Thursday, August 11, 2022
முகப்பு செய்தி புதிய வடிவமைப்பில் வினவு!

புதிய வடிவமைப்பில் வினவு!

-

வினவு

கஸ்டு 21 அன்று “வினவு செய்திகள்” என்பதை சோதனை முயற்சியாக துவங்கினோம். புதிய தேவைக்குப் பொருத்தமாக தளத்தின் வடிவமைப்பை மாற்றும் முயற்சியையும் அப்போதே தொடங்கி விட்டோம். செய்திகளுடன், வினவின் கட்டுரைகள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் கட்டுரைகளையும் முகப்புப் பக்கத்தில் கொண்டிருப்பதாக புதிய வடிவமைப்பு அமைய வேண்டும் என திட்டமிட்டோம்.

முந்தைய வடிவமைப்பில், முக்கியமான கட்டுரைகள் முகப்பு பக்கத்திலிருந்து அகன்று விட்டால், பின்னர் அவை வாசகர்களின் பார்வையிலேயே படாமல் போய்விடும் நிலை இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வடிவமைப்பில். ஒரு மாதத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் அனைத்தும், இனி முகப்பு பக்கத்தில் இருக்கும். இதனால் காத்திரமான கட்டுரைகள் ஒரு மாதம் முழுவதுமோ அல்லது பெரும்பாலான நாட்களோ வாசகர் பார்வையில் படும்படி இருக்கும். அயர்ச்சின்றி, புத்துணர்ச்சி குன்றாமல் படிக்கும் விதத்தில் வடிவமும் வண்ணமும் அமையவேண்டும் என்பதையும் கருத்திற்கொண்டு புதிய வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

செய்திப் பதிவுகள் துவங்கி நான்கு வாரங்கள் ஓடி விட்டன. ஆரம்ப  காலப் பதட்டம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. பொதுவாகச் சொன்னால், வினவின் செய்திகள் பரந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. கணிசமான புதிய வாசகர்களும் இப்போது வினவிற்கு வருகிறார்கள்.

செய்திகளை தெரிவு செய்வது மற்றும் அவற்றை கூர்மையாகவும் சுருக்கமாகவும் தருவது என்ற விடயத்தில் நாங்கள் நிறைய கற்க வேண்டும். செய்தி வேறு கண்ணோட்டம் வேறு என்றும், செய்தியின் மீது கண்ணோட்டத்தின் கறை படியக்கூடாது என்றும் முதலாளித்துவ ஊடக நெறிக்கு பலியானவர்கள் கூறுகிறார்கள். ஒரு செய்தி குறித்த அவசியமான விவரங்களைத் தருவதன் மூலம், தம் சொந்த கருத்தை வந்தடைகின்ற வாய்ப்பு வாசகருக்குத் தரப்படவேண்டும் என்பது சரியே. ஆனால் சொல்லிக் கொள்ளப்படும் இந்த “நடுநிலை” குறித்த மயக்கம் நமக்கு கூடாது. ஒரு செய்தியை ஆளும் வர்க்க கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும் வேலையை முதலாளித்துவ ஊடகங்கள் நாசுக்காகவும் திறம்படவும் செய்கின்றன. அதுதான் நடுநிலை என்ற பிரமையையும் வாசகரிடம் ஏற்படுத்தியிருக்கின்றன. இதைக் கண்டுபிடித்து அடையாளம் காட்டுவதற்கே நாங்கள் முயற்சிக்கிறோம்.

வினவு செய்திகள் வெளிவரத் தொடங்கிய பின்னர், ஆழமான கட்டுரைகள் வராமலிருப்பது ஏமாற்றம் தருவதாக சிலர் தெரிவித்திருந்தனர். எமது வேலைப்பளுவே இதற்கு காரணம். இனி செய்திகளுடன் கட்டுரைகளும் முறையாக வெளிவரும். அதே நேரத்தில் நிலக்கரி ஊழல் போன்ற பிரச்சினைகளில் சிறு செய்திகளாகவும் பதிவுகளாகவும் எழுதப்பட்டிருப்பவை ஒரு பெரிய கட்டுரையின் பகுதியாக இருப்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்ளவியலும்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் பற்றி வினவு அளித்த செய்திகள் வாசகரிடமும், ஊடகத் துறையினரிடையேயும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஒரு தொழில் முறை ஊடகத்துக்குரிய வசதிகள் இல்லாத போதிலும், தோழர்களுடைய முயற்சியின் மூலம் முதலாளித்துவ ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்திகளையும், திரிக்கப்பட்ட செய்திகளையும் வினவில் கொண்டு வந்தோம். முதலாளித்துவ ஊடகங்களுக்கு மாற்றாக, ஒரு புதிய வகைப்பட்ட மக்கள் ஊடகத்தை விரைந்து உருவாக்குவது சாத்தியமே என்ற நம்பிக்கையை இத்தகைய புதிய முயற்சிகள் அளித்துள்ளன.

நான்காண்டுகளுக்கு முன்னர் வினவு, ஒரு வலைப்பூவாக தொடங்கப்பட்ட அந்த தருணம், இன்று ஒரு பழைய நினைவு. அன்று வினவு எங்கள் கையில் இருந்தது. இன்று நாங்கள் அதன் கையில் இருக்கிறோம். உங்கள் கையில் இருக்கிறோம் என்றும் சொல்லலாம்.

நன்றி.

வினவு

 1. வாழ்த்துகள் சகாக்களே!!

  தொடர்ந்து இன்னும் பல புதிய மாறுதல்களுடன் வெற்றி பவனி வர மனதார வாழ்த்துகிறோம்..

