நகைச்சுவையால் உலகைக் குலுக்கிய சார்லி சாப்லின்!
‘தி கிட்’ (சிறுவன்) என்ற பட வேலை நடந்து கொண்டிருந்த நேரம். 1920ஆம் ஆண்டு. சார்லி சாப்லின் பட உலகில் நிலைத்துவிட்ட நாட்கள்.
ஒரு நாள் ஏழு வயது சதுரங்க (செஸ்) நிபுணன் ஸ்டூடியோ வந்திருந்தான். ஒரே நேரத்தில் 20 பேருடன் ஆடப்போகிறான். கலிஃபோர்னியா சதுரங்க நிபுணர் டாக்டர் கிரிபித்சும் அன்று ஆடுகிறார்.
அவன் பெயர் சாமுவேல் ரெஷவ்ஸ்கி. மெலிந்த, வெளுத்த, தீவிரமான முகம். பெரிய கண்கள். யாரைச் சந்தித்தாலும் சவால் விடும் கோபமான பார்வை. சந்திப்பதற்கு முன்பே அவனைப் பற்றி எச்சரித்து விட்டார்கள். திடீரென்று உணர்ச்சிவசப்படுவான், வணக்கம் சொல்லவும் மாட்டான் என்றார்கள்.
சாப்லினுக்கு அறிமுகப்படுத்தினார்கள். சிறுவன் அமைதியாக சாப்லினை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அவரோ மும்முரமாகத் தொகுப்பு வேலையில் இருந்தார்.
சில நிமிடங்கள் கழிந்தன, ‘உனக்கு பீச் பழங்கள் பிடிக்குமா?’ என்று சாப்லின் கேட்டார். ‘ஓ’ என்றான் அவன். தோட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளச் சொல்லி சாப்லின் தனக்கும் ஒன்று வேண்டுமென்று சொல்லி அனுப்பினார்.
பதினைந்தே நிமிடங்களில் அவன் பழங்களோடு திரும்பினான்.
இருவருக்கும் அப்போதே நட்பு பூத்தது.
”உங்களுக்கு செஸ் ஆடத் தெரியுமா?”
”ஆடத் தெரியாதே!”
”நான் கற்றுத் தருகிறேன். இன்றிரவு நான் ஆடுகிற ஆட்டத்தைப் பார்க்க வாருங்கள். இருபது பேரோடு ஒரே சமயத்தில் ஆடப் போகிறேன்” –பெருமிதம் அவன் குரலில் ஓங்கியிருந்தது.
இரவு-
சாப்லின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை. சிறுவனையே ஆழ்ந்து கவனித்தார். அற்புதமான ஆட்டம் போடும் அவனது வேகம் அசரவைத்தது. அதேசமயம் சாப்லினது மனத்தை அது கலக்கிவிட்டது. ஆழ்ந்து கவனிக்கும் சிறுவனின் சின்ன முகம் ஒரு நொடி குப்பென்று சிவந்தது. அடுத்த நொடி வடிந்து வெளுத்தது. தனது திறமைக்கு அவன் ஆரோக்கியத்தையே விலையாகக் கொடுத்தான். தன்னையே அழித்துக்கொண்டு, அதையே விற்றுக் காசாக்கிப் பிழைக்கும் ஒரு கலைஞனாக அச்சிறுவனைப் பார்த்தார் சாப்லின். எவ்வளவு அவலமான, கொடூரமான வாழ்க்கை!
♦
சார்லி சாப்லினுக்குள் அவர் சாகும் வரை விழித்துக் கொண்டிருந்த ஒரே உணர்வு – இந்த மனிதத்தன்மை தான். வாழ்க்கையின் அடித்தட்டில் கஷ்டப்பட்ட பல லட்சக்கணக்கான உலக மக்களின் மீது அவர் அன்பு செலுத்திய காரணமும் இதுதான்.
ஒருவேளைச் சோறுக்கே தவித்த ஐரிஷ் இனக் குடும்பத்தில் வாழ்ந்து பின்னாளில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார் சாப்லின். அவரே ஒரு முறை சொன்னது போல பணத்தோடு வாழப் பழகினாரே தவிர, பணக்காரனாக வாழப்பழகவில்லை. காரணம் – தனது பழைய லண்டன் நாட்களின் அடிவேரை மறக்கவில்லை; மறக்க விரும்பியதுமில்லை.
சாப்லின் பிறந்து வளர்ந்தது கலைக் குடும்பத்தில். தாய், தந்தை இருவரும் மேடை நடிகர்கள். அவர் தேர்ந்தெடுத்ததும் நடிப்புத்துறை. அதிலும் நகைச்சுவை நடிகனாகவே பயிற்சி பெற்றார். அப்போதிருந்து தானே எடுத்த சினிமாப் படங்கள் வரை மிகச் சாதாரண ஏழையின் வாழ்க்கையையே எடுத்துச் சொன்னார். பணக்காரர்களின் போலித்தனமான, கேடுகெட்ட, அற்ப வாழ்க்கையை எள்ளி நகையாடினார்.
