Saturday, April 17, 2021
முகப்பு செய்தி கூடங்குளம்: மக்களை விடுதலை செய்! மதுரையில் HRPC ஆர்ப்பாட்டம்!!

கூடங்குளம்: மக்களை விடுதலை செய்! மதுரையில் HRPC ஆர்ப்பாட்டம்!!

-

குண்டர்சட்டம், தேசதுரோக வழக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை விடுதலை செய்யக்கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரையில் சாலை மறியல்!

கூடங்குளம்-மறியல்

9.11.2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மதுரை உயர்நீதி மன்றக் கிளை முன்பாக சாலை மறியல் நடை பெற்றது. மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்புகள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுமார் 80 பேர் வரை கலந்து கொண்டனர்.

குண்டர்சட்டம், தேசதுரோக வழக்கில் சிறைவைக்கப் பட்டிருக்கும் கூடங்குளம் இடிந்தகரை மக்களை விடுதலை செய், பல மாதங்களாக இருந்து வரும் 144 தடை உத்தரவை நீக்கு! போராடும் மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்! அணு உலை வேண்டாம் எனப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மறியல் போரட்டம் நடைபெற்றது.

மதுரை – மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்நீதிமன்றம் அலுவல் தொடங்கும் பரபரப்பான வேளையில் நடை பெற்ற இந்த மறியல் போராட்டம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. சாலையின் இருமருங்கிலும் சுமார் 1/2 மணி நேரம் வாகனங்கள் தேங்கி நின்றன. இருந்த போதிலும் அதில் வந்த மக்கள் போரட்டக் கோரிக்கையின் நியாயத்தை அறிந்து பொறுமை காத்தனர்.

கேடி, கிரிமினல், எம்,‘எல்,ஏ., எம்.பி., கிரானைட் கொள்ளைக்காரன் பி.ஆர்.பி மற்றும் ஊழல் பெருச்சாளிகள் மீது பாயாத குண்டர்சட்டம், தங்கள் வாழ்வை, தலை முறைகளை அச்சுறுத்தும் அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது மட்டும் பாய்வது ஏன் என்று விண்ணதிர முழக்கமிடடார் மதுரைக்கிளை இணைச் செயலாளர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன்.

கூடங்குளம், இடிந்தகரை மக்கள் போராட்டத்தை ஒடுக்க தமிழக போலீசு அந்தப் பகுதியின் இயல்பு வாழ்க்கையை முடக்கிவைத்துள்ளது கூடங்குளத்தைச் சேர்ந்த ஆண்கள் பலர் ஊர் திரும்ப முடியாமல் வெளியில் உள்ளனர். பெண்கள், நோயாளிகள், சிறுவர்கள், மாணவர்கள் என்று பலதரப்பினர் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு மேலும் ஆயிரக் கணக்கானவர்களையும் வழக்கில் சோர்த்துள்ளது போலீசு.

தமிழ்நாட்டின் பல்வேறு சிறைக் கொட்டடிகளில் இருக்கும் மக்களைப் பிணையில் வரவிடாமல் போலீசு மீண்டும் மீண்டும் வழக்குகளால் அச்சுறுத்தி தடுத்து வருகிறது. 70வயது லுர்துசாமி, நசரேன் ஆகியோர் மீது தற்போது குண்டர்சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் பலர் மீது குண்டர்சட்டத்தை ஏவி விட  ஜெயலலிதா போலீசு காத்திருக்கிறது. பிணை கேட்டு நீதிமன்றம் சென்றால் நீதிமன்றங்கள் அரசுக்கு ஜால்ரா அடிக்கும் வகையில் மக்களின் போராடும் உரிமையை துச்சமாகப் பார்க்கிறது. இவற்றையெல்லாம் தோழர் வாஞ்சிநாதன் விளக்கிப் பேசினார்.

மனித உரிமை பாதுகப்பு மையம் குமரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தோழர் பூபதி, கடலோடிகளின் போராட்டத்தை விளக்கிப் பேசினார். தூத்துக்குடி மாவட்ட செயலர் வழக்கறிஞர் சு.ப.ராமச்சந்திரன், துணைச் செயலர் அரிராகவன், திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆதி, நெல்லை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தங்கபாண்டி, சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், தோழர் கனகவேல், வின்சென்ட், நாராயணன், கார்த்திக், வல்லரசு, ராஜேந்திரன் மற்றும் பலர் இறுதிவரை இருந்து பங்களித்தனர்.

மதுரை மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் பேசும்  போது கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடும் மக்கள் மீது அரசு நடத்தி வரும் சட்டவிரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நிறுத்தும் வரை தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்களைத் திரட்டி போராட மனித உரிமை பாதுகாப்பு மையம் திட்டமிட்டுள்ளது, எனவே அரசு, போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தார்.

________________________________________________________________

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை கிளை.

_________________________________________________________________

  1. மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்புகள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு பாராட்டுக்கள்.

  2. ///மதுரை – மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்நீதிமன்றம் அலுவல் தொடங்கும் பரபரப்பான வேளையில் நடை பெற்ற இந்த மறியல் போராட்டம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. சாலையின் இருமருங்கிலும் சுமார் 1/2 மணி நேரம் வாகனங்கள் தேங்கி நின்றன. இருந்த போதிலும் அதில் வந்த மக்கள் போரட்டக் கோரிக்கையின் நியாயத்தை அறிந்து பொறுமை காத்தனர்.///

    தேங்கி நின்ற வாகன ஓட்டிகள் பொருமை காத்தனர். உண்மையாகவே நிச்சயமாகவே இந்தியா ஓளிர்கிறது.

  3. ஒரு மண்ணும் நடக்கப்போறது இல்ல… அப்புறம் எதுக்கு இவ்வளவு பில்டப்பு… எப்பிடியும் அவங்க மின் நிலையத்த தொறக்கப் போறாங்க.. அப்ப எங்க கொண்டு போயி முட்டிக்ப்போறீங்கன்னு இப்பவே முடிவு செய்தா நல்லா இருக்கும்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க