Saturday, July 20, 2024
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்மதுரவாயல் சிறுவன் பலி! போராடிய மக்கள் மீது தடியடி!

மதுரவாயல் சிறுவன் பலி! போராடிய மக்கள் மீது தடியடி!

-

சென்னை பேக்கேஜிங் முதலாளியின் லாபத்திற்காக சிறுவன் பலி! போராடிய மக்கள் மீது தடியடி!

போராடிய மக்கள் மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் தாக்குதல்!

மதுரவாயல்-பிரவீண்
பலியான சிறுவன் பிரவீண்

துரவாயல் ஏரிக்கரை பகுதி – அது எப்போதும் போலவே இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி. பெற்றோர்களெல்லாம் வேலையை விட்டு வீடுகளை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம் . குழந்தைகளோ இரண்டு நாள் விடுமுறை மகிழ்ச்சியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்படி விளையாட்டு மைதானத்தில் விளையடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரவீண் அருகில் சிறுவர்கள் விளையாடும் தெர்மாகோல் நிறுவனத்திற்கு பக்கத்தில் எப்போதும் போல நண்பனுடன்  விளையாடச் சென்றான். அவர்கள் செல்லும் போதும் அந்த சென்னை பேக்கேஜிங் என்ற  தெர்மாகோல் நிறுவனம் மிகவும் அமைதியாக இருந்தது.

அது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் சின்னம் என்பதோ தன்னுடைய உயிர் இங்குதான் போகப்போகிறது என்பதோ அவன் அறியவில்லை. ஓடிக்கொண்டே இருந்த அவன் கீழே கிடந்த தெர்மாகோல் மீது காலை வைத்தவுடன் “ அய்யோ” என்ற குரல் வீறிட்ட படியே அதனுள் விழுந்தான். அப்போது தான் தெரிந்தது, அது  நான்கு அடிக்கு இருபது அடி அகலம் ஆழமுள்ள அந்த நிறுவனத்தின் கழிவு நீர் தொட்டி; அது சுற்றுச்சுவர் இல்லாமல்  பார்ப்பதற்கு மண்ணோடு மண்ணாகவே எப்போதும் காட்சியளிக்கும் . பிரவீணோடு வந்த சிறுவன் அவர்கள் வீட்டில் போய் சொன்னவுடன் பெற்றோரும் அப்பகுதி மக்களும் அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தனர்.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் 8 மணியளவிலே தாமதமாக வந்தார்கள். தீயணைப்புத் துறை ஊழியர்கள் வந்து கூறியபோது தான்  அம்மக்களுக்கே தெரிய வந்தது ” இந்த நிறுவனம் இவ்வளவு நாள் அமைதியாக இருந்த்தே அம்மக்களை கொல்வதற்குதான்” என்று. தெர்மாகோல் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் ரசாயனக்கழிவு என்பது அதிகபட்ச வெப்ப நிலையில் உள்ளதாகும். கம்பெனி சட்டப்படி அந்த ரசாயனக்கழிவை கண்டிப்பாக குளிரூட்டித்தான் கழிவு நீர் தொட்டியில் அனுப்ப வேண்டும் என்பதும், அந்த கழிவு நீர் தொட்டிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்பதும் விதியாகும்.

தாமதமாக வந்த தீயணைப்புத்துறை கொதிக்கின்ற ரசாயனக்கழிவை கண்டவுடன் பயந்து போனது. முதலில் ரசாயனக்கழிவை வெளியேற்றி பின்னரும் தொடர்ந்து புகையாக வந்த்தால் தீயணைப்பு வீரர்கள் அச்சமடைந்தனர். பின்னர்  நீரை செலுத்தி அந்த இடத்தை குளிரூட்டிய பின்னரே அதில் இறங்கி சிறுவனை உடல் முழுக்க வெந்து போன நிலையில்  பிணமாக வெளிக் கொணர்ந்தனர்.

ஏற்கனவே ஆடுகளும் மாடுகளும் இந்த தொட்டியில் இறந்த போதும் பல முறை சென்னை பேக்கேஜிங் முதலாளி லோகநாதனிடம் முறையிட்ட போதும் அவர்  நிறுவனத்தை சுற்றி சுற்றுச்சுவரோ கழிவு நீர்த்தொட்டிக்கு சுற்றுச்சுவரோ அமைக்கவில்லை. இந்த நிலையில் இந்த சிறுவன் இறந்த பின்னர்  மதுரவாயல் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்த பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலாளிக்கு சேவை செய்யும் போலீசை கண்டித்தும் லோகநாதனை உடனே கைது செய்யக் கோரியும் பூந்தமல்லி நெடுஞ்சாலையை அப்பகுதி மக்கள் 400க்கும் மேற்பட்டவர்கள்  முற்றுகையிட்டனர்.

