Sunday, July 21, 2024
முகப்புகலைகதைசிறுகதை: 'குடி'காத்த மாரியம்மன்!

சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்!

-

“என்ன? வய வேல எதனாச்சும் நடக்குதா! ஆளையே பார்க்க முடியல.”

அதெல்லாம் ஒண்ணுமில்ல. வரப்ப மிதிச்சு மாசம் ஆவுது! நம்ப பயதான் பயணம் போவணும்னு பிடிவாதமா இருக்கான். அந்த வேலயாதான் ஏஜெண்ட பாக்க வடமட்டம் வரைக்கும் போயிருந்தேன். இப்பதான் நம்ப தவக்கள மவன் ட்ரஸ்டி தேடுனார்னு சொன்னான். ஏண்ணே! எதனாச்சும் பஞ்சாயத்தா? “

இருவரும் வீட்டுத் திண்ணையில் அமர, ட்ரஸ்டி பித்தளை வெற்றிலைப் பெட்டியைப் பிரித்து வைத்தார். நாலைந்து வெற்றிலைக் காம்புகளைக் கிள்ளி எறிந்து விட்டு வாயில் அதக்கி லாவகமாகச் சுண்ணாம்பைக் கீழ்ப்பல் நுனியில் ஒரு விரலால் அப்பிய ராசு,  “சொல்லுங்கண்ணே! சமாச்சாரம் என்ன?”

நம்ப பூசாரி ஜோதி பயதான் ரொம்ப கொடச்சல் கொடுத்துக்கிட்டு கெடக்கான். கொஞ்ச நாளாவே அவன் போக்கு சரியில்ல. கோயில கோயிலாவா வச்சிருக்கான். சுத்துப்பட்டு பத்து பதினைஞ்சு கிராமமும் அன்னியூர் மாரியம்மன் கோயில்னா அவ்ளோ ஒசத்தியா கன்னத்துல போட்டுக்கும்! இவன் என்னடான்னா மூணு வேல கற்பூர வாசன கூட காட்ட மாட்டேங்குறான்..

நானும் பாத்துட்டுதாண்ணே இருக்கேன். அங்கயே ஆட்ட கட்டிப் போட்டுக்குறான்; கோழிய வளக்குறான். பின்னாடி தென்னமரம் இந்த வாட்டி நல்ல காய்ப்பு; ஒரு தேங்காய நம்ம கண்ணுல காட்டலயே!.. அதற்கு மேல் வார்த்தைகளை அடுக்க வாய் கொள்ளாதவராய், எழுந்து போய் வெற்றிலை பாக்கு எச்சிலைத் துப்பி வந்தார்.

அன்னைக்கு நான் கோயில ஒரு நோட்டம் விடலாம்னு போறேன். ஒரு ட்ரஸ்டியாச்சேன்னு மட்டு மரியாதை இல்ல ! கண்ட பயலயும் கோயில் திண்ணைல சேத்துகிட்டு கத பேசிட்டு இருக்கான்.. வாசல்லயே இப்ப சைக்கிளுக்கு பஞ்சர் வேற போடுறானாம்.. சரி இவங்க தாத்தா காலத்துலேர்ந்து கோயில் பூசாரிங்களாச்சேன்னு  விட்டா … இவன் சரி வர மாட்டான் போலருக்கே!

மொதல்ல அந்த உண்டியல தொடச்சி வச்சிருக்கானா பாருங்க ! அது மேலயே கையத் தொடச்சி எண்ணப் பிசுக்கா ஆக்கி வச்சுருக்கான்.. ராசுவின்  கை இயல்பாக வெற்றிலைப் பக்கம் போய், எடுத்த வெற்றிலையைக் குப்புறப் போட்டு வேட்டியில் துடைத்தார். ”எடுத்துக்குங்க” என்று வெற்றிலை டப்பாவை அவர் அருகே தள்ளிய ட்ரஸ்டி முக்கியமான விசயத்துக்கு வந்தவர் போல கொஞ்சம் நெருங்கி வந்து, “மத்ததெல்லாம் கூட வுடுங்க! சமீபமா கோயிலுக்கு பின்னாடியே சரக்கு ஓட்டுறான்னு கேள்வி பட்டதுலேர்ந்துதான் மனசு தாங்க முடியலே! திருவிழா டயத்துலேயே பசங்கள வச்சு ஆத்தங்கரைப் பக்கம் சாராயம் ஓட்டுனாண்ணு கேள்விப்பட்டேன். சரி, சரியான முகாந்திரம் இல்லாம கேக்கக் கூடாதுன்னு இருந்தேன்; இப்ப என்னடான்னா கோயில்லேயே செய்யுறான்னா! இனிமே விடக் கூடாதுங்க! கேள்விப்பட்டுதுலேர்ந்து மனசே சரியல்ல ! எப்புடி இருந்த கோயிலு!”

