Sunday, December 1, 2024
முகப்புசெய்திகாவிரி உரிமைக்காக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

காவிரி உரிமைக்காக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

-

காவிரி

காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசையும், தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசையும் கண்டித்து தஞ்சை பகுதி ம.க.இ.க சார்பாக கடந்த 3.8.12 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காவிரி நீரின்றி வறண்டு வரும் தமிழகம் !
தமிழகத்திற்கு துரோகமிழைக்கும் மன்மோகன் அரசு !
விவசாயிகளை வஞ்சிக்கும் ஜெயலலிதா அரசு !
விவசாயத்தை காவு கொள்ளும் மறுகாலனியாக்கம்!

– என்கிற முழக்கங்களை முன்வைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை ம.க.இ.க தோழர் இராவணன் தலைமை தாங்கினார்.  காவிரி பிரச்சினையில் விவசாய சங்கங்களே குறிப்பிடும் படியாக போராடவில்லை, விவசாயிகளை போராட அணிதிரட்டுவதுமில்லை, அவ்வாறு அணிதிரட்டும் முயற்சியின் ஒரு சிறு துவக்கம் தான் இந்த ஆர்ப்பாட்டம் என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் பட்டுக்கோட்டை வட்டார அமைப்பாளர் தோழர் மாரிமுத்துவும் தோழர் பொன்னுசாமியும் காவிரி பாசன விவசாயிகளின் இன்றைய நிலையையும் அதற்கான காரணங்களையும் சுட்டிக்காட்டி புரட்சிகர அமைப்புகளின் கீழ அணிதிரள்வதே இதற்கு தீர்வு என்று அறைகூவல் விடுத்தனர்.

இறுதியில் கண்டன உரையாற்றிய ம.க.இ.க மாநில இணைசெயலாளர் தோழர் காளியப்பன் காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடுகின்ற அதே வேளையில் நீர்வளங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்கும் தேசிய நீர்க்கொள்கையையும் முறியடிக்க வேண்டிய கடமையை வலியுறுத்தினார்.

காவிரி நீரில் தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையை மறுத்து அடாவடித்தனம் செய்து வரும் கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதோடு,  உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட மறுத்து வரும் மத்திய அரசையும் அம்பலப்படுத்தினார். விளை நிலங்களை வீட்டுமனைகளாக்குவதையும் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விவசாயத்திலிருந்து விவசாயிகளை விரட்டியடிக்கும் தனியார்மயக்கொள்கையை ஒழித்துக்கட்டவும்,  நாடு மீண்டும் காலனியாவதை தடுத்து நிறுத்தவும் அறைகூவி அழைப்பதாக அமைந்த இந்த ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களிடமும், விவசாயிகளிடமும் பெருத்த ஆதரவை பெற்றது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க