Saturday, April 17, 2021
முகப்பு அரசியல் ஊடகம் 300 கோடி கொள்ளைக்கு காத்திருக்கும் தமிழ் சினிமா!

300 கோடி கொள்ளைக்கு காத்திருக்கும் தமிழ் சினிமா!

-

தமிழ்-சினிமா

மின்வெட்டோடு மின் கட்டணமும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. ஒரு வேளை வயிறார உண்ணுவதற்கே கடுமையாக உழைக்க வேண்டுமென்ற நிலையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்வது கூட ஆடம்பரமான செயலாகி விட்டது. யானையைக் கூட கட்டி மேய்க்கலாம் போலிருக்கிறது. ஆனால், பிள்ளைகளை ஆரம்பப் பள்ளிக்கு கூட அனுப்ப முடியவில்லை. இவைதான் பெரும்பாலான தமிழக மக்களின் இன்றைய நிலை.

இத்தகைய வறண்ட தமிழகத்தில்தான் இந்த ஆண்டு முடிவதற்குள் எப்படியும் ரூபாய் 300 கோடி வரை சுரண்டி விட வேண்டும் என்று தமிழ்ச் சினிமா பணப்பயிராக படையெடுப்பதற்கு தயாராகிறது.

வரும் வெள்ளிக்கிழமையை (07.09.12) தவிர்த்து விட்டால், இந்த ஆண்டு முடிய இன்னும் 16 வாரங்கள் இருக்கின்றன. இந்த மூன்றரை மாதங்களுக்குள்தான் விக்ரம் நடித்த ‘தாண்டவம்’, கமலின் ‘விஸ்வரூபம்’, விஜய்யின் ‘துப்பாக்கி’, சூர்யாவின் ‘மாற்றான்’, கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’, விஷாலின் ‘சமர்’, முன்னணி இயக்குநர்கள் என ‘சொல்லப்படும்’ பாலாவின் ‘பரதேசி’, மணிரத்னத்தின் ‘கடல்’, கவுதம் வாசுதேவ் மேனனின் ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்த 9 படங்களும் ‘ஹை பட்ஜெட்’ படங்கள். எனவே நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு நடைப்பெற்ற நாட்கள், இடங்கள், கிராபிக்ஸ் பணிகள், இசை – ஒலி சேர்க்கை, படம் தொடர்பான விளம்பரங்கள் என மொத்தமாக சேர்த்து இந்த ‘நவரத்தினங்களை’ உருவாக்கி முடிக்க குறைந்தபட்சம் ரூபாய் 300 கோடி செலவாகி இருக்கும் என உறுதியாக சொல்லலாம். துல்லியமாக கணக்கிட்டால் இதை விட அதிகமானத் தொகைதான் வரும்.

இந்த ஒன்பது படங்கள் தவிர, ‘நாடோடிகள்’ சசிகுமார் நடித்திருக்கும் ‘சுந்தர பாண்டியன் உட்பட வேறு சில நடுத்தர மற்றும் லோ பட்ஜெட் படங்களும் இந்த 16 வாரங்களில் வெளியாக காத்திருக்கின்றன. ஆக மொத்தமாக கணக்கிட்டால் எப்படியும் ரூபாய் 350 கோடி செலவாகியிருக்கலாம்.

இந்தத் தொகையை எப்படி எடுக்கப் போகிறார்கள்? செவ்வாய் கிரகத்தில் விற்றா?

இல்லை. நம்மிடம் பிக்பாக்கெட் அடித்துத்தான். அதுவும் செப்டம்பர் 14ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31 முடிய இருக்கும் இந்த 109 நாட்களுக்குள்தான் நம் வருமானத்தில் கணிசமானவற்றை எடுத்து லாபம் சம்பாதிக்கப் போகிறார்கள்.

பிழைப்புக்காகவும், வீட்டுக் கடனை அடைப்பதற்காகவும், சகோதரிகளின் திருமணத்தை நடத்தி முடிப்பதற்காகவும் வெளிநாடு சென்றிருப்பவர்களும், வெளிநாட்டிலேயே வசிக்கும் தமிழர்களும் கூட இந்த ‘நவரத்தினங்களும்’ ஜொலிப்பதற்காக தங்கள் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் பணையம் வைக்க வேண்டும். அப்படி வைப்பதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அனைத்தையும் இந்தத் தயாரிப்பாளர்கள் செய்து முடித்து விட்டார்கள்.