  தொழிற்களம் குழு

 2. “அன்று வினவு எங்கள் கையில் இருந்தது. இன்று நாங்கள் அதன் கையில் இருக்கிறோம். உங்கள் கையில் இருக்கிறோம் என்றும் சொல்லலாம்.”

  உண்மைதான்.வினவு ‘விலக’ நினைத்தாலும் வாசகர்கள் விடமாட்டார்கள். எப்பொழுதும் வினவிக் கோண்டே இருப்பார்கள்.

  ஒரு வகையில் வினவு வாசகர்களின் வலையில்…வலை இன்னும் விரிவடையும்… வினவும் அதற்கேற்ப வலுப்பெறும்!

  புதிய வடிவமைப்பு… வளர்ச்சியின் அடுத்த கட்டம்.

  வாழ்த்துகளுடன்

  ஊரான்

 3. புதிய மாற்றம் சிறப்பாக உள்ளது……

  பேஸ்புக்கில் வினவு பதிவுகளை Share செய்யும்போது வெறும் தலைப்புடன் மட்டும் Share செய்யாமல், அந்தந்த பதிவில் உள்ள ஒரு படத்தையும் (Picture), அந்த பதிவில் உள்ள முக்கிய வரிகளுடன், முழு கட்டுரைக்கான இணைப்பையும் சேர்த்து கொடுத்தால் இன்னும் நிறையபேருக்கு சென்றடையும் என நினைக்கிறேன்…….

  • நீங்கள் குறிப்பிட்டது போலவே முகநூலில் வினவின் கட்டுரைகள் பகிரப்படுகின்றன. ஆலோசனைக்கு நன்றி

 4. அருமை தோழரே. செய்திகளை தொடர்ந்து கொடுங்கள். ஒரு விண்ணப்பம். அனுஷ்கா, சயகோமன் போன்ற பதிவுகளை தவிருங்கள். நம் தரத்திற்கு இந்த கழிசடைகள் ஒப்பாக மாட்டார்கள் என்பதே என் கருத்து. மற்றபடி எழுதியவை அனைத்தும் எண்ணத்தை ஊக்குவிப்பவையே. பணிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • சினிமா, இலக்கியம் என அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியே எமது செய்திகளை தெரிவு செய்கிறோம்.ஆகப்பெரும்பான்மையான தமிழ் மக்கள் சினிமாவோடு அதிக நேரம் செலவழிக்கும் போது நாமும் அதில் வாய்ப்புள்ள போது குறுக்கிட வேண்டியது அவசியமாகிறது.நன்றி

   • இது போன்ற உப்புபெறாத விஷயங்கள் ஊதி உப்ப வைக்கப்பட்டு அவர்களுக்கு ஒளிவட்டம் போட வெகுஜன மீடியாவின் அயராத முயற்சியை அவ்வப்போது வினவு தொடர்ந்து கிழிக்கும்போதுதான் என் போன்ற சாமனிய வாசகர்கள் இந்த மிகைப்படுத்தலை உணரமுடிகிறது.
    சமீபத்தில் துபாயில் உள்ள ஒரு தமிழ் ரேடியோவில் ஒரு RJ ஜந்து அனுஷ்காவுக்கு செல்வராகவன் வேறு படத்தில் குலுக்காட்டம் போட அனுமதி கொடுத்தார் என்று 15 நிமிடம் சிலாகித்து சொன்னது. இன்னோரு RJ ஜந்து ஐஸ்வர்யா குழந்தையோடு காட்சி தந்து இந்தியாவுக்கே அருள் பாலித்தார் என்று கண்ணீர் வடித்தது. ஏன் சொல்றேன்னா அப்படித்தான் இருக்கு நம்ம ஊடக லட்சணம்…. என்னத்த சொல்ல….
    அதனால் வினவு தொடர்ந்து அனுஷ்காவின் காருண்யம், சூர்யாவின் சமூகசேவை விளம்பரங்கள் போன்றவற்றை அம்பலபடுத்த வேண்டும் என்று..

 5. புதிய வடிவம் சிறப்பு; ஆனால், சிவப்பு நிறம் இல்லாதது ஒரு குறையாக தோன்றுகின்றது.

  • வினவின் எழுத்துரு வண்ணம் சிவப்பாகத்தானே உள்ளது! புதிய தளம் சோர்வில்லாமல் நீண்ட நேரம் படிப்பதற்கு தோதான வண்ணம் வடிவமைப்பில் உள்ளது. கட்டுரைகளின் தரத்திலும், வாசகர்களை விழிப்புணர்வூட்டும் வேலையிலும் ‘சிவப்பு’ எப்போதும் இருக்கும். நன்றி.

   • நிச்சயமாக. வினவின் வளர்ச்சியை பெருமையோடு பார்க்கின்றேன். வாழ்த்துக்கள்.

 6. அருமை தோழர்களே. புதிய வடிவம் நன்றாக உள்ளது. புரிந்து கொள்வதில் சற்று இரமம் உள்ளதாயினும் போக போக சரியாகிவிடும். கட்டுரைகள் அருமை. வேலை பளுவினால் விவாதங்களில் முன்போல் பங்கேற்க முடியவில்லை. வருத்தம்தான். வினவுக்கு வாழ்த்துகள்.

 7. வினவு வாசகர்களை சென்னைக்கு அழைத்து வினவின் புதிய வடிவமைப்பை வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.வாழ்த்துக்கள் வினவு!

 8. முகப்பு பக்கத்திலேயே அனைத்தையும் சுருக்கமாகக் கொடுத்திருப்பது அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்.

