Thursday, April 15, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் மோடியின் பெண்ணழகும், உண்மை நிலையும்!

மோடியின் பெண்ணழகும், உண்மை நிலையும்!

-

சொற்களுக்கான அர்த்தம் அகராதியில் இருக்கிறதா அல்லது பொருளாதார வாழ்க்கையில் அடங்கியிருக்கிறதா?

சில நாட்களுக்கு முன் அமெரிக்க பத்திரி‌கையான ‘வால்ட் ஸ்டிரீட் ஜர்ன’லுக்கு குஜராத் மாநில முதல்வரான நரேந்திர மோடி பேட்டி அளித்திருந்தார். அதில்,

”உணவுமுறை அடிப்படையில், குஜராத் சைவ உணவை உட்கொள்ளும் மாநிலம். பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும், நடுத்தர பிரிவினர் அதிகம் வாழும் மாநிலம், குஜராத்தான். ஆனால், மாநிலத்தில் உள்ள நடுத்தர வகுப்பு பெண்கள், தங்கள் உடல்நலன்களில் அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். இதன்மூலம், தாங்களாகவே, தங்களது உடல்நலத்தை கெடுத்துக்கொள்கின்றனர். நடுத்தர வகுப்பு குடும்பங்களிடையே, உடல் நலன் மற்றும் அழகுக்கு என ஒரு பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது. பால் குடித்தால் நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்று மகளுக்கு தாய் அறிவுரை கூறினால், ‘பால் குடித்தால் குண்டாகி விடுவேன். இதனால் எனது அழகு கெ‌ட்டுவிடும். எனவே பால் குடிக்கமாட்டேன்…’ என்று மகள் கூறும் நிலைமையே இங்கு அதிகளவில் உள்ளது. அதனால்தான் குஜராத்தில் ஊட்டச்சத்துக் குறைவால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்…”

என திருவாய் மலர்ந்திருக்கிறார்.

”மோடியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், குற்றச்சாட்டுகளைப் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் மோடி. குடும்பத்துக்காக தனது உணவை அர்ப்பணிப்பவள் பெண். இதைக் கருத்தில் கொள்ளாமல் அழகைக் கருத்தில் கொள்வதால்தான் பெண்கள் சாப்பிடுவதில்லை என்று மோடி குறிப்பிடுகிறார். இதைவிட மோசமான அறிக்கை வேறு எதுவாக இருக்க முடியும்? குஜராத்தில் மீண்டும் போட்டியிடும் தகுதியை மோடி இழந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்…” என்று இந்தப் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி.

”ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களுடைய உடல் நிலையைக் கருத்தில் கொள்ள உரிமை உண்டு. இதனைப் பற்றி வேறு யாராவது நினைத்தால் அது அவர்களுடைய அறியாமையையே வெளிச்சமிட்டு காட்டுவதாக அமையும்…” என முஷ்டியை உயர்த்தியிருக்கிறார் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத்.

”குஜராத்தில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள தோல்வி காரணமாகத்தான் மோடி இதுபோன்ற கருத்துகளை கூறுகிறார். மாநில முதல்வர் இவ்வாறு பேசுவது சரியில்லை’’ என்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் தாரிக் அன்வர்.

”இப்படி ஒரு கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இதை விட மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன. அது மோடிக்கு தெரியாமல் போனது வருத்தமானது…” என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கவலைப்பட, ”ஜி.டி.பி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார் மோடி. கல்வி, சுகாதாரம் குறித்து அவர் கவலைப்படவில்லை…” என ஆவேசத்துடன் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பிகா பால் குரல் எழுப்ப, ”மோடி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும். பெண்களை மிகவும் ஏழ்மையானவர்கள், வறுமையானவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போல இது காட்டுகிறது…” என தீர்ப்பு வழங்கி இருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ்.

ஆக, மோடியின் திமிரான பேச்சுக்கு, ‘தப்பு பாஸ்… பெண்கள் நம் வீட்டின் கண்கள்… குடும்பத்துக்காக தியாகம் செய்பவர்கள்… அவர்களை இப்படி சொல்லக் கூடாது… என்னதான் இருந்தாலும் அவர்கள் பாவமில்லையா..?’ என தோளில் கைபோட்டு இப்படித்தான் எதிர்வினை ஆற்றியிருக்கிறது காங்கிரஸ்.

ஆனால், உண்மையில் குஜராத் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைவால் பெண்கள் பாதிக்கப்பட என்ன காரணம்? சில புள்ளிவிவரங்களில் இருந்து இதற்கான விடையை தேடலாம்.

குஜராத்-பட்டினிகுஜராத் மாநிலத்தில் உள்ள 89% ஆண் மற்றும் 98% பெண் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள். எனவே அதிகப்படியான நேரங்கள் உழைத்தாலும் குறைவான கூலியையே பெறுகிறார்கள். அந்த வருமானத்துக்குள் வாழ்வதற்காக அவர்களால் என்ன வாங்கி சமைக்க – சாப்பிட முடியுமோ அதைதான் வாங்குகிறார்கள். கிடைக்கும் கூலியில் அவர்களுக்கு கிடைப்பது ஊட்டச்சத்தற்ற உணவுகள்தான் என்று சொல்லாமலேயே விளங்கும்.

