privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்திருட்டு 'தம்'மினால் பிரபலமான கடவுள்!

திருட்டு ‘தம்’மினால் பிரபலமான கடவுள்!

-

சுடலை

 

சக்கிவிளை சுடலை மாடனைத் தெரிந்தவர்களாயிருந்தால் ஒரு கணம் லேசாக விக்கித்துப் போவார்கள். உண்மையில் சுடலைமாடன் மட்டுமில்லையென்றால் எசக்கிவிளை என்கிற பெயரே வெளியே தெரியாமல் போயிருக்கும். இன்றைக்கும் மதுரையிலிருந்தும், சென்னையிலிருந்தும் யார் யாரோ விசாரித்துக் கொண்டு எசக்கிவிளைக்கு வருகிறார்களென்றால் அதற்கு சொடலைமாடன் மட்டும் தான் காரணம்.

முன்பெல்லாம் ஊருக்கு ஒழுங்கான சாலை கூட இருக்காது. நீங்கள் திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் வந்து அங்கே 2ம் நெம்பர் பஸ்ஸைப் பிடித்து துலுக்கப்பட்டியில் இறங்க வேண்டும். பின், கண்ணநல்லூர் பாதையில் நாலு கிலோ மீட்டர் நடந்து வந்து, சொரிமுத்தான் கோயிலருகே நம்பியாற்றைக் கடக்க வேண்டும். மழைக்காலமென்றால் பெரும்பாடு தான். அப்புறம் ஒரு மணி நேரம் நடைக்குப் பின் தான் ஊரே தென்படும். இப்போது சொடலையின் புண்ணியத்தில் நம்பியாற்றின் குறுக்கே ஒரு பாலம் தோன்றியிருக்கிறது. வள்ளியூரிலிருந்து நேரே பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை டக்கர் வண்டிகள் வந்து போகிறது.

இந்த மாற்றங்களும் சுடலைமாடனின் புகழ் பரவியதும் கடந்த பத்தாண்டுகளில் நடந்தேறியவை. இதற்குப் பின் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது நண்பர்களே. இத்தனை வருடங்களாக வெளியே யாரிடமும் சொல்லாத அந்தக் கதையை இப்போது சொல்கிறேன். அது ஒரு வினோதமான சம்பவத்திலிருந்து துவங்கியது.

***

ந்த சம்பவம் நடந்து சுமார் பன்னிரெண்டு வருடங்கள் இருக்கும். எசக்கிவிளை சுடலைமாடன் ஒரு துடியான சாமி என்பதை ஊரார்கள் அறிவார்கள் தான்.. ஆனாலும் அன்றைக்கு அவருக்கு அத்தனை மவுசு இல்லை.  ஊரில் இருந்த 300 குடும்பங்களில் மூன்றில் ஒருபங்கு கிறித்தவர்கள், அடுத்த ஒருபங்கு அய்யா வழியினர் மீதம் ஒருபங்கு இந்துக்காரர்கள். ஒரு கிறித்தவ தேவாலயமும், பெருமாள் கோயிலும் அய்யாவழிக் கோயிலும் ஊரினுள் இருந்தது. சுடலைமாடன் அங்கேயிருந்த எல்லா குடும்பங்களுக்கும் குலசாமி – கிறித்துவர்கள் கூட கொடை கொடுப்பார்கள். ஆனாலும் அவர் ஊருக்கு வெளியே தள்ளி வைக்கப்பட்டிருந்தார்.

என் நண்பன் பூசப்பன் என்கிற பேச்சிமுத்தானின் குடும்பம் தான் சுடலை கோயிலுக்கு பரம்பரை பரம்பரையாக பூசாரியாக இருந்து வந்தனர். பூசணிக்கு கையும் காலும் முளைத்தது போன்ற ஒரு தோற்றத்தின் காரணமாக பேச்சிமுத்தானுக்கு பூசணியப்பன் என்கிற பெயர் விளங்கியது – பின் பேச்சு வழக்கில் திரிந்து பூசப்பன் – பூசன் என்பதாக மாறியது. அது கிடக்கட்டும், பூசப்பன் ஒரு சுவாரசியமான பேர்வழி. எங்கள் செட்டு தான். எங்கள் பையன்களிலேயே அவன் கொஞ்சம் வெளிர் நிறம். உருண்டு திரண்ட உடல் வாகு. அவனிடம் ஒரு நல்ல பழக்கமும் இரண்டு கெட்ட பழக்கங்களும் இருந்தன.

நல்ல பழக்கம் என்பது தினசரி காலையிலேயே திருநீரை தண்ணீரில் குழப்பி பட்டையடித்துக் கொள்வான் – அது சாயந்திரம் வரை அழியாமல் ஒரு தெய்வகடாட்சமான முகத்தை அவனுக்குத் தரும். மற்றபடி, மாதம் ஒருமுறை குளியல் வாரம், ஒருமுறை பல்துலக்குவது என்பதில் அவன் வைராக்கியமாக இருந்தான். கொடை சமயத்தில் மாடன் இறங்கி குறி சொல்வான் – நண்பர்கள் என்பதால் கூட்டத்தோடு எங்களைத் தான் அருகில் அழைப்பான். அந்தக் கொடுமை தாளாமல் ஒரு முறை கேட்டே விட்டேன்,

“பல்லு வெளக்கினா தேய்ஞ்சாலே போவும்?”

