privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமரிக்கானா படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!

மரிக்கானா படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!

-

தொழிலாளர்கள்-கொலை-11தென்னாப்பிரிக்காவில், கடந்த ஆகஸ்ட் 16 அன்று  வேலை நிறுத்தம் செய்த பிளாட்டினச் சுரங்கத் தொழிலாளர்கள் மீது அந்நாட்டு போலீசுப் படை கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி 34 தொழிலாளர்களைப் படுகொலை செய்துள்ளது.78 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். 259 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலையை நினைவூட்டும் வகையில், நாற்புறமும் அரண்களை ஏற்படுத்தி தப்பி ஓட முடியாதபடி சுற்றிவளைத்துக்கொண்டு, தானியங்கித் துப்பாக்கிகள் மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தப் பயங்கரவாதப் படுகொலையை நடத்தி முடித்திருக்கிறது தென்னாப்பிரிக்கக் கொலைகாரப் போலீசுப் படை.

ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து ஏறத்தாழ 100 கி.மீ. தொலைவிலுள்ள ரஸ்டன்பர்க் அருகில் மரிக்கானாவிலுள்ள இந்த பிளாட்டினம் சுரங்கத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் லோன்மின் நிறுவனம், உலகத்தில் பிளாட்டினம் உற்பத்தி செய்யும் ஏகபோக நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பிளாட்டினத்தின் விலை உயர்வால் அந்நிறுவனத்தின் வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ள போதிலும், தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கொடுக்க மறுக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 40 தொழிலாளிகள் விபத்துகளில் கொல்லப்பட்டுள்ள போதிலும், இலாபம் குறையும் என்பதால் சுரங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

இவற்றால் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், மாதச் சம்பளத்தை தென்ஆப்பிரிக்க ராண்ட் 4000லிருந்து 12,500 ஆக உயர்த்துமாறும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் வேலை செய்யுமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்துவதை எதிர்த்தும் ஆகஸ்டு 10ஆம் தேதி முதலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்  .

இச்சுரங்கத்தில், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு அரசுக்கு ஆதரவான, ஆளும் காங்கிரசு கட்சியின் சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய சங்கம் (NUM) எனும் கருங்காலி சங்கத்தின் துரோகத்தை எதிர்த்து, சுரங்க மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (ACMU) என்ற சங்கம் பெரும்பான்மைத் தொழிலாளர்களை அணிதிரட்டி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறது. ஆளும் கட்சியின் கைக்கூலி சங்கத்தினர் போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்த, போராடும் தொழிலாளர்கள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்க, இந்த மோதலில் 8 தொழிலாளிகளும் இரு போலீசாரும் கடந்த ஆகஸ்ட்  மாதத் தொடக்கத்தில்  கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆட்சியாளர்களின் கைக்கூலி சங்கத்தின் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளப் போராடும் சங்கத்தின் தொழிலாளர்கள் 3000 பேருக்கு மேல் திரண்டு, சுரங்கத்தை ஒட்டியுள்ள சிறிய குன்றின் மீது தடிகளுடன் அமர்ந்து வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தபோது, அவர்களைச் சுற்றிவளைத்துக் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றுள்ளது போலீசு.

வெள்ளை நிறவெறி அரசாங்கத்தை அகற்றிவிட்டு கருப்பினத்தவரின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு ஆட்சிக்கு வந்த போதிலும், நாட்டின் தங்க, வைர, பிளாட்டினச் சுரங்கங்களும் பொருளாதாரமும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் இரும்புப் பிடியில்தான் உள்ளன.  ஏகாதிபத்திய முதலாளிகளுக்குச் சேவை செய்வதில் முந்தைய நிறவெறி ஆட்சிக்கும், தற்போதைய ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆட்சிக்கும் சாராம்சத்தில் எந்த வேறுபாடும் இல்லை. தென்னாப்பிரிக்க கருப்பின அதிபர் ஜாக்கோப் ஜுமா, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை வன்முறையாளர்கள் என்று சாடி, அவர்களைக் கைது செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியாளர்களின் விசுவாசக் கருங்காலி சங்கம், போலீசுக்கு ஆள்காட்டி வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. இப்படுகொலையின் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் மீது அப்பட்டமாக பாசிச பயங்கரத்தை ஏவிவிட்டு, மறுகாலனியாக்கக் கொள்ளைக்குத் தேவையான உத்திரவாதத்தை நிலைநாட்டி, தன்னைப் பன்னாட்டு நிறுவனங்களின் விசுவாச எடுபிடிதான் என்பதைக் கருப்பினத்தவரின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு அரசும்,  அதன் கொலைகாரப் போலீசுப்படையும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தொழிற்சங்கமும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளன.

இப்பயங்கரவாதப் படுகொலையை எதிர்த்து தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி, லோன்மின் நிறுவனத்தின் தலைமையகமான இலண்டனிலும் உலகின் பல நகரங்களிலும்  ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. 1960இல் வெள்ளை நிறவெறி அரசை எதிர்த்துப் போராடிய 69 கருப்பின மக்கள் போலீசால் கொல்லப்பட்ட ஷார்ப்வில்லே படுகொலைக்கு நிகரான இந்தப் பச்சைப் படுகொலையானது, முதலாளித்துவ பயங்கரவாதத்தை உலகெங்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க