Tuesday, April 13, 2021

பூக்காரம்மா….!

-

பூக்காரம்மாபூக்கள்; மென்மைக்கும், பெண்மைக்கும் அடையாளமாக சங்ககாலம் முதல் கவிஞர்களின் சொற்களில் சிக்கிக் கசங்கும் இந்த பூக்களின் அழகிலும் வாசத்திலும் மனதை பறிகொடுக்காதவர்கள்தான் யார்? ஒவ்வொரு பூவுக்கும் ஒரு தனி வாசம் உண்டு என்றாலும், இருபதுக்கும் குறையாத பூ வகைகளின் வாசமும், வியாபரிகளின் தொழிலாளர்களின் வியர்வை வாசத்தோடு சேர்ந்து நம்மை மூர்ச்சையடைச் செய்து பூக்களின் போர்களமாக காட்சியளிக்கும் இடம்தான் சென்னை கோயம்பேடு பூ மார்கெட்.

அதிகால 2-3 மணியிலிருந்தே காய்-கனி விற்பனையில் பரபரப்பாகிவிடும் கோயம்பேடு வளாகத்தில் பூ விற்பனை முழுவீச்சீல் துவங்கும் நேரம் காலை 10 மணி. பெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், கோவில், சுபகாரியம் மற்றும் திருமண ஒப்பந்தக்காரர்கள், தனி நபர்கள் என்று பூக்களை பல தேவைகளுக்காக கொள்முதல் செய்வோருக்கு இடையில் சில்லறை வியாபரத்திற்காக உதிரிப்பூக்களை வாங்குகின்றனர் நமக்கு மிகவும் பரிச்சையமான பூக்காரம்மாக்கள்.

அப்படி ஒரு பூக்காரம்மாள்தான் வசந்தா, வயது 56. கணவர் குடிகாரர், பெற்ற பிள்ளை இருவர் இருந்தும் இவர்களை பராமரிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. வசந்தாவும் யாரையும் நம்பி வாழும் நிலையை வேண்டாம் என்றே கருதுகிறார்.

காலை 5 மணிக்கு எழுந்து தன் வீட்டு வேலைகளை முடித்த கையோடு, கோயம்பேடு அங்காடிக்கு பஸ், ஷேர் ஆட்டோ என்று மாறி சென்று, கையிலுள்ள பணத்திற்கு தகுந்தார்போல 1 சேர் (300 கிராம்) ரூ- 100-150-வரை சாதாரண தினங்களிலும் விசேஷ நாட்களில் ரூ 200 முதல் 250 வரை விற்கும் உதிரிப்பூக்களை வாங்கிவருகிறார். வீடு திரும்பும் வழியிலே பேருந்து -ஷேர் ஆட்டோகளில் அமர்ந்தபடியே. உதிரிப்பூக்களை கட்ட துவங்கி விடுவார். வீட்டுக்கு வந்ததும் ஓய்வுக்கு எல்லாம் வழியே இருக்காது, மிச்சம் இருக்கிற பூக்களை தானாகவோ அல்லது பிறர் உதவியுடன் கட்டி முடித்த கையோடு அவைகளை கூடையில் வைத்துக் கொண்டு வாடிக்கையாக கொடுக்கும் வீடுகளுக்கு சென்று கொடுத்துவிட்டு அப்படியே மீதி பூ இருப்பின் அவைகளை கூவி விற்றுவிட்டு வருவது தான் வழக்கம் என்றார்.

இந்த காலத்திலே வெறும் பூ வியாபாரத்தை மட்டும் நம்பி குடுபம் நடத்த முடியுமா? என்று கேட்கும் வசந்தா தான் பூ விற்கும் வாடிக்கையாளர்கள் இருவரிடத்தில்  வீட்டு வேலைகளை செய்துவிட்டு, அங்கு அவர்கள் தரும் காபியோ, டிபன்னோ சாப்பிட்டுவிட்டு மீண்டும் கோயம்பேடுக்கு பயணமாகிறார்.  மாலை பூ விற்பனைக்கான பூ வாங்கி வர வேண்டுமே. பயணத்திலே முடியும் வரை கட்டி விட்டு, மார்க்கேட் ரோட்டில் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள மரப்பலகையில் வைத்து மீதி பூக்களை கட்டியபடியே பூ வியாபாரத்தை துவங்கிறார்.  இரவு பத்து மணிக்கு முடிகிறது இந்த வியாபாரம். அதன் பின்னர் இரண்டு பேருந்துகள் மாறிப்போய் வீடு சென்று, காலையில் சமைத்த வைத்ததை உண்டு 4-5 மணி நேரம் கூட முழுமையாக உறங்குவதற்குள் மீண்டும் அவரது அடுத்த நாள் துவங்கிவிடுகிறது.

