privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுடிகார 'பார்களை' விஞ்சும் குடியரசுத் தலைவர் தேர்தல்!

குடிகார ‘பார்களை’ விஞ்சும் குடியரசுத் தலைவர் தேர்தல்!

-

ஜனாதிபதி-தேர்தல்குடியரசுத் தலைவர் தேர்தலில் பட்டையைக் கிளப்பும் மூன்று பெண்கள் யார்? இந்திய பேரரசி சோனியா, வங்கத்து அரசி மம்தா, தமிழகத்து ராணி ஜெயலலிதா மூவரும் என்ன செய்வார்கள் என்ற பீதிதான் ‘ஆண்கள்’ கோலேச்சும் இந்திய ஜனநாயகத்தில் பலரையும் அலைக்கழிக்க வைக்கிறது. அந்த வகையில் இந்தத் தேர்தல் ஏதோ ஒரு வகையில் ‘பெண்ணுரிமை’க்கு இலக்கணம் படைத்திருக்கும் தேர்தல் எனலாம்.

ஒரு ரப்பர் ஸ்டாம்பை தயாரிப்பதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களா என்று நீங்கள் கேட்கலாம். மானாவாரியாக முத்திரை குத்துவதுதான் இந்த ஸ்டாம்பின் வேலை என்றாலும், கூட்டணிதான் இனி மத்தியில் எடுபடும் எனுமளவுக்கு, சமூக நீதி காத்த கட்சிகளாக கருதப்படும் சிற்றரசர்கள் ஆங்காங்கே தங்களது படை பரிபாலனங்களுடன் செட்டிலாகிவிட்ட் நிலையில், நாளைக்கே எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் ரப்பர் ஸ்டாம்ப் அப்போது மட்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கருத்தைத்தான் சோ ராமசாமியும் தெரிவித்திருக்கிறார். அதாவது இந்த இக்கட்டிலும் தமது பார்ப்பனிய மேலாண்மையை செலுத்தும் அளவுக்கு குடியரசுத் தலைவரின் குட்டியூண்டு அதிகாரம் அவருக்கு தேவைப்படுகிறது.

காங்கிரசும், பா.ஜ.கவும் கூட தமது எதிர்கால குதிரைப் பேரங்களுக்கு பிரச்சினையில்லாத ஒரு ஸ்டாம்பையே எதிர்பார்க்கிறார்கள்.  சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பில் தற்போது காங்கிரசுக்குத்தான் கொஞ்சம் பெரும்பான்மை இருக்கிறது என்றாலும் அதுவே நிம்மதியை வழங்கிவிடவில்லை. நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள் என்று தி.மு.கவை வேண்டுமானால் காங்கிரசு கருதிக் கொள்ளலாம். மற்ற ‘அடிமைகள்’ அப்படி இல்லை.

குடும்ப ஆட்சியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை எனுமளவுக்கு இந்திய அரசியல் வானம் பல குடும்ப நட்சத்திரங்களை அவ்வப்போது குட்டி போட்டது போன்று தள்ளிவிடுகிறது. உ.பி.யில் முலாயாமின் மகன் அகிலேஷ் யாதவ்தான் ஆட்சிக்கு வந்தாரென்றால் வந்த சூட்டோடு ராஜினாமா செய்த பாராளுமன்றத் தொகுதியில் மனைவி டிம்பிள் யாதவை நிறுத்தி ஏகமனதாகவும் வெல்ல வைத்திருக்கிறார். குடியரசுத் தலைவர் மற்றும் இதர காரணங்களுக்காக இந்த தேர்தலில் வேட்பாளர் யாரையும் நிறுத்தவில்லை என்று காங்கிரசு அறிவித்திருந்தது. ஆனாலும் முலயாம் சிங் யாதவ் தனது தோரணையை சற்று கூட்டிவிட்டார்.

அதுவும் அந்த தோரணை மம்தா பானர்ஜியின் பெருந்தோரணையுடன் அணி சேர்ந்து விட்டது. வங்கத்து ராணி மம்தாவோ கல்கத்தாவில் இருந்து கொண்டு சி.பி.எம்மை வீழ்த்திய பெருமை கொண்டு காங்கிரசை கேட்பார் கேள்வி இல்லாமல் வெளுத்து வாங்குகிறார். இந்த சுட்டிக் குழந்தையின் சேட்டைகளை ரசிக்கவும், கண்டிக்கவும் முடியாமல் பேரரசி சோனியா தவிக்கிறார். இவ்வளவிற்கும் மம்தா சீறிய காரணத்தால் ரயில்வே மந்திரியை மாற்றினார்கள், ரயில்வே பட்ஜெட்டை திருத்தினார்கள், மே வங்கத்திற்கு கேட்ட உதவித் தொகையை மீட்டருக்கு மேலே இமயமலை உயரத்தில் போட்டுக் கொடுத்தார்கள்.

