privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கைக்குழந்தைகளுடன் பெண் தோழர்கள் - திருச்சி சிறை அனுபவம்!

கைக்குழந்தைகளுடன் பெண் தோழர்கள் – திருச்சி சிறை அனுபவம்!

-

ஜெயலலிதா-கருப்பு-கொடி

மேலும் படங்கள் இங்கே

ணுஉலையை எதிர்க்கும் மக்களை தாக்கிய போலீசு காட்டட்சியை கண்டித்தும், அதை ஏவிவிட்ட பாசிச ஜெ, ஸ்ரீரங்கத்தில் அன்னதானம் செய்ய வந்த போது கறுப்புக்கொடி காட்டியதாலும் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டு மகளிர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அங்குள்ள பெண் காவலர்களின் அணுகுமுறையோ ஊரறிந்த விசயம். “ஏய் இங்க வா, போ, நீ நேற்றுவந்த ‘கேசுதான’ போய் அந்த சிறப்பு கைதி தங்கும் பகுதியில் உள்ள புல்லை புடுங்கு” என்று வயதில் பெரியவர், சிறியவர் என்றில்லாமல் அதிகாரத்தை திமிராக வெளிப்படுத்துவார்கள்.

கடந்த நவம்பர் 2011-ல் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஜெவை போல் வேசமிட்டதால் ஏற்கனவே சிறைசென்றோம். அப்பொழுது அங்கு உணவு சரியாக சமைத்து பரிமாறாமல், ஆடுமாடுகளுக்கு கொடுப்பதை போன்று நடத்தியதைக் கண்டித்தும் இதர அடக்குமுறைகளை எதிர்த்தும் ஜனநாயக முறைப்படி போராடியிருக்கிறோம். அதை நினைவுபடுத்திய உடன் இம்முறை “ஏம்மா மறுபடியும் வந்துட்டீங்களா? வெளியில் சும்மாவே இருக்கமாட்டீங்களா?” என்ற கேட்டுவிட்டு மரியாதையுடன் நடந்து கொண்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட நாள் இரவு குழந்தைகள் மூவரும் புதிய இடம, கொசுக்கடி, துர்நாற்றம் தாங்க முடியாமல் அழுது கொண்டும் தோழர்கள் அவர்களை சமதானப்படுத்தியபடியும் இருந்தனர்.

ரோந்து வந்த பெண்காவலர் “ஏய்! என்ன சத்தம் ரொம்ப பெரிசா போட்டுகிட்டு இருக்க தூங்கமாட்டியா? உனக்கு என்ன மற்றவங்க தூங்குறது தெரியலயா? புரியாது” என்று சீறினார்.

நாங்கள் “மொதல்ல மரியாதையா பேசுங்க எங்களுக்கு தூக்கம் வந்தால் தூங்கறோம் குழந்தைகள் தூங்காம பெரியவங்க எப்படி தூங்க முடியும்” என்று கேட்டதற்கு “என்ன எதிர்த்து பேசுற யாருகிட்ட பேசுற தெரியாதா?. நான் என்ன செய்வேன் தெரியுமா?” என்றவர், எங்கள் செல்லுக்கு மட்டும் ‘கரண்ட்’ சப்ளையை நிறுத்தி விட்டு சென்றார்.

உடனே நாங்கள் அனைவரும் விடாமல் செல்லின் கம்பி ஜன்னலை தட்டு வைத்து ஓசையை  எழுப்பி “ஏங்க எங்க செல்லுக்கு மின்சாரம் வரல, எல்லா ரூமிலும் லைட்டும் ஃபேனும் ஓடுது எங்களுக்கு ஏன் நிப்பாட்டினீங்க, ஏம்மா இப்போ கரண்ட் இந்த ரூமுக்கு வருமா?  வராதா?” என்று சத்தம் போட்டு இரவில் நடத்திய போராட்டம் மூலம் மீண்டும் 3 நிமிடத்திற்கு பின் சுவிட்ச் ஆன் செய்தார். கரண்ட்டை பெறும் வழி போராட்டம தான் என்பதை மற்ற சிறை கைதிகளும் அனுபவமாக பெற்றனர்.