இதற்காகவே விநாயக சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். சின்னத்திரைகள், இந்த விழா நாட்களில் மேலே சொன்ன 9 படங்களையும் மையமாக வைத்தே நிகழ்ச்சிகளை ஒளி(லி)பரப்பத் தயாராகி விட்டன. இயக்குநர் பேட்டி, நடிகர்களின் நேர்காணல், நடிகைகளின் அழகுக் குறிப்புகள், புதுப்பட பாடல்கள் என வெவ்வேறு பெயர்களில் இந்தப் படங்களின் செய்திகளை வெளியிட்டு, எப்படியெல்லாம் மக்களின் மனதை ஆக்கிரமிக்கலாம் என ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

உழைக்கும் மக்களுக்கு ஓய்வு நாட்கள் என்பது மறுநாள் உழைப்பதற்கான சக்தியை தரும் பொழுதுகள் மட்டுமல்ல. சமூகரீதியில் தங்களது வாழ்க்கை பிரச்சினை குறித்து செலவிடும் நேரம்தான் அது. இந்நேரத்தைத்தான் நம் அனுமதியில்லாமலேயே ஊடகங்கள் களவாட ஆரம்பித்திருக்கின்றன.

இதற்கு ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் உள்ளிட்ட வார இதழ்களும், தினசரிகளும் துணை நிற்கப் போகின்றன. எந்தப் படம் தங்கள் பத்திரிகைக்கு விளம்பரம் தருகிறதோ அந்தப் படம் குறித்து அட்டைப்பட செய்திகளை வெளியிடப் போகிறார்கள். சம்பந்தப்பட்ட நடிகர் – நடிகைகளின் அரைவேக்காட்டு அபத்தங்களை சிந்தனைச் சிதறல்களாக பிரசுரிக்கப் போகிறார்கள்.

இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்த 9 படங்கள் குறித்த செய்திகள்தான் நம் முகத்தில் அறையப் போகின்றன. ஒருவேளை உணவுக்காக சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் இரவுப் பகலாக பணிபுரியும் தொழிலாளர்கள் வெடி விபத்தில் இறந்தாலும் அது ‘பத்தோடு பதினொன்றாக’ வெறும் செய்திதான். ஆனால், அதே சிவகாசியில் பளப்பளா தாளில் அச்சாகும் இந்த ஒன்பது படங்களின் ஜிகுஜிகு போஸ்டர் இருக்கிறதே… அது முக்கியம். அது தரும் விளம்பர வருமானம் அவசியம்.

எப்படி ‘கிரகம் சரியில்லை… இந்தப் பரிகாரம் செய்… அதற்கு இவ்வளவு செலவாகும்… என்னிடம் கொடுத்தால், அதை பாதி செலவில் நான் செய்துத் தருகிறேன்…’ என்று ‘நவகிரகங்களின்’ பெயரால் பொய் சொல்லி, மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து ஜோதிடர்கள் பணம் பறிக்கிறார்களோ – அப்படி சமூக இணையதளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், பதிவுகள் போன்ற இடங்களில் ‘இந்தப் படம் சரியில்லை… இவர் நடிப்பு மோசம்… இந்த கேமரா ஆங்கிள் சுத்த ஹம்பக்… இந்தப் பாட்டு ஆஹா… இந்த காமெடி மொக்கை… படத்தில் இந்த இடம் டிவைன்… சிறுவயதில் என் வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் நடந்தது…’ என்றெல்லாம் எழுதி, இந்த ‘நவகிரகங்களுக்கும்’  – 9 படங்களுக்கும் –  நவீன இணைய ஜோதிடர்கள் ராசிப் பலன் சொல்லி ஹிட்ஸ், லைக் என அள்ளுவதற்காக குட்டிக்கரணம் அடிக்கப் போகிறார்கள்.

