்களிடம் மரணபயம் இல்லை.

இப்போது சென்னை என்கவுண்டருக்கு வருவோம். இரு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 5 இளைஞர்கள் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரு திட்டமிட்ட போலி மோதல் கொலை என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த இளைஞர்கள்தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் மற்ற மாநிலங்களிலும் இவர்கள் கொள்ளையடித்தார்கள் என்று பல வழக்குகளை வேறு சேர்த்து வருகிறார்கள். புலனாய்வு செய்ய முடியாத வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பிணங்களைப் போல உதவும் நண்பன் இல்லை.

சென்னை-என்கவுண்டர்
என்கவுண்டர் செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள்

பத்திரிகைகள் கொல்லப்பட்ட இளைஞர்களைப் பற்றி பல தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் உண்மை எது பொய்யெது என்று யாருக்கும் தெரியாது. எனினும் ஒரு வாதத்திற்க்காக இவையனைத்தும் உண்மையென கொள்வோம். கொல்லப்பட்ட இளைஞர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து வட மாநில தொழிலாளிகளும் போலிசிடம் அடையாளங்களை பதிய வேண்டும் என்பதில் ஆரம்பித்து, தற்போது சென்னையில் வாடகைக்கு குடிவைத்திருப்போரின் புகைப்படங்களையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் போலீசுக்குத் தரவேண்டும் என்றும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது மாநகர காவல்துறை. நடக்கின்ற எந்தவொரு குற்றத்தையும் தனது அதிகாரத்தையும் மக்கள் மீதான கண்காணிப்பையும் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறது அரசு. அரசு பாசிச மயமாகி வருவதைறியாத மக்களோ, இந்த போலி மோதல் கொலையை வீரசாகசம் போலக் கொண்டாடுகிறார்கள்.

பல நூறு கோடி வங்கிப்பணத்தை உட்கார்ந்த இடத்திலிருந்தே கொள்ளையடிக்கும் கிங் பிஷர் முதலாளி விஜய் மல்லையாவை என்கவுன்டரில் கொல்லவேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை. ஆனால் வங்கியில் சில இலட்சங்களை கொள்ளையடித்த அந்த இளைஞர்கள் மக்கள் பார்வையில் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று பதிந்திருப்பதற்கு என்ன காரணம்? செயின் பறிப்பு, பீரோ புல்லிங், வழிப்பறி, வீடேறித் திருடுவது போன்ற பெட்டிகேஸ் திருடர்கள்தான் மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக வழிமறிக்கிறார்கள்.

பெருகி வரும் நகரங்களும், விரிந்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வும், குறுக்கு வழியில் பணத்தை அள்ளத் தூண்டும் மறுகாலனியாக்க பண்பாட்டு சூழலும்  இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றது. எனவே, நாட்டை கொள்ளையிடும் திருடர்களை விட வீட்டைக் கொள்ளையிடும் குற்றவாளிகள் குறித்துத்தான் மக்கள் அதிகம் கவலை கொள்கிறார்கள்.

தான் ஆட்சிக்கு வந்ததும் திருடர்களெல்லாம் பயந்து கொண்டு ஆந்திராவுக்கு ஓடி விட்டதாக கொக்கரித்த ஜெயாவின் பெருமைகளை இத்தகைய குற்றச் செயல்கள் பெருங்கேலி செய்கின்றன. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் திருடர்களெல்லாம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியல்லவா பாய்கிறார்கள்! சரிந்து விட்ட இமேஜை தூக்கி நிறுத்துவதும், குற்றத் தடுப்பு என்ற பெயரில் போலீசு ஆட்சிக்கு அங்கீகாரம் பெறுவதும், குற்றவாளிகளுக்கும் மரண பயத்தை ஏற்படுத்தலாம் என்ற அசட்டு நம்பிக்கையும் இந்தப் போலி மோதலுக்குக் காரணமாகத் தெரிகிறது.

அதன்படியே நடுத்தர வர்க்கம் இந்த என்கவுண்டரை போற்றிப் பாடுகிறது. வழக்கு, ஆனால் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் பீகார் கிரிமினல்களுக்கு இந்தப் போலி மோதல் மரணபயத்தை ஏற்படுத்துமென்று யாரேனும் உறுதி அளிக்க முடியுமா?