“போங்கடே, ஊர் பெருமாளு கோயில் ஐயரே குளிக்க மாண்டேங்கான்.. அவம் மணிய வேகமா அடிக்கச்சுல லேசா வாடை வரும் பாத்திருக்கியாலெ… அந்த நேரமா பாத்து தாம்லே வெடிய போடுதாம்.. பேரு தாம்லே பெருசா ஐய்யர்ர்ரூ… வள்ளியூர் மாணிக்க அண்ணாச்சி ஓட்டல்ல நல்லா கிடா கறிய தின்னுபிட்டு இங்க பெருசா ஆட்டிக்கிட்டு வாராம்லே”

“சவத்த அவன் கெடக்காம்லே.. நீ பல்லு வெளக்கி குளிச்சி எடுத்து இருக்க வேண்டியது தான? நீயும் பூசாரி தானடே?

“அது…  எனக்கு குளிச்சா தண்ணி சேர மாண்டேங்கி பாத்துக்க..  திரேகத்தில ஒரே சொரிச்சலா எடுக்கு. வாய்ல ஈரெல்லாம் ஒரே புண்ணா கெடக்கு.. அதாம் பல்லு வெளக்க முடியல்ல… விடுலா.. அந்தாம் பெரிய யானையே பல்லு வெளக்க மாண்டேங்கி நமக்கு என்னலே?”

“நாத்தம் தாங்காம மாடன் செவுட்டுல ஒரே போடா போடப் போறாரு பாத்துக்க..”

பத்தாம் வகுப்பு வரை எங்களோடு தான் படித்தான். அதன் பிறகு இரண்டு வருடங்களாக அப்பாவிடம் பயிற்சி எடுத்து  வந்தான். அப்போது நான் பாளையம்கோட்டையில்  தங்கியிருந்து டிப்ளமோ படித்து வந்தேன். வார இறுதியில் கூட ஊருக்கு வரக்கூடாது என்று ஐயா சொல்லியிருந்தார். ஊரில் எனது கூட்டாளிகள் அப்படி. செமஸ்டர் லீவுக்கு மட்டும் தான் வருவேன். வந்தாலும் ஐயாவுக்குத் தெரியாமல் தான் வெளியே போக முடியும். அப்போதே திருட்டுத் தனமாக புகைக்கும் வழக்கம் உண்டாகியிருந்தது.

நான், ஜெபராஜி, வில்சன், சந்திரன், பூசப்பன், கிராம்ஸ் மகன் மருதமுத்து என்று ஜமா சேர்வோம். ஜெபராஜின் வீட்டில் பீடி சுத்திக் கொண்டிருந்தார்கள். அதில் கழித்துப் போடப்படும் பீடிகளை அவன் களவாண்டு வருவான். சொக்கலால், யோகி, மல்லிசேரி பீடிகள் என்றால்  புகையிலையும் சுற்று இலையும் தரமானதாக இருக்கும் இருக்கும். ஜமா களைகட்டும். ஜமா கூடும் நேரம் பின் மாலைப் பொழுது – இடம் சுடலை மாடன் கோயில்.

அப்படி ஒரு முறை செட்டு கூடிய போது பூசப்பனை சேர்த்துக் கொள்ளவில்லை. நானோ நாலைந்து மாதம் கழித்து வருவதால் என்ன நடந்ததென்று புரியவில்லை. ஜெபாவிடம் தான் கேட்டேன்,

“எங்கடே பூசனைக் காணல?”

“அவனெ வெட்டி விட்டாச்சிடே” ஜெபா சிரித்துக் கொண்டே சொன்னான்.

“என்னாச்சி?”

“அவம் சரியாவுல காரியக்காரம்லெ. போனதிருப்பு இங்க பீடிய வாங்கி இழுத்துட்டு கெடந்தாம்லா? நீ ஊருக்குப் போன அடுத்த நாளு தொரை வாத்தியார் கிட்ட போயி பயலுவ கோயில் மேடைல பீடி இழுக்கானுவ, தண்ணியடிக்கானுவன்னி ஆவ்தாளி சொல்லி இருக்கான்டே.. வாத்தியாரு எங்கைய்யா கிட்ட சொல்லிக் கொடுத்து வீட்ல எனக்கு ஒரே ஏச்சு. பூசன் சரியாவுல கோள் சொல்லிடே… அதான் கூப்பிடலை”

ஓரளவு வெளிச்சம் விழும் வரை காத்திருந்து பின் ஆரம்பித்தோம். சுடலைமாடன் கோயில் என்பது ஒரு சின்னஞ் சிறிய கட்டிடம். ஆறடி ஆளாக இருந்தால் உள்ளேயே நுழைய முடியாது. சுமார் ஐந்தடி உயரம் இருக்கலாம். நாலடி அகலம் – நாலடி நீளம். நான்கு பேர் சேர்ந்தால் கோயிலைக் கட்டிப் பிடித்தே விடலாம். கோயில் தான் சிறியது. ஆனால், அதன் முன்புறம் சுடலைமாடன் சிலைக்கு இடது பக்கமாக பெரிய சிமென்டு குதிரைச் சிற்பங்கள் இரண்டு இருக்கும்.