வசந்தா ஒவ்வொரு நாளும் மூலதனமாக போட்ட காசுக்கு மேல், போக்குவரத்து செலவு போக கையில் ரூ 50-இல் இருந்து ரூ 100 வரைதான் தங்குகிறது, சில நாட்களில் முதலுக்கே மோசம் ஆகும், பூக்களாயிற்றே முதல்நாள் விற்கவில்லையெனில் மறுநாள் பயன்படாது. அப்படியான நேரங்களில் மீதமாகும் பூக்களை கோவிலுக்கும், வீட்டு பக்கத்திலே இருக்கும் பெண்களுக்கும் கொடுத்து விடுகிறார். வீட்டு வேலையில் வரும் சம்பளம், தொடந்து பூ வாங்கும் வாடிக்கையாளர்கள் மூலமாக வரும் வருமானம்தான் ரூ 1500 வாடகை, ரூ 300 மின்சார கட்டணத்துக்கு ஆதாரம். உணவு உட்பட மற்ற அனைத்து செலவுகளுக்கும் பூ வியாபாரம் – அதில் நட்டமானால் கடன் என்ற சுழற்சிதான். வசந்தாவின் அன்றாட வாழ்வின் பாடுகளை கேட்கும் போது நமக்கு ஏற்படும் வேதனை கூட அவர் பேச்சில் தெரியவில்லை.

பூக்காரம்மா-262 வயதுடைய  கமலாம்மாள், கணவர், மூன்று மகன்கள், மூன்று மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என்று எல்லாரும் இருக்கிறார்கள். கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமை, பத்து மாடு வைத்து இருக்கிறார்கள்; மாடுகள் பால் கரப்பதற்கும் மட்டும் கணவர் உதவுவாராம்; அதுவும் காலையில் மட்டும் தான்; மாலையில் முழு போதையில் அவர் இருப்பதால் இவர் தான் அதையும் செய்யவேண்டும். பிள்ளைகள் எல்லாம் தனிக்குடித்தனம் போய்விட்டார்கள். யாரும் இவருக்கு உதவுவதில்லை. இவர் 10 வருடமாக பூவியாபாரத்தில் ஈடுபடுகிறார்.

கமலாம்மாள் பால் வியாபாரத்தோடு பல வருடங்களாக பாரிமுனையில் இருந்த கொத்தவால்சாவடிக்கு காலை மூன்று மணிக்கு எழுந்து போய், காய், பழம் வாங்கி வந்து வியாபாரம் செய்தவர். கொத்தவால்சாவடி மூடி பல வருடம் ஆகியும் இன்றும் காலை 3 மணிக்கு மேல் தன்னால் தூங்க முடிவதில்லை என்கிறார். அங்காடி கோயம்பேட்டுக்கு இடம்மாறியதினால் ஏற்பட்ட சிக்கல் தவிர சர்க்கரை, ரத்த கொதிப்பு போன்ற நோய்களால் உடல் பாதிப்பு இருப்பதால் 25 வருடமாக செய்துவந்த காய்கறி-பழ வியாபரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, 10 வருடங்களாக பூ வியாபாரத்திற்கு மாறிவிட்டார்

“இவ்வளவு பிரச்சனையில ஏன் பூ, பால் வியாபாரம் சேர்த்து செய்யுறான்னு நினைக்காதிங்க இரண்டிலும் நிறைய பாடுபடனும்  என்னை இங்கே எல்லாரும் கல்யாணமாகி வந்ததுலே இருந்து, ”பால்க்காரம்மா, பால்க்காரம்மா வீடு” தான் எங்க வீட்டுக்கு பேரு, அதிலும் கணவர் வழி வந்த பரம்பரை வேலை, அதனாலே தான் அதையும் விட முடியாம, பூ வியாபாரத்தோடு சேர்த்து செய்யிறேன்” என்றார்.