ஆனாலும் இந்த அரசிகள், பேரரசி, குறுநில மன்னர்கள் பொறுக்கித் தின்னும் ஜனநாயக அரசியலில் கொட்டை போட்டவர்கள் என்பதால் பெருச்சாளிகள் ஒன்றாக சேர்ந்து முடிவெடுக்க திணறுகின்றன. பலரது சுயநலங்களும் பல்வேறு திட்டங்களோடு பொது நன்மை குறித்து பேசிக் கொண்டால் அங்கே வெட்டு குத்து நடக்குமா, இல்லை வேடிக்கை விளையாட்டு நடக்குமா? இரண்டும் நடக்கின்றன என்பதுதான் இந்த ரப்பர் ஸ்டாம்ப் தேர்தலின் சுவராசியம்.

2014 பாராளுமன்றத் தேர்தலில் ஒரு கிங் மேக்கராக இருந்து கொஞ்சம் அதிர்ஷடமும்  கூடினால் பிரதமர் எனும் அந்த இலட்சியத்தை வீழ்த்தி விடலாம் என்று கணக்கு பண்ணும் ஜெயலலிதா முந்திக் கொண்டு பி.ஏ.சங்மாவை அரங்கிற்கு கொண்டு வந்தார். கூடவே பிஜூ ஜனதா தளத்தின் முதல்வர் நவீன் பட்நாயக்கும் அதற்கு பக்க வாத்தியம் வாசித்தார். ஒடுக்கப்பட்டோர் நலன் என்ற பெயரில் தனது பழங்குடி அடையாளத்தை முன்வைத்தும் சங்மா கச்சேரியை துவக்கினார். சங்மாவால் ஒன்றும் ஆகாது என்றாலும் புது தில்லியில் தனது பேரத்திற்கு ஒரு மதிப்பு வேண்டும் என்பதுதான் ஜெயாவின் கணக்கு. இந்த கணக்கில் தான் வெறும் பூஜ்ஜியத்தின் மதிப்பைத்தான் கொண்டிருக்கிறோம் என்பதும் சங்மாவுக்குத் தெரியும். எனினும் சில பல குருட்டு அதிர்ஷங்கள் கூடி வந்தால் ராஷ்டிரபதி பவனில் குடியேற முடியாதா என்பது அவர் கனவு.

ஆனால் இந்தக் கனவை அவரது கட்சித் தலைவர் சரத்பவாரே குப்பையில் எறிந்து விட்டார். மற்றபடி இந்திய அரசின் துணை இராணுவப் படைகள் மத்திய இந்தியாவில் பழங்குடிகளை வேட்டையாடும் நிலையில் அதே பழங்குடி மக்களின் நலன் என்ற பெயரில் சங்மா நடத்தும் ஆபாசத்தை அடையாள அரசியல் பேசும் முற்போக்காளர்கள் எவரும் கண்டிக்க வில்லை. ஏனெனில் அந்த அணுகுமுறையில் அவர்களுக்கும் சங்மாவுக்கும் வேறுபாடில்லை.

ஜெயாவின் ஆளுமை மூட்டைகளில் பெருமளவை வைத்திருக்கும் மம்தா பானர்ஜியும் மத்திய மந்திரியாக இருந்து மாநில முதலமைச்சராக மாறியவர். இரண்டிலும் தனது பிடி இருக்க வேண்டுமென்றால் போட்டியில் ஒரு ஆளாக பேசப்படவேண்டும் என்பதில் கருத்தாகவே இருக்கிறார். சோனியாவைப் பொறுத்த வரை அடுத்த தேர்தலில் தனது சீமந்த புத்திரன் ராகுலை பிரதமராக்க வேண்டுமென்றால் கூட்டணி கணக்குகளில் பிரச்சினை வந்தாலும் நேர் செய்வதற்கு ஒரு நம்பிக்கையான பெருச்சாளித்தனம் கலந்த ரப்பர் ஸ்டாம்ப் வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அந்த ஸ்டாம்ப் யார் என்பதைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரசு காரியக் கமிட்டி சோனியாவுக்கு அளித்திருக்கிறதாம். இந்த சர்வாதிகரத்திற்குப் பெயர்தான் ஜனநாயகமாம். இதையே தி.மு.கவிலோ, இல்லை அம்மா தி.மு.கவிலோ செய்தால் அதை இளக்காரமாகப் பார்ப்பார்கள்.