சாப்லின் அமெரிக்க ஹாலிவுட் சினிமா நடிப்புக்கு வருவதற்கு முன் லண்டனில் வாழ்ந்தார். தாய் ஒருபக்கம், அண்ணன் ஒருபக்கம், அவர் ஒருபக்கம் என்று வேலைக்குப் போய்விடுவார்கள். சுற்றிலும் உள்ள உலகத்தை அனுபவித்து உணர்ந்து அறியவேண்டிய சின்னஞ்சிறு வயதிலேயே பல வேலைகளைச் செய்தார் சாப்லின். சிறுவியாபாரி, கண்ணாடித் தொழிலில் தொழிலாளி, பழைய துணி விற்பனையாளர், ஓட்டல் சர்வர், சாலை போடுபவர், குத்துச் சண்டை விளையாட்டு நடுவர், ஓவியர், நர்ஸ், துப்புரவாளர், ரொட்டிக்கிடங்குத் தொழிலாளி, ரொட்டி சுடும் சமையல்காரர், பிணங்களை அகற்றும் கூலி, துணை நடிகர், மரவேலை இப்படிப் பல வேலைகளில் நுழைந்து வெளியே வந்தவர் அவர்.
குடிகாரத் தந்தை; வேலைதேடி அலையும் அண்ணன்; முதலில் நடிப்பு, பிறகு தையல் மிஷினில் கூலி வேலைசெய்து, அதற்கும் பிறகு கிடைக்கும் தொழில் எல்லாம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிய தாய் – இப்படிப்பட்ட வீட்டுச்சூழல்.
படிப்பு – அப்படி ஒன்று நடந்தது கொஞ்சகாலம். அவரும், அண்ணனும் அனாதை விடுதியில் படித்தார்கள். அவர்களுக்கான செலவுப் பணத்தை ஈடுகட்ட அதே நிர்வாகத்தில் அவரது தாய் உழைத்தாள். எப்போதோ ஒரு நாள்தான் தாயைப் பார்க்கமுடியும். தவறே செய்யாவிட்டாலும்கூட நிர்வாகிகள் கொடூரமாகச் சவுக்கடி கொடுத்துத் தண்டிப்பார்கள். தாயின் அரவணைப்புக்கும், பாசத்துக்கும் ஏங்கித் துடித்து வளர்ந்தார்கள் சாப்லினும் அவரது அண்ணனும்.
பின் அங்கிருந்து வெளியேறி தாயின் ஊழைப்பில் காலந்தள்ளினார் சாப்லின். அண்ணன் கப்பற் படைக்குச் சென்றுவிட்டான். ஒருவேளைச் சோறுகூட இல்லாமல் தவிப்பார். அப்படியே பழகி இரவு மட்டும் தாய் கொடுக்கும் பணத்தில் வெளிச்சாப்பாடு வாங்கிவந்து இருவரும் சாப்பிடுவார்கள். அரைப்பட்டினியும், குறைப்பட்டினியும், கடின உழைப்பும், நிம்மதியற்ற வாழ்க்கையும் தாயின் மூளையைச் சிதைத்தன. பிறகு சாகும்வரை அரைப்பைத்திய நிலையில் மருத்துவமனையில் வாழவைக்கப்பட்டாள்.
ஆரம்பகால துயரங்கள், சித்திரவதைகள் சாப்லினின் மனதில் ஆழ்ந்த வடுக்களாகிவிட்டன. ”ஒரே ஒரு குவளை டீ கொடுத்திருந்தால் நான் குணம்ஆகி இருப்பேன்” என்று அவரது தாய் கதறியது இறுதிவரை மறக்கவேயில்லை.
சாப்லின் என்ற ஏழைப்பங்காளனின் உலகப்பார்வை இங்கிருந்துதான் தொடங்கியது. பிறகு பணம் வந்தபிறகு, எல்லாவற்றையும் மறந்துவிட்டுச் சுயநலத்தோடு வாழாமல் ஏன், எப்படி என்று கேள்விகேட்டுக் கொண்டார். தனக்கோ தன் குடும்பத்துக்கோ மட்டும் இந்நிலை இல்லை, சமூகத்தில் அடித்தட்டு ஒன்று உண்டு. அவர்களே சமூகத்தின் அஸ்திவாரம் என்று புரிந்துகொண்டார். வாழ்நாள் முழுவதும் இந்த உண்மையைச் சொல்லும் கலையே சிறந்தது, இதை மாற்றக்கூடிய போராட்டமே மக்களுக்கானது, மற்றவை மக்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டார்.
இந்த கண்ணோட்டம் கலைஞருக்கு அவசியம் என்பதை சககலைஞரிடமிருந்து கற்றுக் கொண்டார். தாயிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டார்.
♦
தொளதொளத்த கால்சட்டை, இறுக்கமான கோட்டு, கால்களில் பெரிய பூட்சுகள், கையில் நடைக்கம்பு, முகத்தில் ஒப்பனை, பல்குச்சி அளவுக்கு மீசை, கோமாளி நடை – இப்படி ஒரு நாடோடித் தோற்றம் – – இதுதான் சார்லி சாப்லின். திரையில் அந்த உருவம் தோன்றிவிட்டால் போதும் – அரங்கத்தில் சிரிப்பு தொடங்கி விடும்.
இந்த நாடோடி உலகம் முழுவதும் மக்களைச் சிரிக்க வைத்தான். இந்திய, தமிழக மக்களுக்கும் அவனை ஓரளவு தெரியும். ஊமைப்படக் கோமாளி நடிகர் சார்லி சாப்லின்.
