சென்ற வாரம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16, 2012) வேலை நிறுத்தம் செய்த 34 சுரங்கத் தொழிலாளர்களை தென்னாப்பிரிக்காவின் போலீஸ் படையினர் கொடூரமாக படுகொலை செய்தனர். மேலும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 78 பேர் படுகாயமடைந்தனர். 259 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1919-ல் இந்தியாவின் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலையை நினைவூட்டும் வகையில், சுற்றி அரண்களை ஏற்படுத்தி தப்பி ஓட முடியாத படி சூழ்ந்து கொண்ட பிறகு கூடியிருந்த சுரங்கத் தொழிலாளர்களை இரக்கமில்லாமல் துப்பாக்கியால் சுட்டு இந்த பச்சைப் படுகொலையை நடத்தியிருக்கிறது போலீஸ் படை.
மரிக்கானாவில் இருக்கும் சுரங்கத்தின் தொழிலாளர்கள் அதன் உரிமையாளர்களான ஆங்கிலேய முதலாளிகளையும், சமரச வாத தொழிற்சங்கத்தையும், ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவான சட்டங்களையும் மீறி ஆகஸ்ட் 10-ம் தேதி வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர். மே 2011-ல் போராடிய குற்றத்துக்காக 9,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்திருந்தது நிர்வாகம். மோசமான பணி மற்றும் இருப்பிட சூழலால் வெறுத்துப் போயிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். மாதச் சம்பளத்தை தென்ஆப்பிரிக்க ராண்ட் 4000லிருந்து ராண்ட் 12,500 ஆக உயர்த்துமாறும், சுரங்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துமாறும், கூடுதல் வேலை நேரத்துக்கு சம்பளம் கொடுக்க வேண்டியும் தொழிலாளர்கள் போராடுகிறார்கள்.
மரிக்கானா பிளாட்டினம் சுரங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் லோன்மின் நிறுவனம் உலகத்தில் பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சி நடந்து வந்த கால கட்டமான 1909-ம் ஆண்டு லண்டனில் உருவாக்கப்பட்டது. பிளாட்டினம் விலை கடந்த 10 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. அதன் விளைவாக நிறுவனத்தின் வருமானம் பல மடங்கு உயர்ந்தும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வும் சுரங்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதும் நிர்வாகத்தால் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது.
தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கொடுக்க மறுக்கும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இயன் பார்மர் 5.6 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகளும் (சுமார் 4.9 கோடி ரூபாய்), தலைமை நிதி நிர்வாகி அலன் பெர்குசன் 7.8 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகளும் (6.8 கோடி ரூபாய்) ஆண்டு வருமானமாக பெறுகிறார்கள். இந்தப் படுகொலைகள் நடந்த அன்று லோன்மின் நிறுவனம் ‘வேலை நிறுத்தத்தின் காரணமாக 15,000 அவுன்ஸ்-பிளாட்டின உற்பத்தியை (மதிப்பு சுமார் 120 கோடி ரூபாய்) இழந்து விட்டதாகவும், முழு ஆண்டுக்கான உற்பத்தி இலக்குகளை சாதிக்க முடியாமல் போய் விடும்’ என்று தனது லாப இழப்பை சொல்லி புலம்பியிருக்கிறது.
தொழிலாளர்கள் ஆதரிக்கும் “சுரங்கம் மற்றும் கட்டிடத் தொழிலாளர் சங்கம்” போலீஸ் ஒரு படுகொலையை நிகழ்த்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது.
‘எனது கணவர் இங்கு 27 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். காலை 3 மணியிலிருந்து மதியம் 2.30 வரை உழைக்கிறார். அதற்கு சம்பளமாக மாதம் ராண்ட் 3000 மட்டுமே கொடுக்கிறார்கள். இதை எதிர்த்து போராடாமல் இருக்க முடியுமா’ என்று கேட்கிறார் ஒரு சுரங்கத் தொழிலாளரின் மனைவி.