சென்னை-என்கவுண்டர்இந்தியாவின் வறிய மாநிலங்களில் பீகாருக்கு முதலிடம். எட்டரை கோடி மக்களில் 58%பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். இதன் பொருள் பீகாரில் இளைமைத் துடிப்பு அதிகம் என்பதல்ல, சராசரி ஆயுள் குறைவு என்பதுதான். இந்தியாவின் ஆண்டு தனிநபர் வருமான சராசரி ரூ.60,000 என்றால் பீகாரில் அது 18,000. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் இந்திய சராசரி 22.15% என்றால் பீகாரில் 30.6%. இந்தியாவின் நகரமயமாக்கம் 27.8%, பீகாரில் வெறும் 10.5% மட்டுமே. நகர்ப்புறத்து வறுமை இந்தியாவில் 27.78% என்றால் அது பீகாரில் 32.91%ஆக இருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களைத் தாண்டி நிலவுடைமை கொடுங்கோன்மை அதிகமுள்ள மாநிலமும் பீகார்தான். சாதி ஆதிக்கம், தலித் மக்கள் மீதான வன்கொடுமை, விவசாயத் தொழிலாளர்கள் பண்ணையடிமையாக வாழ்வது, பெண்கள் முன்னேற்றமின்மை, ரன்பீர் சேனா போன்ற ஆதிக்க சாதி ரவுடிப்படைகள், துப்பாக்கிகள் சரளமாகப் புழங்கும் சூழல் அனைத்தும் பீகாரில் நிலவுகின்றது. அங்கே ஒரு ஓட்டுக்கட்சியின் உள்ளூர் தளபதி கூட துப்பாக்கிகள் தூக்கிய அடியாட்களுடன்தான் வலம் வருகிறார்.

இப்படி வன்முறையும், ஏழ்மையும் நிரம்பி வழியும் இந்த மாநிலத்திலிருந்துதான் ஏழைகள் இந்தியாவெங்கும் பிழைப்பதற்கு செல்கின்றனர். அவ்வண்ணம் தமிழகத்திற்கும் வந்த வண்ணம் இருக்கின்றனர். தமிழகத்தின் ஆலைகளிலும் கட்டிடத்தொழிலிலும் கடுமுழைப்பு வேலைகளை பீகார் தொழிலாளிகள்தான் செய்கின்றனர். உழைப்பதற்கு அவர்கள் அஞ்சுவதில்லை. அவர்கள் அஞ்சுவது வாழ்வதற்கு குறைந்தபட்ச வாய்ப்புகளைக் கூட வழங்காத பீகார் மாநிலத்தின் யதார்த்தத்திடம்தான்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு பீகாரில் அதிகம் என்பதாலும், பண்ணைக் கொடுங்கோன்மை – வன்முறைக் கலாச்சாரம் சகஜம் என்பதாலும் அங்கே திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல் முதலான குற்றச் செயல்களெல்லாம் அன்றாட வாழ்வின் அங்கமாகவே ஆகிவிட்டன. கிரிமினல் கும்பல்களிடம் சேருவதும் ஒரு வேலை வாய்ப்பாக இருக்கிறது. சென்னையில் கொல்லப்பட்ட நபர்களின் தலைவர் மட்டும் தொழில்முறை கொள்ளையனாக, ஆடம்பரமாக ஊரில் வாழ்வதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் அனைவரும் மிகவும் சாதாரணமானவர்கள். அவர்களில் கூலி வேலை பார்த்து பிழைத்தவர்களே அதிகம். மேலும் அதில் ஓரிருவர் என்ன ஏது என்று தெரியாமலேயே இந்த கொள்ளையர்களுக்கு இடம் கொடுத்து ஆதரவளித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

தமிழக கிரிமினல்களிடம் துப்பாக்கி என்பது இன்னமும் அபூர்வமான பொருளாகத்தான் இருக்கிறது. பீகாரில் அது எளிதில் கிடைக்கிறது. துப்பாக்கி குற்றத்தையும் உருவாக்குவதில்லை, குற்றவாளிகளையும் உருவாக்குவதில்லை. குற்றவாளிகளையும் புலம்பெயர்ந்து வரும் தொழிலாளிகளையும் தோற்றுவிக்கும் சமூகப் பின்னணிதான் நம் கவனத்துக்கு உரியது. அதனை தமிழக காவல்துறையால் என்கவுன்டர் செய்து ஒழிக்கமுடியாது.