இன்றுள்ள அளவு தொழில்நுட்பம் வராத காலம் –ஒலி வசதி கூட இல்லை – வண்ணங்களில் எடுக்கமுடியாது; கறுப்பு – வெளுப்பு மட்டும்தான். எங்கு வேண்டுமானாலும் காமெராவை நகர்த்தக்கூடிய வசதிகள், சாதனங்கள் கிடையாது. பலப்பல வரம்புகள். இவ்வளவையும் மீறி, பேச்சு இல்லாத குறை கொஞ்சம் கூடத் தெரியாதபடி ஒரு மணி, இரண்டு மணிநேரம் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும் அற்புதத்தைத் திரையில் படைத்தார் சாப்லின். உலகில் தனக்கு முன்னால் நகைச்சுவைக் கலையை மனித நேயத்துடன் நடித்தவர்களின், கதைகள் எழுதியவர்களின் பாரம்பரியத்திலிருந்து அள்ளி எடுத்துக் கொண்டார் சாப்லின். அப்டன் சிங்ளேர், பிரெக்ட், பெர்னார்டு ஷா, தாமஸ் மான், என்று எண்ணற்ற எழுத்தாளர்களிடமிருந்து, நிஜின்ஸ்கி போன்ற நாட்டியக் கலைஞரிடமிருந்து, ஹான்ஸ் ஐஸ்லர் போன்ற பாட்டாளிவர்க்க இசை மேதையிடமிருந்து, ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளிடமிருந்து, ஐஸன்ஸ்டீன், டான்லெனோ, மார்செலின், டன்வில், மார்க்ஷெரீடன், பிராங்க் காயின், ஜார்மோ போன்ற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டார்.
சாப்லின் படங்களை வேகமாக ஒரு நோட்டம் விட்டால் வாழ்க்கை வீச்சை அதில் பார்க்கலாம்.
*1914 கீஸ்டோன் சினிமாக் கம்பெனியில் தயாரித்த ‘தி நியூ ஜானிடர்‘: (துப்புரவு வேலையாள்): இந்தப் படத்தில் அந்தத் தொழிலாளி ஏதோ தவறு செய்துவிட மேனேபஜர் வேலையைவிட்டு நிறுத்திவிடுகிறேன் என்று கத்துகிறான். ‘ஐயா எனக்குப் பெரிய குடும்பம். சின்னஞ்சிறு குழந்தைகள் வேறு. வேலையவிட்டு நிறுத்திடாதீங்கய்யா என்று அவன் கெச்சுவான். இப்படிச் சிறு சிறு சம்பவங்களாக அவனது வாழ்க்கை.
*1917 ஃபர்ஸ்ட் நேசனல் கம்பெனியில் தயாரித்த ‘ஒரு நாயின் வாழ்க்கை‘: ஏழையின் வாழ்க்கையை நாயின் வாழ்க்கைக்கு ஒப்பிட்டு நகைச்சுவைக் காட்சிகள் வரும், எச்சில் சோறு தேடப்போய் நாய்ச்சண்டையில் ஒரு நாயைக் காப்பாற்றுகிறான் நாடோடி; பிறகு அந்த நாய் நட்பாகிறது. இப்படியாக அவனது ஒருநாள் வாழ்க்கைதான் படத்தின் கதை.
*1921 – தி கிட்: குப்பைத் தொட்டியருகே ஒரு குழந்தை அனாதையாக வீசப்படுகிறது. நாடோடி எடுத்து வளர்க்கிறான். அதை வளர்க்க அவன் படும்பாடு. வளர்ந்து சிறுவனானதும் அவன் பெரிய பங்களாக்களின் கண்ணாடிக் கதவுகளை உடைப்பான். நாடோடி சென்று செப்பம் செய்து சம்பாதிப்பான். இருவரும் நடுவே எதிரியாக வரும் போலீசைச் சமாளிப்பார்கள்.
*’தி சர்க்கஸ்‘ : சர்க்கஸ் கோமாளியின் அவல வாழ்க்கை. அவர் மிக உயர்வாக மதித்த மார்செலின் என்ற அற்புதமான மேடை நகைச்சுவை நடிகர் பிழைப்புக்காக பல கோமாளிகளோடு ஒரு கோமாளியாக சர்க்கஸ் கூடாரத்தில் வாழ்வதை நேரில் பார்த்தார். அவரது நசிந்த வாழ்க்கையே இந்த திரைப்படம் என்று சொல்லலாம். ஒரு கலைஞன் எப்படியெல்லாம் துன்பப்படுகிறான் என்பதை சர்க்கஸ் கூடாரத்தில் நடக்கும் சம்பவங்கள் மூலமாகக் காட்டுகிறார். (ராஜ்கபூரின் ‘மேரா நாம் ஜோக்கரி’ன் கடைசிப் பகுதி சாப்லினை மோசமாகக் காப்பியடித்த படமாகும்.)
*’தி ஐடில் கிளாஸ்‘ (சோம்பேறி வர்க்கம்): நாடோடி கோல்ஃப் ஆட்டம் ஆடுகிறான். அங்கு நடக்கும் விருந்தில் அழகிய பெண் ஒருத்தியைச் சந்தித்துப் பழகுகிறான்; அதற்காகவே கனவான்களிடம் அடி உதை வாங்கி வெளியே ஓடுகிறான்; மறுபடி பயணம் தொடருகிறான். பணக்காரச் சோம்பேறி வர்க்கத்தை, அந்த கேவலமான வாழ்க்கையை அலசுகிறார் சாப்லின்.