  இப்போது ஒரே பக்கத்தில் காணப்படும் கட்டுரைகள், செய்திகள், விவாதம் போன்ற ஏதேனும் ஒரு வகையை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் அது முழுப்பக்கத்திற்கும் வருமாறு செய்தால் வசதியாக இருக்கும்.. புதிய, பழைய பதிவுகளைக் காண கொடுத்திருக்கும் <> பொத்தான்கள் வேலை செய்யவில்லை, கவனிக்கவும்..

  • தெரிவு, செய்தி, கட்டுரை எனும் வகையினங்களை கீழே உள்ள மேலும் என்ற இணைப்பில் சொடுக்கினால் அந்தந்த தலைப்புகளுக்குரிய கட்டுரைகள் முழுப்பக்கத்தில் படத்துடன் தோன்றும். இப்படி அடுத்தடுத்த பக்கங்களை கீழே உள்ள எண்ணை அழுத்துவதன் மூலம் காணலாம். அனைத்து பொத்தான்களும் வேலை செய்கிறது. நன்றி.

   • விவாதம் பகுதியை தேர்வு செய்ய ’மேலும்’ இணைப்பு இல்லை.. தற்போது ஒன்றிரண்டு புதிய பின்னூட்டங்களின் சுருக்கத்தைத்தான் காண முடிகிறது.. புதிய பின்னூட்டங்களை (குறைந்தது 4) அறிந்து கொள்ள ‘மேலும்’ சுட்டியோ அல்லது ’விவாதம்’ என்ற தலைப்பின் மீதே சொடுக்கும் வசதியோ இருந்து அதற்கான முழுப்பக்கதிற்கு செல்லுமாறு இருந்தால் மேலும் வசதியாக இருக்கும்.. கவிதைகள் தொகுப்பையும் முகப்பில் கொண்டுவர இயலுமா.. இடவசதிக்கு ட்டூனாயுதத்தின் உயரத்தை சற்றே சிறிதாக்கலாம்..

    • அம்பி,
     முகப்பு மறுமொழிகளில் வரும் பெயரை கிளிக் செய்தால் அந்த பதிவின் பின்னூட்டப்பக்கத்துக்கு செல்லலாம்
     உங்கள் பிற ஆலோசனைகளையும் கணக்கில் கொள்கிறோம்.
     நன்றி

 9. புதிய வடிவமைப்பில் வினவு அருமையாக இருக்கிறது. தொழிற்களம் குழுவிற்கு வாழ்த்துக்கள். வினவு தளம் இன்னும் வேகத்துடன் செயல்படுவதற்கு தொடர்ந்து முயலுங்கள்.

  எழுத்துக்களின் கலர் நீல நிறமாக இருப்பதால் டல்லாக தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டுரையை சுட்டினால் (Click) தனியாக ஒரு வின்டோவில் திறப்பது போல அமையுங்கள்.

  இன்னும் பயன்படுத்திவிட்டு, என் கருத்துக்களை பகிர்கிறேன். நன்றி.

  • முகப்பு பக்கத்தின் மேல் உள்ள படங்களுடன் கூடிய தலைப்புகளின் நிறத்தை சொல்கிறீர்களா? அது மொத்த வடிவமைப்புக்கு உகந்த வண்ணமாக தெரிவு செய்யப்பட்டது. வேறு நிறங்களை அனைத்தையும் சோதித்துப் பார்த்து விட்டே இதை தெரிவு செய்தோம். அடுத்து குறிப்பிட்ட கட்டுரையை சுட்டினால் தனி விண்டோவில்தான் திறக்கும். நன்றி.

 10. ஐந்தாம் ஆண்டில் வினவு – புரட்சிகர வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் – அதுவும் புதிய வடிவமைப்பு மிக சிறப்பாக உள்ளது, பல சிறப்பான கட்டுரைகள் பார்வையிலிருந்து மறைவது தவிர்க்கப்பட்டது பாராட்டுக்குரியது, இந்த குழுமத்தில் நானும் சில மொழிபெயர்ப்பு பணிகள் மேற்கொண்டுள்ளேன் என்பதில் பெருமிதமாக உள்ளது

 11. புதிய வடிவமைபு நன்றாக இருக்கிறது மிக சிறப்பாக இருக்கிறது..
  1.ஆனால் இதில் search வசதி இல்லை.
  2.முன்பு இடது பக்கத்தில் இருந்த சி.பி.எம்,பி.ஜே.பி உள்ளிட்ட tag இப்போது இல்லை..அது இருக்கும் போது பிற ஓட்டுகட்சிகளுடன் விவாதம் செய்யும் போது தரவுகளுக்கு உடனடியாக பார்கும்படி இருந்தது.இப்போது அதற்க்கு வாய்பில்லை.
  3.ஒரு மாதத்திற்க்கு மேலானா பதிவை பார்க்க வசதி இருக்கிறதா?

  • முகப்பு பக்கத்தின் கீழே உள்ள மெனுவில் தொகுப்புக்கள் என்ற பக்கம் உள்ளது. அதை அழுத்தினால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கேட்டகிரி பக்கம் திறக்கும். மேலும் ஒவ்வொரு கட்டுரையின் அருகிலும் இந்த தொகுப்பு இணைப்பும், மாதவாரியான தொகுப்பு, ஆசிரியர்வாரியான தொகுப்பும் இருக்கும். அதை அழுத்தி தேவையானதைப் பெறலாம். எனவே வினவில் தவற விட்ட கட்டுரைகளை காலவாரியாகவும், தலைப்பு வாரியாகவும் நீங்கள் தெரிவு செய்து படிக்கலாம்.

