ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம், இந்தியாவின் சதித்தனமான திருத்தத்துடன் கூடிய ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. சீனா,ரஷ்யா, கியூபா முதலான நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்துள்ளன.
இத்தீர்மானம், இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் என்றும், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் என்றும் திரும்பத் திரும்ப தமிழக ஓட்டுக்கட்சிகளும் தமிழினப் பிழைப்புவாதிகளும் ஊடகங்களும் பரபரப்பூட்டுகின்றனர். இத்தீர்மானம் இலங்கையைக் கண்டிப்பது போலவும், ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கோருவது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால், இந்தத் தீர்மானத்தில் சிங்கள இனவெறி பாசிசபயங்கரவாத அரசின் போர்க்குற்றங்களையோ, இனப்படுகொலையையோ கண்டிப்பதாக எதுவுமில்லை. ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கவிக்கவுமில்லை.
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் இந்தியா, இலங்கை உள்ளிட்டு 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில், எவ்வித அதிகாரமும் இல்லாத ஓர் அலங்கார அமைப்பாகும். ஒரு குறிப்பிட்ட நாடு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக இந்த கவுன்சிலில் பெரும்பான்மை நாடுகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலும், அதனை ஐ.நா. பொதுச்சபை விவாதித்து, அதனடிப்படையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்தால்தான் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டில் தலையிட முடியும். அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்கள் தங்களது மேலாதிக்க ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்கு ஏற்ப மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் இவ்வமைப்பின் நடைமுறைப் பயன்பாடாக உள்ளது.
ஈழத்தில் நடந்த இன அழிப்புப் படுகொலைகளுக்குப் பிறகு, கடந்த 2009ஆம் ஆண்டில் மனித உரிமைக் கவுன்சிலில் சுவிட்சர்லாந்து அரசு ஈழப்போர் தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதுவும் சிங்கள இனவெறி அரசின் இன அழிப்புப் படுகொலைக்கு எதிரான தீர்மானம் அல்ல. மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, இறுதிப் போரின் போது சிவிலியன்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதையும் இதர மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசே விசாரிக்க வேண்டுமென்றும் அத்தீர்மானம் குறிப்பிட்டது. சிங்கள இராணுவத்தின் போர்க்குற்றங்களைப் பற்றி மவுனம் சாதித்த அத்தீர்மானத்தை, இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானம் என்றும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரும் தீர்மானம் என்றும் ஈழ ஆதரவாளர்களும் ஊடகங்களும் அன்று ஊதிப் பெருக்கினர். இத்தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, இலங்கை, சீனா, ரஷ்யா, கியூபா முதலான பெரும்பான்மை நாடுகள் வாக்களித்ததால் இத்தீர்மானம் தோல்வியடைந்தது.
இதேநேரத்தில் இலங்கை அரசு மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தது. பயங்கரவாதத்தை வீழ்த்தி வெற்றியைச் சாதித்துள்ள இலங்கை அரசையும் இராணுவத்தையும் பாராட்டிய அத்தீர்மானம், போரினால் அகதிகளாகியுள்ள மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு செய்யவும் உலக நாடுகள் உதவ வேண்டுமென்று கோரியது. இப்படி ஆடுகளுக்காக அழுத ஓநாயின் தீர்மானத்தைப் பெரும்பான்மை நாடுகள் வாக்களித்து நிறைவேற்றின.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த இன அழிப்புப் படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் கண்டனங்களைத் தொடர்ந்து, சிங்கள இனவெறி பாசிச ராஜபக்சே கும்பல் 2010 மே மாதம் “கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி.)” என்ற ஆணையத்தை நிறுவி விசாரணை நடத்துவதாக அறிவித்தது. இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அரங்குக்கு இழுக்கப்படுவதைத் தவிர்த்து, நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் வளமாக உள்ளதாகக் காட்டிக் கொள்ளவும், இதன் மூலம் சர்வதேசத் தலையீட்டை முறியடிப்பதும்தான் இந்த ஆணையத்தை ராஜபக்சே கும்பல் அமைத்ததற்கான காரணம்.
இந்த ஆணையம் புலிகளின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. போரில் புலிகள் வீழ்த்தப்பட்டிருந்தாலும், அவர்களுடன் தொடர்புடைய புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வதைக்கும் நோக்கத்துடன் விசாரணையை நடத்தியது. இறுதிக் கட்டப் போரின்போது நடந்த அத்துமீறல்கள், தனிநபர்களின் பாதிப்புகள் பற்றியும் விசாரிப்பதாகத் தெரிவித்தது. இதன் மூலம் அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளில் ராஜபக்சே கும்பலுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை இனம் கண்டு களையெடுக்கவும், பழிவாங்கவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டது.