முகம் வாடிப்போன ட்ரஸ்டி வெற்றிலையுடன் மீதி உணர்ச்சிகளையும் மெண்டு விழுங்கினார்.

அய்யய்யோ! ரோம்ப அநியாயமாச்சே!.. ராசுவும் திடுக்கிட்டார்.

அதான்,  நம்ப நாட்டாமக்காரர வச்சுகிட்டு, அவன கோயில வுட்டுத் தூக்கிடலாம்னு பாக்குறேன். இதுக்கு மேல விட்டு வச்சா மாரியம்மன் கோயில சாராயக் கடையாவே மாத்திருவான்.. இது சம்பந்தமா உங்கிகிட்டேயும் ரோசன கேக்கலாம்னுதான் கூப்பிட்டேன்.

அதெல்லாம் சரிதாண்ணே ! பிரச்சினை இந்த அளவுக்கு போறதால இன்னம அவன வுட்டுட்டு தேட முடியாது! இருந்தாலும் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி, அவன் கிட்டயும் ஜாடையா நான் நாலு வார்த்த பேசிப் பாக்குறேன். இல்லேனா அவன் வகையறா நாலு பேரு எங்ககிட்ட சொன்னீங்களானு வருவானுங்க! கவலய வுடுங்கண்ணே ! நானே வார்த்தய கொடுத்து உள்ள சேதிய வாங்கிடறேன்..  அப்புறம் தூக்கிடுவோம்.. குடியிருக்க எடத்தக் கொடுத்தா.. மாரியம்மனயே யாருன்னா? நாம விட்டுற முடியுமா? நாளைக்கு சேதி சொல்றண்ணே.. நீங்க கவலப்படாம ஆகுற ஜோலியப் பாருங்க… ட்ரஸ்டியை ஆறுதல் படுத்திவிட்டு தெருப்பக்கம் ராசு கிளம்பினார்.

மாரியம்மன்-கோயில்

என்னாடி ஆச்சி இது! வர வர ஊர்ல ஒதுங்க நிணலே இல்லாமப் போயிரும் போலருக்கு ! மாரியம்மங் கோயிலு மரத்தடி நிணலு எம்மாந் தண்டி இருட்டா இருக்குந் தெரியுமா! என்னமோ வௌக்குமாரு நிணலு மாறி இருக்கு! ஊர்ல அநியாயம் பெருத்துப் போச்சு.. ஆயி! ஆயிரங் கண்ணுடையா… நீதான் புள்ளகள காப்பாத்தணும் ; ஊர காப்பாத்தணும்.. பஸ்ஸுக்கு காத்திருக்க கோயில் பக்கம் ஒதுங்கிய சின்னப்பொண்ணு மாரியம்மனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பேருந்துக்கு நிற்கும் ஒரு சிலரைத் தவிர கோவில் பக்கம் யாருமில்லை. கோவில் திண்ணையும் வெறிச்சோடிக் கிடந்தது. இதுதான் தருணம் என்று ராசு மெல்லக் கணைத்துக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தார்.

என்ன ஜோதி… ஜோதி.. இருக்கியா…

தோ.. இங்கதா மாமா இருக்கேன்… இப்புடி வாங்க… கோயிலுக்கு இடப்பக்கம் உள்ள கொட்டகைதான் பூசாரி ஜோதியின் வீடு. உள்ளே விளக்குத் திரியைப் பிரித்துக் கொண்டே ராசுவை அழைத்தான்.