*’தி சிடி லைட்ஸ்‘ (நகர விளக்குகள்) 1931: இதன் கரு உருவானதே விசித்திரமான கதை. பணக்காரனின் கிளப்பில் இரண்டுபேர் ‘மனித உணர்வுகள் நிலையில்லாதது. அதாவது மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வாதிட்டார்கள். ஒருநாள் சாதாதாரண ஏழையைக் கொண்டுபோய் தங்கள் பங்களாவில் மது, மாது, பாட்டு நடனம் எல்லாம் கொடுத்தார்கள்; அவன் மயங்கி விழுந்ததும் மறுபடி அவன் வாழ்ந்த நடைபாதையில் கொண்டு போட்டு விடுகிறார்கள். தூங்கி எழுந்த அவன் முந்தின இரவு நடந்தது கனவா, நனவா என்று புரியாமல் விழிக்கிறான். இந்த பணக்காரர்களின் குரூரமான வக்கிரப் புத்தியைச் சந்தித்த சாப்லின் இதிலிருந்து தனக்கான கருவை உருவாக்கினார். கிளப்பில் விவாதித்த சோம்பேறியின் பிரதிநிதியாக ஒரு பணக்காரனைக் குடிகாரனாக்கி, அவன் போதையில் இருக்கும் போது நாடோடியை இழுத்துக் கொண்டு போய் நண்பன் என்று சீராட்டுவான். மறுநாள் காலை போதை தெளிந்ததும் ‘யார்டா நீ’ என்று கேட்டுவிட்டுப் போய்விடுவான். இந்த அதிர்ச்சியிலிருந்து நாடோடி மீள்வதற்க்குள்ளாக மறுபடி வேறொரு நாள் அக்குடிகாரன் அவனைப் பார்த்து நட்பு கொண்டாடுவான்.
♦
ஏழ்மை, வறுமை பற்றி சாப்லின் ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்வதற்கு பல காரணங்கள் தேடினார்கள். சாமர்செட்மாம் என்ற அமெரிக்க எழுத்தாளர் ”அவரது பழைய நாட்களை விரும்புகிறார், இளவயதில் போராடிய நாட்களின் சுதந்திரத்தை விரும்புகிறார், அதனால் தான் அவரது நகைச்சுவை இப்படி இருக்கிறது” என்றார். அதற்குப் பதில் சொன்ன சாப்லின், ”வறுமை கவர்ச்சிகரமான விஷயம் போல் எழுதிவிடுகிறார்கள். எந்த ஒரு ஏழையும் பழைய வறுமையை மறுபடி விரும்புவதில்லை. அதற்காக ஏங்குவதுமில்லை. அதை போல வறுமையில் சுதந்திரம் காண்பவனும் இருக்கமுடியாது…..” என்று தெளிவாய்ச் சொன்னார். பணக்காரர்களின் அழுகிநாறும் உலகமும் வேண்டாம், ஏழ்மை வறுமையும் வேண்டாம், சுதந்திரமான – ஜனநாயகமான புதிய உலகம் வேண்டும். இதுவே அவரது நடிப்பு, கதை, அரசியல் வாழ்க்கை எல்லாம், இதன் தர்க்கரீதியிலான சிந்தனைகள் அவரைக் கம்யூனிச ஆதரவாளராக மாற்றியது.
உலகைச் சுற்றிலும் ரத்தம் தேடி அலையும் பாசிச அரக்கன் ஜெர்மனி இட்லர்; அதை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் போரும் தியாகங்களும் – இந்த நிலைமையில் ஹாலிவுட் கலைஞர்களை போதைகளான, ஆபாசமான, பொறுப்பற்ற பொழுதுபோக்குச் சரக்கைத் தயாரிக்கச் சொல்லி பலவந்தம் செய்தார்கள் முதலாளிகள். நேர்மை, தனிவுள்ளம் கொண்ட கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலாளிகளின் அராஜகத்தை கேலிசெய்து ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படம் தயாரித்தார் சாப்லின்; இட்லரை எதிர்த்து அம்பலப்படுத்தும் ‘கிரேட் டிக்டேடர்’ (மாபெரும் சர்வாதிகாரி’) என்ற படமும் தயாரித்தார்.
இருபடங்களைத் தொடர்ந்து அவர் மீது அவதூறு வழக்குகள், 10 ஆண்டுகள் நடந்தன. இதனால் அவரது ‘யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனம் சரிந்தது. ‘அமெரிக்காவில் பல காலம் வாழ்ந்தும் ஏன் குடியுரிமை பெறவில்லை?’ என்ற கேள்வி எழுப்பினார்கள். ‘அயல்நாட்டானை அடித்துத் துரத்து’ ‘சாப்லின் விருந்தாளி. நீண்டநாள் தங்கிவிட்டார்’ என்று ‘கத்தோலிக்க படைப்பிரிவினர்’ எதிர்ப்புக் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.