பண்ணையடிமைகள் குறித்து கேள்விப்பட்டிருக்கலாம். நிலச்சுவாந்தார்களின் வீட்டிலும், நிலத்திலும் பொழுதெல்லாம் உழைக்க வேண்டும். இதற்காக ஒரு பைசா கூட சம்பளமாக கிடைக்காது. இந்த உழைப்பு நேரம் போக ஒருவேளை சொந்தமாக துண்டு நிலம் இருந்தால் உழைக்கலாம். அப்போதும் அறுவடை காலத்தில் குறிப்பிட்ட மகசூலை பண்ணையார்களுக்கு கொடுத்துவிட வேண்டும்.

இப்போது பண்ணையார்கள் அல்லது நிலச்சுவாந்தார்கள் என்ற பிரிவினர், நடிகர், நடிகைகளாகவும், தயாரிப்பாளர்களாகவும் மாறிவிட்டார்கள். பண்ணையடிமைகளும் உழைக்கும் மக்களாகவும், நடுத்தர மக்களாகவும் உருமாறி விட்டார்கள்.

ஆனால் பண்ணையடிமைகள் வன்முறை அதிகாரத்தின் பிடியில் அடிமையாக இருந்தார்கள். நாமோ சொந்த விருப்பத்துடன் தமிழ் சினிமாவிற்கு அடிமையாக இருக்கிறோம். 365 நாட்களும் சினிமா குறித்து சிந்திக்கிறோம் என்பதும் ஆண்டு முழுவதும் அடிமையாக இருக்கிறோம் என்பதும் வேறு வேறு அல்ல. இந்த பண்பாட்டு அடிமைத்தனத்தை வேரறுக்காமல் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக போராடும் பண்பு நம்மிடம் தோன்றவே தோன்றாது.

 1. அப்படியென்றால், மக்களுக்கு பொழுதுபோக்கே கூடாது என்கிறீர்களா? உங்கள் பாணியில் 24 மணி நேரமும் கம்யூனிசமா பேசிக் கொண்டிருக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் குடும்ப உறவுகளை சிதைக்கும் அழுவாச்சி சீரியல்கள், இன்சூரன்ஸ்களின் பகல் கொள்ளை, நாள் முழுவதும் பொழுதுகளைக் களவாடும் கிரிக்கெட் போன்றவற்றை விட, இரண்டு மணி நேர திரைப்படங்கள் சிறந்தது என்பேன்.

 2. மார்கழி மாத குடுகுடுப்பைக்காரன் போல் வினவு, ஆபாயத்தை அறிவிக்கும்விதமே அச்சம் தருகிறது.

  சினிமாக் கொள்ளையர்கள் இலக்கு, 350 கோடியா? கிளி ஜோசியம் போலிருந்தாலும், புது ரீலீஸ் படங்களுக்கு சூடம் காட்ட தயாராகும், ஊடக பொறுக்கி கும்பலை தோலுரித்தது, படத்தின் ஆரம்பத்திலேயே கிளைமாக்ஸ் சீன் பார்த்தது போலிருந்தது. விசிலடிக்கவைத்தது.

 3. சினிமா பார்த்து ஓட்டுப்போடக்கூடிய நம் மக்களைத்திருத்துவது கடினம்!
  ஆனால் இந்தக்கட்டுரை வினவின் வழக்கமான சவுக்கடி..

 4. மின்சாரம் செலவழித்து இன்டர்நெட் இணைப்பு செலவழித்து வாங்கி ஒரு மடிகணினி பெரும் விலை குடுத்து வாங்கி உங்களின் இந்த பதிவு படிப்பது, நீங்கள் என் காசை சுரண்டுகிறீர்கள் என்று நீங்கள் ஒத்து கொண்டால் உங்களின் இந்த பதிவு மிக சரி.