அந்தக் குதிரைகள் ஒரு பிரம்மாண்டமான மேடையின் மேல் முன்னங்காலை உயர்த்தி பாய்வது போன்ற தோரணையில் நின்று கொண்டிருக்கும். சுமார் இருபதடி உயரம் கொண்ட சிலைகள். திறந்த வாயில் வரிசையான பற்கள் பளிச்சென்று தெரிவதற்காக அதில் கண்ணாடிகள் பதித்திருப்பார்கள். இரவு நேரம் நீங்கள் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் போது எங்கேயிருந்தாவது அந்தக் குதிரையின் முகத்தில் விழும் வெளிச்சத்தில் அந்தக் கண்ணாடிச் சில்லுகள் மின்னலடிக்கும். பார்க்கும் எவருக்கும் அடிவயிற்றில் ஏதோவொன்று புரண்டு படுக்கும்.

ஒரு குதிரையின் மேலே ஓங்கிய கத்தியோடு சுடலை… அந்த மேடையின் பின்புறமாக ஒரு பெரிய ஆலமரம்  – அதன் வயது நானூறு வருடங்கள் என்று சொல்லக் கேள்வி. காற்றடிக்கும் போது அதன் இலைகள் சலசலத்துக் கொள்ளும் – அது சிலசமயம், சலங்கைகள் குலுங்கும் ஒரு சப்தத்தை உண்டாக்கும். அதைத் தவிர்த்தால், ஆள் நடமாட்டமற்ற அமானுஷ்யமான ஒரு அமைதி அங்கே நிலவியது. மாலை மங்கியபின் யாருமே அந்தப் பக்கமாக வரத் துணிய மாட்டார்கள்.

நாங்கள் கூட்டாக புகை விட ஆரம்பித்த சற்று நேரத்திலேயே வானம் கொஞ்சம் கொஞ்சமாக இருளத் துவங்கியது. அப்போது, தூரத்தில் இரண்டு வெளிச்சப் பொட்டுகள் உருவாகி நெருங்கி வருவதைக் கவனித்தோம்.

“யார் அது? இந்த நேரத்தில இங்கெ ஏன் வாரான்?” வில்சனுக்கு லேசாக நடுக்கம் கொடுத்தது. எங்களில் அவன் கொஞ்சம் இளையவன் – பதினைந்து வயது தான். அவனது அப்பா வேதக்கோயிலில் ஊழியக்காரராய் இருந்தார். மகனுக்கு புகைப்பழக்கம் இருப்பது தெரிந்தால் வெளுத்து விடுவார்.

“யே.. சும்மா இருடே. மக்கா.. எல்லாரும் குதிரைக்குப் பின்னாடி மறைஞ்சி நில்லுங்கடே. நான் இங்கன நின்னு யார்னு பாக்கேன்” அவசரமாக பீடியைக் கீழே போட்டு அனைத்து விட்டு குதிரை முன்னங்காலின் கீழே அமைதியாக உட்கார்ந்தேன். அந்த வெளிச்சப் பொட்டுகள் நெருங்கி வரக் காத்திருந்தேன்.

அது ஒரு புத்தம் புதிய மாருதி கார். நேரே கோயிலின் முன்னே சாலையின் எதிர்பக்கமாக நின்றது.

“இங்க பாருங்கடே புதூ ப்ளசர் காரு… “ குதிரையின் பின்னிருந்து சந்திரன் கிசுகிசுக்கத் துவங்கியதை “ஷ்ஷ்ஷூ..” என்கிற எச்சரிக்கையால் அடக்கினேன்.

காரின் முன்னிருக்கையைத் திறந்து கொண்டு கீழே இறங்கியவரைப் பார்த்தேன். அது வள்ளியூர் அரசுப் பள்ளியின் ஹெச்.எம். அவரை எனக்குத் தெரியும். இங்கே எசக்கிவிளையில் தான் பெண்ணெடுத்திருந்தார். புதிதாகக் கார் வாங்கியிருப்பார் போலும், முதல் பூசை போட வந்திருக்கிறார்.  காரிலிருந்து இறங்கியவர் ஒரு கணம் குதிரை இருக்கும் பக்கமாக பார்வையை ஓட்டினார். சுடலை கோயிலின் மேலே ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது – வெளிச்சத்தைக் குவிப்பதற்காக அதன் மேலே ஒரு தகரக் கூம்பு இருக்கும். அந்தக் கூம்பின் திசை சாலையை நோக்கி இருந்ததால்,  நாங்கள் இருந்த திசையில் குறைவான வெளிச்சமே விழுந்தது. அதனால், என்னை அவரால் ஒரு நிழலுருவமாகத் தான் பார்க்க முடிந்தது.

“யார் அது…” குரல் கொடுத்து விட்டு தாமதித்துப் பார்த்தார். எனக்கு லேசாக பயம். கிட்டே அழைத்துப் பேசினால் பீடி நாத்தம் காட்டிக் கொடுத்து விடும். எனவே, அமைதியாக அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தேன். சில நொடிகள் இங்கே பார்வையை ஓட்டியவர், காரைச் சுற்றிக் கொண்டு பின்னங்கதவைத் திறக்கச் சென்றார். அது தான் சமயமென்று சப்தமின்றி நான் குதிரையின் பின்னங் கால்களுக்குக் கீழே ஒண்டிக்கிடந்த நண்பர்களோடு போய்ச் சேர்ந்து கொண்டேன். இதற்குள் காரின் பின் கதவைத் திறந்தவர், தலையை உயர்த்தி குதிரையைப் பார்த்தார். பார்த்தவர் ஒரு கணம் துணுக்குற்றார். அவருக்குத் தெரிந்த ‘நிழலுருவத்தைக்’ காணவில்லை.

