Sunday, December 1, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கிரானைட் மாஃபியா கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடை!

கிரானைட் மாஃபியா கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடை!

-

செய்தி -30

”கிரானைட் மாபியாக்கள் பி.ஆர்.பழனிச்சாமி, துரை தயாநிதி, அரசு அதிகாரிகளைக் குண்டர் சட்டத்தில் சிறையிலடை!
கொள்ளையடித்துச் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்!
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரித்துக்கொடு!”

ஆகிய முழக்கங்களை முன்வைத்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளை சார்பாக 21.08.2012 அன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் இரா.நல்லகாமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைக்கிளையின் துணைச் செயலாளர் – உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், மாவட்டச் செயலாளர் ம.லயனல் அந்தோணிராஜ், ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கதிரவன், ம.உ.பா. மைய உறுப்பினர் ப.ரவி, துணைத்தலைவர் – வழக்கறிஞர் பா.நடராஜன் ஆகியோர் உரையாற்றினர்.

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விரிந்து கிடக்கும் கிரானைட் குன்றுகளை கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து, வெட்டி எடுத்ததன் மூலம் மக்கள் பணம் பல லட்சம் கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக்கப்பட்டுள்ளன. மேய்ச்சலுக்கு வாய்ப்பில்லாமல் கால்நடைகள் அழிந்து போயின. இக்குவாரிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இருபது ஆண்டுகளாக தொடர்ந்து புகார் கொடுத்தும் செவி  சாய்க்காத அரசு இப்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதுவும் முந்தைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் துணிந்து இறங்கி, ஆய்வு செய்து திரட்டிய தகவல்களை 13 பக்க அறிக்கையாக அரசு மற்றும் அரசுத் துறைகளுக்கு அனுப்பியதன் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை அனுப்பிய சகாயம் அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் வேறு துறைக்கு  உடனடியாக மாற்றப்பட்டார். தற்போதைய மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை மேற்கொள்கிறார். சகாயத்தை மாற்றியதும், அன்சுல் மிஸ்ராவைக் கொண்டு வந்ததும் பி.ஆர்.பி. கிரானைட் மாபியா கும்பல் தான் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் கிரானைட் மாபியா கும்பல் மீதான இந்த நடவடிக்கை உண்மையானது தானா என்கிற ஐயம் மக்கள் மத்தியில் எழுகிறது.

சகாயம் தன்னுடைய அறிக்கையில் ரு.16,338 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையான இழப்பு பல லட்சம் கோடியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக 18 குழுக்களாகப் பிரிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை முழுமையாக மதிப்பீடு செய்ய முடியவில்லை. இன்னும் ஆய்வு நீளுகிறது. இந்த மெகா ஊழலில் சம்பந்தப்படாத துறையே இல்லை என்று சொல்லலாம். கனிம வளத்துறை, வருவாய்த் துறை, கலால் துறை, வருமானவரித் துறை, காவல் துறை, நீதித் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் போன்ற துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பி.ஆர்.பி. கும்பலிடம் மாத ஊதியம் பெற்று வந்துள்ளனர்.

அது போலவே எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், உள்ளுர் பிரமுகர்களும் லஞ்சம் பெற்றுக்கொண்டு கிரானைட் மாபியா கும்பலின் கொள்ளைக்குத் துணை போய் உள்ளனர். சரணடைய எஸ்.பி அலுவலகத்துக்கு ஆக. 18 ம் தேதி வந்த பி.ஆர்.பி யிடம், ”ஏன் மாமா தேவையில்லாம ஓடி ஒளியுறீங்க. நான் சொன்னப்பவே சரண்டராயிருந்திருக்கலாம். இப்பவும் உங்கள ஒண்ணும் பண்ண முடியாது. கவலப்படாதீங்க” என்று தேற்றியிருக்கிறார் மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி.