இந்த படுகொலைகள் 1960-ல் வெள்ளை நிறவெறி அரசின் கீழ் நிறவெறி எதிர்ப்பாளர்கள் 69 பேர் போலீசால் கொல்லப்பட்ட ஷார்ப்வில்லே படுகொலையுடன் நிகரானது. வெள்ளை நிறவெறி அரசாங்கத்தை நீக்கி கறுப்பு இனத்தவரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சிக்குவ ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகும் நாட்டின் பொருளாதாரம் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் அதிகார அமைப்புகள் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு சார்பாக செயல்படுவதும் தொடர்கிறது. போலீஸ் படையில் கறுப்பு இனத்தவர் சேர்க்கப்பட்டிருந்தாலும், முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்களை போலீஸ் சுட்டுக் கொல்வதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
1914-ல் கொலராடோ லுட்லோ சுரங்கத்தில் 19 பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பு படையினரால் எரித்து கொல்லப்பட்டது, 1927ல் கொலராடோவின் கொலம்பைன் சுரங்கத்தில் ஆறு தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, அதே ஆண்டில் பென்சில்வேனியாவின் லாட்டிமர் சுரங்கத்தில் 19 தொழிலாளர்கள் போலீசால் கொல்லப்பட்டது என்று ஆரம்பித்து முதலாளிகளின் படுகொலைகள் 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கின்றன. தானியங்கி துப்பாக்கிகள் மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்த கொலைவெறி தாக்குதலை நிறைவேற்றி முடித்திருக்கிறது போலீஸ் படை.
எனினும் கடந்த சனிக்கிழமையும் திங்கள் கிழமையும் நடந்த மாபெரும் பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்து கொண்டு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்று உறுதி பூண்டுள்ளனர்.
‘எப்போதுமே தேசத்தின் முதல் எழுச்சி சுரங்கத்தில்தான் தொடங்கும்’ என்று கிளர்ச்சி செய்யும் ஸ்பெயின் சுரங்கத் தொழிலாளர்களில் ஒருவரான மெனன்டஸ் சொன்ன படி ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க தொழிலாளர்களின் எழுச்சி மரிக்கானா சுரங்கப் போராட்டத்தில் தொடங்கியிருக்கிறது.
மேலும் படிக்க –
நீங்க்குறிப்பிடும் பிரச்சனையில் இறந்தது 2 செக்யூரிடி கார்டுகளும் 7 தொழிலாளர்களும். மற்றபடி எந்தவிதமான Rampage ம் அங்கு நடக்கவில்லை என்பதை வீடியோக்கள் தெரிவிக்கின்றன. குழுவாயிருந்த தொழிலாளர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தியிருக்கின்றனர். உங்களுக்கு தொழிலாளர்கள் உயிர் தூசு போன்று கருதினால் ஒடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நலம்
பாஸ், முதல்ல செத்த 9 பேரும் இரண்டு செக்யூரிடி கார்டு உட்பட தொழிலாளர்களே, அடுத்து நடந்த இந்த ஜாலியன்வாலா பாக் கிலும் செத்தது தொழிலாளர்களே.. இத்தனை பேரை கொன்னுருக்காங்க நீங்க கார்பரேட்டை குற்றம் சொல்லாதீங்கன்னுட்டு. நீங்க சொல்ற விசயம் ஆப்ரிக்காவுக்கு மட்டும் தனித்துவமானது இல்ல, இங்க நம்ம நாட்டுல கூட முதலாளிக்கு சொம்படிக்குற யூனியனுக்கும் மத்த யூனியனுக்கும் ஆகாதுதான். அதெல்லாம் இங்க பிரச்சனையா? கூடி யிருக்குற தொழிலாளகள் மேல எந்தவிதமான முன்னரிவிப்பும் இல்லாம துப்பாக்கி சூடு நடத்தியிருக்கான், அவன் கவர்மென்டே அதை கண்டிச்சு ஒரு வாரம் Mourning அறிவிச்சிருக்கான், நீங்க என்னடான்னா இப்படி கொலைகாரன் சார்பா வாதாடிட்டிருக்கீங்க. கஷ்டகாலம்!
போராடியது தொழிலாளர்கள் – சுட்டது போலீசு, போலீசு அங்க கம்பெனி முதலாளியின் சார்ப்பாக வந்து நின்றிருக்கிறது. ஆனா குற்றம் மட்டும் முதலாளியை சொல்லக்கூடாதாம்