எதிர்ப்புகள் தோன்றத்தோன்ற சாப்லின் உறுதியாக நின்றார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் அணி சேர்ந்தன. சோவியத் ரசியா மீது ஜெர்மனி போர் தொடுத்தது. 200 நாஜிப்படைப் பிரிவுகளை எதிர்த்து முதல் போர் முன்னணியைத் தொடங்கியது சோவியத். அங்கு நிவாரணக் குழு அனுப்பவும், அமெரிக்கா இரண்டாவது போர் முன்னணியைத் தொடங்க நிர்ப்பந்தம் செய்தும் சாப்லின் வீர உரைகள் ஆற்றினார்.
அவரைக் கம்யூனிஸ்டு என்று தூற்றினார்கள். சாப்லின் அஞ்சவில்லை.
”நான் ஒரு கம்யூனிஸ்டு அல்ல. நான் ஒரு மனிதன். மனித உணர்வுகள் எனக்குத் தெரியும். எப்பொழுது எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியும். கம்யூனிஸ்டுகள் மற்றவர்களை விட வித்தியாசமான ஜீவன்கள் இல்லை. கம்யூனிஸ்டுகளின் தாயும் மற்ற தாய்களைப் போலத்தான். தனது மகன் போர் முனையிலிருந்து திரும்ப மாட்டான் என்று செய்தி கேள்விப்படுகிற போது அந்தத் தாயும் அழுகிறாள். கதறுகிறாள். இதை நான் புரிந்துகொள்ள கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டியதில்லை. நான் ஒரு மனிதனாக இருந்தாலே போதும்….”
”ரசியப் போர் முனையில் சாவா, வாழ்வா என்ற போராட்டத்தில் ஜனநாயகம் இருக்கிறது. நேச நாடுகளின் விதி கம்யூனிஸ்டுகளின் கையில் இருக்கிறது…. லிபியாவைக் காத்தோம், இழந்தோம்; பிலிப்பைன்ஸ், பசிபிக் தீவுகள் அத்தனையும் இழந்தோம். ஆனால் ரசியாவை இழக்கவிடக்கூடாது. அது ஏன்? ரசியாதான் ஜனநாயகத்தைத் தீவிரமாகக் காக்கும் போர் முன்னணி. நமது உலகம் – நமது வாழ்வு – நமது நாகரிகம் காலடியில் நொறுங்கிக்கொண்டிருக்கிறது. நாம் உடனே முடிவெடுத்தாக வேண்டும்.”
இந்த நேரத்தைக் கைவிட்டுவிட்டால், ஜெர்மனி இட்லர் ஜெயித்தால், உலகெங்கும் உள்ளே மறைந்திருக்கும் நச்சுக் கிருமிகள் போல நாஜிகள் வெளியே தலைதூக்குவார்கள். வெற்றிபெற்ற இட்லரோடு ஒப்பந்தம் போடச் சொல்வார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
என்று மக்களிடம் அவசரமாக, தீவிரமாக, ஒரு புயல்போல பிரச்சாரம் எடுத்துச் சென்றார்.
கடைசியில் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். எங்கு பல கனவுகளோடு உழைத்துக் கொண்டிருந்தாரோ, எங்கு பாசிச ஆதரவு முதலாளிகளின் மனிதகுல நாசவேலைகள் தீவிரப்பட்டதோ அங்கிருந்து வெளியேறினார். இங்கிலாந்து சென்றார். அங்கும் நாஜி ஆதரவாளர்கள், மக்களின் எதிரிகள் தொல்லை கொடுத்தார்கள். உலகம் முழுதும் பரவியுள்ள நச்சுக் கிருமியாகப் போர் வெறியைப் பார்த்தார் சாப்லின். இறுதி மூச்சுவரை அதை எதிர்த்துக் கலை அரங்கிலிருந்து தாக்குதல் தொடுக்க அவர் தவறவில்லை.
ஒரு சுவையான சம்பவம், இங்கிலாந்தில் சாப்லினுக்கு நேர்ந்த்து. நண்பருக்கு நண்பர் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான். அவரோடு பேசிக் கொண்டிருந்தார். ஐரோப்பாவில் உள்ள நிலைமையைப் பார்த்தால் அடுத்த போரும் வரும் என்றார் சாப்லின். ‘அடுத்தமுறை போருக்குச் செல்ல நான் அகப்படமாட்டேன்’ என்றார் அவர். ”உன்னைப் பழிசொல்லி என்ன பயன்? நீ இன்னாரோடு சண்டைக்குப்போ, செத்துப்போ என்று கட்டளை போட இவர்கள் யார்? இதில் தேசபக்தி என்ற பெயர் வேறு. என்று சொன்னார் சாப்லின். அடுத்தநாள் செய்தி ஏடுகளில் பெரிய தலைப்பில் செய்திவந்தது – ”சாப்லின் தேசபக்தர் அல்ல”. பிறகுதான் சாப்லினுக்குப் புரிந்தது, முந்தினநாள் வந்து பேசியது எந்த நண்பருக்கு நண்பனும் அல்ல, ஒரு செய்தியாளர் என்பது.
சாப்லின் அதற்குச் சொன்ன பதில் அவசியம் குறிப்பிடவேண்டிய ஒன்று. ” ஆம் நான் தேச பக்தன் அல்லதான், அதாவது தேச பக்தி என்ற பெயரில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்படும்போது” அப்படிப்பட்ட தேசபக்தி போலி தேசியம், அப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதிக்காக, ஒரு பிரதமருக்காக, ஒரு சார்வாதிகாரிக்காக உயிர்க்கொடுக்க நான் விரும்பவில்லை. – சாப்லின் இவ்வாறு கொதித்துச் சொன்னார்.
