கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் “தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா 2025”-ஐ தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் “தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019”-இல் “பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்கள்” (Brownfield Universities) என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்களானது ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளை ‘தரம்’ உயர்த்துவதன் மூலம் உருவாக்கப்படும்.
அதாவது அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாகம் விரும்பினால், தங்களை பல்கலைக்கழகங்களாக ‘தரம்’ உயர்த்திக் கொள்ளலாம். இதன் மூலம் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் அபாயம் உள்ளது. உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களாக மாறி பல்கலைக்கழகங்களுக்குரிய அதிகாரத்தையும் சலுகைகளையும் பெறும் நிலை உருவாகும்.
இதற்காக, தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019-இன் “பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொடர்ச்சியான நிலம் வேண்டும்” என்ற சட்டப்பிரிவு 4-இல் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திருத்தத்தின்படி, மாநகராட்சிகளில் 25 ஏக்கர், நகராட்சி அல்லது பேரூராட்சிகளில் 35 ஏக்கர், பிற பகுதிகளில் 50 ஏக்கர் நிலம் பல்கலைக்கழகம் அமைக்க போதுமானது. மேலும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்துவது உள்ளிட்ட பல திருத்தங்களையும் தி.மு.க. அரசு மேற்கொண்டுள்ளது.
ஏற்கெனவே, தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கமே நிலவுகிறது. 2020-2021-ஆம் ஆண்டிற்கான “அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு” (All India Survey on Higher Education) அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் சுமார் 2,020 தனியார் கல்லூரிகள் உள்ளன. இதில் 12,79,814 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதேசமயம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் 637 மட்டுமே. இதில் மொத்தமாக 9,55,548 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இம்மசோதா சட்டமானால் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் தனியார்மயமாகி, தனியார் கல்வி முதலைகளின் கட்டணக் கொள்ளை உச்சத்தைத் தொடும்.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசுகளின் நிதியுதவியால், அதாவது மக்களின் வரிப்பணத்தால்தான் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் சொத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், முனைவர் பட்ட அறிஞர்களின் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மற்றும் பதிப்புரிமைகள் உள்ளிட்ட மனித மூலதனத்தாலுமே இக்கல்லூரிகள் இத்தனை ஆண்டுகாலம் இயங்கி வந்துள்ளன. ஆகவே, இக்கல்லூரிகளை தனியாருக்கு தாரைவார்ப்பது பொதுச் சொத்தை தாரைவார்ப்பதற்கு ஒத்த நடவடிக்கையும் அயோக்கியத்தனத்தின் உச்சமுமாகும்.
இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வழங்கப்பட்டுவரும் இலவச அல்லது குறைந்த கட்டண கல்வி ஒழித்துக்கட்டப்படும். ஏனென்றால், இக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பராமரிப்பு நிதி, மானிய நிதி உதவிகளை வழங்குவதிலிருந்து அரசு விலகிக்கொள்ளும். மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூலிப்பதன் மூலமே கல்லூரிகள் இதனை ஈடு செய்துகொள்ள வேண்டும். எனவே, இலாபவெறி பிடித்த கல்லூரி நிர்வாகங்களால் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும்.
இதனால், ஏழை, எளிய மாணவர்களும், அதிலும், பெண்களுமே அதிகளவில் பாதிக்கப்படுவர். மேலும், அரசு கல்லூரிகள் இல்லாத பல ஊர்களில், அரசு உதவி பெறும் கல்லூரிகளையே அப்பகுதி மாணவர்கள் சார்ந்துள்ள நிலையில், அங்கெல்லாம் மோசமான விளைவுகள் ஏற்படும். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனவாக மாறும்.
அதேபோல், இந்த சட்டத்திருத்தத்தின் படி உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்களில், மருத்துவம் தவிர்த்த கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கு சிறுபான்மை அல்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் 65 சதவிகித இடங்களும், சிறுபான்மை பல்கலைக்கழகங்களில் 50 சதவிகித இடங்களும் இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதிலும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பயின்றுவரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி பெறும் உரிமைகள் இனி பறிக்கப்படும்.
மேலும், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு போன்று, கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கியூட் தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயமும் இம்மசோதாவின் பின்னணியில் உள்ளது. ஏனென்றால், தனியார் பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்தால் மாணவர் சேர்க்கைக்கு கியூட் தேர்வை கட்டாயப்படுத்திக் கொள்ளும் அதிகாரம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களிலும் கியூட் தேர்வு நடைமுறையில் உள்ளது.