ஆதிக்க கும்பல்களின் வன்முறைகளால் கொலைகள் சகஜமாகிப்போன அந்த மாநிலத்தின் மக்களுக்கு மரணம் குறித்தும் பெரிய அதிர்ச்சி இருக்கப் போவதில்லை. பீகாரிலிருந்து வரும் மக்கள் குறைந்த கூலிக்கும், கடுமுழைப்புக்கும் அஞ்சுபவர்களல்ல. அங்கிருந்து வரும் குற்றவாளிகளுக்கும் ஒப்பீட்டளவில் மரணபயம் குறைவாகவே இருக்கும். மரணத்தை அண்மையில் கண்டு பழகிய வாழ்க்கையை இத்தகைய என்கவுண்டர்களா மிரட்டிப் பணியவைக்கும்?

__________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012
_____________________________________

 வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை புகைப்படத்துடன் தெரிவிக்க வேண்டும் என்ற காவல் துறையின் அடக்குமுறை ஆணை தமிழகம் ஒரு திறந்த வெளிசிறைச்சாலை என்பதை உறுதி செய்திருக்கிறது.அதாவது வாடகைக்கு குடியிருப்பவர்கள் யார்?சொந்த வேடு இல்லாதவர்கள் தான் தங்கள் வருமானதிற்கு ஏற்ப வாடகை வீட்டில் இருக்கிறார்கள்.இவர்களை பற்றித்தான் காவல்துறை தெளிவான புகைப்படத்துடன் கூடிய விவரங்களை கேட்கிறது.அப்படியென்றால்???? இதை பற்றி ஒரு தெளிவான் கட்டுரையுடன் சந்திப்பொம்..

    • @Nixen.. இந்த ஆணையில் என்ன அடக்குமுறையைக் கண்டீர்கள்? சொந்த ஊரில் அடுக்குமாடி வீடு வைத்திருப்பவனும் சென்னைக்கு வேலை செய்ய வந்தால் வாடகைக்கு தான் வீடு எடுத்தாக வேண்டும். சென்னை தி.நகர், அண்ணாநகர், வேளச்சேரியில் போய் பாருங்கள். மாதம் ரூ.15000 (குறைந்தபட்சம்) கொடுத்து வாடகைக்கு இருக்கிறார்கள். இதில் தேவை இல்லாமல் ஏழை பணக்கார வர்க்க பேதம் எல்லாம் கொண்டு வராதீர்கள். இல்லாத ஒரு விஷயத்தைப் பிரச்சனையாக்காதீர்கள்.

      • \\இந்த ஆணையில் என்ன அடக்குமுறையைக் கண்டீர்கள்\\
        வாடகை வீடுகளில் குடி இருப்பவர்கள், வெளி மாவட்ட, மாநில பதிவு என் உடைய வாகனம் வைத்திருப்போர் ஆகியோரெல்லாம் சென்னை போலிசை பொறுத்தவரை சந்தேகப்படும் குற்றவாளிகள் லிஸ்டில் இருக்கிறார்கள்… சொந்த வீடு வைத்திருப்பவன் குற்றம் செய்வதில்லையா அல்லது சென்னையில் வாகனத்தை பதிவு செய்திருப்பவன் எல்லாம் யோக்கிய-சிகாமணியா… அடிப்படியே அற்ற முட்டாள்தனமான அடக்குமுறை தான் இது…

        \\சென்னை தி.நகர், அண்ணாநகர், வேளச்சேரியில் போய் பாருங்கள். மாதம் ரூ.15000 (குறைந்தபட்சம்) கொடுத்து வாடகைக்கு இருக்கிறார்கள்\\
        என்ன சொல்ல வருகிறீர்கள், அவன் தவறான வழியில் சம்பாதிப்பதால்தான் இவ்வுளவு வாடகை தருகிறான் என்கிறீர்களா.. பேராசை பிடித்த, உடலுழைப்பு இல்லாத, சுகவாசி ஹவுஸ் ஓனர்களின் கோடீஸ்வர கனவுகளின் பலிகடாக்கள் வாடகைதாரர்கள்…