அந்த வகையில் சோனியா தேர்வு செய்த நபர் பிரணாப் முகர்ஜி. வெளிநாட்டிலிருப்பதெல்லாம் கருப்பு பணமில்லை என்று கூறுமளவுக்கு இவர் பெரும் பெருச்சாளிதான் சந்தேகமேயில்லை. மேலும் இவர் வங்கத்தவர் என்பதால் மம்தாவின் ஆதரவையும் சுலபத்தில் பெற்று விடலாம் என்று சோனியா நினைத்திருக்கக் கூடும். ஆனால் மேற்கு வங்கத்தில் காங்கிரசு ஆதரவு இல்லாமலேயே மம்தா உள்ளாட்சித் தேர்தலில் வென்றிருப்பதால் கல்கத்தாவைப் பொறுத்த வரை காங்கிரசை முகவரி இல்லாமல் செய்ய விரும்புகிறார். ஆனால் தேசிய அளவில் பலன்களை பெறுவதற்கு மட்டும் காங்கிரசு தேவை என்ற அளவில் கூட்டணியில் தொடருகிறார், தொடர்ந்து தொல்லைகளையும் கொடுக்கிறார். ஆதலால் பிரணாப்பின் வங்காளி இமேஜால் இங்கு பருப்பு வேகவில்லை.

நேற்று சோனியாவைச் சந்தித்த மம்தா பானர்ஜி செய்த  முதல் வேலை முகர்ஜியின் பெயரை நீக்கியதுதான். அந்த அதிர்ச்சியிலிருந்து சோனியா மீளுவதற்குள் மம்தா மூன்று பெயர்களை குடியரசு தலைவர் தேர்தலுக்காக முன்வைத்தார். அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோமநாத் சாட்டர்ஜி என்ற அந்த மூவர் பெயரில் மன்மோகன் சிங் பெயரைப் பார்த்து அடுத்த அதிர்ச்சி வந்திருக்கும். பிரதமர் என்ற பதவியில் சும்மா இருப்பதைப் போன்று ஒரு பாவனையில் பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளுக்கு பரபரப்பாக அடிமை உத்தியோகம் செய்யும் மன்மோகன் சிங்கின் ‘அமைதி’ மம்தாவுக்கு பிடித்திருக்குமோ?

இல்லை இந்த முறையோடு வீட்டுக்கு போய்விடும் அவருக்கு மற்றுமொரு ஐந்து ஆண்டுகள் பவனில் உலா வரலாம் என்ற ஆசையை காண்பிக்கலாம் என்று நினைத்திருப்பாரோ? ஆனாலும் ஒரு பிரதமர் பதவி வகித்திருப்பவரை உடனே குடியரசுத் தலைவர் என்ற ரப்பர் ஸ்டாம்பில் குந்த வைக்க நினைத்ததின் மூலம் மன்மோகனை வரலாறு மறக்க முடியாத அளவுக்கு கேலி செய்திருக்கிறார் மம்தா.

சி.பி.எம்மை சிரிப்பாய் சிரிக்க வைத்த சோமநாத் சட்டர்ஜியின் பெயர் இயல்பாகவே மம்தாவின் லிஸ்ட்டில் இருப்பதற்கு எல்லா நியாயமும் உண்டு. சி.பி.எம்மை போட்டுத்தாக்குவதற்கு இந்த அடிமை நிறைய பயன்படுவார் என்றும் மம்தா நினைத்திருக்கலாம். ஆனாலும் என்ன, பாராளுமன்ற சபநாயகர் என்று பெருமையோடு கூடவே குடியரசுத் தலைவர் என்ற மகா பெருமையும் பலித்து விடுமோ என்று வழக்கத்திற்கு மாறாக ஐந்து ரசகுல்லாக்களை அவர் முழுங்குவதாக கொல்கத்தா செய்திகள் கூறுகின்றன.

