Friday, March 21, 2025
முகப்புஉலகம்அமெரிக்கா"விளம்பரத்தை பாக்கலேன்னா கொன்னேபுடுவேன்!" - ரூபர்ட் முர்டோச்

“விளம்பரத்தை பாக்கலேன்னா கொன்னேபுடுவேன்!” – ரூபர்ட் முர்டோச்

-

செய்தி-51

முர்டோக்மெரிக்காவின் டிஜிட்டல் தொலைக்காட்சி வினியோக நிறுவனம் டிஷ்,  நிகழ்ச்சிகளை விளம்பரங்கள் இல்லாமல் பதிவு செய்து பின்னர் பார்க்கும் ஆட்டோஹாப் (AutoHop) என்ற வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கு இடைக்காலத் தடை விதிக்கும் படி ரூபர்ட் முர்டோச்சுக்கு சொந்தமான பாக்ஸ் நிறுவனம் லாஸ் ஏஞ்சலீஸ் நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களான பாக்ஸ், சிபிஎஸ், காம்காஸ்ட் போன்றவற்றுடன் ஒப்பந்தம் போட்டு அவர்களின் நிகழ்ச்சிகளை சந்தா தொகை கட்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் வினியோகிக்கிறது டிஷ் நிறுவனம். டிஷ் தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாளின் முக்கியமான நேரங்களில் (பிரைம் டைம்) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பதிவு செய்து அடுத்த நாட்களில் பார்க்கும் வசதியை சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது.

இதற்கு எதிராக அமெரிக்காவின் நெட்வொர்க் தொலைக்காட்சிகள் கடந்த மே மாதம் வழக்கு தொடர்ந்தன. “நிகழ்ச்சிகளை பதிவு செய்து பின்னர் பார்க்கும் வசதி செய்து தருவதன் மூலம் டிஷ் நிறுவனம் தங்களது விளம்பர வருமானத்தை பாதிப்பதாகவும், வியாபார அடிப்படையையே தகர்ப்பதாகவும்” தொலைக்காட்சி நிறுவனங்களின் வழக்கறிஞர் ரிச்சர்ட் ஸ்டோன் குற்றம் சாட்டுகிறார். “விளம்பரங்களை தவிர்த்து விடும் தொழில் நுட்பத்தை மக்கள் பயன்படுத்தினால் விளம்பரதாரர்கள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கொடுக்கும் கட்டணத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல் விளம்பரம் கொடுப்பதையே நிறுத்தி விடுவார்கள்” என்று வாதிடுகின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

“நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்வதற்கான கட்டணமாக பல நூறு மில்லியன் டாலர்களை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு செலுத்துவதாகவும், சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்கள் விரும்பிய நேரத்தில் விளம்பரங்கள் இல்லாமல் நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதியை செய்து தர தனக்கு உரிமை உண்டு” என்றும் டிஷ் டிவி வாதாடுகிறது.

தொலைக்காட்சி ஒளிபரப்பின் ஆரம்ப கால தொழில்நுட்பத்தில் பார்வையாளர்களிடமிருந்து காசு வாங்குவதற்கான நடைமுறை சாத்தியம் இல்லாமல் இருந்தது. அரசு தொலைக்காட்சிகள் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்பட்டன. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செலவை ஈடு கட்டுவதற்காக  நிகழ்ச்சிகளுக்கு நடுவில் வணிக விளம்பரங்களை காட்டி சம்பாதித்தன.

காலப் போக்கில் தனியார் நிறுவனங்களின் லாப வேட்டை நிகழ்ச்சிகளின் மத்தியில் விளம்பரம் என்பதை விளம்பரங்களுக்காக நிகழ்ச்சிகள் என்று மாற்றி விட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் பார்வையாளர்களின் கவனத்தை விளம்பர நிறுவனங்களுக்கு விற்பதுதான் தொலைக்காட்சி நிறுவனங்களின் நோக்கம் என்ற நிலை ஏற்பட்டது.