வாங்க மாமா! என்ன காத்து இந்தப் பக்கம் அடிக்குது. பையன் பயணம் போகப் போறான்னு கேள்விப்பட்டேன்! ஏதும் அபிசேகம் கொடுக்கணுமா?

இல்ல ஜோதி! இதுவும் கோயில் சமாச்சாரந்தான்… என்ன சின்னப் புள்ளைலேர்ந்து உன்ன தூக்கி வளத்தவன்  நான்… ஒரு நல்லத கெட்டத நாமதான சொல்லித் தரணும். அந்தக் காலத்துல மதகு தெறக்குறதுலேர்ந்து கதவு வைக்கிற வரைக்கும் உங்க அப்பாரு கோவிந்தன் கிட்ட திருநீறும் குங்குமமும், உத்திரவும் வாங்கிட்டுதான் வேல நடக்கும். அவ்ளோ பேமசு…

என்ன மாமா! சுத்தி வளைக்காம சொல்லுங்க… ட்ரஸ்டி எதனாச்சும் அவுத்து விட்டாரா?

எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறிய ராசுவுக்கு விசயத்தை தாழ்ப்பாளைத் திறந்து விட்டது மாதிரி தெம்பு வந்து பேச ஆரம்பித்தார்,

“ஒண்ணுமில்ல கோயில கொஞ்சம் சுத்த பத்தமா வச்சிக்கிலேன்னு பேச்சு வருது.. ”

வாசல பாருங்க எதனாச்சும் இல தழ கெடக்குதா? முன்னயாவது கோழி வளர்த்தேன். எவன் கண்ண வச்சானோ! எல்லாம் கீரிப்புள்ளகிட்ட போயிருச்சு… இப்ப கோழிப்பீ கூட்டித் தள்ளவும் வழியில்ல… ராசுவின் கண்ணைப் பார்க்க, ஒரு சுழட்டு சுழட்டி அவர் வேறு பக்கம் பார்த்தார்.

அதில்லடா ஜோதி.. இந்த சாமி துணியெல்லாம் கொஞ்சம் தொவச்சி கிவச்சி சாத்தக் கூடாதா.. எப்பப் பாரு அழுக்கா இருக்கு… சரியா குளிப்பாட்றதும் இல்லேன்னு குறையா இருக்குடா…

நல்ல கதையச் சொன்ன! என் மேலு வேட்டியப் பாரு மாமா? இது மர அழுக்கா கெடந்தாலும், என்  கைக்காசப் போட்டு மூணு பொன்வண்டு சோப்பு வாங்குறேன்… மாரியம்மன் துணிக்கு.. காட்டேரி சிலைக்கு போன திருவிழாவுல கட்டுன துணி பழுப்பேறி பீஸ் பீஸா போயிருச்சு… மானம் போவுதேன்னு… புள்ளைக்கு பொஸ்தகம் வாங்க காசு தராம வாங்கிக் கட்டிருக்கேன்… இவ்ளோ பேசுறானுவளே… ஏதுடா! ஆத்துலயும் தண்ணி ஓடலியே தண்ணிக்கு எங்க போவான்னு இந்த அடிபம்புக்கு ஒரு வாசரை மாத்திக் கொடுத்தானுவளா? காலு கழுவவே தண்ணி இல்ல.. மேலுக்கு ஊத்த எத்தன குடம் நான் இரவல் வாங்குறது.. திருவிழாவுக்கு  திருவிழா கோயில ஜோடிச்சா மட்டும் பத்தாது மாமா…

பேச்சில் வேகம் கூடிக் கொண்டே போய்… ராசு இடைமறிப்பதைக் கேட்காமல் ”இங்க வாங்க.. பாருங்க” என்று கோயில் பக்கம் இழுத்து வந்தான்.

“பாருங்க கற்பூரத்தட்ட காஞ்சி இத்துப் போய் கெடக்கு… சூலத்த பாருங்க துருப்புடிச்சு இத்துப் போயிடக்கூடாதேன்னு கைக்காசப் போட்டு எண்ண வாங்கித் தடவி வச்சிருக்கேன்… பேச்சியாயிக்கு காசப்போட்டு குங்குமத்த கொட்டி வச்சிருக்கேன்… ” ஜோதி பேசிக் கொண்டே காட்ட, பேச்சியாயி சிலை சாட்சி சொல்வதைப் போல நாக்கை நீட்டிக் கொண்டு கிடந்தது.

