privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்தி.மு.ககூமாபட்டியில் போலீசின் வெறியாட்டம்: நேரடி ரிப்போர்ட்

கூமாபட்டியில் போலீசின் வெறியாட்டம்: நேரடி ரிப்போர்ட்

-

போலீசுணல் கொள்ளையை எதிர்த்து கடந்த 9/10/2012 அன்று இரவு கூமாபட்டியில் தீக்குளித்த விவசாயி ராஜேந்திரன் 11/10/2012 அன்று காலையில் சிகிச்சை பலனளிக்காமல் மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார். உடனே போராட்டக் குழு கூடி அவரின் தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களுக்கு உணர்வூட்டும் வகையிலும் அவரின் உடலை அந்தப் பகுதியெங்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

இதை அறிந்த ஓட்டுக் கட்சிகள் விவசாயி ராஜேந்திரன் கடைசியாய் செயல்பட்டுக் கொண்டிருந்த திமுக உட்பட அனைத்தும்  அப்படி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் தாம் அம்பலப்பட நேரும் என்றெண்ணி தடுக்கும் முயற்சிகளில் இறங்கின. இதனிடையே மதுரை மருத்துவமனையில் இருந்த இராஜேந்திரன் மகன் ராஜ்குமாரிடம் தோழர்கள், நாளிதழ்களில் குடும்ப பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம் என்பது போல் திரித்து வெளியிடப் பட்டிருக்கும் செய்தியைக் காட்டி நிலமையை விளக்கி இருக்கிறார்கள்.

இராஜேந்திரன் என்ன காரணத்துக்காக தீக்குளிக்க நேர்ந்தது என்பதை தெளிவாக பதிவு செய்திருக்கிறார். எனவே, தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதவரை உடலை வாங்க மறுத்து போராடுவது தான் தியாகியான அவருக்கு நாம் தரும் கண்ணியமாக இருக்கும் என அறிவுரை கூறுகின்றனர். ஆனால் உறவினர்கள் என்ற போர்வையில் உடன் வந்த தரகர்கள் இருவர், ஊரில் சென்று பார்த்துக் கொள்ளலாம் இங்கு எந்தப் பிரச்சனையும் வேண்டாமென்று பேசிப் பேசி ராஜ்குமாரை சம்மதிக்க வைத்து விடுகின்றனர்.

மாலை சரியாக நான்கு மணிக்கு கூமாபட்டி முக்கு ரோட்டில் வந்திறங்கிய நம்மை வரிசையாக அணிவகுத்து நின்ற போலீசு வாகனங்களே வரவேற்றன. ஊர்மக்கள் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உரைந்து போயிருந்தனர். குழு குழுவாய் போலீசார்கள் ஒன்று சேர்ந்து முக்கு ரோட்டுக்கும் பேருந்து நிருத்தத்துக்கும் இடையே அணிவகுப்பு நடத்துவது போல் நடந்து கொண்டிருந்தனர். மட்டுமல்லாது வீதியில் யாரும் நின்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்று விரட்டிக் கொண்டிருந்தனர்.
தேனீர்கூட குடிக்கக் கூடாதா என்று ஒருவர் கேட்டபோது கடையை அடைக்க வேண்டியிருக்கும் என்று திமிர்த்தனம் காட்டியது ஒரு லத்தி.

இவ்வளவு போலீசை குவித்து, மூங்கில் தடுப்புகளுடன் கலவர தடுப்பு போலிசை குவித்து அணிவகுப்பு நடத்துமளவுக்கு என்ன அவசியம் இருக்கிறது? இராஜேந்திரன் தீக்குளிப்புக்கு தமிழக அரசு மணல் கொள்ளைக்கு துணை போனதே காரணம் என பொதுமக்கள் விவசாயிகள் போராட்டக் குழு சார்பில் ஊர் முழுதும் ஒட்டப்பட்டிருந்தது. அது உண்மை தானே, ஊர் மக்கள் மணல் அள்ளி கடத்தக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள், பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள், உள்ளூர் தாசில்தார் முதல் தலைநகர் முதல்வர் வரை மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் நிர்வாகமோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உண்மையை சுவரொட்டியாக ஒட்டியதால் மக்களை அச்சுறுத்த அணிவகுப்பு நடத்துகிறார்கள். ஊர்வலமாக உடலை கொண்டு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்த பலர் போலீசின் கெடுபிடிகளால் காணாமல் போயிருந்தனர். கூமாபட்டி சென்று நிலமையை கவனித்த பிறகுதான் புகைப்படமோ, ஒளிப்படமோ எடுக்க தேவையான முன்னேற்பாடுகளுடன் சென்றிருக்கவில்லை என்பது எங்களுக்கும் உறைத்தது.