காலை 3 மணிக்கு எழுந்து, மாட்டு கொட்கையில் உள்ள வேலையை பார்த்துவிட்டு, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, காலையில் பால், தயிர் வாடிக்கையாளர்கள் வீட்டில் சென்று கொடுத்துவிட்டு. கையோடு கோயம்பேடு சென்று பூ வாங்கி வருவராம். விலைக்கு ஏற்ப ”5 அல்லது 6” சேர் பூக்கூட வாங்கி வருவதுண்டு. வீட்டுக்கு வந்து சேரவே மணி மதியம்1 ஆகிவிடும். மாலை வரை பூவை கட்டிவிட்டு, மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு பால் வழங்கும் வேலை இருப்பதால் முழத்துக்கு 1ரூ விதம், பிறரிடம் கொடுத்து, பூக்களை கட்டி வாங்கிக் கொள்கிறார். பால் வியாபாரம் முடிந்தவுடன், பூ வியாபாரத்தை தொடங்கி, வாடிக்கையாளர்களிடம் கொடுத்தும், தெருக்களில் கூவி விற்பது தான் மாலை நேர வேலை. ஒவ்வொரு தெருவையும் 3-4 முறை கண்டிப்பா சுற்றி ஆக வேண்டும், கால், கை, இடுப்பு வலிக்கும், ஆனால் நடப்பது நல்லது அதான் சிரமம் பார்க்காம செய்யுறேன் என்றார். கமலாம்மாளும் கடைவைத்து பூ விற்று வந்தவர்தான், ஆனால் அவருடைய கணவன் போதையில் கடைமுன் செய்யும் அலம்பல்களை சகிக்கமுடியாமல் கடையை மூடிவிட்டு இப்போ தெருவிலேதான் வியாபாரம் செய்கிறார்.

மாடு பராமரிப்பு போக, அதில் வரும் பணத்தில் அவர் குடிப்பதற்காக வாங்கும் கடனுக்கே முக்கால்வாசி போக கையிலே மீஞ்சியிருக்கும் பணம் மற்றும் பூ வியாபாரத்திலே வரும் வருமானம்தான் அவருடைய மற்ற செலவுகளுக்கு. வாடிக்கையாக பூ வாங்குகிறவர்கள் மாதாமாதம் சேர்த்து கொடுக்கும் பணத்தில் கணவருக்கு தெரியாமல் சீட்டு போட்டு வைக்கிறார், ஏதாவது அவசர செலவு வந்தால், அதுதான் ஆதாரம்.

“பூ வியாபாரத்துல வருமானம் ஒரு நாள் இருக்கும், ஒரு நாள் போட்ட முதலும் கிடைக்காது.  50 அல்லது 100  ரூபாய்தான் செலவு போக கையிலே தங்கும். இதுதான் சாப்பாட்டுக்கு, பேரப்பசங்களை பார்த்தா அதுங்க கையிலே ஏதாச்சும் கொடுப்பேன். கையிலே சுத்தமா காசு இல்லாத நேரமும் இருக்கும் அப்போ கடன் சொல்லிதான் பூ வாங்கி, வித்து கடனை மறுநாள் கட்டுவேன். இப்படிதான் போவுது எங்க வாழ்க்கை. பிள்ளைங்க என்னை இப்ப பார்க்கலேனாக்கூட போகட்டும். என் கை, கண், கால் எல்லாம் இப்போ நல்லாதான் இருக்கு, நான் கம்பு ஊன்றி நிற்கும் போது எதனா செஞ்சா போதும். உடம்பு வலி ஒரு நாளைப் போல் இருக்காது, கஷ்டம்னு பார்தா சோறு எங்கிருந்துவரும்” என்கிறார். வயது 62 ஆகியும் இன்னமும் நாளெல்லாம் உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் கமலாம்மாள்.

அப்பார்ட்மென்ட் வாசலில் பூ விற்கும் முனியம்மாவுக்கு வயது 58 இருக்கும். கணவனை இழந்து 10 வருடம் ஆகிறது. தன் ஒரே மகள் திருமணமாகி ஒரே வருடத்தில் தன் கணவனை இழந்து வீட்டோடு வந்துவிட்டாள். இது நடந்து 17 வருடம் ஆகி 17 வயதில் ஒரு பேத்தியும் இருக்கிறாள். மகளும், முனியம்மாவும் வீட்டு வேலைக்கு போகிறார்கள், கணவன் இருந்த வரை கூலி வேலைக்கு போய் சம்பாதித்துவந்தார். அவர் இறந்தபின் முனியம்மாவுக்கு பூ வியாபாரம்தான். இரத்த கொதிப்பு வியாதியால் அவதிப்படும் அவருக்கு அடிக்கடி மயக்கம், தலைச்சுற்றல், கால் வீக்கம் வருவதால் வீட்டு வேலைக்கு போகாமல், இரு அப்பார்ட்மெண்ட்டை தினமும் சுற்றி பெருக்குவது, வாரத்துக்கு ஒரு முறை மாடிப் படி சுத்தம் செய்வதுடன் இந்த பூ வியாபாரத்தையும் செய்கிறார்.