        • @மனிதன். நான் யாருடைய யோக்கிதையைப் பற்றியும் கூறவில்லை. வெளியூரைச் சேர்ந்தவர்கள் எளிதில் தப்பிச் செல்லக்கூடும். சொந்த வீடு வைத்திருப்பவன் தவறு செய்து தப்பிச் சென்றாலும் அவன் வீடும், குடும்பமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்.

          ரயில்நிலையத்தில் வெடிகுண்டு சோதனை செய்யும்போது அனைத்து பயணிகளிடமும் தானே சோதனை இடுகின்றனர். அப்படியானால் அனைத்து பயணிகளும் சந்தேக லிஸ்டில் இருப்பதாக அர்த்தமாகுமா?

          எனது 15000 ரூ வாடகை கமெண்ட் நிக்ஸ்னுக்கு பதில் அளிப்பதற்கானது. அவர் வாடகைக்கு இருப்பவர்கள் ஏழைகள், போலீஸ் அவர்களைக் குறி வைக்கிறது எனும் பொருள் தரும்படி கூறி இருந்தார். வசதி படத்தவர்களும் வாடகை வீட்டில் குடி இருக்கிறார்கள் என்பதே என் வாதம். அவன் தவறான வழியில் சம்பாதிப்பதாக நான் எங்குமே கூறவில்லையே.

          குற்றங்கள் அதிகரிப்பதைக் கண்டிக்கிறோம். குற்றங்கள் நடைபெறும்போதும் குற்றவாளிகள் தப்பிச்செல்லும் போதும் போலீஸை வாய்க்கு வந்தாற் போல சாடுகிறோம். பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் நடவடிக்கை எடுத்தால் போலீஸ் அராஜகம் என்று அலறுகிறோம்…

          • \\பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் நடவடிக்கை எடுத்தால் போலீஸ் அராஜகம் என்று அலறுகிறோம்\\
            என்கவுண்டருக்கு பிறகு, பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகள் சாதாரண பொதுமக்களிடம் இந்த அளவு வரவேற்பை பெறும் என்று மனித வள ஆர்வலர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை… சமூகத்தின் மீதான திரைப்படத்துறையின் தாக்கமே காவல் துறைக்கு இந்த ஹீரோ அந்தஸ்தை பெற்று தந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது…

            காவல் துறையும், இராணுவமும் உச்ச பட்ச அதிகாரமிக்க அமைப்புகள்.. இந்த அமைப்புகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நிதியாக செல்வழிக்கப்டுகின்றன… மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதே இவர்களுடைய கடமை… இந்த அமைப்புகளை பொது மக்கள் பாராட்டுவது என்பது சிங்கத்தின் வாயில் தலை விடுதல் போல.. சிறு என்கரேஜ்மேன்ட் கூட அதிகார துஸ்பிரயோகமாக பொதுமக்கள் தலையில் விடியும்… இலங்கையும் காஷ்மீரமும் இரு வகை உதாரணங்கள்…

            பாதுகாப்பு குறைபாடுகளால் விளையும் கொள்ளை சம்பவங்களுக்கு காவல் துறையே பொறுப்பு… பாதுகாப்பில் குளறுபடி செய்து கடமையை ஒழுங்காக செய்யாமல் தவறு செய்து விட்டு, அதை மறைக்க குற்றவாளிகள் அனைவரையும் சுட்டு தள்ளியிருப்பது பாராட்டவோ அல்லது இரசிக்கவோ தக்கதல்ல…