சரிடா, இதெல்லாம் தேவைன்னு நீ நாட்டாம, ட்ரஸ்டிகிட்ட சொல்லலாம். இல்ல என்கிட்டயாவது சொல்லலாம்ல! உண்டிக்  காசு உடைக்கிறப்பவே இதக் கேளு!

ஊக்கும் கோயில் செலவுக்குன்னு பெரிசா ஒதுக்கிடப் போறீங்க… அட நீ வேற மாமா! எவன் மாரியம்மன் உண்டியல்ல போடுறான்… அவனவன் அய்யாவடி , திருநாகேஸ்வரம்னு தேடிப்போயி போட்டுக்கிட்டு வாரனுவ. உள்ளூர் காரன எவன் மதிக்குறான்! வரப்பு காஞ்சா வய நண்டும் மதிக்காதாம் அத மாதிரி, எவன் இங்க அர்ச்சனைக்கு வாரான்… இவ்ளோ பேசுறியே… நம்ப ட்ரஸ்டி வீட்ல கும்பகோணம் அய்யர வச்சிதானே பூஜை பண்றாரு. புள்ள படிச்சு வெளிநாடு போறப்ப சுவாமி மலைல போய் தங்கத்தேரு இழுக்குறாரு… ஏன் இந்த மாரியம்மனுக்கு தங்கத்துல ஒரு பொட்டு வாங்கி வச்சா என்னா கேடு! கற்பூரம் காட்டவே ஆளில்ல… எவன் தட்ல காசு போடப் போறான்…? ஏதோ எங்க அப்பா சொன்னதுக்காக.. நானும் இந்த ஊர நம்பி நாலு எழுத்து படிக்காம… கோயில்ல அடுகடையா கெடந்தது தப்பாப் போச்சு…

ஜோதி போட்ட போடில் ராசு திக்கு முக்காடிப் போய், இவன மடக்க வந்தா இவன் நம்மளப் புடி போடுறானே என்று மலைத்து ஒரு வழியாகத் திரும்பவும் புகாருக்கு வந்தார், “சரி! எல்லாம் சரி பண்ணலாம். அதுக்காக நீ கோயில்லயே ஆடு வளர்க்கறதும், பஞ்சர் கடை போடறதும் நல்லா இல்லையே! அதுவும் காலனி பசங்களக் கோயில்ல சேத்துகிட்டு சதா திண்ணைல ஏத்திக்கிறதும் ஊரு பழக்கத்துக்கு ஒத்து வருமா? உங்க வகையறாவ மதிச்சு உன்னதானப்பா எங்க கோயில் பூசாரியா ஏத்துகிட்டு இருக்கோம். நீ கோயில் வேலைய வுட்டுட்டு மத்ததெல்லாம் பாத்தா, பாக்குறவங்க தப்பாதானே பேசுவாங்க! எனக்குன்னு வேணாம், உனக்குன்னும் வேணாம். நீயே நியாயத்தப் பேசு!

சரி மாமா… உன் பேச்சுக்கே வர்றேன்! ஏதுடா, திருவிழா முடிஞ்சு ஆறு மாசமாவுதே! அவனுக்கும் புள்ள குட்டி, வாயி வயிறு இருக்கே! எப்புடி பொழப்பான்னு யாராவது கவலைப்பட்டீங்களா? அப்பா காலத்துல ஆளுக்கு மூணு மரக்கா, நாலு மரக்கா ஊர்ல அளந்தீங்க… இப்ப அதுவும் ஒழுங்கா இல்ல. மாசம் வெறும் ஆயிரம் ரூவா கொடுத்தா போதுமா? கேட்டா விவசாயம் முன்ன மாரி இல்லேம்பீங்க… மாரியம்மன மட்டும் முன்ன மாறி ஜோடிக்கணும்னா நான் எங்க போறது?! பொங்குற ரேசன் அரிசில  காட்டேரியிலந்து பேச்சியாயி வரைக்கும் படையல் போட்டு தெனம் காக்காவுக்கும் வைக்கிறேன்… அந்தக் காக்காவே திங்காத சோற… நாங்க தின்னுட்டு கதியேன்னு கெடக்கோம்..