காலை 4-5 மணிக்கு எழுந்து, மகளும் இவருமாக வீட்டு வேலையை முடித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் இரண்டு – மூணு வீட்டுக்கு முறைவாசல் செய்துவிட்டு பேத்தியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, இவர் மட்டுமாக பஸ், ஷேர் ஆட்டோவில் சென்று பூ வாங்கி வருகிறார். ஒரு வாரம் முழுக்க கடன் சொல்லி பூக்களை வாங்குகிறார், கையில் கிடைக்கும் காசைக்கொண்டு அடுத்த வாரம் கடனை அடைக்கிறார். வாங்கிவரும் பூக்களை அப்பார்ட்மெண்டு பின்புறத்தில் உட்கார்ந்து கட்டிவிட்டு, பூக்களை அப்பார்ட்மெண்டு வாடிக்கையாளர்களிடம் கொடுத்துவிட்டு மீதியை அப்பார்ட்மெண்ட் கேட்டில் மாட்டி வைத்து விடுகிறார். கேட்டுக்கு பக்கத்திலேயே நின்றபடி சத்தமில்லாமல் தெருவில் வருவோர் போவோரிடம் விற்றுவருகிறார். பலமாக சத்தம் போட்டு விற்றால் அப்பார்ட்மென்ட்டில் வாழ்பவர்களுக்கு தொந்திரவாக இருக்கும் அப்புறம் அப்பார்ட்மெண்ட் வேலை போய்விடும் என்று அசோசியேஷனில் சொல்லிவிட்டார்களாம்.

“யானைக் கால் போல் வீங்கியிருக்கும் இந்த காலை வைத்துக் கொண்டு நான் எங்கு போவேன். ஆண் துணையில்லாத என் குடும்பத்தில் நானும் போய் சேர்ந்துட்டா, என் மகளும் பேத்திக்கும் யாரு துணை? பூ வியாபாரத்தில் 50 ரூபா ஒரு நாளுக்கு கிடைத்தா பெரிசு. சும்மா இருந்தா யாரு கொடுப்பாங்க. வேலை கஷ்டம்மாதான் இருக்கு, வயசுக்கு வந்த பெண்பிள்ளை இருக்கே? வர காசு வாடகை ரூ 2000 கொடுக்கவும், ரூ 300 -400 மின்சார கரடணத்துக்கு சரியா இருக்கும். மூணுபேரு சாப்பிடனும், துணிமணி வேனும், பேத்தி தனியார் பள்ளியில் படிக்குறா அதுக்கு பீஸ், டியூஷன் காசு வேற சமாளிக்கனும். மாத்திரை மருந்து எல்லாம் இரத்த கொதிப்புக்கு சாப்பிடுறது இல்லை, பிரச்சினையின்னா மெடிக்கல்ஸில் மருந்து வாங்கி சாப்பிடுவோம் மற்றது எல்லாம் கடவுள் விட்ட வழி” என்கிறார் முனியம்மா.

சுசீலா வயது 40. இவர் கடந்த 12 வருடமாக தினமும் கொளத்தூரிலிருந்து வடபழனி வந்து பூ கட்டி வியாபாரம் செய்துவிட்டு இரவு 10 மணிக்குமேல் பஸ் ஏறி மீண்டும் கொளத்தூருக்கு போகிறார்.

வடபழனியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் மகள் படிப்பதற்காகவே, அதன் அருகில் இருக்கும் தன் அம்மா வீட்டில் விட்டு தன் ஒரே மகளை வளர்த்துவருகிறார். கணவனுக்கு கோயம்பேட்டில் கூலி வேலை விடியற்காலை 2 -3 மணிக்கு அவரை வேலைக்கு அனுப்பிவிட்டு, வீட்டு வேலை முடித்து தானும் கோயம்பேடுக்கு போய் பூக்களை வாங்கி எடுத்துக் கொண்டு, அப்படியே வடபழனியில் சிறியதாக பழக்கடை வைத்து இருக்கும் தன் பெற்றோருக்கும் தேவையான பழங்களை வாங்கி வந்து வியாபாரத்தை தொடங்கிவிடுகிறார்.