 12. புதிய வினவு வடிவமைப்பு பிரமாதம். முதலாளித்துவ தொழில் முறை ஊடகங்களின் வலைத் தளங்களுக்கு இணையான கச்சிதமான வடிவமைப்பு. வினவு தொழில்நுட்ப குழுவுக்கு வாழ்த்துக்கள்.

  பயன்படுத்தியதில் இரண்டு பரிந்துரைகள்
  1. செய்திகளுக்கான பட அணிவகுப்பில் தலைப்பின் மீது கிளிக்கினால்தான் திறக்கிறது. படத்தின் மீது கிளிக்கினாலும் பதிவு திறப்பது போல செய்ய முடியுமா என்று பரிசீலியுங்கள்.

  2. பதிவை படித்து விட்டு கடைசியில் இருக்கும் “N மறுமொழிகள் | விவாதத்தில் பங்கு பெறுங்கள்” மீது கிளிக்கினால் இரண்டுமே நேராக பின்னூட்ட பெட்டிக்கு கொண்டு செல்கின்றன.

  “N மறுமொழிகள்” மீது கிளிக்கினால் ஏற்கனவே இருக்கும் பின்னூட்டங்களுக்கும், “விவாதத்தில் பங்கு பெறுங்கள்” மீது கிளிக்கினால் பின்னூட்ட பெட்டிக்கும் போவது போல செய்ய முடியுமா என்று பாருங்கள்.

  நன்றி. மீண்டும் ஒரு முறை வடிவமைப்புக்கு பாராட்டுக்கள்.

  • அன்புள்ள மா.சி,
   ஆலோசனைகளுக்கு நன்றி, நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி (இரண்டும்) மாற்றப்பட்டுள்ளது
   தோழமையுடன்
   வினவு

 13. மதியம் வினவைத் தேடியபோது ‘பராமரிப்புப் பணி’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், முன்னறிவிப்பின்றி ஒரு தடாலடி. சிறப்பக உள்ளது. ஆனால் ‘வினவு’ தலைப்பு மட்டும் பழைய தோற்றம்போலவே இருந்தால் அருமையாக இருக்கும். ஏனென்றால் தினந்தோறும் நான் சந்திக்கும் ஒரு ‘தோழரின்’ பழக்கப்பட்ட முகம் திடீரென்று மாறியது போலுள்ளது. நான் கற்கவேண்டியது நிறைய. வினவின் எழுத்துக்களில் நான் கற்றுக்கொண்டேயிருக்கிறேன்.

  என் பயணங்களின் உந்துதல்தான் வினவு!

  • //‘வினவு’ தலைப்பு மட்டும் பழைய தோற்றம்போலவே இருந்தால் அருமையாக இருக்கும். ஏனென்றால் தினந்தோறும் நான் சந்திக்கும் ஒரு ‘தோழரின்’ பழக்கப்பட்ட முகம் திடீரென்று மாறியது போலுள்ளது.//எனக்கும் அதே எண்ணம் ஏற்பட்டது. மற்றபடி சிறப்பாக உள்ளது. பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • புதிய வடிவம் சில நாட்களில் பழக்கமாகிவிடும். அது குறிப்பிட்ட தோழர் ஒரு நாள் புதிய சட்டை அணிவது போன்றது. சட்டை மாறினாலும் ஆள் அதேதான். நன்றி தோழர் பாமரன்!

 14. The new look is good but i find the former one is much better when it comes to reading essay’s. the home page is really good but my request is that u can do some change in the essay reading area and some change in back ground color….

  • கட்டுரைகளுக்கு பின்னணியில் வரும் மெலிதான நீல நிற வண்ணம் கண்களை பறிக்காமல் இருக்கும் வண்ணம் இருக்கும். பளீர் வெள்ளை படிப்பதற்கு சற்று உறுத்தலாக இருக்கமென்பதால் அப்படி மாற்றியருக்கிறோம். பழைய வினவின் முகப்பில் 15 கட்டுரைகளை மட்டும் காண முடியும்.புதிய வினவில் அதை போல நான்கைந்து மடங்கு கட்டுரைகளை காணலாம். நன்றி.

 15. வினவின் முகத்தில், புது சட்டை, புது வீடு, புது பொண்டாட்டி கட்டிய சந்தோஷம்! நம்மையும் ஒட்டிக்கொள்கிறது.

 16. புதிய வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது தோழர்களே, கடந்த முறைகளில் வினவின் வடிவம் மாறிய போதுகளை விட ஒப்பீட்டளவில் இந்த முறை அருமையாக இருக்கிறது. மட்டுமல்லாது புது வடிவத்தை சோதித்துப் பார்த்து வாசகர்கள், தோழர்கள் பரிந்துரை செய்திருக்கும் வேகமும் மகிழ்வடைய வைக்கிறது.

  செய்திகள் இன்னும் பரந்த தளத்தில் கூடியவரை அனைத்தையும் உள்ளடக்கி வந்தால் நன்றாக இருக்கும். கட்டுரைகளும் இரண்டு நாட்களுக்கு ஒன்று என்ற அளவிலாவது இருக்க வேண்டும். இதற்கு கடினமான உழைப்பு தேவைப்படும் என்றாலும், -தமிழ் இணையப் பரப்பில் வினவு பெற்றிருக்கும் இடமும், எந்த ஒரு செய்தியையும் முதலில் வினவு என்ன சொல்லியிருக்கிறது பார்த்துவிட்டே ஏனையவற்றைப் படிக்கும் வழக்கமும் பலரிடம் உருவாகி இருப்பதை (நேரடியாகவே கண்டிருக்கிறேன்)கொண்டும்- முனைப்புக்காட்ட கேட்டுக் கொள்கிறேன்.