காவல்துறையோ “FIR போட்டாச்சு கிளம்புங்க” என்று கூற மக்களோ அந்த தெர்மாகோல் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும், அந்த முதலாளியை கைது செய்யவேண்டும், அதை துணை ஆணையர்  கைப்பட எழுதிக் கொடுக்க வேண்டும், போலீசை நம்ப முடியாது என்றும் அறிவித்தனர். இந்த நிலையில்  பகுதியில் செயல்படும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் சிதறிக்கிடந்த மக்களை ஒன்றுபடுத்தி மறியலை முறைப்படுத்தி ”கைது செய், கைது செய்,  லோகநாதனை கைது செய்” என்று முழக்கமிட்டனர். அந்த முழக்கம் மக்களின் முழக்கமானது.

துணை ஆணையரோ ”ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணியாச்சு, கம்பெனிய இழுத்து மூடுனா   மக்களுக்கு வேலையில்லாம போகும் , எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன் வாங்க” என்றார். மக்கள் அதை ஏற்க மறுத்து உறுதியாய் அந்த முதலாளியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

மதுரவாயல்-பிரவீண்-3

இதற்கிடையில் 23ம் தேதி மதியம்  3 மணிக்கு தொடங்கிய மறியல் 4.30 வரை நீடித்தது. அச்சாலையில் தொடங்கிய நெருக்கடி சென்னை முழுக்க சாலை நெருக்கடியானது.  பிரச்சினையை கேள்விப்பட்டு இணை ஆணையர் பகுதிக்கு வந்தார் “சென்னை முழுக்க டிராபிக் ஜாம், சிஎம்  ரூட்ல கூட டிராபிக், நான் பைபாஸ்ல தான் வந்தேன்” என்ற கூறியபடி உடனே லத்தி சார்ஜ்க்கு ஆணையிட அந்த இடத்தில் இருந்த மக்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்தது காவல்படை. மக்கள் சிதறி ஓடிய போதும் பு.மா.இ.மு தோழர்கள் உறுதி குலையாமல் முழக்கமிட்டபடி மக்களை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சித்தார்கள்.

தோழர்கள் மீது  திட்டமிட்டு வெறித்தாக்குதல் நடத்தி அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்ற காவல்துறை முயன்றது. குண்டாந் தடிகளால் தாக்கிய போதும் யாரையும் வாகனத்தில் ஏற்ற முடியவில்லை,   “எங்களுக்காக வந்தவர்களை ஏய்யா அடிக்குற” என்றகூறிய படி தோழர்களை காத்தார்கள் மக்கள். அவர்கள் மீது இரண்டாவது முறையாக தடியடி தாக்குதல் நடத்தப்பட்டது. தோழர்கள் ஐந்து பேர்களோடு பகுதி மக்கள் நால்வரும்  அடித்து துவம்சம் செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள்.

அதுவரை அந்த முதலாளியை கைது செய்யாத போலீசு மக்கள் மீது தடியடி நடத்திய பின்னர், கணக்கு காட்டுவதற்காக அவனை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து காவல்துறை அதிகாரிகள் அறையில்  தங்க வைத்து உறங்கவும் வைத்திருந்தது. குழந்தையை இழந்து போராடிய மக்கள் மீதும் அதற்கு ஆதரவாக போராடிய தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்திய போலீசு கொலைக்கு காரணமான முதலாளியை பத்திரமாக சிறையிலடைக்காமல் வெளியே அனுப்பி பாதுகாத்தது.

காவல் நிலையத்திற்கு வெளியே மக்களும் பகுதி தோழர்களும் கூடியதால்  கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் பின்னர் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட தோழர்களை அப்பகுதி இளைஞர்கள் கட்டியணைத்து வாழ்த்தினர். “எங்க பிரச்சினைக்கு நீங்க வந்தீங்க, நாங்களாவது ஓடினோம், நீங்க நின்னு அடி வாங்குனீங்க” என்று அவர்கள் கூறியதற்கு தோழர்களோ “மக்கள் பிரச்சினைக்கு இப்படித்தான் போராட முடியும், போலீசு நீதிமன்றம் எப்பவுமே மக்களுக்காக இருந்ததில்லை”  என்பதை ஆழமாக பதிய வைத்தார்கள்.

மரணமடைந்த அச்சிறுவனின் தாய் “அந்த கம்பெனிக்கு காம்பவுண்ட் போடனும், அந்த முதலாளியை கைது செய்யணும், அப்படி எதுவும் நடக்கலைன்னா அந்த தொட்டியில விழுந்து நான் தற்கொலைதான் பண்ணிக்குவேன். எங்க பையன் மாதிரி யாரும் விழுந்து சாகக்கூடாது ”  என்றூ கதறினார். அந்த சிறுவனின் தந்தையோ  “என் பையன் இந்த சாலையில்தான் ஓடி விளையாடினான், இந்த மக்கள் தான் என் பையனை வளர்த்தாங்க , அவங்கதான் சாலையை மறிச்சாங்க , போலீஸ் அந்த முதலாளியை கைது செய்யாம இருந்ததுதான் எல்லாவற்றுக்கும் காரணம், எங்களுக்காக போராய உங்களுக்கு ரொம்ப நன்றி” என்றபடியே  தழுதழுத்தார்.