மனித உரிமை மீறல்கள் பிரச்சினையில் சிங்கள அரசாங்கத்தைப் பாதுகாத்ததில் இழிபுகழ் பெற்ற முன்னாள் அரசுத் தலைமை வழக்குரைஞர் சி.ஆர். டிசில்வா இந்த ஆணைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அரசாங்கத்தின் ரப்பர் ஸ்டாம்பாகச் செயல்பட்ட இந்த ஆணைக் குழு எந்த வகையிலும் சுயேட்சையானதோ, நடுநிலையானதோ அல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை.
இறுதியாக இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை 2011 டிசம்பர் 16 அன்று வெளியிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது சிங்கள இராணுவம் எவ்விதப் போர்க்குற்றமும் இழைக்கவில்லை; மக்களைப் பாதுகாக்க அக்கறையோடும் பொறுப்போடும் செயல்பட்டது என்றுதான் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையையும் ஐ.நா. வுக்குச் சமர்பிக்கப் போவதில்லை என்று சிங்கள அமைச்சரவை அறிவித்துவிட்டது.
இந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதுதான், அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு, தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் சாரம். இத்தீர்மானம், போரின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சே கும்பலால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு எதிரானதல்ல. அந்த விவகாரத்துக்கும் இந்த தீர்மானத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
போர்க்குற்றவாளியான ராஜபக்சே அரசு தம்மைத் தாமே விசாரணை செய்து கொண்டுள்ளதாகக் கூறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆதரித்து, அதன் பரிந்துரைகளை விரைவாகச் செயல்படுத்தக் கோருகிறது, இத்தீர்மானம். நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் கொள்ளாத மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணை தொடங்கப்படவேண்டும் என்றும், சர்வதேசச் சட்டவிதிகள் மீறப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசை இத்தீர்மானம் கோருகிறது. இந் தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது வலுவான ஆதிக்கத்தை நிறுவும் போர்த்தந்திரத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே, சீனாவுடனான அரசு தந்திர மற்றும் பொருளாதார உறவுகளிலிருந்து விலகி நிற்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே அமெரிக்கா இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. மற்றபடி, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்கள் பற்றியோ, இனப்படுகொலை பற்றியோ இத்தீர்மானத்தில் ஒரு வார்த்தைகூட இல்லை.
டப்ளின் தீர்ப்பாயத்தில் முன்னின்று உழைத்த, ஈழத் தமிழர்களால் நன்கறியப்பட்டவரான பால் நியூமென், ஐ.நா. மனித உரிமைகள் கமிசனின் தற்போதைய கூட்டத்தொடரில் இலங்கையில் நடந்துள்ள இனப்படுகொலை, போர்க்குற்றம் பற்றி எதுவுமே விவாதிக்கப்படவில்லை என்று பேட்டியளித்துள்ளார். இத்தீர்மானம் இலங்கையைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதர் எலின் சாம்பர்லெய்ன் டோனஹே தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகள்கூட இந்தத் தீர்மானத்தில் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒன்றுமேயில்லை என்கின்றனர். ஆனால், தமிழக ஓட்டுக்கட்சிகளும், சில பிழைப்புவாத ஈழ ஆதரவாளர்களும் ஒன்றுமில்லாத இந்த வெற்றுத் தீர்மானத்தைத்தான் ஏதோ கேழ்வரகில் நெய் வடிந்த கதையாக ஏற்றிப்போற்றி, அமெரிக்காவானது, இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விடுவதைப் போல சித்தரிக்கின்றனர்.
“போர் முடிந்து மூன்றாண்டுகளே ஆகியுள்ள நிலையில், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கூறி அமெரிக்கா முன்வைத்த இந்தத் தீர்மானத்தை ரஷ்யா, சீனா, கியூபா முதலான நாடுகள் எதிர்த்தன. “இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூறி தீர்மானத்தை எதிர்த்த இந்தியா, ஒரு திருத்தத்தை முன்வைத்து ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. “ஐ.நா. மனித உரிமைத் தூதர் அலுவலகம் அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டும்” என்ற வாசகங்களை நீக்கிவிட்டு, “ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியையும் இலங்கை அரசுடன் கலந்தோலனை நடத்தி அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும்” என்று முக்கியமான இத்திருத்தத்தின் மூலம் இந்தியா இத்தீர்மானத்தை மேலும் செல்லாக்காசாக்கியுள்ளது. தொழில்நுட்ப உதவி என்ற விதியின் கீழுள்ள இந்த முக்கியமான அம்சத்தை திருத்தியமைத்து, இலங்கையின் மனித உரிமை மீறல் விசாரணைகளில் ஐ.நா. தலையிடுவதற்கன வாய்ப்பையும் அடைத்து, இலங்கை அரசு இத்தகைய சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்றியிருக்கிறது இந்திய அரசு. இந்தியா செய்துள்ள இந்த ‘சிறிய’ திருத்தம் மனித உரிமை கமிசனிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றும் கவசமாகப் பயன்படும்.
