Thursday, April 15, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும் எதிர்க்கட்சிகளின் நாடகமும்!

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும் எதிர்க்கட்சிகளின் நாடகமும்!

-

FDI-Retailமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட அரசின் முடிவுகளை எதிர்த்து எதிர்கட்சிகள் நடத்திய பொது வேலை நிறுத்தம் நேற்று (20/09/2012) நடந்து முடிந்தது. பரவலாக பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இந்த வேலை நிறுத்தம் பாரிய தாக்கத்தை உண்டாக்கியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்தியில் ஆளும் காங்கிரசு அரசின் முடிவுகளை எதிர்க்கும் விதமாக மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசு, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விளக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்கிற முடிவு தமக்கு அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டிருந்த மமதா  பானர்ஜி, மத்திய அரசு இப்படி ஒரு முடிவு எடுக்கப் போவதே தமக்குத் தெரியாமல் போய் விட்டதே என்றும் அங்கலாய்த்திருக்கிறார்.

இதற்கிடையே பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் சரத் பவார், மமதா பானர்ஜி கலந்து கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் வைத்துத் தான் இம்மூன்று முடிவுகளையும் (டீசல், சிலிண்டர், சில்லறை வர்த்தகம்) அரசு எடுக்கப் போவது பற்றி மன்மோகன் சிங் விளக்கினாரென்றும், அப்போது மமதா பானர்ஜி இம்முடிவுகளுக்கு எதிர்ப்பு எதையும் தெரிவிக்காததோடு, தனது கருத்தைப் பின்னர் தெரிவிப்பதாகச் சொன்னார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே திரிணமூல் காங்கிரசு 2009-ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது ஊடகங்களில் வெளியானது. மூஞ்சி முழுக்க கரி அப்பிக் கொண்டவுடன் விளக்கமளிக்க முன்வந்த மமதா பானர்ஜி, அது சும்மா எழுத்துப் பிழை தான் என்று சொல்லி ‘குப்புற விழுந்தாலும் முகத்தில் மண் ஒட்டலையே’ என்று சமாளித்துள்ளார்.

இன்னொரு புறம் காங்கிரசு அரசை ஒரு வழி செய்து விடுவோமாக்கும் என்று களமிறங்கி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பாரதிய ஜனதாவின் தலைவர் நிதின் கட்காரி, இந்த அரசைக் கவிழ்க்க நாங்களாக ஒன்றும் செய்ய மாட்டோம் என்றும், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் உத்தேசம் தமது கட்சிக்கு இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

வலது இடது போலி கம்யூனிஸ்டுகளின் நிலையோ சீரழிவான காமெடியைப் போல் இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மண்டையைப் போட்டு விட்ட மூன்றாம் அணியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து பவுடர் பூசி சிங்காரிக்கும் முயற்சியில் இவர்கள் இப்போது தீவிரமாக இருக்கிறார்கள். இந்த முயற்சிக்காக தெலுகு தேசத்தின் சந்திரபாபு நாயுடுவையும், முலாயமையும் எப்படியாவது சரிக்கட்டி விட முடியுமா என்று பார்க்கிறார்கள்.

இதில் முலாயம் காங்கிரசு கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக தமது எம்.பிக்கள் வாக்களிப்பார்கள் என்றோ, அப்படிச் செய்து அரசின் முடிவைத் தடுப்போம் என்றோ  அறிவிக்கவில்லை. மாறாக காங்கிரசு கூட்டணி அரசை ஆதரிப்பதாகத்தான் அவர் சமீபத்தில் அறிவித்துள்ளார். மேலும் அந்நிய மூலதன வரவை எதிர்ப்பதும் அக்கட்சியின் கொள்கையல்ல; தேர்தல் வந்தால் அதிக எம்.பிக்களைப் பெற்று மத்தியில் அமையப் போகும்  அரசில் முக்கியத்துவம் பெற்றுக் கொள்வது – தேர்தல் வரவில்லையென்றால் காங்கிரசுக்கு முட்டுக் கொடுப்பது என்பதே அக்கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.

சந்திரபாபு நாயுடுவோ தெலுகு தேசம் ஆந்திராவை ஆட்சி செய்து வந்த காலத்தில் நேரடியாகவே அமெரிக்க அடிவருடியாக இருந்தவர். போலி கம்யூனிஸ்டுகளே கூட மேற்கு வங்கத்தில் அதிகாரத்தில் இருந்த வரையில் அந்நிய மூலதனத்தை ‘மாநில நலன்களை’ உத்தேசித்து அனுமதிப்பது என்பதையே கொள்கையாகக் கொண்டிருந்தனர். மலேசியாவின் சலீம் குழுமத்தை எதிர்த்துப் போராடிய மக்களை ஒடுக்க போலீசு படையையும் குண்டர் படையையும் ஏவி விட்டு அந்நிய மூலதனத்துக்கு நேரடியாகவே சேவை செய்த வரலாற்றுச் சிறப்புக் கொண்டவர்கள்.

எதிர்முகாம் இவ்வாறு குழம்பிய குட்டையாக இருப்பதை அவதானித்தே நிதியமைச்சர் ப. சிதம்பரம், அரசின் முடிவை மாற்றும் பேச்சுக்கே  இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார். மேலும்,  “நேற்றும் எங்களுடன் போதிய அளவு நண்பர்கள் இருந்தனர் – இன்றும் இருக்கிறார்கள்” என்று திமிராகப் பேசியுள்ளார்.

ஆக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பது, டீசல் விலையேற்றத்தை எதிர்ப்பது, சிலிண்டர்களின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை எதிர்ப்பது என்பதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் நடத்தி வருவது அப்பட்டமான நடிப்பு என்பது தெளிவாகிறது. அரசின் பொருளாதாரத் தாக்குதல்களை எதிர்கொள்ள மக்கள் இந்த மண்குதிரைகளை நம்பாமல் நேரடியாகக் களமிறங்குவது ஒன்றே தீர்வு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க