தங்கள் ஆளை வைத்து தங்களையே கேலி செய்யும் இந்த துன்பியல் காட்சியின் மேடையில் அவஸ்தைப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்னமும் முடிவெடுக்க வில்லையாம். இவர்கள் முடிவு எவரையும் பாதிக்காது, யாரும் சீண்ட மாட்டார்கள் என்ற யதார்த்தம் தெரிந்திருந்தும் நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய துர்பாக்கிய நிலை. இதில் வலது கம்யூனிஸ்ட் பரதன், ஒரு தலித் பெண் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று அடையாள அரசியலின் அடுத்த பம்பரை போட்டிருக்கிறார். பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இதை விட கேலி செய்ய முடியுமா என்ன?

பரமக்குடி தலித்துக்களை சுட்டுக் கொன்ற பாசிச ஜெயாவை சமீபத்தில் இரண்டு வலதுகள் தா.பாண்டியன், நல்லக்கண்ணு இருவரும் சந்தித்தனராம். அதுவம் மானங்கெட்டு புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அவரை ஆதரிப்பது என்று. முத்துராமனின் ஆவி மட்டுமல்ல, உயிரோடு இருக்கும் எவரும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள். இந்த இலட்சணத்தில் இவர்களது தேசியத் தலைமை தலித் பெண் என்ற ஒடுக்கப்பட்டவர்களின் அஸ்திரத்தை எடுத்திருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.கவில் ஒரு தலித் பெண் முதலமைச்சராக வேண்டும் என்று இவர்கள் கோரினால் என்ன நடக்கும்? கைது செய்யப்பட்ட வலதுகளின் சீதபேதியும், வாந்தி பேதியும் தமிழக சிறைகள் முழுக்க மணக்கும்.

மம்தா குறிப்பிட்ட முதல் நபரான அப்துல் கலாம், ஏற்கனவே பாரதிய ஜனதாவால் கொண்டு வரப்பட்டவர். ராஷ்டிரபதி பவனில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி இந்தியா முழுவதும் குழந்தைகளை துன்பப்படுத்தும் ஒன்றைத் தவிர வேறு எதுவும் இவர் செய்ததில்லை. 2002 குஜராத்தில் இவர் மவுனமாக இருக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கே இவருக்கு பிடிக்கும். ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தத்தையே இந்தியா வல்லரசாகும், ஏழைகள் பணக்காரர்களாகலாம் என்று இவர் நடுத்தரவர்க்கத்தின் மூளையில் செல்வாக்குடன் குடியேறியதை வைத்து இவருக்கும் ஒரு இடத்தை ஊடகங்கள் வைத்திருக்கின்றன. எல்லா அரசவைகளிலும் ஒரு கோமாளிக்கு எப்போதும் இடம் உண்டுதானே? ஆனாலும் இந்தக் கோமாளியின் சிரிப்பை உணர்ந்தவர் அதிகமில்லை என்பது நமது நாட்டின் ரசனைக் குறைவைக் காட்டுகிறது.

ஆனாலும் இவர் காங்கிரசு கும்பலால் விரும்பப்படவில்லை. மற்றவர்கள் ஏற்றுக் கொண்டால் இந்த முசுலீம் பெயரில் இருக்கும் “ஐயரை” மீண்டும் அரியணையில் ஏற்றுவதற்கு பா.ஜ.கவும் விரும்புகிறது. ஆனால் அண்ணலின் சிந்தனையோட்டம் என்ன? கருத்து வேறுபாடுகளின்றி அனைவரும் ஏகமனதாக ஏற்கும் பட்சத்தில் பெரிய மனதுடன் ராஷ்டிரபதி பவனில் ஸ்டாம்ப் குத்தும் வேலையை செய்வேன் என கலாம் கருதுவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனவாம். அப்துல் கலாமுக்கெல்லாம் நெருங்கிய வட்டாரங்கள் இருக்கின்றன என்றால் பவர் ஸ்டாருக்கு 50 இலட்சம் இரசிகர்கள் ஏன் இருக்கக் கூடாது?

ஆனாலும் அப்துல் கலாமின் இந்த ஏகமனது  பிரச்சினை ஒரு கணக்கு பிரச்சினைதான். அதாவது பாரதிய ஜனதாவுக்கு இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடையாது. இடதுசாரிகள், மம்தா, முலாயம், ஜெயா போன்றோரது தயவு இருந்தால் மட்டுமே களத்தில் ஓட முடியும். ஆக பெரும்பான்மை தொகையில் சில எண்கள் குறைகிறது என்பதால்தான் அய்யா கலாம் இப்படி ஒரு நிபந்தனையை போடுகிறார். இந்த நிபந்தனை ஏற்கும் பட்சத்தில் கணக்கும் வந்து விடும், பெயரும் வந்து விடும். என்ன ஒரு தொலை நோக்கு!