அமெரிக்காவின் விசுவாச அடியாளாக உள்ள இந்தியா, தனது வட்டார மேலாதிக்க நலன்களுக்காக சிங்கள இனவெறி பாசிச பயங்கரவாதத்தை ஆதரித்து நிற்கும் நோக்கத்துடன்தான் முந்தைய மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் சுவிஸ் தீர்மானத்தை எதிர்த்தது. பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல், இப்போதைய தீர்மானத்தை நரித்தனமான திருத்தத்துடன் ஆதரித்துள்ளது. இந்தியா இத்தீர்மானத்தை எதிர்த்ததை விட, ஆதரித்ததன் மூலம் இலங்கை அரசுக்கு மேலும் உதவியுள்ளது. ஆனால், இந்தியாவின் முடிவு இலங்கைக்கு எதிரானதாகவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானதாகவும் உள்ளதாக கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் பிற ஓட்டுக் கட்சிகளும் பிழைப்புவாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு உரிமை பாராட்டுகின்றனர்.
ஐ.நா. தீர்மானத்தில் சிங்கள இனவெறி ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒன்றுமில்லை என்ற போதிலும், ‘இது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும், இதுவாவது நடக்கிறதே என்று பார்க்கவேண்டும். எவ்வித நடவடிக்கையுமின்றி தறிகெட்டுத் திரியும் சிங்கள இனவெறி பாசிஸ்டுகளுக்கு கடிவாளம் போடும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். இது முதல் அடிதானே தவிர, முழுமையானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும்’ என்றெல்லாம் தமிழினப் பிழைப்புவாதிகள் நியாயவாதம் பேசுகின்றனர். இரண்டாம் பட்ச எதிரிகளுடன் தற்காலிகமாகக் கூட்டணி அமைத்து, முதன்மை எதிரியான இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலை வீழ்த்துவது என்ற அரசியல் உத்தியுடன் தாங்கள் அணுகுவதாக இதற்கு நியாயம் கற்பிக்கின்றனர். இப்படிச் செய்ததன் மூலம் இந்தியா போர்க்குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதே, அது நியாயமா?
இட்லரும் முசோலினியும் போல, இந்தியாவும் இலங்கையும் இணைந்து இழைத்ததே தமிழின அழிப்புப் போர்க்குற்றம். புலிகளையும் ஈழத் தமிழ் மக்களையும் பூண்டோடு ஒழிக்குமாறு முள்ளிவாய்க்கால் போரை வழிநடத்தியதில் இலங்கை அரசின் கூட்டாளிதான் இந்திய அரசு. போர்க்குற்றவாளியான இந்திய அரசிடம் பிழைப்புவாத ஈழ ஆதரவு அமைப்புகளும் ஓட்டுக் கட்சிகளும் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப் போடச் சொல்லிக் கூப்பாடு போட்டன. ராஜபக்சேவுடன் இந்திய அரசையும் கூண்டிலேற்றுவதற்குப் பதிலாக, இலங்கை மட்டும்தான் போர்க்குற்றவாளி என்றும், இந்தியா முன்நின்று ஈழத் தமிழர்களுக்கு நீதியும் உரிமையும் பெற்றுத்தரும் என்றும் இவர்கள் பிரமையூட்டுகின்றனர். அதன் மூலம் போர்க்குற்றவாளியான இந்தியாவை தப்பவைக்கும் திருப்பணியைச் செய்துள்ளனர். போர்க் குற்றவாளியான இந்திய அரசை நியாயவானாகக் காட்டி, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ததன் மூலம் போர்க்குற்றவாளியான ராஜபக்சேவையும் விடுவிக்கத் துணைபோயுள்ளனர்.
கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று காத்திருந்த கொக்கின் கதையாக, இந்திய உதவியுடன் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்ப வைத்து தமிழக இனவாதிகள் நடத்திய சந்தர்ப்பவாத அரசியலின் நீட்டிப்புதான் இது. இந்திய தேசியத்தை எதிர்ப்பதாகவும் தேசிய இன விடுதலையைச் சாதிக்கப் போவதாகவும் சவடால் அடிக்கும் இத்தமிழினக் குழுக்களும் தலைவர்களும் அரசியல் ரீதியில் இந்திய வட்டார மேலாதிக்க அரசின் அப்பட்டமான கைக்கூலிகளாக உள்ளனர். அன்று ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை வரவேற்று ஆதரித்த இவர்கள்தான், இன்று இந்தத் தீர்மானத்தையும் ஆதரிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டிருக்க மாட்டார்; இந்திரா காந்தி இருந்திருந்தால் ஈழத்தை விடுதலை செய்திருப்பார்; வங்கதேச விடுதலையைப் போல தனி ஈழத்தை உருவாக்கியிருப்பார் என்றெல்லாம் ஏற்றிப் போற்றியவர்களும் இவர்கள்தான். இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால், அது இந்தியாவுக்கு பேராபத்து என்று பீதியூட்டி உபதேசம் செய்தவர்களும் இவர்கள்தான். ஈழ விடுதலைக்கு எதிரான பார்ப்பன பாசிச ஜெயலலிதாவை ஈழத்தாயாகச் சித்தரித்தவர்களும் இவர்கள்தான்.
இந்தியா அல்லது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முதுகில் ஏறி ஈழத் தமிழர்க்கு நீதியும் உரிமை யும் பெற்று விட இயலுமெனக் கருதுவது வீண்கனவு மட்டுமல்ல; ஈழ விடுதலைக்கே எதிரான துரோகத்தனமாகும். இந்தியாவையும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களையும் தாஜா செய்தோ, அவற்றின் தயவினாலோ, அரசு தந்திர நடவடிக்கைகள், அழுத்தங்கள் மூலமாகவோ இந்திய இலங்கை அரசுகளின் போர்க்குற்றங்களுக்கு ஒருக்காலும் நீதி பெற முடியாது. இத்தகைய பிழைப்புவாத சந்தர்ப்பவாத ஈழ ஆதரவு அமைப்புகளையும் இயக்கங்களையும் அம்பலப்படுத்தி, சர்வதேச அரசுகளைப் பணிய வைக்கும் தனித்துவமான உறுதியான புரட்சிகர மக்கள் இயக்கங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இப்போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும்.
______________________________________________________
– புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012
______________________________________________________
படிக்க
as long as India exist,well there can be No Growth For Tamil community!
பாகிஸ்தானிலோ பங்களாதேசத்திலோ இந்துக்களும் / சீக்கியரும் தாக்கப்பட்டால் துடிக்கும் மத்திய அரசு தமிழருக்கு துடிக்க மறுக்கிறது (எந்த மதமாய் இருப்பினும்)…
நான் சந்தித்த பல ‘படித்தவர்’கள்…இது வெளிநாட்டுப்பிரச்சினை என்று மூளைச்சலவை செய்யப்பட்டவர்களைப் போலவே பேசுகிறார்கள்…
அப்போ பாகிஸ்தான் / பங்களாதேசத்தில் இப்படி நடந்தால் ஏன் துடிக்கிறது என்று கேட்டேன்…பதிலே இல்லை…
உங்கள் கருத்தினை மதிக்கிறேன் வீரன்.
உலகத்தை வெள்ளை – கருப்பாகப் பார்க்க முடியாது. எதிரி – நண்பன் என்று வேறுபடுத்தி பார்க்க முடியாது. 2009 ஆம் ஆண்டில் சிறீலங்காவுக்கு எதிராக அய்ரோப்பிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் திருப்பி வாங்கப்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய சிறீலங்காவைப் பாராட்டும் தீர்மானம் 29 ஆதரவு, 12 எதிர்ப்பு, 6 நடுநிலை என்ற கணக்கில நிறைவேறியது. இன்று அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவு 24, எதிர்ப்பு 15, நடுநிலை 8. எனவே மொத்தத்தில் இது தமிழர் தரப்புக்கு மிகப் பெரிய வெற்றி. 1987 க்குப் பின்னர் அய்நா அவையில் தமிழர் சிக்கல்பற்றி நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் இது. தீர்மானம் பலவீனமானது என்றாலும் தீர்மானம் நிறைவேறியது பெரிய சாதனை. தீர்மானம் கொண்டுவரப்படாவிட்டால் அல்லது கொண்டுவந்த பின்னர் தோற்கடிக்கப்பட்டால் அது சிறிலங்காவுக்குப் பெரிய வெற்றியாகவும் தமிழர்களுக்குப் பெரிய பின்னடைவாகவும் அமைந்திருக்கும். உலக ஒழுங்கில் நாம் ஒட்டித்தான் ஓட வேண்டும். வெட்டி ஓட முடியாது.