“யேட்டி.. நீ சித்த உள்ளயே இரு..” மனைவியிடம் வெளியே இறங்க வேண்டாமென்று சொல்லி விட்டு குதிரையிருக்கும் திசையையே வெறித்துப் கொண்டு நின்றார். அருகே நடந்து வரலாமென்று நினைத்திருப்பார். அந்த நேரம் பார்த்து லேசாக காற்று வீசியது. ஆலமரத்தின் இலைகள் மோதிக் கொண்டதில் சலங்கைச் சத்தம் உண்டானது. ஹெச்.எம்மின் உடலில் உண்டான நடுக்கத்தை இங்கிருந்தே காண முடிந்தது. அதற்குள் பையன்களுக்கும் லேசாக விவரம் புரிந்தது. கிராம்ஸ் மகன் மருதமுத்து கழுதைப் புலியைப் போன்ற ஒரு எக்காளச் சத்தத்தை எழுப்பினான்.

ஹெச்.எம் சர்வநிச்சயமாக பயந்து விட்டார். மனைவியையும் பிள்ளைகளையும் காருக்குள்ளேயே இருக்கச் செய்தவர் நான்கு எலுமிச்சம் பழங்களை எடுத்து நான்கு சக்கரங்களின் கீழும் வைத்தார். கோயிலின் அருகிலேயே வராமல் சாலையின் எதிர்பக்கத்திலிருந்தே கையெடுத்துக் கும்பிட்டார். காரில் ஏறியவர் தலைதெறிக்கும் வேகத்தில் ஓட்டிச் சென்று மறைந்து விட்டார்.

நள்ளிரவு வரை பல்வேறு கதைகளைப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த நாங்கள் வீட்டுக்குச் செல்லும் போது மணி ஒன்றாகி விட்டது. அடுத்த நாள் நான் ஊரிலிருந்து கிளம்பி பாளையங்கோட்டைக்குச் சென்று விட்டேன். அது நான்காம் செமஸ்டரின் லீவு சமயம். அதன் பின் ஐந்தாம் செமஸ்டர் லீவில் நான் ஊருக்கு வரவில்லை – அடுத்தது கடைசி செமஸ்டர் என்பதால் ப்ராஜக்ட் வேலைகளை முடிப்பதற்காக ஹாஸ்டலிலேயே தங்கிக் கொண்டேன். இறுதி செமஸ்டர் லீவு துவங்கும் முன்பே கேம்பஸில் வேலை கிடைத்தும் விட்டதால் அப்படியே அங்கிருந்து தில்லிக்குச் சென்று விட்டேன்.

இடையில் வருடத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே ஊருக்குச் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. கூட்டாளிகள் அத்தனை பேரும் திசைக்கொருவராய் விசிறியடிக்கப்பட்டு விட்டனர். ஜெபராஜி பம்பாய் சென்று விட்டான்; சந்திரன் சென்னை; கிராம்ஸ் வேலையெல்லாம் சரிப்பட்டு வராது என்பதால் மருதமுத்துவின் அப்பா அவனுக்கு திருநெல்வேலி பஜாரில் ஒரு கடை வைத்துக் கொடுத்துள்ளார்.  அவன் பக்கத்தில் கண்டித்தான்குளத்தில் பெண்ணெடுதிருப்பதால் இங்கே அதிகம் வருவதில்லை என்றார்கள்.

ஆனால், ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் ஒரு முன்னேற்றத்தைக் காண முடிந்தது. ஐந்து வருடத்திற்கு முன் நம்பியாற்றின் குறுக்கே ஒரு கல்பாலம் கட்டி முடித்தனர். அங்கேயிருந்து ஊர் வரைக்கும் சிமெண்டு சாலை அமைத்தனர். நான்கு வருடத்திற்கு முன் முதன் முறையாக ஊருக்கு பஸ் வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக  ஒவ்வொரு வீட்டின் மேலும் சன் டைரக்ட் டிஷ் ஆண்டெனா முளைத்து வருகிறது. இன்னும் செல்போன் டவர் வரவில்லை. கண்ணூரில் ஒன்றும் துலுக்கப்பட்டியில் ஒன்றுமாக சுற்று வட்டாரத்தில் இரண்டு டவர்கள் இருக்கிறது. கொஞ்சம் உயரமான இடத்தில் நின்றால் சிக்னல் கிடைக்கிறது.

முக்கியமானது – எசக்கிவிளை சுடலைமாடன் பெரும் புள்ளியாகியிருந்தார். சுடலைமாடனின் சக்தி சகல திசைகளிலும் பரவியுள்ளது. ஒரு கோயில் கொடையென்றால் சுமாராக பத்தாயிரம் பேர் வரை கூடுவதாக அப்பா சொன்னார். ஆனால், எப்படி இந்த திடீர் பிரபலம் என்பது தான் எனக்கு விளங்கவில்லை – சமீபத்தில் சந்திரன் கல்யாணத்திற்கு ஊருக்குப் போகும் வரை.

சந்திரன் கலியாணத்திற்கு எங்கள் பழைய செட் எல்லோரும் ஒன்று சேர்ந்தோம். அதே பழைய சேட்டைகளை ஓரிரு நாட்களுக்கு அரங்கேற்றிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம். காலை கிராம்ஸின் கினற்றில் குளியல், அப்புறம் ஜெபராஜின் வயலில் நின்ற பனைமரத்திலிருந்து பனம்பழங்களைப் பறித்துத் தின்றோம், மதியம் வள்ளியூரில் சினிமா, அப்புறம் மாலை வரை ஊரெல்லாம் சுற்றி வந்து விட்டு இரவு சுடலைமாடன் கோயிலில் திருட்டு தம் என்று முடிவு செய்தோம்.

