Saturday, August 20, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா சிறுவனை பட்டினி போட்ட அமெரிக்க பள்ளி!

சிறுவனை பட்டினி போட்ட அமெரிக்க பள்ளி!

-

கல்விக்-கொள்ளைவெளிநாட்டுக்காரன் வந்து பள்ளிக்கூடம் ஸ்கூல் ஆரம்பிக்கனும் சார். தரம்னா  என்னான்னு நம்மாளுங்களுக்கு சுத்தமா தெரியாது. இதே இங்கிலாந்து அமெரிக்காவில பாருங்க…” – இது நம் நடுத்தர வர்க்க நாராயணன்களின் ஆர்வக் குரல். இதே போன்ற கருத்து பலரிடமும் இருக்கலாம், அவர்கள் கீழே படித்து விட்டு தங்களது பழைய கருத்தை மறுபரிசீலனை செய்யட்டும்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இருக்கும் கிளிஃப் வுட் ஆரம்பப்பள்ளியில் (Cliffwood Elementary) ஒரு பெற்றோர் ஐந்து வயது வாய் பேசமுடியாத பையனை சேர்க்கிறார்கள் . பள்ளியில் சேர்த்த நான்காவது நாளில், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுவனின் தாய்க்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்ற சிறுவன் 4 மணிக்கு வீடு திரும்பும் வரை உணவு உட்கொள்ளவில்லை. வாய் பேச முடியாத அச்சிறுவனால் தனக்கு பசிக்கிறது என்பதையோ, தான் சாப்பிடாததையோ, அதற்கான காரணத்தையோ சொல்ல முடியவில்லை. அந்த சிறுவனின் நாட்குறிப்பை எடுத்து படித்து பார்க்கும் போது எட்டு டாலர் மதிய உணவுக் கட்டணம் செலுத்தாமல் பாக்கியிருப்பதால் சிறுவனுக்கு மதிய உணவு அளிக்கபடவில்லை என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் அந்த தாய் அதிர்ந்து போய்விட்டார்.

கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக வாய் பேச முடியாத ஐந்து வயது சிறுவனை வெறும் இரண்டு டாலர் மதிப்புள்ள மதிய உணவு கொடுக்காமல் பட்டினி போடுவார்களா ? பட்டினி போட்டதும் இல்லாமல் அதை திமிர்த்தனத்துடன் எழுதியும் அனுப்புவார்களா என்று அந்த தாய் கேட்கிறார். அந்த பள்ளியின் கட்டண முறைகள் தங்களுக்கு தெரியாது என்றும், உடனடியாக தனக்கு தெரிவித்திருந்தால் தான் ஏதேனும் செய்திருப்பேன் என்றும், அந்த தாய் சொல்லியிருக்கிறார். இந்த செய்தி உள்ளூர் மீடியாக்களில் அடிபட்டதும், பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டதுடன் இதுவரை இது போல் நடந்ததில்லை என்றும், இனி இது போல் நடக்காது என்றும் உறுதி கூறியது.

தனது நடவடிக்கை ஊடகங்களில் அசிங்கமாக அம்பலமாகி அதனால் பெயர் கெட்டுப் போய் வரும்படி குறைந்து விடுமோவென்கிற லாப நோக்கிலிருந்து தான் இந்த மன்னிப்பு வந்திருக்கிறது.  மற்றபடி, முதலாளித்துவ சமூகம் அனைத்தையும் பணபரிவர்த்தனையாகத்தான் பார்க்கிறது, இங்கு மனித அறம், இரக்கம் என்பதற்கு இடமில்லை. அவ்வாறு சொல்லப்படும் அனைத்துமே பணத்தைக் கொண்டு தான் அளவிடப்படுகிறது. இது தான் அலட்சியத்திற்கு அடிப்படை காரணம். இதை புரிந்து கொண்டு போராடாத வரை இந்த அலட்சியங்கள் நடக்கத்தான் செய்யும்.

நமது நாட்டிலும், தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் செலுத்தாதவர்களை வீட்டுக்கு அனுப்புவதும், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களை முடியை வெட்டி தனியாக அமரவைப்பதும் என்று பல அராஜகங்களை செய்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு “வெளிநாட்டு பல்கலைகழக மசோதாவை” கொண்டு வந்ததும், அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதும் நினைவிருக்கலாம். அப்போது சிலர் மசோதாவை எதிர்த்தவர்களை ஏளனம் செய்ததுடன், தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை தடுப்பதாகவும் எரிச்சலடைந்தனர். வெளிநாட்டு கல்வியின் தரம் என்னவென்பது மேற்கண்ட சம்பவமும், சிகாகோ ஆசிரியர்கள் போராட்டமும் நமக்கு உணர்த்துகின்றது.

அனைவருக்கும் தரமான இலவச கல்வி அளிப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து போராத வரை, தரமான கல்வி என்பது எத்தனை லட்சங்கள் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காது.

படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க