   • அப்போ மேலே கூறியது அர்த்தமான வாதமா?? என்ன ஒரு கிறுக்கு தனமான என்ன ஓட்டம் ??? அந்த நவகிரகத்து திரைப்படங்களின் பின்னால் பல்லாயிரம் பேரின் உழைப்பு இருக்கிறது ரத்தம் வியர்வை சிந்தி ஒரு வருடத்தின் ஒவ்வொரு நொடியையும் அதற்காகவே சிந்தித்து மக்கள் முன்னால் படைக்கிறார்கள் பிடித்தால் பாருங்கள் இல்லையானால் போக வேண்டிய அவசியம் இல்லையே, ஒரு படம் ஓடுவது எத்தனை பேரின் வயிற்ருக்கு சோறு கிடைகிறது தெரியுமா???? ஏதோ அணைத்து லாபங்கலுமே ஒருத்தருக்கே போவது போலல்லவா உங்கள் பதிவு இருக்கிறது??!!! இதைவிட மொத்த பதிவுமே தமிழ் நாட்டில் இப்பதிவின் எழுத்தாளரை தவிர மற்ற அனைவரும் ஏதோ ஒரு மயக்கத்தில் இருப்பது போலவும் மூடர்கள் போலவும் அதை பலர் உபயோக படுத்துவது போலவும் சித்தரிக்க பட்டு இருக்கிறது !!!!!

    • அட இத, விடுங்க இந்த வினவுகாரங்க TASMAC-கை மூட சொல்லுராங்க ஆனால் இந்த TASMAC-ல் எத்தனை தொழிலாளிகள் இரத்தம், வியர்வை சிந்தி நள்ளிரவுவரை வேலை செய்கிறார்கள்?

     இந்தி லாட்டரிசீட்டைக் கூட அரசு தடைசெய்துவிட்டது. பாவம் எத்தனை குடும்பம் அதை நம்பி இருந்தது, இந்த ஊனமுற்றோர்கள் கூட அந்த தொழிலில் சம்பாரித்து வாழ வாய்பாக இருந்தது அதை போய் தடை செய்துவிட்டார்கள்,

     கொஞ்சம் விட்டால் இவர்கள் விபச்சார தொழிலையும் ஒழிக்க சொல்வார்கள், அதை நம்பி எத்தனைபேர் பிழைகிறார்கள்.

     ஆனால் நீங்கள் மனசை தளரவிடாமல் போராடுங்க சமுதாயம் எக்கேடு கெட்டுபோனால் என்ன?

     • சார் கலாய்சுடாராமாம்…. இதுல கீழ எச்செல்லேன்ட் சூப்பர்னு சொல்ல ரெண்டு ஜிங் ஜாக் வேற…. யப்பு திருந்துன்கப்பு, போய் புள்ள குட்டி படிக்கிற வழிய பாருங்கப்பு எல்லாரும் சமூகத்த திருத்துரென்னு சொல்லிக்கிட்டு கி போர்ட எடுத்துட்டு வந்துடுரான்கப்பா….

 5. இந்த மூனுமாசத்துக்குள் மக்கள் பணத்தை 350 கோடியை ஆட்டைய போட போரானுங்களா? மக்களே, முழிச்சுருக்கும்போதே கோவணத்த உருவப்போரான் உசாரு, உசாரு,உசாரு….

 6. அப்படி என்றால் இங்கே அவ்வப்போது வினவின் சினிமா விமரிசனம் பதிவாகிறதே.. ஓ! படமே பார்க்காமல் தான் இத்தனை நாளாக திரைவிமர்சனம் எழுதிக்கொண்டிருந்தீர்களோ !!

 7. //உழைக்கும் மக்களுக்கு ஓய்வு நாட்கள் என்பது மறுநாள் உழைப்பதற்கான சக்தியை தரும் பொழுதுகள் மட்டுமல்ல. சமூகரீதியில் தங்களது வாழ்க்கை பிரச்சினை குறித்து செலவிடும் நேரம்தான் அது//

  Suuuupper appu

 8. //Communist arguments are pathetic in this capital economy and modern world//
  FYI, Communists need not necessarily be conservatives.
  And, What do you mean by modern world?

 9. MOST of the precious times are wasted in watching TV/ cinemas. While HIG people can spend their money as they wish, it is pathetic to see the lower level people spend their money heavily on the escalated tickets. Govt should restrict the cost of ticket.

  Can we waste our time just because someone invested and worked. can anyone die just to give job to vettiyan?

 10. தமிழ் பதிவர்கள் பாதிபேருக்கு மேல் சினிமா விமர்சனம் எழுதி காலம் தள்ளுகிறார்கள் என்பது ரொம்ப சரி . திருந்தாத ஜென்மங்கள் மக்கள் பயன் பெரும்படியான பதிவுகளை elutuvor குறைவு.