  தேடல் பெட்டியும் அவசியம், குறிப்பாக, தலைப்புகளைக் கொண்டு அல்லது தலைப்புகளின் சொற்களைக் கொண்டு தேடிப் பெறும் வசதி.

 17. புதிய வடிவமைப்பில் வினவு பார்த்தேன். மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். ஒரு விசயத்தை எப்படி சரியாக புரிந்து கொள்ளவது என்பதையும். விசயத்தில் நேர்மையை மறைத்து உண்மை மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதை சரியாக சுட்டிக்காட்டும் வினவுக்கு நன்றி.

 18. மாற்றம் இருந்தால் தான் மனிதன். மனிதர்களின் மயக்கத்தைப் போக்குவதற்கு வினவின் வீரியத்தினோடு கூடிய இந்த மாற்றம் காலத்தின் கட்டாயம். நன்றி. வரவேற்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறப்பாக.

 19. வினவின் வளர்ச்சியை பார்க்கும்பொழுது ஏற்ப்படும் மகிழ்ச்சி, என்னுடைய சொந்த வாழ்வில் தனிப்பட்ட வெற்றிகளுக்கு அடையும் மகிழ்ச்சியை ஒத்துள்ளது. வினவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள். பதிவுகளில் “F Like” பொத்தான் மட்டுமே உள்ளது,”F Share” பொத்தான் இல்லை. “F share” பொத்தானும் சேர்க்கப்படுமானால் முகநூலில் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள சற்று வசதியாக இருக்கும். முகப்பு பக்கத்திலும்,ஒவ்வொரு கட்டுரையிலும் கீழுள்ள மெனுவை மேலே வைக்க இயலுமா? மேலே இருந்தால் சட்டென பார்ப்பதற்க்கு வசதியாகவும் புதிதாய் வரும் வாசகர்கள் தெரிவு செய்ய ஏதுவாகவும் இருக்கும்.தற்போதைய வடிவமைப்பில் புதிதாய் வருபவர்கள் கீழுள்ள மெனுவை தவற விட வாய்ப்புள்ளது.

  • அன்புள்ள சீனிவாசன், முகநூல் share சேவை (முகநூல் நிறுவனத்தாலேயே) தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. நீங்கள் லைக் பொத்தனை கொண்டே பகிரலாம்
   நன்றி

 20. எனக்கு, வடிவமைப்பை விட வினவு தளம் கிளிக்கிய உடனே ஓபன் ஆகுது பாருங்க அதான் புடிச்சிருக்கு. நன்றி

 21. வினவு புதிய முகப்பு பார்த்தேன், மகிழ்ச்சி வாழ்துக்கள்,
  உழைக்கும் மக்களின் சிகப்பு முகப்பில் தேவை. வாழ்துக்கள்.

 22. அட்டகாசம் வினவு, கலக்கிட்டீங்க.

  வெட்டி எழுத்துகளை சுமந்து வரும் தளங்களெல்லாம் பப்பளப்பள பளபளான்னு இருக்கும் போது நீங்க ஏன் இன்னும் எகனாமிக் டைம்ஸ் போல டல்லான செட்டப்பில் இருக்கீங்கன்னு யோசிச்சு ரெண்டு நாள் ஆகல, டபக்குன்னு லேட்டானாலும் லேட்டஸ்டா ஒரு டிசைனை இறக்கிட்டீங்க

  அதுலயும் வேகமின்னா வேகம்,செம வேகம் வாம்மா மின்னலுன்னு சொல்ற மாதிரி படக்குன்னு வருது 🙂 பதிவு படிக்கும் போது கூடவே வரும் சோசில் ஷேர், அங்கங்க பாலோ ஐகான்ஸ், கண்ணுக்கு உறுத்தாத பேக்கிரண்டு விக்னட், ரெண்டு மாச கட்டுரைகளை ரெண்டே அமுக்குல பாக்குற முகப்பு, மொத்த தளத்தையுமே முதல் ஸ்கிரீன்லயே கிளிக் செஞ்சு பாக்கறு வசதியான ஸ்லைடுன்னு நல்லா யோசிச்சு செஞ்சிருக்கீங்க. அதுலயும் நீல நிற தேர்வு டாப் கிளாஸ் – ஒரு 50 வயசு குறைஞ்ச புத்துணர்ச்சி கிடைக்குது 😉

  இங்க சிலபேரு சிவப்பு அடிக்கனும்னு சொல்றத பாத்தா என்ன சொல்றதுன்னு புரியல, புஜ,புக எல்லாம் சிவப்பு தாள்ளலயும் சிவப்பு மையிலேயா அடிக்கிறாரங்களா? சிவப்பு படிக்க செட் ஆகாத நிறம். அதை விட நீங்க பயன்படுத்தியிருக்குற லைட்டான நிறங்களே நல்லது

  முன்னெல்லாம் மொபைல்ல வினவு இறங்கவே இறங்காது, இப்ப அருமையா லோட் ஆவுது. இதுவும் ஒரு நல்ல முன்னேற்றம்.

  மொத்தத்துல ஸ்னாக்சை தேடிப்போயி புல் மீல்ஸ் ஒரு கட்டு கட்டுனாப்புல இருக்கு. கன்டென்டுலேயும் இது போல இளமைதுடிப்போடு அள்ளிவிடுங்க.

  மறுபடியும் நன்றீஸ்

 23. இப்போதுதான் பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறது. எல்லாவற்ரையும் ஒரு கை பார்த்துவிடுங்கள். இன்னும் போவோம். திரைப்படம், தொலைக்காட்சிக்கெல்லாம் போகவேண்டும் தோழர்!