பாக்குற நேரமெல்லாம் ஆள கோயில்ல காணோம்னா! ஆட்ட அவிழ்த்து விட்டு மேய்க்க ஊர்ல எங்க மேச்சல் இருக்கு? போய் இல தழய ஒடிச்சிகிட்டு வர வேணாம்… எங்க அப்பா, தாத்தான்னு கோயில வளர்த்து விட்டு எங்களுக்கு எண்ணத்த கொடுத்திட்டீங்க… நிலம் ஒப்புக் கொள்ளக் கூட இப்ப முடியல… இந்த ஆட்ட வளர்த்து வுட்டாவாவது என் புள்ள குட்டிக படிக்கிறதுக்கு வெல ஆவும்.. அதுவும் ஊரு கண்ண உறுத்துதா?

பேச வந்த ராசுவை மடக்கி “கேளு மாமா? காலனிக்காரன்தான் இன்னும் பய பத்தியா என்ன மாரி மாரியம்மன கட்டிகிட்டு அழுவுறான்… அவனயும் வுட்டா என் பொழப்புக்கு யாரு? மேலத் தெருகாரனா வர்றான்… அவனவனும் பட்டீஸ்வரம், பிரத்தியுங்கான்னு புதுசு புதுசா பாப்பாரக் கோயில தேடிப் போறானுங்க.. நீங்களுந்தான் வாங்களேன். யாரு வேணாங்குறா? அட இருங்க மாமா! மொத்தத்தையும் கேட்டுட்டு நீங்களே நியாயத்தக் கேளுங்க!

தட்டுக் காசும் இல்ல, கலம் நெல்லும் அளக்க மாட்டீங்க! தேங்கா மூடிக்கும் வழியில்ல, உண்டியலும் ரொம்பாதுன்னா… எப்படிதான் நான் கஞ்சி குடிக்கிறது… மாரியம்மனுக்கு துணி கட்டுறது.. மத்த வேல செஞ்சாதான்… மாரியம்மனுக்கே ஒரு முழம் பூவு. ஆமா! என்னமோ நான்தான் பூசாரி வேலய வுட்டுட்டு வேற வேல பாக்குற மாதிரி ஜோடிக்குறானுவல,  கேக்குறேன். ட்ரஸ்டி கோயில் ட்ரஸ்டி வேல மட்டுந்தான் பாக்குறாரா? பைனான்சு நடத்தல, வட்டிக்கு விடல, வாங்குன சொத்து பத்தாதுன்னு கும்பகோணத்து செட்டியாரோட சேர்ந்துகிட்டு ரியல் எஸ்டேட் பண்ண தெரியுது, என் குடிசைக்கு வைக்கோலு வுடறதுக்கு மட்டும் கணக்குப் பாக்குறாரு! நம்ப நாட்டாம, கோயிலு சுவத்தையே பாத்துகிட்டு கெடக்குறாரா… நூறுநாள் வேலைல பொய்க் கணக்கு எழுதல, பஞ்சாயத்து மோட்டாரை கழட்டி பங்கு போடல! ஏன் ஒண்ணும் இல்லாத ஆளா? இந்தக் கோயில் பம்புக்கு ஒரு வாசரை போட்டா என்ன? அவுரும், கணக்குப் புள்ளயும் சேர்ந்துகிட்டு புதூர்ல பிராய்லர் கோழி வளர்க்கலாம். நான் ஒத்த ஆடு வளக்கறது தப்பாப் போச்சா? கேக்குறேன்… ஏதோ அவனவனும் அவனவன் வேலயப் பாக்குற மாரியும்… நான்தான் இடம் மாறிப் போயிட்ட மாரியும் பேசுறாங்களே… எனக்கும் எல்லாச் சேதியும் தெரியும் மாமா… அப்பா சொல்லிட்டுதான் செத்தாரு… மாரியம்மன் தோடு, காட்டேரிக்கு தண்ணி ஊத்துன பித்தாள சொம்பு, பேச்சியாயி கரண்டி எல்லாம்… யார் யார்கிட்ட எப்புடி எப்புடி மாறிப் போச்சுன்னு எனக்குத் தெரியும். வாயத் தொறக்கக் கூடாதுன்னு நான் வலியோட கோயிலக் காத்துகிட்டு கெடந்தா..  என்னய வங்கம் வச்சா நான் சும்மா விட மாட்டேன் ஆமா?