மதுரவாயல்-பிரவீண்-2

உடல் முழுவதும் போலீசின் தாக்குதலால் துவண்டு போயிருந்த போதும்  லத்திக்கம்பினால் வீங்கிப்போயிருந்த தன் கால்களை தேய்த்து விட்டபடியே சக தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் ஒரு தோழர் “ போலீசு, நீதிமன்றம் யாருமே மக்களுக்காக இல்லை. எல்லாம் மக்களை சுரண்டுவதற்குத்தான் . இதைத்தான் மக்கள்கிட்ட சொல்லணும். மக்களுக்கு பிரச்சினைன்னா இப்படி உடனடியாக தலையிட வேண்டும். இதைத்தான் இந்த போராட்டம் கத்துக் கொடுக்குது” என்றார்.

இலாப நோக்கம் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழும் முதலாளிகள் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. இதை போபால் விஷவாயுப் படுகொலை துவங்கி பலவற்றில் பார்த்திருக்கிறோம். அத்தகைய முதலாளித்துவ பயங்கரவாதம்தான் மதுரவாயிலில் ஒரு சிறுவனை பலிவாங்கியிருக்கிறது. இந்த அநீதியை  மக்கள் தட்டிக் கேட்டதும் போலீசு லத்தியோடு வந்து தடியடி செய்கிறது. எனில் இந்த அரசையும், போலீசையும், நாம் எந்த தருணத்திலும் நம்ப முடியாது.

தனிப்பட்ட முதலாளியின் படுகொலையை எதிர்த்து போராடிய அந்த மக்கள் விரைவிலேயே இத்தகைய முதலாளிகளை பாதுகாக்கும் இந்த அமைப்பு, அரசுகளையும் எதிர்த்து போராடுவார்கள். அன்று நாம் நமது சிறுவர்களை பலி கொடுக்க நேரிடாது.

_________________________________________________________

தகவல்: புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, சென்னை.    
_________________________________________________________________

 1. லாப வெறி உயிர்களைக் காவு வாங்க எங்கெல்லாம் பதுங்கியிருக்கிறதோ.. பிரவீணின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.

  வெள்ளைக்காரன் போய் கொள்ளைக்காரன் வந்தாலும், தடியடிக்கு அஞ்சாத, தன்னலம் இல்லாத, நெஞ்சுறுதி மிக்க இளைஞர்கள் விடுதலைப் போராட்டகாலத்தில்தான் இருந்தார்கள் என்றில்லை, இப்போதும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை மக்களுக்கு இந்தப் போராட்ட நிகழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. வாழ்த்துக்கள்.

 2. கொடுமையப்பா கொடுமை. எல்லோரும் நம் வேலைகளை (என்னையும் சேர்த்து தான்) பார்த்துக்கொண்டு
  இந்த கம்பனிகளுக்கு துணை போகிறோம். தெருவில் இறங்கி அரசியல் இல்லாமல் போராடியவர்களுக்கு மிக்க நன்றி.
  பெற்றோர்களுக்கு எப்படி என்ன ஆறுதல் கூறுவது?

 3. “அஞ்சி அஞ்சி ஆவதென்ன அடங்கியாதால் லாபமென்ன ”
  நெஞ்சிலே துணிவிருக்கு போராடு
  அது நெருஞ்சி முள் தான் பிடுங்கி எடு வேரோடு”

  இந்த பாடல் தான் நியாபகம் வருகிறது.

 4. நாய்கள் நன்றியுள்ளவை ஆனால் போலீசு நாய்கள் நன்றி இல்லாதவை.மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களையே கடித்துக் குதறும்.மக்கள் விரோதிகளாகிய முதலாளிகளுக்கு வாலாட்டும்.இதை மக்களுக்கு நன்கு புரிய வைக்கிற தென்பு பு.மா.இ.மு.போன்ற புரட்சி அமைபுகளுக்கு தான் உண்டு.போராட்டம் தொடரட்டும்,வெல்லட்டும்.

 5. “சென்னை முழுக்க டிராபிக் ஜாம், சிஎம் ரூட்ல கூட டிராபிக், நான் பைபாஸ்ல தான் வந்தேன்” — சும்மா பில்டப் கொடுக்காதே…

  அவனவன் எடத்துல அவன் என்னவோ கொட்டிட்டு போரான்.. இந்த பசங்க எதுக்கு அங்க போயி எழவு கூட்டனும்? முதல்ல புள்ளய ஒழுங்கா வளங்கப்பா… இந்த அழகுல இவன் ஆத்தாவும் அந்த தோட்டிக்குள்ள குதிக்கப் போராளாம்…சாவு கிராக்கிங்க…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க