கோயிலை பிரம்மாண்டமாக எடுத்துக் கட்டியிருந்தனர். மூன்றாவதாக ஒரு குதிரையை நிர்மாணித்திருந்தனர். மேடை இன்னும் விசாலமாயிருந்தது. முகப்பில் “ஸ்ரீ ஸுடலை மாடஸ்வாமி” என்று ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. கோயிலின் முன்னே இருந்த சிமென்டு சிற்பத்தில் சுடலைமாடனின் முகத்தில் வழக்கமாக இருக்கும் ஆக்ரோஷம் மிஸ்ஸிங். நாங்கள் எங்கள் வழக்கமான மேடையில் அமர்ந்தோம்

இப்போது ஜெபராஜி பில்டர் கோல்டுக்கு முன்னேறியிருந்தான். ஆளுக்கொன்றைப் பற்றவைத்தோம்.

“யே…யப்பா, இந்தக் கோயிலுக்கு வந்த வாழ்வப் பாத்தியளாடே” என்னால் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

“யேல மக்கா.. சொடல மாடன் இப்ப பெரும்புள்ளியானதுக்கு நீயும் ஒரு காரணம் தெரியுமாடே?” ஜெபராஜி சிரித்துக் கொண்டே சொன்னான்.

“என்னலெ சொல்றிய?”

“ம்ம்ம்…. உனக்கு தெரியாதுல்லா… கடேசி திருப்பு நாமெல்லாம் ஒரே செட்டா சேர்ந்து இங்கன பீடி அடிச்சது ஞாபகம் இருக்கா?”

“ஆம்மா… அதுக்கு என்ன?”

“அப்ப வள்ளியூர் ஹெச்.எம் புது ப்ளசர்ல வந்தார்லா..?”

“ம்.. சொல்லு”

“அப்ப உன்னிய இருட்டுல பாத்துட்டு ஏதோ உருவம்னு பயந்தாரே… அதுல இருந்து தான் சொடல மாடனுக்கு வாழ்வே ஆரம்பிச்சது”

எனக்கு விஷயம் சரியாகப் புரியவில்லை.  “… வெட்டி வெட்டிச் சொல்லாதடே.. ஒரே நேரா கதை என்னான்னி சொல்லி முடியேன்” ஜெபராஜி சொல்ல ஆரம்பித்தான்.

அன்றைக்கு இரவு என்னைப் பார்த்து பயந்து விட்ட ஹெச்.எம், அடுத்த நாள் திரும்ப கோயிலுக்கு வந்துள்ளார். பூசனைப் பார்த்து இரவு வேளைகளில் இந்தப் பகுதியில் சுடலையின் நடமாட்டம் இருப்பதாகவும், ஆட்களை உருத்து உருத்துப் பார்ப்பதாகவும் சொல்லி இருக்கிறார். கோயிலை ஏனோதானோவென்று அலட்சியம் செய்யாமல் சுத்த பத்தமாக பராமரிக்க வேண்டுமென்று பூசனிடம் எச்சரித்துள்ளார். அதையே கிராம்ஸிடமும் சொல்லியிருக்கிறார். இந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக கிராமம் முழுக்கப் பரவியுள்ளது.

ஒவ்வொருவனும் அடுத்தவனிடம் கதையைச் சொல்லும் போது கொஞ்சம் சொந்த சரக்கையும் சேர்த்துப் பரப்பியுள்ளனர். இப்போது, சுடலை மகாப் பெரிய உருவம் கொண்டவர், சுடலையின் நிறம் கருப்பு, கையிரண்டும் இரண்டு பனை மரம், காலிரண்டும் இரண்டு தென்னை மரம், ஓங்கிய கையில் மிகப் பெரிய கருக்குப் பட்டையம் வைத்திருப்பார், சுடலையிடம் பொய் சொன்னால் இரவு நேரே வீட்டுக்கே வந்து ரத்த பலி வாங்கி விடுவார், ராத்திரி மலையாள குட்டிச்சாத்தான் சுடுகாட்டில் பிணத்தைத் திருடித் தின்னாமல் சுடலை தான் காத்து நிற்கிறார், இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் சுடலை குதிரை மேலேறி கிராமத்தை வலம் வருகிறார், அப்போது எதிர்பட்டவர்கள் ரத்தம் கக்கிச் சாகிறார்கள், சுடலைக்கு நேர்ந்து கொண்டு காசு முடிந்து வைத்தால் நினைத்தது நடக்கும், தீராத வியாதிகள் தீர்ந்து விடும் – இப்படியாக ரகம் ரகமான கதைகள் பேசப்பட்டு பரவியிருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கதைகள் அக்கம் பக்கத்தைத் தாண்டிப் போனதால் சுடலை இந்த வட்டாரத்திலேயே இப்போது பெரும் வி.ஐ.பி அந்தஸ்தை பெற்றிருக்கிறார். மக்கள் அள்ளித்தந்த காசில் கோயிலும் சுடலையும் இவர்களோடு சேர்ந்து பூசனும் நன்றாக வளர்ந்திருக்கிறார்கள்.  பூசன் சில மாதங்களுக்கு முன்பு தான் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக் ஒன்றை வாங்கினானாம். ஓட்டத்  தெரியாமல் ஒரு வாரம் முழுக்க உருட்டிக் கொண்டே அலைந்திருக்கிறான்.  இரவு நெடுநேரம் கதை பேசி விட்டு சுடலை கிராம உலா தொடங்கும் சமயத்தில் வீட்டுக்குக் கிளம்பினோம். விடிந்தால் சந்திரன் கலியாணம்.