டேய்… டேய்.. ஏன்டா இப்ப கோபப்படுற… நான் கேக்க வந்ததே வேற… தோ பாரு மத்ததெல்லாம் வுடு! நான் பாத்துக்குறேன்… சொல்றேன்னு கோபப்படாதே! கோயில்லயே சாராயம் விக்கிறேன்னு பேச்சு வருது! அந்தப் பேச்சுக்கு எடமில்லாம பாத்துக்க! அததான் நான் சொல்ல வந்தது… நீ வச்சிக்க மாட்ட ! இருந்தாலும்… அப்படி ஒரு பேச்சு அடிபடுது… வராம பாத்துக்க… மிகுந்த எச்சரிக்கையுடனும், கறாராகவும் ராசு ஒரு வழியாகப் பேசி முடிக்க…

“எந்த நாய்.. சொன்னிச்சு..?! சும்மா ஒதுங்கிப் போனா இன்னும் கதயக் கட்டுவானுங்க… என் புள்ளைங்க மேல சத்தியமா இதெல்லாம் சொல்றவன் வாய் இழுத்து சாவான்… இவனுக கிழிக்குற கிழிக்கு… இந்தக் கோயில்ல கெடந்து சாகறத விட… சாராயம் விக்கிறதுக்கே போவலாம்.. தப்பில்ல… ஆனா இதெல்லாம் நான் கோயில்ல செய்யுறேங்குறது எவ்ளோ பெரிய பொய்யி… சாமி  சத்தியமா வுட்டேன்.. வுட்டேன்… அந்த மகமாயிதான் இந்த அநியாயத்தக் கேக்கணும்..”  பேசிக் கொண்டே ஜோதி மண்ணை வாரி இறைக்க…

“டேய்…! டேய்..! நீ வேற! சனம் வேடிக்கைப் பாக்குது…! இல்லேன்னுட்டு போவியா? இதெல்லாம்..! நல்ல ஆளுடா நீ…! போய் ஆக வேண்டியதப் பாரு…”  என்று ராசு ஆளை விட்டால் போதுமென்று நடையைக் காட்டினார்.

“என்னங்க? ”  பதட்டத்துடன் ஜோதியின் மனைவி ஓடி வர, சுத்துப்பட்ட பேயி, பிசாசையை ஒரு கை விபூதில தொரத்துனவரு எங்க அப்பன்! இவுனுங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படலாமா?! கண்ணுக்கு தெரியுற மாதிரி ஒரு கழிப்பு கழிச்சிப் போட்டாதான் பின்பக்கம் வர மாட்டானுங்க… கூட்டுங்க பஞ்சாயத்த பாத்துடலாம். நீ போடி..! அவனவனும் ஆயிரம் விதத்துல காசு சேப்பானுங்களாம். பூசாரி மட்டும் பொகைச்சல்லயே கெடக்கணுமாம்… முனகிக் கொண்டே குடிசைக்குள் போனான் ஜோதி..