உடல்நிலை சரியில்லாததால் ஒரு தோழர் சாப்பிடவில்லை, மற்ற சிலரும் சாப்பாடு நன்றாகயில்லாததால் கொஞ்சமாகவே எடுத்துக் கொண்டு மீதியை குப்பையில் கொட்டிவிட்டனர். அதற்கு அங்கிருந்த பெண் காவலர் “ஏய் ஏங்கே போற ? அதை அள்ளு, அள்ளுகிறாயா இல்லையா?” என மிரட்டினார். ஒரு தோழர்  அதெல்லாம் முடியாது என்றவுடன் “என்ன நீ ரொம்ப எகிர்ற, எடு லத்திய” என்றார். தோழர் உடனே “எங்கே நீ லத்திய எடுத்து ஒரு அடி மேல வை அப்புறம் நீ இங்க இருப்பியான்னு பார்க்கலாம்” என்றார்.

நிறைய பெண் போலீசார் உடனே அங்கே குவிந்து விட்டனர். தோழரின் பேச்சு பெண் வார்டன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு வந்த பெண் போலீசு ஒருவர் “என்ன ? ரொம்ப வாய் பேசுறீங்க” என்றார். உடனே நாங்கள் “ஆமாம், மக்கள் உரிமைக்காக போராடி சிறைக்குள் வந்துள்ளோம். எங்களை அவமரியாதையாக நடத்தினால் ஏற்றுகொள்ள முடியாது. எங்களை மட்டுமல்ல பிற சிறையாளர்களையும் மரியாதைக் குறைவாக நடத்துவதை அனுமதிக்க மாட்டோம்.” என்று விடாப்பிடியாக பேசியதும் கொஞ்சம் அடக்கி வாசித்தனர்.

“இவுங்க புதுசா வந்தவங்க உங்களை பற்றி எதுவும் தெரியாது. இனிமே உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் என்னிடம் சொல்லுங்க” என்றார் வார்டன். இவர் சென்ற முறை சிறை சென்ற போது நமது போராட்டத்தால் மூக்கறுப்பட்டு நம்மிடம் பொறுமையாக நடந்து கொள்ள துவங்கியுள்ளார்.

அடுத்து பெண்கள் சிறை மருத்துவர் அகம்பாவம் அடக்கியது. ஒரு தோழருக்கு முதல் நாள் ‘வீசிங்’ பிரச்சனைக்கு சிகிச்சை அளித்தும் சரியாகாத காரணத்தால் அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு மருத்துவரிடம் ‘மூச்சு திணறுகிறது இரவானால் அதிகாமாகிவிடும் ஆகவே இப்போது வந்தோம்’ என்று விளக்கி கூறியும் ‘ஏன் உனக்கு இப்பதான் வர்ற தெரியுதா? நீ முன்னாடியே வர்றமாட்டியா ? எப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் தீடீர்னு வந்துச்சு? என்று ஏக வசனத்தில் ஏசினார்.

உடலுக்கு பிரச்சனை எப்போ வருகிறதோ அப்போதான் வந்து டாக்டரை பார்க்க முடியும். அதான் இப்ப வந்தோம் என்றதற்கு மீண்டும் காலையிலேயே நீ வரவேண்டியதுதானே என்றார். நேற்று காலையில் 9 மணிக்கே வந்து உட்கார்ந்திருந்தோம். 11 மணிவரை இருந்து பார்த்துவிட்டு போனோம், மேலும் உள்ளே கடிகாரம் இல்லை நேரம் பார்த்து வந்து உட்கார, இப்ப தீடீர்னு மூச்சு திணறுது, அதனால்தான் இப்ப வந்தோம் என பேசிய பின்பும் அடாவடியாக பேசிய டாக்டரை பார்த்து எம் தோழர்கள் ‘ டாக்டர்க்கு தானே படிச்சிருக்கிங்க, என் வயது என்ன உங்க வயதென்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுறீங்க நான் இவ்வளவு நேரமா ரொம்ப பொறுமையா பேசுறேன், டாக்டர் நோயாளிகளிடம் பொறுமையா பேசனும்னுகூட உங்களுக்கு சொல்லித் தரவில்லையா? மொதல்ல மரியாதைய கத்துக்கிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வாங்கன்னு சொல்லிட்டு சிகிச்சை எடுக்காமல் சிறைக்கு திரும்பினோம்.