சந்திரன் கலியாணம் முடிந்த அடுத்த நாள் நான் ஊருக்குக் கிளம்பினேன். பஸ் ஏற்றி வழியனுப்ப ஜெபராஜியும் உடன் வந்திருந்தான். சுப்பையா அண்ணாச்சி கடையில் டீ குடித்துக் கொண்டு நின்றோம். திடீரென்று ஜெபராஜின் முகத்தில் ஓரு பிரகாசம்,

“அந்நா பாருடே.. திடீர் சாமியாரு வாராரு”  ஜெபராஜின் விரல் நீண்ட திசைக்குத் திரும்பினேன். தொலைவில் ஒரு மனிதர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். பெண்களுக்கு இருப்பதைப் போல் தலை நிறைய முடி, முகத்தில் அடர்த்தியான தாடி – அது மார்பு வரை வளர்ந்திருந்தது.

“ஆள் யார்னு தெரியுதாடே” ஜெபராஜி கேட்டான்.

“தெரியலையே மக்கா… யார் இவன், ஊருக்குப் புதுசா?”

“இதாம்ல நம்ம பூசன்.. எப்படி ஆளே மாறிட்டான் பாத்தியா?” அதற்குள் அந்த வண்டி எங்களுக்கு சமீபமாய் வந்திருந்தது.

“யேல.. பூசா… இங்க வாலெ” நான் கைதட்டி சப்தமாய்க் கூப்பிட்டேன். எங்களைக் கடந்த வண்டி ஒரு கணம் தயங்கி ஒரு யு-டர்ன் அடித்து கிட்டே வந்தது. பூசனின் உடல்வாகு  அப்படியே தானிருந்தது. ஆனால் அதில் ஒரு தேஜஸ் சேர்ந்திருந்தது. கழுத்தில் இரண்டு ருத்திராட்ச மாலையும் ஒரு ஸ்படிக மாலையும் தொங்கியது. மேலே சட்டையணியாத உடலில் குறுக்கு வாக்காக ஒரு காவித் துண்டை கட்டியிருந்தான்.  தாடிக்குளிருந்து சொற்பமாக எட்டிப் பார்த்த பூசனின் முகத்தில் ஒரு சங்கடம் பரவியிருந்தது. கிட்டே வந்தவன் கிசுகிசுத்த குரலில்,

“நான் இப்பம் பூசாரி சாமியாடின்னி ஆளாயாச்சிவே.. ஆட்கள் முன்னாடி ‘ஏல வாலெ போலென்னி’ கூப்பிடாதவே.. சரி நான் வாரன் பெறவு பாப்பம்” விருட்டென்று கிளம்பினான்.

“ஆள் எப்படி மாறிட்டான் பாத்தியாடே” ஜெபராஜி முணுமுணுத்தான். ஆம் நிறைய மாறித்தான் போயிருக்கிறான். ஒன்றே ஒன்றைத் தவிற – இப்பவும் பயல் பல்லு விளக்குவதில்லை.

_______________________________________________________

மாடசாமி.
(உண்மைச் சம்பவம். ஊர், பெயர் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது.)

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. சுடலை மாடன் தண்ணியும் அடிக்கும்:அதுக்காக..டாச்மாக் சரக்கை வஷ்ஷி படஷ்ஷிடாதீஈங…
    அப்புறம் “மாடன்” வயறுநோகும்….

  2. “மாதம் ஒருமுறை குளியல் வாரம், ஒருமுறை பல்துலக்குவது என்பதில் அவன் வைராக்கியமாக இருந்தான்” semma Galaatta sir Neenga.

  3. // மாடசாமி.
    (உண்மைச் சம்பவம். ஊர், பெயர் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது.) //

    கதையில் எது உண்மைச் சம்பவம்..?!

    // “அவம் சரியாவுல காரியக்காரம்லெ. போனதிருப்பு இங்க பீடிய வாங்கி இழுத்துட்டு கெடந்தாம்லா? நீ ஊருக்குப் போன அடுத்த நாளு தொரை வாத்தியார் கிட்ட போயி பயலுவ கோயில் மேடைல பீடி இழுக்கானுவ, தண்ணியடிக்கானுவன்னி ஆவ்தாளி சொல்லி இருக்கான்டே.. வாத்தியாரு எங்கைய்யா கிட்ட சொல்லிக் கொடுத்து வீட்ல எனக்கு ஒரே ஏச்சு. பூசன் சரியாவுல கோள் சொல்லிடே… அதான் கூப்பிடலை” //

    இரவிலே மாடசாமி கோவிலில் திருட்டு தம் அடிக்கிறது ஒரு பட்டாளம் என்று கிராமத்தாருக்கு தெரியாதா.. ஹெச்.எம். க்கும் தெரிந்ததால்தான் :

    // யேட்டி.. நீ சித்த உள்ளயே இரு..” மனைவியிடம் வெளியே இறங்க வேண்டாமென்று சொல்லி விட்டு குதிரையிருக்கும் திசையையே வெறித்துப் கொண்டு நின்றார். //

    திருட்டு தம் பார்ட்டிகள்தானா இல்லை வேறு திருடர்களா என்ற சந்தேகத்தில் மனைவி குழந்தைகளை காருக்குள்ளேயே இருக்கச் சொல்லியிருக்கிறார்.. ‘கழுதைப்புலி’ கத்துவதோடு நிற்குமா என்ற சந்தேகத்தில் அவசரமாகக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்..