“சில நாள் பூவுடன் சேர்த்து கீரை, தேங்காய், எலுமிச்சைபழமெல்லாம் விக்கிறதுண்டுங்க, வடபழினிங்கறதுனால விசேஷ நாள்ல பூ வியாபாரம் சுருக்க முடிஞ்சிடும் ஆனா அன்னிக்கெல்லாம் உதிரிப்பூ கிராக்கியா விக்குறதுனால வருமானம் மத்த நாளைவிட கம்மிதான். வியாபாரம் நல்லா இருந்தா செலவும் போக கையில் ரூ 100 கிடைக்கும். பூ விக்காம மிஞ்சிப்போச்சுன்னா கோவிலுக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்கு போயிடுவேன். தினமும் வீடு போக 11 மணியாகிடும். மறுநாள் காலை மீண்டும் 2.30 மணிக்கெல்லாம் எழுந்திருச்சி அவரை வேலைக்கு அனுப்பனுமே. கஷ்டம்தான், ஆயிரம் பிரச்சினை இருந்தாலும், செய்யுற தொழில் சாமிக்கு சமானம், நமக்கு ஒரு வேளை சோறு போடுதுல்லே அதை குறை சொல்ல்லாமா? என் பொண்ணு படிச்சு நல்ல வேலைக்கு போவனும் என்ன மாதிரி பூவெல்லாம் கட்டி கஷ்ட்டப்படக் கூடாது” என சொல்லிமுடித்தார் சுசீலா.

முன்புபோல கல்யாண, சுபகாரியங்களுக்கு, பூ தேவைகளை, தெரிந்த பழக்கமான பூக்காரம்மாக்களிடம் சொல்லி வைத்து வாங்கும் பழக்கமும் இப்போது மிகவும் குறைந்துவிட்டது. இப்போது கல்யாணம் மற்றும் எல்லா சுபகாரியங்களை கான்டிராக்டர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு தேவையான சமையல் முதல் வரவேற்ப்பு, மேடை அலங்காரம், வாழைமரம் கட்டுவது, பூ, மாலைகள் என்று சகலமும் அவர்களே ஏற்பாடு செய்வார்கள். 100-200 முழம்கூட தேவைப்படும் இவ்விசேஷங்களுக்கு பூ கட்டி தருவது அதில் வரும் பணம் பூக்காரம்மாக்களுக்கு பெரிய தொகை. ஆனால் அது இப்போது இல்லை

கடந்த 20 ஆண்டுகளாக தாராளமய பொருளாதாரம் தோற்றுவித்திருக்கும் புதிய தலைமுறையினர் பூ வைப்பது பேஷன் அல்ல கட்டுப்பெட்டித்தனமானது என்ற கருதுகின்றனர்.  தங்கள் உடைக்கு பொருந்தாது, முடியின் ‘ஸ்டைலுக்கு’ ஒத்துவராது என  பூக்களை புறக்கணிக்கின்றனர். அழகு, பேஷன் என்றால் அது மேற்கத்திய பெண்களாகவே நடை, உடை, அலங்காரம் எல்லாம் இருத்தல் அவசியம் என்று நினைக்கும் ஆண், பெண்களை ஊடகங்கள் தயார் செய்கிறது. மற்றபடி நம் நாட்டு ‘பண்பாட்டை’ கொண்டாடும் ‘டிரெடிஷினல் டே” என்று ஐ.டி கம்பெனியிலிருந்து, கான்வென்ட் பள்ளிகள் கல்லூரிகள் என்று கடைப்பிடித்து வருகிறார்கள். அன்று மட்டும் பூக்களுக்கு கூந்தலேறும் சலுகை அளிக்கப்படுகிறது.

பூக்காரம்மா-3இப்படி ஒருபக்கம் ஆசாமிகள் பூக்களை கைவிட்டாலும் சாமிகள் கைவிடுவதில்லை, பக்தியானாலும் பகட்டாக காட்டிக்கொள்ளும் இக்காலத்தில் சாமிகளுக்குதான் பூ அதிகமாக வாங்கப்படுகிறது. ஆடி மாதம் துவங்கி வரிசையாக வரும் பண்டிகைகளில் பூக்களின் விலை அதிகம் இருக்கும் நாட்களை முன்கூட்டியே அறிந்த மக்கள் 2 நாட்கள் முன்பே தேவையான பூக்களை வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொண்டு சாமிக்கு வழிபடுவோரும் உண்டு. தேவையான வகை, அளவு பூக்களை பூக்காரம்மாக்களிடம் முன்கூட்டியே சொல்லி வைத்து வாங்குவோரும் உண்டு. மலர்களுக்கு மவுசு கூடும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில்தான் பூக்காரம்மாக்களுக்கு துன்பமும் கூடுகிறது வாங்கி வரும் பூவின் விலையே அதிகம் இருப்பதால் விலையை கூட்டி விற்கிறார்கள்.