நாங்கள் பேசியதை கேட்டு அந்த மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்து போனதை காண முடிந்தது. இதுவரை அடிமைகள் சல்யுட் அடித்து கூழைக்கும்பிடு போடுவதை பார்த்தவருக்கு தோழர்கள் அணுகுமுறை அதிர்ச்சியளித்தது.

மருத்துவமனை வாசற்படியை தாண்டுவதற்குள் மருத்துவமனையில் வேலைபார்க்கும் சீட்டு எழுதும் ஆயுள் கைதியான பெண்மணி சத்தமாய் கூப்பிட்டு அழைத்ததற்கு, தோழர்கள் ‘மரியாதை கொஞ்சம்கூட தெரியாத இந்த டாக்டர்கிட்ட சிகச்சை எடுப்பது தன்மானம் இடம் கொடுக்கவில்லை நாங்கள் வெளியே போய் சிகச்சை எடுத்துக் கொள்கிறோம்’ என சொல்லிவிட்டு செல்லுக்கு திரும்பிவிட்டோம்.

சென்ற முறை ‘நீங்க என்ன லாடு லபக்குதாஸா உங்களை மரியாதையாக பேச’ என்ற போலிசிடம் ‘ நீங்க மேலதிகாரிகளின் கட்டளைக்கு, மக்களின் வரி பணத்தில் வயிறு வளர்த்து விட்டு மக்களை கேவலமாக பார்க்குற நீங்க , ஜனநாயக பூர்வமா மக்களை பார்க்குற எங்கள பார்த்து மரியாதையா பேச கத்துக்கோங்க’ என்று கூறியதையும், மேலும் உண்ணாவிரதம் இருந்து சிறையில் ஏற்கனவே நாம் நடத்திய போராட்டத்தை நினைவுப்படுத்தி கொண்டு ‘ஏங்க டாக்டர் என்ன சொன்னாங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு சிகிச்சை எடுத்துக்கங்க ‘ என்று செல்லுக்கு எங்கள் பின்னாலேயே ஓடி வந்தார்.

நாங்க தப்பு செய்துவிட்டு ஜெயிலுக்கு வரல, சொத்து குவிப்பு வழக்கு போட்டு வாய்தா மேல வாய்தா வாங்குற ஜெ போல உங்களை அடியாள மாதிரி நாங்க நடத்தல , மரியாதை தெரியாத  இந்த டாக்டர் கிட்ட சிகிச்சை எடுக்க எங்களுக்கு விருப்பமில்லை என்றோம்.

போய் இந்த பதிலை சொன்னதற்கு அங்கு என்ன நடந்ததோ தெரியாது மீண்டும் அந்த பெண்  போலிசு வந்தார். ஏங்க அப்படி என்னங்க சொல்லிட்டாங்க அதபோய் பெரிசு படுத்தறீங்க அந்த டாக்டரம்மா வீட்டுக்கு போறங்களாம், நாளை ஞாயிற்றுகிழமை வரமாட்டாங்க, திங்கள் கிழமை வரை உங்களுக்கு உடம்பு ரொம்ப பிரச்சனை ஆயிடுச்சுன்னா என்ன செய்யறது, அவங்க போய் கூப்பிட்டுகிட்டு வாங்க என்கிறாங்க நீங்க வரமுடியாதுங்கறீங்க நான் உங்க இரண்டு பேருக்கிடையில மாட்டிக்கிட்டு அதுக்கும இதுக்கும் அலையமுடியலீங்க’ என்று அழாத குறையாக கூப்பிட்டார். நாங்க வரமுடியாது, உங்க மேல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லீங்க என்றனுப்பிவிட்டோம்.