    அடுத்து ஹெச்.எம்., இந்தப் பயல்கள் செய்யும் சேட்டைகளை ஒழிக்க சுடலை மாடசாமியை வேட்டைக்கு கிளம்ப வைத்து கோவிலைப் பிரபலமாக்கி ‘கோவில் கொடியவர்களின் கூடாரமாவதிலிருந்து’ காப்பாற்றிவிட்டார்..!! பூசனுக்கு இசுப்லெண்டர் வாகனமாகிவிட்டது..!! வெளியூர் பக்தகோடிகளால் கிராமத்திற்கு வருமானமும் வரத்தொடங்கிவிட்டது..!!

    இப்போதெல்லாம் ஒவ்வொரு கிராமத்திலும் அந்த ஊர் சாமிகள் ஏதாவது செய்து தங்கள் மகிமைக் காட்டாதா, கிராமம் வெளி பக்தர்கள் வருகையால் செழிக்காதா என்ற ஏக்கம் நிலவுகின்றது என்று அறிக..!!

    • இப்படி வியாக்கியானம் கொடுத்தே ராமன் பாலம் கட்டினான்னு நம்ப வச்சிடுங்க…

  4. அருமையான புகைப்படம்.save பண்ணி வைத்துக்கொண்டேன்.நன்றி!

  5. ஐயோ.. முடியல.. விழுந்து விழுந்து சிரிச்சேன்..

    //“மாதம் ஒருமுறை குளியல் வாரம், ஒருமுறை பல்துலக்குவது என்பதில் அவன் வைராக்கியமாக இருந்தான்//
    //இப்பவும் பயல் பல்லு விளக்குவதில்லை//
    – Altimate..

  6. சுடலைமாடன் உசரத்துக்கு உண்டியல் வளந்துடுச்சின்னா, அப்புறம் நம்ம பூசன் தொலைஞ்சிபோயி, பட்டணத்துல பிச்சை எடுத்துக்கிட்டிருப்பான். மூக்கு வேர்த்து, பூணூல் போட்ட பாப்பான்மாருங்க கலக்ஷன் பண்ண சட்டப்படி அங்கனயே குடியேறிடுவாங்க. அப்புறம், திருட்டு தம் அடிக்கவும் அங்கே ஒரு பய உள்ற போவ முடியாது. “இது பொது இடமல்ல. வெளியாள் பிரவேசிக்கக்கூடாது. மீறினால் போலிஸ் வசம் பிடித்துக்கொடுக்கப்படும். இப்படிக்கு நிர்வாகம்” அப்படீன்னு ஒரு போர்ட்டு தொங்கும்!!

    • மாடன் கோவிலுக்குப் பக்கதிலயே டாச்மாக் கடைய திறந்துவிட்டு கோவிலுக்குள்ளாற சரக்க ஓடவிட்டா பாப்பான் வரமாட்டான், கடை நிர்வாகி மச்சான பூசாரியாக்கிறலாம்..

      • நல்ல ஐடியாண்ணா, சித்த இத தேவநாத்தனுக்கும், சுப்பிரமணி ஜெயேந்திரனுக்கும், சைடுகொண்டை தீட்சிதனுக்கும் சொல்லிக்கொடுத்தேள்னா ஜல்சா பண்ற நேரம் போக அடிஷ்ணல் சைட் இன்கம்கு கோயிலுக்கு ஒண்ணுன்னு வச்சுக்குவா (கடைய வ்ச்சுக்குவாண்ணேன்) லோகமும் க்ஷேமமா இருக்கும்.

        • பூணூல் போட்டுண்டு அதெல்லாம் பண்ணப்படாது, மாட்டிண்டா மாடனாலும் காப்பாத்த முடியாது.. கேட்டேளா, அதனால இப்படியே ஓடுனாத்தான் குவாட்டர் கோவிந்துகளுக்கு கோளு..

          • தெரியுமோன்னோ சாக்ஷாத் ருத்ர பகவானை தான் மாடசாமின்னுட்டு ஊர் பக்கத்திலெல்லாம் கும்புடராளாம்,பெரியவா சொல்லிட்டா. கோயிலுக்கு சம்ப்ரோக்ஷணம் பண்ணி கும்பாபிஷேகம் பண்ண போறாளாம், உள்ளே வைதீக முறைப்படி ருத்ரருக்கு விக்ரகம் ஒன்னையும் வெச்சு பிரதிஷ்டை பண்ண போறாளாம்……..மருவத்தூர் கோவில் ஆனதும் கூட்டம் கூடினதும் லோக்கல் தேவதை ஆதி பராசக்தி ஆகிட்டாளே அதுபோல்….உண்மையிலேயே அந்த அடிகளாருக்கு ஆதி அப்புறம் பரா மற்றும் சக்தி அப்படீன்னா என்னன்னு இப்ப வரைக்கும் தெரியாது. மாமிகள் திடீரென்று டேக் ஓவர் பண்ணிட்டா பூசன் அம்பேல்.