ஒடுங்கிப் போயிருந்த ஊர் மக்களை தோழர்களும் ஊரார் சிலரும் ஒன்று திரட்டினர். ம.உ.பா.மைய தோழர் லயனல் அவர்களிடையே சிறிய உரை ஒன்றை நிகழ்த்தி தைரியமூட்டினார். வந்திருந்த போலீசு உயரதிகாரிக்கும் மக்களுக்கும் இடையேயான வாதம் தொடங்கியது. நாங்கள் சடங்கு செய்ய வேண்டும், ஏன் எங்களை விரட்டுகிறீர்கள் என்று இளைஞர்கள் எகிறினார்கள். மக்கள் கூட்டம் கூடுவதையோ, அஞ்சலி செலுத்துவதையோ நீங்கள் தடுக்க முடியாது என்பதை சட்ட நுணுக்கங்களுடன் தோழர் லயனல் வாதாடினார். முடிவில் சடங்கு செய்து கொள்ளுங்கள், இரங்கல் கூட்டம் போட்டுக் கொள்ளுங்கள், ஆனால் வேறு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தக் கூடாது என்று போலிஸ் தெரிவித்தது.

இதனிடையே போலிசு வழமையான நரித்தனத்துடன் பிரித்தாளும் தந்திரத்தை அரங்கேற்றியது. குடித்திருப்பவர்களெல்லாம் பேச வேண்டாம். ஒதுங்கிக் கொள்ளச் சொல்லுங்கள் இல்லாவிட்டல் பிரச்சனையாகிவிடும் என்று மக்கள் மேல் அக்கரை கொண்டவர்போல பேசினார் அந்த அதிகாரி. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வீதிக்கு வீதி டாஸ்மாக்கை திறந்து குடிப்பது தீய பழக்கமல்ல, ஒரு பொழுதுபோக்கு என்று இளைஞர்களை பாழாக்கி வைத்திருக்கும் அரசின் அங்கமான அதிகாரி கூறினால் அது மக்களின் மீதான அக்கரையாக இருக்க முடியுமா?

அவர் என்ன எதிர்பார்த்தாரோ அது உடனே அங்கு நடந்தது. சிலர் குடித்திருதவர்களை நீங்கள் ஒதுங்குங்கள் என்று தனிமைப்படுத்த முயல, அவர்கள் ஏன் நாங்கள் நின்றால் என்ன தப்பு என்று எதிர்க் கேள்வி எழுப்ப, கூட்டம் பிளவுபடுவது போல் தோன்றியது.உடனே தோழர்கள் ‘இப்போது அது முக்கியமான பிரச்சனை அல்ல’ என்று விளக்கி சமாதானம் செய்தனர்.

சிறிது நேரத்தில் ராஜ்குமார் உறவினர்கள் சிலருடன் ஆம்புலன்ஸோடு வந்திறங்கினார். பார்த்ததுமே ஊரிலுள்ள நிலவரம் அவருக்கு புரிந்து போனது. அந்த காவல்துறை உயரதிகாரியிடம் சென்ற ராஜ்குமார், இதுவரை எந்த நிர்வாக அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. எனக்கு சில கோரிக்கைகள் இருக்கின்றன. எனவே வட்டாட்சியர் வந்த பிறகு தான் உடலை கொண்டு செல்வேன் என்றார். பேசிக் கொண்டிருக்கும் போதே ஆம்புலன்ஸ் வந்தது. தயாராக நின்ற போலீசு பட்டாளம் ஆம்புலன்ஸை சூழ்ந்து கொண்டு நிறுத்தவிடாமல் சுடுகாட்டுப் பாதையில் திருப்பி விட்டது. சடங்கு நடத்தலாம் இரங்கல் கூட்டம் நடத்தலாம் என்று சொல்லி விட்டு நிறுத்தாமல் கொண்டு செல்கிறார்களே உடனே குறுக்கே பாய்ந்து நிறுத்த முயன்றனர். ராஜ்குமார் ஆம்புலன்ஸின் முன்னால் படுத்துவிட்டார்.