 24. புக, புஜ வின் அட்டைகளை மட்டும் தனியாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.எதற்காவது பயன்படுத்திக்கொள்ளலாம்.

 25. Dear Vinavu
  Superb and fantastic !
  Looks like a wind of change is going on inside vinavu team !
  Make Vinavu the number one tamil news website !

  Hope it will happen very soon.
  you have turned vision in to reality. congrats!
  regards
  GV

 26. வாழ்த்துகள்..

  நடுநிலையோடு மக்களின் நலவாழ்விற்கு பாடுபடுக. எங்களுக்கு துணைநிற்க வேண்டுகிறேன்.

  மரியாதைக்குரிய தோழர்களுக்கு,

  என்னுடைய பெயர் சிவ நாராயணன். என்னுடைய பெயர் இரு சமயப்பெயராக இருந்தும் நான் சமயநம்பிக்கை இல்லாதவனாக வாழ்ந்து வருகிறேன். இணையத்தில் எல்லோரும் நடுநிலையோடு இருப்பதாக கூறும் விக்கிப்பீடியாவில் பலசமய கட்டுரைகளை படித்தேன். அதிச்சி அடைந்தேன். எல்லாவற்றையும் இறை நம்பிக்கையாளர்கள் மட்டுமே தொகுத்திருப்பதனால் பல்வேறு இடங்களில் சாய்வு நிலை உள்ளமையை கண்டு கொதித்தேன். நானே களமிறங்கி அதனை சீர் செய்தேன்.

  இந்து, இசுலாம், கிறிஸ்துவ கட்டுரைகளின் விமர்சனங்கள் பகுதியினையும். பல இடங்களில் நடுநிலை தன்மை பேனப்படாமல் இருந்தமையும் சுட்டி காண்மித்தேன். அங்கிருக்கும் அனைத்து இறை நம்பிக்கையாளர்கள், எதற்காக இந்த தேவையில்லாத வேலை, எதற்காக கலகம் செய்கின்றீர்கள், வேறுவேலை நிறைய உள்ளது போன்றவற்றை கூற ஆரமித்தார்கள். அங்கிருக்கும் கட்டுரைகளின் நடுநிலையை நீங்கள் வாசித்து அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.

  இந்து சமயம் – இந்த கட்டுரை முதல் பக்கத்தில் வேறு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
  இசுலாமிய சமயம்
  கிறிஸ்துவம்
  முகமது நபி
  இயேசு

  போன்ற சில கட்டுரைகளை வாசித்து பாருங்கள். இந்து சமயத்தில் ஜாதியென ஒன்று இருப்பதையே மறைத்திருக்கிறார்கள், முகமது நபி பொய்யே கூறாதவர் என்று அழுத்தமாக சொல்லுகிறார்கள். இறை நம்பிக்கை ஓங்கி பதிவு செய்யும் நடுநிலையற்ற ஊடகத்தின் பல கட்டுரைகளை இணையத்தில் பல வலைப்பூக்கள் பிரதியெடுத்து வைத்திருப்பது இன்னும் கொடுமை.

  மேலும் சமயம் சார்ந்த கட்டுரைகளுக்கு மறுப்பு எழுத தயங்கி நிற்பவர்கள். விமர்சனக் கட்டுரைகளை ஏற்காதவர்கள் எல்லோரும் இறைமறுப்பு கட்டுரையில் அத்தகைய போக்குடன் நடந்து கொள்ளவில்லை. இறைமறுப்பு குறித்து மட்டும் தனி பக்கமொன்றை விமர்சனத்திற்காக உருவாக்கியுள்ளார்கள். இசுலாம் குறித்தான விமர்சனத்திற்கு உங்கள் கட்டுரையில் சிலவற்றினை மேற்கோள் காட்டி சுட்டியுள்ளேன். அதற்கு உங்கள் தளத்தின் இணைப்புகளை ஏற்க மறுத்து ஒரு இசுலாமிய பயனர் விமர்சனம் செய்துள்ளார்.

  இணையத்தில் கலைக் களஞ்சியமாக இருக்கும் விக்கிப்பீடுயாவில் சமயம் சார்ந்த கட்டுரைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த நான் கோரிக்கை வைத்துள்ளேன். இறை நம்பிக்கையாளர்கள் அதிகம் இருக்கும் விக்கியில் என் ஒருவனால் மட்டும் நடுநிலையை ஏற்படுத்தி விட இயலாது. இந்த செய்தியை மற்ற இறைமறுப்பாளர்களுக்கும் தாங்கள்தான் கொண்டு செல்ல வேண்டும்.

  நன்றி.

 27. வார்த்தை வரிகள் இன்னும் மாறவில்லை .வார்த்தை வரிகள்நெருப்பை போல் சுடவேண்டும் .வினவு வெளியிடும் ஒவ்வொரு கட்டுரையும் ஆளும் வர்க்கத்தை மிகக்கடுமையாக தாக்கும் வண்ணம் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் .
  வினவின் கட்டுரையால்,என்றைக்கு உழைப்பவன் ஒருநாள் கூலியை மறந்து கலவரத்தை உண்டாக்கி அவனது அதிகாரத்தை பெறுகிறானோ அன்றைக்குத்தான் வினவின் முதல் வெற்றி .அன்றைய தினத்துக்கு விரைவாக அழைத்து செல்லவேண்டும் என்பதே எனது விருப்பம் .
  வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் ,புகழ் இவைகளை கண்டு வினவு பூரிபடைந்ததில்லை எனபது அரிந்ததே.
  முற்போக்கு சிந்தனையுடைய கருத்துக்கள் தமிழ் இணையதளங்களில் வினவில் மட்டுமே தொடர்கிறது .அது மேலும் நெருப்பாய் பொழிய வினவிற்கு உறுதுணையாக இருப்போம் …

 28. வாழ்த்துக்கள் வினவு.
  முன்பே விட தற்போது அதிக செய்திகளை கொண்டுள்ளது வினவின் முகப்பு.