ஆனாலும் ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆத்தும் கதையாக தானைத் தலைவர் கருணாநிதியின் இடம் சரிந்து விட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் சோனியா அடையாளம் காட்டும் நபரின் காலில் விழுந்து ஆதரிப்போம் என்று வலிந்து பலமுறை சொன்னாலும் கூட இவர்களுக்கு புது தில்லியில் மதிப்பில்லை. மம்தாவும், முலாயமும், ஜெயாவும் புழுதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வேளையில் தி.மு.கவால் ஒரு துணுக்கைக் கூட கிளப்ப முடியவில்லை. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் அமைச்சர் பதவிகளை பெறுவதற்கு வீரம் காண்பித்த மறத் தமிழர்கள் இப்போது மண்ணாங்கட்டி தமிழர்களாக அவதிப்படுகிறார்கள். மறத்தின் மறுபாதிதான் மண்ணோ!

இதற்கு மேல் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பதிவுலகில் அண்ணன் பத்ரிதான் பெருமளவு கவலைப்படுகிறார். ஒரு வேளை எதிர்காலத்தில் பத்ம ஸ்ரீ, பூஷன் முதலான விருதுகளை வாங்குவதற்கு அங்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற தொலை நோக்கு கணக்கைத் தவிர அவர் இதில் அலட்டிக் கொள்வதற்கு வேறு காரணங்களை யோசித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. கலைமாமணியின் தேசிய அடையாளத்திற்கு கூட இந்த நாட்டில் ரசிகர் கூட்டம் இல்லாமலா போய்விடும்?

குடியரசுத் தலைவர் பதவி கிடைத்து விட்டால் மாளிகை வாசம், வெளிநாடுகளில் சுற்றுலா பயணம், மாலை நேர விழாக்கள், கலைஞர்கள் – விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்குவது, குடியரசு நாளன்று கொடியேற்றுதல் என்று ஒரு நேர்த்தியான வாழ்க்கை இங்கிருக்கிறது.  இதற்கெல்லாம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் செலவிடப்படுகிறது என்று பார்த்தால் உலகிலேயே காஸ்டிலியான ரப்பர் ஸ்டாம்ப் இதுதானென்று அடித்துச் சொல்லலாம்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 1. One of the best! நக்கல் நையாண்டி எனக்கு மிக மிக பிடிக்கும்; எனக்கு பிடித்த சில வரிகள்:

  1). ஒரு ரப்பர் ஸ்டாம்பை தயாரிப்பதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களா என்று நீங்கள் கேட்கலாம். மானாவாரியாக முத்திரை குத்துவதுதான் இந்த ஸ்டாம்பின் வேலை என்றாலும்…
  2). ஆனாலும் இந்த அரசிகள், பேரரசி, குறுநில மன்னர்கள் பொறுக்கித் தின்னும் ஜனநாயக அரசியலில் கொட்டை போட்டவர்கள் என்பதால் பெருச்சாளிகள் ஒன்றாக சேர்ந்து முடிவெடுக்க திணறுகின்றன…
  3).அந்த வகையில் சோனியா தேர்வு செய்த நபர் பிரணாப் முகர்ஜி. வெளிநாட்டிலிருப்பதெல்லாம் கருப்பு பணமில்லை என்று கூறுமளவுக்கு இவர் பெரும் பெருச்சாளிதான் சந்தேகமேயில்லை (this is best!)

 2. எனது தேர்வு:
  1) கவுண்டமனி
  2)குலுக்குநடிகை ஜெயமாலினி
  மேற்கண்ட 2 ம் வேண்டாம் என்றால்……
  பல்லடம் பேருந்துநிலையம் அருகே…பல்லு போன கிழவி ஒருத்தி இருக்கிராள்…
  ஜனாதிபதி தேர்வுக்கு இதைவிட சிறந்த ஆதள் கிடைப்பது அரிது……

 3. President of India is first Citizen of India and he enjoys all benefits in New Delhi or whever he goes…but he is a rubber stamp…He cannot act on his own…Even in the case of considering Mercy petitions petitions received from the perosn who face the Capital punishments/Death Penalty…he is at the mercy of the Home Ministry…He is not empowerd to call for the files..he cannot question the delay in deciding the cases…An under secretary to the Govt. of India will sign for and on behalf of the Presidetn of India…so who comes as President is not going to change the Policy of the union Govt..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க