இத்தீர்மானம் குறித்து மார்ச் 29ஆம் தேதி எழுதப்பட்ட ஒரு பதிவு –
http://pudhiavan.blogspot.in/2012/03/blog-post_29.html
மார்ச் 21ஆம் தேதியும் இதே விஷயத்தைப் பற்றிய பதிவு -.
http://pudhiavan.blogspot.in/2012/03/blog-post_21.html
இந்த இரண்டு பதிவுகளுமே தீர்மானம் எந்தளவுக்கு சக்தியற்றது என்பதை வெளிப்படுத்துகின்றன.
தீர்மானம் பலவீனமானது என்றாலும் தீர்மானம் நிறைவேறியது பெரிய சாதனை – என்கிறார் நண்பர் நக்கீரன். இப்போதைக்கு சாதனையல்ல, இத்தீர்மானத்தைத் தொடர்ந்து பொருளாதாரத் தடைகளும் ஐ.நா. அமைப்பின் நிர்ப்பந்தமும் இலங்கை அரசை தமிழர் நலனுக்கான நடவடிக்கை எடுக்க வைத்தால்தான் சாதனையாகும். இலங்கை அரசு தன் போக்கில் மாற்றம் செய்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
தமிழீழ மக்கள் சிக்கல் முதல்முறையாக – 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் – அய்.நா. அவையில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முயற்சி இல்லாவிட்டால் இது சாத்தியப்பட்டிருக்காது.அமெரிக்கா பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கலாம். ஆனால் அதற்கு ஆதரவு கிடைத்திராது. தீர்மானம் தோற்றிருந்தால் அது சிறிலங்காவிற்கு பலத்த வெற்றியாகப் போயிருக்கும். எமது சிக்கல் அடிபட்டுப் போயிருக்கும். உலக ஒழுங்கில் ஒரு நேரத்தில் ஒவ்வொரு அடியாகத்தான் எடுத்து வைக்க வேண்டும். சிரியாவில் நடப்பதைப் பாருங்கள். உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். அய்.நா. ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளது.
”தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!
தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சொந்த இடமாக கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் மத்தியில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிய வருகின்றது.
உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் அமையப் பெற்று இருக்கும் என்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இதில் காத்திரமான பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தொமோர் ஆகியவற்றை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றமைக்கு கடந்த வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையால் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.
அவை போலவே தமிழீழம் தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. “
– http://nerudal.com/nerudal.45249.html
உலகத்தில் எங்கு தனிநாடு வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினாலும் ஆம் என்றுதான் சொல்வார்கள். ஏன் நாளை தமிழகத்திலேயே நடத்தி பார்க்கட்டுமே. ஆனால் தற்போது தமிழகத்தில் தோன்றி இருப்பது தமிழ் இன உணர்வு போல் தோன்றவில்லை. ஏன் என்றால் 1990 புலிகள் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை 24 மணி நேரத்தில் வடக்கில் இருந்து முழுதுவதுமாக விரட்டபட்டார்கள். ஆனால் இன்றுவரை தமிழினம் பேசும் யாரும் வாய் திறக்கவில்லை. வினவு உட்பட. தமிழ் பேசும் யாவரும் தமிழர்கள் தானே. 500 ரூபாய் மாத்திரமே எடுத்துகொண்டு போக அனுமதிக்கப்பட்டார்கள். பெண்கள், வயோதிபர்கள், குழந்தைகள் என்று பாராமல் இரவோடு இரவாக விரட்டபட்டர்கள் . அப்போது அமெரிக்கா எங்கு இருந்தது. ஐக்கியநாடுகள் சபை எங்கு இருந்தது. எந்த முகத்தை கொண்டு தமிழினம் பேசுகிறிர்கள். நீங்கள் மனிதர்களா?? .
[…] அதன் பொருட்டு இந்தியா கொண்டு வந்த திருத்தங்களையோ மனதார பாராட்டிய தமிழினவாதிகள் டெசோ […]
சீனாவும் ரஷ்ஷியாவும் எதிரி நாடுகள்
இந்தியாவும் பாகிஷ்தானும் எதிரி நாடுகள்
இந்த 4 பேரும் சேர்ந்து நம்மை அழித்ததை
ஜீரனிக்க முடியுமா?