 29. இன்று முழுவதும் பணியின் பொழுது சிலரிடம் சுடுசொல் வாங்கிகொன்டிருந்தேன். குறிப்பாக கடை உரிமையாளரிடம். மனசு நிறையவே ஒரே கவலைய இருந்துச்சி..உடனே தோனுச்சி வினவு போயிட்டு பாக்கலாம் புது கட்டுற போட்டிருப்பாங்க,படிச்ச பிறகு மனசு தெளிவாகிடும் நு வந்தேன்..ஓபன் பண்ணதும் கொஞ்சம் கொழம்பிட்டேன்.முழுசா படிச்சதும் ஒரே சந்தோசம் .அழவே வந்துடுச்சி தோழர்..இந்த முன்னேற்றம் என்னோட சொந்த வாழ்க்கையில வந்திருந்த கூட இவ்ளோ சந்தோஷ பட்டிருக்க மாட்டேன் தோழர்… எல்லோருக்குமான வாழ்க்கைய வினவு, தோழர்களால மட்டும் தன நிவர்த்தி பண்ண முடியும். வாழ்த்துக்கள்.

 30. சூப்பரா இருக்கு தோழர்….எல்லா கட்டுரையும் படிக்கணும் நு ரொம்ப நாளா நெனெச்சேன்.அது இப்ப தான் நிறைவேற பொது… வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்..

  அவ்ளோ மகிழ்ச்சி ,சந்தோசம். நன்றி..

 31. வினவிர்க்கு என் வாழ்த்துக்கள்.

  இந்த புதிய வடிவம் பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.வினவின் செய்தியை போல் தோற்றமும் புத்துணர்ச்சியுடன் வருவது காலத்தின் தேவையும் கூட. நன்றி.

  புதிய முயற்சியுடன் வெற்றி நடைபோடுவோம்!

 32. தோழர்களுக்கு புரச்சிகர வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்! புதிய வினவு வடிவத்தின் வேகம் வெகு சிறப்பு! மேலும் திரை வாசிப்பு மென்பொருள்களைப் (screen-reading softwares) பயன்படுத்தும்போது இந்த புதிய வடிவமைப்பு எளிதாக உள்ளது. புதிய பொத்தான்கள் எளிதாகவும் விரைவாகவும் பக்கங்களைத் திறக்க வசதியாக உள்ளன. ஆனால் இன்னும் சரியாக சில கூறுகள் பிடிபடவில்லை. இன்னும் இரு நாட்களில் தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன். பின்னர் என் ஆலோசனைகளை (ஏதேனும் இருந்தால்) பதிவு செய்கிறேன்.
  நன்றி, புதிய கவர்ச்சியான “சட்டைக்கு” மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்!!

 33. வினவு இடம் வினவுதல் மிக்க மகிழ்ச்சி அளிக்கக்கூடிய,எண்ணங்களை விரிவுபடுத்தக்கூடிய மற்றும்

  மனங்களை விசாலப்படுத்தக்கூடியதாக உள்ளது.மிக்க மகிழ்ச்சி.புதிய எண்ணங்களுக்கு புதிய வடிவம்

  பொருத்தமானதே.

  மேலும் புதிய செய்திகள் பார்த்தவுடன் தெரியும்வன்னம்

  அமைக்கவேண்டுகிறேன்,எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும் இதனால் பொருள் பிழை

  ஏற்படுகிறது.மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.

 34. புதிய வடிவம் நன்றாக உள்ளது
  வினவிர்க்கு என் புரட்சிகர வாழ்த்துக்கள்…

 35. வினவின் புதிய வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. ஆனால்
  1. கட்டுரைகளை அச்சிடுவதற்கான வசதி
  2. கட்டுரைகளை PDF கோப்பாக மாற்றும் வசதி
  ஆகியவை இல்லை. PDF கோப்பாக மாற்றும் வசதியைப் பொறுத்த வரையில் முன்னர் இருந்தது போல்( PDF கோப்பாக மாற்றும் போது அது திரையில் இருக்கும் அனைத்தையுமே PDF கோப்பாக மாற்றிவிடும்) அல்லாமல் PDF கோப்பாக மாற்றும் போது, கட்டுரையை மட்டும்(படங்களுடன்) கோப்பாக மாற்றினால் நன்றாக இருக்கும்.
  தயவு செய்து பரிசீலியுங்கள்.

 36. தொடர்ந்து, வினவு தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் வாழ்த்துக்கள்!
  உங்களைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனங்களுக்கு தங்களுடைய எதிர்வினைகளையும் எதிர்பார்க்கிறோம்.

 37. புதிய வடிவமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. தோழருக்கு வாழ்த்துக்கள்… நன்றி.

 38. தளம் நாளுக்கு நாள் மிளிர்கிறது…

  தோழர்கள் அடையும் முன்னேற்றத்தில் தான் ஒரு ஆதரவாளனாக எனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது… அது எந்த சாதாரண மனிதன் முன்னேறியதாக சொன்ன செய்தியிலும் வருவதில்லை…

  வெறுமனே அமைப்பு நிகழ்சிகளில் கலந்து கொண்டு அவ்வபோது நிதி என்ற பெயரில் எதையோ கொடுத்துக்கொண்டு போராட்டங்களை எட்டியே நின்று பார்த்துகொண்டிருக்கும் ஆதரவாளன் என்ற பிழைப்பு வாதியின் சொல்ல அருகதையத்ற்ற வார்த்தைகள் –

  தோழர்களுக்கு வாழ்த்துக்கள்…

 39. உங்கள் மாற்றம் மேலும் உங்களுக்கு ஏற்றத்தை கொடுக்க வாழ்த்துக்கள்.