            குறிப்பிட்ட என்கவுன்ட்டர் சம்பவம் கூட பாராட்டப்படும் சாதனையாக பார்க்கபடுவது காவல் துறையின் புத்திசாலித்தனமான ஊடக பரப்புரை தான்…
            ஒருவர் இருவரை கொன்றால்தான் அது என்கவுண்டர்… 5 பேரை கொன்றால் அது போர்.. ஒரு புல்லெட் கூட வீணாக்காமல் பூட்டிய வீட்டுக்குள் இருந்த 5 குற்றவாளிகளை சுடுவது என்பது சாத்தியமா என்பதை யோசிக்க வேண்டும்.. அப்படி சாத்தியம் என்றால் அது ஸ்காட்லான்ட் யார்ட் கூட இது வரை செய்யாத உலக சாதனை தான்…
            ஒன்று இந்த ஐந்து போரையும் ஒரே ரூமில் போட்டு காவல் துறை சுட்டிருக்க வேண்டும்… ஆனால் அது பல கேள்விகளை எழுப்பும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கும்… அந்த முட்டாள் தனத்தை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்..
            ஆகவே இந்த ஐந்து பெரும் பிஸ்டல் உபயோகித்து தற்கொலை செய்திருக்க வேண்டும்.. இல்லாவிடில் கும்பலின் தலைவன் மற்ற நான்கு போரையும் கொன்ற பின் தானும் சுட்டு கொண்டிருக்க வேண்டும்.. காவல் துறை அதை என்கவுண்டராக மாற்றி பெருமை, பதவி, பரிசு பெற செய்திருக்க வேண்டும்..

            ஆகவே ஆளும் கட்சியின் ஏவல் துறையாய் இருக்கும் காவல் துறையை பாராட்டலாமா, வேண்டாமா என்பதையும் உங்கள் முடிவுக்கே விட்டு விடுவோம்…

  2. யார் தவறு செய்தாலும் தட்டிக்கேட்பதும், நியாயத்துக்குப் போராடுவதும் வரவேற்கத்தக்கது. ஆனால் அதே நேரம் ஒருவர் தவறு செய்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவர் செய்யும் அனைத்தையும் குற்றம் என்று கூறுவது சிறிதும் நியாயமல்ல.

    நான் மும்பை, பெங்களூர், தில்லி, கேரள நகரங்களில் வசித்துள்ளேன். இங்கு வாடகைக்கு வீடு எடுக்கும்போதே வீட்டு ஓனர்கள் குடியிருப்போருடன் ‘ஒப்பந்தம்’ இடுகின்றனர். மேலும் குடியிருப்போரின் நிரந்தர முகவரி அடையாள அட்டையை ஒரு நகல் எடுத்து வைத்துக்கொள்கின்றனர். மும்பையில் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. இதைச் செய்வதால் யாருடைய சுதந்திரமும் பறிப்போகாது. மாறாக மக்களுக்குப் பாதுகாப்பே அளிக்கும்.

    முன்பெல்லாம் வயதானவர்கள் வெளியில் காற்றாட அமர்ந்து கதைப் பேசிக் கொண்டிருப்பார்கள். வேலைக்கு செல்வோரும் விடுமுறை நாட்களில் பரஸ்பரம் பேசிக் கொள்வார்கள். அக்கம்பக்கத்தில் புதிதாக யாராவது குடிவந்தாலோ, சந்தேகத்திற்கு இடமாக யாரும் நடந்துக்கொண்டாலோ அப்பகுதி மக்களுக்கு தெரியும். இன்று அப்படி ஒரு சூழல் இல்லை. பக்கத்தில் வீட்டில் இருப்பவர் யார் என்றே தெரியாத சூழ்நிலை. அதுவும் ஐ.டி யும், பி.பி.ஓ வும் உள்ள இந்த காலத்தில் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தாலும் அவர் தினப்பணி முடித்து வருவது போலத்தான் இருக்கும். அதேப் போல புது ஊரில் உள்ள வாலிபர்கள் இரவில் போலீசிடம் சந்தேகக் கேசில் சிக்கவேண்டி வந்தாலும் அவர்களின் சொந்த ஊரில் விசாரிப்பதைக் காட்டிலும் லோக்கல் ரெஃபரன்ஸ் இருந்தால் இரண்டு தரப்பிற்கும் நேரம் மிச்சம்.