உடனே இரண்டு மூன்று காவல்துறை நாய்கள் அவரை கையையும் காலையும் பிடித்து ஒரு மூட்டையைப் போல் தூக்கி வீசினார்கள். எந்த முன்னறிவிப்பும் இன்றி தடியடி தொடங்கியது. ஒரு பெண் போலீஸ்தான் அதை தொடங்கி வைத்தது. போலீசு இப்படி காட்டுமிராண்டித்தனமாய் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்காத ஊர் மக்கள் அடியைத் தாங்க முடியாமல் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தோழர் லயனல் இதில் குறி வைத்து தாக்கப்பட்டார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனரை ஏற்கனவே தயார் செய்தே அழைத்து வந்திருக்கிறார்கள். இல்லையென்றால் பிரச்சனை என்று தெரிந்தவுடன் நிறுத்திவிட்டு ஒதுங்கி விடுவது தான் ஓட்டுனர்களின் வழக்கம். ஆனால் இங்கு தடியடி நடந்து கொண்டிருக்கும் போதே ஒட்டுனர் மெதுவாக உருட்டி சுடுகாட்டுப் பாதையில் விரைந்து விட்டார். வேறு வழியின்றி ஆம்புலன்ஸின் பின்னால் ஓடினார்கள் இளைஞர்கள். தொடர்ந்து அடித்து விரட்டியது போலீசு.

எரியூட்டும் இடத்தில் ஏற்கனவே ஓட்டுக் கட்சிகள் தயார் செய்து வைத்திருந்தவர்கள் சுறுசுறுப்பாக காரியத்தில் இறங்கினார்கள். சிதையில் ஏற்றி விறகு அடுக்கி எரியூட்டத் தயாரானார்கள். கொள்ளி வைக்க வேண்டிய மகன் ராஜ்குமார் எங்கேவென்று தெரியவில்லை. வாங்கிய அடியில் அவரும் சிதறி ஓடியிருந்தார். ஊர் பெருசுகள் நீங்கள் தடியடி நடத்தியது தவறு என முணுமுணுக்கத் தொடங்கினர். நிலைமையை உணர்ந்த போலிசும் அடக்கி வாசித்தது.

உடலை சிதையில் ஏற்றி அரை மணி நேரம் கடந்து விட்டது.என்ன செய்வது என்று கைபிசைந்து நின்றார்கள் உறவினர்கள். போலிசோ தாமே சிதைக்கு நெருப்பு மூட்டத் தயாரானது. இதற்குள் உறவினர்கள் ஒருவழியாய் ராஜ்குமாரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்தனர். நடந்த சம்பவத்தால் இளைஞர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். அத்தனை ஓட்டுக் கட்சிகளும் இந்த ஒற்றைச் சம்பவத்தால் அம்பலப்பட்டு நிற்கின்றன.

இறந்து போன இராஜேந்திரன் ஒரு திமுக காரராக இருந்தாலும், நகர திமுக இதற்காக துளியும் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் ஊர் மக்களோ தங்கள் சொந்த அனுபவத்தில் ஓட்டுக் கட்சிகள் என்றால் என்ன? காவல் துறை யாருக்காக வேலை செய்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்கள். அதேநேரம் ஒரு புரட்சிகர அமைப்பின் பாத்திரம் இது போன்ற நெருக்கடியான தருணங்களில் எப்படி இருக்கும் என்பதையும் நேரடியாக கண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இராஜேந்திரன் தமக்குறிய பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.

இனி இந்த மக்கள் மணல் கொள்ளையர்களை அடித்து விரட்டுவதற்கு குறைவாக வேறெதையும்  எண்ண மாட்டார்கள் என்பது அவர்களின் கண்களில் தெரிகிறது.

___________________________________________

– வினவு செய்தியாளர்கள்.

_________________________________________________

  1. அன்புள்ள வினவு. இதுபோன்ற முக்கிய போறாட்டங்களுக்கு செல்லும் போது குறைந்தபட்ச புகைப்பட கருவிகளுடன் (mobile camera) செல்லுங்கள்.

  2. தேவையில்லாத வேல இது!! சாவு வூட்ல போயி எவனாவது போராடுவானா… இதுவெல்லாம் சென்சிடீவ் இஷ்யு… போலீஸ் கரெக்ட்டா தான் அடிச்சி தொரத்தியுருக்கான்…. இனிமேயாவது கண்ட எடத்துல போராதீங்க

    • தேவையான வேலை எது என்று சொல்லுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலைகளை (சொம்பு தூக்குவது போன்ற… ) செய்யச் சொல்லாதீர்கள். எதற்குப் போராட வேண்டும், எந்த இடத்தில் போராட வேண்டும் என்றும் விளக்கமாக ஒரு கட்டுரை எழுதுங்களேன். படித்து தெரிந்து கொள்கிறோம்.

      • சாத்தான் வேதம் ஓதுகிறது தமிழ். அரசியல் செய்வதற்கே பிணங்களை “உற்பத்தி செய்யும்” இந்தியனின் திமிர்…..

Leave a Reply to கருப்பன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க