 40. வணக்கம் தோழர்களே

  நாங்கள் வினவை வலை பதிவிலிருந்து படித்துகொண்டு இருக்கிறோம் .இன்று உங்கள் வளர்ச்சி, எங்கள் வளர்ச்சி .கடலூர் வாசகர்கள் சார்பில் புரட்சிகர வாழ்த்துகள்.

 41. புதிய வடிவமைப்பில் பரிணமகிக்கும் வினவு தளம்..மேலும் பிரபலமடைய..வாழ்த்துக்கள்!

 42. வினவு இணையத்தின் அமைப்பு விண்டொஸ் 8 இன் -sliding technology- இற்கு இசைவாக மாற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்த சந்ததிக்கான தொழில் நுட்பம் என சொல்கிறார்கள். இதற்கு முன்னோடியாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்.

  இடது மற்றும் வலது தீவிரவாதம் குறித்து லெனினிசத்தில் பேசப்பட்டது. இடது தீவிரவாதம் என்பது மக்கள் போராட்டத்திற்கு அணிதிரட்டப்படாமல் அவர்களிலிருந்து விலகி முன்னோக்கிச் செல்லும் குழுக்களைக் குறிப்பிடலாம். ஈழ விடுதலை இயக்கங்கள் பலவற்றில் இப் பண்பு அழிவை ஏற்படுத்தியது, மாவோயிஸ்டுக்கள் கூட இதனுள் சேர்த்துக்கொள்ளப்படலாம்.
  வலது தீவிரவாதம் என்பது மக்கள் அரசியல் தலைமையிலிருந்து விலகி முன்னோக்கிச் செல்லலாகும். இன்று உலகம் முழுவது நடக்கும் போராட்டங்கள் இந்த இருவகையான பண்புகளுக்குத் திட்டமிட்டு திசைதிருப்புவதன் ஊடாகவே ஏகாதிபத்தியங்கள் கையாள்கின்றன. அரபு எழுச்சி என்ற வலது சந்தர்ப்பவாத சூழலை அமரிக்காவே திட்டமிட்டு ஏற்படுத்தி அதனை தனக்கு இசைவாகப் பயன்படுத்தியது.
  இந்த நிலையில் மக்களைப் போராடப் பயிற்றுவிப்பது, அதற்கான அணிதிரட்டுவதும் என்ற ‘உணர்ச்சி அரசியலுக்கு’ இடம்கொடாத புரட்சிகர அரசியலை ம.க.,இ.க என்ற அமைப்பு மட்டுமே முன்னெடுக்கிறது.
  தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே புரட்சிகர அரசியலைப் இந்தத் தளத்தின் முன்னெடுக்கும் ம.க.இ.க 21 ஆம் நூற்றாண்டின் வர்க்கப்போராட்டத்தின் முன்னோடிகள் எனலாம்.
  முன்பைப் போலல்லாது வலதுசாரி சந்தர்ப்பவாதச் சூழல் ஏகாதிபத்திய திட்டமிட்டு ஏகாதிபத்தியங்களால் ஏற்படுத்தப்படுகிறது. மக்கள் எழுச்சிகள் திட்டமிட்டு உருவாக்கப்படு அழிக்கப்படுகின்றன. அந்த எழுச்சிகளில் கலந்து கொள்வதும் தலைமை தாங்குவதும் புரட்சிகர கட்சிகளின் கடமை.
  உருவாகும் எழுச்சிகளுக்குத் தலமை கொடுப்பதற்கு
  1. புரட்சிகர அரசியல் படையணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
  2. எழுச்சிகளை புரட்சிகர அரசியல் தலமை சார்ந்து சர்வ்தேச மயப்படுத்த வேண்டும்.
  சர்வதேச மயப்ப்படுத்தல் என்பது உலகின் ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்து கொள்வதிலிருந்தே ஆரம்பமாகும். அதற்கு வினவு போன்ற இணையங்கள் ஆங்கிலதில் வெளியாக வேண்டு, இதற்கு பண உதவி, மொழிபெயர்ப்பு போன்ற தடைகள் இருக்குமாயின் வினவில் பின்னூட்டமிடும் வாசகர்கள் நிச்சயமாகப் பங்களிப்பு வழங்குவார்கள்.

 43. Vinau may be considered as a Encyclopedia of Tamil Nadu very soon.

  We can get information with political background for any topic here.

  Great work of our Tamil People

  Day by day by adding little drops of information now vinavu is a great river of information

  By best wishes for vinavu and its background workers of MKEK

 44. My simple advice is making the MKEK meeting online.

  It is possible for vinavu with out any new investment for new technologies.
  [u may know this technique]

  [1] Record the MKEK meeting audio in to a lap top or PC as a avi file.

  [2]During the meeting at every 10 minutes gap upload the avi file to vinavu web site.Probabally you may have a wireless modam like reliance net connect or some one.

  [3] The meeting can reach the people with only 15 minutes delay.

  [4] Vinavu why do not u try for this technoique in our next MKEK meeting

 45. While recording audio of meeting pls use low quality of recording by the way uploading and downloading will be faster.[now u r doing this for meeting audio content fast off line upload and download]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க