            • மாமிகள் மாடனை டேக் ஓவர் பண்ணிடுவாளோன்னு உமக்கு பெருங்கவலையாயிருந்தா திருமதி.பூசனிடம் மேட்டரச் சொல்லி குவாட்டர கையில குடுத்து கத்தியோட குதிரைக்குப் பக்கத்திலயே உட்காரச் சொல்லும் ஓய்.. அப்பறம் உங்காத்து மாமி கூட மாடன் கிட்ட போவ முடியாது.. டேக் ஓவர் பீதியை விட்டுத்தள்ளும்..!!!

  7. மாடசாமி நல்ல கதலே,எங்க ஊர்லேயும் இதே மாரிதான் பண்ணோம்,சரி காமெடியாச்சு, ஆனா கோயில் டெவலப் அகல…

  8. சுடலை மாடன் சாமி என்றால் ஏன் இதை பிராமிணர்கள் பூஜிப்பதில்லை?கடவுளில் கூட ஜாதி பிரித்த பெருமையை என்னவென்று சொல்வது?பிராமண ர் தவிர மற்ற ஜாதி மக்களும் கணேசனையும்,சிவனையும் தேடி தேடி கும்பிடுவதர்க்கும் மேல் நாட்டு கலாசாரத்தை நம்மை விட மேலாக கருதி செல்வதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை என்றே தோணுகிறது…இங்கே இன்னொரு அதிர்ச்சியை படியுங்கள்…http://tamilmottu.blogspot.com/2012/07/blog-post_25.html

    • // சுடலை மாடன் சாமி என்றால் ஏன் இதை பிராமிணர்கள் பூஜிப்பதில்லை?கடவுளில் கூட ஜாதி பிரித்த பெருமையை என்னவென்று சொல்வது? //

      சதீசு,

      மருவத்தூரான் உங்களுக்கு நற்செய்தி கொண்டுவந்திருக்கார் பாத்துக்குங்கோ :

      // தெரியுமோன்னோ சாக்ஷாத் ருத்ர பகவானை தான் மாடசாமின்னுட்டு ஊர் பக்கத்திலெல்லாம் கும்புடராளாம்,பெரியவா சொல்லிட்டா. கோயிலுக்கு சம்ப்ரோக்ஷணம் பண்ணி கும்பாபிஷேகம் பண்ண போறாளாம், உள்ளே வைதீக முறைப்படி ருத்ரருக்கு விக்ரகம் ஒன்னையும் வெச்சு பிரதிஷ்டை பண்ண போறாளாம்…… //

      // பிராமண ர் தவிர மற்ற ஜாதி மக்களும் கணேசனையும்,சிவனையும் தேடி தேடி கும்பிடுவதர்க்கும் மேல் நாட்டு கலாசாரத்தை நம்மை விட மேலாக கருதி செல்வதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை என்றே தோணுகிறது…//

      சிவனும், கணேசனும் பிராமணர்களின் தனியுடமை இல்லையே..

      // இங்கே இன்னொரு அதிர்ச்சியை படியுங்கள்…http://tamilmottu.blogspot.com/2012/07/blog-post_25.html //

      இதுக்கே அதிர்ச்சியாயிட்டா எப்படி.. யார் யார் என்னென்ன கண்டிசன் போடுகிறார்கள் என்று வெளிப்படையா தெரிய ஆரம்பிச்சா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கு வந்துடும்..

  9. என்னுடைய ஒரு அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். நகர்ப்புறப்பகுதியிலுள்ள ஒரு தேனீர்க்கடையில் காலையில் வழக்கமாக தேனீர் அருந்தச் செல்வேன். கடையின் எதிரிலுள்ள ஒரு மதில் சுவரையொட்டி அந்தப் பகுதியிலுள்ள ஏழைக்குழந்தைகள் காலையில் இயற்கை உபாதையைத் தீர்க்க அமர்ந்துகொள்வதால் நான் கடைக்குள் உட்கார்ந்து தேனீர் குடிப்பேன். ஆனால், குழந்தைகள் அமர்வதை முன்னிட்டு மற்றவர்கள் தேனீர் குடிக்க இந்தக் கடைக்கு வருவதில்லை. தேனீர்க் கடைக்காரனுக்கு மிகவும் வருத்தம். குழந்தைகளை மிரட்டிப் பார்த்தான். வீடுகளில் கழிப்பறையில்லாத அவர்கள் எங்கே போவார்கள்? வேண்டாமென்று வைக்கிற விஷயமுமில்லை. பெற்றோர்களுக்கும் தேனீர்க்கடைக்காரனுக்கும் தகராறு. நான் ஒரு ஆலோசனை சொன்னேன். ”இன்றிரவு கொஞ்சம் மஞ்சணத்தையும் குங்குமத்தையும் அந்தச் சுவரில் தேய்த்து வையுங்கள். யாரும் இந்த இடத்தைக் கழிவறையாகப் பயன்படுத்த மாட்டார்கள்” அப்படியே செய்தான். கடைசியில் அந்த இடம் மிக முக்கியமான ஒரு கோயிலாக மாறிவிட்டது. ஆனால், இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? இன்று அந்தக் கோயிலின் தர்மகர்த்தா அதே தேனீர்க்கடைக்காரன் என்பதுதான். அவனது பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி சொல்லவா வேண்டும். மிகப்பெரும் வருமான மார்க்கம் இன்று ஈஸ்வர சேவை அல்லவா?

Leave a Reply to புதிய பாமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க