_______________________________________

நடந்ததை எல்லாம் அச்சு மாறாமல் ராசு சொல்லி முடிக்க, ட்ரஸ்டிக்கு கோபம் தலைக்கேறியது. அப்படியா பேசுனான் என்று ஆத்திரமாகிப் போனான், “ஆமாண்ணே! அவன் தான் செய்யுறத குத்தம்னே ஒத்துக்குல. என்னமா எகிறி எகிறிப் பேசுறான் தெரியுங்களா! மண்ணை வாரித் தூத்துனதுல எனக்கே பகீர்னு போயிடுச்சு. பேசாம கூட்டத்தப் போட்டு கோயில வுட்டுத் தூக்கிட வேண்டியதுதான்.” ராசு படபடப்போடு மேல்த் துண்டை எடுத்து தாடையில் விசிறிக் கொண்டார். ட்ரஸ்டியின் கோபம் கொழுந்து வெற்றிலையைக் குதறி எடுத்தது. பதட்டப்படாமல் நாட்டாமை நிதானமாக வாயைத் திறந்தார். ”சரிதாண்ணே! திமிராத்தான் இருக்கான், நல்லாத் தெரியுது.. இப்போதைக்கு இவன விட்டா இந்தக் கூலிக்கு பூசாரி வேல பாக்க வேற ஆளு கிடையாது.. ஊர்க்காரப் பயலும் எவன் ஒழுங்கா நெல் அளக்குறான்.. கோயிலுக்கு வெள்ளாமையும் கெடையாது. டொனேசன் வாங்க ஊர்ல எவன் இருக்கான்.. வசதி படைச்சவன் எல்லாம் டவுண் பக்கம் போயிட்டான்.. அவசரப்பட்டு இவனயும் தொரத்தி வுட்டுட்டோம்னு வெச்சுக்குங்க… அப்புறம் ஊர்க்கட்டுப்பாட்டுக்கு பூசாரிக்கு எங்க போறது? கோயில வுட்டுத் தூக்குனா என்னா பண்ணுவாங்கிறீங்க? பத்தடி தள்ளிப்போய் மதகுல உக்காந்து விப்பான்… அதுக்குப் பேசாம கண்டிக்குற ஆள வுட்டு, லைட்டா கண்டிச்சு வுட்டுருவோம். மெல்ல சாராயம் விக்காத அளவுக்கு நேரு சீரு பண்ணிகிட்டா போதும். ரொம்ப இறுக்கிப் புடிச்சோம்னு வச்சுக்குங்க… அப்பறம் நமக்குதான் பிரச்சன.. இதான் எனக்குத் தெரிஞ்ச யோசன… பிறகு நீங்கதான் சொல்லணும். ”

நாட்டாமையின் வார்த்தைகளின் தீவிரம் தெரிந்தவுடன்… ராசுவும், டிரஸ்டியும் கோபத்திலிருந்து விவரத்திற்கு இறங்கி வந்தார்கள். “நல்ல வேலண்ணே! கோவத்துல நாங்க கூட வேற மாதிரி நெனச்சோம். மத்ததப் பத்தி ரோசன வல்ல! சரிதாண்ணே நீங்க சொன்னபடி லைட்டா கண்டிச்சுட்டு வுட்டுருவோம்” மெலிதாகச் சிரித்துக் கொண்டே கலைந்தனர். “மகமாயி… மகமாயி… நீதான் காப்பத்தணும்..”  ட்ரஸ்டியின் குரலில் நெளிவு சுளிவு தெரிந்தது.

-துரை சண்முகம்.

___________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்

 1. அந்தோ பிராமணர்கள் இப்படியாகிப்போனோமே என்று ???
  பிராமணர்கள் கழிவறை, சாக்கடை சுத்தம் செய்பவர்களாக, ரிக்சா இழுப்பவர்களாக, கட்டிட வேலை, கூலி வேலை , எடுபிடி வேலை செய்பவர்களாக விடியோ காணுங்கள்.

  CLICK ///////எப்படியிருந்த நாங்கள் இப்படியாகி போய்ட்டோம். அந்தோ பிராமணர்கள் இப்படியாகிப்போனோமே என்று ??? ///// READ

  .
  .

  • இதில் வியக்க என்ன இருக்கின்றது என்று புரியவில்லை…
   ஒரு பக்கம் பலர் (சில தோழர்கள் உட்பட) பார்ப்பனர் இத்தகைய வேலைகளை செய்வதில்லை என்கிறார்கள்…இப்பொழுது செய்கிறார்கள் என்று தெரிகிறது…

   வீடியோவில் ஒரு சிறுவன் சூரியன் குதிரை என்று கூறுவதைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது…

   சமூகத்தின் அறிவுக்கண் திறக்க வேண்டும் 🙁

 2. நெளிவு, சுளிவு பக்தியைப் பற்றி இங்கு பின்னூட்டமிடும் பார்ப்பனத்துவேஷிகள் கமுக்கமாக இருப்பது வியப்பளிக்கவில்லை..!!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க