privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க'அம்மாவின்' இலவச ஆடுகள் ஐயோவென செத்து மடிகிறது!

‘அம்மாவின்’ இலவச ஆடுகள் ஐயோவென செத்து மடிகிறது!

-

செய்தி-15

ஆடு“அய்யா என் கெணத்த காணோம்ய்யா” என்று காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுப்பார் வடிவேலு. அது போலவே அம்மா கொடுத்த இலவச ஆட்டில் 450-ஐக் காணோம் என்கிறார்கள் திருப்பூரில் ஆய்வு செய்ய வந்த கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள். பிறகு அந்த ஆடுகள் செத்துப் போயிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். கேட்டால் அம்மாவட்டத்தில் பெண்களுக்கு ஆட்டை எப்படி வளர்ப்பது எனத் தெரியவில்லையாம். அதற்கு பயிற்சி தர வேண்டுமாம். ஜெயா அறிவித்த இலவச ஆடு வழங்கும் திட்டத்தின் யோக்கியதைக்கு இந்த ஒரு செய்தியே போதுமானது.

இதுவரை 5700 பேருக்கு 22,796 ஆடுகள் திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆடுகளது பற்றாக்குறையால் வேறு மாவட்டத்திலிருந்தும் ஆடுகளை விலைக்கு வாங்கி இத்திட்டத்தின் கீழ் இலவசமாக தந்தார்களாம். அந்த மாவட்டத்தில் பற்றாக்குறை வராதா எனக் கேட்பவர்கள் மேற்படி வடிவேலுவின் நகைச்சுவையை இன்னொரு முறை கேளுங்கள். இலவசமாக வழங்கப்பட்ட ஆடுகளே அதிகாரிகளால் மீண்டும் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு பிறகு இன்னொருவரிடம் இலவசமாக தரப்படும். இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளால் ஆடுகளின் எண்ணிக்கை பதிவேட்டில் அதிகரித்து விட்டது. இல்லாத ஆடுகளை கணக்கெடுத்த அதிகாரிகளுக்கு 450 குறைந்துள்ளது தெரிய வரவே, அவையெல்லாம் செத்துப் போய்விட்டதாக அறிவித்து விட்டார்கள்.

ஆடுகள் ஏன் செத்தன என்ற கேள்விக்கு பதிலாக ஆடுமேய்க்க பெண்களுக்கு பயிற்சி தர வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கிறார்கள் அதிகாரிகள். இதில் நடந்த பரிவர்த்தனை காலங்களில் ஆட்டுக்கு இரை கிடைத்ததா? என்பதை திருடிய மாவட்ட அதிகாரிகள்தான் சொல்ல வேண்டும்.

ஆடு வளர்க்க என்ன தேவை என்பதை விவசாயி வீட்டு பச்சைக் குழந்தை கூட சொல்லி விடும். நீர்நிலையும், மேய்ச்சல் நிலமும் அவசியம். திருப்பூரின் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட நொய்யலாற்றைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு திருப்பூரின் கிணறுகளில் கூட நீரின் நிறம் மாறியிருப்பது தெரியும். மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மிஞ்சிய நீர்நிலைகள் ரியல் எஸ்டேட்டுக்கு காவு கொடுக்கப்பட்டதும் கால்நடைகளின் கடைசி நம்பிக்கையை பெயர்த்து விட்டது. இந்த சூழ்நிலையில் வளர்க்கப்படும் ஆட்டை மருந்து, ஊசி, மருத்துவம முகாம் நடத்தி எல்லாம் வளர்க்க முடியுமா? இதெல்லாம் ஆய்வுசெய்த கால்நடை மருத்துவ அதிகாரிகளின் பார்வைக்கு தேவையில்லாமல் இருந்தாலும், இவற்றை விவசாயிகள் அறிந்தே இருக்கிறார்கள். அதிலும் அரசு ஆடு கொடுக்கும் என்றெல்லாம் தெரியாத காலத்திலேயே தனித்து வாழ வேண்டிய கட்டாயத்திற்காளான பெண்கள் ஆடு, கோழி வளர்த்தும்தான் முதிய வயதில் கூட தங்களைப் பராமரித்துக் கொண்டார்கள். இவர்களுக்கு ஆடு பராமரிக்க சொல்லித் தரப் போகிறார்களாம். எப்படி சுயகவுரவத்தோடு கடன் வாங்காமல் பிழைப்பது என்பதை இவர்களிமிருந்து கற்க வேண்டிய, நாட்டையே அடகு வைத்த அரசு இவர்களுக்கு கற்றுத்தரப் போகிறதாம்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள்தான். பின்னே கலெக்டர் புல் பிடுங்க சொல்லித்தர, தொரட்டி கொம்பின் பயன்பாட்டை தாசில்தார் விளக்க, கால்நடை மருத்துவ அதிகாரிகள் ஆடு மேய்க்க, இவற்றையெல்லாம் ஜெயா லைவ்வாக வீடியோ கான்பரன்சிங்கில் பார்க்க என மாவட்டமே களைகட்டும் அந்த நாள் விரைவில் வந்துவிடும் போலும்.

__________________________________

வினவுடன் இணையுங்கள்