    ஒரு ஊரில் சமூக விரோத பணியில் ஈடுப்பட்டுவிட்டு வேறு ஊருக்கு ஓடிச் செல்லும் குற்றவாளிகளை அடையாளம் காணவும், தன் சொந்த ஊரை விட்டு புது ஊரில் உள்ள வாலிபர்களுக்கு ‘லோக்கல் அடையாளம்’ அளிக்கவும் இது தான் தீர்வு.

  3. //பெருகி வரும் நகரங்களும், விரிந்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வும், குறுக்கு வழியில் பணத்தை அள்ளத் தூண்டும் மறுகாலனியாக்க பண்பாட்டு சூழலும் இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றது.//

    சமமான, ஏற்ற தாழ்வற்ற வாழ்நிலை வந்தால்தான் இம்மாதிரியான குற்றங்களின் எண்ணிக்கை குறையும்.

  4. போலீஸ் டிபார்ட்மென்ட வினவு ஆசிரியர்கிட்ட குடுத்தா… யெல்லாம் சரியாயிடும்…அப்பிடிதானே…. போடா வென்ன…

  5. குடியிருப்போரின் நிரந்தர முகவரி அடையாள அட்டையை ஒரு நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது வரவேற்க்கதக்கது. ஆனால் காவலர்கள் கைதியை தீர விசாரிக்காமல் என்கவுண்டரில் கொலை செய்வது என்பது ஆபத்தானது.

  6. Our life is increasingly monitored in the name of security. Adhaar card is one such example.
    Bachelors are always at receiving end thanks to the Freudian mindset of the ‘holy family’ system.
    This encounter is a blot in our society which always receive and co-habit with people of other states.
    This encounter also reveal a class dimension. Imagine what will the police do if a marvari, a Sikh get caught similarly.
    The construction tycoons exploit these bihari labourers with low wage, more working hours, poor accommodation etc. If any of them got injured or died during work, no amenities, no medical care. They are packed and sent home by next train.
    The Chennai middle class wants to live for itself, at whatever cost it may be.

  7. திருடுவதில் சிறிய திருட்டு பெரிய திருட்டு என்று என்ன இருக்கிறது? எல்லாம் ஒன்றுதான். மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மக்கள் நிம்மதியுடன் வாழவேண்டும். அதற்கு குற்ற வாளிகளை என்கவுன்டரில் கொல்வதுதான் சரியானவழி ! ஜாதி மதம் இனம் மாநிலம் என்று பார்க்கக்கூடாது. பிகாரில் வறுமை என்றால் நாம்தான் இளிச்சவார்களா கொள்ளையடிப்பதற்கு? இந்த கட்டுரை எதார்தமில்லாமல் உண்மையை மறைப்பதாக உள்ளது.

  8. சட்டம் ஒழுங்கை காவலர் முதல் காவல் தலைவர்வரை முறையாகப்பணியாற்றி பராமரிக்க அனுமதிக்கப்ப்டவேண்டும். இழந்து போன மதிப்பை உயிர்களைக்கொன்று மீட்டெடுக்க முயற்சி செய்வது தடுக்கப்ப்டவேண்டும்.23.12.2012 அன்றையபேட்டியில் கொள்ளையர்கள் எங்களைத் திக்குமுக்காட வைத்து விட்டனர், சவாலை ஏற்றுக் கொள்கிறோம். கொள்ளையர்கள் அத்ற்குரிய விலையைக் கொடுக்கவேண்டும் என்று ஒரு காவல் அதிகாரி பேட்டி அளித்தபோதே தெரிந்து விட்டது ( ஆதாரம் தினத்தந்தி). அந்த இளைஞர்கள் பிடிபட்டுவிட்டார்கள், அவர்கள் கொல்லப்ப்டப்ப்டபோகிறார்கள் என்று.
    அதிகாரி ஒருவர் கொள்ளையர்கள் சுடடு பொதுமக்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்பத்ற்காக சுட்டோம் என்றார்.இரவு 1 மணிக்கு அடைக்கப்பட்ட வீட்டில் இருக்கும் மககளுக்கு என்ன ஆபத்து வந்துவிடும்.பொதுமக்களின் எதிர்வினை மிகுந்த கவலை அளிக்கிறது.இது பற்றி இன்னும்நிறையநீங்கள் எழுதவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க