ஒரு கலைப் பொருள் பற்றி சாப்லினிடம் விவாதித்ததால் அது மக்களுக்கானதா என்றுதான் அவர் ஆராயத் தொடங்குவார். தனது திரைப்பட நகைச்சுவைக் கலை மூலம் இதைத்தான் சாதித்தார். ஒலிப்பதிவு வந்த பிறகும் அவர் துணிச்சலாக ஊமைப்படம் எடுத்தார். ஊமைப்படத்திலேயே அதன் வரம்புகளை நடிப்பின் மூலம் உடைத்தெறியக் கற்றுத் தேர்ந்ததால், ஒலியைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த வகைக்கலையில் ஓர் அறிஞர் சாப்லின் என்றுகூடச் சொல்லலாம்.
கட்டளைக்கு ஆடிவிட்டு வரும் கலை மோசமான கலை என்பார் அவர். மனிதனுக்கே எதிரான கருத்தைப் போலித்தனமாக வேஷங்கட்டி ஆடமுடியாது. ஒரு சிறந்த கலைஞர், ஒரு உன்னதமான கலைஞர் அவ்வாறு செய்யமாட்டார். கலைபற்றி பல விதங்களில் விளக்க முற்பட்ட சாப்லின் – உணர்ச்சிகளையும் புத்தியையும் இணைத்துக் கலக்கும் விதம் கலைஞனுக்குக் கைவரவேண்டும். அதற்கு வெறும் திறமை மட்டும் போதாது, கலைநுட்பம், கலைத்திறன் வேண்டும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும் என்றார்.
அவர் கலையில் ஓர் எதார்த்த வாதி. வெளியே நடப்பதை அப்படியே திரையில் எடுத்துவைப்பது எதார்த்தம் அல்ல; கற்பனை அந்த எதார்த்தத்திலிருந்து என்ன எடுத்துச் செய்யமுடியுமோ அதுவே முக்கியம் என்பார். உலகெங்கிலும், ஏன் இந்தியாவில் உள்ள ஒரு சில இயக்குனர்கள் கூட எதார்த்தம் என்பதுபற்றி விசித்திரமான கருத்துக்கள் வைத்திருக்கிறார்கள்.
பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட செட் அல்லது இடத்தைப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்றால் போதும். அதற்குப் பிறகும் கதாபாத்திரம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அசைவது; நகருவது எல்லாம் காட்டவேண்டியதில்லை. இது படத்தின் ஓட்டத்தைக் குறைத்துவிடுகிறது. ஆனால் இதைத்தான் கலைப்படம் என்று சிலர் சொல்கிறார்கள் என்று கேலி செய்தார் சாப்லின்.
நம்நாட்டில் சத்யஜித்ரே, குமார் சஹாரி, அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றோர் இப்படிப்பட்ட சித்தரிப்பையே எதார்த்தம் என்கிறார்கள்.
அதேபோல அவசியமில்லாமல் காமிரா விளையாட்டு காட்டுவது கலையல்ல என்றார் சாப்லின். ஓர் அறை, கணப்பு அடுப்பு, அதைக் காட்டுவதற்கு எரியும் துண்டுக் கரியின் பார்வையிலிருந்து அடுப்பையும், அறையையும் காட்டவேண்டிய அவசியமில்லையே என்று கேலி செய்தார் அவர்.
வாழ்க்கை முரண்பாடுகள், போராட்டங்கள் நிறைந்தது; அதில் வரும் நோவும் துன்பமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இதிலிருந்துதான் தனது கதைகளை எடுத்துக் கொண்டார் சாப்லின். கற்பனையைத் தூண்டும் சம்பவங்களை ஓயாது தேடும் காவல் கோபுரமாக மனது (மூளை) பயிற்சி பெற்று விட்டது. ஒரு கருவை எடுத்தபிறகு, விரிவாக்குவேன், பிறகு அதில் முழுமூச்சாக ஈடுபடுவேன் என்று தனது கலை ஆக்கத்தைச் சொன்னார் சாப்லின்.
