privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அண்ணா ஹசாரே குழு பிளவு! சோகமா, காமடியா?

அண்ணா ஹசாரே குழு பிளவு! சோகமா, காமடியா?

-

அரவிந்த்-கேஜ்ரிவால்அண்ணா-ஹசாரேண்ணா ஹசாரேவும் அரவிந்த் கேஜ்ரிவாலும் பிரிந்து விட்டார்களாம். இவர்களுக்கிடையே இருந்த கொள்கை சார் ‘நட்பு’ செத்துப் போனதற்கு ஆங்கில ஊடகங்கள் எழவு கொண்டாடியுள்ளன. டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட பிரச்சினைகளில் தேசத்தின் அரசியல் அரங்கம் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தாலும், அதற்கிடையிலும் ஊடகங்கள் இந்த காமடிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியுள்ளன.

அரசியல் கட்சி வேண்டுமா கூடாதா என்பதை இறுதி செய்ய ஃபேஸ்புக்கிலும் இணையத்தின் மற்ற சமூகத் தளங்களிலும் கேஜ்ரிவால் தலைமையிலான ஊழலுக்கு எதிரான இந்தியா நடத்திய கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்திருந்ததன் அடிப்படையிலேயே அவர் கட்சி துவங்குவது என்கிற முடிவுக்கு வந்திருந்தாராம்.

கட்சி துவங்குவது பற்றிய இறுதி முடிவு எடுப்பதற்காக கடந்த 19-ம் தேதி கூடிய கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா ஹசாரே, அரசியல் கட்சி துவங்குவதில் தனக்கு ஒப்புதல் இல்லையென்றும், அப்படித் துவங்கும் பட்சத்தில் தனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இத்தோடு செய்தி முடிந்திருந்தால் இது தான் அண்ணா ஹசாரேவின் இறுதி நிலைப்பாடு என்று புரிந்து கொள்ள வசதியாய் இருந்திருக்கும். ஆனால், அப்படி முடியவில்லை.

செய்தியாளர்களைச் சந்தித்த பின் ஒரு வீடியோ செய்தியை அனுப்பிய அண்ணா ஹசாரே, இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டு அதில் ஒரு பிரிவினர் அரசியல் பாதைக்குச் சென்றிருப்பதாகவும், அதுவும் அவசியமான ஒன்று தானென்றும் சொல்லியிருக்கிறார். இப்படி மூப்பனார் தமிழ் பேசுவதைப் போல அரசியல் பேசும் அண்ணா ஹசாரேவின் ‘ஊழல் ஒழிப்புத்’ திட்டத்தை சந்தேகிக்காமல் என்ன செய்யவது? வினவு தளத்தின் மேல் மனவருத்தப்படும் அண்ணாவின் தம்பிகள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இதற்கிடையே இந்த கோஷ்டிப் பூசலில் அண்ணா ஹசாரேவின் பக்கம் நிற்கும் கிரண் பெடி, அரசியல் கட்சி துவங்க வேண்டிய தேவையே இல்லையென்றும், நமது எதிர்ப்பு காங்கிரசை நோக்கி மட்டுமே இருக்க வேண்டுமென்றும், பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பது தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் டிவிட்டர் தளத்தில் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்துக்காக தான் புதிய அலுவலகம் ஒன்றைத் தேடி வருவதாகவும் ஒரு உள்குத்தை வைத்துள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது நண்பர்களால் துவங்கப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைக் கைப்பற்றுவதற்காக நடக்கப் போகும் கூத்துக்கள் தான், இந்த மெகா சீரியலில் அடுத்து வரப் போகும் எபிசோட்களின் கதை என்பதை கிரண் பெடி வழிமொழிகிறார்.  இடையில் வசூலித்த பணத்தை அண்ணாவிடமே அளிப்பதற்கு கேஜ்ரிவால் முன்வந்தாலும், பெரியவர் மறுத்து விட்டாராம். எல்லாம் கௌரவம் படத்தில் வருவது போலத் தோன்றினாலும் உண்மையில் இது அவர்களது கௌரவம் குறித்த மோதலினாலேயே நடக்கிறது.

ஜன் லோக்பால் கோரிப் போராடும் அண்ணா குழுவினர் மற்றும் அந்த இயக்கத்தின் அடித்தளமாய் விளங்கும் நகர்புற மேல் நடுத்தரவர்க்கப் பிரிவினரின் ஜனநாயக விரோதப் பண்புகளையும், அதுவே அவர்களது அரசியல் சமூகக் கண்ணோட்டங்களில் பிரதிபலிப்பதையும் விளக்கி வினவு தளத்தில் முன்பே நாம் எழுதியிருக்கிறோம். இந்த அணிசேர்க்கையே தவளையும் எலியும் கால்களைக் கட்டிக் கொண்டதைப் போன்றது தான் – தவளைத் தண்ணீருக்கும் எலி தரைக்குமாக இழுக்கின்றது.

தனிப்பட்ட இமேஜ் மற்றும் யார் மைக்கைப் பிடிப்பது என்பதில் தான் இவர்களுக்குப் போட்டியே தவிர இவர்கள் சொல்லிக் கொள்ளும் ஜன்லோக்பால் மசோதாவைப் பற்றியெல்லாம் இவர்களுக்கே  அக்கறையோ கவலையோ இல்லை. இதை ஆளும் வர்க்கம் சரியாகப் புரிந்து வைத்திருப்பதாலேயே இவர்கள் தயாரித்துக் கொடுத்த ஜன்லோக்பால் மசோதாவின் தாள்களைக் கழிவறைக் காகிதங்களாக மதிக்கின்றன. என்றாலும் அந்த கழிவுக்கும் கொஞ்சம் மவுத்டாக் கிடைத்ததற்கு காரணம் இதே ஆளும் வர்க்கம் காண்பித்த ‘கருணை’தான். இப்போது கருணைக் காலம் முடிவடைந்ததாலோ என்னமோ அண்ணா குழுவினர் காமடி டைம்மை ஆரம்பித்துவிட்டனர்.

உண்மையிலேயே ஊழல் ஒழிய வேண்டும் எனும் அக்கறையோடு அண்ணா கும்பலின் பின்னே சென்ற இளைஞர்கள் இப்போதாவது உணர வேண்டும்.