கலை என்பது மக்களுக்காக என்று சொல்லப்பட்டு ‘சன் டிவி நேயர்களே, விஜய் டிவி நேயர்களே’ என்று வசனங்கள் தினமும் நம் காதுக்குள் விழுந்தாலும் பலரது வீட்டு உறுப்பினராகவே ஆகியிருக்கும் தொலைக்காட்சிகள் இளைஞர்களுக்கு சினிமா, குழந்தைகளுக்கு சுட்டி டிவி, பெண்களுக்கு அழுகைத் தொடர்கள் என்று மக்களின் பொழுதுகளை களவாடி விளம்பர நிறுவனங்களுக்கு விற்கின்றன என்பதுதான் நிதர்சனம். காலையில் பயன்படுத்தும் பற்பசை முதல், இரவு தூங்கும் போது பயன்படுத்த வேண்டிய கொசுவர்த்தி சுருள் வரை விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகின்றன.

தொலைக்காட்சி தொழில் நுட்பம் வளர்ந்து கேபிள் தொலைக்காட்சி, டிடிஎச் (நேரடி வீட்டு இணைப்பு) போன்ற முறைகளில் வாடிக்கையாளரிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்கும் சாத்தியம் ஏற்பட்ட பிறகு அமெரிக்காவில் ‘விளம்பரம் இல்லாத தொலைக்காட்சி’ என்று வாடிக்கையாளர்களிடம் கேபிள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களிடமிருந்து சந்தா பணம் மூலம் கணிசமான வருமானம் பெற ஆரம்பித்த தொலைக்காட்சி நிறுவனங்கள், காலப் போக்கில் விளம்பரங்களையும் மீண்டும் அறிமுகப்படுத்தி சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை விளம்பரம், நிகழ்ச்சியின் போதே திரையில் துள்ளி வரும் விளம்பரங்கள்,  நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முதல் விநாடிகளில் விளம்பரம் என்று  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரங்களால் நிறைக்கப்பட்டிருக்கின்றன.

தொலைக்காட்சி நிறுவனங்களின் இந்த லாப வெறிக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அதனால் லபோ திபோ என்று அடித்துக் கொண்டு நீதிமன்ற படிகளில் ஏறுகின்றனர் முர்டோச் முதலான முதலாளிகள். அடுத்த கட்டமாக “விளம்பர இடைவேளையின் போது பார்வையாளர் கழிவறைக்கு போவதை சட்ட விரோதமாக்க வேண்டும்” என்று வழக்கு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மக்களுக்கான சேவை, அனைவருக்கும் சுயேச்சையாக தேர்வு செய்யும் உரிமை என்றெல்லாம் பீத்திக் கொள்ளும் முதலாளித்துவ அமைப்பில் மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் தமது லாப வேட்டை தொடர்வதற்காக முதலாளிகள் புதிய தொழில் நுட்பங்களை முடக்குகின்றனர் என்பதுதான் நடைமுறை.

இதையும் படிக்கலாம்

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. போகிற போக்கைப் பார்த்தால்“விளம்பர இடைவேளையின் போது பார்வையாளர் கழிவறைக்கு போவதை சட்ட விரோதமாக்க வேண்டும்” என்று வழக்கும் வரத்தான் போகிறது

  2. தொழிளாளிகளின் பாதுகாப்பில் அரசின் ஊடுருவல் அதிகம் என்று கதறும் முதளாளிகள் தனது வியாபரம் பாதிக்கப்படுகிறது என்ற நிலையில் அரசின் உதவி நாடி ஓடுவது பச்சோந்தித்தனமானதும் நகைப்பிகுறியதும் ஆகும்.

  3. ““விளம்பரத்தை பாக்கலேன்னா கொன்னேபுடுவேன்!” – ரூபர்ட் முர்டோச்”

    அய்யய்யோ.. சுவிட்சை ஆஃப் பண்ணுனாலும் டி.வி. ஆஃப் ஆக மாட்டேங்குதே..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க