ஆனால் வாடிக்கையாளர்களில் விலை உயர்வின் நியாயத்தை பொருட்படுத்தாமல் எப்படியாவது அதைக் குறைக்க பேரம் பேசும் ஆட்கள்தான் பெரும்பான்மை. நகைக்கடை, துணிக்கடை, ஹோட்டல், கால் டாக்ஸி, சினிமா, தியேட்டர், சூப்பர் மார்கேட், மால்கள், பழமுதிர் சோலைகள் போன்ற இடங்களிலெல்லாம் சொல்லும் விலையை கொடுத்துப் புரட்சி போராட்டம் செய்யும் நடுத்தர மக்கள், ஐந்துக்கும் பத்துக்கும் கணக்கு பார்ப்பது பூக்காரர்கள், காய், பழங்களை தள்ளு வண்டியில் ஏற்றி விற்கும் உழைக்கும் மக்களிடம்தானே. சரவணபவன் அண்ணாச்சியைப் போல, ஒரு இட்லிக்கு அதன் செய்பொருள், உழைப்பு, மதிப்பை கொண்டு விலையை நிர்ணயிக்காமல், பிராண்ட் மதிப்பு, ஏ.சி. அதற்கு செலவாகும் மின்சாரம், எல்லாம் சேர்த்து, வெளியே விற்பதை விட 5 மடங்கு அதிகமாக பில்போடுவதற்கு உழைக்கும் மக்களின் நாணயம் இடம் கொடுப்பதில்லை. முடிந்தவரை சரியான விலைக்கு பூ விற்கும் இவர்கள் நேரம் போகப்போக பழைய விலைக்கு நட்டத்துக்கு கொடுக்கிறார்கள் போட்ட காசு வரவில்லையென்றாலும் வருவது வரட்டும் என்று விற்றுத்தீர்க்கிறார்கள். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விலையைக் குறைத்து வெற்றிப்பெருமிதம் அடைகின்றனர் வாடிக்கையாளர்கள்.

நடுத்தர-மேல்தட்டு வர்கங்களைப்போல சொத்து சேர்க்கவோ, வீடு கார், மற்றும் பிற நுகர்பொருள் மோகத்தில் பூக்காரம்மாக்கள் கடன்படுவதில்லை, மிஞ்சிப் போனால் சீட்டு கட்டுகிறார்கள் அதில் நகை எடுப்பதும், பின்பு அதனை தேவைக்கு ஏற்ப விற்பதும், அடகு வைப்பதும் – எடுத்த சீட்டு பணத்தின் மீதியுள்ள தவணைகளை கட்டி முடிப்பதும் என்று எந்தத்திட்டத்துக்கும் கட்டுப்படாத நிச்சயமின்மையே அவர்கள் வாழ்க்கையின் எதார்த்தம்.  இதில் குழந்தைகள் கல்வி திருமணம் என்று வந்துவிட்டால் கடனில் சிக்கி அத்தோடு வாழ்க்கையே கடன்பட்டு போய்விடுகிறது.

பூக்காரம்மாக்கள் சினிமா நாயகர்கள் அல்ல ஒரே பாட்டில் கோடீசுவரர்களாக.  ஆண்டுக்கணக்கில் அதிகாலை எழுந்ததுமுதல் நள்ளிரவு சில மணிநேரம் உறங்குவது வரை இடைவிடாது கடுமையாக உழைத்த்தாலும் இவர்கள் இன்னமும் அன்றாடங்காய்ச்சிகள்தான். இன்றைய விலைவாசியில் இந்த வியாபாரத்தின் மூலம்அவர்கள் சம்பாதிக்கும் ஐம்பது-நூறெல்லாம் எவ்வளவு குறைவானது என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. அதை சமாளிக்க வீட்டு வேலை போல இரண்டாவதாக ஒரு வேலையையும் சேர்ந்து செய்யவேண்டிய நிர்பந்த்த்தை வாழ்க்கை அவர்கள் மீது சுமத்துகிறது.   பூ வியாபாரத்தால் இவர்களுடைய வாழ்நிலையில் பெரிய மாற்றம் அடைந்துவிட போவதில்லை என்பதை இவர்களுக்கு தெரியாமலில்லை. இருப்பினும் அவர்களிடம் இழப்பதற்கும், கொடுப்பதற்கும் தங்கள் உடல் உழைப்பு தவிர வேறு ஒன்றுமில்லை. இப்படி நாள் முழுதும் உழைத்தால்தான் ஒரு வேளை சோறு நிச்சயம். தான் பாடுகளை பிள்ளைகளும் படக்கூடாது என மீட்டர் வட்டிக்கு வாங்கியாவது பிள்ளைகளை தனியார் பள்ளயில் படிக்க வைக்கிறார்கள். அரசாங்கம் தங்களுக்கு உதவுமென்றால்லாம் நம்புவதில்லை, அப்படி நம்புவதற்கு இவர்கள் மாத சம்பளத்தோடு செட்டில்லான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு ரோடு சரியில்லையென்றால் வாட் ஸ்டேட் கவர்மென்ட் வாட் சென்ட்ரல் கவர்மென்ட்னு சொல்லுற நடுத்தரவர்க்க அறிவு ஜீவிகள் இல்லையே.