டாக்டரம்மா நிலைமை மோசமாவதைக்கண்டு சிறை பொறுப்பாளரான  மேலதிகாரியிடம் போய் இப்படி பிரச்சனையாகிவிட்டது என்றவுடன் அவர் நமக்கு தெரிந்த போலீசை அழைத்து நீங்கள் போய் பேசி சொல்லி கன்வின்ஸ் பண்ணி அழைத்து வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள சொல் என்று அனுப்பிய பிறகு போய் சிகிச்சை எடுத்து வந்தோம்.

மேலும் உணவில் நெல்,கல்,கருப்பரிசி கிடப்பதையும் உணவு சரியாக கொடுங்கள் என்றும், நம்மை போல் எல்லா பெண்களையும் மரியாதையுடன் நடத்துங்கள் என்றும் எடுத்துரைத்தோம்.

கொசு உற்பத்தி அங்கிருந்துதான் மொத்த திருச்சிக்கே சப்ளை ஆகும் அளவிற்கு மிகவும் அதிகமாக இருந்தது. கைதிகளுக்கு வழங்க வேண்டிய உணவு பொருட்களை கொள்ளையடிக்கும் ஊழல் பெருச்சாளிகளை போல ‘அவர்களுக்கு சற்றும் குறைந்தவர்களல்ல நாங்கள்’ என்ற வகையில் நிறைய பெருச்சாளிகள் இரவில் செல்லுக்குள் வந்து நம் வயிற்றை கலக்கின.

நாங்கள் குழந்தைகளை வைத்து கொண்டு அச்சத்தோடு அன்றிரவை தூங்காமல் கழித்தோம். சென்னை அரசு மருத்துவமனை குழந்தையை பெருச்சாளி கடித்தது நினைவு வந்ததும் மிகவும் பயந்து போனோம். அடுத்த நாளிரவு அவர்கள் கீழே விரிக்க கொடுத்திருந்த வெள்ளை ஜமுக்காளத்தை எட்டாக சுருட்டி வைத்து பெருச்சாளி உள்ளே வராமல் 3 நாட்களும் தடுத்து குழந்தைகளை பாதுகாக்க முயற்சி எடுத்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தோம்.

மற்ற பெண் கைதிகளின் நிலைமையும் கைக்குழந்தைகளுடனும் எண்ணற்றவர்கள் இந்த கொடுமையை அனுபவித்து வருகின்றனர். எங்களைக் கண்டதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், ஜாமின் எடுக்க வழியில்லமால் தவிக்கும் கைதிகள் உட்பட அனைவரையும் சந்தித்து பேசினோம். நாம் நலம் விசாரிக்க “எங்கே இருக்கிறது இங்கேதான் குத்தி குதறி விடுகிறார்களே? அண்ணா பிறந்த நாளுக்காவது விடுவாங்கன்னு பார்த்தா 12,14 வருசமாகியும் விடமாட்டேங்கிறாங்களே” என்று வேதனையுடன் பதில் சொல்கின்றனர்.

நாங்கள் போய் மூன்று அல்லது நான்கு நாட்கள் இருந்துவிட்டு வெளியில் வந்துவிடுவதால் உண்மை நிலைமையை கணிக்க முடியவில்லை, ஆனால் நன்நடத்தையை கொண்டு ஆண்களை விடுதலை செய்வது போல பெண்களை விடுவித்தால் நன்றாக இருக்கும். உங்கள் அமைப்பு இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்றனர் அந்தப் பெண்கள்.

அம்மா என்ற சொல்லுக்கு அருகதையற்ற பாசிச ஜெயாவை மட்டுமல்ல, இன்றைய அரசியல் அமைப்பு முறையை ஒழித்துகட்டி உழைக்கும் மக்களுக்கான அரசமைப்பை உருவாக்கும் நாள்தான் உழைக்கும் மக்கள் அனைவரும் விடுதலை நாள் என்பதை அவர்களுக்கு உணர்த்த முயன்றோம். இடையில் பிணை கிடைத்ததால் அவர்களை விட்டு பிரிந்தோம், மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்.

____________________________________________________________________       

– பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.

_____________________________________________________________________