privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஆப்பிள் அண்ணே, நீ மட்டும்தான் கேஸ் போடுவியா? நாங்களும் போடுவோம்ல...!

ஆப்பிள் அண்ணே, நீ மட்டும்தான் கேஸ் போடுவியா? நாங்களும் போடுவோம்ல…!

-

ஆப்பிள்மீபத்தில் ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் மேல் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது வடிவமைப்பை (Design) அனுமதியின்றி பயன்படுத்துவதாக வழக்கு தொடுத்திருந்தது. ஓரங்களில் வளைவுகளோடு கூடிய செவ்வக வடிவம் மற்றும் தொடு திரையில் விரல் தீற்றல் மூலம் கைபேசியை அன்லாக் செய்வது உள்ளிட்டவை தனது சொந்தக் கண்டுபிடிப்பு என்று உரிமை கோரியிருந்தது ஆப்பிள் நிறுவனம். செவ்வக வடிவத்திற்குக் கூட உரிமை கோரிய இந்த கேலிக்கூத்தான வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

மைக்ரோசாப்ட், வால்மார்ட், கோக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களோடு ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்கப் பெருமிதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேற்படி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் சந்தை அணுகுமுறை என்பது அமெரிக்க பாணி முதலாளித்துவத்தின் துலக்கமான வடிவங்கள். திறமையின் மூலம் சந்தைப் போட்டியைச் சமாளிப்பது என்கிற வழக்கமான முதலாளித்துவ மாய்மாலங்கள் மேல்பூச்சுகள் ஏதுமின்றி, வெறி கொண்ட முறையில் தனது எதிரியை ஒழித்துக் கட்டிவிட்டு சந்தையில் ஏக போகத்தை நிறுவிக் கொள்வது தான் இவர்கள் கடைபிடிக்கும் தொழில் தர்மம்.

காப்புரிமைச் சட்டங்களின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்படுவது, போட்டி நிறுவனங்களைக் காப்புரிமை மீறல் வழக்குகள் போட்டு திணறடிப்பது, ஒட்டு மொத்த நுகர்பொருள் சந்தையை தானே கபளீகரம் செய்வது உள்ளிட்ட சண்டியர்தனங்களில் கலக்கிக் கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இப்போது ஒரு பெரும் சோதனை வந்துள்ளது. சமீபத்தில் சீனத்தைச் சேர்ந்த கைபேசி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தனது வடிவமைப்பை ஆப்பிள் நிறுவனம் திருடி விட்டதாகவும் அந்நிறுவனத்தின் மேல் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

படிக்க

ஆப்பிள் ஐ-போன் 5-ன் தயாரிப்பு முன்மாதிரிகள் (Proto Type) சில நாட்களுக்கு முன்னரே வெளியில் கசிந்துவிட்டதாகவும், அதைக்கொண்டு சீனாவின் “GooPhone” என்ற நிறுவனம், ஐ-போனின் போலி நகல்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. ஆப்பிள் தனது ஐ-போன் 5-வை வெளியிடுவதற்கு பல நாட்களுக்கு முன்னரே Goophone அந்த “பூச்சி” கைபேசியை சந்தைப்படுத்திவிட்டது. தன்னுடைய போன் முதலில் சந்தைக்கு வந்திருப்பதால், அதற்கு பின்னால் வரும் எவையும் அதன் நகலாக தான் கருதப்படவேண்டுமென்றும் அதனால் ஆப்பிளின் ஐ-போனை தடை செய்யவேண்டும் என்றும் வழக்கு தொடுக்கபோவதாகவும் அறிவித்திருக்கிறது. இதன் மூலம்  காப்புரிமை என்ற பெயரில் சண்டமாருதம் செய்துவரும் ஆப்பிள் நிறுவனத்தையும், காப்புரிமை காவலர்களான முதலாளித்துவ உலகத்தையும் goophone எள்ளி நகையாடியுள்ளது. (உனக்கு மட்டும் தான் கேஸ் போட தெரியுமா? நாங்களும் போடுவோம்ல).

அறிவியியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியில் இருந்து தான் ஒரு தொழில் நுட்பம் உருவாகி பயன்பாட்டிற்கு வருகிறது. புது புது மாடல்களாக தனது பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி லாபமீட்டுவதுடன், அதை காப்புரிமை என்ற பெயரில் சண்டித்தனம் செய்து வேறு எவரும் பயன்படுத்த முடியாத வகையிலும் கொள்ளை லாபமீட்டும் எந்த முதலாளித்துவ நிறுவனமும், தனது தொழில்நுட்பத்திற்கு மூலாதாரமான அறிவியல் கண்டுபிடிப்பிற்கு எந்த ராயல்டியும் கொடுப்பதில்லை, எவரிடமும் முன் அனுமதியும் பெறுவதில்லை.

சீனாவில் Goophone என்ற ஒரு நிறுவனம் மட்டுமல்ல, அதைப் போல பல நிறுவனங்கள் “Copy to China” நிறுவனங்களாக செயல்படுகின்றன, அவற்றின் பொருட்கள் சீனாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் சந்தைப்படுத்தப்படுகிறது. உதாரணமாக புதிய மாடல் ஐ-போனை மட்டும் ஐந்திற்க்கும் பேற்பட்ட நிறுவனங்கள் தயாரித்திருக்கின்றன. சாம்சங்கை மிரட்டும் ஆப்பிள் இந்நிறுவனங்களை ஒன்றும் செய்யமுடிவதில்லை, காரணமென்னவென்றால், சீனாவில் ஆப்பிளின் வாதங்கள் டெலி போனை நீயா கண்டுபிடித்தாய்? கிரகாம்பெல் தானே கண்டுபிடித்தார், போன்ற எளிய கேள்விகளால் முடக்கப்பட்டுவிடும்.

சீனாவில் செல்போன் மட்டுமல்ல, எல்லா விதமான பொருட்களும் இவ்வகையில் தயாரிக்கப்படுகின்றன, பி.எம்.டபிள்யு கார் கூட அங்கு நகலெடுத்து தயாரிக்கப்படுகிறது. சீனவின் சிறு நிறுவனங்கள் காப்புரிமைகளின் மீது தொடுக்கும் தாக்குதல் என்பது பிற முதலாளித்துவ நாடுகளை எள்ளி நகையாடுவது போன்றது தான்.

தவிர்க்கவியலாதபடிக்கு அமெரிக்க சந்தையும் சீனத்தின் உற்பத்தித் துறையும் பிணைக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இருப்பதைப் போன்ற மலிவான உழைப்புச் சந்தை கிட்டும் வரை அமெரிக்க முதலாளித்துவம் சீனாவின் சில்லறைச் சீண்டல்களை வேறு வழியின்றி சகித்துக் கொள்ளத் தான் வேண்டும். போலவே, சீனாவும் அமெரிக்க ஏற்றுமதியை நம்பியே தனது பொருளாதாரத்தைக் கட்டமைத்துள்ளது. எனவே ஒரு கட்டத்திற்கு மேல் அமெரிக்க முதலாளித்துவ ஆன்மாவின் பொறுமையைச் சோதிக்க முடியாது.

சீனாவோடு ஒரளவிற்கு மேல் முறுக்கிக் கொண்டால் அங்கே சுதந்திரமாக உழைப்புச் சுரண்டலில் ஈடுபட முடியாது என்பதை ஆப்பிள் உணர்ந்து கொண்டிருப்பதாலேயே இந்த விவகாரத்தில் ஒரு மென்மையான போக்கைக் கடைபிடிக்கிறது. போலி கைபேசிகள் என்கிற சின்ன மீனுக்காக சல்லிசான விலைக்கு உற்பத்தி என்கிற பெரிய மீனை ஆப்பிள் இழக்கத் தயாரில்லை. காப்புரிமை, சந்தைப் போட்டி என்கிற சவடால்கள் எல்லாமே லாப வெறி என்கிற பரம்பொருளின் தாள் பணிந்தே நிற்கிறது.