privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிஜயகாந்த் - தே.மு.தி.க: "எங்கே செல்லும் இந்தப் பாதை?"

விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

-

விஜயகாந்த்மிழகத்தில் காஸ்ட்லியான கனவு எது? கோட்டையில் கொடியேற்றும் கனவுதான் அது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு அலையில், பாசிச ஜெயாவின் கடைக்கண் பார்வையோடு கரையேறியவர் விஜயகாந்த். 29 சட்ட மன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தும் அடுத்த தேர்தலில் மேற்படி கனவு நனவாகும் என்று கணிசமாக போதையேற்றிருக்கும்.

விஜயகாந்த் ஒரு ஆளாவதை அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளுமே விரும்பவில்லை. சென்ற தேர்தலில் நடிகர் வடிவேலு தி.மு.க மேடைகளில் “கேப்டனை” வறுத்தெடுத்ததை ‘அம்மாவும்’ ரசித்திருப்பார் என்பதே உண்மை. போயஸ் தோட்டத்திற்கு பிழைப்பைத் தேடி போன தலைவர்கள் எவரும் சுயமரியாதை என்ற ஒன்றை தலைமுழுகி விட்டுத்தான் பாயாசம் குடிக்க முடியும் என்பதற்கு அத்வானி முதல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வரை பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. இதில் டாக்டரேட் முடித்தவர் தா.பாண்டியன். அதனால்தான் அவருக்கு மட்டும் அங்கே தனி கவனிப்பு.

ஆனால் ‘புரட்சித் தலைவி’யின் ஈகோவுக்கு சற்றும் குறைவில்லாமல் இயங்கும் ‘கேப்டனது’ ஈகோவும் ஒரு உறைக்குள் இரண்டு ஈகோ ஃபாக்டரி இயங்க முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை. இவ்வளவிற்கும் ஆரம்பத்தில் கேப்டன் அம்மாவுக்கு அனுசரணையாக தி.மு.கவை மட்டும் விளாசியவாறு அரசியல் செய்து வந்தார். என்னதான் ஈகோ மலை இருந்தாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவதற்கு சில பல எம் எல் ஏக்கள் வேண்டும் என்பதால் கூட்டணிக்கு சம்மதித்தார். ஒரு வேளை அவர் சம்மதிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்திருந்தால் இந்தக் கோமாளிக்கு அப்போதே மங்களம் பாடியிருக்கலாம். ஆனால் தி.மு.க, அ.தி.மு.கவில் ஆளாக முடியாத கொட்டை போட்ட பெருச்சாளிகள் கைக்காசை போட்டு செலவு செய்து தே.மு.க.தி.கவிற்கு வெளிச்சம் போட்டு நுழைந்தவர்கள் வியாபாரத்தில் ரிடர்ன்சை எதிர்பார்த்தனர்.

அந்த நிர்ப்பந்தம் கேப்டனை வழிக்கு கொண்டு வந்தது. இப்படித்தான் ஆரம்பத்தில் அவர் மனம் கோணாமல் அம்மாவிடம் தஞ்சம் அடைந்தார். எனினும் உள்ளே அவருக்கு எப்போதும் இருக்கும் ஈகோ ஃபயர் கொஞ்சம் தணிந்திருந்தது. ஆனால் அதை அம்மா எப்போதும் கண்டு கொள்ளவில்லை என்பதோடு அவ்வப்போது குட்டவும் செய்தார். தான் போட்ட பிச்சைதான் அந்த 29 எம்.எல்.ஏக்கள் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்த மனநிலைதான் உள்ளூராட்சித் தேர்தலில் கேப்டனை எச்சில் பருக்கை இல்லாமல் கூட விரட்டியடிக்க காரணமாக இருந்தது. அதில் தனியாக நின்ற கேப்டன் மண்ணைக் கவ்வினார் என்பதிலிருந்து தே.மு.தி.கவின் இத்துப் போன பலத்தை புரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு தே.மு.தி.க சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் அ.தி.மு.கவிற்கு தாவலாம் என்பதை ஊடகங்கள் எப்போதும் சொல்லி வந்தன. கேப்டனுக்கே இந்த பயம் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது நாளொன்றுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் வீதம் கோட்டையில் அம்மாவை சந்திந்து அருளாசி பெறுகிறார்கள். இந்தக் கணக்கில் போனால் இன்னும் இரண்டு வாரத்தில் கேப்டனது கட்சி எம்.எல்.ஏக்கள் கோட்டை கிரிவலத்தை முடித்திருப்பார்கள். அதிலும் மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன் போன்ற பெரும்புள்ளிகளே அம்மா சரணத்தில் புகலிடம் அடைந்திருப்பதில் கேப்டனுக்கு ராச்சோறு கூட இறங்கியிருக்காது. அதுதான் பத்திரிகையாளர்களிடம் அவர் சீறியதன் பின்னணி.

கோட்டையில் கொடியேற்றும் கனவு இருக்கட்டும், கொல்லைப்புறத்தில் கூட நிம்மதியாக கால் கழுவ முடியாத நிலைதான் கண்ணீரை வரவழைக்கிறது. இனி அடுத்த சுற்றுக்கு தி.மு.கதான் கதி என்றான பிறகு கேப்டன் தனது சரணம், பல்லவிகளை மாற்றிப் போட வேண்டும். கேட்டால் லியாகத் அலிகான் அய்யா சரணத்தை தீப்பிடிக்கும் தமிழில் எழுதித் தந்து விடுவார். திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிப்பார் கேப்டன்.

தே.மு.தி.கவின் டங்குவார் இப்படி நொந்து நூடில்சாகும் அடிப்படை என்ன? தி.மு.க, அ.தி.மு.க எனும் இரண்டு பெருச்சாளிகளுக்கு மாற்று என்று பேசிவிட்டு அந்த பெருச்சாளிகள் கொண்டிருக்கும் அதே அடிப்படையில் பிறந்த மற்றொரு பெருச்சாளி இல்லையில்லை சுண்டெலிதான் தே.மு.தி.க. தனிநபர் துதி, குடும்ப ஆதிக்கம், ஊழல் பெருச்சாளிகளே தளபதிகளாய் கட்சியை ஆக்கிரமித்திருப்பது, மருந்துக்கு கூட ஜனநாயகமின்மை, சென்டிமெண்ட் அரசியல், பிழைப்பிற்க்காக நாய் நரியுடன் கூட கூட்டணி வைப்பது, மக்கள் பிரச்சினைகளுக்காக சூடாக பேசியே காலம் கடத்துவது…. இத்தகையதின் நீட்சிதான் கேப்டனது இந்த காமடி போர் தோல்விக்கு காரணங்கள்.

ஓட்டுப் பொறுக்கி கட்சிகளது நடைமுறை இதுதானென்பது நிதர்சனமாயிருப்பதால் புதிதாத் தோன்றும் ஒட்டுண்ணிகளால் மாற்றம் எதுவுமில்லை. சிவப்பு படங்களில் ஊழல் எதிர்ப்பு வசனங்களை நா புடைக்க பேசியவர் என்பதை வைத்து மட்டும் தமிழகத்தை ஆண்டு விடலாமென மனப்பால் குடிக்கிறார் என்றால் குடிப்பவரை விடுங்கள், அப்படி குடிக்கலாம் என்று ஒரு நிலைமையை தமிழக மக்கள் வைத்திருப்பதுதான் கேவலம்.