ஒரு முழம் பூவுக்கு ஒரு ரோஜாப்பூவை இனாமாக கொடுப்பதும் வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து அவர்களுக்கு தேவையான பூக்களை கட்டி கொடுப்பதும், ஏழை பள்ளி மாணவிகளை கையில் வைத்து இருக்கும் காசுக்கு ஏற்றவாரு பூக்கொடுப்பதும், துன்பமயமான வாழ்க்கையின் சுவடு கூட முகத்தில் தெரியாமல் வாடிக்கையாளர்களிடம் மலர்ந்த முகத்துடன் மலர்களை விற்கும் இந்த பூக்காரம்மாக்கள் போராளிகளே, பூ வாசத்துடன் கறைந்து விடும் இவர்களின் கடின உழைப்பின் வியர்வையும், கண்ணிரும் மகத்தானவையே!

_________________________________________

– வினவு செய்தியாளர்கள், (படங்கள் – கூகிள்)
__________________________________________

 1. கடந்த ஆண்டு கக்கூஸ் கம்பர் எழுதிய பூக்காரி புணைவை ஆதரித்தவர்கள் இதையும் படிச்சுப் பாத்தா நல்லது. பூக்காரம்மா என்ற மரியாதையான விளித்தல் பிடித்திருக்கிறது.

 2. இவ்வளவு கஷ்டப்பட்டு வெறும் 100 ரூபாய் மட்டுமே வருமானம் தரும் இந்த வியாபாரத்தை செய்யத்தான் வேண்டுமா என்று இவர்கள் சிந்திக்கவேண்டும். வேறு தொழில் அல்லது வியாபாரத்துக்கு மாறிக்கொள்ளவேண்டும்.
  என்னைக்கேட்டால் பூ விற்பனையையும் பெரு நிறுவனங்கள் (உள்நாடோ, வெளிநாடோ)காய்கறி – பழ விற்பனையுடன் சேர்த்துச் செய்யலாம். இவர்களிடம் அந்நிறுவனங்கள் பூவைக்கட்டித்தரும் பணியை மட்டும் (வீட்டிலிருந்தபடியே, அலையாமல்) தரலாம். ரிலையன்சோ, வால்மார்ட்டோ இதில் வராவிட்டாலும் அட்லீஸ்ட் பழமுதிர் நிலையம் போன்றவர்களாவது இதை முயற்சி செய்யலாம்.

  எப்படிப் பார்த்தாலும் வீண் அலைச்சலையும், குறைந்த, நிலையற்ற வருவாயையுமே தரும் பூக்காரம்மாவின் தற்போதைய பிஸினஸ் மாடல் தொடரப்படவேண்டியதோ, பாராட்டத்தக்கதோ அல்ல.

  • ரிலையன்சும் வால்மார்ட்டும் 100 முழம் பூவுக்கு 10 காசு தர்ரேன்னு சொல்லுவான் அத வான்கிட்டு செய்யனும் ஆனா அவன் முழம் 50 ரு விற்பான்,இதுதான் நடக்கும்.