லண்டன் கென்னிங்டன் தெரு பவுனால் ஏழைக்குடியிருப்பில் வித்திடப்பட்ட அக்கலைஞன் நாடுவிட்டு நாடு பயணம் செய்த போதும், நடிப்புத் துறையில் முன்னேறி எவ்வளவோ சம்பாதித்தபோதும் தன் வேரை இடம் பெயர்க்கவே இல்லை. ‘The Great Dictator – மாபெரும் சர்வாதிகாரி‘ திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் ஓர் முடித்திருத்தும் தொழிலாளி மாறாட்டத்தினால் சர்வாதிகாரியின் இடத்தில் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார். அந்த எளியவரின் எண்ணங்கள் மாறவில்லை. அவர் பேசுகிறார் – யாரும் எதிர் பாராத பேச்சு – சர்வாதிகாரியையே எதிர்த்துப் பேசுகிறார். கதாபாத்திரம் அங்கே பேசவில்லை – அவர்மூலம் சாப்லின் என்ற மனிதர், ஒரு ஜனநாயகக் கலைஞர் அங்கே பேசுகிறார்:
”இப்போது எனது குரலை உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் நீங்கள் கேட்கிறீர்கள். துன்பப்படும் பல லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் அத்தனைப்பேரும் உங்களையே அடிமைப்படுத்தும் ஓர் அமைப்புக்குப் பலியாகியிருக்கிறீர்கள்:
எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா? எனக்குச் செவி கொடுப்பவர்களுக்குச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்: ‘துயரப்படாதீர்கள்’ இத்துன்பம், இத்துயரம் பேராசைக்காரர்களால் வந்தது. அது பனிபோல் நீங்கிவிடும். மனித குலம் முன்னேறும் வேகத்தைக் கண்டு அஞ்சிக்குலை நடுங்கும் அற்பமனிதர்களால்தான் துன்பம் வருகிறது. இனி மனிதர்களுக்கு இடையே உள்ள குரோதங்கள் மறைந்து விடும்; சர்வாதிகாரிகள் செத்து விழுவார்கள். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கே திரும்ப வந்து சேரும். இந்த லட்சியத்துக்காக மக்கள் போரிட்டுப் பல தியாகங்கள் செய்கிறார்கள். அவர்கள் காப்பாற்றித்தரும் விடுதலை என்றுமே அழியாது!….. வீரர்களே! அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள்! விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனித இனத்தை உந்தித்தள்ளும் ஒரு புது உலகத்துக்காகப் போரிடுவோம்! வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால் நாம் ஓரணி சேருவோம்!
மக்கள் கலைஞனின் சுதந்திரமான இனிய குரலைப் பலமுறை கேளுங்கள்; இந்தியாவின் உண்மையான சுதந்திரத்துக்கான போருக்காக அவ்வினிய குரலிலிருந்து தெம்பினைப் பருகுவோம்!
_______________________________________
புதிய கலாச்சாரம், ஏப்ரல் 1989.
_______________________________________
அற்புதமான கலைஞன் . அதிசயமான மனிதன் – தகவலுக்கு நன்றி
////வீரர்களே! அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள்/// என்ற வரி தவறான மொழி பெயர்ப்பு. வீரர்களே! அடிமைகளை பிடிப்பதற்காக சண்டை போடாதீர்கள், விடுதலைக்காக சண்டை போடுங்கள். என்றே வரும். Don’t Fight for Slavery, Fight for Liberty…..
சினிமாவை எதார்த்தமாக மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பாக எடுத்தால் யார் பார்ப்பது என்று சொல்கின்றனர் இவரின் படங்கள் அனைத்தும் எதார்த்தமாக இருப்பதால்தான் இன்னும் ரசிக்க முடிகிறது.
நம் நாயகர்கள்! அவரின் styleயை திருடிக்கொண்டு S.Star என்று சொல்லிக்கொள்கின்றனர்.
City Lights என்றபடம் ஒலி இல்லாவிட்டாலும் இன்றும் பார்ப்பதற்கு எதார்தமாகவும், சிரிக்கவும், கண்ணீர் விட வைக்கும் அதை காப்பியடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்றபடம் எதார்த்தமில்லாமல் மட்டமாக இருக்கும்.
fentastic! this great man of laughter has understood the real meaning of art, and has struggled throughout his life to wipe out the tears of the class where he came from. such a great and tear-compelling article. heart-felt appreciations for the comrades for this publication.
Charlie Chaplin is a genius. Thanks Vinavu for bringing to our mind about this great personality who had such an audacity to dare Hitler. However, in the modern context, unfortunately artists like Charlie Chaplin are becoming a rarity. He was prophetic enough to see power into the hands of corporates and dictators. And now it is turning into a reality. How are we to compare the likes of sardar mannumohan, mandapeengan ahluwalia, chidhambaram, arrogant & fraud corporates like ambanis in the present day scenario? Do they know the reality of the people? Still India is by far very worse than the Britain of 1850s.
இன்று கொங்குநாட்டு வீரன் தீரன் சின்னமலை இன் பிறந்தநாள் இரண்டாம் மைசூர் போரின் தளபதி திப்புவின் வாரிசு.அவரது நினைவைப் போற்றுவோம்.
இன்று கொங்குநாட்டு பாளையக்காரன் தீரன் சின்னமலையின் பிறந்தநாள். விடுதலை
போராட்டத்தின் முக்கியமான வீரர்களின் பட்டியலில் தீரன் திப்புசுல்தானின்
வரிசையில்,வீரபாண்டியகட்டபொம்மன்,பூலித்தேவன்,மருது சகோதரர்கள்,விருப்பாட்சி
கோபாலுநாயக்கர் போன்றோர்கள் கட்டியெழுப்பிய தீபகற்ப கூட்டணியின்
முக்கியநபர்.இவர்களின் தியாகம் போற்றப்படவேண்டும்.
சாப்ளினின் நடிப்பிலும், படத்தொகுப்பிலும் சிரத்தையும் நேர்த்தியும் இருக்கும். அவரின் ஆரம்பக்கால, மிகப் பழைய படங்களைக் காணும்போதுகூட ஒரு சிறு தவறும் நேர்ந்திராதவண்ணம் மிகத் தெளிவுடன் வடிக்கப்பட்டிருக்கும்.