கிரானைட்-கொள்ளை

விவசாயத்திற்கு ஆதாரமான பல கண்மாய்களுக்கு பாதுகாப்பாக இருந்து வந்த பல குன்றுகள் சூறையாடப்பட்டதன் விளைவாக கண்மாய்கள் பாழடைந்து, விவசாயம் நசிந்து விட்டது. எண்ணற்ற கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் பறிபோயின. வைகைப் பாசன நீர்வரத்துக் கால்வாய்கள் திட்டமிட்டே தூர்க்கப்பட்டுள்ளன.

அரசு புறம்போக்கு நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுடைய நிலங்கள் மிரட்டிப் பறிக்கப்பட்டுள்ளன. நிலம் தர மறுத்தவர்கள் கிரானைட் மாபியாக்களின் குண்டர் படையினால் தாக்கப்பட்டனர், பலர் கொல்லப்பட்டனர். மதுரை – மேலூர் மார்க்கத்தில் தெற்குத் தெருவைச் சுற்றியுள்ள பல கிராமங்களும், மேலூர் – திருப்பத்தூர் மார்க்கத்திலுள்ள கீழையூர், கீழவளவு, செம்மினிப்பட்டி, இ. மலம்பட்டி போன்ற கிராமங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது.

கிரானைட் குவாரிகளில் பணிபுரிந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டதோடு, விபத்துக்களில் இறந்தவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்காமல் தரகர்களை வைத்து சரிக்கட்டி உள்ளனர். பி.ஆர்.பி. கிரானைட் மாபியா கும்பல் குண்டர் படையை மாத்திரமல்லாமல், ஒரு உளவுப்படையையும் வைத்துக் கொண்டு மக்களை வேவு பார்த்து, தண்டித்தும் வந்துள்ளது. இதற்கு காவல் துறையினர் உறுதுணையாக இருந்துள்ளனர். தொழில் சிறப்பாக  நடைபெற  வேண்டும் என்பதற்காக மலை மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டு நரபலி தரப்பட்டதோடு மக்கள் பயபீதியூட்டப்பட்டுள்ளனர்.

மேலூர் வட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பி.ஆர்.பி. கும்பலின் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும் நிலைமை தொடர்கிறது. அரசின் அனைத்துத் துறைகளும் அவரது சட்டத்திற்கு உட்பட்டே நடந்து கொண்டன. மதுரை உயர்நீதி மன்றக் கிளைக்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி வந்த போது பி.ஆர்.பி. யின் ஆடம்பர பென்சு கார் தான் அவரை அழைத்து வந்தது என்பதிலிருந்து பி.ஆர்.பி. யின் செல்வாக்கு மட்டம் என்ன என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்  எடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஜெயலலிதா உருவாக்கி வருகிறார். இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று அவர் கனவு காண்பதன் ஒரு பகுதியாக, எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, மக்களை ஏய்த்து ஓட்டுப் பொறுக்குவதற்காக ஜெயலலிதா ஆடி வரும் நாடகமே கிரானைட் மாபியாக்கள் மீதான இந்நடவடிக்கைகள். இனப்படுகொலை பாசிஸ்ட் நரேந்திர மோடி பாணியில் ஜெயலலிதா நடத்திவரும் இந்த நாடகத்தை ஊடகங்களும் புகழ்ந்து வருகின்றன.

மலையை விழுங்கியவர்களை விட்டுவிட்டு எலியைப் பிடித்தவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது அரசு. பி.ஆர்.பி. யிடம் பெட்டிபெட்டியாக வாங்கியவர்கள் (அதிமுகவையும் உள்ளிட்டு)வாய்மூடி மௌனியாக இருக்கின்றனர். நீதிமன்றங்களின் பெட்டகங்களுக்குள் செல்கின்ற வழக்கு ஏடுகள் பல ஆண்டுகள் ஆனாலும் வெளியே வருவதில்லை  என்பது கண்கூடு. அப்படியே வந்தாலும் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மக்கள் இப்படிப்பட்ட ஊழலைத் தடுக்க தாமே மக்கள் படைகளை அமைத்து போராட முன்  வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அனைவரும் தெரிவித்தனர்.