அதேபோல், நகர்புறமோ அல்லது கிராமப்புறமோ… தற்காலிகமோ அல்லது நிரந்தரத் தொழிலாளர்களோ… இவர்களுக்கு கிடைக்கும் வருமானம், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. சமீபத்தில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலக புள்ளிவிவரம் இதைதான் உணர்த்துகிறது. கிராமப்புறங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ஆண்களுக்கு ரூபாய் 69-ம், பெண்களுக்கு ரூபாய் 56-ம் கூலியாக கிடைக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கான தினக் கூலியில் குஜராத், 14வது இடத்திலும், பெண்களுக்கான தினக் கூலியில் 9வது இடத்திலும் இருக்கிறது.

நகர்ப்புறங்களை பொருத்தவரை ஆண் தொழிலாளர்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 109-ம், பெண்களுக்கு ரூபாய் 56-ம் கிடைக்கிறது. இதுவும் மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவுதான்.

மேலே சொன்ன இந்த விகிதாச்சாரம், தற்காலிக நாட்கூலிகளுக்கானது. அதற்காக நிரந்தர தொழிலாளர்களின் வருமானம் அதிகம் என்று நினைத்துவிட வேண்டாம். கிராமப்புறங்களில் ஆண்களுக்கு ரூ.152-ம், பெண்களுக்கு ரூ.108-ம் நாள் ஒன்றுக்கு கிடைக்கிறது. இது, நிரந்தர தொழிலாளர்களின் நாள் கூலி. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த விகிதாச்சாரம், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டுடன்தான் இருக்கிறது. ஆண்களின் வருமானத்தில் 17வது இடத்திலும், பெண்களுக்கான வருமானத்தில் 9வது இடத்திலும் குஜராத் இருக்கிறது.

நகர்ப்புறங்களை பொருத்தவரையிலும் பெரிய வேறுபாடெல்லாம் இல்லை. ஆண்கள் ரூ.205-ம், பெண்கள் ரூ.182-ம் தினமும் பெறுகிறார்கள். இந்த ஊதிய விகிதத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், ஆண்களுக்கான தினக்கூலியில் 18வது இடத்திலும், பெண்களுக்கான தினக்கூலியில் 13வது இடத்திலும் குஜராத் இருக்கிறது.

மாநில வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களின் வருமானம் மட்டும் அதளபாதாளத்தில் இருக்கிறது. அப்படியிருக்க கிடைக்கும் வருமானத்தில் சத்துள்ள உணவுகளை எப்படி மக்களால் வாங்க முடியும்?

இதுதவிர, குடிநீர் விநியோகமும், சுகாதார கழிவறைகளும் சொல்லிக் கொள்ளும் நிலையில் மாநிலத்தில் இல்லை. கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் தினமும் பல மைல்கள் நடந்துச் சென்றுதான் குடிநீரை எடுத்து வருகிறார்கள். 67% கிராம வீடுகளில் கழிப்பறையே கிடையாது. எனில், உடல் ஆரோக்கியம் எப்படி பெறும்?

உண்மை இப்படி இருக்க, மாநில முதல்வர் திமிருடன் ‘குஜராத் பெண்கள் அழகுக்காக செலவிடுகிறார்களே தவிர, ஊட்டச்சத்துள்ள உணவுகளுக்காக செலவிட மறுக்கிறார்கள்…’ என பேட்டி அளிக்கிறார். எதிர்கட்சியான காங்கிரசும், மக்களின் பொருளாதார வாழ்க்கைத் தரம் குறித்து கவலைப்படாமல் ‘இப்படியெல்லாம் பேசக் கூடாது…’ என செல்லமாக குட்டுகிறது.

இப்போது சொல்லுங்கள், சொற்களுக்கான அர்த்தம் அகராதியில் இருக்கிறதா அல்லது பொருளாதார வாழ்க்கையில் அடங்கியிருக்கிறதா?

படிக்க

___________________________________

– அறிவுச்செல்வன்
_______________________________

  1. //குஜராத் மாநிலத்தில் உள்ள 89% ஆண் மற்றும் 98% பெண் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள். எனவே அதிகப்படியான நேரங்கள் உழைத்தாலும் குறைவான கூலியையே பெறுகிறார்கள்//

    டாடாவும், சுசுகியும் குஜராத்திற்கு ஓடுவதும் இதற்குத் தானே. இந்தப் பதிவை மோடி ரசிக பெருமக்களுக்கு குறிப்பாக டோண்டு சாருக்கு சமர்ப்பிக்கலாம்.

  2. குஜராத்தில் பெரும்பாலானோர் சைவ உணவு சாப்பிடுகிறார்கள், மற்றும் தங்கள் தோற்றத்தில் கவனம் செலுத்துவதற்காக குறைத்து சாப்பிடுகிறார்கள் என்றாராம் மோடி – அவ்வாறு இல்லை குறைந்த கூலியும், மக்கள் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடையாததும், சுகாதாரக் கேடும் (மலம் கழிக்க இன்றும் பலர் திறந்தவெளியைத்தான் பயன்படுத்துகின்றனர்) என விபரமாக இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்கலாம்

    http://www.thehindu.com/todays-paper/tp-opinion/not-vegetarianism-or-dieting-mr-modi/article3940426.ece

  3. வக்கிறபுத்தி உள்ள மோடிக்கு மக்களின் வழ்க்கையின் நிலமையை எப்படி புரிந்து கொள்ளமுடியும்.இப்படி தெனாவட்டுதான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க