ஹாலிவுட்டு ஜேம்ஸ்பாண்டு, சங்கர் படம், மயிரு மட்டை என்கிறார்களே? மாடர்ன் டைம்ஸ் போல இன்றைக்கும் யாராவது செட் போடமுடியுமா? எவ்வளவு பிரும்மாண்டமான பல் சக்கரங்கள்? உண்மையிலேயே ஒரு ராட்சத இயந்திரத்திலிருந்து கழற்றிவைத்தாற்போல?!!
தசாவதாரம் என்று ஒரு குப்பையை கமலஹாசன் சினிமாவுக்குள் திணித்திருப்பார். இந்த எழவெடுத்த படத்துக்கு மேக்கப் மேன் ஹாலிவுட் காரர். கிரேட் டிக்டேடரின் அளவான மேக்கப்புக்கு ஈடாகுமா இந்த ‘ஓலக்கை’ நாயகனின் மேக்கப் பூச்சு?!
இதற்கும் மேலே இந்தப் படத்தில் நடிக்கவும் முடியாது; தொகுக்கவும் முடியாது என்கிற அளவில் சப்ளினின் ஒவ்வொரு படமும் அமைந்திருக்கும். ஆனால் இங்கே? தீபாவளி ரிலீஸ் தேதியை வைத்து படத்தை முடித்துவிடுவார்கள். அல்லது சூ ஸ்டாருக்கு ஏற்றார்போல கதையை ட்ரிம் செய்வார்கள் அல்லது எடிட் செய்வார்கள். இன்றைய காலகட்டத்திலிருக்கும் எந்த நடிகனும் அல்லது இயக்குனனும் சாப்ளினின் கால் தூசிக்கு ஈடாக முடியாது!!
உண்மைதான், சாப்ளினின் கால் தூசி உண்மையிலேயே உயர்வானதுதான். நன்றி
அருமையா சொன்னீங்க .
நல்ல பதிவு
சாப்ளினின் மிகச்சிறந்த நகைச்சுவையாளர். அவரின் நகைச்சுவை உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். அவரை இந்த நாளில் பாராட்டுவோம்.! தேசியம் என்று கூறி மக்களை நம்பவைக்க முயலவில்லை! மக்களை நகைச்சுவைக்கு எடுத்துச்சென்று சிரிக்கவைத்தார். மக்களை தீவிர வாதத்திக்கும் பயங்கர வாத்த்திகும் உட்படுத்த முயவில்லை.
சாப்ளினின் சிறப்பு அவருடைய நகைச்சுவையில் மட்டுமில்லை.அநீதிக்கு எதிரான அவரது விடாப்பிடியான போராட்த்திலும் அதனால் அவர் எதிர்கொண்ட துன்பங்களிலும் இருக்கிறது. அவரை வெரும் நகைச்சுவை நடிகராக சுருக்குவது சரியல்ல
Very useful. Thanks Vinavu.
எந்த ஒரு போராளிகலைஞனும் தனது இல்லற வாழ்க்கையிலும் அதிகம் போராட்டங்களையே சந்தித்திருப்பான்.சார்லி – சாப்ளினின் குரலை ஒலிக்கும் இந்த கட்டுரை அதையும் அலசியிருக்கலாம். தெரிந்தவர்கள் மறுமொழியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவரின் இல்வாழ்க்கை பெருமைக்குறிய ஒன்றாக இல்லை.
அவர் தன் திரைப்பட நாயகிகள் மற்றும் வேறு பெண்கள் பலருடன் ‘ரொமான்டிக் ரிலேஷன்ஷிப்’ வைத்திருந்தார். இதற்கு சரியான தமிழாக்கம் எனக்கு தெரியவில்லை. திருமணமாகாத, விவாகரத்தான ஆண் மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வது மேலை நாகரிகத்தில் சாதாரணமானது தான். ஆனால் அவர் உறவி வைத்துக்கொண்ட, மணம் முடித்த பெண்கள் பலரும் 16 – 18 வயதிற்குட்பட்டோர். அவருக்கோ அவர்களை விட குறைந்தது 13 – 36 வயது வித்தியாசம் இருந்தது. அவரது 4ம் திருமணத்தின் போது அவருக்கு வயது 54. அவர் மனைவிக்கு 18.
இதனாலேயே அவருக்கு ‘சர்’ பட்டம் தருவதை இங்கிலாந்து தள்ளிப்போட்டு கடைசியில் ஒரு வழியாக கொடுத்தது என்றும் கூறப்படுகிறது.
ஒரு படம் பார்த்தோம் என்றால் அந்த கதாபாத்திரங்கள்நமக்கு அறம் சார்ந்த மன உறுத்தலை, உறுதியை அல்லட்கு நேர்மையை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். வெறும் ஆண் பெண் ஈர்ப்பையே மாற்றி மாற்றி படமெடுக்கும் இந்த ஆபாச தமிழ் சினிமாக்காரனுங்களை என்ன செய்யுறட்கு.? செருப்பால தான் அடிக்க வேணும்.
சார்லி ஒரு உன்னதகலை.இதற்கும் மேலே இந்தப் படத்தில் நடிக்கவும் முடியாது; தொகுக்கவும் முடியாது என்கிற அளவில் சப்ளினின் ஒவ்வொரு படமும் அமைந்திருக்கும்.