 11. நாமோ சொந்த விருப்பத்துடன் தமிழ் சினிமாவிற்கு அடிமையாக இருக்கிறோம்////இதுதான் கட்டுரையில் பிடித்த வரி.அது சினிமாவா இருந்தாலும் சரி,மதுவாக இருந்தாலும் சரி,தொலைக்காட்சி சேனலாக இருந்தாலும் சரி…அவரவர் தேர்வுதான்.இதுக்கு அரசாங்கம் என்ன பண்ணமுடியும்.முழித்துக் கொண்டவன் பிழைத்துக்கொண்டான்.நம் பிள்ளைகளுக்கு கலைகளின் அறிமுகமே கிடையாது.அதை சொல்லித்தர பெற்றோர்களுக்கே தெரியாத நிலைமை.

 12. மின்சாரம் செலவழித்து இன்டர்நெட் இணைப்பு செலவழித்து வாங்கி ஒரு மடிகணினி பெரும் விலை குடுத்து வாங்கி உங்களின் இந்த பதிவு படிப்பது, நீங்கள் என் காசை சுரண்டுகிறீர்கள் என்று நீங்கள் ஒத்து கொண்டால் உங்களின் இந்த பதிவு மிக சரி.

  இது சரியான கேள்வி
  ஆனால் வினவு அவர்களே நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு திரைக்கு வரும் அனைத்து படங்களையும் பார்ப்பது இல்லை எந்த படம் எங்கள் கவலைகளை மறக்க வைத்து 2.30 மணி நேரம் சந்தோசமாக வைத்து இருக்கிறதோ அதை மட்டுமே பார்க்கிறேன்..
  இணையத்தில் பல தளங்கள இருந்தாலும் உங்கள் தளம் போல இருக்கும் நல்ல பல தளங்களை மட்டுமே படிக்கிறோம் பார்ககிறோம் அது போல தான்
  இப்போது இணையத்தில் உள்ள –பேஸ்புக், டுவிட்டர— மக்கள் அவர்களுக்கு பிடித்த நாயகர் நடிக்கும் படத்தை தவிர மற்றவர்களின் படங்களை பார்க்க அவ்வளோ சீக்கிரம் தியேட்டருக்கு செல்வதில்லை.. பல விமர்சனங்களை படித்துவிட்டு படம் நல்லா இருந்தா மட்டுமே போகிறார்கள்..

  இருந்தாலும் உங்கள் எச்சரிக்கை பல அறியாப்பிள்ளைகளை விழித்தெழ வைக்கிறது

 13. எனக்கு சத்தியமா புரியல. இது எல்லாம், தயாரிப்பாளருக்கோ, நடிகருக்கோ இயக்குனருக்கோ மட்டும் போகல, இதனால பல குடும்பம் வாழுதுன்னு நான் வாதம் பேச வரல.

  இதுக்கு தீர்வு என்ன? சினிமான்னு ஒரு துறை வேணாம்ங்கறீங்களா? இல்லை அந்த துறைல வெறும் டாக்குமென்ட்டரி படம் தான் எடுக்கணும்றீங்களா?

  விளம்ப்ரம், நடிக-நடிகைகள் பேட்டி கிசு கிசு எல்லாமே விளம்பரம் தான் தெரியுது. ஆனா, நெட்டுல டவுண்லோட் பண்ணி பாக்க்ற பயபுள்ளைக தான் இங்க கமெண்ட் போடுது.

  உங்கள் கணக்குப்படி பார்த்தா, உழைக்காம நேரத்தை செலவிடக்கூடிய எல்லா வித “பொழுது போக்குகளையும்”(காசு குடுத்து போறது) (கிரிக்கெட் சினிமா பொருட்காட்சி கண்காட்சி ஆடல்-பாடல் கொண்டாட்டாங்கள் ) எல்லாத்தையும் தடை பண்ணீறனுமா?

  வினவோடு என் பல கருத்துக்கள் ஒத்துப்போகும், ஆனால் இந்தக்கட்டுரையின் சாராம்சம் என்ன என்பதும், இந்த 9 படங்கள் குறித்த விமர்சனங்கள் இனி வினவில் வராதா (அப்ப படம் நீங்க பாப்பீங்களா?) என்பதும் எனக்கு தெரியணும்!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க