_______________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. கிரானைட் மாபியா கும்பலின் ஊழலை அரசு மட்டும் தான் விசாரிக்க வேண்டும்,அதிகாரிகள் தரும் தகவல்களைத்தான் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்கிற நிலை அரசு பாசிஸ்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் பி.ஆர்.பி.யிடம் தக்க சன்மானம் பெற்றுக்கொண்டு,பெரிய பெரிய விளம்பரங்களையும் பெற்றுக்கொண்டு அவரை மாபெரும் சாதனையாளர்,இந்திரன்,சந்திரன் என்று புகழ்ந்து தள்ளிய பத்திரிகையாளர்களுக்கு இது ரொம்பவும் வசதியாகப் போய்விட்டது.மன்னார்குடி,பிராதுக்காரன் பட்டியைக் காப்பாற்றிவிடும்.ஊடகங்களுக்கு செம வருமானம்.வாசகர்களுக்கு நொறுக்குத் தீனி.வாழ்விழந்து நிர்கதியாய் நிற்கின்ற விவசாயிகளுக்கு உதவப் போகிறவர்கள் யார் என்பதே கேள்வி.

  2. இந்தியச் சட்டத்தின் மேல் அதீத நம்பிக்கை வைத்துத் தானே இவர்கள் தப்பே செய்ய ஆரம்பிக்கிறார்கள். இந்தச் சட்டத்தினால் நம்மை எதுவும் செய்யமுடியாது என்பது அறிந்தே செய்யும் இவர்களை சிறையில் அடைப்பதனால் என்ன பயன்? ஒன்று கண்டும் காணாமல் விட்டுவிட்டு போக வேண்டும். அல்லது கண்டம் துண்டமாக வெட்டி விட்டுப் போக வேண்டும்.

    • //ஒன்று கண்டும் காணாமல் விட்டுவிட்டு போக வேண்டும். அல்லது கண்டம் துண்டமாக வெட்டி விட்டுப் போக வேண்டும்.//
      சரியாய் சொன்னீங்க

  3. ” “தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்” எடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஜெயலலிதா உருவாக்கி வருகிறார்”
    இரத்தத்தின் இரத்தங்களுக்கு ஜெ-வை புகழ்ந்து கட் அவுட் வைப்பதற்கு ஒரு வாக்கியத்தை அமைத்துக் கொடுத்துவிட்டீர்களே!

  4. ஒரு பத்திரிகை ஆசிரியர் கொடுத்த புகாரை அறிக்கையாக மாற்றி அரசுக்கு அனுப்பிவிட்டு தனது கடமையை முடித்துக் கொண்டார் சகாயம். தமிழக அரசு நடவடிக்கை என்ற பெயரில் களமிறங்கியவுடன் தனது ஊடக நண்பர்கள் மூலம் அறிக்கையை வெளிவரச் செய்து பெயர் வாங்கிக் கொண்டார் சகாயம். ஏன் அவரது காலத்தில் கிரானைட் குவாரிகள் செயல்படவில்லையா? எத்தனை குவாரிகளில் சோதனையிட்டார்? யார் மீதாவது நடவடிக்கை எடுத்தாரா? அவர் ஒரு அதிமுக அனுதாபி. திமுகவினர் செய்யும் ஊழல் மட்டும்தான் அவர் கண்ணுக்குத் தெரியும்.
    தன்னை நேர்மையானவர் என்று கூறும் சகாயம் நேர்மையாக இல்லாவிட்டால் அரசு பதவி வகிக்க முடியாது என்பது தெரியாதா?
    தமிழகம் முழுவதும் கிரானைட் மோசடிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. எல்லா இடத்திலும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவுமில்லை.

    • “நேர்மையாக இல்லாவிட்டால் அரசு பதவி வகிக்க முடியாது என்பது தெரியாதா?” அய்யா உங்ஙள் பதில் என்னக்கு புல்லரிக்க வைக்குது. அய்யொ அய்யொ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க