ஆகவே, இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் நீட் பயிற்சி மையங்களைப் போன்று, கியூட் பயிற்சி மையங்கள் தமிழ்நாடு முழுவதும் முளைக்கும். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான இடங்கள் இலட்சக்கணக்கில் பேரம் பேசி விற்கப்படும் நிலை உருவாகும். மருத்துவத்தைப் போன்று கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளையும் பணக்கார, மேட்டுக்குடி வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலை ஏற்படும்.
மேலும், இம்மசோதாவினால் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் உயர்கல்வியின் தரம் பாதிக்கப்படும். ஏனென்றால், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களுக்கு கற்பிக்கும் பாடத்திட்டத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரம் உள்ளது. எனவே, சமூக நலன் சார்ந்த, அறிவியல் பூர்வமான, பகுத்தறிவை வளர்த்தெடுக்கக் கூடிய பல முக்கியத்துவம் வாய்ந்த படிப்புகள் கைவிடப்பட்டு இலாப நோக்கம் வாய்ந்த படிப்புகள் கற்பிக்கப்படுவது அதிகரிக்கும்.
தனியார் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வியை வழங்கலாம் என்று இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதால், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் ஆதிக்கமும் கட்டணக் கொள்ளையும் தமிழ்நாட்டில் நிலைநாட்டப்படுவதற்கான வாய்ப்புகள் திறந்துவிடப்படும்.
முக்கியமாக, அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறும்போது அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களும் பணியாளர்களும் அந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செல்வர். இதன் விளைவாக, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நிலைமைகளை முறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தனியார் கல்லூரி ஒழுங்குமுறைச் சட்டம் 1976, நீர்த்துபோகச் செய்யப்படும். தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தினால் பெறப்பட்ட பணிப் பாதுகாப்பு, மருத்துவ விடுப்பு, ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்படும். மாத ஊதியத்தின் அளவு குறைக்கப்படும். ஆசிரியர் பணியிடங்கள் இலஞ்சம் பெறப்பட்டு நிரப்பப்படுவது இயல்புநிலையாக்கப்படும்.
இத்தகைய பேரபாயம் மிக்க மசோதாவைத்தான் மாணவர் சமுதாயத்தின் நலனிற்காகவும் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காகவும் நிறைவேற்றியிருப்பதாக தி.மு.க. அரசு கூறுகிறது. இது தி.மு.க. அரசு உயர்கல்வித்துறையை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்துவரும் நடவடிக்கையின் உச்சம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்குவதற்காக அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான நிதியை குறைப்பது; மாணவ – மாணவிகளுக்கான விடுதிக் கட்டமைப்பை திட்டமிட்டே சீரழிப்பது, “நான் முதல்வன் திட்டம்” போன்று தேசிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டங்களை வேறு பெயர்களில் அமல்படுத்துவது; டிஜிட்டல் வழி கல்வியை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதாவும், தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்தை ஒத்ததாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, அதனை பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தி.மு.க. அரசு மறைமுகமாக அமல்படுத்தி வருவது இந்நடவடிக்கையிலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அதேபோல, 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவது என்ற தன்னுடைய இலக்கை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகவும் இம்மசோதாவை தி.மு.க. கருதுகிறது. அதாவது உயர்கல்வியை வணிகமயமாக்கி அதன் மூலம் பொருளாதாரத்தை ‘பெருக்க’ விழைகிறது. அந்த அடிப்படையில் இருந்துதான் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு பிற மாநில அரசுகளும் இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது.
இம்மசோதாவிற்கு தி.மு.க-வின் கூட்டணி கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. மாணவர் அமைப்புகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள மாணவர் பேரவைகள் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தன.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் மக்களிடம் இத்தகைய எதிர்ப்புணர்வு அதிகரிப்பதை விரும்பாத தி.மு.க. அரசு மசோதாவை மறுசீராய்வு செய்வதாகக் கூறி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
எனவே, இனிவருங்காலங்களில் இம்மசோதா அல்லது அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் தி.மு.க. அரசு கட்டாயம் ஈடுபடும்.
ஆகவே, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்களை உயர்கல்வி பெறுவதிலிருந்து வெளியேற்றும், பாசிச மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையோடு ஒத்த, தி.மு.க. அரசின் இந்நடவடிக்கைகளை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருந்து எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் – மாணவர்கள் – பெற்றோர்கள் கூட்டமைப்பை உருவாக்கி போராட்டங்களை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
![]()
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