 3. உன்மையானநிலை. அவர்கள் தங்கள் உழைப்பின் பெற்மதியை எப்பொழுது உனரப்போகிரார்களோ அன்ற்தான் அவர்களுக்கு விடிவு பிறக்கும்

 4. // நகைக்கடை, துணிக்கடை, ஹோட்டல், கால் டாக்ஸி, சினிமா, தியேட்டர், சூப்பர் மார்கேட், மால்கள், பழமுதிர் சோலைகள் போன்ற இடங்களிலெல்லாம் சொல்லும் விலையை கொடுத்துப் புரட்சி போராட்டம் செய்யும் நடுத்தர மக்கள், ஐந்துக்கும் பத்துக்கும் கணக்கு பார்ப்பது பூக்காரர்கள், காய், பழங்களை தள்ளு வண்டியில் ஏற்றி விற்கும் உழைக்கும் மக்களிடம்தானே. //

  பேரம் பேசியே வாங்க வேண்டிய நிலையில் உள்ள பிற ஏழை மக்கள் கொடுக்கமுடியாது என்பதால் பேரம் பேசுகிறார்கள்.. கொஞ்சம் வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தினர் கொடுக்கக் கூடாது என்ற பிடிவாதத்தால் பேரம் பேசுகிறார்கள்..

  ஒரு நிமிடம் இதை சிந்தித்துப் பார்த்தால் நடுத்தர வர்க்கத்தினர் இந்த ஏழைகளிடம் பேரம் பேசுவதும், கணக்குப் பார்ப்பதும் வெட்கப்பட வேண்டிய விசயம் என்பதை உணரலாம்..

 5. பூக்காரம்மா விற்கும் பூக்கள் – அவள்
  கதைக்காக கண்ணீர்விட்டு..
  ஏதெனும் பணக்கார பெண்ணின் தலையிலமர்ந்து
  அழுக்கொண்டு செல்லும்…

  விதவையானவள்
  எல்லா சுமங்களிக்கும்
  பூ தருகிறாள்!

  தன் பேத்திக்காக – இவள்
  இம்சைபடுகிறாள்..
  இப்படிதான் இவளுக்காக
  இவள் பாட்டி இம்சைப்பட்டிருப்பாள்!

  நாறில் கட்டப்பட்ட
  பூக்களின் கால்கள் மாதிரி…
  வறுமையில் கட்டப்பட்டது
  இவளின் கால்கள்!

  விற்பனையாகும் பூக்கள் – யாவும்
  மலர்ந்து விடுகின்றன
  பூக்காரம்மாவின் வாழ்க்கைதான் எப்போது மலருமோ..???

 6. //பூக்களை அப்பார்ட்மெண்டு வாடிக்கையாளர்களிடம் கொடுத்துவிட்டு மீதியை அப்பார்ட்மெண்ட் கேட்டில் மாட்டி வைத்து விடுகிறார். கேட்டுக்கு பக்கத்திலேயே நின்றபடி சத்தமில்லாமல் தெருவில் வருவோர் போவோரிடம் விற்றுவருகிறார். பலமாக சத்தம் போட்டு விற்றால் அப்பார்ட்மென்ட்டில் வாழ்பவர்களுக்கு தொந்திரவாக இருக்கும் அப்புறம் அப்பார்ட்மெண்ட் வேலை போய்விடும் என்று அசோசியேஷனில் சொல்லிவிட்டார்களாம்.//

  அது எந்த அப்பார்ட்மெண்டு…அந்த அப்பார்ட்மெண்டுல உள்ளவங்க குசு போட்டாலும் சத்தம் இல்லாமல்தான் போடுறான்கலானு பாற்கனும்….

  • கேவலத்துக்கு பேர் வேறயா….நீங்க இருக்குற அப்பர்ட்மண்ட்ல கூடத்தான்…அதுக்கெல்லாம் காலையில் எந்திரிக்கணும்….. உங்களுக்குத்தான் பாவம் நேரமில்லையே…..

 7. Those people who bargain with Pookkaarammas (not the middle class people but wealthy people) will do the same thing with their servant maids.They do not know that in near future,they will not get servant maids at all.

 8. உழைப்பவர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்? இவர்களது மது, புகையிலை, பாக்கு என்பவை கூட காரணமாக இருக்கலாம். முக்கியமாக குறைந்த கல்வித்தரம். இதற்க்கு முதலாளித்துவம் தான் காரணமென்றால் – அது பூச்சாண்டி. பூக்காரம்மா என சொல்லாதீர்கள் – ‘அம்மா’ ‘அன்னை’ என்ற வார்த்தைகளை கேட்டாலே அருவருப்பாக இருக்கிறது!

 9. Somehow I dont accept this, as per Article the Flower in whole sale is about 300 to 400 RS, this people are charging 30 to 40 RS for one Muzham, easily they can get 2000 to 3000 RS ,may be they were struggling previously but not now

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க